Parable study : The Pharisee and the tex collector பரிசேயனும் ஆயக்காரனும்

 


Parable study : The Pharisee and the tex collector பரிசேயனும் ஆயக்காரனும் லூக் 18:9-14


லூக் 18:9. அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.


லூக் 18:10. இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.


லூக் 18:11. பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபச்சாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.


லூக் 18:12. வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.


லூக் 18:13. ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.


லூக் 18:14. அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

தங்களை நீதிமான்களென்று நம்பி


அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்  (லூக் 18:9).


ஒரு சிலர் தங்களைப்பற்றி மிகவும் பெருமையாகவும், அதே வேளையில் மற்றவர்களைப்பற்றி மிகவும் தாழ்வாகவும் நினைத்துக்கொள்கிறார்கள். தங்களை நீதிமான்களாகவும் மற்றவர்களை அநீதிமான்களாகவும் இவர்கள் தீர்மானம் பண்ணிவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மாய்மாலக்காரர்கள். இவர்கள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக்கொள்கிறார்கள். எந்த அளவிற்கு தாங்கள் பக்தியுள்ளவர்களாக இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு தாங்கள்  பக்தியுள்ளவர்களாகவும், தங்களுடைய உற்றார் உறவினர்கள், அயலகத்தார் ஆகியோரைவிட தாங்கள் பக்தியில் உயர்ந்தவர்களாகவும், அதிக பரிசுத்தவான்களாகவும் இருப்பதாக தங்களைப்பற்றி நினைக்கிறார்கள்.


இருதயத்தில் பெருமையுள்ளவர்கள் தேவனுடைய சமுகத்திற்கு முன்பாக போகும்போது, இவர்களுடைய இருதயத்தில் இவர்களைக் குறித்து ஒரு சுய நம்பிக்கை இருக்கும்.  தேவனால் மாத்திரமே தங்கள் பாவங்களை மன்னித்து, தங்களை நீதிமான்களாக ஆக்க முடியும் என்று நம்புவதற்குப் பதிலாக, தாங்கள் ஏற்கெனவே நீதிமான்களென்று தங்களைக் குறித்து நம்புகிறார்கள். இதனால் தாங்கள் தேவனை ஆராதிப்பதன் மூலமாக, அவரை தங்களுக்கு  கடன்பட்டவரைப் போல பார்க்கிறார்கள். இவர்கள் தங்களை வஞ்சிப்பதோடு மாத்திரமல்ல, மற்றவர்களையும் வஞ்சிக்கிறார்கள். நம்முடைய அன்றாட ஜீவியத்தில் இப்படிப்பட்ட சம்பவங்களை பலருடைய ஜீவியத்தில் நாம் பார்க்கிறோம். 

இரண்டு மனுஷர்


இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன் (லூக் 18:10). 


இரண்டுபேர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்திற்கு வருகிறார்கள். ஒரே வேளையில் இவ்விரண்டு மனுஷரும் ஒரே இடத்திற்கு வருகிறார்கள். தேவாலயத்தில் எல்லா ஜனங்களும் கூடிவந்து ஜெபிப்பதற்கு பொதுவான ஜெபவேளை நியமிக்கப்பட்டிருக்கும்.  இது அப்படிப்பட்ட ஜெபவேளை அல்ல. தேவனை தனிப்பட்ட முறையில் தியானம்பண்ணுவதற்காகவும், தங்களுடைய சொந்த விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் ஏறெடுப்பதற்காகவும் இவர்கள் இருவரும் தேவாலயத்திற்கு வருகிறார்கள். ஒருவன் பரிசேயன். மற்றவன் ஆயக்காரன். 


தேவனை ஆராதிக்கிறவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் கலந்திருப்பார்கள்.  பரிசேயன் தன் இருதயத்தில் பெருமையுள்ளவன். தான் பரிசுத்தவான் என்றும், தன்னுடைய ஜெபத்தை மாத்திரமே தேவன் அங்கீகரிப்பார் என்றும் இவன் பெருமையோடிருக்கிறான். தேவாலயத்தில் ஜெபிக்க வரும்போது இவனிடம் பயபக்தியுமில்லை பணிவுமில்லை. தன்னைப்பற்றியே பெருமையாக நினைத்துக்கொண்டிருக்கிறான். 


