The parable of the rich man ஐசுவரியமுள்ளவனைப் பற்றிய உவமை

 


The parable of the rich man ஐசுவரியமுள்ளவனைப் பற்றிய உவமை


அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது (லூக் 12:16). 


பொருளாசையைக்குறித்து எச்சரித்துக் கூறும்போது, இந்த சத்தியத்தை விளக்குவதற்காக இயேசுகிறிஸ்து ஒரு உவமையைக் கூறுகிறார். ஐசுவரியமுள்ள ஒருவன் மரித்துப்போகும்போது அவனுடைய ஐசுவரியம் அவனுக்கு பிரயோஜனப்படாது என்பது இந்த உவமையின் மையக் கருத்தாகும். ஐசுவரியம் மிகுந்ததினால் இந்த ஐசுவரியவான்  சந்தோஷமாக வாழ்ந்தானா என்பதை நாமே சிந்தித்துப் பார்க்கவேண்டும். 


இந்த உவமையில் ஐசுவரியமுள்ள ஒருவனுடைய உலகப்பிரகாரமான சம்பத்தும் ஆசீர்வாதமும், திரளான சொத்துக்களும் விவரிக்கப்பட்டிருக்கிறது. இவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. இவனுடைய ஐசுவரியத்திற்கு நிலமே ஆதாரமாக இருக்கிறது.  பூமியின் கனிகளினாலும், தானியத்தினாலும் இவன் ஐசுவரியவானாக இருக்கிறான். இவனுடைய நிலம் நன்றாக விளைந்தபோதும் இவனுக்குத் திருப்தியில்லை. இன்னும் தனக்கு அதிகமாக தேவையென்று எதிர்பார்க்கிறான். 

தனக்குள்ளே சிந்தித்து சொல்லிக்கொண்டது


அப்பொழுது அவன்: நான் என்னசெய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே:  (லூக் 12:17)


இவனுடைய நிலம் நன்றாக விளைந்தபோது, இவன் தனக்குள்ளே சிந்தித்து பேசிக்கொள்ள ஆரம்பிக்கிறான். அவனுடைய இருதயம் அமைதியாக ஓய்ந்திராமல், ஐசுவரியம் சேர்ந்தவுடன் ஆரவாரம் பண்ணுகிறது. ஆகையினால் அவன் தனக்குள்ளே சிந்தித்துப் பேசிக்கொள்கிறான். நம்மை சிருஷ்டித்த தேவன் நம்முடைய சிந்தனைகள் அனைத்தையும் அறிந்திருக்கிறார். அவருக்கு மறைவான காரியம்  எதுவுமில்லை. இந்த உவமையில் குறிப்பிடப்படும் ஐசுவரியவான், தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டாலும், இயேசுகிறிஸ்து அதையும் அறிந்து இங்கு விவரிக்கிறார். 


இவனுடைய நிலம் நன்றாய் விளைந்திருக்கிறது. ஆனால் விளைந்த தானியம் அனைத்தையும் சேர்த்து வைப்பதற்கு இவனுக்கு  போதுமான இடமில்லை. இவனிடத்தில் களஞ்சியம் இருந்தாலும், விளைந்த தானியம் அனைத்தையும் சேர்த்து வைப்பதற்கு அந்தக் களஞ்சியம் போதாது. ஆகையினால் இவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தன்னுடைய நிலம் நன்றாக விளைந்ததற்காக இவன் கர்த்தரை துதிக்க வேண்டும். அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். இன்னும் மிகுதியான நன்மைகளைச் செய்வதற்கு, அதிக விளைச்சலின் மூலமாக, தேவன் தனக்கு நல்ல வாய்ப்பை கொடுத்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்டு, இன்னும் அநேக நன்மைகளைச் செய்ய முன்வரவேண்டும். ஆனால் இவனோ தன் நிலத்தின் விளைச்சல் அனைத்தையும் தானே அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறான். பிறருக்கு உதவிபுரிய இவனுக்கு விருப்பமில்லை. 


தன்னுடைய விளைச்சல் அதிகரித்ததினாலும், அது அனைத்தையும் தானே அனுபவிக்க வேண்டுமென்று பேராசைப்படுவதினாலும் அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ""நான் என்ன செய்வேன், என் தானியங்களை சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே'' என்று கவலைப்படுகிறான். ஏதோ பரிகொடுத்தவன் போல இவன் தனக்குள் பேசிக்கொள்கிறான். ஒன்றுமில்லாத ஏழையைப்போல ""நான் என்ன செய்வேன்'' என்று அங்கலாய்க்கிறான். 


தேசத்தில் புசிப்பதற்குக்கூட ஒன்றுமில்லாமல் பரம ஏழையாக இருக்கிறவர்கள்  அடுத்தவேளை போஜனத்திற்காக கவலைப்படுவார்கள். என்னசெய்வதென்று புலம்புவார்கள். தங்களுக்கு போஜனம் எங்கிருந்து வரும் என்று அங்கலாய்ப்பார்கள். என்னசெய்வதென்று தெரியாமல் புலம்பி தவிப்பார்கள். அதுபோலவே இந்த மனுஷனும் ""நான் என்ன செய்வேன்'' என்று புலம்புகிறான்.  இவன் ஐசுவரியவானாக இருந்தாலும், ஒன்றுமில்லாத ஏழை புலம்புவதைப்போலவே புலம்புகிறான். 


