பெரிய விருந்து (Parable study Big feast)
விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் லூக் 14 : 15-24
லூக் 14:15. அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான் என்றான்.
லூக் 14:16. அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரிய விருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான்.
லூக் 14:17. விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.
லூக் 14:18. அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப் போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
லூக் 14:19. வேறொருவன்: ஐந்தேர் மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன் என்றான்.
லூக் 14:20. வேறொருவன்: பெண்ணை விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான்.
லூக் 14:21. அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.
லூக் 14:22. ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.
லூக் 14:23. அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி. நீ பெருவழிகளிலும் வே-களருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா;
லூக் 14:24. அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொன்னார்.
தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன்
அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான் என்றான் (லூக் 14:15).
இயேசுகிறிஸ்து பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே போஜனம்பண்ணிக்கொண்டிருக்கும்போது, அங்கு விருந்துக்கு அவரோடுகூட அழைக்கப்பட்டிருக்கிற ஒருவன், இயேசுகிறிஸ்துவிடம் ""தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான்'' என்று கூறுகிறான்.
இந்த மனுஷன் இந்த வார்த்தையை கூறும்போது அவனுடைய உள்ளத்தின் எண்ணம் தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை. ஒருவேளை எல்லோரும் போஜனம்பண்ணும்போது அங்கு அவர்கள் நகைச்சுவையான காரியங்களை பேசிக்கொண்டிருந்திருக்கலாம். நகைச்சுவை காரியத்திலிருந்து ஆவிக்குரிய காரியத்திற்கு அவர்களுடைய கவனத்தைத் திருப்புவதற்காக இந்த மனுஷன் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசியிருப்பதற்கு வாய்ப்புள்ளது.
விருந்துக்கு யாரையெல்லாம் அழைக்க வேண்டுமென்று இயேசுகிறிஸ்து ஒரு புதிய உபதேசத்தை இங்கு கூறியிருக்கிறார். இயேசுவின் உபதேசம் இந்த மனுஷனுக்கு பிடித்திருக்கலாம். விருந்தில் பங்குபெறுகிறவர்களில் அநேகர் இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தின்படி விருந்து நடத்துவதில்லை. அவர்களுக்கு இயேசுகிறிஸ்துவின் உபதேசத்திலும் விருப்பமில்லை, தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் என்னும் கவனமுமில்லை. ஆனால் இந்த மனுஷனோ தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க விரும்புகிறான். தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று அறிவிக்கிறான்.
இயேசுகிறிஸ்து போஜனம்பண்ணும்போது நீதிமான்களின் உயர்த்தெழுதலைப்பற்றி கூறியிருக்கிறார் (லூக் 14:14). இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை இந்த மனுஷனும் அங்கீகரித்து நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் பங்குபெறுகிறவர்கள் மெய்யாகவே தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுவார்கள் என்று அறிவிக்கிறான்.
விருந்துக்கு யாரை அழைக்க வேண்டுமென்று இயேசுகிறிஸ்து உபதேசம்பண்ணிய பிறகு அவர் சற்று அமைதியாக இருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் அமைதியைக் கலைத்து, அவரை மறுபடியும் உபதேசம்பண்ணுவதற்கு தூண்டும் விதமாக இந்த மனுஷன் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசியிருக்கலாம். இவனுக்கு மெய்யாகவே தேவனுடைய ராஜ்யத்தைப்பற்றிய தெளிந்த ஞானம் இருந்திருப்பதற்கு வாய்ப்பில்லை. அந்த சத்தியத்தைப்பற்றி மேலும் அதிகமாக அறிந்துகொள்ள விரும்புகிறான். இந்த மனுஷனைப்போலவே நமக்கு ஒரு நற்காரியத்தைக் குறித்து உபதேசம் பண்ணத் தெரியவில்லையென்றாலும், அந்த சத்தியத்தை உபதேசம் பண்ணக்கூடியவர்களை உற்சாகப்படுத்தி, அந்த உபதேசம் தொடருவதற்கு உதவிபுரிய வேண்டும்.
