ஆதியாகமம் 6:1-3 விளக்கம்

 

ஆதியாகமம் 6:1-3 விளக்கம்

6ஆம் அதிகாரத்தின் முகவுரை


மனுஷருடைய அக்கிரமம் பூமியில் பெருகுகிறது. கர்த்தர் தம்முடைய   நீதியினால் முழுஉலகத்தையும்   தண்டிக்கிறார். பூமியின்மீது ஜலப்பிரளயம் உண்டாயிற்று. மனுஷருடைய  இருதயத்தின்  நினைவுகளெல்லாம்  பொல்லாததாயிருக்கிறது (ஆதி 6:1-5,11,12). மனுஷருடைய அக்கிரமம்  கர்த்தருடைய இருதயத்திற்கு விசனமாயிருக்கிறது    (ஆதி 6:6,7). 


நோவாவுக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை  கிடைக்கிறது  (ஆதி 6:8-10).  தேவன் தம்முடைய திட்டத்தை நோவாவுக்கு வெளிப்படுத்துகிறார்  (ஆதி 6:13,17).  கர்த்தர்  நோவாவிடம்  கொப்பேர் மரத்தால்  ஒரு பேழையை உண்டாக்குமாறு சொல்லுகிறார்              (ஆதி 6:14-16). 


கர்த்தர் நோவாவோடு தம்முடைய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார்.  கர்த்தருக்கு சித்தமானவர்கள் பேழைக்குள் பிரவேசிக்கிறார்கள்  (ஆதி 6:18-21). தேவன் தனக்கு கட்டளையிட்டபடியெல்லாம்  நோவா செய்து முடிக்கிறார் (ஆதி 6:22).


தேவகுமாரரும் மனுஷகுமாரத்திகளும்  ஆதி 6:1,2


ஆதி 6:1. மனுஷர் பூமியின்மேல் பெருகத்துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது: 


ஆதி 6:2. தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.



பூர்வகாலத்திலே மனுஷர் மத்தியில்  பாவமும் துன்மார்க்கமும் அதிகரிக்கிறது.  மனுஷர் பூமியின்மேல் பெருகுகிறார்கள். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார்.  அவர்களை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார்.  தேவன் அவர்களை நோக்கி, ""நீங்கள் பலுகிப்பெருகி,  பூமியை நிரப்புங்கள்'' (ஆதி 1:28) என்று  சொன்னார். தேவனுடைய வார்த்தையின் பிரகாரமாக மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவங்குகிறார்கள். 


மனுஷர் இந்தப் பூமியில் பலுகிப்பெருகுவது  கர்த்தருடைய ஆசீர்வாதம்.  அவர்கள்  தங்கள் சந்ததிகளால் பூமியை நிரப்புவது  அவர்களுக்கு மேன்மையான காரியம்.   ஆனால்   அவர்களோ  கர்த்தர் தங்களுக்கு கொடுத்த ஆசீர்வாதத்தை, சாபமாக மாற்றுகிறார்கள். பூமியின்மேல்  மனுஷர் பெருகும்போது,  மனுஷர் மத்தியிலே பாவிகளும் பெருகுகிறார்கள்.  பாவிகள் பெருகும்போது, பாவமும் பெருகும்.  


பாவம் வேகமாக பரவும் புற்றுநோயைப்போன்றது.  ஒரு பட்டணத்தின் ஜனத்தொகை அதிகமாயிருக்கும்போது,  ஜனங்கள் மத்தியில் நோய்கள் வேகமாக பரவும். அதுபோலவே பூமியின்மேல் மனுஷர் பெருகும்போது, அவர்களுடைய பாவங்களும் அக்கிரமங்களும் பெருகும்.


பூமியின்மேல்  பெருகின மனுஷருக்கு  குமாரத்திகள் பிறக்கிறார்கள். தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொள்கிறார்கள்    (ஆதி 6:2).


