அநீநியுள்ள நியாயாதிபதி லூக் 18 : 1-8
லூக் 18:1. சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
லூக் 18:2. ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.
லூக் 18:3. அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினாள்.
லூக் 18:4. வெகுநாள் வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரைமதியாமலும் இருந்தும்,
லூக் 18:5. இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்-க்கொண்டான் என்றான்.
லூக் 18:6. பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.
லூக் 18:7. அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாம-ருப்பாரோ?
லூக் 18:8. சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
எப்பொழுதும் ஜெபம்
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்: (லூக் 18:1)
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும். தேவனுடைய பிள்ளைகள் எல்லோருமே ஜெபிக்கிற பிள்ளைகளாக இருக்கவேண்டும். தங்களுக்கு தேவைகள் ஏற்படும்போதும், நம்மிடத்தில் வேண்டுதல்களும் விண்ணப்பங்களும் இருக்கும்போதும், இவற்றை பெற்றுக்கொள்ளும் வரையிலும் நாம் தொடர்ந்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்க வேண்டும்.
தேவனுடைய சமுகத்திற்கு வந்து ஜெபிப்பது நமக்குக் கிடைத்திருக்கும் சிலாக்கியமாகும். ஜெபிப்பது நமது கடமை. தேவனிடத்தில் நாம் கட்டாயம் ஜெபித்தே ஆகவேண்டும். ஒரு வேலையை தொடர்ந்து செய்வதுபோல நாம் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆகையினால்தான் இயேசுகிறிஸ்து நம்மிடம் ""எப்பொழுதும் ஜெபம் பண்ணுங்கள்'' என்றும், ""ஜெபத்தில் சோர்ந்து போகாதிருங்கள்'' என்றும் கூறுகிறார்.
நம்முடைய வேண்டுதல்களையும் விண்ணங்களையும் கர்த்தரிடத்தில் ஏறெடுக்கும்போது, அவற்றை பெற்றுக்கொள்ளுகிற வரையிலும் நம்முடைய ஜெபத்தை நிறுத்திவிடக்கூடாது. ஜெபத்திற்கு அடுத்ததாக கர்த்தருடைய சமுகத்தில் நாம் கேட்டதைப் பெற்றுக்கொள்வதும், அதற்கு அடுத்தபடியாக அதற்காக நாம் கர்த்தரைத் துதிப்பதும் தொடர்ந்து நடைபெற வேண்டும். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் ஜெபமும் துதியும் இடைவிடாமல் தொடர்ந்து ஏறெடுக்கப்பட வேண்டும். இரண்டிற்கும் இடைவெளி விட்டு நம்முடைய ஜெபத்தையோ அல்லது நம்முடைய துதியையோ நிறுத்திவிடக்கூடாது.
இயேசுகிறிஸ்து சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும் என்னும் சத்தியத்தை விவரிப்பதற்கு ஒரு உலகப்பிரகாரமான சம்பவத்தை இங்கு உவமையாக கூறுகிறார். நாம் தேவனுடைய சமுகத்தில் ஆவிக்குரிய கிருபைகளையும் தேவனுடைய இரக்கத்தையும் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பம் பண்ணுகிறோம். ஒருவேளை நம்முடைய ஜெபம் நமக்காகவோ அல்லது நம்முடைய சபையின் ஊழியங்களுக்காகவோ ஏறெடுக்கப்படலாம்.
நம்முடைய ஆவிக்குரிய சத்துருவுக்கு விரோதமாக தேவன் நம்மை பலப்படுத்த வேண்டுமென்றும், மாம்சத்தின் இச்சைகளிலிருந்து தேவன் நம்மை விலகிக் காத்துக்கொள்ள வேண்டுமென்றும் நாம் இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும். தேவனுடைய சமுகத்தை தேடுகிற நாம் அவரை வீணாக தேடுவதில்லை. கர்த்தரிடத்தில் வருகிறவர்கள் யாரும் ஒருபோதும் வெட்கப்பட்டு திரும்பிப்போவதில்லை. ஆகையினால் நாம் ஜெபத்தில் சோர்ந்து போகக்கூடாது. எப்பொழுதும் ஜெபம்பண்ணிக் கொண்டிருக்க வேண்டும்.
