Type Here to Get Search Results !

ஐந்தாம் வார்த்தை : தாகமாயிருக்கிறேன் 2020

ஐந்தாம் வார்த்தை : தாகமாயிருக்கிறேன்

இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் உங்கள் யாவருக்கும் ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை குறித்து தியானித்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் இயேசு சிலுவையில் பேசின மிக முக்கியமான ஏழு வார்த்தைகளில் ஐந்தாவது வார்த்தையை இப்பொழுது தியானிப்போம்.

யோவான் 19:28-29

28 அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். 



29 காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது, அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். 

இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது அவருக்கு ஏற்படும் ஒவ்வொரு சம்பவமும் வேதவாக்கியம்  நிறைவேறுவதாகவே இருக்கிறது. இயேசுகிறிஸ்து வேத வாக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். தாம் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போது தம்முடைய தாயாரை யோவானிடத்தில் ஒப்படைத்த பின்பு இயேசு எல்லாம் முடிந்தது என்று அறிந்தார். அப்பொழுது வேதவாக்கியம் நிறைவேற தக்கதாக தாகமாயிருக்கிறேன் என்றார்.

இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கி கொண்டிருக்கும் போது தாகமாயிருக்கிறேன் என்று சொல்லுவது வினோதமான சம்பவம் அல்ல. இயேசு கிறிஸ்துவின் சரீரத்தில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருக்கிறது அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்து கொண்டு வந்திருக்கிறார். பல வேதனைகளை அடைந்திருக்கிறார் இவை எல்லாம் அவருக்கு தாகத்தை ஏற்படுத்தி இருக்கும். இயேசுக்கிறிஸ்து இப்போது மரண வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் அவருடைய சரீரத்தில் இருந்து ரத்தம் வெளியேறி கொண்டிருப்பதாலும் மிகுந்த வேதனை காரணத்தினாலும் அவருடைய ஜீவன் மரித்துக் கொண்டிருக்கிறது. 

இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும்போது தாகமாயிருக்கிறேன் என்று அவர் சொன்னது அங்கு கூடி இருக்கிற சிலருக்கு மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது. இயேசு கிறிஸ்து ஒருபோதும் தம்முடைய ஏற்பாடுகளை குறித்து முறுமுறுத்ததில்லை இப்பொழுது தாகமாயிருக்கிறேன் என்று சொல்லுவது மட்டும் அவர் தம்முடைய பாடுகளை குறித்து பேசுவதை போல இருக்கிறது.

அவர் ஒருபோதும் தம்முடைய சரீரத்தில் ஏற்பட்டிருக்கும் வேதனைகளும் பாடுகளும் தமக்கு தாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று  சொல்லவில்லை. இயேசு கிறிஸ்து தாகமாயிருக்கிறேன் என்று தம்முடைய ஆத்தும தாக்கத்தை குறித்தே சொல்லுகிறார். நம்முடைய மீட்பு நிறைவேற வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் இருதயத்தில் இருக்கிறது. ஆகையால் வேதவாக்கியம் ஒவ்வொன்றும் நிறைவேற வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார். இயேசு கிறிஸ்துவின் தாகத்தை குறித்து ஏற்கனவே வேதவாக்கியம் முன்னறிவிப்பு செய்திருக்கிறது. வேதவாக்கியங்கள் எல்லாம் நிறைவேறும் என்று இயேசுவுக்கு தெரியும். ஆகையால் தாகமாயிருக்கிறேன் என்று தம்மைக் குறித்து சொல்லப்பட்ட வேதவாக்கியம் நிறைவேற வேண்டும் என்பதில் மிகவும் கரிசனை உள்ளவராக இருக்கிறார். 

என் ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள் என் தாகத்திற்கு காடியை கலந்து குடிக்கக் கொடுத்தார்கள் என்று சங்கீதம் 69:21 இல் இயேசு கிறிஸ்துவை குறித்து முன்னறிவிக்கப்பட்ட வேதவாக்கியம் நிறை வேறும் படிக்கு தாகமாயிருக்கிறேன் என்று சொன்னார்.

இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தவர்கள் அவருக்கு எந்தவிதமான மதிப்போ மரியாதையோ கொடுக்கவில்லை. இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போது தாகமாயிருக்கிறேன் என்கிற ஆர் சிலுவை மரத்தின் அருகில் காடி நிறைந்த பாத்திரம் வைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக ஒரு நபரை சிலுவையில் அறைந்து கொள்ளும் போது ரோம போர் சேவகர்கள் காடி நிறைந்த பாத்திரத்தை வைத்திருப்பது வழக்கம். காடி என்றால் கசப்பு என்று பொருள். போர் சேவகர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். இயேசுக்கிறிஸ்து தாகமாக இருக்கும்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட அவருக்கு கொடுக்கப்படவில்லை ஒரு சொட்டு தண்ணீர் அவருடைய தாகத்தை தீர்க்க போதுமானதாக இருக்கிறது ஆனால் அவர்கள் ஒரு பாத்திரம் நிறைய கசப்பு கலந்த பானத்தை குடிக்க கொடுக்கிறார்கள் இயேசுவுக்கு தேவையானது தண்ணீர் மட்டுமே கசப்பு அல்ல அவருக்கு தேவையில்லை ஒரே ஒரு சொட்டு தண்ணீர் அவருக்கு போதுமானது.

இன்றைக்கும் இயேசு ஆத்தும தாகத்தினால் நிறைந்திருக்கிறார் அவருக்கு மனம் திரும்பின ஒரு மனிதனை அவரிடம் கொண்டு வருவதை அதிக சந்தோஷமாக எண்ணுகிறார் கசப்பு என்னும் பாவம் நிறைந்த மனிதர்கள் அல்ல பரிசுத்தத்தை வாஞ்சிக்கும் மனிதர்களே அவருக்குத் தேவை. கசப்பான கனிகளைத் தரும் மரத்தை அல்ல நல்ல கனி கொடுக்கும் மரத்தையே அவர் விரும்புகிறார். நமக்குள் கசப்பான எந்த வேரும் முளைக்காத படி ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்று வேதம் எச்சரிக்கிறது. இயேசுகிறிஸ்து இந்த நாளில் நம்மிடம் எதிர்பார்ப்பது கசப்புக் கலந்த மாம்சத்தின் கிரியைகளை அல்ல அவருடைய தாகத்தை தணிக்கும் ஆவியின் கனிகளை எதிர்பார்க்கிறார். நாம் மிகுந்த கனி தர வேண்டும் என்பது அவருடைய விருப்பமாய் இருக்கிறது. கசப்பான அனுபவங்களை விட்டுவிட்டு கசப்பான எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு தேவனுடைய தாகத்தை தீர்க்கும் ஆவியின் கனியை உடையவர்களாய் இன்று தீர்மானிப்போம் அதை இப்போதே செயல்படுத்துவோம் ஆமென்.

போதகர். சார்லஸ் சதீஷ் குமார், WMM இம்மானுவேல் கிறிஸ்தவ சபை, வேப்பங்குப்பம்.

Post a Comment

0 Comments