ஆயக்காரன் தன்னை ஒரு பாவியாக பாவித்து மிகுந்த பணிவோடு தேவனிடத்தில் ஜெபம்பண்ணுகிறான். தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள முடியாதவாறு தன்னுடைய பாவம் தன்னை தேவனிடமிருந்து விலக்கி வைத்துவிட்டது என்று  இருதயத்தில் வேதனையோடிருக்கிறான்.


பரிசேயர் பொதுவாக எல்லா ஜனங்களும் வந்து கூடும் பொதுவான இடங்களில்  ஜெபிப்பது வழக்கம். இவர்கள் மனுஷர் காணவேண்டுமென்று ஜெபிக்கிறவர்கள். தேவாலயமும் மனுஷர் வந்து கூடும் இடமாகும்.  தான் தேவாலயத்தில் ஜெபிக்கும்போது எல்லா ஜனங்களும் தன்னைப்பார்த்து, தன்னுடைய பக்தியையும் நீதியையும் பாராட்ட வேண்டும் என்று இந்தப் பரிசேயன் எதிர்பார்க்கிறான். மனுஷர் காணவேண்டுமென்று ஜெபிக்கிறவர்கள் ஒரு காரியத்தை நினைவில் வைத்திருக்கவேண்டும்.  மனுஷர்கள் நம்முடைய முகத்தை மாத்திரமே பார்ப்பார்கள். ஆனால் தேவனோ நம்முடைய இருதயத்தை பார்க்கிறவர். நம்முடைய இருதயத்திலுள்ள பக்தியையும் பணிவையும், கர்த்தருக்குப் பயப்படும் பயத்தையும் தேவன் நம்மிடத்தில் ஆராய்ந்து பார்க்கிறார். 


பரிசேயர்கள் தங்களுடைய கிரியைகளை  மனுஷர் காணவேண்டும் என்பதற்காகவே விளம்பரத்தோடு செய்கிறார்கள். இவர்கள் தங்கள் பலனை அடைந்தாயிற்று என்று இயேசுகிறிஸ்து குறிப்பிடுகிறார். இக்காலத்தில்கூட சபைகளில் பலர் இவ்வாறு ஜெபிப்பதை நாம் காண்கிறோம். இவர்களுடைய இருதயம் தேவனுக்கு முன்பாக சுத்தமாக இல்லையென்றால், தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கும் சிலாக்கியத்தை இவர்கள் இழந்துபோவார்கள். தேவாலயத்தில்  பக்தியின் வேஷத்தை தரித்திருக்கும் இவர்கள் பரலோகம் போகமாட்டார்கள். சபைகளில் இவர்களைப் பார்க்கும்போது எப்போதுமே ஜெபித்துக்கொண்டிருப்பார்கள். ஆயினும் பரலோகத்தில், தேவனுடைய வலது பாரிசத்தில் இவர்களை நம்மால் பார்க்கவே முடியாது. 


தேவாலயத்திற்குப் போகும்போது அது தனக்கு பெருமையாக இருக்கும் என்று நினைத்து பரிசேயன் அங்கு போகிறான். ஆனால் ஆயக்காரனோ தேவன் தன்னுடைய பாவத்தை மன்னிக்க வேண்டும் என்னும் வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் அங்கு  பணிவோடும், பயபக்தியோடும் போகிறான். தன்னை பிறர் பார்க்க வேண்டுமென்பதே பரிசேயனுடைய விருப்பம். ஆனால் தன்னுடைய விண்ணப்பத்தை தேவனிடத்தில் ஏறெடுக்க வேண்டுமென்பதே ஆயக்காரனின் வாஞ்சை. கர்த்தருடைய சமுகத்தில் நாம் வரும்போது என்ன நோக்கத்தோடு நாம் அங்கு வந்திருக்கிறோம் என்பதையும், நம்முடைய இருதயத்திலுள்ள சிந்தனைகளையும் தேவன் அறிந்திருக்கிறார்.  தேவனுக்கு மறைவான காரியம் ஒன்றுமேயில்லை. 