நம்முடைய இருதயம் தளர்ந்து விடக்கூடாது. சந்தேகம், பயம், அவிசுவாசம், மனத்தளர்ச்சி ஆகியவற்றிற்கு இடம் கொடுத்து, நாம் மனம் தளர்ந்துவிடக் கூடாது. நமது ஜெபத்திற்கு உடனடியாகப் பதில் கிடைக்கவில்லையென்றால் சோர்ந்துபோய்விடக் கூடாது. ஜெபத்திற்குப் பதில் நிச்சயமாகக் கிடைக்கும். இது தெய்வீக சித்தம். இயேசு கிறிஸ்து தமது திருஇரத்தத்தின் மூலமாக நம்மோடு ஏற்படுத்தியிருக்கும் இரத்த உடன்படிக்கை. ஆகையினால் நமது ஆவிக்குரிய ஜீவியத்தில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக.
ஒரு நியாயாதிபதி
ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான் (லூக் 18:2).
நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில் சோர்ந்து போகாமல் இடைவிடாமல் முயற்சி பண்ணவேண்டும். முயற்சி செய்கிறவர்கள் இகழ்ச்சியடையமாட்டார்கள். சோர்ந்துபோகாமல் முயற்சி பண்ணும்போது வெற்றி கிடைக்கும். ஒரு பட்டணத்தில் ஒரு நியாயாதிபதி இருக்கிறான். அந்த பட்டணத்திலே ஒரு விதவையும் இருக்கிறாள். இந்த நியாயாதிபதி அநியாயாதிபதியாக இருக்கிறான். இவன் தேவனுக்குப் பயப்படாதவன். மனுஷரை மதியாதவன். இவனிடத்தில் இந்த விதவை தனக்கு நியாயம் கிடைப்பதற்காக எப்பொழுதும் இவனை தொந்தரவு பண்ணிக்கொண்டிருக்கிறாள். இவள் இடைவிடாமல் முயற்சி செய்ததினால் இந்த நியாயாதிபதியினிடத்தில் நியாயம் பெற்றுக்கொள்கிறாள்.
இந்த விதவை நியாயாதிபதியினிடத்தில் தொடர்ந்து விண்ணப்பம்பண்ணியதினால் தேவனுக்குப் பயப்படாத அவன், தேவனுக்குப் பயப்பட ஆரம்பித்துவிடவில்லை. மனுஷரை மதியாத அந்த நியாயாதிபதி, மனுஷரை மதித்து நடக்க ஆரம்பித்துவிடவில்லை. ஆயினும் அவள் சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் தன்னிடம், அவள் தன் நியாயத்தைப்பற்றி விண்ணப்பம்பண்ணிக் கொண்டிருந்ததினால், இனிமேலும் அவள் தனக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று நினைத்து, அவளுக்கு நியாயம் செய்ய முன்வருகிறான். இயேசுகிறிஸ்து இந்த சம்பவத்தை இங்கு உவமையாக கூறுகிறார்.
பட்டணத்திலுள்ள இந்த நியாயாதிபதி தன்னுடைய உத்தியோகத்திற்கு தகுந்தபடி கண்ணியமாக நடந்துகொள்ளவில்லை. இவன் தேவனுக்கும் பயப்படவில்லை. மனுஷரையும் மதிக்கவில்லை. தன்னுடைய கடமையை கவனத்துடன் செய்யவில்லை. தேவனுக்குரிய கடமையையும் மனுஷருக்குரிய கடமையையும் செய்யாமல் இவன் சோம்பேறியாக இருக்கிறான். தேவபயமென்றால் என்ன என்பதே இவனுக்குப் புரியவில்லை. மனுஷரை மதிக்க வேண்டும் என்னும் அடிப்படை மனிதாபிமானம்கூட இவனிடத்தில் காணப்படவில்லை.