தேவனுடைய ராஜ்யத்தைப்பற்றி பேசும் இந்த மனுஷன் சத்தியத்தை அங்கீகரிக்கிறான். இவர்கள் எல்லோரும் போஜனம்பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்த போஜனம் தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம் பண்ணுவதற்கு இணையானது அல்ல. ஆயினும் உலகப்பிரகாரமான இந்த சம்பவத்தை ஆவிக்குரிய சம்பவத்தோடு தொடர்புபடுத்தி இந்த மனுஷன் பேசுகிறான். இவர்கள் போஜனம் பண்ணிக்கொண்டிருப்பதினால், இவனுடைய வார்த்தை சூழ்நிலைக்கு ஏற்ற பிரகாரம் அமைந்திருக்கிறது. இவர்கள் பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டில் போஜனம்பண்ணிக்கொண்டிருந்தாலும் ""தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம் பண்ணுகிறவன் பாக்கியவான்'' என்று அறிவிக்கிறான்.
தேவனுடைய ராஜ்யம் கிருபையின் ராஜ்யமாகும். தம்முடைய ராஜ்யத்தில் தம்முடைய சீஷர்கள் தம்மோடுகூட போஜனபானம் பண்ணுவார்கள் என்று இயேசுகிறிஸ்து வாக்குப்பண்ணியிருக்கிறார். தேவனுடைய ராஜ்யம் மகிமையின் ராஜ்யமாகும். பரிசுத்தவான்கள் உயிர்த்தெழுந்த பின்பு பரலோகத்தில் இயேசுகிறிஸ்துவோடுகூட போஜனம்பண்ணுவது உயிர்த்தெழுந்த விசுவாசிகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய சிலாக்கியமாகும்.
உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்கள் நித்திய காலமாகத் தேவனுடைய ராஜ்ஜியத்தில் போஜனம் பண்ணுவார்கள். (லூக்கா 22:16,18,30; வெளி 2:7,17; வெளி 19:7-10; வெளி 22:2,14). தேவனும், தேவதூதர்களும் போஜனம் பண்ணுவார்கள். (ஆதி 18:8; ஆதி 19:3; யாத் 24:11; சங் 78:25).
எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது
அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரிய விருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான். விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான் (லூக் 14:16,17).
தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுவதை விளக்குவதற்காக இயேசுகிறிஸ்து இங்கு ஒரு உவமையைக் கூறுகிறார். தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம் பண்ணும் சிலாக்கியம் யாருக்கு கிடைக்கும் என்பதை இந்த உவமையின் மூலமாக இயேசுகிறிஸ்து எடுத்துக்கூறுகிறார். பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கும் சிலாக்கியம் யூதர்களுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்களோ அதை புறக்கணித்துவிட்டார்கள். ஆகையினால் புறஜாதியாரில் அநேகருக்கு பரலோக ராஜ்யத்தில் போஜனம் பண்ணும் சிலாக்கியம் கிடைக்கும் என்று இயேசுகிறிஸ்து விவரிக்கிறார்.
இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தில் தேவனுடைய இலவசமான கிருபையும், இலவசமான இரக்கமும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. சாதரண பாமர ஆத்துமாக்களுக்கு தேவன் மிகப்பெரிய ஐசுவரியமான ஆசீர்வாதங்களை ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார். இதுவே இந்த உவமையின் துவக்க வாக்கியமாகும். ""ஒரு பெரிய மனுஷன் பெரிய விருந்தை ஆயத்தம்பண்ணியிருக்கிறான்''.
இந்த மனுஷன் ஆயத்தம்பண்ணியிருப்பது பெரிய விருந்து என்று அழைக்கப்படுகிறது. யூதருடைய வழக்கத்தின் பிரகாரம் இரவு போஜனமே பெரிய விருந்தாகும். கிரேக்க பாஷையில் விருந்து என்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை இரவு போஜனத்தையே குறிப்பிடுகிறது. யூதர்கள் இரவு வேளையில்தான் பெரிய விருந்து ஆயத்தம்பண்ணுவது வழக்கம்.
இந்த மனுஷன் பெரிய விருந்தை ஆயத்தம்பண்ணி, அந்த விருந்தில் பங்குபெறுமாறு பலரை கிருபையுடன் அழைக்கிறான். அழைப்பு பொதுவானது. ஒரு சிலருக்கென்று இந்த அழைப்பு மட்டுப்படுத்தப்படாமல், இவன் அநேகரை அழைக்கிறான். இந்த மனுஷனைப் போலவே இயேசுகிறிஸ்துவும் இஸ்ரவேல் தேசம் முழுவதையும், யூதஜனங்கள் எல்லோரையும் தம்முடைய சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறார். சுவிசேஷத்தின் பிரகாரம் இயேசுகிறிஸ்துவின் இல்லக்கதவுகள் மூடப்பட்டிருக்காமல் திறந்தேயிருக்கிறது.