ஐசுவரியம் மிகுதியானதினால் இவன் தன் நித்திரையை இழந்துவிட்டான். இவனால் அமைதியாக சமாதானமாக நித்திரை பண்ணக்கூட முடியவில்லை. தன்னிடத்திலுள்ள திரளான ஆஸ்தியை என்னசெய்வது, எப்படி பாதுகாப்பது என்னும் சிந்தனையினால் இவன் இருதயம் நிறைந்திருக்கிறது. இவனைப்போலவே  இந்த உலகத்திலுள்ள ஏராளமான ஐசுவரியவான்கள் தங்களுடைய திரளான ஐசுவரியத்தை என்னசெய்வதென்று தெரியாமல் புலம்புகிறார்கள். போதுமென்ற மனமிருந்தால் நமக்கு மெய்யான சந்தோஷமும் சமாதானமும் உண்டாகும். இந்த ஐசுவரியவானுக்கு திரளான தானியம் இருக்கிறது. ஆனால் இந்த தானியங்களை சேர்த்து வைக்கிறதற்கு அவனுக்கு இடமில்லை. இதுதான் இவனுடைய பிரச்சனை.

நான் ஒன்று செய்வேன்


நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து,  (லூக் 12:18)


என்னசெய்வதென்று தெரியாமல் புலம்பும் இந்த ஐசுவரியவான், தனக்குத்தானே என்னசெய்வதென்று தீர்மானம் பண்ணுகிறான். தன்னிடத்திலுள்ள களஞ்சியங்களை இடித்துவிட்டு, அவற்றை பெரிதாக கட்டி, தனக்கு விளைந்த தானியத்தையும் தன் பொருட்களையும் அங்கே சேர்த்து வைப்பது என்று சுயதீர்மானம்பண்ணுகிறான். அப்போது  தன்னுடைய பிரச்சனைகள் தீர்ந்துபோகும் என்றும், தன்னுடைய கவலைகள் ஓய்ந்துபோகும் என்றும் இவன் நினைக்கிறான்.


வானமும் பூமியும் தேவனுடையது. இந்த பூமியில் விளைந்த தானியங்கள் அனைத்தும்  தேவனுக்கே உரியது. தேவனுக்கே உரியதான தானியங்களை இவன் ""எனக்கு விளைந்த தானியமென்றும், என் பொருட்கள் என்றும்'' கூறுகிறான். தேவனுக்குரியதை நமக்குரியது என்று சொல்லக்கூடாது. இந்த ஐசுவரிவான் மதியீனமாக சிந்தனை பண்ணுகிறான். நமது நிலத்தில் விளைந்திருக்கும் தானியங்களெல்லாம் தேவன் நமக்கு தமது கிருபையினால் கொடுத்தது  என்னும் சிந்தனை நமக்குள் நிறைந்திருக்க வேண்டும். நம்முடைய பிரயோஜனத்திற்காக தேவன் இந்த பொருட்களையெல்லாம் கிருபையாக நமக்கு கொடுத்திருக்கிறார். இதன் சொந்தக்காரர் தேவனே. தேவனுடைய பொருட்களுக்கு நாம் இந்தப் பூமியில் உக்கிராணக்காரர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறோம்.


நம்மிடத்திலுள்ள ஐசுவரியத்தைக் குறித்து நாம் பெருமைப்படக்கூடாது. தன்னுடைய நிலம் நன்றாய் விளைந்தது என்று இவன் பெருமைப்படுகிறான். தேவன் தனக்கு கிருபையாக கொடுத்த எல்லா தானியங்களையும் தனக்கே வைத்துக்கொள்ள வேண்டுமென்று  பேராசைப்படுகிறான். தேவன் நமக்கு கொடுக்கும் ஆசீர்வாதத்தின் ஒரு பகுதியை ஏழை எளியவர்களுக்குக் கொடுத்து உதவிபுரியவேண்டும். அந்நியர்களையும், திக்கற்றவர்களையும் தாய் தகப்பனற்றவர்களையும், விதவைகளையும் ஆதரிக்க வேண்டும். தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் ஆசீர்வாதம் நமக்கு பிரயோஜனமாகவும், அதே சமயத்தில் தேவையுள்ள பிறருக்கும் பிரயோஜனமாகவும்  அவற்றை பயன்படுத்த வேண்டும். இதற்குப் பதிலாக களஞ்சியங்களை இடித்து, அவற்றை பெரிதாக கட்டி, தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் எல்லா ஆசீர்வாதங்களையும் நாமே அனுபவிக்கவேண்டுமென்று பேராசைப்பட்டு சேமித்து வைப்பது தேவனுடைய சித்தமல்ல. 


தேவன் நமக்குக் கொடுக்கும் உலகப்பிரகாரமான ஆசீர்வாதம் அதிகரிக்கும்போது, நமது சிந்தனையை உலக ஐசுவரியம் ஆளுகை செய்ய அனுமதிக்கக்கூடாது.  ஐசுவரியத்தின் திரட்சிக்கேற்றபடி நமது சிந்தனை மாறிக்கொண்டே போகக்கூடாது. களஞ்சியங்களை இடித்து பெரிதாக கட்டுவது என்பது உலகப்பிரகாரமான சிந்தனை. இந்த வருஷம் தேவன் ஆசீர்வதித்ததுபோல, அடுத்த வருஷத்திலும் ஆசீர்வதிப்பார் என்னும் விசுவாசம் நமக்குள் காணப்படவேண்டும். களஞ்சியங்களை இடித்து பெரிதாக கட்டிக்கொண்டே போனால் அதற்கு முடிவேயிராது. இந்த வருஷம் இடித்து பெரிதாக கட்டப்பட்ட களஞ்சியங்கள், அடுத்த வருஷத்தில்  நமக்கு சிறியதாக தோன்றும். பின்பு அதை மறுபடியும் இடித்து அதைவிட பெரிதாக கட்டுவோம். இவ்வாறாக களஞ்சியங்களை இடித்துக் கட்டுவதே நம்முடைய முழுநேர ஊழியமாக இருக்கும். 


