ஆதியாகமம் 6:4-7 விளக்கம்

 



ஆதியாகமம் 6:4-7 விளக்கம்


    மனுஷனுடைய அக்கிரமம் ஆதி 6:4,5 


    ஆதி 6:4. அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். 


    ஆதி 6:5. மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,


    பூர்வகாலத்தில் பூமியிலே அக்கிரமம் பெருகிற்று. ஜனங்கள் துன்மார்க்கராயிருக்கிறார்கள். பலமுள்ளவர்கள்  பலவீனமானவர்களை ஒடுக்குகிறார்கள். மனுபுத்திரர்  அன்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பலவந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பூர்வத்திலே இராட்சதரும், பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களும் பூமியிலே இருந்தார்கள். 


    ஏனோக்கின் புத்திரர் இராட்சதர்  என்று அழைக்கப்படுகிறார்கள். ""அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும், அப்படியே இருந்தோம் என்று சொல்-, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்''           (எண் 13:33). 


    அசீரியாவின் ராஜா  பேர்பெற்றவனாயிருந்தான்.  அவனைப் போலவே பூர்வத்திலிருந்த மனுஷர் பேர் பெற்ற பலவான்களாயிருந்தார்கள். 


    ""இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ?'' (ஏசா 37:11).


    ஜலப்பிரளயத்திற்கு முன்பு நோவாவின் நாட்களிலும், அதன் பின்பு அதாவது ஜலப்பிரளயத்திற்குப் பின்பும்.  இராட்சதர் பூமியிலே இருந்தார்கள். அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்.  தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளோடே கூடுகிறதினால் இராட்சதர் பிறந்தார்கள். 


    இராட்சதர் சாதாரண மனுஷர் அல்ல. இவர்கள் நெடியவர்கள், பலவான்கள். வேதாகமத்தில் இராட்சதரைப் பற்றி பல குறிப்புக்கள் உள்ளன.


    ஏனாக்கு ஒரு இராட்சத பிறவி          (எண் 13:33). ஏனாக்கியர் பலவான்களும், நெடியவர்களுமாக இருந்தார்கள்.  (உபா 1:28; உபா 2:10-11,21; உபா 9:2; யோசு 11:21-22; யோசு 14:12, யோபு 14). 


    அம்மோனின் தேசம் இராட்சதருடைய தேசம் என்று அழைக்கப்பட்டது. முற்காலத்தில் இராட்சதர் அதிலே குடியிருந்தார்கள்.          (உபா 2:19-20). ஏமியர்கள்   ஏனாக்கியரைப்போல திரளானவர்கள், நெடியவர்கள், பலத்த ஜனங்கள் (உபா 2:10-11)


    சம்சூமியரும்  முற்காலத்தில்     அம்மோன் தேசத்தில் குடியிருந்தார்கள்.  (உபா 2:19-21). இவர்களும் இராட்சதர்கள். பாசானின்  இராஜாவாகிய ஓக்  ஒரு  இராட்சத பிறவி. இராட்சதர் பதிமூன்றரை அடி உயரம் கூட இருப்பார்கள்.  (உபா 3:11; யோசு 12:4; யோசு 13:12). பாசான் இராட்சதருடைய தேசம் என்று அழைக்கப்படுகிறது. (உபா 3:13). 


    இராட்சதருடைய பள்ளத்தாக்கைப் பற்றி யோசு 15:8; யோசு 18:16 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது. இது ரெப்பாயீமின்  பள்ளத்தாக்காகும். இராட்சதரின் இந்தப் பிரிவினரைப் பற்றி ஆதி 14:5; ஆதி 15:20; 2சாமு 5:18,22; 2சாமு 23:13; 1நாளா 11:15; 1நாளா 14:9; ஏசா 17:5 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது. ரெப்பாயீம் இராட்சதர்கள் மிகவும் முக்கியமானவர்கள். ஆனால் வேதத்தில் இவர்கள் ""மடிந்தவர்கள்'' என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறார்கள்.               (யோபு 26:5; சங் 88:10; நீதி 2:18;  நீதி 9:18; நீதி 21:16; ஏசா 14:8;    ஏசா 26:14,19). 