விருந்து வேளையின்போது இந்த மனுஷன் அழைக்கப்பட்டவர்களை அழைத்து வருமாறு தன் ஊழியக்காரனை அனுப்புகிறான். எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள் என்று சொல்லச்சொல்லி இவன் தன் ஊழியக்காரனை அனுப்புகிறான். இதே அழைப்புதான் சுவிசேஷத்தின் மூலமாக நமக்கும் கொடுக்கப்படுகிறது. எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது. இதுவே அநுக்கிரக காலம். காலதாமதம் பண்ணாமல் சுவிசேஷத்தின் மூலமாக நமக்கு கொடுக்கப்படும் அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று நமக்குள் ஆழமான விசுவாசம் இருக்கவேண்டும்.
போக்குச் சொல்லத் தொடங்கினார்கள்
அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப் போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: ஐந்தேர் மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: பெண்ணை விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான் (லூக் 14:18-20).
சுவிசேஷம் கிருபை நிறைந்தது. சுவிசேஷத்தின் மூலமாக கொடுக்கப்படும் அழைப்பை பலர் ஏற்றுக்கொள்ளாமல் உதாசீனம் பண்ணுகிறார்கள். விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் வர மறுத்துவிடுகிறார்கள். அவர்களெல்லோரும் விருந்துக்கு வராமலிருப்பதற்கு போக்குச் சொல்லத் தொடங்குகிறார்கள். ஏற்கெனவே தங்களுக்கு முக்கியமான வேலை நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அதை நிறைவேற்றுவதுதான் தங்களுக்கு முக்கியமானது என்றும், ஆகையினால் விருந்தில் பங்குபெற இயலாது என்றும் அழைப்பை அசட்டை பண்ணிவிடுகிறார்கள். இவர்களைப்போலத்தான் யூதர்களும் தங்களுக்கு சுவிசேஷத்தின் மூலமாக கொடுக்கப்பட்டிருக்கும் அழைப்பை அசட்டை செய்து இயேசுகிறிஸ்துவையும் புறக்கணித்து விடுகிறார்கள்.
சுவிசேஷத்திற்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் சுவிசேஷத்தை அறிவிக்கும்போது அவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதை அசட்டை செய்து புறக்கணித்துவிடுகிறார்கள். தேவனுடைய வார்த்தைக்கு அருகாமையிலிருக்கிறவர்கள் தங்களுடைய கவனக்குறைவினால் தேவனைவிட்டு தூரம் விலகிப்போய்விடுகிறார்கள். இவர்களால் சுவிசேஷத்தை முற்றிலுமாக புறக்கணித்துவிட முடியாது. ஆனாலும் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாமலிருப்பதற்கு சாக்குப்போக்குகளைச் சொல்லுகிறார்கள்.
விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் எல்லோரும் சாக்குப் போக்குச் சொல்லி விருந்துக்கு வர மறுத்துவிடுகிறார்கள். இவர்களுடைய சாக்குப் போக்கு ஒன்றுபோலிருக்கிறது. இவர்களில் இருவர் ஒரு வியாபாரியைப்போல ஒரு பொருளை கொள்முதல் பண்ணியிருக்கிறார்கள். ஒருவன் ஒரு வயலை வாங்கியிருக்கிறான். மற்றொருவன் ஐந்து ஏர்மாடுகளை வாங்கியிருக்கிறான்.
நிலத்தை வாங்கியிருக்கிறவன் அதை என்ன விலைக்கு வாங்கினான் என்று தெரியவில்லை. தான் கொடுத்த கிரயத்திற்கு அந்த நிலம் பெறுமா, பெறாதா என்பதை சோதித்துப் பார்க்க விரும்புகிறான். இவனுக்கு தன் பணமும் நிலமும்தான் முக்கியம். ஆகையினால் தான் இதில்தான் கவனம் செலுத்த வேண்டுமென்றும், விருந்துக்கு வர இயலாது என்றும் கூறிவிடுகிறான். இவன் மிகவும் பரிதாபமானவன். கிரயத்திற்கு வாங்கப்பட்ட நிலம் எங்கும் நடந்துபோய்விடாது. மறுநாளில்கூட அந்த நிலத்தைப் போய் பார்த்துக்கொள்ளலாம். நேற்றைய தினத்தில் நிலம் எங்கு இருந்ததோ அங்குதான் நாளைக்கும் இருக்கும். இன்றும் இருக்கும், யாரும் அதை கடத்திக் கொண்டு போய்விடமாட்டார்கள். ஆனால் இவன் அழைக்கப்பட்ட விருந்து அப்படிப்பட்டதல்ல. அந்த விருந்து இன்று மாத்திரமே ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறது. இந்த விருந்தில் இன்றைக்கு இவன் பங்குபெறாமல், மறுநாளில் விருந்துக்குப் போனால் அங்கு விருந்து நடைபெறாது. ஆனால் இவன் வாங்கிய நிலம் அப்படிப்பட்டதல்ல. எத்தனை நாள் ஆனாலும் அந்த நிலம் அங்கேயிருக்கும்.