""தேவகுமாரர்'' என்னும் இந்த வாக்கியம் சேத்தின் குமாரரைக் குறிப்பதாக ஒருசிலர் வியாக்கியானம் கூறுகிறார்கள். ஆனால் இந்த வாக்கியம் தேவனுடைய குமாரரையே குறிக்கும் என்று சிலர் விளக்கம் சொல்லுகிறார்கள். இவர்கள் 1பேதுரு 3:19; 2பேதுரு 2:4; யூதா 1:6-7 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் விழுந்துபோன தூதர்கள் ஆவார்கள். 


சிருஷ்டிப்பின் நாளிலிருந்து 235 வருஷங்கள் வரையிலும் சேத்திற்கு குமாரர்கள் யாரும் பிறக்கவில்லை. அவனுடைய குமாரனுக்கும் சிருஷ்டிப்பின் நாளிலிருந்து 325 வருஷங்கள் வரையில் குமாரர்கள் யாரும் பிறந்ததாக வேதவசனம் கூறவில்லை.  (ஆதி 5:3,6,9) ஆகையினால் தேவகுமாரர் என்னும் வாக்கியம்  சேத்தின் குமாரரைக் குறிக்காது என்பது இவர்களுடைய வியாக்கியானம்.


எபிரெய மொழியில் ""மனுஷனுடைய குமாரத்திகள்'' என்று ஒருமையில் கூறப்பட்டிருக்கிறது. மனுஷன் என்னும் வார்த்தை எபிரெய மொழியில் ஒருமையில் கூறப்பட்டிருந்தால் அது ஆதாமைக் குறிக்கும். ஆகையினால் இங்கு மனுஷருடைய குமாரத்திகள் என்னும் வாக்கியம் ஆதாமின் குமாரத்திகளைக் குறிக்கும் என்றும் சிலர் விளக்கம் சொல்லுகிறார்கள்.


தேவகுமாரர் என்னும் வார்த்தைக்கு, ""கர்த்தரை ஆராதிக்கிறவர்கள்'' என்று பொருள். மனுஷகுமாரத்திகள் என்னும் வார்த்தைக்கு, தேவனை ஆராதியாத  உலகப்பிரகாரமான  ஜனங்களின் குமாரத்திகள் என்று பொருள்.  மனுஷகுமாரத்திகள்  தேவனிடத்தில் பக்தியில்லாதவர்கள். இவர்கள்  தேவனுக்கும்,  அவருடைய வார்த்தைக்கும் அந்நியர்கள் என்பது மற்றொரு வியாக்கியானம்.


சேத்தின் சந்ததியை சேர்ந்தவர்கள்  கர்த்தரை ஆராதிக்கவேண்டும்.  அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து ஜீவிக்கவேண்டும்.  ஆனால்   அவர்களோ  கர்த்தரை  நம்பவுமில்லை, அவரை ஆராதிக்கவுமில்லை.   காயீனும்  அவனுடைய  சந்ததியும் சபிக்கப்பட்டவர்கள்.  மனுஷகுமாரத்திகள்  என்னும் பெயர்  காயீனின் சந்ததியாரை குறிக்கிற வார்த்தை.  கர்த்தரை நம்புகிற தேவகுமாரர்,  கர்த்தரை நம்பாத, கர்த்தரால் சபிக்கப்பட்ட  காயீனின்  குமாரத்திகளை விவாகம்பண்ணுகிறார்கள். 


காயீனின் குமாரத்திகள்  அதிக சவுந்தரியமுள்ளவர்களாயிருக்கிறார்கள்.  சேத்தின் குமாரர்களோ அவர்களுடைய அழகில் மயங்கி, அவர்களுக்குள்ளே  தங்களுக்கு பெண்களைத் தெரிந்துகொள்கிறார்கள். சேத்தின் சந்ததியாருக்கும், காயீனின் சந்ததியாருக்கும்  விவாக சம்பந்தமுண்டாயிற்று.      விசுவாசியும் அவிசுவாசியும் விவாகம்பண்ணிக்கொள்கிறார்கள். 