களஞ்சியங்களை இடித்து பெரிதாக கட்டுவதினால் இந்த ஐசுவரியவானுடைய பிரச்சனை தீர்ந்துபோகப்போவதில்லை. களஞ்சியங்களை பெரிதாக கட்டும்போது இவனுடைய கவலை அதிகரிக்குமே தவிர குறைந்துபோகாது. இந்த உலகத்தில் ஒருவனுக்கு  ஐசுவரியம் அதிகரிக்க அதிகரிக்க, அவனுடைய கவலைகளும் அதிகரித்துக்கொண்டே போகும். தேவன் நமக்கு உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களைக் கொடுக்கும்போது, அவற்றை எவ்வாறு நிர்வாகம் பண்ணவேண்டும் என்று, தேவனுடைய சமுகத்தில் அமர்ந்திருந்து, அவருடைய சித்தத்தை அறிந்து, அதன் பிரகாரமாக செயல்படவேண்டும். 


இந்த உவமையில் கூறப்பட்டிருக்கும் ஐசுவரியவான் ""நான் ஒன்று செய்வேன்'' என்று கூறுகிறான். இது இவனுடைய சுயசித்தமாகும். தேவனுடைய சித்தத்தின்படி செய்வேனென்று  கூறாமல், தன்னுடைய சுயசித்தத்தின்படி செய்வேனென்று கூறுகிறவர்களுடைய கிரியைகள் ஆசீர்வாதமாக இருக்காது. அவை நிலைக்காது. விரைவில் அழிந்துபோகும். யாக்கோபு தேவனுடைய சித்தத்தைப்பற்றி எழுதும்போது ""ஆண்டவருக்கு சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதை  செய்வோம் என்று சொல்லவேண்டும்'' என்று எழுதுகிறார் (யாக் 4:15). விசுவாசிகளுடைய மனதில் இப்படிப்பட்ட சிந்தனையே நிறைந்திருக்க வேண்டும். ஏனெனில் நாளைக்கு நடப்பது நமக்குத் தெரியாது. நம்முடைய ஜீவன் கொஞ்சக்காலம் தோன்றி பின்பு தோன்றாமல் போகிற புகையைப்போலிருக்கிறது (யாக் 4:14).   


நம்முடைய காலங்களெல்லாம் தேவனுடைய கரங்களிலிருக்கிறது. அவை நமக்குரியதல்ல. தேவன் தமக்குச் சித்தமான பிரகாரம் நமக்கு ஆயுசு நாட்களைக் கொடுக்கிறார். ஆகையினால் நமது சிந்தனைகளும் செயல்களும் தேவனுடைய சித்தத்தின் பிரகாரமாகவே இருக்கவேண்டும்.  சுயமுயற்சியினால், சுயசித்தத்தோடும், சுயபுத்தியோடும் செய்யப்படும் திட்டங்கள் ஒருபோதும் தேவனுடைய திட்டங்களாகாது. தேவனுடைய சித்தத்தின்படி செய்யப்படுவதே தேவனுடைய திட்டம். நாளைக்கு என்ன நடக்கும் என்பதுகூட நமக்குத் தெரியாது. இப்படியிருக்கையில், நம்முடைய நீண்டகால வாழ்வுக்காகவும், நம்முடைய வருங்கால சந்ததிகளுக்காகவும் தேவன் அனுமதிக்கிற பிரகாரம் தேவனுடைய சித்தத்தின்படி மாத்திரமே திட்டமிடவேண்டும். இதைவிடுத்து, நமது சுயசித்தத்தின் பிரகாரம் திட்டமிடுவதினால் ஒரு பிரயோஜனமும், யாருக்கும் உண்டாகப் போவதில்லை.  

ஆத்துமாவே


பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேக பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்-க் கொண்டான் (லூக் 12:19). 


தன்னுடைய நிலம் அதிகமாக விளைந்ததினால் ஐசுவரியவானுக்கு என்னசெய்வது என்று தெரியவில்லை. தன் தானியங்களை சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே என்று கவலைப்படுகிறான். ஏற்கெனவே உள்ள களஞ்சியங்களை இடித்து அவற்றை பெரிதாக கட்டி, அவற்றில் தனக்கு விளைந்த தானியங்களையும் பொருட்களையும் சேர்த்து வைக்கிறான். அப்போதுதான் அவனுக்கு  பிரச்சனை ஓய்ந்ததுபோன்று தெரிகிறது. களஞ்சியங்களை பெரிதாக கட்டிய பின்பு அவன் தன் ஆத்துமாவிடம் பேசுகிறான். ""ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருட்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு'' என்று தன் ஆத்துமாவோடே சொல்கிறான். 