வேறொருவன் தன் நிலத்தில் உழுவதற்கு ஐந்து ஏர்மாடுகளை வாங்கியிருக்கிறான். தான் வாங்கிய ஏர்மாடுகள் நல்ல மாடுகளா, ஏர் உழுவதற்கு ஏற்றவையா என்பதை சோதித்துப் பார்க்க விரும்புகிறான். ஆகையினால் தன்னால் விருந்துக்கு வர இயலாது என்று போக்குச் சொல்லிவிடுகிறான். ஒருவன் இந்த உலகத்தின்மீது பற்று வைத்திருக்கிறான். மற்றொருவன் இந்த உலகத்தை பராமரிக்கும் பொருட்கள்மீது பற்று வைத்திருக்கிறான். உலகக் கவலையும், உலகத்தோடு தொடர்புடைய ஆசைகளும் நம்மை கிறிஸ்துவிடமிருந்தும் அவருடைய கிருபையிலிருந்தும் விலக்கி பிரித்துவிடும்.
நமக்கு ஒரு கடமை நியமிக்கப்பட்டிருக்கும்போது அந்தக் கடமையை நிறைவேற்றாமல் சாக்குப்போக்குச் சொல்லுவது நியாயமல்ல. அது தேவனுக்கு விரோதமான பாவம். சாக்குப் போக்குச் சொல்லுகிறவர்கள் தங்களுக்கு அந்தக் கடமை உண்டு என்பதை அங்கீகரிக்கிறார்கள். ஆயினும் அந்தக் கடமைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வேறு காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாக்குப் போக்கு சொல்லுகிறார்கள்.
நாம் தேவனுடைய காரியங்களுக்கு சாக்குப்போக்கு சொல்லுவதற்கு முன்பாக, எந்தக் காரியம் முக்கியமானது என்பதை நிதானித்து தீர்மானம்பண்ண வேண்டும். தேவனுடைய ராஜ்யம் முக்கியமானதா அல்லது நாம் வாங்கியிருக்கும் நிலமும் ஏர்மாடுகளும் முக்கியமானவையா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேவனுடைய ராஜ்யத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறவர் ""நான் தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன் ஆகையினால் நிலத்தைப் பார்ப்பதற்கோ, ஏர்மாடுகளை சோதித்துப் பார்ப்பதற்கோ எனக்கு சமயமில்லை. என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்'' என்று கூறிவிடுவார். தேவனுடைய காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, நமக்கு தேவனுடைய காரியம் மாத்திரமே பெரியதாக தெரியும். மற்றவையெல்லாம் அற்பமும் சொற்பமுமாக இருக்கும்.
நம்முடைய இருதயத்தின் ஆசைகள் எப்படியிருக்கிறதோ அப்படியே நமது செயல்பாடுகளும் இருக்கும். நமது இருதயத்திற்கு நியாயமாக தோன்றுகிற காரியத்தையே நாம் செய்ய விரும்புவோம். பல சமயங்களில் தேவனுடைய காரியம் ஒன்றாகவும், நமது இருதயம் விரும்புவது வேறொன்றாகவும் இருந்துவிடும். இதுபோல மாறுபாடான இருதயம் உடையவர்கள் தேவனுடைய காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களில் ஒருவன் ""பெண்ணை விவாகம்பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது'' என்று கூறுகிறான். இவன் புதிதாக விவாகம்பண்ணியிருக்கிறவன். இவனுக்கு இவனுடைய ƒதிருமணக் காரியம்தான் முக்கியமானதாக இருக்கிறது.