கர்த்தரை ஆராதிக்கிற தேவகுமாரர்  தங்கள் கண்களின்  இச்சைகளுக்கு அடிமைகளாகிறார்கள்.  அவர்கள்  தங்கள் கண்களின் பார்வையால் வழிநடத்தப்படுகிறார்கள். அவர்கள் மனுஷகுமாரத்திகளைப் பார்க்கும்போது,  அவர்களை  அதிக சௌந்தரியமுள்ளவர்களாக காண்கிறார்கள். அவர்களுடைய கண்களால் ஸ்திரீகளின் சௌந்தரியத்தை மாத்திரமே காணமுடிகிறது. 


மனுஷன் முகத்தைப் பார்க்கிறான்.  கர்த்தரோ மனுஷருடைய இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறார்.  தேவகுமாரரால்  மனுஷகுமாரத்திகளின்  இருதயங்களைப் பார்க்க முடியவில்லை. அவர்கள்  மனுஷகுமாரத்திகளின் முகசௌந்தரியத்தை மாத்திரமே பார்க்கிறார்கள்.


தேவகுமாரருடைய கண்களின் பார்வை  அவர்களை வஞ்சிக்கிறது. அவர்கள்  மனுஷகுமாரத்திகளின்  சௌந்தரியத்தைக் கண்டு, அதிலே மயங்கி,      அவர்களுக்குள்ளே  தங்களுக்கு பெண்களைத் தெரிந்துகொள்கிறார்கள்.  தேவகுமாரர்  மனுஷகுமாரத்திகளை விவாகம்பண்ணுகிறார்கள். 


தேவகுமாரர் அந்நிய ஸ்திரீகளை விவாகம்செய்து பாவம் செய்கிறார்கள்.  இதன் விளைவாக  தேவகுமாரர் மத்தியிலே  பாவம் பெருகிற்று. 


""அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?'' (2கொரி 6:14). 


தேவகுமாரர் தங்கள்        சுயபலத்தையும்,  சுயமுயற்சிகளையும் நம்புகிறார்கள்.  மனுஷகுமாரத்திகளை விவாகம்பண்ணினாலும்,  அவர்களை  தேவகுமாரத்திகளாக  மாற்றிவிடலாம்     என்று தேவகுமாரர் நினைக்கிறார்கள்.  ஆனால்  மனுஷகுமாரத்திகள்,  தேவகுமாரர்களை,  மனுஷகுமாரர்களாக மாற்றிவிடுகிறார்கள். 


இந்த சம்பவத்தைப்போலவே, தற்காலத்திலும்  விசுவாசிகள்  மத்தியில்  சில விவாக சம்பந்தம் நடைபெறுகிறது.    ஒரு சில விசுவாசிகள் அவிசுவாசிகளை  விவாகம்பண்ணுகிறார்கள்.  அவர்களை  விசுவாசிகளாக மாற்றிவிடலாம் என்று  நினைக்கிறார்கள். ஆனால்   சில சமயங்களில்  விசுவாசிகள் நினைப்பதுபோல நடைபெறுவதில்லை.  


அவிசுவாசிகள்  விசுவாசிகளாக மாறுவதற்கு பதிலாக,  விசுவாசிகள்  அவிசுவாசிகளாக மாறிவிடுகிறார்கள்.  ஆகையினால்  விவாக சம்பந்த விஷயங்களில்  விசுவாசிகள் மிகவும் கவனமாயிருக்கவேண்டும். துன்மார்க்கன்  நீதிமானாக மாறுவதற்கு பதிலாக,  நீதிமான் துன்மார்க்கனாக  மாறுவதற்கும் வாய்ப்புள்ளது.  


கர்த்தருடைய ஆவி  ஆதி 6:3


ஆதி 6:3. அப்பொழுது கர்த்தர்: என்      ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். 


