ஜீவனை பற்றிய பதினான்கு குறிப்புகள் 7. ஆவியின் உணர்வும் ஆவியை அறிதலும்

 



ஜீவனை பற்றிய பதினான்கு குறிப்புகள்


7. ஆவியின் உணர்வும் ஆவியை அறிதலும்


நாம் இப்போது ஆவியின் உணர்வும், ஆவியை அறிதலும் என்ற ஏழாவது முக்கியமான குறிப்பைப் பார்க்கலாம். ஜீவனின் ஒவ்வாரு அனுபவமும் ஆவியில் இருப்பதால், ஆவியை அறிவதே ஜீவனின் அனுபவத்திலுள்ள ஒரு அடிப்படை விளைவாகும்.


உண்மையாகவே ஆவி என்று அழைக்கப்படுகிற இந்தக் காரியம் என்ன? ஆவியை நாம் எவ்வாறு அறியமுடியும்? ஆவியை நாம் எப்படித் தொடமுடியும்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பது எளிதான தல்ல என்று நான் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆவி எப்படிப்பட்டது என்பதை விளக்குவது கடினம். உடலைப் பற்றிப் பேசுவது மிகவும் எளிது, ஏனென்றால் நாம் அதைப் பார்க்கமுடியும், தொடமுடியும். ஆத்துமாவைப்பற்றிப் பேசுவதும் கடினமல்ல, ஏனென்றால் ஆத்துமா புலனாகாததாக இருந்தாலும், சிந்தித்தல், பரிசீலித்தல், தீர்மானித்தல், முடிவெடுத்தல், பிரியப்படுதல், கோபப்படுதல், துக்கப்படுதல், களிகூருதல் போன்ற அதன் செயல்பாடுகளாலும், செயல்களாலும் நாம் அதை உணரவும் அறியவும்முடியும். ஆவியைப்பற்றிப் பேசுவது தான் உண்மையில் கடினமானது. ஆவியைப் புரிந்துகொள்வதுகூட எளிதானதல்ல; ஆவியைப்பற்றிப் பேசுவது அதைவிடக் கடினமான தாகும். இருப்பினும் நாம் அதைப்பற்றி பேச முயற்சிசெய்வோம்.


ரோமர் 8ஆவியைப்பற்றிப் பேசுகிறது. ஆவியில் நம் நிலைமையைப்பற்றி இதைப்போல தெளிவாகப் பேசுகின்ற வேறொரு பகுதியை வேதாகமத்தில் பார்ப்பது கடினம். ஆகை யால் நாம் ஆவியை அறியவிரும்பினால் இந்தப்பகுதிக்கு நாம் கவனம் செலுத்தவேண்டியது தவிர்க்கமுடியாததாகும்.


 I.நான்கு காரியங்கள்


ஆவியைப்பற்றிப் பேசுவதில் அப்போஸ்தலன் நான்கு காரியங் களைப் பயன்படுத்துகிறார்:


A. ஜீவன்


'ஜீவனுடைய ஆவி" என்று வசனம் 2-ல் அவர் கூறுகிறார். இவ்வாறு கூறுகையில், அவர் இங்கே பேசுகிற ஆவி ஜீவனின் ஆவியானவர், அதாவது ஜீவனோடு தொடர்புடையதும் ஜீவனை அடக்கியதும் ஜீவனுக்குரியதுமான ஆவியே என்று அவர் நமக்குக் காட்டுகிறார். பின்பு "ஆவியின் சிந்தையோ ஜீவன்" என்று வசனம் 6-ல் அவர் கூறுகிறார். ஜீவன் ஆவியின் கனி என்றும் ஆவியே ஜீவனின் ஊற்று என்றும் இதன் அர்த்தமாகும்; ஆகையால் நாம் ஆவியைத் தொடுவதால் ஜீவனைத்தொடுகிறோம். ஜீவனும் ஆவியும் ஒன்றோடொன்று தொடர்புடையவை; எனவே நாம் ஜீவன் மூலம் ஆவியை அறியமுடியும். ஆவியை அறிவது கடினமான தாக இருந்தாலும், ஜீவனை உணர்ந்துகொள்வது அதைவிட எளிதானதாகும்.


B.விதி


வசனம் 2-ல், "ஜீவனுடைய ஆவியைப்"பற்றி மட்டு மல்லாமல் 'ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தைப்" பற்றியும் அப்போஸ்தலன் பேசுகிறார். அவர் இங்கே பேசுகிற ஆவி ஜீவனுக்குரியது மட்டுமல்ல அதற்கு ஒரு விதியும் இருக்கிறது என்று இது நமக்குச் சொல்லுகிறது. ஆகையால் அவர் ஆவியைப்பற்றிப் பேசும்போது ஜீவனைப்பற்றிப் பேசுகிறார். அதைப்போல விதியைப்பற்றியும் பேசுகிறார். ஜீவன், ஆவி, விதி, ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைக்கிறார். ஜீவனும் ஆவியும் பிரிக்கப்பட முடியாதவை. அதைப்போல விதியும் ஆவியும் பிரிக்கப்பட முடியாதவை. ஜீவன் ஆவியின் உள்ளடக்கமும் விளைவுமாகும். ஆனால் விதி ஆவியின் செயல்பாடும் செயலுமாகும். ஜீவனைத் தொடர்புகொள்வதால் நாம் ஆவியைத் தொடுகிறோம்; விதியை உணர்வதால் நாம் ஆவியையும் உணர்கிறோம். ஆவி கண்டுபிடிக்கக் கடினமான தாக இருந்தாலும் விதி தேடுவதற்குக் கடினமானதல்ல. ஆகை யால் விதியினால் நாம் ஆவியைக் கண்டுபிடிக்கமுடியும்.


C. சமாதானம் 


வசனம் 6-ல், 'ஆவியின் சிந்தையோ ஜீவனும், சமா தானமுமாம்," என்று அப்போஸ்தலன் கூறுகிறார். ஆவியின் மேல் மனதைப் பொருத்துவதின் விளைவு ஜீவன் மட்டுமல்ல, சமாதானமும்கூட என்பது இதன் அர்த்தமாகும். ஆகையால் ஜீவன் ஆவியின் கனியாக இருக்கிறது சமாதானமும் ஆவியின் கனியாக இருக்கிறது. நாம் ஆவியைத் தொடும்போது ஜீவனைத் தொடுகி றோம், அதுபோல சமாதானத்தையும் தொடுகிறோம். ஜீவனால் நாம் ஆவியை அறியமுடியும் என்பதுபோல, சமாதானத்தி னாலும் நாம் ஆவியை உணரமுடியும்.