    ""ரெப்பாயீம்'' என்னும் பெயர்  உபா 2:11,20; உபா 3:11,13; யோசு 12:4; யோசு 13:12; யோசு 15:8; யோசு 18:16; 2சாமு 21:16,18,20,22; 1நாளா 20:4,6,8 ஆகிய வசனங்களில் இராட்சதர் என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.  ""மீந்திருந்த இராட்சதர்'' என்னும் வாக்கியம் மீந்திருந்த ரெப்பாயீம் என்று இருக்க வேண்டும்.  (உபா 3:11; யோசு 12:4; யோசு 13:12) 


    இராட்சதரின் பல பிரிவினரைப் பற்றி வேதவாக்கியங்களில் கூறப்பட்டிருக்கிறது. (ஆதி 6:4; ஆதி 14:5-6; ஆதி 15:19-21;             யாத் 3:8,17; யாத் 23:23; உபா 2:10-12, 20-23; உபா 3:11-13;  உபா 7:1;  உபா 20:17; யோசு 12:4-8;  யோசு 13:3; யோசு 15:8; யோசு 17:15;    யோசு 18:16). ஓக், ரெப்பாயீமில்  மீந்திருந்தவன். மற்ற இராட்சத தேசங்களிலிருந்து இவன்  மீந்திருக்கவில்லை. (உபா 3:11; யோசு 12:4; யோசு 13:12).


    இராட்சதர் எல்லோருமே தேவனுடைய குமாரருக்கும், மனுஷருடைய குமாரத்திகளுக்கும் பிறந்தவர்கள். தேவனுடைய குமாரர் என்பது விழுந்துபோன தூதர்களைக் குறிக்கும்.


    சாதாரணமாக மனுஷர் உயிர்த்தெழுவார்கள். (யோவான் 5:28-29) ஆனால் ரெப்பாயீம் உயிர்த்தெழுவதில்லை. (ஏசா 26:14) ரெப்பாயீம் இப்பொழுது பாதாளத்தில் இருக்கிறார்கள்.  (ஏசா 14:9). சாலொமோனும், இதை உறுதிபண்ணியிருக்கிறார். (நீதி 2:18;           நீதி 9:18; நீதி 21:16) மரித்தவர் என்பதற்கான எபிரெய வார்த்தை ரெப்பாயீம்   என்பதாகும். (ஏசா 26:14,19) 


    ""தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளோடே கூடுகிறதினால்'' என்னும் இந்த வாக்கியத்திலிருந்து மூன்று காரியங்கள் தெரிய வருகிறது. அவையாவன:


        1. விழுந்துபோன தூதர்கள் பூமியிலுள்ள ஸ்திரீகளை இரண்டு காலங்களில் அதாவது நோவாவின் காலத்து ஜலப்பிரளயத்திற்கு முன்பும், பின்பும். திருமணம் செய்து கொண்டார்கள்.


        2. இவ்விரண்டு          காலங்களிலும் தூதர்களுக்கு மனுஷ குமாரத்திகள் மூலமாகப் பிள்ளைகள் பிறந்தார்கள்.


        3. இந்தப்    பிள்ளைகள்     எல்லாம் இராட்சதராக இருந்தார்கள்.


    ""மனுஷ குமாரத்திகள்'' என்னும்   இந்த வாக்கியத்திற்கு  காயீனின் குமாரத்திகள் என்று  ஒருசிலர் விளக்கம் கூறுகிறார்கள். ஆனால் ஜலப்பிரளயத்திற்குப் பின்பு காயீனின் குமாரத்திகள் யாரும் உயிரோடு இல்லை. எல்லோரும் ஜலப்பிரளயத்தில் தேவனால் நிக்கிரகம் பண்ணப்பட்டார்கள். எல்லோரும் மரித்துப் போனார்கள். (ஆதி 6:18;  ஆதி 7:7; ஆதி 8:18; ஆதி 9:1; 1பேதுரு 3:20).


    ஸ்திரீகளுக்கு விழுந்துபோன தூதர்கள் மூலமாகவும், உலகத்தின் மனுஷர் மூலமாகவும் பிள்ளைகள் பிறந்தார்கள். தூதர்களுக்கு பிறந்த பிள்ளைகள் இராட்சதராக இருந்தார்கள்.  (ஆதி 6:4; யூதா 1: 6-7). பூமியில் மனுஷருடைய அக்கிரமம் பெருகிற்று. இதனால் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்         (ஆதி 6:1-6).


    ஒரு மனுஷனுக்கு மற்றவர்கள்மீது  அதிகமான அதிகாரம் இருக்கும்போது  அவன் மற்றவர்களை தன்னுடைய இஷ்டம்போல ஒடுக்குவான்.  அவனிடத்தில்  அதிக பலம் இருந்தாலும், அந்த   பலத்தினால் அவன் தன்னைத்தானே ஆளுகை செய்யமாட்டான். மற்றவர்களை ஒடுக்கக்கூடாது என்னும் நல்ல சிந்தனைகூட  பலவானிடத்தில் இருக்காது.  


    மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் காண்கிறார் (ஆதி 6:5).


    கர்த்தருக்கு மறைவான இரகசியம் ஒன்றுமில்லை. மனுஷனுடைய அக்கிரமம் இந்தப் பூமியிலே தண்ணீரைப்போல ஓடுவதை கர்த்தர் காண்கிறார். ஒரு நதி  ஆழமாகவும்,  அகலமாகவும்,  வேகமாகவும் பாய்ந்து ஓடுவதைப்போல, மனுஷருடைய அக்கிரமமும் பூமியிலே பெருகி ஓடுகிறது. 


    மனுஷரை ஒடுக்குகிறவர்கள்           பேர் பெற்ற மனுஷராகிய  பலவான்களாயிருக்கிறார்கள்.  கர்த்தர் அவர்களை கண்ணோக்கிப் பார்க்கிறார். அவர்களுடைய அக்கிரமம் பூமியிலே பெரிதாயிருக்கிறது.


    இந்தப் பூமியிலே துன்மார்க்கர் பேர் பெற்ற பலவான்களாயிருக்கும்போது,  அவர்களுடைய அக்கிரமம்  பெரிதாயிருக்கும்.  அவர்களுடைய  துன்மார்க்கமான செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு  ஒருவரும் துணிந்து முன்வரமாட்டார்கள்.


    தங்களுடைய பாவம் யாருக்கும் தெரியாத  இரகசியமாயிருக்கிறது என்று  பாவிகள் நினைக்கிறார்கள். கர்த்தர் நியாயாதிபதியாயிருக்கிறார். அவர்  மனுஷருடைய எல்லா பாவங்களையும் அறிந்திருக்கிறார். 


    மனுஷனுடைய பாவங்கள் எல்லாமே   அவனுடைய இருதயத்திலிருந்து புறப்பட்டு வருகிறது.  இருதயமே  பாவத்தின்  ஊற்றாகயிருக்கிறது.  அந்த இடமே ஊற்றின் கண்ணாகவும் இருக்கிறது. கர்த்தர் மனுஷனுடைய இருதயத்தை ஆராய்ந்து அறிகிறார்.


    மனுஷனுடைய அக்கிரமம் பெருகும்போது,   அவனுடைய பாவம் சோதோமின் பாவத்தைப்போல இருக்கிறது என்று சொல்லுவது வழக்கம்.  கர்த்தருடைய கண்களோ  சோதோமையும் பார்க்கிறது.  சோதோமுக்கு அப்பாலும் பார்க்கிறது. மனுஷனுடைய  இருதயத்து நினைவுகளின்  தோற்றமெல்லாமல் நித்தமும் பொல்லாதது என்று தேவன் காண்கிறார். 


    கர்த்தர் மனுஷனுடைய இருதயத்தையும்  அறிந்திருக்கிறார்.  அந்த இருதயத்தின் நினைவுகளையும் அறிந்திருக்கிறார்.  மனுஷன் பாவம் செய்வதற்கு முன்பாகவே  அவனுடைய இருதயம் பாவம் செய்கிறது.  அவனுடைய இருதயத்தில்  துன்மார்க்கமான சிந்தனைகளும்,  பாவசிந்தனைகளும் நிரம்பியிருக்கிறது. மனுஷனுடைய இருதயம்  பொல்லாப்பானதை சிந்தித்து,  துன்மார்க்கமான காரியங்களை திட்டமிடுகிறது.


    பாவிகள் துணிகரமாகப் பாவம் செய்கிறார்கள். பாவம் செய்யவேண்டுமென்று  தீர்மானம்பண்ணி,  திட்டமிட்டு  பாவம் செய்கிறார்கள். துன்மார்க்கருடைய பாவங்கள்  எதேச்சையாக  செய்யப்படும்  பாவங்களல்ல.  அவை துணிகரமாய்  செய்யப்படும் பாவங்கள்.  துன்மார்க்கரின் இருதயம் பாவசிந்தனையினால் கடினப்பட்டிருக்கிறது.  


    கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்  ஆதி 6:6,7


    ஆதி 6:6. தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. 


    ஆதி 6:7. அப்பொழுது கர்த்தர்:                 நான் சிருஷ்டித்த மனுஷனைப்  பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான்         அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார். 


