தோமா வழி ஆதி இந்தியக் கிறித்தவம்
அவதார நோக்கம்
அவதாரக் கோட்பாட்டுச் சமயங்கள் அனைத்தும் அவதார
நோக்கத்தைப் பல நிலைகளில் விளக்குகின்றன. அச்சமயங்கள் எல்லாம் ஒரு தலையாய நோக்கத்தை மையமாகக் கொண்டு திகழ்கின்றன. மெய்ப்பொருளியற் கருத்துகள், சமயக் கருத்துகள், தொன்மக் கதைக் கருத்துகள் என்னும் மூன்று நிலைகளிலும் அவதார நோக்கத்தை ஆய்வு செய்யலாம். தொன்மக் கதைகளும் தசாவதாரங்களும் சற்று மாறுபட்ட நோக்கங்களைச் சுட்டினாலும் கூட, ஆழ்ந்து நோக்குமிடத்து அவற்றில் பொதுமை நோக்கும் உள்ளது புலனாகின்றது.
கடவுள், மாந்தனாக அவதரித்தல் என்பதே ஒரு பெரும் நோக்கத்தை நிறைவேற்றப் பொருட்டே. இறைவன் வகுத்த திட்டத்தை இறைவனே நிறைவேற்றுகிறான். 'ஏவுதற் கருத்தா'வாக இறைவன் செயற்படாமல் இயற்றுதற் கருத்தா'வாகச் செயற்படுவதை அவதார நோக்கம் தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
திருமூலரும் அவதார நோக்கமும்
திருமந்திரத்தில் அவதார நோக்கம் பற்றித் திருமூலர் குறிப்பிடும் பாடல் ஈண்டுக் குறிக்கத்தக்கது.
விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே
இப்பாடலில்
அவதாரத்தில் சுட்டப்படுகின்றன. இதில்,
சிறந்த
கூறுபாடுகள்
1. விண்ணின்று இழிதல் (இறங்குகை - Descent)
2. வினை
3. வினைக்கீடாய் மெய்கொள்ளுதல் (இறங்கிவரும் வகை)
- Process of coming down-avatar)
4. தாளைத் தலைக்காவல் முன் வைத்தல்
5. உண்ணின்று உருக்குதல்
6. ஆனந்தக் கண் காட்டுதல்
7. களிம்பறுத்தல்
என்னும் ஏழு படிநிலைகள் கூறப்படுகின்றன.
விண்ணின்று இறங்குதல் - அவதாரம் (Avatar)
மெய்கொள்ளுதல் - ஊனுடம்பெடுத்தல் (Incarnation)
இவை அவதாரம், ஊனுடம்பெடுத்தல் என்னும் இரு நிலைகளையும் விளக்குவனாக அமைந்துள்ளன.
இறைவன் மெய்கொள்ளக் காரணம் என்ன? என்னும் வினாவிற்கு, வினைக்கு ஈடாய் மெய்கொண்டான்' என்பது விடையாய் அமைகிறது.
வினை என்பது ஏது? வினை - நல் வினை, தீவினை என இரண்டாக நூல்களில் குறிக்கப்படினும், ஈண்டு வினை என்பது
ஒரு வரலாற்றுத் தொடர்புடைய சொல்லாக, 'தீவினை' என்னும் பொருளைத் தருகிறது.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
என்னும் குறட்பாவில், இருவினை என்பது நல்வினை, தீவினை என்ற இரண்டையும் குறிக்கவில்லை என்பது தேற்றம். ஏனெனில், 'இருள்சேர் இருவினை' என அடைகொடுத்துத் திருவள்ளுவர் மொழிகிறார். தீவினை இருளிற் சேர்க்கும்; நல்வினையும் இருளிற் சேர்க்குமா? இவ்விருவினை - சகச மலம், கன்ம மலம் என்ற சைவக் கொள்கையைக் குறிக்கிறது என்பர்.
சக - உடன்
ஐ - பிறந்த
மலம் - பாவம்
மாந்தனைப் பிறப்பிலேயே இயல்பாகப் பற்றியிருக்கும் மலம்.
கன்ம மலம் - செயலால் வரும் பாவம்
சகச மலம், கன்ம மலம் - இவை இருவினைகள் எனப்படுவன.
திருமூலர் கூறும் வினை - சகச மலம் எனக் கொள்ளலாம். சகச மலமாகிய பிறவிப் பிணியை ஈடுசெய்ய, வினைக்கீடாய் மெய்கொண்டான் இறைவன் என்பது அவர்தரும் விளக்கம்.
ஈடு என்னும் சொல்லுக்கு உவமை, மருந்து, கடன்கோடற்கு வைத்த அடகு, குழைவு, சரியொத்தது, பெருமை, பதில், வலி என்னும் பொருள்களுள்ளன.
ஊனுடம்பின்வழி மலம் நுழைந்ததால் கடவுளும் ஊனுடம்பினை எடுத்து, அதனை அம்மலத்திற்கு ஈடாகக் கொடுத்து மாந்தவினத்திற்கு ஈடேற்றம் (மீட்பு) தந்துள்ளார் என்பது திருமூலர்வழி அறியப்படும் செய்தியாகும்.
'தாளைத் தலைக்காவல் முன்வைத்து' என்னும் அடியில், 'காவல்' என்னும் சொல், 'காவு' என்னும் வேரடியாகப் பிறந்த சொல்லாகலாம். காவு = பலி, இவ்வாறு கொண்டால், கடவுள் மாந்தவுடலைத் தாங்கி, தன்னையே மீட்புப் பொருளாகக் காவு கொடுத்து, உண்ணின்றுருக்கி 'உலப்பிலா ஆனந்தம்' (நீடு வாழ்வு - Eternal life) காட்டினார் என்னும் பொருள் வெளிப்படும், இதுவே, களிம்பறுத்தலின் வகையும் பயனுமாகும்.
அவதார நோக்கம் பற்றிச் சைவம், கிறித்தவம் கூறும் சில அடிப்படைகள் கீழே தரப்பெறுகின்றன. சைவத்தில் உருவத் திருமேனிகள் பல குறிக்கப்படுகின்றன.
அவற்றுள் மூன்று சிறப்பாகச் சுட்டப்படுவன. அவை:
1. போகி
உமையொரு பாகன்
2.யோகி தென்முகக் கடவுள் (தட்சிணாமூர்த்தி)
3.வேகி
காமாரி
இவற்றில், வேகி என்னும் காமாரி உருவம், வினை ஒழிக்கும் உருவமாகும்.
வேகியாயிருந்து - காமாரி உருவத்தில் (கோர வடிவத்தில்) சினமுடையவனைப் போலிருந்து வினைகளை ஒழித்தல், கோர உருவத்தின் பொருளைச் சரிவர உணர்வதற்காகக் 'கென்றது வினையைக் கொன்றுநின்ற அக்குணம்' என்கிறது சித்தியார் (சுபக்கம் சூத் 1:50).
இறைவனின் சினம் வினையின் மீது செல்கிறது. வினை செய்தவன் மீதன்று என்பது இங்கே சுருதுதற்குரியது. பாவியை வெறுக்காது பாவத்தை வெறுத்தல் என்று பிறிதொரு சமயம் கூறுவதும் நினைவுகூரற்பாலது.
பிறிதொரு சமயம் என்றது கிறித்தவ சமயத்தினை. அவர் கிறித்தவ சமயத்தோடு ஒப்புக் காட்டுவது சிந்தனைக்குரியது.
'கொன்றது வினை' என்றது. மூல மலத்தை. இம்மூல மலமே இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் இருந்த தொடர்பை, உறவை அறுத்துப் பாவமாகிய தீவினையைத் தந்தது. மாந்த வினத்தைச் சாவில் அழுத்திய வினை அது. அத்தீவினை யைக் கொன்று நின்ற அக்குணம்' என்றலால், மூல மலத்தை அழித்து, மூலமலத்தால் விளைந்த தீமையிலிருந்து மீட்டுத் தந்த இறைவனின் பண்பு விளக்கப்படுகிறது. எனவே, தீவினையைக் கொல்லுதலை அவதார நோக்கமாகச் சித்தியார் சுட்டுவது தெளிவு.