இங்கும் இந்த ஐசுவரியவானுடைய மதியீனமே வெளிப்படுகிறது. இவன் தன்னுடைய நம்பிக்கையை தன் தானியங்கள்மீதும், தன் பொருட்கள்மீதும் வைக்கிறான். தனக்கு விளைந்த தானியங்களை பெரிய களஞ்சியங்களில் சேர்த்து வைத்துவிட்டால் தனக்கு இனிமேல் கவலையிராது என்று இவன் தன் களஞ்சியத்தையும், அதிலுள்ள தானியங்களையும் நம்புகிறான். இவனுடைய களஞ்சியம் இவனுக்கு ஆறுதலைத் தருகிறது. ஆனால் இந்த ஆறுதல் நிலைக்காது. ஆனால் இது நித்திய சமாதானமல்ல. இது தற்காலிகமான சமாதானமும் சந்தோஷமும் ஆகும். 


 தன்னுடைய களஞ்சியத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் அநேகம் பொருட்கள் தனக்கு அநேக வருஷங்களுக்கு பிரயோஜனமுள்ளதாக இருக்குமென்று இவன் நம்புகிறான். ஆனால் இந்த களஞ்சியம் நித்தியமானதல்ல. தீ விபத்து ஏற்பட்டாலோ, அல்லது ஏதாவது இயற்கையின் பேரழிவு உண்டானாலோ, இந்த களஞ்சியத்தினால் நிலைத்து நிற்கமுடியாது. இது தீயில் எரிந்து சாம்பலாய் போகும். நித்தியமில்லாத ஒரு காரியத்தின்மீது இவன் தன்னுடைய நம்பிக்கையை வைத்திருக்கிறான். 


பெரிய களஞ்சியங்களில் தானியங்களை சேரிகரித்து வைக்கும்போது, அந்த களஞ்சியத்தில் பலவிதமான மாற்றங்கள் உண்டாகும். ஒருவேளை இதை பூச்சியும் துருவும் அழித்துப்போடலாம். களஞ்சியத்திலுள்ள தானியங்களை எலிகளும் பெருச்சாளிகளும் வந்து தின்றுபோடலாம்.  ஒருவேளை திருடர்கள் களஞ்சியத்திலுள்ள தானியங்களை கொள்ளையிடுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த களஞ்சியத்திற்கும் இதிலுள்ள தானியத்திற்கும் எந்த வேளையிலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. இவனைப்போலவே இந்த உலகத்திலுள்ள அநேக ஐசுவரியவான்கள்  அநித்தியமான தங்கள் ஐசுவரியத்தின்மீது நம்பிக்கை வைக்கிறார்கள். ஐசுவரியம் அழியும்போது என்னசெய்வது என்று தெரியாமல் திகைக்கிறார்கள். தங்களுக்கு திரளான ஆஸ்திகள் பெருகும்போது இவர்கள் தங்களுடைய ஆஸ்திகளை நம்புகிறார்கள். ஆஸ்திகள் பெருகும்போது கவலைகளும் பெருகிவிடுகிறது. எல்லா ஐசுவரியவான்களும்  கவலையில்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பல ஐசுவரிவான்களுக்கு அவர்களுடைய ஐசுவரியங்களே, அவர்களுக்கு கவலை தருகிறது. அவர்கள் தங்கள் திரளான ஆஸ்திகளின் மத்தியிலும் கவலையோடிருக்கிறார்கள். ஒரு செத்த ஈயானது பரிமள தைலம் முழுவதையும் கெடுத்துப்போடுவதுபோல, இவர்களுடைய ஜீவியமும் சந்தோஷமும் சமாதானமுமில்லாமல் கெட்டுப்போகிறது. மெத்தை               எவ்வளவு மெதுவான பஞ்சினால் செய்யப்பட்டிருந்தபோதிலும், அந்த மெத்தையில் ஒரு முள் இருந்தால்கூட நிம்மதியாக தூங்கமுடியாது. அதுபோலவே ஐசுவரியவான்களும் தங்களுக்கு திரளான சம்பத்து இருந்தபோதிலும், ஏதாவது ஒரு கவலையினால் வருத்தப்பட்டு நிம்மதியில்லாமல் இருக்கிறார்கள்.


மனுஷனுக்கு எந்த வேளையிலும் சரீர வியாதி உண்டாகலாம். சரீர வியாதி ஏழைக்கும் வரும். ஐசுவரியவானுக்கும் வரும். சரீர வியாதியினாலும் வேதனையினாலும் நிம்மதி இழந்து தவிக்கும் ஏராளமான ஐசுவரியவான்கள் இருக்கிறார்கள். ஒரு சிலர் ஐசுவரிவான்களுடைய குடும்பங்களில் குடும்பப் பிரச்சனைகள் நிறைந்திருக்கலாம். உறவினர்களுக்குள்ளே நல்ல ஐக்கியம் இல்லாமல் போகலாம். ஒரு சில ஐசுவரிவான்கள் குற்ற மனச்சாட்சியினால் குத்தப்பட்டு நிம்மதியில்லாமல் தவிக்கலாம். மனுஷனுடைய சந்தோஷத்தை திருடுவதற்கு சாத்தான் இந்த உலகத்தில் அநேக உபாயங்களை வைத்திருக்கிறான். அவற்றில் பொருளாசை சாத்தான் பயன்படுத்தும் பேராயுதமாகும்.