ஆனால் நம்முடைய கர்த்தரோ இந்த நியாயாதிபதியைப்போல தம்முடைய பிள்ளைகளை மதிக்காதவரல்ல. அவருடைய பார்வையில் நாம் விசேஷித்தவர்களாக இருக்கிறோம். தேவபயமில்லாதவர்கள், தேவனுடைய சிருஷ்டிகளாகிய மனுஷரிடத்திலும் அன்பில்லாதவர்களாகவே இருப்பார்கள். தேவபயமில்லாதவர்களிடத்தில் நற்கிரியைகளை எதிர்பார்க்கமுடியாது. தேவபயமும் மனுஷரை மதியாத குணமும் சாதாரண மனுஷனுக்கே தகாது. அதிலும் ஒரு நியாயாதிபதி இப்படிப்பட்ட துன்மார்க்கனாக இருக்கவேகூடாது. தன்னுடைய உத்தியோகத்தின் மூலமாக இவன் மனுஷருக்கு நன்மை செய்ய வேண்டியவன். ஆனால் இவனோ தன் அதிகாரத்தை பயன்படுத்தி மனுஷருக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக தீமை செய்துவிடுவான்.
ஒரு விதவை
அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினாள் (லூக் 18:3).
நியாயாதிபதி இருக்கும் இதே பட்டணத்தில் ஒரு விதவையும் இருக்கிறாள். இவளுக்கு எதிராக யாரோ பிரச்சனை செய்திருக்கிறார்கள். இவளுடைய பக்கத்தில் நீதி இருக்கிறது. தன்னுடைய வழக்கை விசாரித்து தனக்கு நீதி கிடைக்க உதவிபுரியுமாறு இவள் இந்த நியாயாதிபதியினிடத்தில் விண்ணப்பம் பண்ணுகிறாள். நியாயாதிபதியினிடத்தில் விண்ணப்பம் பண்ணுகிறவர்கள் பொதுவாக முறைப்படி நியாயமன்றத்தின் வழியாகத்தான் வழக்காட வேண்டும். நியாய விசாரணைக்கென்று ஒரு சில ஒழுங்குமுறைகள் உள்ளன. ஆனால் இந்த விதவை நியாய விசாரணை ஒழுங்கு முறை எதையும் பின்பற்றாமல் தன் நியாயாதிபதியை எப்பொழுதும் தொந்தரவு செய்துகொண்டிருக்கிறாள்.
தனக்கும் தன் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் தனக்கு நியாயம் செய்ய வேண்டுமென்று இந்த விதவை தன் பட்டணத்திலுள்ள நியாயாதிபதியினிடத்தில் அனுதினமும் விண்ணப்பம் பண்ணுகிறாள். பரிதாபமாக கெஞ்சுகிறாள். நியாயாதிபதிகள் விதவைகளை ஒடுக்கக்கூடாது. ஒடுக்கிறவர்களுடைய கைகளுக்கு பாதிக்கப்பட்டவர்களைத் தப்புவிக்கவேண்டும் (எரே 22:3). நியாயாதிபதிகள் ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரிக்க வேண்டும் (ஏசா 1:17).
