நான்காம் வார்த்தை
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் ஸ்தோத்திரம். இயேசு கிறிஸ்துவின் பாடுகளை தியானித்து கொண்டிருக்கிற நாம் இப்பொழுது சிலுவையில் அவர் பேசின நான்காவது வார்த்தையை தியானிப்போம்.
என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்
மத்தேயு 27:45-46
45 ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.
46. ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார், அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் போது மூன்று மணிநேரம் பூமியெங்கும் அந்தகாரம் உண்டானது. மத்தேயு 2:2 ஐ வாசிக்கும்போது இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாகப் இறந்தபோது வெளிச்சம் உண்டானது அதாவது நட்சத்திரம் தோன்றியது. ஆனால் இயேசுகிறிஸ்து
மரிக்கும்போது பூமியெங்கும் அந்தகாரம் உண்டானது. இயேசு இந்த உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறார் இந்த உலகத்தை விட்டு வெளிச்சத்தை அகற்றப்படும்போது அங்கு இருள் வருகிறது. தேவனுடைய சித்தத்தின்படியே பூமியில் மூன்று மணிநேரம் அந்தகாரம் உண்டானது. இயேசு கிறிஸ்து அந்தகார வல்லமையோடு போராடிக் கொண்டிருக்கிறார். அந்தகாரத்தில் வல்லமைகள் இந்த அந்தகாரத்தில் தங்களால் முடிந்த வரையிலும் இயேசு கிறிஸ்துவை தூஷிக்கலாம் தங்கள் இஷ்டம் போல இந்த அந்தகாரத்தை இயேசுவுக்கு விரோதமாக பயன்படுத்திக்கொள்ளலாம். தேவன் நீதிமான்கள் மீதும் துன்மார்க்கர் மீதும் தம்முடைய சூரியனை உதிக்க பண்ணுகிறார். இந்த சூரியனின் வெளிச்சம் கூட இயேசுவை விட்டு அகன்று போகிறது. இயேசு நமக்காக பாவமானபடியினால் வெளிச்சம் அவருக்கு மறைக்கப்படுகிறது.
இயேசு நமக்காக பாவம் ஆக்கப்பட்ட படியால் அவருக்கு இந்த பூமி ஒரு துளி தண்ணீரை கூட தரவில்லை வானமும் தன்னுடைய வெளிச்சத்தை தரவில்லை. அந்தகாரத்தில் இருந்து இயேசு கிறிஸ்து நம்மை மீட்பதற்காக பாடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இந்த மூன்று மணி நேரம் இயேசு கிறிஸ்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
மூன்று மணிநேரம் பூமியில் அந்தகாரம் இருந்தது அதன்பிறகு ஒன்பதாம் மணி நேரத்தில் மீண்டும் வெளிச்சம் வந்தது. அந்த நேரத்தில் இயேசு ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார், இது சீரிய மொழியின் வார்த்தையாகும். ரோம போர் சேவகர்கள் சீரிய மொழியை பேசுவார்கள் ஆனால் இவர்களுக்கு ஏலீ என்பதற்கான அர்த்தம் தெரியவில்லை. ஏலீ என்றால் தேவன் என்று பொருள். என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று பிதாவிடம் கேட்கிறார். இயேசுக்கிறிஸ்து இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்றால் நிச்சயம் அவருடைய பாடுகள் அந்த அளவுக்கு அதிகமாக இருந்திருக்க வேண்டும். இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் பாடுகளை அனுபவித்து கொண்டிருக்கும்போது பிதாவாகிய தேவன் சிறிது நேரம் அவரை கைவிடுகிறார். தேவன் தம்முடைய முகத்தை இயேசுவுக்கு மறைத்துக் கொள்கிறார். இயேசு கிறிஸ்து காரணமில்லாமல் இந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை இயேசு கிறிஸ்து பிதாவின் மீது அளவில்லாத அன்பு உள்ளவராக இருக்கிறார் அதைப்போலவே பிதாவாகிய தேவன் இயேசுவின் மீது அளவில்லாத அன்பு உடையவராக இருக்கிறார் என்றாலும் இந்த நேரத்தில் இயேசுவை கைவிட்டு விடுகிறார்.
இயேசு கிறிஸ்துவை சத்துருக்களின் கைகளில் ஒப்புக் கொடுத்து விடுகிறார் அவருக்கு உதவி செய்ய பரலோகத்திலிருந்து தூதர்களையும் அனுப்பவில்லை. இயேசு கிறிஸ்து நமக்காக பாவமானார் நமக்காக சாபமானார் நம்முடைய பாவங்களும் சாபங்களும் அக்கிரமங்களும் இயேசுவின் மேல் சுமத்தப்பட்ட படியினால் பிதாவாகிய தேவன் அளவில்லாத அன்பு இயேசுவின் மீது வைத்திருந்தும் மனுக்குலத்தை மீட்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் தமது நேசகுமாரனை கைவிடுகிறார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அனுபவித்த எல்லா பாடுகளை விட பிதாவாகிய தேவன் கைவிட்டது தான் அதிகமான வேதனையை உண்டாக்கியது எனவேதான் தம்முடைய எல்லா பலத்தையும் உபயோகித்து மகா சத்தமாய் என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று கதறுகிறார்.
இயேசு நமக்காக எவ்வளவு பாடுகளை அனுபவித்திருக்கிறார் இவைகளுக்கு நாம் ஈடாக என்ன செய்யப்போகிறோம் எதை செய்தாலும் அவரது அன்பிற்கு எதுவும் ஈடாகாது நம்முடைய வாழ்நாள் முழுவதும் அவருடைய பாதத்தில் அமர்ந்து அவரை துதித்து மகிமை படுத்துவது மட்டுமே இந்த பூமியில் நாம் இயேசுவுக்கு செய்யும் நன்றியாக இருக்க முடியும் இயேசுவுக்கு நன்றி உள்ள இருதயத்தோடு வாழ்வோம் அவருடைய பணியை தொடர்ந்து செய்வோம் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவோம் ஆமென்.
போதகர். சார்லஸ் சதீஷ் குமார் WMM இம்மானுவேல் கிறிஸ்தவ சபை வேப்பங்குப்பம்

thank you for your mesg
ReplyDelete