ஆதியாகமம் 5:25-32 விளக்கம்

 


ஆதியாகமம் 5:25-32 விளக்கம்

    மெத்தூசலா  ஆதி 5:25-27


    ஆதி 5:25. மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றான். 


    ஆதி 5:26. மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 


    ஆதி 5:27. மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான்.


    முற்பிதாக்களில் மெத்தூசலா மிகவும் முக்கியமானவர். இவரே மற்ற முற்பிதாக்களைவிட  அதிகமான வருஷங்களுக்கு உயிரோடிருந்தவர்.  மெத்தூசலா தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்  உயிரோடிருந்தார். ஆனாலும்  அவர்  மற்ற முற்பிதாக்களைப்போல மரித்தார்.  மெத்தூசலா தன் தகப்பனார் ஏனோக்கைப்போல  தேவனால் எடுத்துக்கொள்ளப்படவில்லை.   


    எல்லோருக்கும் மரணம் நியமிக்கப்பட்டிருக்கிறது.  மரணம் சிலருக்கு  சீக்கிரத்திலும், வேறு சிலருக்கு  மெதுவாகவும் வருகிறது. மரணம்  மனுஷருக்கு சீக்கிரத்தில் வந்தாலும் அல்லது மெதுவாக வந்தாலும், அது நிச்சயமாகவே வரும்.


    மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம். அவர் பூமியில் நீண்ட காலம் உயிரோடு இருந்திருக்கிறார். இவருடைய தகப்பனாகிய ஏனோக்கு பரலோகத்தில் இன்னும்  உயிரோடு இருக்கிறார். இரண்டு சாட்சிகளில் ஒருவராக இனிமேல் வரப்போகிற காலத்தில் இவருடைய தகப்பனாகிய ஏனோக்கு மரிப்பார். (வெளி 11:3-11) மனுஷர் பாவம் செய்யவில்லை என்றால், மனுஷருக்கு மரணம் இல்லை. அவர்கள் நித்திய காலமாக ஜீவிப்பார்கள். மனுக்குலத்திற்கு வந்த பாவத்தின் நிமித்தம் மனுஷர் அனைவரும் மரிக்க வேண்டுமென்று தேவன் நியமித்து விட்டார். புதிய பூமியில் தேவனுடைய பிள்ளைகள் எல்லோரும் நித்திய காலமாக ஜீவிப்பார்கள். (வெளி 21-22)


    நோவா  ஆதி 5:28-32


    ஆதி 5:28. லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று, 


    ஆதி 5:29. கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்-, அவனுக்கு நோவா என்று பேரிட்டான். 


    ஆதி 5:30. லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.


    ஆதி 5:31. லாமேக்குடைய நாளெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு வருஷம் அவன் மரித்தான். 


    ஆதி 5:32. நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான். 


    இந்த வசனப்பகுதியில் நோவாவைப்பற்றி  முதன்முறையாக சொல்லப்பட்டிருக்கிறது. நோவா என்னும் பெயருக்கு ஆறுதல் அல்லது தேறுதல்  அல்லது ஓய்வு என்று பொருள். நோவா  லாமேக்கின் குமாரன். லாமேக்கு  மெத்தூசலாவின் குமாரன்.  


    நோவா தங்களைத் தேற்றுவார் என்று நினைத்து லாமேக்கு  தன் குமாரனுக்கு  நோவா என்று பேரிட்டார்.  லாமேக்கின் காலத்தில் பூமி சபிக்கப்பட்டிருக்கிறது.  மனுஷருடைய கைகளின் பிரயாசம்  மிகவும் அதிகமாயிருக்கிறது. ஆனால் அதன் பலன் குறைவாய் கிடைக்கிறது.  ஜனங்களுக்கு ஆறுதலோ,  தேறுதலோ இல்லை.  நோவாவின்  மூலமாக  தங்களுக்கு ஆறுதல் வரும் என்று லாமேக்கு எதிர்பார்க்கிறார்.


    நோவா ஐநூறு வயதானபோது சேம், காம், யாப்பேத்  என்பவர்களைப் பெறுகிறார்.  இவர்களில் யாபேத்தே மூத்த குமாரன்    (ஆதி 10:21). ஆனால் நோவாவின் குமாரரைப்பற்றி  சொல்லப்படும்போது, இங்கு சேமின் பெயர்  முதலாவதாக சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தர்  சேமோடு உடன்படிக்கை பண்ணுகிறார்.   கர்த்தரைப்பற்றிச் சொல்லப்படும்போது,  அவர்  ""சேமுடைய  தேவனாகிய கர்த்தர்'' என்று சொல்லப்படுகிறார். 


    ""சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான்'' (ஆதி 9:26). 


    நோவா ஐந்நூறு வயதான போது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றார். நோவாவின் வயது மொத்தமாகக் கூட்டி கணக்கிடப்படுகிறது. நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றார். ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது நோவா அறுநூறு வயதாயிருந்தார். (ஆதி 7:6) ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது அர்பக்சாத்தைப் பெற்றார். (ஆதி 11:10). இவ்வாறாக மனுஷருடைய வயது ஐந்நூறு, அறுநூறு, நூறு என்று பொதுவாகக் கூறப்பட்டிருக்கிறது.


    யாப்பேத் நோவாவின் மூத்த குமாரனாகயிருந்தாலும்,  புத்திர சுவீகார  ஆசீர்வாதம்  சேமுக்கு கொடுக்கப்படுகிறது.  சேமின் சந்ததியில்  கிறிஸ்துவானவர் வருகிறார். சேம் என்னும் பெயருக்கு  ""நாமம்'' அல்லது ""பெயர்'' என்று பொருள்.  சேமின் சந்ததியாரிடத்தில் தேவனுடைய நாமம்  தங்கியிருக்கும்.  அவர்கள் தேவனுடைய பெயர் பிரஸ்தாபத்திற்கு  சாட்சியாயிருப்பார்கள்.


    சேமின் சந்ததியில், எல்லா நாமங்களுக்கும் மேலான  நாமத்தை உடைய,  கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்தப்  பூமியிலே அவதரித்தார். ஆகையினால் இந்த வசனத்தில், நோவாவின் குமாரரைப்பற்றிச் சொல்லும்போது, ""சேம், காம், யாப்பேத்'' என்று சேமின் பெயர் முதலாவதாக சொல்லப்பட்டிருக்கிறது.  

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.