D. மரணம்


வசனம் 6-ல்,ஆவியின் சிந்தையோ ஜீவனும், சமாதானமுமாம் என்று அப்போஸ்தலன் கூறுவதற்குமுன்பு, "மாம்ச சிந்தை மரணம்," என்று கூறுகிறார். இங்கே அவர் நேர்மறையான ஒன்றை வெளிச்சம்போட்டுக் காட்ட எதிர்மறை யான ஒன்றைப் பயன் படுத்துகிறார். மாம்சமும் ஆவியும் எதிரானவைகள்போல, மரணமும் ஜீவனும் எதிரானவைகள். ஜீவன் ஆவியின் கனியாகவும் ஆவியிலிருந்து வருகிறதாகவும் இருக்கிறது. மரணம் மாம்சத்தின் கனியாகவும் மாம்சத்திலிருந்து வருகிறதாகவும் இருக்கிறது. ஜீவன், ஆவியிலிருந்து வரும் காரியங்களை நாம் அறியச்செய்து நேர்மறையான பக்கத்திலிருந்து ஆவியை அறிய நமக்குத் திறனளிக்கிறது. மரணம், மாம்சத்திலிருந்து வரும் காரியங்களை நாம் அறியச்செய்து எதிர்மறையான பக்கத்திலிருந்து ஆவியைத் திரைநீக்கிக் காண்பிக்கிறது. ஆகையால் நேர்மறையான பக்கத்தி லிருந்து ஆவியை அறிய ஜீவன் நமக்குத் திறனளிப்பதுபோல, எதிர்மறையான பக்கத்திலிருந்து ஆவியைப் புரிந்துகொள்ள மரணம் நமக்குத் திறனளிக்கிறது. ஆவியை அறிவதற்கு நாம் ஜீவனை அறியவேண்டும், மேலும் ஜீவனுக்கு எதிரான மரணத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


இவ்வாறு ஜீவன், விதி, சமாதானம், மரணம் ஆகிய இந்த நான்கு காரியங்களைக்குறித்து அப்போஸ்தலன் கூறுகிறபடி, அவைகள் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் ஆவிக்கு நெருக்கமான தொடர்புடையவை. இந்த நான்கு காரியங்களையும் முற்றும்முடிய புரிந்துகொண்டால், இவைகளோடு மிகத்தீர்க்கமாக தொடர்புடைய ஆவியை நாம் தெளிவாக அறிந்துகொள்ளமுடியும். இந்த நான்கு காரியங்களும் ஒரு குறிப்பிட்ட வகையான உணர்வைக் கொண்டிருக்கின்றன அல்லது தெரிவிக்கின்றன.


II.உணர்வு


மிகத் தாழ்வான தாவர ஜீவனைத்தவிர, ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு குறிப்பிட்ட உணர்வு நிச்சயமாக இருக்கிறது. ஒரு ஜீவன் எவ்வளவு உயர்வாக இருக்கிறதோ, அதன் உணர்வும் அவ்வளவு வளமாக இருக்கிறது. இங்கே பேசப்படுகிற ஜீவ ஆவியினுடைய ஜீவன், அதி உன்னத ஜீவனாகிய தேவனுடைய ஜீவனே ஆகும்; ஆகையால் உணர்வில் அது மிகவும் வளமானது. நம்முள் இருக்கும் இந்த ஜீவன் நம்மை ஆவிக்குரிய உணர்வு நிறைந்த வர்களாக இருக்கச்செய்து, ஆவியையும் ஆவியின் காரியங் களையும் உணர்வதற்கு நமக்குத் திறனளிக்கிறது.


உணர்வற்ற ஒரு பொருளின் விதி உணர்வின் மண்டலத்திற்கு ரியதாக இல்லையென்றாலும், உணர்வுள்ள ஜீவனின் விதி உணர்வின் மண்டலத்திற்குரியதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, நான் ஒரு சகோதரனை அடித்தால் உடனடியாக அவர் வலியை உணர்கிறார்; நான் என் கரத்தை அவருடைய கண்களுக்குமுன் நீட்டினால், அவருடைய இமைகள் உடனடியாக மூடிவிடும். அவரை இவ்வாறு செயல்பட வற்புறுத்துகிற ஒரு ஜீவனின் விதி அவருடைய உடலில் இருப்பதால், அவர் இவ்வாறு செயல்படு கிறார். நான் அவரை அடித்த அந்தக் கணமே அவர் வலியை உணர்கிறார்; இது ஒரு விதி. நான் என் கரத்தை அவரை நோக்கி நீட்டிய கணமே அவருடைய கண்கள் இமைக் கின்றன; இதுவும் ஒரு விதி. இவைகள் விதிகளாக இருப்பினும் அவைகள் என்ன என்று நீங்கள் அவரிடம் கேட்டால், அவைகள் உணர்வின் ஒரு காரியம் என்று அவர் கூறுகிறார். பௌதீக ஜீவனின் விதி உணர்வின் ஒழுங்கிற்குரியது என்று இது நிரூபிக்கிறது. ஜீவ ஆவியினுடைய ஜீவன், உணர்வில் வளமிக்க தேவனுடைய ஜீவனாக இருப்பதால், ஜீவஆவியின் விதியும் இயல்பாகவே உணர்வினால் நிறைந்திருக்கும்.


இங்கே பேசப்படுகிற சமாதானம் நிச்சயமாக நம்முள் இருக்கும் சமாதானம். உள்ளிருக்கும் சமாதானம் முற்றும் முடிய உணர்வின் ஒரு காரியமாகும். நாம் உள்ளே சமா தானத்தைக் கொண்டிருந்தும் அதை உணராமல் இருப்பது சாத்திய மில்லை, ஆகையால் இங்கே பேசப்படுகிற சமாதானமும் உணர்வின் ஒரு காரியமாகும்.


மேலும் இங்கே பேசப்படுகிற மரணம்கூட உணர்வின் காரியம். மரணம் ஒரு மனிதனை உணர்விழக்கச்செய்கிறது. மனிதன் மரிக்கும்போது தன் உணர்வை இழந்துவிடுகிறான். மனிதன் உணர்வில்லாமலிருப்பது அவனுக்குள் மரணம் வேலை செய்துகொண்டிருப்பதின் நிரூபணம்; அவன் முழுமையாக மரிக்கவில்லையென்றாலும் ஏறக்குறைய மரித்துவிட்டான்.


ஆவிக்குரிய காரியங்களில் மரணம் ஜீவனின் உணர்வை நாம் இழக்கச்செய்வது மட்டுமல்ல, அது மரணத்தின் உணர்வையும் ஏற்படுத்துகிறது. நம் மனதை மாம்சத்தின்மேல் வைக்கும்போது மரணம் நம்மில் சுறுசுறுப்பாகிவிடுகிறது. ஒருபக்கத் தில் அது நமக்குள் ஜீவனின் உணர்வை இழக்கச்செய்கிறது, மறுபக்கத்தில் அமைதியின்மை, ஆறுதலின்மை, மனஅழுத்தம், பெருந்துயரம், இருள், வெறுமை போன்ற உணர்வைக் கொண் டிருக்கச்செய்கிறது. இந்த வகையான அமைதியற்ற, ஆறுதலற்ற அழுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, இருள்நிறைந்த, வெறுமையான உணர்வு, மரணத்தின் உணர்வாக இருக்கிறது. மேலும் மரணத்தை நாம் உணரச்செய்கிறது.


