நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்



நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் ஏசா 9:6,7

ஏசா 9:6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மே-ருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

ஏசா 9:7. தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

""நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்'' என்று ஏசாயா தீர்க்கதரிசனமாக அறிவிக்கிறார். இந்த சம்பவம் எங்கு நடைபெறும் என்றோ, யார் மத்தியில் இது நடைபெறும் என்றோ ஏசாயா இங்கு தெளிவுபடுத்தவில்லை. இந்த அடையாளத்தை கர்த்தர் தாமே நமக்குக் கொடுப்பார் என்று ஏசாயா ஏற்கெனவே முன்னறிவித்திருக்கிறார் (ஏசா 7:14). இப்போது அந்த அடையாளத்தின் விவரத்தை ஏசாயா இங்கு சொல்லுகிறார். இது தீர்க்கதரிசன வாக்கியம். இந்த சம்பவம் ஏற்கெனவே நடைபெற்று விட்டதுபோல ஏசாயா சொல்லுகிறார். ""நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்'' என்று இறந்தகால வினைவடிவத்தில் ஏசாயா இந்த வாக்கியத்தை அமைத்திருக்கிறார்.

இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் மனுஷனாக அவதரிப்பதற்கு முன்பாகவே, தேவனுடைய சபைக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் உண்டாயிருக்கிறது. கிறிஸ்துவானவர் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர். அவரே இந்த பூமியில் மனுஷனாக அவதரித்த பாலகன். இயேசுகிறிஸ்து உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாகயிருக்கிறார் (வெளி 13:8). பழைய ஏற்பாட்டுக்காலத்தில் கர்த்தர் தம்முடைய இஸ்ரவேல் ஜனத்திற்கு ஏராளமான நன்மைகளை செய்திருக்கிறார். அவர்களுக்கு பலத்த கிரியைகளை நடப்பித்துக் கொடுத்திருக்கிறார்.

இவையெல்லாமே நித்திய வார்த்தையின் மூலமாய் நடைபெற்றது. கிறிஸ்துவானவரே வார்த்தையாகவும், தேவனுக்கும் மனுஷருக்கும் நடுவே மத்தியஸ்தராகவும் இருக்கிறார். தேவனாகிய கர்த்தர் அநேக அற்புதங்களைச் செய்தார். அவையெல்லாவற்றையும் தமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே செய்தார்.

யூதேயா தேசத்திற்கும், விசேஷமாக தாவீதின் வம்சத்தாருக்கும் சரித்திரத்தில் அநேக பேரழிவுகள் உண்டாயிற்று. தேசம் முழுவதுமாக அழிந்துபோகக்கூடிய சூழ்நிலைகள் உண்டாயிற்று. ஆனபோதிலும், கர்த்தர் தாவீதின் வம்சத்தாரோடு உடன்படிக்கை செய்து, அவர்களை இதுவரையிலும் பாதுகாத்து வந்திருக்கிறார். தாவீதின் வம்சத்தார் தீங்குகளுக்கும், அழிவுகளுக்கும், நாசங்களுக்கும், மோசங்களுக்கும் விலக்கிப் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்.

கல்தேயருடைய பாஷையில், வேதபண்டிதர்கள், இந்த வசனத்தை வியாக்கியானம் பண்ணும்போது, ""கிறிஸ்துவானவர் நித்தியமானவர்'' என்று சொல்லுகிறார்கள். அவருடைய ஆளுகை நித்திய காலமாயிருக்கும்.

குமாரனாகிய இயேசுகிறிஸ்து தாழ்மையில் தம்மை வெளிப்படுத்தினார். அவர் சர்வவல்லமையுள்ள தேவன். அதே வேளையில் அவர் இந்த உலகத்தில் ஒரு குமாரனாக அவதரித்தார். தேவனாகிய இயேசுகிறிஸ்து தம்மை முற்றிலுமாய் வெறுமையாக்கி, தாழ்த்தி, மனுஷரூபமெடுத்திருக்கிறார். நம்மை உயர்த்தவேண்டும் என்பதற்காக அவர் தாழ்மையைத் தெரிந்துகொண்டார். நம்மை நிரப்பவேண்டும் என்பதற்காக அவர் தம்மை வெறுமையாக்கினார்.

