பெத்லகேமே மீகா 5:1-6



பெத்லகேமே மீகா 5:1-6

யூதாதேசத்திற்கு துன்பமும் வேதனையும் வரும் என்று மீகா முன்னறிவிக்கிறார் (மீகா 5:1).

மேசியாவைப்பற்றியும், அவருடைய ராஜ்யத்தைப்பற்றியும் வாக்குத்தத்தம். மேசியாவின் பிறப்பு (மீகா 5:2,3).

மேசியாவின் வளர்ச்சி (மீகா 5:4). மேசியா சத்துருவை அழித்து, தம்முடைய ஜனத்தைப் பாதுகாக்கிறார் (மீகா 5:5,6).

மீகா 5:1-6

மீகா 5:1. சேனைகளையுடைய நகரமே, இப்போது தண்டுதண்டாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றிக்கை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோ-னால் கன்னத்திலேஅடிப்பார்கள்.

மீகா 5:2. எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்தி-ருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.

மீகா 5:3. ஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கிறமட்டும் அவர்களை ஒப்புக்கொடுப்பார்; அப்பொழுது அவருடைய சகோதரரில் மீதியானவர்கள் இஸ்ரவேல் புத்திரரோடுங்கூடத் திரும்புவார்கள்.

மீகா 5:4. அவர் நின்றுகொண்டு, கர்த்தருடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால் அவர்கள் நிலைத்திருப்பார்கள்; அவர் இனி பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார்.

மீகா 5:5. இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்.

மீகா 5:6. இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார்.

சீயோனுக்கு துன்பமும் வேதனையும் வரும். சீயோன் தாழ்ந்திருக்கும். யூதாதேசம் பல வருஷங்களுக்கு அந்நிய தேசத்து சிறையிருப்பிலிருக்கும். அவர்கள் சிறையிருப்புக்குப்போவதற்கு முன்பாகவே, அவர்களுக்கு வேதனைகள் வரும்.

"" சேனைகளையுடைய நகரமே, இப்போது தண்டுதண்டாகக் கூடிக்கொள்'' (மீகா 5:1) என்று மீகா சொல்லுகிறார். இது சீயோனின் சத்துருக்களுக்கு சொல்லப்படும் வாக்கியம். சத்துருக்கள் தங்களுடைய சேனைகளை தண்டு தண்டாக கூட்டிக்கொண்டு, எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ண வரவேண்டும். அவர்கள் எருசலேமை முற்றிக்கைப்போடவேண்டும்.

சத்துருக்கள் எருசலேமை முற்றிக்கை போடுவார்கள் என்று மீகா கர்த்தருடைய ஜனத்திற்கு எச்சரிப்பாகச் சொல்லுகிறார். ""நமக்கு விரோதமாக முற்றிக்கை போடப்படும்'' (மீகா 5:1) என்று மீகா சொல்லுகிறார். அசீரியாவின் ராஜாவும், பாபிலோன் ராஜாவும் எருசலேமுக்கு விரோதமாக முற்றிக்கை போட்டார்கள்.

""இஸ்ரவேலுடைய நியாயாதிபதியை கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள்'' (மீகா 5:1) என்று மீகா சொல்லுகிறார். அசீரியரும், பாபிலோனியரும் எருசலேமை ஜெயிப்பார்கள். இஸ்ரவேலின் ராஜாவே அவர்களுக்கு நியாயாதிபதியாயிருக்கிறார். ராஜாவுக்கு கீழே ஏராளமான பிரபுக்கள் இருக்கிறார்கள்.

""பாபிலோன் ராஜா, இஸ்ரவேலுடைய நியாயாதிபதியை கோலினால் கன்னத்தில் அடிப்பான்'' (மீகா 5:1). இந்த வாக்கியத்திற்கு, பாபிலோன் ராஜா, இஸ்ரவேலின் ராஜாவை சிறைப்பிடிப்பான் என்று பொருள்.

இஸ்ரவேல் தேசத்திலுள்ள நியாயாதிபதிகளின் பாவங்களை மீகா விரிவாக எடுத்துச் சொன்னார். அவர்களுக்கு விரோதமாக வரப்போகும் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்களை அவர்களுக்கு எச்சரிப்பாகச் சொன்னார்.

""அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூ-க்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரை சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்'' (மீகா 3:11).

இஸ்ரவேலின் நியாயாதிபதிகள் பரிதானம் வாங்குகிறார்கள். அவர்கள் நீதியைப் புரட்டுகிறார்கள். தங்களுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம்பண்ணுகிறார்கள். கர்த்தர் அவர்கள்மீது கோபங்கொண்டு, தம்முடைய நீதியினால் அவர்களை நியாயந்தீர்க்கிறார்.

