மூன்றாவது வார்த்தை அதோ உன் மகன், இதோ உன் தாய் (2௦20)

மூன்றாவது வார்த்தை

அதோ உன் மகன், இதோ உன் தாய்

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவரையும் அன்போடு கூட வாழ்த்துகிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை தியானித்துக் கொண்டு இருக்கிற நாம் இப்பொழுது சிலுவையில் அவர் பேசின மூன்றாவது வார்த்தையை தியானிப்போம்.

யோவான் 19:25-27

25 இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.


26 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.

27 பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். 

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து கொண்டிருக்கும்போது சிலுவையின் அருகே அவருடைய தாயாகிய மரியாளும் அவளுடைய உறவினரும் ஸ்னேகிதரும் நின்று கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெண்கள் இயேசு கிறிஸ்துவின் மீது மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் யோவானை தவிர மற்ற எல்லோரும் அவரை விட்டு ஓடிப் போய்விடுகிறார்கள். ஆனால் இந்தப் பெண்களோ இயேசு கிறிஸ்துவோடு கூடவே இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் சத்துருக்களை பார்த்து இந்த பெண்கள் பயப்படவில்லை. இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து கொண்டிருக்கும் கோர காட்சியை பார்க்க இவர்கள் தயங்கவும் இல்லை. இவர்களால் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் இருந்து காப்பாற்ற முடியாது ஆனாலும் அவருக்கு பணிவிடை செய்ய அவர் அருகிலேயே நின்று கொண்டிருக்கிறார்கள். 

இயேசு கிறிஸ்து ஒரு பாவமும் அறியாதவர் என்பதை மரியாள் நன்றாக அறிந்திருந்தாள் என்றாலும் யூதர்கள் அவர் மீது கோபம் கொண்ட படியால் அவரை சிலுவையில் அறைந்து இருக்கிறார்கள். இதைக் காணும்போது நின்று கொண்டிருந்த பெண்களின் உள்ளம் உடைந்து போயிருக்கும். இயேசுகிறிஸ்து குழந்தையாய் இருந்தபோது சிமியோன் என்பவர் மரியாளை பார்த்து உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிபோகும் என்று லூக்கா 2:35 இல் தீர்க்கதரிசனமாக கூறியிருந்தார் அந்த தீர்க்கதரிசனம் இப்பொழுது மரியாளிடம் நிறைவேறுகிறது. இயேசுவை சிலுவையில் அறைவது மரியான் பார்க்கும்போது அவருடைய இருதயம் ஒரு பட்டயத்தால் குத்தியதை போலாயிற்று. இயேசு கிறிஸ்து சிலுவையில் இரத்தம் சிந்தும் போது மரியாள் இருதயத்திலும் ரத்தம் சிந்துகிறது. இயேசு சிலுவையில் படும் பாடுகளையும் வேதனைகளையும் பார்க்கும்பொழுது மரியாளுடைய உள்ளம் உடைந்து போகிறது. தேவனுடைய கிருபை இல்லாமல் மரியாள் இந்த காட்சிகளை பார்க்க ஜீவன் இருந்திருக்காது. பார்த்த உடனே மரித்துப் போய் இருப்பாள். தேவன் மரியாளை பெலப்படுத்துகிறார் இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக் கொண்டிருப்பதை மனபாரத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறாள் மரியாள். இந்த நேரத்தில் தான் இயேசு கூறினார், 

இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். 

உலக இரட்சகராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய தாயாரிடம் அன்பும் தயவும் உள்ளவராக இருக்கிறார். மரியாளை அன்போடு பராமரிக்கிறார் மரியாவின் கணவர் யோசேப்பு இதற்கு முன்பே மறுத்துவிட்டான் என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். குடும்பத்தின் மூத்த மகனாகிய இயேசு கிறிஸ்து தம்முடைய தாயாகிய மரியாள் பராமரித்து ஆதரித்து வந்தார் இப்பொழுது மரியாளுக்கு இருந்த ஒரே ஆதரவு சிலுவையில் மரித்து கொண்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கி கொண்டு வேதனையோடு இருந்தாலும் சிலுவைக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் தம்முடைய தாயாகிய மரியாளை அன்போடு நோக்கி பார்க்கிறார். இயேசு கிறிஸ்துவின் சிலுவையின் அருகே தம்முடைய சீடனாகிய யோவான் நின்று கொண்டிருப்பதையும் பார்க்கிறார் . தமக்கு அன்பான தாய்க்கும் அன்பான சீடனுக்கும் ஒரு புதிய உறவை ஏற்படுத்துகிறார். அதோ உன் மகன் என்று தாயாரிடமும் இதோ உன் தாய் என்று சீடனிடம் சொன்னவுடன் அந்த நேரம் முதல் யோவான் மரியாளை தன்னோடு சேர்த்துக் கொண்டு தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போகிறான்  இயேசுவுக்கு தாயாய் இருந்த மரியாள் இப்பொழுது யோவானுக்கும் தாயாக இருக்கிறாள். 

இயேசுகிறிஸ்து தமக்கு அன்பான சீடன் இடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார். தாம் அவனிடத்தில் எதை சொன்னாலும் தம்முடைய வார்த்தையை அவன் தட்டிக் கழிக்காமல் அதை நிறைவேற்றுவான் என்று நம்புகிறார், அந்த நம்பிக்கையில்தான் இயேசு தம்முடைய சீடனை நோக்கி அதோ உன் தாய் என்று கூறுகிறார். இயேசு கிறிஸ்துவின் தாயாகிய மரியாள் தமக்குத் தாயாக பெறுவது யோவானுக்கு கிடைத்த பெரிய பாக்கியம் ஆகும். யோவானின் பக்தி விசுவாசம் ஆகியவற்றை இயேசுகிறிஸ்து அங்கீகரித்து தம்முடைய தாயை பராமரிக்கும் ஆசீர்வாதத்தை பொறுப்பாக ஒப்புக் கொடுக்கிறார். இயேசு கிறிஸ்து நமக்கு சொல்லும் ஊழியத்தை செய்வது நமக்கு கிடைத்த பாக்கியமாகும். இந்த உலகத்தில் இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியத்தை செய்யும்படி நம்மை நம்பி நம்மிடம் கொடுத்து இருக்கிறார். அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாய் நடப்பது நம்முடைய கடமையாக இருக்கிறது. கிறிஸ்துவுக்காக இந்த உலகத்தில் அவருடைய ஊழியத்தை நாம் செய்வது நமக்கு கிடைத்திருக்கும் மகா பெரிய சிலாக்கியம். இயேசு யோவானுக்கு கொடுத்த வேலையை உடனே அவன் நிறைவேற்றுகிறான். நாம் இயேசுவை நேசிப்பது உண்மையென்றால் இயேசு நம்மை நேசிக்கிறார் என்ற உணர்வு இருப்பது உண்மை என்றால் அவர் நமக்கு கொடுத்திருக்கிற வேலையை இன்றே தொடங்குவோமாக.... 

போதகர். சார்லஸ் சதீஷ் குமார் WMM இம்மானுவேல் கிறிஸ்தவ சபை, வேப்பங்குப்பம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.