    கர்த்தர்  மனுஷனுடைய அக்கிரமத்தைப் பார்த்து மனஸ்தாபப்படுகிறார். மனுஷன்   துணிகரமாய்ப் பாவம் செய்யும்போதும், அவன் தொடர்ந்து பொல்லாத காரியங்களை செய்யும்போதும், கர்த்தர் அவனை சும்மா வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நிற்கமாட்டார். மனுஷனுடைய துன்மார்க்கத்தைப் பார்க்கும்போது கர்த்தருடைய இருதயம் வேதனைப்படுகிறது. அவர் பாவிகளின் நிமித்தமாக மனஸ்தாபப்படுகிறார். 


    கிருபையும் அன்புமுள்ள தகப்பன்,  தன் பிள்ளைகள்  பாவம் செய்வதைப் பார்த்து மனவேதனைப்படுவார்.  பிள்ளைகள்  கீழ்ப்படியாமல் முரட்டுத்தனமாய் நடந்துகொள்ளும்போது,  தகப்பனுடைய மனது வேதனைப்படும். தன்னுடைய  பிள்ளைகள் தப்பு செய்யும்போது, அவர்களுடைய தகப்பன் அவர்கள்மீது கோபப்படுவார்.  அதோடு  தகப்பன்  மனவேதனையும் படுவார்.  அவர்  தன் பிள்ளைகள் நிமித்தமாக மனஸ்தாபப்படவும் செய்வார்.


    இந்த வசனத்தில் ""கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்'' என்று சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய       மனது  நிம்மதியில்லாமல் கலங்கவில்லை.  கர்த்தருடைய மனதை யாராலும் கலங்கப்பண்ண முடியாது. கர்த்தர் எப்போதுமே சீராகவும், உறுதியாகவும் சிந்திக்கிறவர். கர்த்தருடைய நீதி அவருடைய மனதை தாங்குகிறது. மனுஷருடைய துன்மார்க்கத்தைப் பார்த்து, கர்த்தருடைய மனது ஒருபோதும் குழம்பிப்போவதில்லை. 


    ஆனாலும் கர்த்தர் மனுஷனுடைய  அக்கிரமத்தைப் பார்த்து மனஸ்தாபப்படுகிறார்.  கர்த்தருடைய மனஸ்தாபம் அவருடைய நீதியையும், பாவத்திற்கும்  பாவிகளுக்கும் விரோதமான கர்த்தருடைய பரிசுத்தமான கோபத்தையும்  வெளிப்படுத்துகிறது.  கர்த்தர் பாவத்தை  வெறுக்கிறார். கர்த்தர் வெறுக்கிற பாவத்தை நாமும் வெறுக்கவேண்டும்.  நம்முடைய பாவம் கர்த்தருடைய இருதயத்திற்கு விசனமாயிருக்கக்கூடாது.  நம்முடைய பாவத்தை நாம் உணர்ந்து,  நம்முடைய இருதயத்தில் நாம் விசனப்படவேண்டும்.  நாம் பாவத்தை விட்டு விலகி பரிசுத்தமாய் ஜீவிக்கவேண்டும். 


    தேவனுடைய மனது ஒருபோதும் மாற்றமடைவதில்லை.   ஆனாலும் ""தாம் பூமியிலே  மனுஷனை உண்டாக்கினதற்காக  கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்''  என்று இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.    கர்த்தர் மனஸ்தாபப்பட்டாலும் அவர்        மனம் மாறுகிற தேவனல்ல. மனம்மாற  கர்த்தர் ஒரு மனுஷனல்ல. கர்த்தர் ஒருபோதும்  தம்முடைய வழியை மாற்றுகிறவரல்ல. 


    மனுஷன் கர்த்தரை விட்டு விலகிப்போகிறான். அவன் கர்த்தருடைய சமுகத்திலிருந்து விலகி பின்வாங்கிப்போகிறான். அவன் போகவேண்டிய பாதையை விட்டு விலகி,  வேறு பாதையில் போகிறான்.  மனுஷனே பாதை மாறுகிறவன்.  கர்த்தர் ஒருபோதும்  தம்முடைய வழியை  மாற்றமாட்டார். அவரே  வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறார். 