கிறித்தவக் கோட்பாட்டின்படி, ஆதாமின் தீவினையைக் கொன்று வென்றவர் கிறித்து. தீவினையைக் கொன்ற இடம் சிலுவை. சிலுவைக் காட்சி கோரவடிவமாக விவிலியத்தில் சித்திரிக்கப்படுகிறது.
தான் நஞ்சினை உண்டு, மக்களுக்கு அமிழ்தத்தை நல்கியவன் இறைவன், அஃதாவது, பாவத்தால் வரும் சாவினைத் தான் ஏற்றுக் கொண்டு மக்களுக்கும் சாவாமையாகிய நீடுவாழ்வை அருளியவன். இறைவன் உலகில் அவதரித்தமை இதற்குத்தான். அதியமானைப் புகழ்ந்துபாடும் ஔவையார். இந்நிகழ்ச்சியினை உவமை காட்டிப் பாடுகிறார்.
"நீல மணிமிடற் றொருவன் போல மன்னுக பெரும நீயோ….
இக்கதை இயேசு கிறித்துவுக்கும் பொருந்தி வருதல் காண்க. சிவன் நஞ்சை உண்டது சாவைக் குறிக்கிறது. ஆனாலும் அச்சாவினை வெற்றி கொண்டான். நஞ்சு கழுத்தில் ஒரு கறையாக நின்று விடுகிறது. இதனை ஒளவையார், 'நீலமணி மிடற்றன்' எனக் குறிக்கிறார். 'நீலகண்டன்' என்பது வழக்கு. மாந்தனின் பாவ வினை, சிவன் கழுத்தில் கறையையும், கிறித்துவின் உடலில் தழும்புகளையும் உண்டாக்கி விட்டது. ஆயினும் இறைவன் சாவினை வென்று வாகை சூடியதாக அறிகிறோம்.
பிக்ஷாடணர் உருவம் நம் பாவங்களை
ஏற்கும் உருவம் என வ.ஆ. தேவசேனாபதி விளக்குவதையும் ஒப்பு நோக்கலாம். மேலே குறித்த கதைகள், சாவிலிருந்து விடுதலை கொடுத்து, நீடு வாழ்வை (அமிழ்து) அளிப்பதற்காக இறைவன் அவதரித்ததை விளக்குகிறது.
திருக்குறளும் அவதார நோக்கமும்
திருக்குறளிலும் அவதார நோக்கம் தெளிவாக உள்ளது. இறைவன் உலகிற்கு மாந்தனாய் வந்தது ஒழுக்கத்தைக் காட்டி, நல்வழிப்படுத்தி, நீடு வாழ்வினை நல்கிட என அக்குறட்பா விளக்குகிறது.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்
இறைவன் காட்டிய நெறி 'பொய்தீர் ஒழுக்க நெறி; பிறவெல்லாம் பொய்சார் ஒழுக்க நெறி என்பது பெறப்படும். பொய்தீர் ஒழுக்க நெறி, நீடு வாழ்வைத் தரும்.
'நீத்தார் பெருமை' என்னும் அதிகாரத்துள், 'ஒழுக்கத்து நீத்தார்'. 'துறந்தார்'. 'இருமை வகை தெரிந்து ஈண்டு அறம்பூண்டார்' போன்ற தொடர்கள் அவதார நோக்கத்தை உணர்த்துவன. ‘நீத்தார்', 'துறந்தார்' என்பன 'விண்ணுலகை நீத்தவர்' எனப் பொருள்படுதலின் 'இறங்கி வருதல்' (அவதார்) என்னும் கருத்தையும் உணர்த்துகின்றது.
திருவள்ளுவர், 'கடவுள் வாழ்த்து', 'நீத்தார் பெருமை' ஆகிய அதிகாரங்களில் 'ஐந்தவித்தான்' எனக் குறிப்பிடும் ஒருவர் அவதாரமாக வந்த கடவுள் என்றும் அவர் வந்ததன் நோக்கம் ஒழுக்க நெறியைக் காட்ட என்றும் அறிஞர் ஒருவர் கீழ்க்காணுமாறு தம் நூலுள் கூறுகிறார்.
"இறைவன் பூமிக்கு வருவது மாத்திரமன்று; எது நல்வழி என்று அறிந்து கொள்ள முடியாது திகைக்கும் மக்களுக்கு, அவர்கள் நடக்க வேண்டிய நல்வழியை அவன் காட்ட வேண்டும். மனிதரின் உள்ளத்தில் உணர்ச்சி மாத்திரையாய் மட்டும் விளங்கிநின்று இறைவன் மனிதருக்கு ஒழுக்க நெறியைக் காட்ட முடியாது. ஆகவே, இவற்றை விளக்க அவன் காட்சி மாத்திரையாய் அருவத்திலிருந்து உலகில் மனித உருவமானான் எனவும் வள்ளுவர் தன் நூலில் இனி விரித்துரைக்கப் போகும் ஒழுக்க நெறி, சாதாரண ஒழுக்க நெறி அன்று; ஐந்தவித்தானாகிய இறைவன் காட்டிய பொய்தீர் ஒழுக்க நெறி" எனவும் கூறுகிறார்.
திருவள்ளுவர், கடவுள் வாழ்த்தில் 'ஆதி பகவன்', 'வாலறிவன்', 'மலர்மினசயேகினான்', 'ஐந்தவித்தான்', 'தனக்குவமை இல்லாதான்'. 'அறவாழி
அந்தணன்'. 'என் குணத்தான்' என ஆண்பாற் பெயர்களால் கடவுளைச் சுட்டுகிறார்.
நீத்தார் பெருமையில் - 'நீத்தார்', 'துறந்தார்' 'அறம் பூண்டார்', 'ஐந்தும் காப்பான்', 'ஐந்தவித்தான்', 'ஐந்தின் வகை. தெரிவான்', 'நிறைமொழி மாந்தர்', 'குணமென்னும் குன்றேறி நின்றார்', 'அந்தணர்' எனப் பத்துப் பெயர்களால் அவதாரத்தைச் சுட்டுகிறார். இவற்றுள் மூன்று ஆண்பாற் பெயர்கள். எனவே, திருவள்ளுவர் அவதாரமாக வந்த கடவுளை ஆண்பாலராகக் குறிப்பிடுவது தேற்றம். பாகவதர்கள் அவதாரம் பற்றிக் கொண்டுள்ள கருத்தை இங்கு ஒப்பு நோக்குவது தகும்.
"பகவானின் முதல் அவதாரம் 'புருஷன்' என்னும் வடிவமாகவும், பிரபஞ்சத்தின் உயிராகவும், உலகம் யாவற்றிலும் உள் அமைந்த ஆன்மாவாகவும் தோன்றிய தாகும். இப்புருஷ அவதாரம் என்பது நாராணயன் எனக் கருதப்படுகின்றது".
இந்தியச் சமயங்களில் அவதாரமாகச் சொல்லப்படுவன எல்லாம் ஆண் தெய்வங்களே. தொன்மக் கதைகளில்தான் இராதை. இலக்குமி போன்றோர் குறிக்கப்படுகின்றனர். எனினும், பெண் தெய்வங்கள்கூட ஆண் தெய்வங்களுக்கு மனைவியராகவும் அவர்கட்கு உட்பட்டவர்களாகவுமே சித்திரிக்கப்படுகின்றனர்.
அவதாரமாகக் சைவக் கொண்முடிபு காட்டும் அவதார நோக்கம்
சைவ சிததாந்தங்கள் பதினான்கு நூல்களும் அவதார நோக்கத்தை மிக ஆழ்ந்த கருத்துடன் விளக்குகின்றன.
"முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
தத்தி பழுத்த தருளென்னுங் - கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப் பழம்பழுக்கும்
ஏசுக்கொடியெழுங்காண் இன்று"
என்பது திருக்களிற்றுப்படியார் செய்யுள். இதில் முத்தி முதற்கொடியில் மோகக் கொடி படர்ந்தது; அம்மோகக் கொடியை அறுக்க ஏகக்கொடி எழுந்தது எனக் குறிக்கப்பட்டுள்ளது. முத்தி முதற்கொடி என்றது உலகின் முதல் மாந்தனை; அவன் இறைவனிலிருந்து வெளிப்பட்டவன். மோகக் கொடி என்பது பாவத்தைக் குறித்தது. இதனை அறுத்து, முத்திக் கொடியை வாழ்விக்க வந்த ஏகக்கொடி என்பது மாந்தனாய் வந்த கடவுள்.