பரிசேயனும், ஆயக்காரனும் 


    1. சமுதாயத்தில் அந்தஸ்து உள்ளவர்கள் (லூக்கா 18:10)

    2. நம்பிக்கையின் ஆதாரங்கள்  (லூக்கா 18:9,13)

    3. தேவனிடத்தில் விண்ணப்பங்கள்  (லூக்கா 18:11-13)

    4. தேவனுக்கு நேராக அவர்களுடைய மனப்பாங்குகள்             (லூக்கா 18:11-13)

    5. மற்றவருக்கு நேராக அவர்களுடைய மனப்பாங்குகள்            (லூக்கா 18:11-13)

    6. மார்க்கப் பின்னணிகள் (லூக்கா 18:9-13)

    7. ஜெபத்தின் முடிவுகள் (லூக்கா 18:14)

பரிசேயனின் ஜெபம்


 பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபச்சாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.  வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான் (லூக் 18:11,12). 


பரிசேயன் ஏறெடுத்த ஜெபத்தைப்பற்றி இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை ஜெபம் என்று சொல்லுவதற்குப் பதிலாக, பரிசேயனின்  சுயபுராணம் என்று கூறுவது சிறப்பாக இருக்கும். தேவனுடைய சமுகத்திற்கு முன்பாக இவன் நின்றுகொண்டு தன்னைப்பற்றி சிந்திக்கிறான்.  மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்கிறான். தேவனுடைய மகிமையை இவன் தரிசிக்கவில்லை. தன்னுடைய சொந்த நீதியையே பார்த்துக்கொண்டிருக்கிறான். இவனுக்குத் தன்னைத் தவிர வேறு யாரும் பரிசுத்தவான்களாக தெரியவில்லை.


பரிசேயன் தன்னை நீதிமான் என்று எண்ணுகிறான். தன்னுடைய சுயநீதியில் நம்பிக்கை வைத்திருக்கிறான்.  இவன் தன்னைப்பற்றி கூறும் காரியங்களெல்லாம் ஒரளவு உண்மையானதுதான். இவன் பறிகாரனல்ல. இவன் யாருடைய சொத்தையும்  அபகரிக்கிறவனல்ல. தன்னுடைய நடத்தையில் இவன் அநியாயம் செய்வதில்லை. இவன் யாருக்கும் எந்த கெடுதலும் செய்வதில்லை. இவன் விபச்சாரக்காரனுமல்ல. இவனைப்பற்றி  இவன் கூறுவதெல்லாம் ஒரளவு உண்மைதான். அது மாத்திரமல்ல இவன் உண்மையிலேயே வாரத்திற்கு இரண்டு தரம் உபவாசிக்கிறான். தன்னுடைய சரீரத்தினால் இவன் தேவனை மகிமைப்படுத்துகிறான். தன்னுடைய சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறான். தன்னுடைய உலகப்பிரகாரமான சொத்துக்களினாலும் இவன் தேவனை மகிமைப்படுத்துகிறான். 


பரிசேயனிடம் இப்படிப்பட்ட நல்ல சுபாவங்கள் இருக்கிறபோதிலும் தேவன் இவனை அங்கீகரிக்கவில்லை. இவனுடைய ஸ்தோத்திரங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரவில்லை. ஏதோ கடமைக்காக இவன் கர்த்தரைத் துதிக்கிறான். கர்த்தரைத் துதிக்க வேண்டுமே, அதை எல்லோரும் பார்க்கவேண்டுமே, கர்த்தரைத் துதிக்காவிட்டால் மற்றவர்கள் தன்னைப்பற்றி தவறாக நினைப்பார்களே என்னும் சுயசிந்தனையிலேயே கர்த்தருக்கு தன் உதட்டளவில் ஸ்தோத்திரம் செலுத்துகிறான். 


ஆண்டவரே உமது கிருபை எனக்கு வேண்டும்.  நான் இன்று நிர்மூலமாகாமலிருப்பது உமது கிருபை உமது கிருபையினாலே நான் இப்படி இருக்கிறேன் என்று இந்த பரிசேயன் தேவனை  ஸ்தோத்திரிக்கவில்லை. அதற்குப் பதிலாக ""தேவனே, நான் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்'' என்று இருதயத்தில் பெருமையோடு பேசுகிறான். தான் தேவாலயத்திற்கு வந்து, தான் எவ்வளவு நல்லவன் என்பதை தேவனிடத்தில்  சொன்னால் போதுமானது என்று பரிசேயன் நினைக்கிறான். தன்னைப்பற்றி இப்படி பேசுவதே நீதியானது என்று நம்புகிறான். ஜெபவார்த்தை எதையும் இவன் பேசவில்லை. இவன் தேவாலயத்திற்கு ஜெபம்பண்ணுவதற்காகத்தான் போனான். ஆனால் அங்கு எதற்கு போனான் என்பதையே மறந்துவிட்டு, எதை எதையோ பேசிக்கொண்டிருக்கிறான். 