பரிசுத்த வேதாகமத்தில் 84 இடங்களில் விதவைகளைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. 15 இடங்களில் பெற்றோர் இல்லாதவர், விதவை என்று அழைக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் நியாயப் பிரமாணத்தின் பிரகாரம் பராமரிக்கப்பட்டு வந்தார்கள். (யாத் 22:22-24) தேவனுடைய விசேஷித்த பராமரிப்பும், விதவைகளுக்கு எப்போதும் உள்ளது. (சங் 68:5). விதவைகளை ஒடுக்கியதற்காக தீர்க்கதரிசிகள் இஸ்ரவேல் புத்திரரைக் கடிந்து கொண்டார்கள். (ஏசா 1:17,23). பரிசேயர் விதவைகளை ஒடுக்கினார்கள். இதற்காக இயேசு அவர்களைக் கடிந்து கொண்டார். (மத் 23:14; மாற்கு 12:40; லூக்கா 20:47) விதவைகளைக் குறித்த காரியத்தில் சபைகளுக்கு அறிவுரைகள் கொடுக்கப் பட்டுள்ளன. (1கொரி 7:8-9; 1தீமோ 5:16; யாக் 1:27). விதவைகளைக் குறித்த பொருத்தனைகள். (எண் 30:9). ஆசாரியரின் குமாரத்திகளை அவர்களுடைய பெற்றோர் பராமரிக்க வேண்டும். (லேவி 22:13). ஆசாரியர் விதவைகளைத் திருமணம் செய்யக்கூடாது. (லேவி 21:14) ஒரு சகோதரன் விதவையாக இருக்கும் தன்னுடைய சகோதரனின் மனைவியைத் திருமணம் செய்து தங்களுடைய குடும்பத்தின் சுதந்தரத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். (உபா 25:5-10; மத் 22:23-33). ஆதித்திருச்சபையில் முதலாவது பிரச்சனை விதவைகள் விசாரிப்பது தொடர்பாகவே எழுந்தது. (அப் 6:1-7)
வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதவைகள்
1. தாமார் (ஆதி 38:1-39)
2. நகோமி, ஓர்பாள், ரூத் (ரூத் 1)
3. தெக்கோவா (2சாமு 14:5)
4. ஈராமின் தாயார் (1இராஜா 7:14)
5. செரூபாள் (1இராஜா 11:26)
6. சாரிபாத் ஊரிலுள்ள விதவை (1இராஜா 17)
7. தீர்க்கதரிசியின் மனைவி (2இராஜா 4)
8. அன்னாள் (லூக்கா 2:36-37)
9. ஏழை விதவை (மாற்கு 12:41; லூக்கா 21:2)
10. நாயீன் ஊர் விதவை (லூக்கா 7:11-15)
11. விடாமுயற்சியோடு தொடர்ந்து விண்ணப்பம் பண்ணிய விதவை (லூக்கா 18:1-8)
12. தபித்தாள், அல்லது தொற்காள் (அப் 9:36-42)
அந்த விதவை நியாயாதிபதி இடத்தில் நீடிய பொறுமையோடு தொடர்ந்து போய், தன்னுடைய வழக்கைக் குறித்துப் பேசி, தனக்கு நியாயம் பண்ண வேண்டுமென்று விண்ணப்பம் பண்ணுகிறாள். அவளுடைய நீடிய பொறுமையும், விடாமுயற்சியும் அவளுக்கு வெற்றியைத் தேடித் தந்தது.
எப்பொழுதும் தொந்தரவு
வெகுநாள் வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரைமதியாமலும் இருந்தும், இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்-க்கொண்டான் என்றான் (லூக் 18:4,5).
இந்த விதவை தன்னுடைய வழக்கை நியாயாதிபதியிடம் ஏற்கெனவே கூறிவிட்டாள். தனக்கும் தன் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் தனக்கு நியாயம் செய்ய வேண்டுமென்று ஏற்கெனவே விண்ணப்பம் பண்ணியிருக்கிறாள். ஆனால் இந்த நியாயாதிபதியோ இவளுடைய வழக்கை விசாரியாமல், இவளுக்கு நியாயம் செய்யாமல் காலதாமதம்பண்ணி வருகிறான். வெகுநாள் வரைக்கும் இவளுக்கு நியாயம் செய்ய அந்த நியாயாதிபதிக்கு மனதில்லாமல் போயிற்று.