பூமியின்மேல் மனுஷர் பெருகியிருக்கிறார்கள்.  தேவகுமாரர்  மனுஷகுமாரத்திகளை விவாகம் பண்ணுகிறார்கள்.  மனுஷருடைய  அக்கிரமம் பூமியிலே பெருகுகிறது. அவர்களுடைய  இருதயத்தின் நினைவுகள்  பொல்லாததாயிருக்கிறது.  இதனால்     கர்த்தர் அவர்களை பார்த்து  மனஸ்தாபப்படுகிறார்.  அவருடைய இருதயம் விசனமாயிருக்கிறது. 


மனுபுத்திரர் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்புவார்கள் என்று  கர்த்தர் எதிர்பார்க்கிறார். கர்த்தருடைய ஆவி  மனுஷரோடே போராடுகிறது. ஆனால் மனுஷரோ  தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பாமல்,  தொடர்ந்து துணிகரமாய்ப் பாவம் செய்கிறார்கள். கர்த்தர்  நீடியபொறுமையோடு காத்திருக்கிறார்.  மனுபுத்திரர்  கர்த்தருடைய பொறுமையை  அசட்டைபண்ணுகிறார்கள்.


மனுஷனுர் மனந்திரும்பாமல்,  தங்களுடைய அக்கிரமத்தை  பெருக்கும்போது, கர்த்தருடைய             ஆவி  மனுஷரோடே போராடுவதில்லை.  ""என் ஆவி  என்றைக்கும் மனுஷனோடே  போராடுவதில்லை'' என்று கர்த்தர் சொல்லுகிறார்.


மனுஷன் பாவம் செய்யும்போது கர்த்தருடைய ஆவியானவர் அவனுடைய பாவத்தை  அவனுக்கு உணர்த்துகிறார்.  அவனுடைய மனச்சாட்சியின் மூலமாக  அவனைக் கடிந்துகொள்கிறார்.  அவனுக்கு ஆவிக்குரிய  புத்திமதிகளை சொல்லுகிறார்.  மனுஷன் கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுத்து, தன்னுடைய  பாவத்தை விட்டு விலகி, கர்த்தரிடத்தில் வந்து சேரவேண்டும்.  இதற்காகவே  கர்த்தருடைய ஆவியானவர் மனுஷனோடு போராடுகிறார்.  


மனுஷன் கர்த்தருடைய வார்த்தைக்கு  செவிகொடுக்காமல்,  அவருக்கு விரோதமாக எதிர்த்து நிற்கக்கூடாது. ஆவியானவர்  மனுஷனுடைய பாவத்தை அவனுக்குள் உணர்த்தும்போது மனுஷன் தன்னுடைய ஆவியை அவித்துப்போடக்கூடாது.  அவன்  கர்த்தருக்கு விரோதமாக எப்போதும் கலகம்பண்ணிக்கொண்டிருக்கக்கூடாது.  


மனுஷன் தன் பாவத்திற்கு மனந்திரும்பவேண்டும் என்பது கர்த்தருடைய விருப்பம்.  இதற்காகவே  கர்த்தருடைய ஆவியானவர் மனுஷனோடு போராடுகிறார்.  கர்த்தர் மனுஷனோடு போராடினாலும்,  அவர்  எப்போதும் போராடிக்கொண்டிருக்கமாட்டார்.  


""எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு'' (ஓசி 4:17).


கர்த்தருடைய ஆவியானவர்  மனுஷனோடே  என்றைக்கும் போராடாமல் இருப்பதற்கு ஒரு காரணமுள்ளது.  மனுஷன்  மாம்சமாயிருக்கிறான்.  இதுவே கர்த்தர் சொல்லும் காரணம். கர்த்தர் ஆவியாயிருக்கிறார்.  மனுஷன்  மாம்சமாயிருக்கிறான். அவனிடத்தில் மாம்ச சுபாவம் இருக்கிறது.