ஒரு பெண்ணை விவாகம் பண்ணியதினால் விருந்துக்கு வரக்கூடாது என்னும் நியதி எங்குமில்லை. மனம் இருந்தால்தான் மார்க்கமுண்டாகும். இவன் விருந்துக்குப் போவதைவிட தன்னுடைய புதிய மனைவியின் அருகில் இருக்கவே விரும்புகிறான். ஆனால் ஏதாவது போக்குச் சொல்ல வேண்டும் என்பதற்காக, தன்னுடைய திருமணச் சடங்குகளை நியாயப்படுத்தப் பார்க்கிறான். உண்மையிலேயே இவனுக்கு விருந்துக்குப் போக மனமில்லை. இவன் விரும்பினால் போகலாம். திருமணம் அதற்கு ஒரு தடையல்ல. ஆனால் இவனோ தான் விருந்துக்கு போகாமல் இருப்பதற்கு திருமணத்தை காரணமாக கூறுகிறான்.
இந்த மனுஷனைப் போலத்தான் இன்று அநேகர் ஆவிக்குரிய காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பல காரியங்களை நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள். ஆவிக்குரிய காரியங்களில் ஈடுபட இவர்களுக்கு விருப்பமில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இந்த உண்மையை அங்கீகரிக்காமல், பலவிதமான காரணங்களை நியாயப்படுத்திப் பார்க்கிறார்கள்.
நம்முடைய குடும்ப உறவுகள் தேவனுடைய ஊழியத்தில் நாம் பங்கு பெறுவதற்கு தடையாக இருக்கக்கூடாது. குடும்பமாக ஊழியத்தில் பங்குபெறுவது நமக்கு மிகுந்த ஆசீர்வாதத்தைத் தரும். பெண்ணை விவாகம் பண்ணியவன், விருந்துக்கு வரக்கூடாது என்று போக்குச் சொல்லாமல், தன் மனைவியையும் விருந்துக்கு அழைத்துச் சென்றிருந்தால் அது அவனுக்கு இரட்டிப்பான ஆசீர்வாதத்தைத் தந்திருக்கும். இவன் அழைக்கப்பட்டிருக்கும்போது, இவனுடைய மனைவியையும் இவன் தாரளமாக விருந்துக்கு அழைத்துச் செல்லலாம்.
விருந்தில் எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது. அநேகர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். தாராள மனதோடு விருந்துக்கு அழைக்கிறவர், அழைக்கப்பட்டவரோடு கூட வருகிற யாரையும் புறம்பே தள்ளிவிடமாட்டார். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து ஜீவித்தால் நமக்கு ஆசீர்வாதம் கிடைக்கும். கீழ்ப்படியாமல் போக்குச் சொன்னால் நமக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்களை நாம் இழந்துபோவது நிச்சயம்.
ஜனங்களை வருந்திக் கூட்டிக்கொண்டுவா
அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமாள் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றாள். ஊழியக்காரன் அப்படியே செய்தூ ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றாள். அப்பொழுது எஜமான் ஊழியக்காரளை நோக்கி. நீ பெருவழிகளிலும் வேலி களருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா; அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷயில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொன்னார் (லூக் 14:21-24).
விருந்தை ஆயத்தம்பண்ணியவருடைய சிநேகிதர்கள் போக்குச் சொன்ன சம்பவம் அவருக்கு அறிவிக்கப்படுகிறது. அவருடைய ஊழியக்காரன் வந்து இவைகளை தன் எஜமானுக்கு அறிவிக்கிறான். அழைக்கப்பட்டவர் ஒருவரும் விருந்துக்கு வராமல் போனதினால் எஜமான் தனியாக போஜனம் பண்ண வேண்டுமோ என்று ஆச்சரியப்படுகிறான். ஊழியக்காரனும் தன்னுடைய அனுபவத்தை மிகைப்படுத்தாமல் அப்படியே கூறுகிறான். எஜமானுடைய சிநேகிதர்கள் போக்குச் சொன்னதைக் குறித்து இவன் ஒன்றும் சொல்லவில்லை. அதை ஆதரிக்கவுமில்லை. அதை எதிர்க்கவுமில்லை. கர்த்தருடைய ஊழியக்காரர்கள் தங்களுடைய ஊழியக்காரியங்களைக் குறித்து இப்படித்தான் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். உள்ளதை உள்ளபடி கூறவேண்டும். தங்களுடைய ஊழியத்தில் ஏற்பட்ட வெற்றிகளையும் தோல்விகளையும் மிகைப்படுத்தாமல் அறிவிக்க வேண்டும். நாம் கர்த்தருடைய சமுகத்தில் அவருடைய கிருபாசனத்திற்கு முன்பாக நின்று அறிக்கை செய்யும்போது நம்மிடத்தில் உண்மை காணப்பட வேண்டும்.