தனக்கு ஒன்றும் தேவையில்லை, தனக்கு  தேவனுடைய உதவியோ, ஒத்தாசைகளோ, கிருபையோ இரக்கமோ தேவையில்லை என்று நினைக்கிறான். தேவனிடத்தில் கிருபையை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பது இவனுடைய எண்ணம். தான் ஏற்கெனவே மற்றவர்களைவிட பரிசுத்தவானாகவும், நீதிமானாகவும் இருப்பதினாலும், மற்ற பாவிகளைப்போல தான்  பாவியாக இல்லாதிருப்பதினாலும், தனக்கு தேவனுடைய கிருபை தேவையில்லை என்று தீர்மானித்துவிட்டான். ஆகையினால் தேவனுடைய சமுகத்தில் ஜெபிக்கும்போது தன்னை தாழ்த்தாமல், உயர்வாக நினைத்து, சுயபெருமையோடு தேவனை ஸ்தோத்திரிக்கிறான்.


பரிசேயன் தன்னை வஞ்சிப்பதோடு, மற்றவர்களையும் வஞ்சிக்கிறான். தன்னைத்தவிர மற்ற எல்லா மனுஷரும் மோசமானவர்கள் என்பது இவனுடைய எண்ணம். மற்ற மனுஷரைப்போல  தான் மோசமானவனாக இராததினால் இவன் தேவனை துதிக்கிறான். ஒரு சில மனுஷரைப்போல நாம் இராதபடியினால் அதற்காக நாம் மெய்யாகவே கர்த்தரைத் துதிக்க வேண்டும். தேவனுடைய கிருபையினாலே கர்த்தர் நம்முடைய நன்மைகளை காத்துக்கொள்கிறார், பாதுகாக்கிறார், பராமரிக்கிறார் என்று நினைத்து அவரைத் துதிக்க வேண்டும். 


தேவனுடைய சமுகத்தில் நாம்  வரும்போது நாம் மாத்திரமே நல்லவர்கள் என்றும், மற்றவர்களெல்லாம் மிகவும் மோசமானவர்கள் என்றும் மற்றவர்களை நியாயம்தீர்த்துவிடக்கூடாது. ஆயக்காரனைப்பற்றி பரிசேயன் மிகவும் இழிவாக நினைக்கிறான். அவன் இரக்கமில்லாதவனென்றும், பண ஆசை பிடித்தவனென்றும், பிறருக்கு உதவிபுரியாதவனென்றும் அவனைப்பற்றி  தன் உள்ளத்தில் நினைக்கிறான். அவன் ஒரு பறிகாரனென்றும் அநியாயக்காரனென்றும் அவனைப்பற்றி தீர்மானம் பண்ணிவிடுகிறான்.   


தேவனுடைய சமுகத்திற்கு வரும்போது நாம் நம்முடைய இருதயங்களை மாத்திரமே ஆராய்ந்து பார்க்கவேண்டும். மற்றவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. பிறர்மீது  தூஷண வார்த்தைகளை கூறி ஜெபிப்பதற்குப் பதிலாக, தேவனுடைய சமுகத்தில் நம்மைத் தாழ்த்தி ஜெபம்பண்ண வேண்டும். இந்த பரிசேயன் தன்னுடைய நீதியில் பிரியப்படுவதற்குப் பதிலாக, ஆயக்காரனுடைய  பாவத்தில் பிரியப்படுகிறான். இந்த ஆயக்காரன் இன்னும் அதிக பறிகாரனாகவும், அநியாயக்காரனாகவும் இருந்திருந்தால் பரிசேயனுடைய சந்தோஷம் இன்னும் அதிகரித்திருக்கும்.   

பரிசேயன் தன் ஜெபத்தில் கூறும் காரியங்கள்


    1. நான் பாவிகளோடு ஜெபிக்கவில்லை.