தன்னிடத்திலுள்ள ஏராளமான தானியங்களை குறித்து இவனுக்கு தெளிவான  தரிசனம் எதுவுமில்லை. புசித்து குடித்து பூரிப்பாயிருப்பது மாத்திரமே தன்னுடைய ஜீவியத்தின் இலக்கு என்று இவன் நினைக்கிறான். தன் மாமிசத்தை பிரியப்படுத்துவது தவிர இவனுக்கு வேறு ஒன்றும் தெரியவில்லை. தேவையுள்ள மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்னும் எண்ணம் இவனிடத்தில் சிறிதுமில்லை.  இவன் போஜனம் பண்ணுவதற்காகவே ஜீவிக்கிறான். ஜீவிப்பதற்காக இவன் போஜனம் பண்ணவில்லை. புசித்து குடிப்பது மாத்திரமே இவனுக்குத் தெரிந்திருக்கிறது. தன்னுடைய ஆத்துமாவிடம் இவனால் புசிப்பதையும் குடிப்பதையும் மாத்திரமே பேசமுடிகிறது. 


இந்த வார்த்தைகளை இந்த மனுஷன் தன்னுடைய ஆத்துமாவிடம் பேசாமல், சரீரத்திடம் பேசியிருந்தால் அதில் ஓரளவு அர்த்தம் இருக்கும். ஏனெனில் சரீரத்திற்கு இந்த போஜனம் தேவைப்படுகிறது. ஆனால் ஆத்துமாவிற்குத் தேவையான போஜனம் மாம்ச பிரகாரமான போஜனமல்ல. ஒரு பை நிறைய பொன் இருந்தாலும், ஒரு களஞ்சியம் நிறைய தானியம் இருந்தாலும், இவற்றால் ஆத்துமாவிற்கு ஒருபோதும் பிரயோஜனமுண்டாகாது. 


இந்த மனுஷனிடத்தில் பன்றியின் ஆத்துமா இருந்திருந்தால் ஒரு வேளை அது  புசித்துக் குடித்து பூரிப்பாய் இருந்திருக்கும். ஏனெனில் பன்றி பெருந்தீனி தின்று புசித்துக் குடித்து பூரிப்பாக இருக்கக்கூடிய ஒரு பிராணி.  ஆனால் மனுஷருடைய ஆத்துமா பன்றியின் குணாதிசயத்தோடு சிருஷ்டிக்கப்படவில்லை. இந்த உலகத்தின் பிள்ளைகள் தங்களுடைய ஆத்துமாக்களை உலகப்பிரகாரமான ஐசுவரியங்களினால் திருப்திப்படுத்த வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள். உலக ஐசுவரியம் சரீரத்திற்கு பிரயோஜனமாக இருக்கலாம். புசிப்பும் குடிப்பும் சரீரத்திற்கு இன்பத்தைத் தரலாம். ஆனால் உலகப் பிரகாரமான இந்த போஜனத்தினால் ஆத்துமா ஒருபோதும் திருப்தியடைவதில்லை. பூரிப்படைவதில்லை. 

மதிகேடனே


தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்தி-ருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார் (லூக் 12:20).


தேவன் மதியீனமான இந்த மனுஷனைக்குறித்து தமது நியாயத்தீர்ப்பைக் கூறுகிறார். இவன் தன் ஆத்துமாவிடம் ""நீ பூரிப்பாயிரு'' என்று சொல்கிறான். தேவனும் இதுபோல சொன்னால் அவனுக்கு சந்தோஷமாக இருந்திருக்கும். ஆனால் தேவனோ மனுஷனைப்போல சிந்திப்பதில்லை.  அவருடைய வார்த்தை சத்தியமானது. தேவன் இந்த மனுஷனை நோக்கி ""மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும்'' என்று கூறுகிறார். 


தேவன் தமது தீர்ப்பை இந்த மனுஷனிடத்தில் அறிவிக்கிறார். இவன் ஏராளமான தானியங்களை சேர்த்து வைப்பதற்காக, தன் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, தன் ஆத்துமாவிடம் இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று சொல்லும்போது, தேவன் இவனிடத்தில்  உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறுகிறார். 


காலையில் இவன் தன் படுக்கையைவிட்டு  எழுந்திருக்கும்போது, தன் களஞ்சியத்தை இடித்து பெரிதாக கட்ட வேண்டும் என்னும் சிந்தனையோடு எழும்புகிறான். தூங்கும்போது அநேக வருஷங்களுக்கு தான் சந்தோஷமாக  உயிர் வாழப்போவதாக கனவு காண்கிறான். தன்னுடைய சம்பாத்தியமெல்லாம் தனக்கு பல வருஷங்களுக்கு போதுமானது என்று தன் ஐசுவரியத்தைக் குறித்து பெருமை பாராட்டுகிறான். இப்படிப்பட்ட சமயத்தில்தான் தேவன் இவனுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ள சித்தமுள்ளவராக இருக்கிறார். 


தேவன் இந்த மனுஷனுடைய சுபாவத்தை வெளிப்படுத்துகிறார். இவனை மதிகேடனே என்று அழைக்கிறார். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் நாபால் என்பவன் இவனைப்போல மதிகேடனாக இருந்தான். அவனுடைய ஐசுவரியம் மிகுதியானபோது அவனுடைய மதிகேடும் மிகுதியாயிற்று. உலகப்பிரகாரமான காரியங்களுக்காகவே ஜீவிக்கிறவர்கள் மதிகேடர்கள். தேவன் நம் ஒவ்வொருவரையும் நம்முடைய சுபாவத்தின்படி அழைக்கப் போகிற நாள் ஒன்று வரப்போகிறது. அப்போது தேவன் நம்மைப்பார்த்து ""மதிகேடனே'' என்று அழைத்தால் நம்முடைய நிலமை பரிதாபமாக இருக்கும். இப்படி அழைக்கப்படுவதற்குப் பதிலாக ""நல்லது, உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே'' என்று தேவன் நம்மை அழைப்பாரென்றால் அது நமக்கு ஆசீர்வாதமாக இருக்கும். 