இவ்வாறு ஜீவன், விதி, சமாதானம், மரணம் ஆகிய இந்த நான்கும் அவைகளோடு தொடர்புடைய ஓர் உணர்வைக் கொண்டிருக்கின்றன. இந்தக் காரியங்களின் உணர்வு, ஆவியின் உணர்வைத் தொடுவதற்கும் அதன்மூலம் ஆவியை அறிவதற்கும் நமக்குத் திறனளிக்கிறது. நாம் இந்த நான்கு காரியங்களின் உணர்வை ஆராய்வதற்குக் கொஞ்ச நேரம் செலவிட வேண்டும்.


III. ஜீவனின் உணர்வு


இங்கு பேசப்பட்டுள்ள ஜீவன், ஜீவ ஆவியினுடைய ஜீவனைக் குறிக்கிறது. ஆகையால் இது ஆவியினுடையதும் ஆவியிடமிருந்து வருகிறதும் ஆவியுடன் இருக்கிறதுமான ஜீவனாகும். இந்த ஜீவனை யுடைய இந்த ஆவி தேவனுடைய ஆவி மட்டுமல்ல, நம் ஆவியாகவும் இருக்கிறது. தேவனுடைய ஆவி மற்றும் நம் ஆவி ஒரே ஆவியாகக் கலந்திணைந்திருப்பதே இந்த ஆவியாகும். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவ ஆவியானவர் மனிதர்கள்மேல் மட்டுமே வந்திறங்கினார். இதனால் மனிதர்கள் வெளியிலிருந்து தேவனுடைய வல்லமையைப் பெற்றார்கள். உள்ளிருந்து தேவனுடைய ஜீவனை மனிதன் பெறும்படி அவர் மனித னுக்குள் நுழையவில்லை. இவ்வாறு பழைய ஏற்பாட்டுக் காலங்களில் தேவ ஆவியானவர் வல்லமையின் ஆவியாக மட்டுமே இருந்தார்; அவர் இன்னும் ஜீவனின் ஆவியாக வில்லை. புதிய ஏற்பாட்டுக் காலம்வரை உள்ளிருந்து தேவனுடைய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும்படி ஜீவனின் ஆவியாக தேவ ஆவியானவர் மனிதனுக்குள் நுழையவில்லை. இன்று புதிய ஏற்பாட்டுக் காலத்தில் தேவ ஆவியானவர் வல்லமையின் ஆவியாக மட்டுமல்ல, ஜீவனின் ஆவியாகவும் இருக்கிறார். மனிதன் தேவனு டைய வல்லமையை வெளியார்ந்தரீதியாக பெற்றுக்கொள்ளச் செய்ய, அவர் மனிதன் மேல் வந்திறங்குவதும், மனிதன் தன் பாவத்தை அறிந்து, அறிக்கைசெய்து, மனந்திரும்பி, கர்த்தரில் விசுவாசிக்கும்படிச்செய்ய, அவர் மனிதனை ஏவுகிறதும் மட்டுமல்ல, தேவனுடைய ஜீவனை மனிதன் உள்ளார்ந்தரீதியாகப் பெற்றுக்கொள்ளும்படி அவர் மனிதனுக்குள் நுழைகிறார்; மேலும் ஜீவனின் ஆவியாக அவர் மனிதனுக்குள் குடியிருக்கிறார். நாம் அவரால் ஏவப்பட்டு, மனந்திரும்பி, விசுவாசித்து, கர்த்தராகிய இயேசுவை நம் இரட்சகராகப் பெற்றுக்கொள்ளும் போது, அவர் நமக்குள் நுழைந்து, தேவனுடைய ஜீவனை நம்மில் வைக்கிறார். இந்த நேரத்தில் அவர் ஜீவனின் ஆவியாக, அதாவது தேவனுடைய ஜீவனின் ஆவியாக நமக்குள் நுழைகிறார். தேவனுடைய ஜீவன் அவரில் இருக்கிறது; இவ்வாறு அவர் தேவனுடைய ஜீவனாக இருக்கிறார்; ஆகையால் அவர் நமக்குள் நுழையும்போது தேவனுடைய ஜீவன் நமக்குள் நுழைகிறது. அவர் ஜீவனின் ஆவியாக தேவனுடைய ஜீவனோடு நமக்குள் நுழைகிறார். அவர் நுழையும்போது அவர் நம் ஆவிக்குள் நுழைகிறார், நம் மனம், உணர்ச்சி, சித்தத்திற்குள் அல்ல. அவர் நம் ஆவிக்குள் நுழைந்து, தேவனுடைய ஜீவனை நம் ஆவியில் வைத்து, நம் ஆவியில் குடியிருக்கிறார்; இவ்வாறு ஜீவனின் ஆவி நம் ஆவியோடு கலந் திணைந்துள்ளது. இப்போது அவரும், தேவனுடைய ஜீவனும், நம் ஆவியும் ஆகிய மூன்றும் ஒன்றாகக் கலந்திணைந்து, ஒருபோதும் பிரிக்கப்பட முடியாதபடி, தேவனுடைய ஆவி தேவனுடைய ஜீவனோடுகூட (அவரே தேவனுடைய ஜீவன்) நம் ஆவியில் குடியிருக்கிறார். ஆரம்பத்தில், தனக்குள் வெறும் தண்ணீரை மட்டும் கொண்ட


ஒரு கோப்பையை ஓர் எடுத்துக்காட்டாக நாம் பயன்படுத்தலாம். பின்னர், அது தண்ணீர்-சர்க்கரை-சாறு என்ற ஒன்றில்-மூன்று பானத்தை உடைய ஒரு கோப்பையாக மாறும்படி, அதனுள் சர்க்கரை சேர்ந்த, திடமான பழச்சாறை நாம் கலக்கிறோம். தண்ணீர் நம் ஆவியை அடையாளப்படுத்துகிறது, திடமான பழச்சாறு தேவனுடைய ஆவியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, மேலும் சர்க்கரை தேவனுடைய ஜீவனைக் குறிக்கிறது. தேவனுடைய ஜீவனை உள்ளடக்கிய தேவனுடைய ஆவி நம் ஆவியோடு கலந்து, தேவனுடைய ஆவி, தேவனுடைய ஜீவன், நம் ஆவி ஆகிய இம்மூன்றையும் ஒன்றில்-மூன்று ஜீவனின் ஆவியாக ஆக்குகிறது. இதையே ரோமர் 8:2 பேசுகிறது.