இந்த நியாயாதிபதி மனுஷரை மதியாதவன். தேவனுக்குப் பயப்படாதவன். தன்னுடைய சுபாவத்தின்படி இவன் இந்த விதவைக்கு உதவி செய்ய மனதில்லாதவனாக, அவளுக்கு நியாயம் செய்யாமல் சும்மா இருக்கிறான். ஒருவேளை இந்த விதவை தனக்கு லஞ்சம் கொடுப்பாள் என்று எதிர்பார்த்து வழக்கை விசாரிப்பதில் காலதாமதம் செய்திருக்கலாம். ஆனால் இந்த விதவைக்கோ லஞ்சம் கொடுக்கவும் பண வசதியில்லை. என்றாலும் தன்னுடைய முயற்சியில் இவள் சோர்ந்துபோய்விடவில்லை. அந்த நியாயாதிபதியை அனுதினமும் பார்த்து தனக்கு நியாயம் செய்ய வேண்டுமென்று விண்ணப்பம் பண்ணிக்கொண்டிருக்கிறாள்.
இந்த விதவை அந்த பட்டணத்து நியாயாதிபதியை எப்பொழுதும் தொந்தரவு செய்துகொண்டிருக்கிறாள். இவனோ அநீதியுள்ள நியாயாதிபதி. மனுஷரை மதியாதவன். ஆனால் இப்படிப்பட்ட நியாயாதிபதியை இந்த விதவை எப்பொழுதும் தொந்தரவு பண்ணுகிறாள். இவனை அலட்டுகிறாள். இவள் தொடர்ந்து தன்னை அலட்டுவது நியாயாதிபதிக்கு பிடிக்கவில்லை. ஆகையினால் இவளுக்கு நியாயம் செய்துவிட்டால் இனிமேல் தன்னிடத்தில் வந்து தன்னை தொந்தரவு செய்யமாட்டாள் என்றும், தன்னை அலட்டமாட்டாள் என்றும் தனக்குள் தீர்மானம் பண்ணுகிறான்.
இந்த விதவைக்கு நியாயம் செய்ய வேண்டுமென்று நியாயாதிபதி தனக்குள் தீர்மானம்பண்ணுகிறான். இவளுக்கு உதவிபுரியும் எண்ணம் இவனுடைய மனதில் இல்லை. ஆனால் இந்த விதவை தன்னை தொந்தரவு பண்ணுவதை இவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவளுடைய தொந்தரவிலிருந்து எப்படியாவது விடுதலை பெறவேண்டுமென்று விரும்புகிறான். இந்த வழக்கை விசாரித்து இவளுக்கு நியாயம் செய்கிற வரையிலும் இவள் தன்னை சும்மாவிடமாட்டாள் என்பது இவனுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. ஆகையினால்தான் இவன் அவளுக்கு நியாயம் செய்ய முன்வருகிறான். இவ்வாறாக இந்த விதவை தன்னுடைய வழக்கை இந்த நியாயாதிபதியினிடத்தில் சோர்ந்துபோகாமல் தொடர்ந்து விண்ணப்பம்பண்ணி, அவனை தனக்கு நியாயம் செய்ய வைத்தாள்.
அந்த விதவைக்கு நியாயம் செய்ய, நியாயாதிபதிக்கு வெகுநாள் வரைக்கும் மனதில்லை. எத்தனை நாள் என்று தெரியவில்லை. ஆனால் எல்லா நாட்களிலும் இந்த விதவை தனக்கு நியாயம் செய்ய வேண்டுமென்று விண்ணப்பம் பண்ணிக் கொண்டே இருந்தாள்.
விதவை நியாயாதிபதியை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறாள். அவளுடைய தொந்தரவை அவனால் தாங்கமுடியவில்லை. அவள் தன்னை இனிமேல் அலட்டக்கூடாது என்று விரும்புகிறான். இதற்காகவாவது அவளுக்கு நியாயம் செய்ய வேண்டுமென்று தன் மனதிலே சொல்லிக் கொண்டான். இவள் தொடர்ந்து வருவது நியாயாதிபதிக்குத் தொந்தரவாக இருக்கிறது. அவளைச் சமாளிக்கக்கூடிய பொறுமை அவனுக்கு இல்லை.