தேவன் இந்த ஐசுவரியவானுக்கு மரண தண்டனை விதிக்கிறார். இவனுடைய ஆத்துமா  இவனிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கிறார். அப்போது இவன் சேகரித்தவைகள் யாருடையதாகும் என்பது இங்கு கேட்கப்படும் பிரதான கேள்வியாகும். இந்த மனுஷனோ தனக்கு அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள் சேர்த்து வைக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறான். ஆனால் இவனுடைய ஆத்துமாவோ இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படப் போகிறது. பல வருஷங்களுக்கு இவன் அநேக பொருட்களை சேர்த்து வைத்திருந்தபோதிலும், அவையெல்லாவற்றையும் அனுபவிப்பதற்கு இவனுக்கு ஜீவன் இருக்காது. இந்த இராத்திரியிலே இவனுடைய ஜீவன் இவனை விட்டு எடுத்துக்கொள்ளப்படும். தன்னுடைய சொத்துக்கள் எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டுமென்று பேராசையோடிருந்தான். இதற்காக தன் களஞ்சியங்களையெல்லாம் இடித்து பெரிதாக கட்டினான். ஆனால் இவன் மரிக்கும்போதோ இவன் சேர்த்து வைத்திருந்த தானியங்களையெல்லாம் யார் புசித்துக் குடிக்கப் போகிறார்கள் என்பது இவனுக்கேத் தெரியாது.  


தேவன் நம்மை சிருஷ்டித்த போது நமக்குள் ஒரு ஆத்துமாவையும் சிருஷ்டித்திருக்கிறார். இந்த ஆத்துமாவிற்கும் விருப்பு, வெறுப்பு, சந்தோஷம், துக்கம் எல்லாம் உண்டு. நீதிமானுடைய மரணத்தின்போது அவனுடைய ஆத்துமா சமாதானமாக இருக்கும்.  ஆனால் துன்மார்க்கனுடைய ஆத்துமாவோ அவன் மரிக்கும்போது தத்தளிக்கும். அமைதியாகயிராது. தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் ஒவ்வொரு காரியத்தைக் குறித்தும் நாம் அவருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும். இந்த சிந்தனை நமது இருதயத்தில் ஆழமாக பதிந்திருந்தால், நாம் தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ற பிரகாரமாக ஜீவிப்போம். நாம் மரிக்கும்போது நமது ஆத்துமா மெய்யாகவே இளைப்பாறுதல் அடைந்திருக்கும். தேவனுக்கு நல்ல கணக்கு ஒப்புவிக்க முடியும் என்னும் விசுவாசம் நமக்குள் காணப்படும். 


நம்முடைய ஜீவன் எப்பொழுது நம்மைவிட்டு எடுத்துக்கொள்ளப்படும் என்று நமக்குத் தெரியாது. நாம் நினையாத வேளையில், நாம் எதிர்பாராத நேரத்தில் நமக்கு மரணம் வரலாம். இந்த ஐசுவரியவானுக்கு அந்த இராத்திரியிலே மரணம் நியமிக்கப்பட்டிருந்தது. அந்த இராத்திரியிலே அவனுடைய ஆத்துமா எடுத்துக்கொள்ளப்படுமென்று தேவன் அறிவித்தார். ஆனால் அந்த மனுஷனோ அதை எதிர்பார்க்கவில்லை. அவன் மரிப்பதற்கு ஆயத்தமாக இல்லை. புசித்துக் குடிப்பதற்கு ஆயத்தமாக இருந்தான். 


நீதிமான் மரிக்கும் வேளை பகற்பொழுதைப்போல பிரகாசமாக இருக்கும்.  அவன் மரிக்கும் வேளையே அவனுக்கு அதிகாலைப்பொழுது. ஏனெனில் அவன் மரித்தாலும் தேவனுடைய சமுகத்தில் நித்திய காலமாக ஜீவிக்கப்போகிறான். ஆனால் உலகப்பிரகாரமான துன்மார்க்கனுக்கோ, அவன் மரிக்கும் வேளை அவனுக்கு இருண்ட இராப்பொழுதைப்போல இருக்கும். இது சந்தோஷமில்லாத இராப்பொழுது. துக்கமும் பயமும் நிறைந்த இராப்பொழுது. தனக்கு மரணம் வரக்கூடாது என்று துன்மார்க்கன் விரும்பினாலும், நியமிக்கப்பட்ட வேளையில் அவனுக்கு மரணம் வந்துவிடுகிறது. 


இந்த ஐசுவரியவான் தன்னுடைய ஆத்துமாவை அநேக வருஷங்கள் பூரிப்பாக ஜீவிக்கவேண்டுமென்று வாழ்த்தினான். ஆனால் அவனுடைய வாழ்த்து அவனுடைய ஜீவியத்தில் சித்திக்கவில்லை. பூரிப்பாக ஜீவிப்பதற்குப் பதிலாக, வருத்தத்தோடு மரிப்பது  இவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. இவன் மரித்தபோது இவன் சேர்த்து வைத்திருந்த பொருட்களில் எதுவும் இவனுக்கு பிரயோஜனப்படவில்லை. இவனுடைய சம்பாத்தியம் எல்லாமே முடிவடைந்துவிட்டது. 