இவ்வாறு நாம் இங்கே பேசிக்கொண்டிருக்கிற ஜீவ ஆவியினுடைய ஜீவன் குடியிருக்கும் ஆவி, தேவனுடைய ஆவியையும், நம் ஆவியையும் உள்ளடக்கியது. இது, நம் ஆவியோடு தேவனுடைய ஆவியின் கலந்திணைதலாகிய ஓர் ஆவியாகும். வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் ரோமர் 8-ல் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஆவியை பரிசுத்த ஆவியானவர் என்று புரிந்துகொண்டார்கள்; ஆகையால் அவர்கள் ஆவி என்று எழுதும் போது தேவனுடைய ஆவி என்ற பொருளில் எழுதியிருக்கிறார்கள். வேதாகமத்தை வாசிக்கிற அநேகரும் கூட இங்கே குறிப்பிடப் பட்டுள்ள ஆவி பரிசுத்த ஆவியானவரையே குறிக்கிறது என்று எண்ணுகிறார்கள். இருப்பினும் ஆவிக்குரிய உண்மையும் ஆவிக்குரிய அனுபவமும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஆவி நம் ஆவியோடு பரிசுத்த ஆவியானவரின் கலந்திணைதலாகும் என்று சொல்லுகின்றன. இந்த அதிகாரத்தின் 16-ம் வசனத்தில் இந்த ஆவிக்குரிய உண்மையை (இது நம் ஆவிக்குரிய அனுபவமும்கூட) அப்போஸ்தலன் கூறுகிறார். "ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்," என்று அவர் கூறுகிறார். இந்தவிதத்தில் பேசுவதால், அவர் முன்பு குறிப்பிட்ட ஆவி "ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனேகூட" கலந்திணைந்துள்ள ஒரே ஆவியாக இருக்கிறது என்று தெளிவாகக் கூறுகிறார். இந்த ஆவியை பரிசுத்த ஆவியானவர் என்று கூறுவது சரிதான், மேலும் இது நம் ஆவி என்று சொல்வதிலும் தவறில்லை. இது திடமான பழச்சாறோடு கோப்பையி லுள்ள தண்ணீரைப்போன்றது. இதைப் பழச்சாறு என்று நீங்கள் சொல்லலாம், தண்ணீர் என்றும் நீங்கள் சொல்லலாம். இது ஏனென்றால், இவை இரண்டும் ஒன்றாகக் கலந்திணைந்துவிட்டன. அதுபோல, பரிசுத்த ஆவியும் நம் ஆவியும் ஒரே ஆவியாக கலந்திணைந்துவிட்டன. இவை இரண்டின் கலந்திணைதலாக இருக்கும் இந்த ஒரே ஆவிக்குள் தேவன் நமக்கு அருளுகிற ஜீவன் இருக்கிறது; இவ்வாறு இது ஜீவனின் ஆவியாகிறது. எளிமையாகப் பேசுவதனால், தேவனுடைய ஜீவன் தேவனுடைய ஆவியில் இருக்கிறது, மேலும், தேவனுடைய ஆவி நம் ஆவிக்குள் நுழைகிறார்; இவ்வாறு, இவை மூன்றும் ஒன்றாகக் கலந்திணைந்து ஜீவனின் ஆவியாகின்றன.


ஆரம்பத்தில், நம் ஆவி மனித ஆவியாக மட்டுமே இருந்தது, மேலும் அது மரித்ததாயிருந்தது. இப்போது தேவனுடைய ஆவி நுழையும்போது, அவர் நம் ஆவியை உயிர்ப்பிப்பதோடு மட்டுமல்லாமல், நம் ஆவிக்குள் தேவனுடைய ஜீவனைக் கூட்டிச்சேர்க்கவும் செய்கிறார். இப்போது நம் உயிரோடிருப்பது மட்டுமல்ல, அது தேவனுடைய ஜீவனையும் ஆவி கொண்டிருக்கிறது; அது ஓர் ஆவி மட்டுமல்ல, அது ஜீவனின் ஆவியாகவும் இருக்கிறது. இந்த ஆவியிலுள்ள ஜீவனின் எல்லா உணர்வும் இந்த ஆவியை நாம் அறிவதற்குத் திறனளிக்கிறது. நாம் நம் மனதை இந்த ஆவியின்மேல் பொருத்தி நடக்கும்போதும், நம் செயல்களும், செய்கைகளும் இந்த ஆவிக்கு ஏற்றபடி இருக்கும்போதும், இந்த ஆவியிலுள்ள ஜீவன் இந்த ஜீவனின் உணர்வை நாம் கொண்டிருக்கச்செய்யும். இந்த ஜீவன் தேவனுடையதாகவும், பசுமையாகவும் உயிரோட்டமாகவும், வல்லமையோடு பலமான தாகவும், பிரகாசமாகவும் பரிசுத்தமாகவும், நிஜமாகவும் வெறுமை யில்லாததாகவும் இருப்பதால், இந்த ஜீவனின் உணர்வு நிச்சயமாக நாம் தேவனுடைய பிரசன்னத்தை உணரச் செய்யும்; இவ்வாறு நாம் பசுமையாகவும் உயிரோட்டமாகவும், வல்லமையோடு பலமானதாகவும், பிரகாசமாகவும் பரிசுத்தமாகவும், நிஜமாகவும் வெறுமையில்லாததாகவும் உணர்வோம். நாம் இப்படிப்பட்ட உணர்வுகளைக் கொண்டிருக்கும்போது, நாம் ஆவிக்கு அக்கறை செலுத்துகிறோம், ஆவிக்கேற்றபடி நடக்கிறோம், ஆவியில் வாழ்கிறோம் என்று நாம் அறிகிறோம். இப்படிப்பட்ட உணர்வுகள் நமக்குள்ளிருந்து ஆவிக்கேற்றபடி நடக்கவும் ஆவியின்படி வாழவும் நம்மை வழிநடத்துகிற நம் ஆவியில் உள்ள ஜீவனின் உணர்வு அல்லது ஜீவனுடைய நம் ஆவியின் உணர்வாகும். நாம் இப்படிப்பட்ட உணர்வுகளைத் தொடும் போது, நாம் ஆவியைத் தொடுகிறோம். நாம் இப்படிப்பட்ட உணர்வுகளுக்குச் செவிகொடுக்கும்போது ஆவிக்குச் செவி கொடுக்கிறோம். ஆவியில் ஜீவனின் இப்படிப்பட்ட உணர்வுகளை நாம் எளிதாக உணரமுடியும், ஆனால் நேரடியாக ஆவியையே நாம் உணர்வது இதைவிடக் கடினம். இப்படிப்பட்ட உணர்வுகளை நாம் நெருக்கமாகப் பின்தொடர்ந்தால், நாம் ஆவியை அறிந்து ஆவியில் வாழமுடியும்.


நம் ஆவியில் உள்ள தேவனுடைய ஜீவன் தேவனே என்று சொல்லமுடியும்; ஆகையால் இந்த ஜீவனின் உணர்வு நிச்சயமாக நம்மை தேவனையே உணரச்செய்யும். நாம் ஆவியில் வாழ்ந்து ஆவிக்கு அக்கறைசெலுத்தி நடந்தால் இந்த ஜீவனின் உணர்வு, நாம் தேவனோடு தொடர்பில் இருக்கிறோம், நம் ஜீவனாகவும் நம் வல்லமையாகவும் நம் எல்லாமுமாகவும் நம்மில் தேவன் இருக்கிறார் என்று நாம் உணரும்படிச்செய்யும்; இவ்வாறு நாம் சந்தோஷமாகவும் ஓய்வாகவும் வசதியாகவும் திருப்தியாகவும் இருப்போம். ஜீவனின் உள்ளான உணர்வில் நாம் இவ்வாறு தேவனைத் தொடும்போது, நாம் ஜீவனைத் தொடுகிறோம்; இவ்வாறு நாம் ஆவியில் வாழ்கிறோம், ஆவியின்மேல் மனதைப் பொருத்துகிறோம் என்று அறிவோம்.