    2. நான் மற்றவர்களைப்போல இல்லை

    3. நான் அநியாயக்காரன் இல்லை

    4. நான் பறிகாரன் இல்லை.

    5. நான் விபச்சாரக்காரன் இல்லை.

    6. நான் ஆயக்காரனைப் போல இல்லை (லூக்கா 18:11).

    7.  வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்

    8. என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் (லூக்கா 18:12)


பரிசேயன் தன் பாவங்களைப் பற்றி தேவனிடம் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. அவன் சுயநீதியுடையவனாக இருந்தான்.  


  யூதர்கள் வாரத்தில் திங்கள்கிழமையும், வியாழக்கிழமையும் உபவாசம் பண்ணுவார்கள். வருஷத்தில் ஒருமுறை அவர்கள் உபவாசம் பண்ண வேண்டுமென்று பிரமாணம் கட்டளையிடுகிறது. (லேவி  23:27-32). 1,200 வருஷங்களுக்குப் பின்பு சகரியாவின் காலத்தில் யூதர்கள் 4 முறை உபவாசம் பண்ணினார்கள். (சக 8:19) 500 வருஷங்களுக்குப் பின்பு கிறிஸ்துவின் காலத்தில் யூதர்கள் வருஷத்திற்கு 104 தடவைகள் உபவாசம் பண்ணினார்கள். (லூக்கா 18:12). அவர்கள் பிரமாணத்தில் வளர்ந்தார்கள். ஆனால் கிருபையில் வளரவில்லை.

ஆயக்காரனின் ஜெபம்


ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான் (லூக் 18:13). 


ஆயக்காரன் பரிசேயனைப்போல சுயபெருமையோடு ஜெபம்பண்ணவில்லை. ஆயக்காரன் தன்னைத் தாழ்த்துகிறான். தன்னுடைய பாவங்களுக்காக மிகவும் வருத்தப்படுகிறான். தேவனுடைய கிருபை தனக்குத் தேவையென்பதை உணர்ந்து ஜெபிக்கிறான். பரிசேயனோ தன்னுடைய சுயநீதியில் நம்பிக்கையாயிருக்கிறான். ஆனால் இந்த ஆயக்காரனோ தேவனுடைய கிருபையில் நம்பிக்கை வைத்திருக்கிறான். 


தான் செய்த பாவங்களை அங்கீகரித்து, தேவனுடைய தயவும் கிருபையும் தனக்கு தேவையென்பதை பணிவோடு இந்த ஆயக்காரன் பணிவோடு விண்ணப்பம்பண்ணுகிறான். தேவனுடைய சமுகத்திற்கு வரும்போது தூரத்திலே நிற்கிறான். அவருக்கு அருகாமையில் வருவதற்குக் கூட தான் பாத்திரனல்ல என்னும் குற்ற உணர்வும், தாழ்மை உணர்வும் ஆயக்காரனிடத்தில் காணப்படுகிறது. தேவனுடைய நீதியின்படி தான் தண்டிக்கப்பட வேண்டியவன் என்பது இவனுக்கு நன்றாகத் தெரியும். தமக்கு அருகில் வரவிடாமல் தன்னை தூரத்தில் துரத்திவிடுவதற்கு தேவனுக்கு அதிகாரமுள்ளது என்பதையும் இவன் உணர்ந்திருக்கிறான். ஆகையினால் தேவாலயத்திற்கு வந்திருப்பதே தன்னுடைய வாழ்வில் தனக்கு கிடைத்த ஒரு பெரிய சிலாக்கியமாக  இவன் கருதுகிறான். தூரத்திலே நின்றாலும், இந்த அளவிற்கு தேவனுக்கு அருகில் வருவதற்கு கிடைத்த தேவகிருபைக்காக அவரைத் துதிக்கிறான். 