விவிலியத்தில், முதலாம் நூலில் (ஆதியாகமம்) குறிக்கப்படும் ஆதாம் - அவன் பாவத்தில் வீழ்ந்து முத்தி நிலையை இழந்தது; இழந்த முத்தியை மீட்கக் கடவுள் இயேசுவாகப் பிறந்து, சிலுவையில் தன்னைப் பலியாகக் கொடுத்து, இழந்த நிலையை மீட்டுக் கொடுத்த கிறித்தவ
நம்பிக்கையை விளக்குவதாக இச்செய்யுள் அமைந்துள்ளது. மிகவும் தூய நிலையில் தோன்றிய ஆன்மாவைச் 'சகச மலம்' பற்றி-மலத்திற்குள் ஆழ்த்திய செய்தியைச் சிவஞான போத முதற் சூத்திரம் விளக்குவதாகச் சுட்டிக் காட்டுவர்.
‘அவனவ ளதுவெனு மவைமூ வினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கிமலத் துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்"
என்பது அச்சூத்திரம். 'ஆணைப் படைத்தல், பெண்ணைப் படைத்தல், உலகைப் படைத்தல் ஆகிய மூன்று வெவ்வேறு செயல்களினால் இறைவன் படைத்தார்.
"சைவக்கொண்முடியின் படி பதி, பசு, பாசம் இம்மூன்றும் அநாதியானவை. படைக்கப்படாதவை. சிவஞான போதத்திற்கு விவிலிய விளக்கமாக, படைப்புப் பற்றிக் கூறியிருத்தல் பொருந்துமா? கடவுள் உலகைத் தன்னிலிருந்தே வெளிப்படுத்துகிறார் (ஆதியாகமம் 1:1-31). இறைவன் அநாதியானவன்; ஆகவே, அவனிலிருந்து வெளிப்பட்ட உலகமும் அநாதியானது. அதிலிருந்த மண்ணிலிருந்து எடுத்த உருவத்தில் தன் உயிர்மூச்சை இறைவன் ஊதியதால், ஆதாம் உயிர் பெற்று முதல் மாந்தனானான் (ஆதியாகமம் 2:7). எனவே, உலக வழக்கில் 'படைப்பு' என நாம் கூறி வந்தாலும், உண்மையில் அஃது அநாதியானதே என்பர்."
ஆகவே, உலகில் முதல் மாந்தன் வழியாய் உலகில் நுழைந்த பாவ வினையை அழிப்பதற்காக இறைவன் உலகில் குருவாய் வந்தார் என அவதார நோக்கம் பற்றிச் சைவம் விளக்குகிறது.
குருவடிவம்
அருளுருவையும் குரு வடிவையும் ஒன்றெனக் கூறுவது சைவம். குரு வடிவாக இறைவன் வந்ததன் நோக்கத்தைச் சிவஞான போதகம் விளக்குகிறது.
"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந் தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு அன்னிய மின்மையின் அரன்கழல் செலுமே”
ஐம்புலன்களாகிய வேடர்களிடத்தே அகப்பட்ட ஆன்மா தன்னையும் இறைவனையும் அறியாமல் மயங்கிக் கிடக்கிற. சகசமல மறைப்பிணல் ஏற்பட்ட அவ்வறியாமையை நீக்குவதற்கு இறைவன் குருவாக வந்து தவத்தினில் உணர்த்தினாள் என்ற விளக்கம் இச்சூத்திரத்தில் உள்ளது.
இதன் விளக்கத்தை அருள்நந்தி சிவாசாரியார், சிவஞான சித்தியாரில் தெளிவுபடுத்தும் வகையில்,
"மன்னவன்தன் மகன்வேடர் இடத்தே தங்கி வளர்ந்தனை யறியாது மயங்கி நிற்பப் பின்னவனும் என்மகள்நீ யென்றவரிற் பிரித்துப் பெருமையெடுத் தானாக்கிப் பேணு மாப்போல் துன்னியஐம் புலவேடர் சுழறிற் பட்டுத் துணைவனையும் அறியாது துயருறுந்தொல்லுயிரை மன்னும் அருட் குருவாகி வந்த வரின் நீக்கி மலம் அகற்றித் தானாக்கி மலரடிக்கீழ் வைப்பன்"
என்னும் பாடலமைந்துள்ள. அரசாட்சிக்குரிய இளவரசன், வேடர் குலத்தில் வளர்ந்து வருகிறான்; தன்னையும் வேடர் குலத்தவனாக அவன் கருதுகின்றாளேயல்லாமல் இளவரசனாகக் கருதிலன். அவனை வேடர் குடியினின்றும் மீட்டுக் கொணர்வதற்காகத் தந்தை (இறைவன்), ஒரு வேடனைப் போலப் புனைந்து, அவன் இருப்பிடம் சென்று, அவனுக்கு உண்மை நிலை உணர்த்தி, மீட்டு வருவது போல, ஐம்புல வேடரிடம் அகப்பட்டுத் தன்னையும் அறியாமல், இறைவனையும் அறியாமல் இடர்ப்படும் மாந்தனை மீட்பதற்கு ஒரு சாதாரண மாந்தளைப் போன்ற உருவில் இறைவன் வந்து மீட்டுத் தன் மலரடிகளின்கீழ் அமர்த்துவான் என்பது பாடற்கருத்து. கடவுள், மாந்த உருவில் வந்தது. மக்கள் மேல் வைத்த அருளின் வெளிப்பாடாக விளங்குவதைச் 'சித்தாந்தம்' விளக்குகிறது. இதனாற்றான், குருவடிவை அருள் வடிவென அது விளக்குகிறது.
"...ஐம்புலன்களுக்கும் அவற்றின் இச்சைகளுக்கும் இழிவுணர்ச்சிகளுக்கும்
அடிமையாய் விட்ட ஆன்மாவுக்குத் தெய்வீகத்தை, அருளின் செயலை உணர்த்த வேண்டும். இறை இயல்பில் இருந்து கொண்டே இங்ஙனம் உணர்த்த இயலுமா எனின்'இயலும். அவனது அளவில்லா வல்லமையால் ஆகாதது ஒன்றுமில்லை. ஆனால் இங்ஙனம் புலன்களுக்கு அடிமையாகிக் கிடக்கும் நிலையில் இறைவனது அருட்செயலை மனிதன் புரிந்து கொள்வானா? என்றால், இல்லையென இறைவன் கருதியதாகவே விவிலியம் கூறுகிறது.
வேடர்கள் கையில் அகப்பட்டுக் கொண்ட அரசமகனை மீட்க அரசன். வேடனின் வேடம் தரித்துச் செல்வது போலவே, பாவ மனிதனை மீட்கப் பாவமனிதனின் உருவெடுத்து உலகுக்கு வரலானார்"
என்ற விவிலிய விளக்கம் நோக்கற்பாலது.
போற்றிப் பஃறொடை என்னும் நூலில்,
"...கள்ளவினை
வென்று பிறப்பறுக்கச் சாத்திய வீரக்கழலும்
ஒன்றும் உருத்தோன்றாமல் உள்ளடக்கி - என்றும் இறவாத இன்பத் தெமை இருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்து"
என்ற அடிகளில் அவதார நோக்கம் குறிக்கப்படுகிறது. 'கள்ளவினை' என்பது சகசமலம். கிறித்தவம் இதனைக் கருமாசு அல்லது ஆதிப்பழி (Original sin) எனக் குறிக்கிறது. 'ஜென்ம பாவம்’ என்றும் இதனைச் சுட்டுவர். ஆதாமிடம் பாவம் புகுந்தது கள்ளவி னையின் பாற்பட்டது. ஏவாளிடம், சாத்தான் பொய்கூறிக் கள்ளத் தனமாக ஏமாற்றியதன் விளைவே சாவு. சாவினை வெல்வதற்கே இயேசு பிறக்க வேண்டியதாயிற்று என்பது கிறித்தவம். 'இறவா இன்பம்' என்பது அழியா இன்பம். திருவள்ளுவர் 'நீடு வாழ்வு’ என்று இதனைச் சுட்டுகிறார். வீடு பேற்றின்பத்தைத் தருவதற்கே அவதாரம் தேவையாயிற்று என்பது சைவம்.