ஜீவ ஆவியினுடைய ஜீவன் குடியிருக்கும் ஆவி, நம் ஆவியுடன் தேவனுடைய ஆவியின் கலந்திணைதலாக இருப்பதால், ஜீவனின் இந்த உணர்வு எதையெல்லாம் நம்மை உணரச்செய்கிறதோ அவையெல்லாம் நம் ஆவியில் தேவனுடைய ஆவியின் வரலாறாக இருக்கவேண்டும். நம் ஆவியில் தேவனுடைய ஆவி நமக்கு கிறிஸ்துவை வெளிப்படுத்தி, கிறிஸ்து வில் தேவனை நமக்குள் பகிர்ந்தளித்து, நாம் கிறிஸ்துவை அனுபவ மாக்கி ஆவியில் தேவனை தொடர்புகொள்ளவும் செய்கிறார். இவ்வாறு, இது நாம் கிறிஸ்துவை அனுபவமாக்கச்செய்கிறது, அதாவது தேவனை நம் ஜீவனாக அனுபவமாக்கச்செய்கிறது; நாம் ஜீவனை, அதாவது நம் ஆவியிலுள்ள தேவனுடைய ஜீவனை அனுபவ மாக்கச்செய்கிறது என்பதும் இதன் அர்த்தமாகும். இவ்வாறு நாம் இந்த ஜீவனை அனுபவமாக்கும்போது இது ஜீவனின் திருப்தியையும் ஜீவனின் வல்லமையையும் ஜீவனின் பிரகாசத்தையும் ஜீவனின் பசுமையையும் ஜீவனின் உயிரோட் டத்தையும் ஜீவனின் மேம்பாட்டையும் நாம் உணரும்படிச் செய்கிறது. நம்முள் ஜீவனின் இப்படிப்பட்ட உணர்வைக் கொண்டிருக்கும்போது, நாம் ஆவியில் வாழ்கிறோம், ஆவியைத் தொடுகிறோம் என்று அறிகிறோம்.


IV. ஜீவ ஆவியின் விதியின் உணர்வு


 நம்முள் இருக்கும் ஜீவனின் ஆவியில், தேவனுடைய ஜீவன் மட்டுமல்ல, ஒரு விதியும் இருக்கிறது. இந்த விதி தேவனுடைய ஜீவனின் விதி. ஒவ்வொரு ஜீவனுக்கும் அதன் விதி உண்டு. நம் உடலிலுள்ள ஜீவனுக்கு, நம் உடலுக்குள் அதன் விதி இருக்கிறது. அதன் சுபாவத்திற்கு பொருந்துகிறவைகளை அதன் விதி அங்கீகரித்து ஏற்றுக்கொள்கிறது; இதற்கு முரணான எதையும், அதன் விதி எதிர்த்து மறுத்து விடுகிறது. அதுபோல நம் ஆவியிலுள்ள தேவனுடைய ஜீவன் அதன் விதியைக் கொண்டுள்ளது. அது


ஆவியி னுடையதும் ஆவியோடு இருப்பதுமாகும்; ஆகையால், அதன் சுபாவம் முற்றும்முடிய, முழுமையாக ஆவிக்குரியதாகும். நாம் என்னவாக இருக்கிறோமோ நாம் என்ன செய்கிறோமோ அது, அதன் ஆவிக்குரிய சுபாவத்தோடுகூட ஒத்திருந்தால், நம் ஆவியிலுள்ள இந்த விதி அதை அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறது; இல்லாவிட்டால், இந்த விதி எதிர்த்து நிராகரித்துவிடுகிறது. அது அங்கீகரித்து ஏற்றுக்கொள்கிற யாவும் நிச்சயமாக ஆவியிலிருந்து வருகிறது, ஏனென்றால் ஆவியிலிருந்து வருவது மட்டுமே அதன் ஆவிக்குரிய தன்மையோடு ஒத்திருக்கமுடியும். ஆகையால் நாம் என்னவாக இருக்கிறோமோ, நாம் என்ன செய்கிறோமோ அவையெல்லாம் ஆவியிலிருந்து வருவதாகவும் ஆவியிலிருப்பதாகவும் இருக்க வேண்டும். அப்போது நம் ஆவியிலுள்ள ஜீவவிதி அதை அங்கீகரித்து அதை ஏற்றுக்கொள்ளும்.


நம் ஆவியிலுள்ள இந்த ஜீவவிதி உணர்விற்குரியதாகவும், தன் சொந்த உணர்வையுடையதாயும் இருக்கிறது. அது அங்கீ கரித்து ஏற்றுக்கொள்வது அல்லது எதிர்த்து நிராகரிப்ப தெல்லாம், அது என்ன உணர்கிறது என்பதாலும், நாம் என்ன உணர வேண்டும் என்று அது விரும்புகிறது என்பதாலும் தெரியப் படுத்தப்படுகிறது. நாம் என்னவாக இருக்கிறோமோ, நாம் என்ன செய்கிறோமோ அது ஆவியிலிருந்து நம்மிலுள்ள ஜீவனின் ஆவியின் சுபாவத்தோடு பொருத்தமாக இருந்தால், இந்த விதி அதை அங்கீகரித்து ஏற்றுக்கொள்கிறது என்பதை நாம் உணரச் செய்யும்; இல்லையென்றால் இந்த விதி எதிர்த்து நிராகரிக்கிறது என்று நாம் உணரும்படிச்செய்யும். இவ்வாறு இந்த விதியின் உணர்வால் நாம் ஆவியில் வாழ்ந்துகொண்டிருக்கி றோமா இல்லையா, ஆவியில் நடந்துகொண்டிருக்கிறோமா இல்லையா என்று நாம் அறியமுடியும். இந்த விதி நம்மில் ஜீவ ஆவியின் விதியாக இருப்பதால், இந்த விதியின் உணர்வு நம்மிலுள்ள ஜீவனின் ஆவியின் உணர்வாகும்; ஆகையால் இந்த விதியின் உணர்வு நமக்குள் இருக்கும் ஆவியை நாம் அறியும்படிச்செய்யும்.