கிறிஸ்துவானவர் நம் மத்தியிலே பிறந்திருக்கிறார். வார்த்தையானவர் மாம்சமாகி, நம் மத்தியிலே வாசம்பண்ணுகிறார். கர்த்தத்துவம் அவருடைய தோளின் மேலிருக்கும். கனமும் மகிமையும், அதிகாரமும் வல்லமையும் அவருக்குக் கொடுக்கப்படும். அப்படிப்பட்ட சர்வவல்லமையுள்ளவர், நம்முடைய சிநேகிதராயிருக்கிறார். இது நமக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய சிலாக்கியம்.

அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா என்று சொல்லப்படும். அவருடைய நாமம் வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு என்றும் சொல்லப்படும். கர்த்தருடைய பிள்ளைகள், இயேசுகிறிஸ்துவின் இந்த நாமங்களை அங்கீகரித்து அவரை ஆராதனை செய்வார்கள். அவர் தேவனாகவும் மனுஷனாகவும் இருக்கிறார். அவர் அதிசயமானவர். அவர் ஆலோசனைக்கர்த்தா. நித்திய காலமாக தேவனுடைய ஆலோசனைகளின் மத்தியில் அவர் கூடவே இருந்தவர். அவருக்கு தேவனுடைய சிந்தையும், ஆலோசனையும் நன்றாய்த் தெரியும். ஆலோசனைக்கர்த்தராகிய தேவன், தம்முடைய பிள்ளைகளாகிய நமக்கு, தெய்வீக ஆலோசனைகளைச் சொல்லுகிறார்.

அவர் பிதாவின் ஞானமாகயிருக்கிறார். அவரே சர்வஞானமுள்ளவர். அவரிடத்தில் ஞானமும் இருக்கிறது. வல்லமையும் இருக்கிறது. அவரே மனுக்குலத்தை முற்றும் முடிய இரட்சிக்க வல்லவர். அவர் நம் எல்லோருக்கும் நித்திய பிதா. நித்திய காலமாய் அவரே நம்முடைய பிதாவாயிருக்கிறவர். கிறிஸ்துவானவர் பிதாவோடு ஒன்றாயிருக்கிறார். பிதாவும், குமாரனாகிய கிறிஸ்துவும் தேவனாகவே இருக்கிறார்கள். கிறிஸ்து நித்திய காலமாய் தேவனாகயிருக்கிறார்.

கிறிஸ்துவானவரே நித்திய ஜீவனுக்கு ஆதாரமாயிருக்கிறவர். அவரே மனுக்குலத்திற்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தாராளமாய்க் கொடுக்கிறவர். அதனால் அவருடைய பெயர் சமாதான பிரபு என்னப்படும். இயேசுகிறிஸ்து தாவீதின் சிங்காசனத்தையும் அவருடைய ராஜ்யத்தையும் திடப்படுத்துவார். கிறிஸ்துவானவரே கர்த்தாதி கர்த்தாவாகவும், ராஜாதி ராஜாவாகவும் இருக்கிறார். ராஜா தம்முடைய ஜனங்களை பாதுகாக்கிறார். தம்முடைய ஜனங்களுக்குக் கட்டளை கொடுக்கிறார். தம்முடைய ஜனங்கள் மத்தியிலும், தேசத்திலும் சமாதானத்தை உண்டுபண்ணுகிறார். கிறிஸ்துவே நம்முடைய சமாதானம். அவருடைய சிங்காசனம் எல்லா சிங்காசனங்களுக்கும் மேலாயிருக்கிறது.