இத்துணைச் சிறப்புடைய அவதாரத்தை,
"நந்தம், கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே"
என்று சிவஞான சித்தியார் குறிக்கிறது. 'கருமேனி' என்பது பாவமேனி; இதனை நீக்க வந்த வடிவமே கருணையின் வடிவு (அருளுரு) என்கிறார்.
'கரையேற்றம்' என்பது சைவர் குறிப்பிடும் மீட்புச் செய்தியாகும். சகலரை மீட்க இறைவன் குருவடிவாக வருகிறார். அவன் வெளிப்படுகின்ற மிகவும் உயர்ந்த வடிவங்களுள் ஒன்றாவது குருவடிவமாவதாகும். அதன் பணியாவது சம்சாரக் கடலில் துயருறுகின்ற உயிரைக் கரையேற்றுவதே*
என அறிஞர் குறிப்பதால் இது விளங்கும்.
குரு வடிவம், உபதேசம் செய்யும் வடிவமாகச் சைவத்தில் குறிக்கப்படுகிறது. குருந்த மரத்தடியிலிருந்து உபதேசித்து
மாணிக்கவாசகரை ஆட்கொண்ட இவ்வடிவம் மிகவும் சிறப்பித்துப் பேசப்படுகிறது. இவ்வாறே கிறித்தவ சமயத்தில் இயேசு கிறித்துவும் போதிக்கிறவராகக் காட்டப்படுகிறார். போதகர் என்பதும் குரு என்பதும் ஒரே பொருளன. இயேசுவுக்குப் பன்னிருவர் மாணாக்கராகத் திகழ்ந்தனர். இயேசுவின் உபதேச மொழிகளே கிறித்தவ சமயத்தின் உயிர்நாடி. இவற்றைப் புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு நற்செய்தி நூல்களிலும் காணலாம். இயேசுவின் மாணாக்கர், அவரைப் 'போதகரே' என்றும் 'ரபீ என்றும் விளித்தமையை நற்செய்தி நூல்கள் காட்டுகின்றன.
இவ்வாறே. வைணவத்தில் பகவத்கீதையை அருளிய கண்ணன் உபதேசம் செய்பவராகக் காட்டப்படுகிறார். கண்ணன், அர்ச்சனனுக்குக் கூறிய உபதேச மொழிகளே 'பகவத் கீதை' எனப் போற்றப்படுகிறது.
சைவம் குறிப்பிடும் 'சின் முத்திரை' சரணாகதியையும், ஆன்ம ஈடேற்றத்தையும் விளக்குகின்றன. பதி, பசு, பாசம் என்னும் முப்பொருளுள், பசு (ஆன்மா), 'சார்ந்ததன் வண்ணமாகும் இயல்பினது. பதியை அது சாரும் போது பதியின் இயல்பையும், பாசத்தைச் சாரும் போது பாசத்தின் இயல்பையும் பெறுகிறது. செம்பினில் களிம்பு எவ்வாறு இயல்பாகச் சேருகிறதோ அவ்வாறு ஆன்மாவை மலம் இயல்பாகப் பற்றுகிறது. களிம்பினை நீக்க, செம்பையும் உருக்கிப் பொன்னையும் உருக்கி, உருகிய நிலையில் இரண்டையும் கலந்திடின் புதிய மாழை உருவாகிறது. இனி இதில் களிம்பு சேர்வதில்லை. அதுபோல, புளிப்பு மரத்திலிருந்து கிடைக்கும் புளிப்புக் கனியை மாற்ற, இனிப்பு மரத்தின் கிளையை வெட்டிப் புளிப்பு மரத்தில் ஒட்டும்போது, புளிப்புச்சுவை நீங்கி, இனிப்புக் கனி கிடைக்கிறது. சித்தாந்தம் காட்டும் இவ்விரு உவமைகளும் அவதார
நோக்கத்தை விளக்குவனவே. செம்பு, புளிப்பு மரம் ஆகியனமலத்துட்பட்ட ஆன்மாவையும்; பொன், இனிப்பு மரம் ஆகிய இரண்டும் மலத்தினின்று மீட்கும் இறைவனையும் குறித்துக் காட்டுகின்றன.
வைணவத்தில் அவதார நோக்கம்
சைவக் கொண்முடிபு நூல்கள், மெய்ப்பொருளிய லடிப்படையில் அவதார நோக்கத்தைப் பல படிகளில் விளக்குகின்றன. மாந்த உருவத்தில் இறைவன் அவதாரம் கொள்வதன் நோக்கம், மாந்தனை மீட்பதற்கே என அறிஞர் விளக்குவர்.
'ஆன்மா, இறைவனைக் காண வேண்டும். அடையவேண்டும் என்று கொள்கின்ற ஆர்வமாகிய பசியைவிட, இறைவன் ஆன்மாவை மீட்க வேண்டும் என்று கொள்கின்ற ஆர்வம் ஆகிய பசி, பெரிதாகும். யாவற்றையும் கடந்து விளங்குகின்ற நிலையான பிரமம், பத்தனோடு ஒன்று சேர விரும்பும் ஆவலால், மனித உருவத்தில் அன்பேயாக அவதாரம் கொள்கின்றது"
என்ற விளக்கத்தால் - ஆன்ம மீட்பே - அவதார நோக்கம் என்பது தெளிவாகிறது.
"ஈஸ்வரன் உயிர்களிடத்துக் கொண்டுள்ள பெருங் கருணையினால் உந்தப் பெற்றுப் பிரபஞ்சத்தில் நெருக்கடியான சூழ்நிலை அமைகின்ற பொழுது இறங்கி வந்து மனித உருக்கொண்டு, மனித இனத்தை உய்விக்கிறார். இழந்த ஆன்மாவை மீண்டும் பெறுகின்றார் எனப் பிறிதோரிடத்தில் விளக்கிக் காட்டுகிறார். இதில்,
ஆன்ம மீட்பு என்ற அடிப்படைக் கருத்தோடு, உலகில் துன்பங்களைக் களைதல் என்ற நோக்கத்தையும் விளக்குகிறார். இவ்விளக்கம், திரும்பத் திரும்ப எடுக்கும் அவதாரத்தை உள்ளீடாய்க் கொண்டது. அத்துடன் அவதாரத்திற்கு அடிப்படை அருளே, என்ற கருத்தும் வெளிப்படுகிறது. சைவமும் வைணவமும் இதில் இணைந்து செல்கின்றன.
கடவுள் இவ்வுலகிற்கு வந்து உலக மாந்தரோடு வாழ்ந்து அவர்களுக்கு விண்ணுலகின் உண்மை வழியைத் திறந்து வைக்கிறார். இங்குள்ள ஒவ்வொருவருக்கும் மீட்பினையும் பேறுபெற்ற நிலையையும் தருகிறார்"
என்ற கருத்தும் கூறப் பெறுகிறது. 'உலக மக்களோடு வாழ்தல்' அவர்கட்கு 'விண்ணுலகிற்கு வழிகாட்டல்' என்னும் இருநோக்கங்களுக்காக, அவதாரம் நிகழ்ந்தது என்று இங்கு விளக்கப்படுகிறது.
அதோடு, இறைவனின் தன்மையை அறிந்து கொள்வதற்கும்
அவதாரம் தேவையாயிற்று.
மாந்தன் இறைவனின் இயற்கையை அவருக்குள்ள மெய்ம்மையின்படி உணர்ந்து கொள்ளுவதற்கு அவதாரம் துணைநின்றிருக்க வேண்டும்
என்பதால் இதை அறியலாம்.
சைவத்தில் கூறப்படுதல் போன்று, வைணவத்திலும் இறையருள் கூறப்படுகிறது. அவ்வருளே இறைவனை அவதரிக்க உந்துதல் செய்த சக்தி என்றும், இழந்து கிடக்கும் மாந்தவுலகை
மீட்க வேண்டும் என்பதே இறைவனின் அருளுக்குக் காரணம் என்றும் விளக்குவர்.