விதி இயல்பான ஒரு காரியம். ஆகையால் அது நமக்குத் தருகிற விதியும் இயல்பானது. எடுத்துக்காட்டாக ஒரு கோப்பை பழச்சாறை நாம் பருகும்போது அது இனிப்பாக இருக்கிறது என்று நாம் இயல்பாகவே உணர்கிறோம். இது ஏனென்றால் இயல்பாகவே நம்மை உணரச்செய்கிற ஒரு பௌதீக ஜீவனின் விதி நம் உடலில் இருக்கிறது. இந்தச் சாறை நம் உதடுகள் தொட்டவுடனே, நாம் இனிமையை உணர்கிறோம். இந்த இயல்பான உணர்வு நம் உடலின் ஜீவவிதியாகும். இந்த விதி அந்தச் சாறின் நறுமணச் சுவையை நாம் இயல்பாகவே உணரச் செய்கிறது. நம் ஆவியிலுள்ள ஜீவவிதியும் இதைப் போன்ற தேயாகும். நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதும், செய்வதும், ஆவியில் இருக்கிறதா, நாம் ஆவிக்கு கவனம் செலுத்தி தேவனைப் பிரியப்படுத்துகிறோமோ என்று நமக்கு மற்றவர்கள் சொல்ல வேண்டியதில்லை; நம் ஆவியிலுள்ள ஜீவவிதி ஒரு குறிப்பிட்ட உணர்வை நமக்குத் தந்து நம் நிலையை இயல்பாகவே அறிந்துகொள்ளச் செய்கிறது. இந்த ஜீவவிதியால் நமக்குக் கொடுக்கப்படுகிற இந்த இயல்பான உணர்வு நம்மிலுள்ள ஜீவ ஆவியின் ஒரு இயல்பான செயல்பாடாகும். இதனால் நாம் ஆவியில் வாழ்கிறோமா இல்லையா என்பதை நாம் எளிதாகப் பகுத்துணரலாம்.


இந்த ஜீவவிதி நமக்குக் கொடுக்கும் உணர்வு மட்டும் இயல்பான தல்ல, மாறாக அது நம்மையும் இயல்பானவர்க ளாக ஆக்குகிறது. எவ்வளவு அதிகமாக நாம் நம் ஆவியில் வாழ்கிறோமோ, மேலும் எவ்வளவு அதிகமாக நாம் இருப்பதும் செய்வதும் நம்முள் இருக்கும் ஜீவ ஆவியின் சுபாவத்துடன் ஒத்துப்போகிறதோ, அவ்வளவு அதிகமாக நம் ஆவியிலுள்ள இந்த ஜீவவிதி நம்மை இயல்பாக உணரச்செய்கிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் இயல்பாக இல்லையென்றால் நமக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது, நாம் நம் ஆவியில் வாழவில்லை என்று இது நிரூபிக்கிறது. நம்மிலுள்ள ஜீவனின் ஆவி, ஆவியின் இயல்பான விதியாக இருப்பதால், நம் வாழ்க்கையும் வேலையும் அதன் ஆவிக்குரிய சுபாவத்திற்கு ஒத்திருக்கும்போது மட்டுமே, நாம் உள்ளே இயல்பாக உணரமுடியும். உள்ளே நாம் இயல்பாக உணரும்போது நம் ஆவியிலுள்ள ஜீவவிதிக்கேற்ப நாம் வாழ்கிறோம் என்பதை இது நிரூபிக்கிறது. நம்மிலுள்ள இந்த ஜீவவிதி நமக்குத் தருகிற இந்த இயல்பான உணர்வு நாம் ஆவியில் வாழ்கிறோம், ஆவிக்கேற்றபடி நடக்கிறோம் என்பதை நாம் அறியச்செய்கிறது. இவ்வாறு நம் ஆவியிலுள்ள ஜீவவிதியைப் பின்தொடர்ந்தால் அல்லது இந்த ஜீவவிதியால் நமக்குத் தரப்படுகிற இயல்பான உணர்வை நாம் பின் தொடர்ந்தால், நம்முள் ஜீவனின் ஆவியை நாம் பின்தொடர் கிறோம் என்று அர்த்தமாகும். இதை எளிமையாகக் கூறினால், ஆவியிலுள்ள ஜீவவிதியின் உணர்வைப் பின்தொடர்வது ஆவியைப் பின்தொடர்வதாகும், ஏனென்றால் ஆவியிலுள்ள ஜீவவிதியின் உணர்வு ஆவியின் உணர்வாகவே இருக்கிறது.


V. சமாதானத்தின் உணர்வு


நம்மிலுள்ள ஜீவனின் ஆவி, தேவனுடைய ஆவியும் தேவனுடைய ஜீவனும் குடியிருக்கிற இடம் மட்டுமல்ல, இது புதிய மனிதன் இருக்கிற இடமாகவும் இருக்கிறது. மேலும் நம்மிலுள்ள ஆவி அதாவது தேவனுடைய ஜீவனோடு கலந்திணைந்திருக்கிற ஆவி நம்முள் புதிய மனிதனாகவும் இருக்கிறது. நம் வெளியார்ந்த செயலிலும் நடத்தையிலும் நம்முள்ளிருக்கும் ஜீவனின் ஆவிக்கு நாம் கவனம்செலுத் தினால், நம்முள்ளிருக்கும் ஆவிக்குரிய புதிய மனிதனால் நாம் வாழ்கி றோம். இந்த வழியில் நம் உள்ளான மனிதனும் வெளியார்ந்த செயல்களும் ஒத்திருக்கின்றன. எனவே நாம் இயல்பாகவும் சமாதானமாகவும் உணர்கிறோம். இயல்பாகவும் சமாதானமாகவும் இருக்கிற இந்த உணர்வு ஜீவ ஆவியின் விதியின் உணர்வினால் ஏற்படுகிற விளைவு என்று நாம் கூறமுடியும். நம்முள்ளிருக்கும் ஜீவ ஆவிக்கு நாம் கவனம்செலுத்தினால், நம்முள்ளிருக்கும் ஜீவ ஆவியின் விதிக்கேற்ப நாம் இயல்பாக நடக்கிறோம், வாழ்கிறோம். நாம் உள்ளே இயல்பாக உணரவும் சமாதனத்தின் உணர்வைக் கொண்டிருக்கவும் இதுசெய்கிறது. சமாதானத்தின் இந்த உணர்வும் ஜீவனின் உணர்வும் ஒன்றோ டொன்று கைகோர்த்துச் செல்லு கின்றன. ஜீவனின் உணர்வு பசுமை யாகவும் உயிரோட்டமாகவும் இருக்கிறது; சமாதானத்தின் உணர்வு இயல்பாகவும் அமைதி யாகவும் இருக்கிறது. ஜீவனின் உணர்வு திருப்தியாகவும் நிறைந்த வீரியமுள்ளதாகவும் இருக்கிறது; சமாதானத்தின் உணர்வு இளைப்பாறுதலாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. நாம் ஆவிக்குக் கவனம்செலுத்தி ஆவியால் நடக்கவும் வாழவும் செய்தால், பசுமையாக, உயிரோட்டமாக, திருப்தியாக, வீரியமுள்ளதாக, உணரும் ஜீவனின் உணர்வை மட்டுமல்ல, இயல்பாக, இளைப் பாறுதலாக, ஆறுதலாக, அமைதலாக உணரும் சமாதானத்தின் உணர்வையும் கொண்டிருப்போம். இப்படிப்பட்ட உணர்வும் ஆவியின் உணர்வாகும். இப்படிப்பட்ட உணர்வு நமக்கு இருக்கும்போது, ஆவியில் வாழ்கிறோம் என்று அறிந்துகொள்ள லாம். இப்படிப்பட்ட உணர்வை நாம் பின்தொடர்கிறபோது நாம் ஆவியின் உணர்வைப் பின்தொடர்கிறோம்; இதன் அர்த்தம் நாம் ஆவியைப் பின்தொடர்கிறோம் என்பதாகும். இப்படிப்பட்ட உணர்வு ஆவியை அறிவதற்கும், ஆவியை உணர்ந்தறிவதற்கும் நமக்குத் திறனளிக்கிறது. அதிகமாக ஆவியின்படி நடந்து ஆவியில் வாழும்போது அதிகமாக இந்த விதமான உணர்வு நம்முள் வளமாகவும் ஆழமாகவும் ஏற்படுகிறது.


