ஆதி 5:21-24 Bible study
ஏனோக்கு
ஆதி 5:21. ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான்.
ஆதி 5:22. ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதி 5:23. ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.
ஆதி 5:24. ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், காணப்படாமற் போனான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டார்.
ஆதாமின் வம்சவரலாற்றில், ஐந்து முற்பிதாக்களைப்பற்றி இதுவரையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களைப்பற்றி சொல்லுவதற்கு விசேஷமாக ஒன்றுமில்லை. அவர்களுடைய பெயர்களும், அவர்கள் இந்தப் பூமியில் உயிரோடிருந்த வருஷங்களும் வேறுபட்டிருக்கிறது. ஆதாமின் சந்ததியில் வந்த ஏனோக்கு விசேஷமானவர். இவர் ஆதாமிலிருந்து ஏழாவது சந்ததியைச் சேர்ந்தவர்.
ஆதாமின் சந்ததியில் வந்த ஏனோக்கைப்பற்றி இந்த வசனப்பகுதியில் விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு ஏற்கெனவே ஒரு ஏனோக்கைப்பற்றி ஆதி 4:17-ஆவது வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த ஏனோக்கின் பெயரால் ஒரு பட்டணம் கட்டப்பட்டது. இங்கு சொல்லப்பட்டிருக்கிற ஏனோக்கு அவரல்ல. இவர் யாரேத்தின் குமாரன்.
சேத்தின் வம்சவரலாற்றில் நோவாவைப்போல ஏனோக்கும் தேவபக்தியுள்ளவராக இருந்தார். (ஆதி 6:9; ஆதி 7:1). இவர் ஒரு தீர்க்கதரிசி. (யூதா 1:14) விசுவாசத்தினால் எடுத்துக் கொள்ளப்பட்டார். (ரோமர் 10:17; எபி 11:5). ஏனோக்கின் அனுபவம் எலியாவின் அனுபவம்போல் உள்ளது. (2இராஜா 2). இருவருமே மரணத்தைக் காணாமல், தங்கள் சரீரங்களில் வானத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்.
இவ்விருவரும் நியாயத்தீர்ப்புக்களைக் குறித்து தீர்க்கதரிசனம் கூறினார்கள். விக்கிரகாராதனைக்கும், தேவ தூஷணத்திற்கும் எதிர்த்து நின்றார்கள். தாங்கள் எடுத்துக் கொள்ளப்படும் காலமும், நோக்கமும் இவ்விருவருக்கும் தெரிந்திருந்தது (2இராஜா 2; எபி 11:5).
இவர்கள் இருவரும் சக 4:11-14; மல் 4:4-6; வெளி 11:3-11 ஆகிய வசனங்களை நிறைவேற்றுகிறார்கள். பரலோகம் ஒரு பிரத்தியட்சமான இடம். அதில் புசிப்பதற்குப் போஜனமும், வசிப்பதற்கு பட்டணங்களும் இருக்கும். (யாத் 24:11; சங் 78:25; லூக்கா 22:16,18,30; எபி 11:10,13-16; எபி 13:14; யோவான் 6:31; யோவான்14:1-3; வெளி 2:7,17; வெளி 4:4-6; வெளி 5:3-13; வெளி 7:17; வெளி 12:12; வெளி 13:6; வெளி 18:20; வெளி 19:1-10; வெளி 22:2).
பவுலும், யோவானும் வானத்திற்குப் போனார்கள் (2கொரி 12:1-7; வெளி 4:1). உயிர்த்தெழுந்த எல்லாப் பரிசுத்தவான்களும் பரலோகத்திற்குச் சென்று பின்பு இயேசு கிறிஸ்துவோடு பூமிக்கு வந்து அவருடைய ராஜ்ஜியத்தில் கிறிஸ்துவோடு ஆயிரம் வருஷம் அரசாட்சி செய்வார்கள். (1தெச 4:14-17; 1கொரி 15:51-58; வெளி 7:9-17; வெளி 19:1-21).
ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முன்னூறு வருஷம் தேவனேடே சஞ்சரித்தார் (ஆதி 5:22). ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்தார் (ஆதி 5:24) என்று இரண்டு தடவை ஏனோக்கின் பக்தியுள்ள ஜீவியத்தைப்பற்றி இந்த வசனப்பகுதியில் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது.