"அவதாரத்தை விளக்கும் பெரியோர்கள் நித்திய விபூதியிலுள்ள நித்திய சூரிகளைப் போன்று லீலா விபூதியிலுள்ளவர்க்கும் தன்னை அனுபவிப்பதற்குச் சம்பந்தம் உண்டாயிருக்கவும் அவ்வனுபவத்தைப் பெறாது இம்மக்கள் இழந்து கிடக்கிற படியைக் கண்டு கழிபேர் இரக்கம் கொண்டவனாய் இவர்களைக் கரைமரம் சேர்க்கக் கருதி, வேதம் முதலான சாஸ்திரங்களைக் கொடுத்தல் முதலான பல வழிகளாலும் இவர்களைத் திருத்திப் பார்க்க. இவர்கள் ஒருவழியாலும் திருந்தாமை கண்டு, ஓலைப்புறத்தே செல்லாத இராச்சியத்தை எடுத்துவிட்டுச் செலுத்திக் கொள்ளும் அரசர்களைப் போன்று நாமே சென்று திருத்தக்கடவோம் என்று இமையோர் தலைவனான இறைவன், இராமன், கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தான்" என்பர்.
என்னும் விளக்கத்தால், மாந்தவினத்தோடு கடவுள் கொண்ட 'சம்பந்தத்'தையும் அவ்வினத்திற்கு உய்யும் நெறி காட்டு தலையும் அவதார நோக்கம் காட்டுகிறது. கிறித்தவமும் சைவமும் இச் 'சம்பந்தத்'தையே விளக்கி நிற்கின்றன.
பகவத் கீதை
பகவத் கீதையில் கண்ணன் தன் பிறப்பின் நோக்கத்தைக் கூறும் பகுதி பல அறிஞர்களால் எடுத்தாளப் படுகிறது.
"பாரதச் செல்வா! எந்தெந்தக் காலங்களில் தர்மம் அழிந்து அதர்மம் எழுந்து நிற்குமோ, அப்போது என் பிறப்பு என்னும்
பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சைதன்யர். "இராதை - கண்ணன் (இராதாகிருஷ்ணன்) இணைப்பிள் வழிக் காதலின் சாரத்தைத் துய்ப்பதற்கும் தாமாகப் பொங்கியெழும் காதல் வழி பக்தியைக் கற்பிக்கவும் அவதாரம் தேவையாயிற்று" என்பர்.
பாசுவத புராணம், கண்ணனுக்குப் பதினாறாயிரம் மனைவியர் எனவும் ஒவ்வொருவரும் அவனுக்கு அவ்வாறு ஆன்மாக்களையும் ஒவ்வொரு பெண்மகவையும் ஈன்றெடுத்தனர் எனவும் காட்டுகிறது. இதனை எடுத்துக்காட்டி,
அறத்தை நிலைநாட்டவும் பேய்களை அழிக்கவும் மட்டுமே அவதாரம் நேர்வதில்லை. முதிர்ந்த காதலே (பிரேமை) கடவுளுக்கும் மாந்தனுக்கும் உள்ள தொடர்பு. காதலின் இணைப்பு எங்ஙனம் மாந்த வாழ்வின் மிக உயர்ந்த கருத்தாகத் திகழுகிறதோ அவ்வாறே மாந்தனுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பும் திகழ்கிறது. உணர்ச்சி மிக்க காதலே உயர்வான அடையாளம்; உணர்ச்சி நிரம்பிய வழிபாடே மீட்பிற்குரிய மிகச்சிறந்த வழியாகும் என்று கண்ணன் காட்டுகிறான்.
எனக் குறிப்பிடுவதால், பக்தி நெறியில் அகப்பொருள் சார்ந்த, தலைவன்-தலைவி 'பாவ'த்தில் அமைந்த காதலே உயர்ந்த தெனக் காட்டுதற்கு அவதாரம் தேவையாயிற்றென்பர்.
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில், நம்மாழ்வார் அருளிய திருவிருத்தத்தில்,
"பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும்
அழுக்குடம்பும்
இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை உயிரளிப்பான் எந்நின்ற யோனியு மாய்ப்பிறந் தாய்இமை யோர்தலைவா மெய்ந்நின்று கேட்டரு ளாய்அடி யேன்செய்யும்
விண்ணப்பமே"
எனப் பாடும் பாடல் அவதார நோக்கத்தை விளக்குகிறது. ‘பொல்லா ஒழுக்கும், அழுக்குடம்பும், இனியாம் அடையாமல், வாழ்வளிப்பதற்காக இறைவன் பிறந்தான்' என்ற கருத்து உள்ளதால், 'அழுக்குடம்பு' என்பது, சைவம் குறிப்பிடும் 'சகச மலத்தையும்', கிறித்தவர் குறிப்பிடும் 'கருமாசை'யும் சுட்டுவதாக உள்ளது. சகச மலத்தால் வருவது சாவு - அதனை நீக்கி உயிர் (நீடுவாழ்வு - சாவாமை) அளிக்க இறைவன் அவதரித்தான் என்னும் தத்துவ விளக்கம் கிடைக்கிறது.
இராமாயணம் - மகாபாரதம்
இராமாயணக் கதை உலகறிந்த ஒன்று. வசிட்டன் தேவர்களுக்குத் திருமால் அருளியதைச் சிந்தித்ததாக உள்ள கம்பராமாயணப் பாடல் கீழ்க்காணுமாறு உள்ளது.
"என்றனன் இடருழந் திறைஞ்சி யேத்தலும் மன்றலந் துளாவினான் வருந்தல் வஞ்சகன் தன்றலை யறுத்திடர் தணிபென் தாரணிக் கொன்றுநீர் கேண்மென உரைத்தல் மேயினான்"
இதில், 'வஞ்சகன் தன்தலை யறுத்து இடர் தணிப்பென்' எனத் திருமால் கூறுவதால், இராமாவதாரத்தின் நோக்கம்
தெளிவாகிறது.
இராமாயணக் கதைக்கு, இறையியல்
விளக்கம் கூறுவாருமுளர். இராமன் - கடவுள்; இளவணன் - சீதை - ஆன்மப் பெண். ஆன்மப் பெண்ணை நியாயப்பிரமாணம் கவர்ந்து, சிறைப்படுத்தியதிலிருந்து மீட்பதையே இக்கதை விளக்குகிறது. ஆதாம் என்ற ஆன்மா, சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு, பாவக் கட்டினால் தளைப்பட்டான். அதனை (ஆன்மாமணவாட்டி தலைவி) மீட்பதற்கு இறைவன் (மணவாளன்-தலைவன்) உலகில் வந்து சிலுவையில் போரிட்டு வாகை சூடினான்; பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தை இயேசு நிறைவேற்றித் திருச்சபை யாகிய ஆன்மப் பெண்ணை மீட்டார் எனக் கிறித்தவத்தோடு இணைத்து சிந்திக்கத்தக்கது. விளக்கம் கூறுவது
இது 'மார்ஜார நியாயத்'தை விளக்குகிறது என்பர். பூனை தன் குட்டியைக் கல்வி, ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத் திற்கு எடுத்துச் செல்வது போல் இறைவன் ஆன்மாவைப் பேணுதல் 'மார்ஜர நியாயமாகும்'.
மகாபாரதக் கதையிலும் ஐவரின் மனைவியான பாஞ்சாலியை ஆன்மப் பெண் என்றும், ஐவரை ஐம்புலன்க ளென்றும், ஐம்புல ஆசையால் ஆன்மா இழிவுபட்டது; தன் உடைமைகளை இழந்தது; வெங்கானில் உழன்றது; அதனை மீட்பதற்கு இறைவன் (கண்ணன்) துணை நின்று, ஆக்கமும் ஊக்கமும் அளித்து, கவுரவராகிய தீயவரோடு போரிட்டு வென்று. இழந்த உடைமைகளை மீட்டது போல்வன கதைவடிவில் உருவகமாக அமைந்த வரலாற்று நிகழ்ச்சி என விளக்குவன புதிய சிந்தனைகளாகும்.