இவன் தேவாலயத்தில் இருந்தாலும் இவனுடைய இருதயம் பரலோகத்திலுள்ள தேவனுக்கு நேராக திரும்பியிருக்கிறது.         தான் பாவியாக இருப்பதினாலும், துன்மார்க்கனாகவும், பறிகாரனாகவும் இருப்பதினாலும் இவன் தன் கண்களை வானத்திற்கு ஏறெடுக்கக் கூட துணியவில்லை. வானத்திலிருக்கும் தேவனுடைய சமுகத்திற்கு முன்பாக குற்ற உணர்வோடு, அபாத்திரனாக  நின்றுகொண்டிருக்கிறான். தேவனை பார்ப்பதற்கு தனக்குத் தகுதியில்லையென்று தீர்மானம்பண்ணிவிடுகிறான். தன் கண்களை வானத்திற்கு ஏறெடுக்க துணியாமலிருப்பது, பாவத்தைப்பற்றிய சிந்தனையினால் இவன் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு பரிதாபமாக இருக்கிறான் என்பதை எடுத்துக் காண்பிக்கிறது. 


இந்த ஆயக்காரன் தன் மார்பிலே அடித்துக்கொண்டு ஜெபிக்கிறான். ஒரு பாவி மனந்திரும்பும்போது முதலில் அவனுடைய இருதயம் மாற்றமடையும். பாவியினுடைய குற்ற உணர்வு அவனுடைய இருதயத்தில் குத்தப்படும்.  பாவியை கடிந்து கூறும்போது அந்த வார்த்தை முதலாவதாக அவனுடைய இருதயத்தைத்தான் தொடும். ஆகையினால்தான் ஆயக்காரனாகிய இவன் தான் ஒரு பாவி என்பதை அங்கீகரித்து, பாவசிந்தனை நிறைந்திருக்கும் தன்னுடைய மார்பிலே அடித்துக்கொள்கிறான். 


பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்பதே ஆயக்காரனுடைய விண்ணப்பம். தன் மார்பில் அடித்துக்கொண்டு தான் ஒரு பாவி என்பதை அங்கீகரிக்கிறான். இவனுடைய ஜெபம்  மிகவும் சுருக்கமானது. பரிசேயனைப்போல இவன் பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணவில்லை. துக்கமும், அவமானமும் இவனுடைய வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவருவதை தடைபண்ணுகிறது. இவற்றிற்கு மத்தியில்கூட தன்னுடைய இருதயத்தில் நிறைந்திருக்கும் வேண்டுதலை பணிவான பயபக்தியுள்ள வார்த்தையினால் வெளிப்படுத்துகிறான். ""பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்''. நாமும் தேவனுடைய சமுகத்தில் பயபக்தியோடு வந்து, நம்முடைய பாவங்களை அங்கீகரித்து, பாவியாகிய எங்கள்மேல் கிருபையாயிரும் என்று ஜெபிக்கும்போது, தேவனுடைய சமுகத்தில் நம்முடைய ஜெபம் அங்கீகரிக்கப்படும். 


ஆயக்காரன் தான் ஒரு பாவியென்பதை அங்கீகரிக்கிறான். தன் சிந்தையிலும், சுபாவத்திலும், செயலிலும் இவன் பாவியாக இருக்கிறான். தேவனுக்கு முன்பாக இவன் ஒரு குற்றவாளி. தன் பாவத்தைக் குறித்த குற்ற உணர்வு இவனுடைய இருதயத்தில் நிரம்பியிருக்கிறது. பரிசேயன் ஜெபித்தபோது தன்னை ஒரு பாவியென்று அங்கீகரிக்கவில்லை. ஆனால் இந்த ஆயக்காரனோ தன்னைப்பற்றி கூறும்போது தான் ஒரு பாவி என்னும் வார்த்தையைவிட வேறு எந்த வார்த்தையையும் இவன் தனக்கு பயன்படுத்தவில்லை. 


தேவனுடைய சமுகத்தில் தனக்கு அவருடைய கிருபையைத்தவிர வேறு ஆதரவோ, அடைக்கலமோ இல்லையென்பதை ஆயக்காரன்  தன் இருதயத்தில் உணர்ந்திருக்கிறான். ஆனால் பரிசேயனோ தன்னுடைய உபவாசத்திலும், தசமபாகத்திலும் நம்பிக்கை வைத்திருக்கிறான்.  இவை தேவனுடைய சமுகத்தில் தனக்கு ஆதரவாக இருக்கும் என்பது பரிசேயனின் எண்ணம். ஆனால் இந்த ஆயக்காரனோ தேவனுடைய சமுகத்திற்கு முன்பாக வருவதற்கு முன்பாகவே, தனக்குத் தகுதியில்லையென்று தீர்மானித்து, தூரத்திலே நிற்கிறான். தேவனைப்பார்ப்பதற்கு தன் கண்கள் பரிசுத்தமானதல்ல என்று தீர்மானித்து, தன் கண்களை வானத்திற்கு ஏறெடுக்கவும் துணியவில்லை. 