கர்த்தத்துவம் அவருடைய தோளின் மேலிருக்கிறது. கர்த்தத்துவம் கிறிஸ்துவின் தோளின்மீது மாத்திரம் இருக்கிறதேயல்லாமல், வேறு யார்மீதும் இல்லை. கிறிஸ்துவுக்கு ராஜா என்னும் முத்திரை கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் பெயரளவுக்கு ராஜாவாகயிருக்கிறவரல்ல. ராஜ்யபாரமும் அவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. தாவீதினுடைய வீட்டின் திறவுகோல் அவர் தோளின் மேல் வைக்கப்பட்டிருக்கிறது. அவர் ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு திறப்பார். ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவர் பூட்டுவார் (ஏசா 22:22). ராஜ்யத்தின் பாரத்தையும் அவர் சுமப்பார்.

கிறிஸ்துவின் ராஜ்யத்தைக்குறித்த மகிமையான காரியங்களை ஏசாயா தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார். கிறிஸ்துவின் ராஜ்யம் விருத்தியடையும். அது வளர்ந்து பெருகும். அவருடைய சிங்காசனம் திடப்படும். அது நிலைப்படுத்தப்படும். அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்திற்கும், அதின் சமாதானத்திற்கும் முடிவு இருக்காது. கிறிஸ்துவின் ராஜ்யம் பலுகிப்பெருகும். இந்தப் பிரபஞ்சத்தில் கிறிஸ்துவின் ராஜ்யம் மேலும் மேலும் பிரகாசமாயிருக்கும்.

ƒகிறிஸ்துவின் ராஜ்யம் சமாதானம் நிரம்பிய ராஜ்யம். கிறிஸ்துவே சமாதான பிரபுவாகயிருக்கிறார். அவருடைய ராஜ்யத்தில், கிறிஸ்துவின் சுபாவமாகிய சமாதானம் நிரம்பியிருக்கும். அவர் தம்முடைய ஜனங்களை அன்பினால் ஆளுகை செய்வார். அவருடைய ராஜ்யத்தில், தேவசமாதானத்திற்கு முடிவு இருக்காது. கிறிஸ்துவானவர் தம்முடைய ராஜ்யத்தை என்றென்றைக்கும் நியாயத்தினாலும், நீதியினாலும் நிலைப்படுத்துவார். அவருடைய ராஜ்யத்தில் ஞானமும், புத்தியும், நீதியும் நியாயமும் நிரம்பியிருக்கும்.

கிறிஸ்துவின் ராஜ்யத்தில் அவரே கட்டளையிடுவார். அவரே வழக்குகளை விசாரிப்பார். அவரே நியாயத்தையும் நீதியையும் நிலைப்படுத்துவார். கிறிஸ்துவின் ராஜ்யம் பாதியில் அழிந்துபோவதில்லை. அது நித்தியகாலமாய் நிலைத்திருக்கிற ராஜ்யம். அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்திற்கும், அதின் சமாதானத்திற்கும் முடிவு இருக்காது.

தேவனாகிய கர்த்தரே, கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிற, இந்த தீர்க்கதரிசன வாக்கியங்களை, நிறைவேற்றுவார். சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும் என்று ஏசாயா சொல்லுகிறார். சேனைகளின் கர்த்தர் சர்வவல்லமையுள்ளவர். அவர் செய்ய நினைக்கிற காரியம் ஒருபோதும் தடைபடாது. அவரால் எல்லாம் கூடும். அவரால் எல்லாம் ஆகும். அவர் சொல்ல நடக்கும். சேனைகளின் கர்த்தருடைய கரங்களில் சர்வவல்லமையிருக்கிறது. சர்வசிருஷ்டிகளும் அவருடைய ஆளுகைக்குக் கீழ்ப்படிந்திருக்கிறது. அப்படிப்பட்ட சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிற இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் செய்யும்.