மீகா சீயோனின் ராஜாவைப்பற்றி இங்கு சொல்லுகிறார். தாவீதின் வீட்டார் இப்போது மிகவும் தாழ்ந்த நிலமையிலிருக்கிறார்கள். அவர்கள் கர்த்தர்மீது நம்பிக்கையாயிருக்கவேண்டும். தங்களுடைய காலங்களை கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுக்கவேண்டும். தாவீதின் சந்ததியில் மேசியா வருவார். மேசியா தம்முடைய ஜனத்தோடு உடன்படிக்கை பண்ணுவார். இந்தப் பூமியில் மேசியாவின் ராஜ்யம் ஸ்தாபிக்கப்படும். அக்காலத்தில், தாவீதின் குடும்பத்தார், தாங்கள் இழந்துபோன மேன்மையை, மறுபடியும் பெற்றுக்கொள்வார்கள்.

மீகா மேசியாவைப்பற்றி விரிவாகச் சொல்லுகிறார். அவர் இஸ்ரவேலை ஆளப்போகிறவர். அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. மீகா மேசியாவைப்பற்றிச் சொல்லுவது, இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய சந்ததியை விவரிக்கிறது.

நம்முடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தையை விவரிப்பதற்கு, ""புறப்படுதல்'' என்னும் வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

""அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயி-ருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போதித்தார்'' (உபா 8:3).

கிறிஸ்துவானவர் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு வருகிறார். அவர் தேவனுடைய வார்த்தையாகயிருக்கிறார். அவர் ஆதியிலே தேவனோடு கூடயிருந்தார்.

""ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தி-ருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்'' (யோவா 1:1,2).

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, தேவனுக்கும், மனுஷருக்கும் நடுவே மத்தியஸ்தராக ஊழியம் செய்கிறார். கிறிஸ்துவானவரே இஸ்ரவேலை ஆளப்போகிறவர். அவரே தம்முடைய சபைக்கு தலையாகயிருக்கிறார். அவர் ராஜாதி ராஜாவாயிருக்கிறார். கிறிஸ்துவானவரே அவருடைய சபைக்கு ராஜா. அவர் யாக்கோபின் வீட்டாரை நித்திய காலமாய் ஆளுகை செய்வார்.

""அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்'' (லூக் 1:32,33).

""இஸ்ரவேலை ஆளப்போகிறவர்'' என்னும் வாக்கியத்திற்கு, ""ஆவிக்குரிய இஸ்ரவேலை ஆளப்போகிறவர்'' என்று பொருள். புதிய ஏற்பாட்டுக்காலத்திலுள்ள விசுவாசிகளெல்லோருமே ஆவிக்குரிய இஸ்ரவேலராயிருக்கிறார்கள். கர்த்தர் தம்முடைய ஜனத்தின் இருதயங்களில் வாசம்பண்ணுகிறார். தம்முடைய ஆவியினாலும் கிருபையினாலும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை ஆளுகை செய்கிறார். தம்முடைய வார்த்தையினாலும், பிரமாணங்களினாலும் கர்த்தர் தமக்கென்று ஒரு கூட்டம் ஜனத்தைக் கூட்டிச்சேர்த்து, அவர்களை ஆளுகை செய்கிறார்.

மீகா மேசியாவைப்பற்றி தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார். அவர் பெத்லகேமிலே பிறப்பார். ""பெத்லகேம்'' என்னும் பெயருக்கு ""அப்பத்தின் வீடு'' என்று பொருள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, ஜீவஅப்பமாகயிருக்கிறார். ஜீவஅப்பமானவர், அப்பத்தின் வீட்டிலே பிறப்பது, மிகவும் பொருத்தமாயிருக்கிறது.

பெத்லகேம் தாவீதின் நகரம். தேவனுடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரமாக, இயேசுகிறிஸ்து, பெத்லகேமிலே பிறக்கிறார். மீகா பெத்லகேமைப்பற்றிச் சொல்லும்போது, ""எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே'' என்று சொல்லுகிறார். இவ்விரண்டு பெயர்களும் ஒரே நகரத்தையே குறிக்கிறது.

""ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கப்பண்ணப்பட்டாள்'' (ஆதி 35:19).

யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே பெத்லகேம் சிறியதாயிருக்கிறது. அக்காலத்தில் அது பிரசித்திப் பெற்ற நகரமல்ல. பெத்லகேமிலே சொற்ப எண்ணிக்கையில் ஜனங்கள் இருக்கிறார்கள். கிறிஸ்துவானவர் பெத்லகேமிலே பிறந்ததினால், அந்த ஊருக்கு மேன்மையும் மகிமையும் உண்டாயிற்று. பெத்லகேம் ஊரால் இயேசுகிறிஸ்துவுக்கு மேன்மையோ, மகிமையோ உண்டாகவில்லை.

காலம் நிறைவேறும்போது கிறிஸ்துவானவர் ஸ்திரீயினிடத்தில் பிறப்பார். இயேசுகிறிஸ்துவினுடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது (மீகா 5:2) என்று சொல்லப்பட்டாலும், இயேசுகிறிஸ்துவினுடைய பிறப்பைப்பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நித்தியமானவர். அவர் சதாகாலங்களுக்குமுரியவர். அவர் ஏற்கெனவே இருந்தவர். இப்போதும் இருக்கிறவர். இனிமேலும் இருக்கப்போகிறவர். ஆகையினால் ""அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது'' என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அநாதி நாட்களாகயிருக்கிறவர், காலம் நிறைவேறும்போது, இந்தப் பூமியிலே, ஸ்திரீயினிடத்தில் பிறக்கிறார். மேசியா நித்தியமானவராகயிருந்தாலும், ஜனங்கள் அவருடைய பிறப்புக்காக காத்திருக்கிறார்கள். எருசலேமின் இரட்சிப்புக்காகவும், இஸ்ரவேலின் ஆறுதலுக்காகவும் ஜனங்கள் ஆவலாய்க் காத்துக்கொண்டிருக்கிறார்கள் (லூக் 2:25-38).

""ஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கிற மட்டும், அவர்களை ஒப்புக்கொடுப்பார்'' (மீகா 5:3) என்று மீகா சொல்லுகிறார். ""பிரசவிக்கிறவள்'' என்னும் வார்த்தை கன்னிமரியாளைக் குறிக்கும். கிறிஸ்துவானவரும் தம்மை ""வரப்போகிறவர்'' என்று சொல்லுகிறார். கிறிஸ்துவானவர் நித்தியமானவராகயிருந்தாலும், காலம் நிறைவேறும்போது, அவர் ஸ்திரீயினிடத்தில் பிறக்கிறவராகவும் இருக்கிறார். கிறிஸ்துவானவர் பிறக்கும் வரையிலும், கர்த்தருடைய ஜனம், சத்துருக்களின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பார்கள்.

இஸ்ரவேல் வம்சத்தார் தங்களுடைய இரட்சிப்புக்காக காத்திருக்கவேண்டும். பிரசவிக்கிறவள் பிரசவிக்கிற மட்டும் அவர்கள் காத்திருக்கவேண்டும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, கன்னிகையினிடத்தில் பிறக்கும் காலம் வரையிலும், இஸ்ரவேல் வம்சத்தார், தம்முடைய ஆத்தும இரட்சிப்புக்காக காத்திருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவினுடைய பிறப்பின் காலம் ஏற்கெனவே தீர்மானம்பண்ணப்பட்டிருக்கிறது.

கிறிஸ்துவானவர் கன்னிகையினிடத்தில் பிறக்கும்போது அவருடைய சகோதரரில் மீதியானவர்கள் இஸ்ரவேல் புத்திரரோடுங்கூட திரும்புவார்கள் (மீகா 5:3). யூதருடைய தேசத்தில் கர்த்தருக்கென்று மீந்திருக்கிறவர்கள், ஆவிக்குரிய இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சேர்ந்துகொள்வார்கள். தேவனோடு உடன்படிக்கை செய்திருக்கிறவர்கள் எல்லோருமே ஆவிக்குரிய இஸ்ரவேலராயிருக்கிறார்கள். கர்த்தரை விசுவாசிக்கிறவர்கள் எல்லோரும், ஒரே ஜனமாகக் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள்.

இஸ்ரவேல் புத்திரரில் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களும், புறஜாதியாரில் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களும், ஒரே ஜனமாகக் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள். இவர்கள் எல்லோருமே இஸ்ரவேலின் காணியாட்சியிலே ஒன்றாய்க் கூட்டிச்சேர்க்கப்படுகிறார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் ஆவிக்குரிய சகோதரர்களாயிருக்கிறார்கள். கிறிஸ்துவானவரும் தம்மை விசுவாசிக்கிறவர்களை தம்மிடத்தில் சேர்த்துக்கொள்கிறார்.

""எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படவில்லை'' (எபி 2:11).