VI. மரணத்தின் உணர்வு


ரோமர் 8:6-ல் ஒரு மாறுபட்ட காட்சி இருக்கிறது. மாம்சத்திற்கு கவனம்செலுத்துவதின் விளைவு மரணம், ஆவிக்கு கவனம் செலுத்துவதின் விளைவு ஜீவனும் சமாதானமும் என்று அப்போஸ் தலன் கூறுகிறார். மாம்சம் ஆவிக்கு எதிராக இருப்பதுபோல, மாம்சத்திற்கு கவனம் செலுத்துவதால் ஏற்படும் மரணம் என்ற விளைவு, ஆவிக்குக் கவனம்செலுத்துவதால் ஏற்படும் ஜீவனும் சமாதானமும் என்ற விளைவுகளுக்கு எதிரானது என்று இந்த வார்த்தை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு மரணம் ஜீவனுக்கு மட்டும் விரோதமானதல்ல, சமாதானத்துக்கும்கூட எதிரானது என்று அப்போஸ்தலன் நமக்குச் சொல்லுகிறார். ஆகையால் மரணத்தின் உணர்வு ஜீவனின் உணர்வுக்கு எதிரானது மட்டுமல்ல, சமாதானத் தின் உணர்வுக்கும் எதிரானது. ஜீவனின் உணர்வு பசுமையாகவும், உயிரோட்டமாகவும், திருப்தியாகவும், வீரியமுள்ளதாகவும் நம்மை உணரச்செய்கிறது; மரணத்தின் உணர்வு இவைகளுக்கு எதிராக பழமையாகவும் மனஅழுத்தமாகவும் வெறுமையாகவும் சத்தியற்ற தாகவும் நம்மை உணரச்செய்கிறது. சமாதானத்தின் உணர்வு நம்மை இயல்பாகவும் இளைப்பாறுதலாகவும் ஆறுதலாகவும் அமைதலாகவும் உணரச்செய்கிறது. மரணத்தின் உணர்வு நம்மை இவைகளுக்கு எதிராக இயல்பற்றதாகவும் இளைப்பாறுதலற்ற தாகவும் ஆறுதலற்றதாகவும் அமைதலற்றதாகவும் உணரச் செய்கிறது. இவ்வாறு நாம் தனிமை, மனஅழுத்தம், வெறுமை, வறட்சி, பலவீனம் மற்றும் சக்தியின்மை, இருள் மற்றும் மந்தம், அல்லது அமைதியின்மை, பாதுகாப்பின்மை, ஆறுதலின்மை, இசைவின்மை, போராட்டம், இயல்பின்மை, வருத்தம், கட்டு ஆகியவைகளை எப்போதெல்லாம் உள்ளார்ந்தரீதியாக உணர்கிறோமோ, அப்போதெல்லாம் நாம் ஆவியில் வாழ வில்லை என்பதை அறியவேண்டும்; மாறாக, ஆவிக்கு எதிராக, அதாவது மாம்சத்தில் நாம் வாழ்கிறோம்.