நம்முடைய ஊழியத்தில் திரளான ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டால் அதற்காக கர்த்தரைத் துதிக்க வேண்டும். ஒரு ஆத்துமாகூட இரட்சிக்கப்படாமல், நம்முடைய பிரயாசம் வீணாகும்போது அதற்காக யாரையும் சபிக்கக்கூடாது. அதையும் தேவசமுகத்தில் அறிக்கை செய்து கர்த்தருடைய கிருபையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கர்த்தர் தம்முடைய ஊழியக்காரர்கள் மூலமாக தம்முடைய வார்த்தையை அனுப்புகிறார். ஊழியக்காரருடைய வார்த்தைக்கு நாம் செவிகொடுக்க வேண்டியது அவசியம். ஏனெனில் ஊழியக்காரர்கள்' பேசுவது அவர்களுடைய சொந்த வார்த்தையல்ல. அது கர்த்தருடைய வார்த்தை. நம்மை நடத்துகிறவர்கள் நம்முடைய ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறார்கள். ஆகையினால் அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படிக்கு அவர்களுக்கு நாம் கீழ்ப்படிந்து அடங்க வேண்டும். அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது நமக்கு பிரயோஜனமாய் இருக்கமாட்டாது.
விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் போக்குச் சொன்னதை ஊழியக்காரன் தன் எஜமானிடம் அறிவித்த போது அந்த எஜமான் கோமடைகிறான். சுவிசேஷத்தின் மூலமாக அழைப்பு கொடுக்கப்படும்போது அந்த அழைப்பை அசட்டைபண்ணினால் கர்த்தர் அவர்கள் மீது கோபப்படுவார். அவர்கள் சுவிசேஷத்தை அசட்டை பண்ணுவதோடு, பரலோகத்தின் தேவனையும் அசட்டை பண்ணுகிறார்கள். இவ்வாறு அசட்டை பண்ணுகிறவர்கள்மீது கர்த்தர் கோபமாக இருப்பது நியாயமான காரியமே.
தேவனுடைய கிருபையையும், இரக்கத்தையும் அசட்டை பண்ணுகிறவர்கள்மீதும் தவறாக பயன்படுத்துகிறவர்கள்மீதும் தேவனுடைய கோபாக்கினை அதிகமாக வரும். எஜமான் கோபப்பட்டு அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை” என்று அறிவிக்கிறார். கிருபையை அசட்டைபண்ணும்போது, கிருபை நம்மைவிட்டு கடந்துபோய்விடும். ஏசா தன்னுடைய புத்திரசுவீகாரத்தை அசட்டை செய்து அதை இழந்துபோனான்.
இரட்சிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கும்போது நாம் இரட்சிக்கப்பட வேண்டும். இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்போது அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாம் விரும்பினாலும் நமக்கு இரட்சிப்பு கிட்டாமல் போவதற்கு வாய்ப்புள்ளது. இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ளபோது ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், அவரை நம்முடைய ஜீவியத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்பினாலும், ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதற்கு வாய்ப்புள்ளது.
விருந்தை ஆயத்தம்பண்ணி வைத்திருக்கும் எஜமான் அதை வீணாக்க விரும்பவில்லை. தன்னுடைய விருந்து சாலையை விருந்தினர்களினால் நிரப்ப வேண்டுமென்று விரும்புகிறார். அழைக்கப்பட்டவர்கள் வரவில்லையென்றாலும் எஜமான் சோர்ந்து போய்விடவில்லை. தன்னுடைய ஊழியக்காரனை நோக்கி "சீக்கிரமாய் போ என்று கூறுகிறார். பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டு வா என்று எஜமான் ஊழியக்காரனை அனுப்புகிறார்.
விருந்துக்கு சந்தோஷமாக வர ஆயத்தமாக இருக்கிறவர்களை நாம் அழைக்க வேண்டும். அவர்கள் ஊனராக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் அவர்களைப் புறக்கணிக்காமல் விருந்துக்கு அழைக்க வேண்டும். தங்களை யாராவது விருந்துக்கு அழைக்கமாட்டார்களா என்று இவர்கள் ஏங்கி காத்துக்கொண்டிருக்கிறார்கள். அழைக்கப்படும்போது இவர்கள் போக்குச் சொல்லமாட்டார்கள். வருவார்கள். சந்தோஷமாக இவர்கள் பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் அழைப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறவர்கள். தங்களுக்கு கொடுக்கப்படவில்லையென்றாலும், தங்களுக்கு போஜனம் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறவர்கள். அழைப்பு
ஊழியக்காரன் எஜமானுடைய கட்டளையின்படியே சீக்கிரமாய்போய் பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் இருக்கிற ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும், குருடரையும் கூட்டிக்கொண்டு வருகிறான். "ஆண்டவரே நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று” என்று எஜமானிடம் கூறுகிறான்.