இரவும் பகலும்
பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள். அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாம-ருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார் (லூக் 18:6-8).
இயேசுகிறிஸ்து இந்த உவமையைக்கூறி, தம்முடைய பிள்ளைகளும் சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ண வேண்டும் என்று உபதேசம் பண்ணுகிறார். தேவன் தம்முடைய பிள்ளைகளிடத்தில் எப்போதுமே கிருபை உள்ளவராகவே இருக்கிறார். அநீதியுள்ள அந்த நியாயாதிபதியே சொன்னதை சிந்தித்துப் பாருங்கள் என்று இயேசு கூறுகிறார். அநீதியுள்ள நியாயாதிபதி நியாயம் செய்யும்போது, நீதியுள்ள தேவன் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து நமக்கு நிச்சயமாகவே நியாயம் செய்வார்.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் எல்லோருமே அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். அவருடைய ஆசீர்வாதத்திற்கும் சுதந்தரத்திற்கும் பங்காளிகளாகுமாறு அவர் நம்மை தெரிந்துகொண்டிருக்கிறார். தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய நம்முடைய விஷயத்தில் கர்த்தர் நீடியபொறுமையுள்ளவராக இருந்து நமக்கு நியாயம் செய்வார்.
இந்த உலகத்தில் உள்ள எல்லோருமே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அல்ல. இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் மாத்திரமே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். இவர்கள் தேவனுடைய ஜனம். தம்முடைய பிள்ளைகளுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று தேவன் எப்போதுமே நம்மீது கண்ணோக்கமாக இருக்கிறார். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு இந்த உலகத்தில் பல எதிர்ப்புக்களும் பல பாடுகளும் உண்டு. இங்கு நமக்கு பல எதிராளிகள் இருக்கிறார்கள். ஏராளமானோர் நமக்கு விரோதமாக கிரியை செய்கிறார்கள். நமக்கு மெய்யான பாதுகாப்பு தேவனிடமிருந்து மாத்திரமே வரும். நமது பாதுகாப்புக்காக நாம் தேவனுடைய சமுகத்தில் அவரையே சார்ந்திருக்க வேண்டும்.
தேவன் தம்முடைய ஜனத்திற்கு நன்மை செய்ய விரும்புகிறார். நியாயம் செய்ய விரும்புகிறார். அதே வேளையில் அவர் நம்மிடமிருந்து சில காரியங்களையும் எதிப்பார்க்கிறார். நாம் அவரை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாக இருக்க வேண்டும். தேவனுடைய சமுகத்தில் வந்து ஜெபிப்பதை நமது கடமையாக்கிக் கொள்ளவேண்டும். தம்முடைய சமுகத்தில் இரவும் பகலும் ஜெபிக்கிறவர்களுக்கு மாத்திரமே தேவன் தம்முடைய கிருபையையும் இரக்கத்தையும் வாக்குப்பண்ணுகிறார்.
இந்த விதவையைப்போல, நாமும், நம்முடைய ஆவிக்குரிய எதிராளிக்கு விரோதமாக, தேவனிடத்தில் சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும். நம்முடைய உள்ளத்தில் எழும்பக்கூடிய பாவமான சிந்தனைகளுக்கு விரோதமாக கர்த்தருடைய சமுகத்தில் ஜெபிக்க வேண்டும். சோதனைகளை மேற்கொள்வதற்கு தேவன் நம்மை பலப்படுத்த வேண்டுமென்று ஜெபிக்கவேண்டும். துன்புறுத்தப்படும் சபைகளுக்காகவும், நெருக்கப்படும் சபைகளுக்காகவும் தேவனுடைய சமுகத்தில் எப்பொழுதும் மன்றாடி ஜெபிக்க வேண்டும். தேவன் தம்முடைய சபைக்கு நியாயம் செய்ய வேண்டுமென்று விசுவாசிகள் அவருடைய சமுகத்தில் சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும்.