அப்போஸ்தலன் இங்கு பேசுகிற மாம்சம் என்பது நம் மாம்சத்தின் இச்சைகளை மட்டுமல்ல, நம் முழு பழைய மனிதனையும் குறிப்பிடுகிறது. நம் உள்ளார்ந்த புதிய மனிதனுக்கு உரியதெல்லாம் ஆவிக்கு உரியது; அதுபோல நம் வெளியார்ந்த பழைய மனிதனுக்கு உரியதெல்லாம் மாம்சத்துக்கு உரியது. ஆவியிலிருந்து வராத, ஆவிக்கு உரியதல்லாத எதுவும் மாம்சத்தி லிருந்து வருகிறதும், மாம்சத்துக்கு உரியதுமாக இருக்கிறது. ஆத்துமா மாம்சத்திலிருந்து வேறுபட்டாலும்கூட ஆத்துமா ஏற்கெனவே வீழ்ந்துபோய் மாம்சத்துக்கு சிறைபட்டிருப்பதால், ஆத்துமாவிலிருந்து வருவதும் ஆத்துமாவுக்கு உரியதுமாகிய யாவும் மாம்சத்திலிருந்து வருகிறதும் மாம்சத்துக்கு உரியது மாக இருக்கிறது. இவ்வாறு, நாம் ஆத்துமாவினால் வாழ்ந் தால், நாம் மாம்சத்தினால் வாழ்கிறோம். நாம் மாம்சத்திற்கு கவனம்செலுத்தி னாலும், ஆத்துமாவிற்கு கவனம் செலுத்தினாலும் நாம் மாம்சத்திற்கே கவனம்செலுத்துகிறோம். மாம்சத்துக்கு கவனம் செலுத்துவதின் விளைவு மரணம். இந்த மரணத்தின் உணர்வு நம்மை மன அழுத்தத்தையும் வெறுமையையும், அல்லது அமைதியின்மையையும் பாதுகாப்பின்மையையும் உணரச் செய்கிறது. இப்படிப்பட்ட உணர்வு இருக்கும்போது நாம் மாம்சத்துக்கு கவனம் செலுத்துகிறோம், மாம்சத்திலோ ஆத்துமாவிலோ வாழ்கிறோம் என்றுஅறியவேண்டும். இப்படிப் பட்ட உணர்வு நம்மை ஆவிக்கு எதிரானதை, அதாவது மாம்சத் தை அறியவும் உணர்ந்தறியவும் செய்கிறது. இவ்வாறு மாம்சத் திற்கு எதிரானதை அறிவதால் ஆவியையே அறிந்துகொள்ளலாம். சரி அல்லது தவறு, ஆவிக்குரியது அல்லது ஆவிக்குரிய தல்லாதது, என்று நினைத்து நாம் செய்கிற எதுவாக இருந்தாலும், நாம் இளைப்பாறுதலின்மை, பாதுகாப்பின்மை, வெறுமை. மனஅழுத்தம் ஆகியவைகளை நம்முள் ஆழமாக உணர்ந்தால், நாம் மாம்சத்தினால் நடக்கிறோம், ஆவியில் வாழவில்லை என்று இது நிரூபிக்கிறது. மற்ற காரியங்கள் அல்லது நன்மை இல்லாத காரியங்களைச் செய்வதில் மட்டுமல்ல, ஜெபத்திலும் மற்றும் பிரசங்கிப் பதிலும்கூட, உள்ளாக நாம் வெறுமையாகவோ, மன அழுத்தமாகவோ, திருப்தியற்றோ, கவலையாகவோ உணர்ந்தால், நாம் ஆவியிலல்ல, மாறாக மாம்சத்தினால் ஜெபிக்கிறோம். பிரசங்கிக்கிறோம் என்பதற்கு இது நிரூபணமாக இருக்கிறது. அநேக நேரங்களில், நம் மனதினால் அல்லது மாம்சத்தினால் (ஏனென்றால், அது ஆவியிலில்லை) ஒரு புத்தகத்திலிருந்து ஒப்புவிப்பதைப்போல நாம் ஜெபிக்கிறோம். நாம் எவ்வளவு அதிகமாக ஜெபிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக எந்தவித நீர்ப்பாய்சுதலும் மகிழ்ச்சியும் இல்லாமல், வறட்சியையும் மன அழுத்தத்தையும் உணர்கிறோம். ஜெபித்தபிறகு, நாம் வெறுமையை மட்டும் உணர்கிறோம், நாம் திருப்திகரமாக உணர்வதில்லை. நம் தலையிலிருந்து வரும் இப்படிப்பட்ட ஜெபம், ஜீவ நிரப்பீட்டைப் பெறுவதற்கு நம் ஆவியை திறனற்றதாக்கு கிறது. இதற்கு மாறாக, அது மரணத்தின் உணர்வை மட்டுமே தொடுகிறது. நாம் ஜெபித்தது மிகவும் பொருத்தமானதாக இருந்திருந்தாலும்கூட, அது ஆவியில் இல்லை; ஆகையால் நாம் ஜீவன் மற்றும் சமாதானத்தின் நீர்ப்பாய்ச்சுதலையும் மகிழ்ச்சி யையும் தொடமுடியவில்லை. மாறாக மரணத்தின் வறட்சியையும் மனஅழுத்தத்தையும் மட்டுமே உணர்ந்தோம். அநேக நேரங்களில், நம் பிரசங்கித்தலும் இதைப்போலவே இருக்கிறது. நாம் ஆவிக் கேற்றபடி இல்லாமல் நம் தலையால் பிரசங்கிக்கும்போது, நம்முள் வெறுமையையும் வறட்சியையும் உணர்கிறோம் அல்லது மரணத்தை உணர்கிறோம்; நாம் திருப்தியை அல்லது நீர்ப்பாய்ச்சுதலை உணரவில்லை. மேலும் ஜீவனின் உணர்வும் நம்மிடமில்லை. நாம் ஆவியில் இருந்திருந்தால், ஆவியினால் பேசியிருந்தால், நாம் உள்ளே திருப்தியாகவும் இளைப்பாறுத லாகவும், அதாவது நாம் ஜீவனையும் சமாதானத்தையும் உணர்ந்திருப்போம். இவ்வாறு, இப்படிப்பட்ட ஓர் உணர்வினால், நாம் செய்வது மாம்சத்தில் இருக்கிறதா ஆவியில் இருக்கிறதா என்பதை நாம் அறிமுடியும். இப்படிப்பட்ட ஓர் உணர்வு, நாம் மாம்சத்தை அறியச் செய்கிறது, மேலும் மாம்சத்தை அறிவதால் ஆவியையும் அறியச்செய்கிறது.


மனஅழுத்தம், வெறுமை, அமைதியின்மை, சந்தோஷ மின்மை, ஆகிய உணர்வுகளை மரணம் நமக்கு ஏற்படுத்துவது மட்டுமல்ல, மாறாக நம்மை ஜீவனின் உணர்வையும் இழக்கச்செய்கிறது. இப்படிப்பட்ட மரணத்தின் உணர்வுகள் நமக்கு எச்சரிக்கைகளாக இருக்கின்றன, மாம்சத்திலிருந்து விடுதலையாகவும், ஆவியில் வாழவும் நம்மைத் தூண்டுகின்றன. இப்படிப்பட்ட மரணத்தின் உணர்வை நாம் கொண்டிருந்து, மாம்சத்தின் ஜீவனால் தொடர்ந்து செயல்பட்டு நடந்தால், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மரணம் நம் ஆவியை உள்ளே உணர்விழக்கச்செய்து, மரத்துப்போகச் செய்கிறது. நம் ஆவி உள்ளே மரத்தும் உணர்வற்றும் இருந்தால், இதற்குக் காரணம் மரணத்தினால் நம் ஆவி சேதப்படும் அளவிற்கு ஒரு நீண்ட காலம் நாம் மாம்சத்தில் வாழ்ந்திருக்கிறோம் என்பதேயாகும். இவ்வாறு நாம் நம் ஆவியை எவ்வாறு கையாளுகிறோம் என்றும், நம் ஆவியில் வாழ்கிறோமா இல்லையா என்றும், நாம் அறியவும் முடியும், அறியவும் வேண்டும். VII. ஆவியின் உணர்வினால் ஆவியை


அறிதல் நாம் பேசியிருக்கிற இந்த உணர்வுகள் எல்லாம் நம்முள் இருக்கும் ஜீவனின் ஆவி நமக்குத் தருகிற உணர்வுகளாகும்; ஆகையால் அவைகளை ஆவியின் உணர்வுகள் என்று நாம் கூறலாம். நாம் நேரடியாக ஆவியை அறிந்து கொள்ள விரும்பினால் அது சற்று கடினமாகும், ஆனால் அதோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது ஆவியின் இப்படிப்பட்ட உணர்வு களால் நாம் ஆவியை அறிவது எளிதானதாகும். ஆவி உண்மையில் எது என்பதை நேரடியாகப் புரிந்துகொள்வது முற்றிலும் நம்மால் முடியாது. ஆனால் ஆவியின் உணர்வி னால் இதை அறிந்துகொள்வது நமக்குக் கடினமானதல்ல. நாம் ஆவியின் உணர்வை நெருக்கமாகப் பின்தொடர்ந்து நடக்கவும் வாழவும் செய்தால் அப்போது நாம் ஆவியைப் பின்தொடர்கிறோம். மேலும் ஆவிக்கு கவனம்செலுத்து கிறோம். நாம் ஜீவ ஆவியின் விதியின் இயல்பான தன்மையைப் பின்தொடர்ந்து, ஜீவன் மற்றும் சமாதானத்தின் உணர்வுக்கு அக்கறை செலுத்தி, மரணத்தின் உணர்வு நமக்குத் தரும் எச்சரிக்கைக்கு செவிகொடுத்து, இந்த உணர்வுகளின்படி வாழ்ந்தால் அப்போது நாம் ஆவியில் வாழ்கிறோம். இந்த உணர்வுகள் ஆவியிலிருந்து வருகின்றன; ஆகையால் அவைகள் ஆவியைத் தொட்டு அதனால் நாம் ஆவியை அறியச்செய்கின்றன.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.