தேவனுடைய சமுகமே தனக்கு அடைக்கலப்பட்டணம் என்று நினைத்து இந்த ஆயக்காரன் அவரிடத்தில் வந்திருக்கிறான். நீதி  தன்னைக் குற்றப்படுத்துவதாகவும், தேவனுடைய கிருபையும் இரக்கமுமே தன்னை இந்தக் குற்ற உணர்விலிருந்து விடுதலை பெறச் செய்யமுடியும் என்றும் நினைத்து, ""தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்'' என்று விண்ணப்பம் பண்ணுகிறான். 


ஒரு பிச்சைக்காரன் ஒருவரிடத்தில் பிச்சைக்கேட்க வந்திருப்பதுபோல, இந்த ஆயக்காரன் தேவனுடைய சமுகத்திற்கு வந்திருக்கிறான். பசியினால் மாண்டுபோகும்போது, பிச்சைக்காரன் மிகவும் பரிதாபமாக பிச்சைக்கேட்பான். அதுபோலவே இந்த ஆயக்காரன் தேவனுடைய சமுகத்தில், தேவனுடைய கிருபைக்காக மிகவும் பரிதாபமாக விண்ணப்பம்பண்ணுகிறான். தேவகிருபையும், தயவும் தனக்கு கிடைக்கவில்லையென்றால் தான் நிர்மூலமாகிவிடுவோம் என்பது ஆயக்காரனுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ஒருவேளை இவன் தேவனிடத்தில் ""தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்'' என்னும்  விண்ணப்பத்தை பலமுறை ஏறெடுத்திருக்கலாம். 


இவனுடைய ஜெபத்தில் இந்த வார்த்தைகளைத் தவிர வேறு வார்த்தைகள் எதுவும் இடம்பெறவில்லை. தேவகிருபையே தனக்குப் போதும் என்று இவன் நினைக்கிறான். 


பரிசேயன் தன் ஜெபத்தில் 34 வார்த்தைகளைப் பேசினான். ஆயக்காரனோ மொத்தம் 7 வார்த்தைகளை மட்டுமே தன் ஜெபத்தில் பயன்படுத்துகிறான். ஆனால் ஆயக்காரனுடைய ஜெபமே கேட்கப்படுகிறது. அவன் உண்மையோடும், மனத்தாழ்மையோடும் குற்ற உணர்வோடும், எதிர்பார்ப்போடும், தேவனுடைய சமூகத்தில் விண்ணப்பம் பண்ணுகிறான்.  


  ஆயக்காரன் தன்னைப் பொதுவான பாவியாகக் கூறாமல் ""தான் ஒரு பாவி'' என்று பொருள்படும் விதத்தில் தன்னுடைய நிலைமையைக் கூறுகிறான். (1தீமோ 1:15) ஆயக்காரனுடைய ஜெபத்தில் தான் ஒரு பாவி என்பதும், தேவன் கிருபையுள்ளவர் என்பதும் வெளிப்படுத்தப்படுகிறது. பாவநிவாரண இரத்தத்தின் மூலமாக தேவனுடைய கிருபை தனக்குக் கிடைக்கும் என்று ஆயக்காரன் நம்புகிறான். (லூக்கா 18:14) நாமும் ஜெபத்தில் ஆயக்காரனைப் போலவே ஜெபிக்க வேண்டும்.  

தன்னை தாழ்த்துகிறவன் 


அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்  (லூக் 18:14).


தேவன் ஆயக்காரனை அங்கீகரிக்கிறார்.  ஆயக்காரனுடைய பணிவான விண்ணப்பம் தேவனுடைய சமுகத்தில் பிரியமானதாக இருக்கிறது. ஒரு சிலர் பரிசேயரைப்போல சாதுரிய வார்த்தைகளினால் ஜெபிப்பார்கள். அதேவேளையில் தங்களோடு சேர்ந்து ஜெபிக்கும் ஆயக்காரரைப் போன்ற ஜனங்களைப்பார்த்து, தங்களை உயர்வாக நினைத்துக்கொள்வார்கள். இருதயத்தில் பெருமையுள்ளவனை கர்த்தர் அருவறுக்கிறார். ஆனால் இருதயம் நொறுங்குண்டவனையோ கர்த்தர் நேசிக்கிறார்.  