இந்த ஐசுவரியவான் மரிக்கும்போது தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டுத்தான் மரிக்க வேண்டும்.  தன் ஐசுவரியத்தின்மீது இவன் தனது நம்பிக்கையை வைத்திருந்தான். தன்னுடைய சந்தோஷத்திற்காக இவன் ஐசுவரியத்தை சேமித்து வைத்தான். ஆனால் இவனுடைய ஐசுவரியங்கள் இவனுக்கு சந்தோஷத்தை தரவில்லை. எதெல்லாம் தனக்கு பிரயோஜனமாக இருக்கும் என்றும், மகிழ்ச்சியைத் தரும் என்றும் நினைத்தானோ, அவற்றில் எதுவும் இவனுக்கு பிரயோஜனமாக இல்லை, மகிழ்ச்சியைத் தரவில்லை. இவனைப்போல உலகப்பிரகாரமான காரியங்களில் தங்கள் நம்பிக்கையை வைத்திருக்கிறவர்கள், மரிக்கும்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒன்றுமில்லாமல்  ஏமாற்றத்தோடு போவார்கள்.


இந்த ஐசுவரியவான் மரித்தபின்பு, அவன் சேகரித்த பொருட்கள் யாருடையதாகும் என்று  இவனுக்குத் தெரியாது. இவற்றை தனக்காக இவன் சேகரித்து வைத்தான். ஆனால் தான் சேகரித்து வைத்ததை அனுபவிக்க முடியாமல் இப்போது மரித்துப்போகிறான். இவன் மரித்த பின்பு இவை யாருடையதாகும். இவனுக்கு பின்வரப்போகிறவனுக்கு அதை அவன் வைத்துப்போக வேண்டியதாகயிருக்கிறது. அவன்  புத்திமானாயிருப்பானோ, அல்லது மூடனாக இருப்பானோ என்பதையும் இந்த ஐசுவரியவான் அறியான். சூரியனுக்குக் கீழே இவன் பிரயாசப்பட்டு ஞானமாய் சம்பாதித்த சகல வஸ்துக்களின் பேரிலும் அவனே, அதாவது அவனுக்கு பின்வரப்போகிறவனே, அதிகாரியாவான் (பிர 2:18,.19). 


ஐசுவரியவான் மரித்தபின்பு அவன் சேகரித்து வைத்திருந்த சம்பாத்தியங்களை அவனுடைய   குடும்பத்தார் தங்களுக்குள்ளே சமாதானமாக பங்கிட்டுக்கொள்ளலாம். சில சமயங்களில் பங்கிடுவதில் பிரச்சனை உண்டாகி  குடும்பத்தினருக்குள்ளே கலவரம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. தன்னுடைய மரணத்திற்குப் பின்பு தன்னுடைய வீடு யாருடையதாகும் என்னும் தரிசனம் ஒருவனுக்குத் தெரிந்திருந்தால், அவன் தன் வீட்டை ஒருபோதும் அழகுபடுத்தமாட்டான்.  யாரோ ஒருவன் இதை அனுபவிக்கப்போகிறான் என்னும் சிந்தனையில் தன் வீட்டை அலங்கோலமாக விட்டுவிடுவான்.


இந்த ஐசுவரியவான் தனக்கு ஏராளமான  சொத்துக்களை சேர்த்து வைத்தபோதிலும், இவன் தனக்கு ஞானத்தை சேர்த்து வைக்கவில்லை. ஐசுவரியவானாக இருந்தாலும் இவன் மதிகேடனாகவே இருக்கிறான். தனக்குப் பிரயோஜனமுண்டாகும் என்று அநேக பொருட்களை சேகரிப்பதில் மிகுந்த பிரயாசப்பட்டான். ஆனால் இவனுடைய பிரயாசமெல்லாம் வீணாயிற்று. தலைசாய்க்கக்கூட நேரமில்லாமல் தனக்கு சொத்துக்களை சேர்த்தான். ஆனால் அந்த சொத்து இவனுக்கு பிரயோஜனப்படாமல் வேறு யாருடையதாகவோ ஆயிற்று.  இவன் இம்மையில் ஏராளமான பொருட்களை சேகரித்து ஐசுவரியவானாக இருந்தான். ஆயினும் மறுமையிலோ ஒன்றுமில்லாத ஏழையாகவே இருப்பான். 


தேவனுக்கு நம்முடைய ஆத்துமாவைத் தாம் விரும்பும் எந்த வேளையிலும் எடுத்துக் கொள்ளும் அதிகாரம் உள்ளது. அதை எதிர்த்துக் கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை.

தேவனிடத்தில் ஐசுவரியவான்


 தேவனிடத்தில் ஐசுவரியவனாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார் (லூக் 12:21).


இயேசுகிறிஸ்து இந்த உவமையை எடுத்துக்கூறி, இதன் கருத்தையும் விவரிக்கிறார்.  தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களை சேர்த்து வைக்கிறவன், இந்த ஐசுவரியவானைப்போலவே  மதிகேடனாகயிருக்கிறான். இந்த பூமியிலுள்ள ஒவ்வொரு மனுஷரும் தேவனிடத்தில் ஐசுவரியவானாக இருக்கவேண்டுமென்று பிரயாசப்பட வேண்டும். தனக்காகவே பொக்கிஷங்களை சேர்த்து வைக்கிறவன் ஏமார்ந்துபோவான். மரித்த பின்பு ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். அவன் சேர்த்து வைப்பதும் யாருடையதாகுமென்று அவனுக்குத் தெரியாது. 


