வாலிபனே…...
பிர 11:9. வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.
பிர 11:10. நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.
எல்லாம் மாயை என்பதுதான் சாலொமோனின் உபதேசம். ஆகையினால்தான் நாம் இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனை வருஷம் ஜீவித்தாலும், நம்முடைய இருளின் நாட்களாகிய மரணத்தையும் நினைக்கவேண்டும் என்று சாலொமோன் சொல்லுகிறார். எல்லாம் மாயை என்று சொன்னவர், இப்போது, ""வாலிபனே, உன் இளமையிலே சந்தோஷப்படு'' என்று சொல்லுகிறார். இந்த வாக்கியம் அவருடைய உபதேசத்திற்கு முரண்பட்டதுபோலத் தோன்றுகிறது.
வாலிபனுடைய இளமையைப்பற்றிச் சொல்லிவிட்டு, ""உன் வாலிபநாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்'' என்றும், ""உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட'' என்றும் சொல்லுகிறார். எல்லாம் மாயை என்று சொன்னவர், இப்போது எல்லாவற்றையும் அனுபவி என்று சொல்லுகிறார். சாலொமோனுடைய வாக்கியம் வெளிப்பார்வைக்கு முரண்பட்டிருப்பதுபோல தோன்றினாலும், அவருடைய உபதேசத்தில் மாற்றம் எதுவுமில்லை. வாழ்க்கையை சந்தோஷமாய் அனுபவி என்று சொன்னவர், உடனே, ""ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டு வந்து நிறுத்துவார் என்று அறி'' என்றும் சொல்லுகிறார்.
நமக்கு எச்சரிப்பின் வார்த்தையையும், புத்திமதியையும் கொடுக்கிறார். வாலிப வயதிலுள்ளவர்கள் தங்கள் சரீரத்தின் நன்மையை மாத்திரம் பார்க்கக்கூடாது. அவர்களுடைய ஆத்துமாவையும் நோக்கிப் பார்க்கவேண்டும். வாலிபரின் மனதிலே பெருமையிருக்கக்கூடாது. மாம்சத்தின் இச்சைகளை நிறைவேற்றவேண்டும் என்று ஆசைப்படக்கூடாது. எளிதில் கோபப்படக்கூடாது. ""நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு'' என்று சாலொமோன் வாலிபரை எச்சரிக்கிறார்.
சஞ்சலம் மனதில் உண்டாகும். நம்முடைய மனது தெளிவாகயில்லையென்றால் அது சஞ்சலத்தோடிருக்கும். வாலிபர்கள் பொறுமையில்லாமலிருப்பார்கள். அவர்களால் தங்களுடைய உணர்ச்சிகளை அடக்கி ஆளுகை செய்ய முடியாது. வாலிபருக்கும் மனத்தாழ்மைக்கும் இடைவெளி வெகுதூரமாயிருக்கும். அவர்களின் இருதயம் பெருமையோடிருக்கும். எல்லாவற்றிற்கும் எதிர்த்து நிற்பார்கள். விவாதம்பண்ணுவார்கள். முடிவில் வேதனைப்படுவார்கள். சாலொமோன் வாலிபருக்கு ஆலோசனை சொல்லும்போது, அவர்கள் தங்கள் இருதயத்திலிருந்து சஞ்சலத்தை நீக்கிப்போடவேண்டுமென்று சொல்லுகிறார். சஞ்சலமில்லாத இருதயமே ஆரோக்கியமான இருதயம்.
வாலிபர்கள் தங்கள் சரீரத்தையும் சுத்தமாய்க் காத்துக்கொள்ளவேண்டும். வாலிபர்கள் மாம்சத்தின் இச்சைகளுக்குக் கீழ்ப்படிந்து தங்கள் சரீரத்தை கெடுத்துப்போடக்கூடாது. நம்முடைய சரீரத்தின் அவயவங்கள் அநீதியின் ஆயுதங்களாகயிருக்கக்கூடாது. நம்முடைய மாம்சத்திலிருந்து தீங்கை நீக்கிப்போடவேண்டும்.
சாலொமோன் தன்னுடைய பிரசங்கத்தின் முடிவில் ""இளவயதும் வாலிபமும் மாயையே'' என்று சொல்லி முடிக்கிறார். சாலொமோனுடைய பார்வையில் எல்லாம் மாயையாயிருக்கிறது. உலகப்பிரகாரமான காரியங்கள் நமக்கு மெய்யான சந்தோஷத்தையோ, சமாதானத்தையோ தராது. இப்பிரபஞ்சத்தின் காரியங்கள் எதுவுமே நித்தியமானதல்ல. எல்லாம் அநித்தியம். எல்லாம் குறைவுள்ளது. ஒரு மனுஷன் அநேக வருஷம் ஜீவித்து, அவைகளில் எல்லாம் மகிழ்ச்சியாயிருந்தாலும், அவனுடைய ஆயுசுகாலம் மாயையாகவே இருக்கிறது. வாலிபர்கள் தங்கள் இளமையிலே சந்தோஷப்பட்டு, தங்கள் நெஞ்சின் வழிகளிலும், தங்கள் கண்களின் காட்சிகளிலும் நடந்தாலும், அவர்களுடைய இளவயதும் வாலிபமும் மாயையாகவே இருக்கிறது.
இளவயதின் சந்தோஷங்களும், வாலிபவயதின் வேகமும் சீக்கிரத்தில் கடந்துபோகும். புல் உலருவதுபோலவும், பூ உதிர்வது போலவும் வாலிபம் உதிர்ந்து போகும். பூ பார்ப்பதற்கு அழகாகயிருக்கும். விருட்சத்தில் எவ்வளவுதான் பூ இருந்தாலும், அதன் கனிதான் நமக்கு பிரயோஜனமாயிருக்கும். அதுவும் நற்கனியாயிருக்கவேண்டும். கனிகொடுக்கிற மரமே நல்ல மரம். அதிகமாக, பூக்கிற மரம் அழகான மரமாகயிருக்கலாம். ஆனால் அது ஒரு மாயையான மரம். அழகு மாயை. கனி கொடுத்தால்தான் அது பிரயோஜனமுள்ள மரம். நம்முடைய ஜீவியம் அழகான ஜீவியமாகயிருந்தால் மாத்திரம் போதாது. அது பிரயோஜனமுள்ள ஜீவியமாகவும் இருக்கவேண்டும். நாம் கர்த்தருக்குப் பிரியமானவர்களாகவும் இருக்கவேண்டும். பிரயோஜனமானவர்களாகவும் இருக்கவேண்டும்.
வாலிபன் தன்னுடைய இருதயத்தின் ஆசைகளின்படியும், கண்களின் இச்சைகளின்படியும் ஜீவிக்கக்கூடாது. தன்னுடைய எல்லாச் செயல்களுக்கும் அவன் கணக்கொப்புவிக்க வேண்டும். ஆகையினால் அவன் தன் இருதயத்தி-ருந்து சஞ்சலத்தையும், தன் மாம்சத்தி-ருந்து தீங்கையும் நீக்கிப்போட வேண்டும். (பிர 11:9-10). வாலிபப் பிராயத்தில் சிருஷ்டிகரை நினைக்க வேண்டும். (பிர 12:1).