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சமாதான பிரபுவாகவும், மகிமையுள்ள பிரபுவாகவும் இருக்கிறார். அவருடைய ஆளுகையின்கீழ் ஜனங்கள் மிகுந்த சந்தோஷமாயிருப்பார்கள்.

அவர் நின்றுகொண்டு, கர்த்தருடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார். அவர் இதை செய்யும்போது, சாதாரண மனுஷர் செய்வதுபோல செய்யமாட்டார். அவர் கர்த்தருடைய பலத்தோடு தம்முடைய ஆடுகளை மேய்ப்பார். தேவனுடைய தெய்வீக வல்லமை கிறிஸ்துவானவரை சூழ்ந்திருக்கிறது. கிறிஸ்துவானவர் தாம் செய்கிற ஒவ்வொரு கிரியையையும் கர்த்தருடைய பலத்தினால் செய்கிறார்.

தீர்க்கதரிசிகள் கர்த்தர் தங்களுக்கு வெளிப்படுத்தின செய்திகளை தீர்க்கதரிசனமாய்ச் சொல்லும்போது, ""...... என்று கர்த்தர் சொல்லுகிறார்'' என்று சொல்லுகிறார்கள். கிறிஸ்துவானவர் தம்முடைய சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்போது, கர்த்தருடைய ஊழியக்காரராக தம்மை வெளிப்படுத்தாமல், தேவகுமாரனாக தம்மை வெளிப்படுத்துகிறார். ""மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்று இயேசுகிறிஸ்து தம்முடைய தெய்வீக அதிகாரத்தினால் பேசுகிறார்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய சுவிசேஷச் செய்தியை, தம்முடைய தெய்வீக அதிகாரத்தோடு அறிவிப்பதே, அவர் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் மகத்துவத்தோடு மேய்ப்பதாகும். கிறிஸ்துவினுடைய ஆளுகை அவருடைய ஜனங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தையும், பாதுகாப்பையும், ஆறுதலையும் கொடுக்கும். ஆகையினால் அவர்கள் நிலைத்திருப்பார்கள். கிறிஸ்துவானவர் பூமியின் எல்லைகள் பரியந்தம் மகிமைப்படுவார் (மீகா 5:4).

இப்போது நின்றுகொண்டு தம்முடைய ஆடுகளை மேய்க்கிறவர், இனிமேல் மகிமைப்படுவார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எங்கே போனாலும், அவர் நன்மை செய்கிறவராக சுற்றித்திரிகிறார். நன்மை செய்வதே கிறிஸ்துவின் மகிமை.

இயேசுகிறிஸ்துவின் சபைக்கும், அவருடைய ஜனங்களுக்கும் சமாதானமும், சவுக்கியமும் உண்டாயிருக்கும். அவர்கள் இயேசுகிறிஸ்துவின் ஆளுகையில் பாதுகாப்பாயிருப்பார்கள். கிறிஸ்துவின் சத்துருக்களும், விசுவாசிகளின் சத்துருக்களும் அவர்களுக்கு விரோதமாக எழும்பும்போது, கிறிஸ்துவானவர் தம்முடைய ஜனத்தைப் பாதுகாப்பார்.

""இவரே சமாதான காரணர்'' (மீகா 5:5) என்று மீகா சொல்லுகிறார். அசீரியர்கள் இஸ்ரவேல் தேசத்திற்கு விரோதமாக வரும்போது, தேசத்தில் சமாதானம் இருக்கும். சனகெரிப்பின் வல்லமையிலிருந்து, எசேக்கியா ராஜாவும், அவனுடைய ராஜ்யமும் தேவனுடைய வல்லமையினால் தப்புவிக்கப்படும். சனகெரிப் இஸ்ரவேல் தேசத்தின்மீது யுத்தம்பண்ண வந்தது, சாத்தான் கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கு விரோதமாக யுத்தம்பண்ண வருவதற்கு அடையாளமாயிருக்கிறது.

கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாரை சனகெரிப்பிடமிருந்து பாதுகாத்தார். புதிய ஏற்பாட்டுக்காலத்திலே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், பிசாசின் அந்தகார வல்லமைகளிலிருந்து, தம்முடைய சுவிசேஷ சபையைப் பாதுகாப்பார். சாத்தானும், அவனுடைய பிசாசுகளும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தீங்கு செய்ய முடியாது.