‘மார்க்கட் நியாயத்'தை இது விளக்குகிறதென்பர். தாய்க்குரங்கு, தன் குட்டியை எடுத்துச் சென்றாலும் குட்டியும்
தாயைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதனை விளக்குவது மார்க்கட் நியாயம். ஆன்ம ஈடேற்றத்திற்குப் 'பிரபத்தி' யினை மட்டும் நெறியாகக் கொள்ளாமல், ஆன்ம முயற்சியும் தேவைப்படுகிறது என்பவற்றை இவை விளக்குவன.
கிறித்தவத்தில் அவதார நோக்கம்
கிறித்தவத்தில் அவதாரம் பழைய ஏற்பாட்டின் முதலாம் நூலிலேயே தீர்மானம் ஆனதாகக் குறிக்கப்படுகிறது. ஆதாமின் வீழ்ச்சி எப்போது தொடங்கியதோ, அப்போதே கடவுளின் அவதாரமும் திட்டமும் தொடங்கியது என்பர்.
"உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன்
தலையை நசுக்குவார். நீ அவர் குதிங்காலை
நசுக்குவாய் என்றார்".
‘பெண்ணின் வித்து' எனக் குறிக்கப்படுபவர் இயேசு; பழைய ஏற்பாட்டில் பாம்பாக உருவகிக்கப்படுவது சாத்தான். சாத்தானின் தலையைப் பெண்ணின் வித்தானவர் நசுக்குவார் என்பது, இயேசு, தாம் சிலுவையில் சாவை வென்றதன் மூலம் அவதார நோக்கம் நிறைவேறியது என்று கிறித்தவ இறையியலார் குறிப்பிடுவர்.
முதலாம் ஆதாமும் இரண்டாம் ஆதாமும்
முதல் மாந்தன் ஆதாமுக்கும் இயேசு கிறித்துவுக்கும் தொடர்பு காட்டுவர்.
முதலாம் ஆதாம் கடவுளால் உண்டானவன்; தாயிடத்தில் பிறவாதவன்.
இரண்டாம் ஆதாம் என்பவர் இயேசு கிறித்து. அவர் இறைமகன் எனச் சுட்டப்படுகிறார். இயேசு
கன்னிமரியாள் வயிற்றில் பிறந்தவர்;
உலகத் தந்தைக்குப் பிறவாதவர்.
இவ்விருவருக்கும் ஒற்றுமைகள் சிலவும் வேற்றுமைகள் சிலவும் உள்ளன.
மனித உயிர் கொண்ட உடல் உள்ளது போல, தேவ ஆவிக்குரிய உயிர்கொண்ட உடலும் உள்ளது. மறை நூலில் உள்ளபடி முதல் மனிதனாகிய, ஆதாம் மனித
உயிருள்ளவன் ஆனான்.
கடைசி ஆதாமோ உயிர்தரும் ஆவியானவர். முதலில் உண்டானது தேவ ஆவிக்குரிய உயிர் கொண்டதன்று, மனித உயிர் கொண்டது தான்;
தேவ ஆவிக்குரியது பிந்தியதே.
முதல் மனிதன் மண்ணிலிருந்து வந்தான். அவன்
மண்ணைச் சார்ந்தவன். இரண்டாம் மனிதனே
விண்ணிலிருந்து வந்தவர்
எனப் பவுலடிகள் விளக்கிக் காட்டுகிறார். பின்வரும் அட்டவணை அதனைத் தெளிவுப்படுத்தும்.
முதலாம் ஆதாம்
1, கடவுளால் மண்ணிலிருந்து உருவானவன்.
2. ஆதாம் பாவமற்ற நிலையில்
3. உருவாக்கப்பட்டான். 3. தாய் வயிற்றில் பிறவாதவன்.
4. மண்ணிலிருந்து
உருவானவன்.
5. ஆதாம் மூலம் வீழ்ச்சி.
6. ஆதாம் மணமாகிப் பிள்ளை
களைப் பெற்றவன்.
7. மண்ணிலிருந்து வந்ததால் மண்ணுக்குத் திரும்பினான்.
இரண்டாம் (இறுதி) ஆதாம்
1. கடவுளால் பெண் வயிற்றில் உருவானவர்.
2. இயேசுவும் தூய ஆவியால் பாவமற்ற நிலையில் உருவானவர்.
3. தாய் வயிற்றில் பிறந்தவர்.
4. இயேசு மூலம் மீட்சி.
5. இயேசு மணமாகாதவர்.
6. விண்ணிலிருந்து உருவானவர்.
7. விண்ணிலிருந்து விண்ணுக்குத் வந்ததால் திரும்பினார்.
இளங்கோவடிகள், "பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்" எனக் குறிப்பிடுகிறார். 'பெரியோன் என்பது மகாதேவன்' என்று அரும்பத உரையாசிரியர் எழுதுகிறார். இதனை வைத்து, பிறவா யாக்கைப் பெரியவன் சிவனே எனப் பலரும் கூறிவருகின்றனர். "இனிய யாக்கையிற் பிறவாப் பெரியோனெனினுமமையும்; என்றது அரூபி என்றபடி" என அடியார்க்கு நல்லார் விளக்குகிறார். பிறவா யாக்கைப் பெரியோன் என்பது ஆதாமுக்கும் பொருந்தி வருதல் காண்க. தாய் வயிற்றில் பிறவாத யாக்கையுடையவன், உலக இயற்கையிற் போல் பிறவாத யாக்கையினன் எனினும் அமையும்.
சங்கப் பனுவல்களில் 'ஆதன்' எனக் குறிக்கப்படு வதும் விவிலியத்தில் ‘ஆதாம்' எனக் குறிக்கப்படுவதும் பெயரளவில் தொடர்புடையன என அறிஞர் சுட்டுவர்.
கிறித்தவத்தையும் யூத, இசுரவேலர் சமயங்களையும்
தொடர்புபடுத்துபவன் இந்த ஆதாம்.
"பெலேசியசு அகத்தின் என்பார் கருமாசு (ஆதிப்பழி) என்னும் கோட்பாட்டை வகுத்தார். இப்பாவத்தின் மூலம் மாந்தன் நன்மையைத் தெரிந்து கொள்ளும் ஆற்றலை இழந்தான். தீமையைத் தெரிந்துகொள்ள வேண்டுமெனக் கட்டாயப்படுத்தப்படவில்லை. ஆனால், இப்பாவம் கவர்ச்சியானதொரு பாதையை ஏற்படுத்தியதால், அவன் நிச்சயமாகத் தீமையையும் அழிவையும் தேர்வு செய்வான். மாந்த இயல்பின் இப்பிழையை இறைவன் மட்டுமே தன் அருளைத் தாராளமாய்ப் பொழிவதால், அருள் பெற்றவன், தன் சொந்த முயற்சியால் அல்லாமல் அவரால் நிச்சயம் மீட்படைகிறான். அதோடு, அம்மீட்பு உலகத் தோற்ற முதற்கொண்டே நிறைவான இறைவனால் வகுக்கப்பட்டது”
என, ஆதாமின் பாவத்தால் விளைந்த அவதார நோக்கும் மீட்புப் பணியும் அறிஞரால் சுட்டப்படுகின்றன.
கிறித்தவ வழிபாட்டில் இந்நிகழ்ச்சி, பாடல்களில் இடம் பெற்றுக் கிறித்துவின் பிறப்பு வழுத்தப்படுகிறது.
"ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார்.
ஆதந் தன்பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட"
"அன்றதம் செய்தபவம் பொன்று நிமித்தமாக இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே
*ஆதிநார் செய்த தீதறவே "
"ஆதம் பவமற"
"ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி" "காவில் அதம்ஏவை - தேவ - கற்பனை மீறினதால்
உலகில்
மேவிய பாவம்அற-பொல்லா-வெஞ்சினக் கூளியின் வஞ்சமற"
"ஒரு மாதுடை வினை மாறிட நார் ரூபமதானார்”
"ஆதம் ஏவை செய்த பாதகம் தொலைந்திடப்
பூதலம் வந்ததார் மனமே?"
"தீதகற்றவே சிறந்த
சேண் உலகினிமை விட்டு,
பூதலத் துகந்து வந்த
புண்ணியனே, யேசு நாதா"
"ஆதி மனிதருக்கன் றோதியபடி மனுஅவதாரமாய்ப் பிறந்தீர்.