கர்த்தருடைய பந்தியில் ஏராளமான யூதர்கள் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களில் வேதபாரகரும் பரிசேயரும் ஒருவர்கூட இல்லை. ஆயக்காரரும் பாவிகளும் கர்த்தருடைய பந்தியில் அமர்ந்திருக்கிறார்கள். வேலைக்காரன் எஜமானுடைய கட்டளையின்படி எல்லோரையும் அழைத்து வந்து “இன்னும் இடம் இருக்கிறது” என்று கூறுகிறான். எஜமான் தன் ஊழியக்காரனை மறுபடியும் அனுப்பி “நீ பெரு வழிகளிலும் வேலிகள் அருகிலும்போய் என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டு வா" என்று கூறுகிறார்."
ஊழியக்காரன் இப்போது பெரு வழிகளுக்குப் போகவேண்டும். வேலிகள் அருகிலே போகவேண்டும். கிராமப்புறங்களுக்குச் செல்ல வேண்டும். வயல்களில் தங்களுடைய வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிச் செல்கிறவர்களை இவன் வருந்தி அழைக்க வேண்டும். விருந்துக்கு வருமாறு பலாத்காரம் பண்ணமுடியாது. ஆனால் நம்முடைய வார்த்தைகளினால் அவர்களை வருந்தி அழைத்து விருந்துக்கு வருமாறு பலவந்தம் பண்ணலாம். அவர்களுக்கு விருப்பமில்லையென்றாலும்,
எப்படியாவது அவர்களையும் விருந்துக்கு அழைத்து வர முயற்சி பண்ண வேண்டும்.
ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும் விருந்துக்கு அழைக்கும்போது
நம்முடைய அழைப்பு கண்ணியமானதாகவும் நேர்மையானதாகவும் இருக்க வேண்டும்.
நாம் மெய்யாகவே அழைக்கப்படுகிறோம் என்னும் உணர்வை அவர்களுக்குள்
உண்டாக்கவேண்டும்.
பொதுவாக ஏழைகளும் ஊனமுற்றோரும் தாங்கள்
விருந்துக்கு அழைக்கப்படுகிறோம் என்பதை நம்பமாட்டார்கள். தங்களுக்கு அழைப்பு கிடைக்குமென்று இவர்கள் ஒருபோதும் எதிர்பார்ப்பதில்லை. எதிர்பாராதவிதமாக
இவர்களுக்கு அழைப்பு கொடுக்கும்போது இவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
அழைப்பை ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள். இவ்வாறு தயங்குகிறவர்களையும் நாம்
வருந்தி அழைத்து கர்த்தருடைய பந்திக்கு அழைத்து வரவேண்டும்.
பெருவழிகளிலும், வேலிகள் அருகிலும் இருக்கிற ஜனங்கள் புறஜாதியாரை குறிக்கிற வாக்கியமாகும். கர்த்தர் இவர்களைக் கொண்டு தம்முடைய வீட்டை நிரப்ப விரும்புகிறார். புறஜாதியாரைக் கொண்டு கர்த்தர் தம்முடைய ஆலயத்தை நிரப்ப சித்தங்கொண்டிருக்கிறார்.
ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்பதற்காக இயேசுகிறிஸ்து எல்லாக்காரியங்களையும் செய்து நிறைவேற்றியிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷம் வீணாய்ப்போவதை தேவன் ஒருபோதும் விரும்புவதில்லை. ஆகையினால் சுவிசேஷத்தை ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துவிட்டாலும், அதை நன்றியோடு ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.
இவர்களுக்கும் இரட்சிப்பின் அழைப்பைக் கொடுக்க வேண்டும். இவர்கள் சுவிசேஷத்தை நன்றியோடு ஏற்றுக்கொள்வார்கள்.