பிசாசானவன் யாரை விழுங்கலாமோ என்று கெர்ச்சிக்கிற சிங்கம்போல சுற்றி அலைகிறான். இயேசுகிறிஸ்துவின் சபையை அழித்துப்போட முயற்சிபண்ணுகிறான். கிறிஸ்துவுக்குரியவர்களை அவரிடத்திலிருந்து பறித்துக்கொள்வதற்கு யோசனைபண்ணுகிறான். சத்துருவின் யோசனைகள் சித்திக்காது. அவனுடைய பிரயாசங்கள் வாய்க்காதே போகும்.

அசீரியர்கள் மிகப்பெரிய சேனையோடு இஸ்ரவேல் தேசத்திற்கு விரோதமாக வந்தார்கள். கர்த்தர் இஸ்ரவேலைப் பாதுகாக்கவில்லையென்றால் அசீரியர்களால் இஸ்ரவேல் தேசத்தை எளிதாகப் பிடித்திருக்க முடியும். கர்த்தர் இஸ்ரவேலைப் பாதுகாப்பதினால், அசீரியரின் சேனையால் இஸ்ரவேலுக்கு விரோதமாக ஒன்றும் செய்ய முடியவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் அசீரியருக்கு கீழ்ப்படிவதற்கு பதிலாக, தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு கீழ்ப்படிகிறார்கள். கர்த்தருடைய பாதுகாப்பும், பராமரிப்பும், ஆதரவும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு கிடைக்கிறது.

கிறிஸ்துவானவரே சமாதான பிரபுவாகவும், நம்முடைய சமாதானமாகவும் இருக்கிறார். இவரே சமாதானக்காரணர். அவரே நம்முடைய பிரதான ஆசாரியர். நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்காக, நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து, தம்முடைய சொந்த இரத்தத்தையே மீட்பின் கிரயமாகச் செலுத்தினார். இயேசுகிறிஸ்துவின் மூலமாக நமக்கு பாவமன்னிப்பு உண்டாயிருக்கிறது. கிறிஸ்துவானவர் தேவனுக்கும் நமக்கும் நடுவே மத்தியஸ்தராய் ஊழியம் செய்கிறார். இயேசுகிறிஸ்துவின் மூலமாக, நாம் பிதாவாகிய தேவனோடு ஒப்புரவாயிருக்கிறோம்.

நம்முடைய ராஜாவாயிருக்கிற இயேசுகிறிஸ்து, நமக்கு சமாதான காரணராயும், சமாதானமாயும் இருக்கிறார். கிறிஸ்துவானவர் நம்முடைய சத்துருக்களோடு நமக்காக யுத்தம்பண்ணுகிறார். யுத்தத்திலே கர்த்தர் சத்துருவை ஜெயிக்கிறார். நம்மிடத்தில் காணப்படுகிற பயங்களையும், பாவமான சிந்தனைகளையும் நம்மைவிட்டு நீக்கிப்போடுகிறார்.

அசீரியர்கள் இஸ்ரவேல் தேசத்திலே வரும்போதும், அவர்களுடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும் கிறிஸ்துவானவர் ஏழு மேய்ப்பரையும், மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அசீரியனுக்கு விரோதமாக நிறுத்துவார். (மீகா 5:5). ஏழு, எட்டு ஆகிய எண்கள் ""எண்ணிக்கையிலடங்காத திரளான எண்ணிக்கைக்கு'' அடையாளம். கர்த்தரே நம்மைப் பாதுகாக்கிறவர். கர்த்தர் நம்மைப் பாதுகாப்பதற்காகவும், மீட்பதற்காகவும் மேய்ப்பர்களையும், அதிபதிகளையும் நம்முடைய சத்துருக்களுக்கு விரோதமாக நிறுத்துகிறார்.

அதிபதிகள் தைரியமும் அதிகாரமுமுள்ளவர்கள். மேய்ப்பர்கள் அன்பும் கரிசனையுமுள்ளவர்கள். கர்த்தருடைய ஊழியக்காரர்களும், நியாயாதிபதிகளும் நமக்கு மீட்பர்களைப்போல இருக்கிறார்கள். பாவத்தின் வல்லமையிலிருந்தும், சாத்தானுடைய அந்தகார கிரியைகளிலிருந்தும், நம்முடைய மேய்ப்பர்களும் அதிபதிகளும் நம்மைப் பாதுகாக்கிறார்கள்.

கர்த்தருடைய சபைக்கு விரோதமாக சத்துருக்கள் எழும்புகிறார்கள். கர்த்தர் சபையின் சத்துருக்களோடு யுத்தம்பண்ணுகிறார். சத்துருக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். நம்முடைய அதிபதிகளும், மேய்ப்பர்களும், அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள் (மீகா 5:6).