கிறித்தவ நற்செய்தி நூல்களில் இயேசு கிறித்துவே, தாம் உலகில் பிறந்ததன் நோக்கத்தைப் பல சூழ்நிலைகளில் குறிப்பிடுகிறார்.
நான் நீதிச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நீக்கிட வந்தேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நீக்கி விடுவதற்கன்று, நிறைவேற்றவே வந்தேன்.
... நேர்மையானவர்களை யன்று பாவிகளையே அழைக்க வந்தேன்.
சமாதானம் அன்று, வாளையே கொண்டு வந்தேன் மனுமைந்தர் கெட்டழிந்து போனதை மீட்கவே வந்திருக்கிறார்.
மனுமைந்தரும் ஊழியம் கொள்ளும்படி வராமல் ஊழியம் செய்யவும், எல்லாரையும் மீட்டுக் கொள்ளும் பொருட்டுத் தம் உயிரையே மீட்புப் பொருளாகக் கொடுக்கவும் வந்தார்.
நான் மற்ற ஊர்களிலும் கடவுளுடைய அரசின் அருட்செய்தியை அறிவிக்க வேண்டும். இதற்காகவே அனுப்பப்பட்டேன்.
பாவிகளையே மனமாற்றமடையும்படி அழைக்க வந்தேன்.
மனுமைந்தர் மனிதனுடைய உயிரை அழிப்பதற்கு அன்று. அதற்கு மீட்பு அருளுவதற்கே வந்தார்
கடவுள் தம்முடைய ஒரே பேறான மைந்தரிடம் நம்பிக்கை கொள்ளும் எவனும் கெட்டழிந்து போகாதிருந்து என்றுமுள மெய் வாழ்வைப் பெறும்படி அவரைத் தந்தருளினார். இந்த அளவுக்கு அவர் உலகத்தின் மீது அன்புகூர்ந்தார்.
என் சொந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்கன்று. என்னை அனுப்பினவரின் விருப்பத்தை நிறைவேற்று வதற்கே நான் விண்ணுலகிலிருந்து வந்தேன்,
பார்வை இல்லாதவர்கள் பார்க்கும்படியும், பார்வை உள்ளவர்கள் குருடராகும்படியும் தீர்ப்பளிக்கவே நான் இந்த உலகத்துக்கு வந்தேன்.
நானோ அவை என்றுமுள்ள மெய்வாழ்வைப் பெறும் பொருட்டும், அதை முழுநிறைவாகப் பெறும்
பொருட்டும் வந்திருக்கிறேன்.
இதற்காகத்தானே நான் இந்த நேரத்திற்குள்ளாக
வந்திருக்கிறேன்.
என்னிடத்தில் நம்பிக்கை கொள்பவன் எவனும் இருளிலிருந்து என்றும் நீங்கியிருக்க வேண்டுமென்றே நான் ஒளியாய் இவ்வுலகத்திற்கு வந்திருக்கிறேன். உலகத்தை விடுவிப்பதற்காகவே வந்தேன்.
சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கூறவே நான் பிறந்தேன். அதற்காகவே இந்த உலகத்துக்கு வந்தேன்
மேலே குறித்த இயேசுவின் மொழிகள் மூலமாக, ஏறத்தாழ பதினைந்து நோக்கங்களை நிறைவேற்றற் பொருட்டு அவர் இவ்வுலகில் பிறந்ததாகக் கூறுகிறார்.
பவுலடிகள் தம்மடலில், "நீதிச்சட்டத்தால் பாவத்தைப் போக்க ஆற்றலற்றதாயிருந்தது. இந்நிலையில் அதனால் செய்ய இயலாததைக் கடவுள் தாமே செய்தார். எப்படியெனில், அவர் தம் மாந்தரைப் பாவத்துக்கு உட்பட்ட நம் இயல்பு போன்ற இயல்
புடையவராய்ப் பாவத்தைப் பரிகரிக்க அனுப்பி, இந்த இயல்பைக் கொண்டே பாவத்தின் அதிகாரத்திற்கு முடிவுண்டாக்கும் தீர்ப்பை அளித்தார்" என எழுதுகிறார். இதனால், பாவத்தை அழிக்கும் நோக்கம் விளக்கப்படுகிறது.
'மரணத்திற்கு வல்ல பிசாசானவனைத் தம் மரணத்தினால் அழித்து, பாவப் பரிகாரம் செய்வதற்காக இயேசுகிறித்து உலகில் வந்தார்' என எபிரெயருக்கு எழுதப்பட்ட கடிதம் குறிப்பிடுகிறது.
யோவான், தாம் எழுதிய முதல் மடலில் மெய்வாழ்வை உலகோர்க்குத் தரவும், பாவ நீக்கப் பலியாகவும், உலக மீட்பராகவும் இயேசு உலகில் அவதரித்ததாகக் குறித்திருக்கிறார்.
இயேசு ஊனுடம் பெடுத்ததை ஏசாயா (61:1-3) ஆகமம் முன் குறித்திருக்கிறது. அப்பகுதியை இயேசு எடுத்து வாசிக்கையில் திருக்கோவிலுள்ள மக்களிடம், தன்னைக் குறித்து ஏசாயா முன்குறித்த வாக்கு, தற்போது நிறைவேறிவிட்டது எனக் கூறும் பகுதியை லூக்கா, தன் நூலில் குறிப்பிடுகிறார்.
‘ஆண்டவருடைய ஆவி என்மேல் இருக்கிறது; அவர் என்னை அபிடேகம் செய்துள்ளார். எளியவருக்கு அருட்செய்தியை அறிவிக்கவும், 'சிறைப்பட் டோருக்கு விடுதலை! குருடருக்குப் பார்வை! என்று அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டோர் விடுதலை அடையும்படி செய்யவும் 'இதோ! ஆண்டவர் அருள்தரும் ஆண்டு!' என்று அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்"
என்னும் பகுதியில். அவர் பிறப்பின் நோக்கம் ஒட்டுமொத்தமாகக் குறிக்கப்படுகிறது.
'கிறிஸ்துவின் அருள்வேட்டல்' என்னும் நூலில் திரு.வி.க. குறிப்பிடும் கருத்துகள் எளிமையாகவும் ஆழமாகவும் அமைந்து, இயேசுவின் அவதார நோக்கத்தை விளக்குகின்றன.
"மாசு மிகுந்த மனிதஇருள் போக்கவந்த ஏசு உனைமறவேன் என்று
உலகமெலாம் பாவஇருள் உமிழ்ந்துநின்ற வேளை ஒடுக்க அதைக் கன்னிவயிற் றுதித்தபர ஒளியே அன்பினால் உலகை அமைதியில் நிறுவ அவதரித் தருளிய அரசே!"
"உலகெலாம் உய்யவேண்டி உருக்கொடு
மண்ணில் வந்தாய்
நலமிகு உவமை யாலே ஞானச லங்கள் சொற்றாய் கலகமும் கரவுங் கொண்ட கண்ணிலாப் பேயைச்
சாய்த்தாய்
அலகிலா ஒளியே! ஏசு ஐயனே! போற்றி போற்றி"
உலகத்தை உய்விக்கவும், இருளை ஒடுக்கவும், உலகில்
அமைதியை நிறுவவும், தீய பேயை ஒழிக்கவும் இயேசு
இவ்வுலகில் மாந்தனாய் வந்தார் என அவர் விளக்குகிறார். மாந்த
உலகின் மீது கொண்ட அன்பினால் இறைவன் அவதரித்தான் என மற்ற அவதாரக் கோட்பாட்டுச் சமயங்கள் விளக்குவது போன்றே கிறித்தவமும் விளக்குகிறது. திரு.வி.க. இதனை, "அன்பினால் யாக்கை ஏற்ற ஐயனே போற்றி போற்றி" என்று குறிப்பிட்டு, அவ்வன்பு என்பது எது? அன்பின் பரிமாணம் என்ன?