தேவனுடைய சமுகத்தில் பரிசேயனும் ஆயக்காரனும் வந்து விண்ணப்பம் பண்ணுகிறார்கள் என்றாலும் ஆயக்காரனுடைய  எளிமையான, தாழ்மையான, உள்ளம் உடைந்த ஜெபத்தையே கர்த்தர் அங்கீகரிக்கிறார். இவன் நீதிமானாக்கப்பட்டவனாய் தன் வீட்டிற்குத் திரும்பிப்போகிறான். பரிசேயனால் ஆயக்காரனைப்போல நீதிமானாக்கப்பட முடியவில்லை.


பரிசேயன் தேவனுடைய சமுகத்திற்கு வரும்போதே தன்னைப்பற்றி பெருமையாக நினைக்கிறான். இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் நீதிமானாக்கப்பட வேண்டுமென்றால், அது தானாகத்தான் இருக்கவேண்டும் என்னும்  பெருமையான எண்ணம் பரிசேயனுடைய உள்ளத்தில் இருக்கிறது. ஆனால் கிறிஸ்துவோ பரிசேயனுடைய விண்ணப்பத்தை அங்கீகரிக்கவில்லை. பரிசேயனல்ல, ஆயக்காரனே இங்கு நீதிமானாக ஆக்கப்பட்டிருக்கிறான். பரிசேயனை தேவன் புறக்கணித்துவிட்டார். இவன் நீதிமானாக ஆக்கப்படாமல், வந்ததுபோலவே தன் வீட்டிற்குத் திரும்பிப்போகிறான். 


தேவனுடைய பார்வையில் பரிசேயன் நீதிமானாக அங்கீகரிக்கப்படவில்லை. ஏனெனில்  இவன் தன்னுடைய பார்வையில் தனக்குத்தானே நீதிமானாக இருக்கிறான். ஆனால் ஆயக்காரனோ தன் பாவத்தை உணர்ந்தவனாக தன்னை பாவியென்று அங்கீகரிக்கிறான். தேவனுடைய சமுகத்தில் வருவதற்குக்கூட தனக்கு தகுதியில்லையென்று நினைத்து தூரத்திலே நிற்கிறான். ஆனால் தேவனோ இந்த ஆயக்காரனை தம்முடைய பிள்ளைகளில் ஒருவனாக ஏற்றுக்கொண்டு, தம்முடைய ஆவிக்குரிய குடும்பத்தில் சேர்த்துக்கொள்கிறார். 


இருதயத்தில் பெருமையுள்ளவர்கள் தங்களைத்தாங்களே உயர்த்துகிறார்கள். இவர்கள் தேவனுக்கு விரோதமானவர்கள். இப்படிப்பட்டவர்கள் தாழ்த்தப்பட வேண்டியவர்கள். இருதயத்தில் தாழ்மையுள்ளவர்களோ தங்களைத் தாங்களே வெறுக்கிறார்கள். ஆனால் தேவன் இவர்களை அங்கீகரிக்கிறார். இவர்களை உயர்த்துகிறார்.


தன்னைத்தான் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். இதுவே இயேசுகிறிஸ்துவின் உபதேசம். தேவனுடைய கிருபையானது தீமையிலிருந்து நன்மையை வேறுபிரித்து வெளிப்படுத்துகிறது. ஆயக்காரன்  மகா பாவியாக இருக்கிறான். இவனுடைய பாவத்தின் மத்தியிலும் தேவனுடைய கிருபை இவனை மனந்திருந்த செய்கிறது. ஆயக்காரன் பாவியாக இருந்தாலும் மனந்திரும்பி நீதிமானாகிறான். 


பரிசேயன் பாவம் செய்யாதவன். இவன் அநீதியானவனுமல்ல. ஆயினும் இவனுடைய உள்ளத்தில் தீமை குடிகொண்டிருக்கிறது. இந்த தீமை இவனை பெருமைப்பட வைக்கிறது. இந்த பெருமை இவனை அழித்துப்போடுகிறது. 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.