அசீரியர்களும் கல்தேயர்களும் இஸ்ரவேல் தேசத்திற்கு மிகப்பெரிய சத்துருக்களாயிருந்தார்கள். கர்த்தர் அவர்களை அழித்துப்போடுவார். அவர்கள் கிறிஸ்துவின் பாதபடியாக நியமிக்கப்படுவார்கள். அசீரியர்கள் இஸ்ரவேல் தேசத்தில் வரும்போதும், அவர்களுடைய எல்லைகளை மிதிக்கும்போதும், கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை சத்துருக்களின் கைகளுக்கு விலக்கி தப்புவிப்பார் (மீகா 5:6).

""சேனைகளையுடைய நகரம்'' என்று யூதா அழைக்கப்படுகிறது. ஏனெனில் யூதாவின் மனுஷர் பெரும்பாதைகளில் கொள்ளையிடுகிறவர்களாகவும், கொலை பண்ணுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். (மீகா 2:8; மீகா 3:2). இவர்கள் இனிமேல் பாலஸ்தீனத்திற்கு விரோதமாக எழும்ப வேண்டும். கி.பி. 70 ஆம் வருஷத்தில் ரோமப்பேரரசின் படைத்தளபதி எருசலேமை அழித்தான். (மீகா 5:1; லூக்கா 21:20-24) இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையின் போது ரோமப்பேரரசார் எருசலேமின்மீது முற்றிக்கை போட்டார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவைக் கன்னத்தில் அறைந்தார்கள். (மத் 27:30).

இயேசு கிறிஸ்து இஸ்ரவேலின் நியாயாதிபதியாகவும், எல்லா ஜனத்திற்கும் நியாயாதிபதியாகவும் இருக்கிறார். (மத் 25:31-46; அப் 17:31). அவரை அடித்து துன்புறுத்தினார்கள் (மத் 26:67; மத் 27:30).

நிறைவேறிய முன்னறிவிப்புகள்

1. சேனைகளையுடைய நகரமே, இப்போது தண்டுதண்டாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாகப் பாபிலோன் (மீகா 4:10) முற்றிக்கை போடும் (மீகா 5:1).

2. இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் (இயேசு கிறிஸ்து) கோ-னால் கன்னத்திலே அடிப்பார்கள் (இயேசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறைகிறவர்கள்).

3. எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்தி-ருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. (மீகா 5:2).

நிறைவேற வேண்டிய முன்னறிவிப்புகள்

1. பிரசவிக்கிறவள் (இஸ்ரவேலர்) பிரசவிக்கிற மட்டும் (இஸ்ரவேல் மனந்திருந்தி தேவனிடத்தில் திரும்புகிற மட்டும்) அவர்களை (இஸ்ரவேலர்) ஒப்புக் கொடுப்பார் (மீகா 5:3).

2. அப்பொழுது (இஸ்ரவேல் கர்த்தரிடத்தில் மனந்திருந்திய பின்பு) அவருடைய சகோதரரில் மீதியானவர்கள் இஸ்ரவேல் புத்திரரோடுங்கூடத் திரும்புவார்கள். (ஏசா 66:7-8; சக 12:10-13:1; ரோமர் 11:25-29)

3. அவர் (மேசியா தம்முடைய இரண்டாம் வருகையின்போது) நின்றுகொண்டு, கர்த்தருடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார் (மீகா 5:4).

4. அவர்கள் (இஸ்ரவேல்) நிலைத்திருப்பார்கள்.

5. அவர் (மேசியா) இனி பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார்.

6. அசீரியன் (வருங்காலத்தில் அசீரியாவிலிருந்து எழும்பும் அந்திக் கிறிஸ்து) நம்முடைய தேசத்திலே (இஸ்ரவேல்) வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும் இவரே (மேசியா) சமாதான காரணர். (மீகா 5:5).

7. அப்பொழுது (அந்திக்கிறிஸ்து நம்முடைய அரமனைகளில் மிதிக்கும்போது) ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவார்.

8. இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள் (மீகா 5:6).

9. அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார்.

10. யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தராலே வருகிற பனியைப்போலவும், மனுஷனுக்குக் காத்திராமலும், மனுபுத்திரருக்குத் தாமதியாமலும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப் போலவும், அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள். (மீகா 5:7).

11. யாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும், கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பார் இல்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிற தற்குச் சமானமாகவும் ஜாதிகளுக்குள் அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள். (மீகா 5:8).

12. உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் சத்துருக்களெல்லாரும் சங்கரிக்கப்படுவார்கள். (மீகா 5:9)

13. அந்நாளிலே உன் குதிரைகளை உன் நடுவில் இராதபடிக்குச் சங்கரித்து, உன் இரதங்களை மேசியா அழிப்பார். (மீகா 5:10)

14. மேசியா உன் தேசத்துப் பட்டணங்களைச் சங்கரித்து, உன் அரண்களையெல்லாம் நிர்மூலமாக்குவார். (மீகா 5:11)

15. சூனிய வித்தைகள் உன் கையில் இராதபடிக்கு மேசியா அகற்றுவார். நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற் போவார்கள். (மீகா 5:12)

16. மேசியா உன் சுரூபங்களையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இராதபடிக்கு நிர்மூலமாக்குவார். (மீகா 5:13)

17. உன் கையின் கிரியையை நீ இனிப் பணிந்துகொள்ளாய்.

18. மேசியா உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இராதபடிக்குப் பிடுங்குவார். (மீகா 5:14)

19. உன் பட்டணங்களை அழிப்பார்.

20. செவிகொடாத புறஜாதிகளிடத்திலே மேசியா கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவார். (மீகா 5:15)

இயேசு கிறிஸ்து இஸ்ரவேலையும், மற்ற தேசங்களையும் நித்திய காலமாக ஆளப்போகிறவர். தம்முடைய முதலாம் வருகையின்போது இயேசு கிறிஸ்து யூதாவிலிருந்து வந்தார். அவர் தம்முடைய இரண்டாம் வருகையின்போது பரலோகத்திலிருந்து வந்து, இஸ்ரவேலையும், மற்ற தேசங்களையும் ஆளுகை செய்வார். இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையில் அவருடைய பிறப்பும், மனுக்குலத்தை மீட்பதற்காக அவர் கல்வாரி சிலுவையில் மரித்ததும் நடைபெற்றுள்ளது. இயேசு கிறிஸ்து தம்முடைய இரண்டாம் வருகையில் இந்த உலகை ஆளுகை செய்வதற்காக வருவார்.

யூதா கோத்திரத்தில் பெத்லகேமில் பிறந்தவர் நித்திய தேவனாக இருக்கிறவர். அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. அவர் சதாகாலங்களிலும் இருக்கிறவர். (மீகா 5:2; ஏசா 9:6-7; யோவான் 1:1-3,14; எபி 1:8; வெளி 1:8; வெளி 2:8; வெளி 22:13) அவர் மனுஷனாக இந்தப் பூமிக்கு வந்தபோது, மனுஷனாகப் பிறந்தார். மனுஷனாக வளர்ந்தார். அவர் தேவனாக இருக்கிறபடியினால் அவருக்கு ஆரம்பமும், பிறப்பும் இராது. (அப் 13:33)

இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையின் போது இஸ்ரவேல் புத்திரர் இஸ்ரவேலின் நியாயாதிபதியாகிய இயேசு கிறிஸ்துவை மறுதலித்து விட்டார்கள். (மீகா 5:1-2) கர்த்தரும் யூதரைப் புறஜாதி தேசங்களில் சிதறிப்போகுமாறு ஒப்புக்கொடுத்து விடுவார். (லூக்கா 21:20-24) இஸ்ரவேல் தேசத்தார் புறஜாதி தேசங்களில் வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரையிலும் இஸ்ரவேலுக்கு வேதனை உண்டாயிருக்கும். (ஏசா 66:7-8; சக 10:12-13:1; ரோமர் 11:25-29) அதன் பின்பு, இஸ்ரவேல் தேசத்தாரில் இதுவரையிலும் தங்கள் தேசத்திற்குத் திரும்பாதவர்களைக் கர்த்தர் கூட்டிச் சேர்த்து அவர்களுடைய தேசத்திற்குத் திரும்பவும் அழைத்து வருவார். (ஏசா 11:10-12)

இஸ்ரவேலின் வேதனை

இஸ்ரவேல் தேசம் பிரசவிக்கிற ஸ்திரீக்கு ஒப்பிட்டுக் கூறப்பட்டிருக்கிறது. கடைசி நாட்களில் இஸ்ரவேல் புத்திரர் மட்டுமே இதுபோன்ற வேதனைகளை அனுபவிப்பார்கள். வருங்காலத்தில் இஸ்ரவேல் புத்திரருக்கு இரண்டு வேதனைகள் உண்டாகும். அவையாவன:

1. வெளி 12:1-6 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் ஆண்பிள்ளையை ஸ்திரீயானவள் பெற்றபோது. (மீகா 5:3; எரே 30:6-9).

2. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நாளின்போது ஸ்திரீயானவள் மறுபடியும் பிறப்பதற்காகப் பிரசவ வேதனையை அனுபவிக்கும்போது.

அசீரியர் யூதா தேசத்திற்குள் வந்து, யூதாவின் அரமனைகளை மிதிக்கும்போது மேசியா நின்றுகொண்டு தம்முடைய ஜனத்தைக் காப்பார். அப்போது ""அவர்கள்'' (இஸ்ரவேலர்கள்) கர்த்தருடைய மந்தைகளாக நிலைத்திருப்பார்கள். (மீகா 5:5).

""அசீரியன்'' (மீகா 5:5) என்னும் இந்த வார்த்தை அந்திக் கிறிஸ்துவைக் குறிக்கிறது. அந்திக்கிறிஸ்து அசீரிய தேசத்திலிருந்து எழும்புவான். இவன் பாபிலோனின் ராஜா (ஏசா14), சீரியன் (தானி 11:35-45), வரப்போகிற பிரபு (ரோமன்) (தானி 9:26-27), கிரேக்கன் (சக 9:13) என்றும் அழைக்கப்படுவான். மீகா, ஏசாயா ஆகியோரின் காலத்தில் அசீரியர்கள் மிகப்பெரிய பேரரசாக விளங்கினார்கள். இதனால் வருங்காலத்து அந்திக்கிறிஸ்துவை இவர்கள் அசீரியன் என்று அழைக்கிறார்கள். மீகா 5:3-15 ஆகிய வசனங்கள் அசீரியன் மூலமாக நிறைவேறும். அவற்றின் விவரம் வருமாறு:

1. பிரசவிக்கிறவள் பிரசவிக்கிறமட்டும் அவர்களை ஒப்புக்கொடுப்பார் (மீகா 5:3).

2. அப்பொழுது அவருடைய சகோதரரில் மீதியானவர்கள் இஸ்ரவேல் புத்திரரோடுங்கூடத் திரும்புவார்கள்.

3. மேசியா இனி பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார். (மீகா 5:4).

4. மேசியாவே சமாதான காரணர் (மீகா 5:5).

5. இஸ்ரவேல் தன்னுடைய எல்லா சத்துருக்களையும் ஜெயிக்கும். (மீகா 5:5-6).

6. மேசியா இஸ்ரவேலரை அசீரியரிடமிருந்து தப்புவிப்பார். (மீகா 5:6).

7. யாக்கோபிலே மீதியானவர்கள் அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள். (மீகா 5:7-8).

8. இஸ்ரவேலின் சத்துருக்களெல்லாரும் சங்கரிக்கப்படுவார்கள். (மீகா 5:9).

9. குதிரைகளும், பட்டணங்களும், அரண்களும் அழிக்கப்படும். (மீகா 5:10-11).

10. சூனிய வித்தைகள் இஸ்ரவேலின் கையில் இராதபடிக்கு அகற்றப்படும். நாள் பார்க்கிறவர்கள் இஸ்ரவேலில் இல்லாமற் போவார்கள். (மீகா 5:11-15).

மீகா, ஏசாயா, எசேக்கியா ஆகியோரின் காலத்தில் அசீரியர்கள் யூதாவின் அரண்மனைகளை மிதிக்கவில்லை. இது வருங்காலத்து அந்திக்கிறிஸ்துவின் நாட்களில் நடைபெறும் சம்பவம். அந்திக்கிறிஸ்து பாலஸ்தீன தேசத்தையும், எருசலேமையையும், எருசலேமிலுள்ள யூதருடைய வருங்காலத்து தேவாலயத்தையும் கைப்பற்றுவான்.

""ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்.'' (மீகா 5:5) என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்த மேய்ப்பரும், அதிபதிகளும் யாரென்று வெளிப்படுத்தப்படவில்லை. ஆயினும் இந்த முன்னறிவிப்பு அப்படியே நிறைவேறும்.

""இவர்கள் அசீரியா தேசத்தை.......... பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்'' (மீகா 5:6). இவர்கள் என்பது இஸ்ரவேலின் சேனையை வழிநடத்துகிறவர்களைக் குறிக்கும். இவர்கள் அந்திக்கிறிஸ்துவின்மீது ஜெயம் பெறுவார்கள். அசீரியன் பாலஸ்தீன தேசத்திற்கு வரும்போது மேசியா இஸ்ரவேல் தேசத்தாரை அவனுடைய பிடியிலிருந்து விடுவிப்பார். மேசியாவின் இரண்டாம் வருகையில் அவர் அசீரியாவையும், நிம்ரோதையும் ஜெயிப்பார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.