என்பவற்றை விளக்குமுகத்தான், மேற்குறித்த பாடலடியைத் தொடர்ந்து அடுத்த அடியில்,
"மன்பதை பாவந்தீர்க்க மரித்தவர் போற்றி போற்றி”
என எழுதுகிறார். இதனால், தான் தீமையை ஏற்றுக் கொண்டு
உலகிற்கு நீடு வாழ்வாம் நன்மையைத் தருதலே அவதார நோக்கம் என்பது புலனாம். இதனாற்றான் சைவம் இக்கருத்தை வெளிப்படுத்தும் சொல்லாக, 'உய்ய வந்தான்' எனக் குறிப்பிடுகிறது. இயேசு என்னும் பெயருக்கு மீட்பர் என்பது பொருள். “இயேசு - எபிரெய மொழியில் 'யோசுவா' என வழங்கும். கடவுளின் மீட்பு என்று பொருள்படும்". இயேசு என்பதும் 'உய்ய வந்தான்' என்பதும் ஒருபொருளனவாகத் திகழ்கின்றன.
கிறித்தவம் காட்டும் மீட்புப்பணி சிலுவையில் முற்றுப் பெறுகிறதென்பர். கடவுள் மாந்தனாக இவ்வுலகிற்கு வந்து, ஆதாமின் வழி உலகிற் புகுந்த பாவம், சாவு ஆகியவற்றை நீக்கி, உலகை மீட்டார் என்பர்.
தவமும் இருவினை ஒப்பும்
மக்களுக்கு நன்மை செய்வதற்காக இறைவன் துன்பத்தைத் தாமே ஏற்றுக் கொண்டார் என்பதைச் சைவம் 'தவம்' என்னும் சொல்லாற் குறிக்கிறது. 'தன்னுயிர் தானறப் பெறுதல்' - தவம் என்பர்.
"செம்மலர் நோன்றாள் சேரல் ஒட்டா அம்மலம் கழீஇ அன்பரொடு மரீ இ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந் தானும் அரனெனத் தொழுமே''
என்னும் சிவஞான போதச் சூத்திரம், குருவாக வந்த இறைவனின் மீட்புப் பணியைக் குறிக்கிறது. நோன்றாள் - நோன்பு (தவம்) செய்த தாள். இந்நோன்பின் மூலம் மலமே கழுவப்பட்டது. மயக்கம் (மால்) நீக்கப்பட்டது.
மாந்தனின் தீவினை (பாவம்)யும், கடவுளின் நன்மையும் ஒப்பாகும். இடம் சிலுவையில். சைவம் இதனை 'இருவினை ஒப்பு* எனக் குறிக்கிறது.
மாந்தன் செய்யும் தீமையை அவன் செய்யும் நன்மை
ஒப்பாக்குவது இல்லை. பாவம் பாவமாகவும் புண்ணியம்
புண்ணியமாகவுமே வரும் எனச் சங்கற்ப நிராகரணம் கூறுகிறது.
"ஏதிற் கூடும் ஒதுக இருவினை ஒத்த எல்லையில் வைத்தனர் என்னில் அருவினை தூக்க உருவினை நில்லாது ஒருவினை புரிகால் இருவினை ஆகா ஒப்பு மாறு செப்புக."
மாந்தனின் பாவ வினை (தீவினை) இறைவனின் நல்வினையால் மாற்றப்படுவது இருவினை ஒப்பு. இதனால் மலபரிபாகம் நிகழ்கிறது; நிகழவே ஆன்மா, இறைவன் 'பாத'த்தில் இணைந்து திளைத்தின்புறுகிறது. இது 'சத்தினிபாதம்' ஆகும்.
திரு உந்தியாரில்,
கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவர் பிண்டத்தில் வாரார் என்றுந்தீபற பிறப்பிறப்பில்லையென் றுந்தீபற
என்னும் செய்யுளில், 'கண்டம்' என்பது சாவைக் குறிக்கிறது. உலகியல் வழக்கில், 'கண்டம் இருக்கிறது' எனின் உயிருக்குச் சேதம் உளது என்பது பொருள். கருமம் - மீட்புப்பணி. சாவினாலே மீட்புப் பணியை முடித்தவராகிய இறைவன் ஒரே ஒருமுறைதான் 'பிண்டத்தில்' (ஊனுடம்பில்) வந்தார்; இனி அவருக்குப் பிறப்புமில்லை; இறப்புமில்லை.
கிறித்தவமும் இயேசு என்ற ஒரே ஓர் அவதாரத்தை மட்டுமே குறிக்கிறது. இயேசு இறந்ததும் ஒருமுறைதான் எனக் குறிக்கிறது. கிறித்தவ, சைவ, வைணவ மீட்புக் கருத்துகள் இணைந்து செல்வன தெள்ளிதின் புலனாகின்றன.
அவதாரம் - மூன்று சமயங்களின் பொதுமை
கீதையை அடிப்படையாகக் கொண்டு வைணவத்தை விளக்கும்போது,
அவதாரத்தின் செயற்பாடுகள் பலதிறத்தனவாக இருந்தாலும் இருபெரும் செயல்கள் சிறப்பானவை; அவை, அறத்தைத் (தர்மம்) திரும்பவும் மீட்டுக் கொணர்தல், மாந்தவினத்திற்கு விடுதலையளித்தல், அஃதாவது, புதிய ஆன்மீகச் செய்தி, தெய்வீகச் சட்டப்படி புதிய வளர்ச்சி, ஆன்மீக உணர்வு"
என அறிஞர் விளக்குகிறார்.
இழந்த அறத்தைத் திரும்பக் கொணர்தல் என்று வைணவம் குறிப்பிடுவது கிறித்தவத்தில், இழந்துபோன ஏதேனின் இன்பநிலையை மீண்டும் கொணர்தல் என்பதோடும், சைவத்தில் செம்பில் சேரும் களிம்பினை நிலையாக நீக்குவதோடும் ஒன்றிணைந்து செல்கிறது.
"மாந்தனின் வீழ்ச்சி என்பது, பாவத்தின் தொடக்கம் எனலாம். இறைவனுக்கும் மாந்தனுக்கும் இடையில் தோன்றும் பிளவு. "பாவம் என்பது ஸ்ரீவைஷ்ணவத்துள் (விசிட்டாத்துவிதம்) இறைவனிடமிருந்து பிரிதல் ஆகும். உண்மையான பாவநீக்கம் அன்பே வடிவமாகிய இறைவ னோடு ஒன்றுதல் ஆகும்". இந்த வீழ்ச்சியினின்றும் மீட்டுக் கொணர்தல் - சாவினின்று விடுதலை அவதாரத்தின் முதல் நோக்கம். மீட்ட பிறகும் மாந்தன் தன் செயல்களால் தீவினை செய்து தண்டனைக்கு ஆளாக நேரும். அதினின்று விடுதலை பெற இறைவன் வழிகாட்டுதல் - வாழ்ந்து காட்டுதல் இரண்டாம் நோக்கம்.
இதைக் கிறித்தவம், ஆசிரியராக (போதகர் இருந்து இயேசு உலகுக்கு அறங்கூறியது என்றும், சைவம், குருவாசு வந்து ''உபதேசித்தது' என்றும், வைணவம். தேரோட்டியாக வந்து அருச்சனனுக்கு உபதேசித்தது போல உலகுக்கு 'உபதேசித்தது" என்றும் தொடர்புபட விளக்குகின்றன.
இவ்வகையில், இம்மூன்று சமயங்களுமே ஒரே
அடிப்படையில் விளங்குகின்றன. சமயங்களின் பிரிவு 'உபதேச' மொழிகளினடிப்படையில் அல்லாமல், 'உபதேச' மொழிகளை விளக்கியவரின் வேறுபாடுகளே எனவும் தெளிவாகின்றது. இவ்வேறுபாடுகள் பல்வேறு கால நிலைகளில் ஏற்பட்ட புதிய கருத்துகளாலும், புராணங்களாலும், வாழ்க்கை முறை, அரசியல் மாற்றங்களாலும், ஆரியர்களின் புணர்ப்புக் கருத்துகள், வண்ணக் கோட்பாடு (வரணாசிரம தர்மம்) முதலியவற்றாலும் நிகழ்ந்தனவாதல் வேண்டும். 'வீழ்ந்து கிடக்கும் ஆன்மாவை மீட்பதே' அவதார நோக்கமாகும் என இச்சமயங்கள் விளக்குகின்றன. பின்வரும் அட்டவணை இதனைத் தெளிவுபடுத்தும்.