மனுஷனுடைய மாம்சசுபாவம்,  கர்த்தருடைய ஆவிக்குரிய சுபாவத்திற்கு விரோதமாக எதிர்த்து நிற்கிறது.  மனுஷனுக்குள் ஆவிக்குரிய போராட்டம் நடைபெற்றாலும்,  மனுஷன்  தன்னுடைய மாம்சத்தின் இச்சைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான்.  கர்த்தர்  கொடுக்கிற கிருபையின் காலத்தை மனுஷன் அசட்டைபண்ணுகிறான்.  அவன்  நித்திய காலத்திற்கும் உயிரோடிருக்கப் போகிறவனல்ல. மனுஷனுக்கு மரணம் நியமிக்கப்பட்டிருக்கிறது.  மனுஷன் மரித்த பின்பு, அவன் தன் பாவத்திற்கு  மனந்திரும்புவது என்பது இயலாத காரியம்.  


மனுஷன் உயிரோடிருக்கும் வரையிலும், கர்த்தருடைய ஆவியானவர் அவனோடு போராடுவார். மனுஷன் உயிரோடிருக்கும்போதே தன்னுடைய பாவத்திற்கு மனந்திரும்பவேண்டும் என்று  கர்த்தர் எதிர்பார்க்கிறார்.  மனுஷன்  மரித்த பின்பு, அவன் மனந்திரும்புவதற்கு வாய்ப்பில்லை. மனுஷன் மரிக்கும்போது, அவனுக்குள் ஆவியானவரின் போராட்டமும் முடிவு பெறுகிறது.


மனுஷன் நித்தியமானவனல்ல.  கர்த்தர் மனுஷனைப்பற்றிச் சொல்லும்போது,  ""அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள்  நூற்றிருபது வருஷம்'' என்று சொல்லுகிறார்.  மனுஷன் உயிரோடிருக்கும் நாளெல்லாம்,  கர்த்தருடைய ஆவியானவர்  அவனோடு போராடுகிறார். இது கர்த்தருடைய சுத்த கிருபை.  அவர் நீடியபொறுமையுள்ளவர்.  ஆனாலும்  கர்த்தருடைய பொறுமைக்கும்  ஒரு முடிவு உண்டு.  அதற்கும்  ஒரு எல்லை உண்டு.  கர்த்தர் பொறுமையாயிருக்கும் காலத்தை மனுஷன் அசட்டை பண்ணிவிடக்கூடாது.  


மனுஷனுடைய பாவத்தை  அவனுக்கு உணர்த்துவதற்காக,  கர்த்தர் பல சமயங்களில் அவனைத் தண்டிக்கிறார்.  ஒரு சிலர் எவ்வளவுதான் தண்டிக்கப்பட்டாலும்,  தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பாதிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்துகிறார்கள்.  தண்டனைகள்  ஒருபோதும் பாவமன்னிப்பு ஆகாது. 


""என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை'' என்னும் இந்த வாக்கியத்தில் மனுஷன் என்பதற்கான எபிரெய வார்த்தை ஆதாம் என்பதாகும்.  இந்த வார்த்தை சுட்டுச்சொல்லோடு  பயன்படுத்தப்பட்டிருப்பதினால் இது ஆதாம் என்ற மனுஷனைக் குறிக்கும். ஆதாம் மாம்சமாக இருக்கிறார். எல்லா மனுஷருமே மாம்சமாக இருக்கிறார்கள். 


ஆயினும் இந்த வாக்கியம் ஆதாம் இருக்கப்போகிற நாட்கள் 120 வருஷம்  என்று பொருள்படுகிறது (ஆதி 6:3).     ஆதாம் மனந்திரும்புவதற்கு தேவன் 120 வருஷத்தை அவருக்குக் கூட்டிக் கொடுத்திருக்கிறார். தன்னைச் சிருஷ்டித்த சிருஷ்டிகருடைய சித்தத்திற்கு அவர் இந்த 120 வருஷத்திற்குள் தன்னைக் கீழ்ப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தக் காலத்திற்குள் ஆதாம் மனந்திருந்தி தேவனோடு ஒப்புரவானாரா? என்பது தெரியவில்லை.   



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.