இயேசுகிறிஸ்து இந்த உவமையின் மூலமாக உலகப்பிரகாரமான மனுஷன் எப்படியிருப்பானென்று விவரித்துக் கூறுகிறார்.  அவன் தனக்காகவே பொக்கிஷங்களை சேர்த்து வைப்பான். தேவனுக்கு விரோதமாக அவன் தனக்காகவே ஜீவிப்பான். தன் சுயத்தை வெறுப்பதற்குப் பதிலாக தன் சுயத்தின் சந்தோஷத்தில் பிரியப்படுவான். இந்த உவமையில் குறிப்பிடப்பட்ட ஐசுவரியவான் தன்னுடைய மாம்சம் மாத்திரமே பிரதானமானது என்று நினைத்தான். தன்னுடைய ஆள்தத்துவத்தை தன்னுடைய மாம்சமே பிரதிபலிப்பதாக தவறாக நினைத்து, தன் மாம்சத்தை பிரியப்படுத்துவதற்காகவே ஜீவித்தான். சரீர சுகமே போதுமென்று நினைத்தான். சரீரமே மனுஷன் என்பது இவனுடைய தவறான எண்ணம். ஆகையினால்தான் இவன் தன்னுடைய மாம்சத்திற்காக அநேக பொருட்களை, அநேக வருஷங்களுக்காக சேர்த்து வைத்தான். இவற்றை யாருக்கும் பங்கிட்டுக் கொடுக்காமல்  தனக்காகவே சேர்த்து வைத்தான்.


இந்த உலகத்தில் இவன் சேர்த்து வைத்ததெல்லாம் இவனுடைய ஐசுவரியங்களென்று இவன் தவறுதலாக நினைத்துவிட்டான். தான் பல வருஷம் ஜீவிக்கப் போவதாகவும், தன் ஜீவனுக்கு தான் சேர்த்து வைத்திருந்த பொருட்களெல்லாம் தேவைப்படுமென்றும் இவன் திட்டமிட்டிருந்தான்.  இப்பொழுது இருப்பதுபோலவே தன்னுடைய ஜீவன் எப்பொழுதும் நிலைத்திருக்கும் என்பது இவனுடைய தவறான கணக்கு. இவன் உலகப்பிரகாரமாக, தனக்காக பொக்கிஷங்களை சேர்த்து வைத்தாலும், தேவனிடத்தில் இவன் ஒன்றையும் சேர்த்து வைக்கவில்லை. இவன் தேவனிடத்தில் ஐசுவரியவானாகயில்லை. தேவனுடைய காரியங்களில் நாம் ஐசுவரியவான்களாக இருக்கவேண்டும். 


இந்த உலகத்தில் பல காரியங்கள் ஒருவனை உலகப்பிரகாரமான ஐசுவரியவான்களாக்கும். இவை ஒருவேளை இவர்களுடைய சரீரத்தை சந்தோஷமாக வைத்திருக்கும். ஆனால் உலக ஐசுவரியம் எல்லாம் நம்முடைய ஆத்துமாவிற்கு பிரயோஜனமுள்ளது என்று கூறமுடியாது. நம்முடைய ஆத்துமாவிற்கு எது பிரயோஜனமானது என்பதை தியானித்துப் பார்த்து, அதை சேகரித்து நமது ஆத்துமாவை போஷிக்க வேண்டும். அப்போது நாம் தேவனிடத்தில் ஐசுவரியவான்களாக இருப்போம்.  தேவனிடத்தில் ஐசுவரியவான்களாக இருக்கிறவர்கள் தங்களுடைய நித்திய ஜீவனிலும் ஐசுவரியவான்களாக இருப்பார்கள்.  


உலகப் பிரகாரமான மனுஷன் மதிகேடனாக இருக்கிறான். அவனுடைய முடிவு பரிதாபமாக முடிவடைகிறது. இவனுடைய முடிவு எப்படியிருக்குமென்று இயேசுகிறிஸ்து இந்த உவமையில் கூறுகிறார். இவன் மரிக்கும்போது  இவன் சேகரித்த சம்பத்துக்கள் யாருடையதாகுமென்று இவனுக்கேத் தெரியாது. இவனுடைய முடிவு அந்த அளவிற்கு பரிதாபமான முடிவாயிற்று. இவனைப்போலவே இந்த உலகத்தில் தங்களுடைய சரீர சுகத்திற்காகவும், தற்காலிக இன்பத்திற்காகவும் முக்கியத்துவம் கொடுத்து ஜீவிக்கிறவர்களின் முடிவும் பரிதாபமாகவே முடியும். ஆத்துமாவை போஷியாமல் சரீரத்தை போஷிப்பதினால் நமக்கு  நித்திய பலன் உண்டாகாது. தேவனிடத்தில் ஐசுவரியவானாகயிராமல் நாம் நமக்காகவே இந்த பூமியில் பொக்கிஷங்களை சேர்த்து வைப்பதினால் நமக்கு ஒரு பிரயோஜனமும் உண்டாகாது. நித்திய ஜீவனைக் குறித்த அக்கறையில்லாமல், இம்மைக்குரிய இந்த உலக ஜீவனை மாத்திரம் ஜீவிப்பதில் பிரியப்படுவோமென்றால், நம்மால் நித்திய ஜீவனை அடையமுடியாது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.