மெத்தூசலாவைப் பெறுவதற்கு முன்பு ஏனோக்கு தேவனோடு சஞ்சரிக்கவில்லை. மெத்தூசலாவைப் பெற்றபின்பு, ஏனோக்கின் ஜீவியத்தில் ஏதோ ஒரு காரியம் சம்பவித்திருக்கிறது. ஏனோக்கு தேவனிடத்திலிருந்து ஒரு வெளிப்பாட்டைப் பெற்றிருக்கிறார். அதனால்தான் தன் மகனுக்கு மெத்தூசலா என்று பெயரிடுகிறார். இந்தப் பெயருக்கு ""அவன் மரிக்கும்போது அது (ஜலப்பிரளயம்) வருவதாக'' என்று பொருள். துன்மார்க்கரை அழிப்பதற்கு இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்தும், ஏனோக்கு முன்னறிவித்தார் (யூதா 1:14).
பூமியில் ஏனோக்கு வாழ்ந்த காலம் 365 வருஷமாகும். பரலோகத்திலும் ஏனோக்கு ஜீவித்துக் கொண்டிருக்கிறார். வெளி 11 ஆவது அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் இரண்டு சாட்சிகளில் ஒருவராக ஏனோக்கு திரும்பி வந்து தன்னுடைய ஜீவிய காலம் முடிந்து மரித்துப் போவார் (வெளி 11:7).
எல்லோரும் மரிக்க வேண்டுமென்பது மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. (எபி 9:27). ஆதி 5 ஆவது அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் வம்ச வரலாற்றில் ""அவன் மரித்தான்'' என்று எல்லோருக்கும் கூறப்பட்டிருக்கிறது. (ஆதி 5:5,8,11,14,17,20,27,31) ஆனால் ஏனோக்கு மட்டும் ""காணப்படாமற் போனார்; தேவன் அவûர் எடுத்துக்கொண்டார்'' என்று அவரைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது (ஆதி 5:24).
ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்தார் என்னும் வாக்கியத்தில், அவர் தேவன்மீது வைத்திருந்த பக்தியும், அவருடைய ஜீவியத்தின் பரிசுத்தமும் வெளிப்படுகிறது. தேவனோடு சஞ்சரிப்பது பக்தியுள்ள ஜீவியம். தேவபக்தியில்லாதவர்களால் தேவனோடே சஞ்சரிக்க முடியாது. இந்த உலகத்தில் தேவன் இல்லை என்று நாஸ்திகர்கள் சொல்லுகிறார்கள். அப்பேற்பட்டவர்கள் தேவனோடு சஞ்சரிப்பதற்கு வாய்ப்பில்லை.
தேவனோடு சஞ்சரிக்கிறவர்கள் அவரிடத்தில் பக்தியுள்ளவர்களாயிருப்பார்கள். அவர்கள் பயபக்தியோடு கர்த்தருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவார்கள். அவர்கள் தேவனோடு ஒப்புரவாகியிருப்பார்கள். தேவனோடு ஐக்கியமில்லாமல், அவரோடு சஞ்சரிப்பது இயலாத காரியம்.
""இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ?'' (ஆமோ 3:3).
தேவனோடு சஞ்சரிப்பது என்னும் வாக்கியத்திற்கு, தேவனை நமக்கு முன்பாக எப்போதும் நிறுத்தி வைத்திருப்பது என்று பொருள். தேவன் நம்மை எப்போதும் கண்ணோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்னும் உணர்வோடு, தேவனோடு கூட நடந்துபோகிறவர்கள், தேவனோடு சஞ்சரிக்கிறவர்களாயிருப்பார்கள்.
தேவனோடு சஞ்சரிக்கிறவர்கள் அவரோடு ஐக்கியமாயிருப்பார்கள். அவர்கள் தேவனுடைய நியமங்களுக்கு கீழ்ப்படிவார்கள். அவர்கள் தேவனுடைய தெய்வீக பராமரிப்புக்களைப் பெற்றுக்கொண்டு, தேவனுடைய சித்தத்திற்கு கீழ்ப்படிந்து ஜீவிப்பார்கள்.
நாம் தேவனோடு சஞ்சரிக்கும்போது, தேவனுடைய வார்த்தை நமக்கு ஆதரவாயிருக்கும். நம்முடைய பேச்சுக்களிலும், கிரியைகளிலும் தேவனை மகிமைப்படுத்தவேண்டும் என்பதே நம்முடைய பிரதான நோக்கமாயிருக்கும். தேவனுடைய சித்தம் நம்முடைய சித்தமாயிருக்கும். தேவனுடைய திட்டம் நம்முடைய திட்டமாகும். நாம் தேவனோடு சேர்ந்து அவருடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பயபக்தியோடு ஊழியம் செய்வோம்.