இஸ்ரவேல் தேசம் ஆவிக்குரிய இருளில் இருந்த போது ஏசாயா தீர்க்கதரிசி இந்தத் தரிசனத்தைக் காண்கிறார். (ஏசா 8:21-9:5) மனாசேயும், எப்பிராயீமும் ஒருவரையொருவர் பட்சிக்கிறார்கள். (ஏசா 9:19) சகோதரர் ஒருவரையொருவர் தப்பவிடாமல் அழிக்கிறார்கள். இவர்கள் இருவருமே யூதாவின்மீது யுத்தம் பண்ணுவார்கள். இந்த நிகழ்ச்சி எப்பிராயீமின் ராஜாவாகிய பெக்காவின் காலத்தில் நிறைவேறிற்று. இவன் ஆகாசைத் தோற்கடித்து 1,20,000 யூதா கோத்திரத்தாரை ஒரே நாளில் கொன்று 2இலட்சம் யூதா தேசத்தாரைச் சிறைப்பிடித்துச் சென்றான். (2நாளா 28:6-15).



ஏசாயாவில் ""பாலகன்'' என்னும் வார்த்தையின் பயன்பாடு

1. வாலிபனும், முதிர்வயது உள்ளவனும் (ஏசா 3:5)

2. ஏசாயாவின் முதலாவது குமாரன் (ஏசா 7:3,16)

3. ஏசாயாவின் இரண்டாவது குமாரன் (ஏசா 8:1-4)

4. பாலகனாகிய மேசியா (ஏசா 9:6-7)

5. எண்ணி எழுதும் சிறுபிள்ளை (ஏசா 10:19)

6. ஆயிரம் வருஷ அரசாட்சியில் சிறுபையன் (ஏசா 11:6)

7. ஆயிரம் வருஷ அரசாட்சியில் பால்குடிக்கும் குழந்தை (ஏசா 11:8)

8. ஆயிரம் வருஷ அரசாட்சியில் பால்மறந்த பிள்ளை (ஏசா 11:8)

9. ஆயிரம் வருஷ அரசாட்சியில் நூறுவயது சென்ற மரிக்கிற வாலிபன் (ஏசா 65:20)

10. கர்ப்ப வேதனை வரும்முன் பிறந்த ஆண்பிள்ளை (ஏசா 66:7)

கர்த்தர் ஒரு குமாரத்தியைக் கொடுக்காமல் ஒரு குமாரனைக் கொடுத்திருக்கிறார். மனுஷனுக்கு ஆளுகை செய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜாதியை மீட்பதற்கு ஒரு மனுஷன் தேவைப்படுகிறான். மீட்பில் மனுஷனும், ஸ்திரீயும் பங்குவகிக்கிறார்கள். மீட்பர் ஸ்திரீயின் வித்தாகப் பிறந்திருக்கிறார். தேவனுடைய தீர்க்கதரிசனத்தின் பிரகாரமாகவும், தேவனுடைய நியதியின் பிரகாரமாகவும் ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி மேசியாவைப் பெறுகிறாள். (ஏசா 9:6; ஏசா 7:14; ஆதி 3:15; கலா 4:4).

""கொடுக்கப்பட்டார்'' என்னும் தீர்க்கதரிசனம் கூறப்படும்போது மேசியா எப்பொழுது கொடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்படவில்லை. ஏசாயா முன்னறிவித்த தீர்க்கதரிசனங்கள் ஒவ்வொன்றாக அதனதன் காலங்களில் நிறைவேறிற்று. ஆளுகை செய்வது, நியாயத்தீர்ப்பு செய்வது ஆகியவை மேசியாவின் பொறுப்புக்களாகும்.



மேசியாவின் நாமங்கள்

1. அதிசயமானவர்.

2. ஆலோசனைக்கர்த்தா.

3. வல்லமையுள்ள தேவன்

4. நித்திய பிதா (எபி 1:2)

5. சமாதானப்பிரபு (ஏசா 9:6; ஏசா 2:2-4).

நித்தியமான காரியங்கள்

1. தேவகுமாரன் (ஏசா 9:6)

2. அவருடைய கர்த்தத்துவம் (ஏசா 9:7)

3. கர்த்தத்துவத்தினால் உண்டாகும் சமாதானம்

4. தாவீதின் சிங்காசனம் (ஏசா 9:7; 2சாமு 7; சங் 89:4; லூக்கா 1:32-33)

5. தாவீதின் ராஜ்யம் (ஏசா 9:7; 2சாமு 7; லூக்கா 1:32-33; வெளி 11:15)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.