    மனுஷனுடைய அக்கிரமம் பூமியில் பெருகினதை கர்த்தர் பார்க்கும்போது,  அவருடைய இருதயத்தில் மனஸ்தாபமும்,  விசனமும்,  பரிசுத்தமான கோபமும் உண்டாயிற்று. கர்த்தர் மனுஷர்மீது பிரிமாயிருந்தாலும்,  அவர்கள் செய்கிற அக்கிரமத்தின் மீது பிரியப்படவில்லை.  மனஸ்தாபப்படுவதும்,  விசனப்படுவதும் கர்த்தருடைய சுபாவமல்ல.  மாற்றம் மனுஷனிடத்தில்தான் ஏற்பட்டிருக்கிறது.  கர்த்தரிடத்தில் மாற்றம் ஏற்படவில்லை.  கர்த்தர் என்றும் மாறாதவர். 


    கர்த்தரே மனுஷனை சிருஷ்டித்தார்.  தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக  கர்த்தர் இப்போது மனஸ்தாபப்படுகிறார்.  மனுஷனுடைய   அக்கிரமத்தின் நிமித்தமாக, கர்த்தர் மனஸ்தாப்படுகிறார்.  அவர் மனுஷனை உண்டாக்கினதற்காக மனஸ்தாபப்பட்டாலும்,  அவனை இரட்சிப்பதற்காக ஒருபோதும் மனஸ்தாபப்படமாட்டார்.


    மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகியிருப்பதினால் அவனை நிக்கிரகம்பண்ணுவது  கர்த்தருடைய சித்தமாயிற்று. நாம் பல சமயங்களில்,  நாம் செய்த பாவங்களுக்காக  கர்த்தரிடத்தில்  நம்முடைய மனவருத்தத்தைத் தெரிவிக்கிறோம். அதே வேளையில்  நாம் பாவத்தை விட்டு விலகாமல்,  நாம் செய்த பாவத்தை  திரும்ப திரும்ப செய்கிறோம்.  நாம் கர்த்தரிடத்தில் பாவஅறிக்கை பண்ணுவது ஒரு சம்பிரதாயம்போல மாறிவிடுகிறது.  


    நாம் தொடர்ந்து பாவம் செய்வோமென்றால்,  கர்த்தருடைய  கோபமும்,  சாபமும்  நம்மீது     தங்கியிருக்கும். நம்முடைய பாவத்தினால்  நாம் தேவனை துக்கப்படுத்துவோம்.   அவரை  மனஸ்தாபப்படுத்துவோம். நம்முடைய பாவங்கள் கர்த்தருடைய இருதயத்திற்கு விசனமாயிருக்கும். 


    பாவிகள்மீது தேவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பு வரும். தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக               கர்த்தர்  மனஸ்தாபப்பட்டதோடு சும்மாயிருந்துவிடவில்லை.  அப்பொழுது கர்த்தர்: ""நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது''             (ஆதி 6:7) என்றும் சொல்லுகிறார். 


    இந்த வசனத்தில், ""நிக்கிரகம்பண்ணுவேன்'' என்னும் வார்த்தைக்கு, ""அழுக்கை முற்றிலுமாய்  துடைத்துவிட்டு சுத்தம்பண்ணுவேன்'' என்று பொருள். இந்தப் பூமியிலே பாவம் செய்கிற  எல்லோரையும் கர்த்தர் அழித்துப்போடுவார்.  அவர் பூமியை சுத்தம்பண்ணுவார்.


    மனுஷன் பாவம் செய்யும்போது,  கர்த்தருடைய  ஆவியானவர் அவனுக்கு விரோதமாகப் போராடுகிறார்.  மனுஷன்  கர்த்தருடைய எச்சரிப்பின் வார்த்தைக்கு செவிகொடுக்காமல், தொடர்ந்து பாவம் செய்யும்போது கர்த்தர் மனுஷனை நிக்கிரகம்பண்ணுகிறார்.  இது  கர்த்தருடைய பரிசுத்தமான, நீதியான  தீர்மானமாயிருக்கிறது.  


    கர்த்தருடைய நீதியினால் ஒருவரும் நிக்கிரகமாவதில்லை.  கர்த்தர் தம்முடைய நீதியினால் யாரையும் அழிப்பதில்லை.  தங்கள் பாவத்திற்கு  மனந்திரும்பாத பாவிகள்,  தங்கள் பாவத்தினால்  நிக்கிரகமாகிறார்கள். அவர்கள்  தேவனுடைய கிருபையை அசட்டைபண்ணினவர்கள்.   அவர்கள் தங்கள் பாவத்திற்கு மனந்திரும்ப மறுத்தவர்கள். அவர்களுடைய அழிவுக்கும்,  நிக்கிரகத்திற்கும் அவர்களுடைய பாவமே காரணம். 



    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.