தேவனோடு சஞ்சரிக்கிறவர்கள் இந்த உலகத்திற்கும், இந்த உலகத்தின் காரியங்களுக்கும் மரித்தவர்களாயிருப்பார்கள். தேவனோடு சஞ்சரிக்கிறவர்கள் தேவனுக்கு பின்னால் நடந்துபோகிறவர்கள் மாத்திரமல்ல, அவர்கள் தேவனோடு கூட நடந்துபோகிறவர்கள். நாம் பரலோகத்திலிருக்கும்போது தேவனோடு எப்படி சஞ்சரிப்போமோ அப்படியே பூமியிலேயேயும் சஞ்சரிப்பதுதான் தேவனோடு சஞ்சரிப்பது.
தேவனோடு சஞ்சரிக்கிறவர்கள் தேவனுடைய வார்த்தைகளையும், அவரைப்பற்றிய சத்தியங்களையும் மற்றவர்களுக்கு எடுத்து சொல்லுவார்கள். அவர்கள் ஆசாரிய ஊழியம் செய்வார்கள். ஆசாரிய ஊழியம் செய்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நடந்துபோகிறார்கள்.
""ஆகையால் இஸ்ரவே-ன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்-யிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்'' (1சாமு 2:30).
""நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணி, அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன்; அவன் என்னால் அபிஷேகம்பண்ணப்பட்டவனுக்கு முன்பாகச் சகல நாளும் நடந்துகொள்ளுவான்'' (1சாமு 2:35).
""சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம்விசாரிப்பாய்; என் பிராகாரங்களையும் காவல் காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்'' (சக 3:7).
ஏனோக்கு உன்னதமான தேவனுக்கு ஆசாரியராயிருந்தார். அவர் தேவனோடு சஞ்சரித்தார். கர்த்தருக்கு பிரியமானவர்கள் அவரோடு கூட சஞ்சரிப்பார்கள். தேவனோடு சஞ்சரிக்கவேண்டும் என்பதே ஏனோக்கின் விருப்பம். அதுவே அவருடைய ஜீவியத்தின் இலக்கு. தேவனோடு சஞ்சரிப்பது ஏனோக்குக்கு சந்தோஷமாயிருக்கிறது. அது அவருடைய ஜீவனுக்கு ஆதரவாயிருக்கிறது.
ஏனோக்கு தன்னுடைய காலத்தில் ஜீவித்த மற்ற மனுஷர்களைப்போல சாதாரண மனுஷரல்ல. ஏனோக்கு மிகவும் விசேஷித்தவர். மற்ற முற்பிதாக்கள் எல்லோரும் தங்கள் ஜீவியகாலம் முடிந்தபோது மரித்தார்கள். ஏனோக்கோ அவர்களைப்போல மரிக்கவில்லை. தேவன் ஏனோக்கை எடுத்துக்கொண்டார். ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணப்படாமல் போனார்.
எலியாவைப் போல ஏனோக்கும் மரிக்கவில்லை. (2இராஜா 2; எபி 11:5). தேவன் அவரை எடுத்துக்கொண்டார். ஏனோக்கின் வம்ச வரலாறு சுருக்கமாகக் கூறப்பட்டிருந்தாலும் ஒரே வாக்கியத்தில் அவருடைய 365 வருஷ வரலாறு கூறப்பட்டிருக்கிறது. மெத்தூசலா பிறந்த பின்பு சுமார் 300 வருஷங்கள் அவர் தேவனை விசுவாசித்து, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, பரிசுத்தமாக ஜீவித்து, தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.
""விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்'' (எபி 11:5).
கர்த்தருடைய பரிசுத்தவான்கள் மரிக்கும்போது, கர்த்தர் அவர்களை தம்மிடத்தில் எடுத்துக்கொள்கிறார். ஏனோக்கு தேவனிடத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாகவே, அவர் தேவனுக்கு பிரியமானவர் என்று நற்சாட்சி பெற்றிருந்தார். விசுவாசிகளாகிய நாம், இந்தப் பூமியில் ஜீவிக்கிற காலமெல்லாம் தேவனோடு ஐக்கியமாயிருக்கவேண்டும். அவரோடு சஞ்சரிக்கவேண்டும். அதுவே நமக்கு மெய்யான சந்தோஷம்.