இந்த உலகத்தில் ஏழையாக இருக்கிறவர்களையும், மற்றவர்களால் தாழ்வாக நினைக்கப்படுகிறவர்களையும் இயேசுகிறிஸ்து கைவிட்டுவிடவில்லை. அவர்களையும்
நேசிக்கிறார். ஐசுவரியவான்களையும், உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களையும் வரவேற்பதுபோல இயேசுகிறிஸ்து தரித்திரரையும், தாழ்மையானவர்களையும் வரவேற்கிறார். விருந்து பண்ணும்போது ஏழைகளையும், ஊனரையும் சப்பாணிகளையும், குருடரையும் அழைப்பாயாக" (லூக் 14:13) என்று கூறியிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் இந்த வார்த்தை இந்த உவமையின் உறுதிபண்ணப்படுகிறது. இயேசுகிறிஸ்து ஏழைகளையும் ஊனரையும், சப்பாணிகளையும், குருடரையும் புறக்கணிக்காமல் ஏற்றுக்கொள்வதுபோல நாமும் மூலமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இயேசுகிறிஸ்துவில் உள்ள சிந்தையே நம்மிடத்திலும் காணப்படவேண்டும். இவர்களை
ஒரு சிலர் இரட்சிக்கப்படுவதற்கு வாய்ப்பேயில்லை என்று நாம் நினைப்போம். அவர்களுக்கு சுவிசேஷத்தைப்பற்றி ஒன்றும் தெரியவில்லையென்றும், வேத அறிவு அவர்களுக்கு சிறிதும் இல்லையென்றும் அவர்களைப்பற்றி நாம் நினைப்போம். ஆனால் கர்த்தருடைய கிருபையினால் இப்படிப்பட்டவர்கள் மத்தியில்கூட சுவிசேஷம் வல்லமையாக கிரியை செய்கிறது. இவர்களில் ஏராளமானோர் இரட்சிக்கப்படுகிறார்கள். பரிசேயரும் ஆயக்காரரும் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்பாக ஆயக்காரரும் பாவிகளும் அங்கு பிரவேசித்து விடுகிறார்கள். பிந்தினோர் முந்தினோராகவும், முந்தினோர் பிந்தினோராகவும் இருக்கிறார்கள்.
சுவிசேஷத்தை அறிவிக்கும்போது, ஒரு சில ஜனங்கள் இரட்சிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று நினைத்து அவர்கள்மீது நமது நம்பிக்கையை அதிகமாக வைக்கக்கூடாது. அதே வேளையில் ஒரு சில ஜனங்கள் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்று நினைத்து அவர்களை புறக்கணித்துவிடவும் கூடாது.
கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் விரைந்து செயல்படுகிறவர்களாக இருக்கவேண்டும். ஊழியக்காரரின் மனதில் பட்சபாதம் இருக்கக்கூடாது. எஜமான் தன் ஊழியக்காரனை “நீ சீக்கிரமாய் போ" என்று அனுப்புகிறார். ஏனெனில் "எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது". கிறிஸ்துவின் ஊழியக்காரர்களும் சிறிது நேரத்தையும் வீணாக்கக்கூடாது. இரட்சிப்பு ஆயத்தமாக இருக்கிறது. இதுவே இரட்சணியக்காலம். ஆகையினால் காலத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்ளவேண்டும்.
சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களை ஏராளமானோர் அனுபவிக்கிறார்கள். ஆயினும் ஆசீர்வாதம் ஒருபோதும் குறைந்துபோவதில்லை. "இன்னும் இடம் இருக்கிறது” என்று எஜமான் சொன்னதுபோல, இரட்சிப்பின் ஆசீர்வாதம் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவில் நமக்கு போதுமான எல்லா ஆசீர்வாதங்களும் குறைவில்லாமல் நிறைவாக உள்ளன. இயேசுகிறிஸ்து நம் எல்லோருக்குமே போதுமானவர். எல்லோரையும் இரட்சிக்க வேண்டுமென்று விரும்புகிறார். சுவிசேஷம் எல்லோருக்கும் பொதுவானது. அது யாரையும் வெறுத்து ஒதுக்கிவிடுவதில்லை. சுவிசேஷத்தை வேண்டாமென்று மனுஷர்தான் வெறுத்து ஒதுக்கிவிடுகிறார்கள். இவர்களுக்கு மாத்திரமே சுவிசேஷத்தின் ஆசீர்வாதம் கிடைக்காமல் போய்விடும்.
கிறிஸ்துவின் வீடு பெரியது. இது பெரியதாக இருந்தாலும் இந்த வீடும் நிறைய வேண்டும் என்பதே தேவனுடைய சித்தம். தேவாலயம் பெரியதாக இருந்தாலும், அந்த ஆலயம் முழுவதையும் தம்முடைய பிள்ளைகளினால் நிரப்ப வேண்டுமென்று கர்த்தர் சித்தமுள்ளவராக இருக்கிறார்.