கர்த்தருடைய பிள்ளைகள் தேவனுடைய சமுகத்தில் இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாக இருக்கவேண்டும். கூப்பிடுதல் என்றால் மெதுவாக முனங்குவது அல்ல. சத்தமிட்டு அழைப்பதே கூப்பிடுவதாகும். நாமும் தேவனுடைய சமுகத்தில் நம்முடைய சப்தத்தை உயர்த்தி இரவும் பகலும் விண்ணப்பம் பண்ணவேண்டும். தேவனோடு போராடி ஜெபிக்க வேண்டும். ""எருசலேமே, உன் மதில்களின் மேல் பகல்முழுதும் இராமுழுவதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது. அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்'' (ஏசா 62:6,7).
நாம் ஜெபிக்கும்பொழுது சில சமயங்களில் நமது ஜெபத்திற்கு தேவன் உடனடியாக பதில் கொடுப்பதில்லை. காலதாமதம் ஏற்படும்போது நாம் சோர்ந்து போய்விடுகிறோம். ஆனால் நம்முடைய தேவனோ நம்முடைய விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கிறார். நம்முடைய விஷயத்தில் மாத்திரமல்ல, நமக்கு விரோதமாக கிரியை செய்யும் எதிராளிக்கு நியாயம் செய்யும் விஷயத்திலும் பொறுமையுள்ளவராக இருக்கிறார்.
கர்த்தர் ஜெபத்திற்கு பதில் கொடுப்பதில் காலதாமதம் பண்ணினாலும், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு நிச்சயமாகவே ஏற்றவேளையில் ஜெபத்திற்கு பதில்கொடுக்கப்படும். தேவனுடைய கிருபையும் இரக்கமும் நிச்சயமாகவே விசுவாசிகளைத் தொடும். காலதாமதம் ஏற்பட்டாலும் ஏற்றவேளை வரும்போது கர்த்தர் நமக்கு பதில்கொடுப்பார். இந்த விதவை தன் நியாயாதிபதியை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறதுபோல, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் ஆண்டவருடைய சமுகத்தில் சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ண வேண்டும். நாம் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். நம்முடைய ஜெபம் கர்த்தருக்கு ஒருபோதும் தொந்தரவாகயிராது.
இந்த விதவை பட்டணத்து நியாயாதிபதிக்கு அந்நிய ஸ்திரீயாக இருக்கிறாள். ஆனால் நாமோ நம்முடைய தேவனுக்கு அந்நியரல்ல. நாம் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாக இருக்கிறோம். அவர் நம்மை அறிந்திருக்கிறார். அவர் நம்மை நேசிக்கிறார்.
பட்டணத்து நியாயாதிபதியிடம், தன் வழக்கை விசாரித்து தனக்கு நியாயம் செய்ய வேண்டுமென்று, இந்த ஒரு ஸ்திரீ மாத்திரமே விண்ணப்பம் பண்ணுகிறாள். நியாயாதிபதிக்கு முன்பாக இவள் தனிமையாக இருக்கிறாள். ஆனால் கர்த்தருடைய சமுகத்தில் ஜெபிக்கும் நாமோ அநேகராக இருக்கிறோம். விசுவாசிகள் எல்லோரும் ஒருமனப்பட்டு ஒன்றுகூடி கர்த்தருடைய சமுகத்தில் ஜெபிக்கும்போது, நாம் அவருடைய கிருபாசனத்தை முற்றிகையிடுகிறோம்.
இந்த விதவை நியாயாதிபதியினிடத்தில் வந்தபோது, தூரத்தில் நின்று தன் வழக்கை பேசுகிறாள். இவளுக்கும் நியாயாதிபதிக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. ஆனால் நமக்கும் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கும் இடையில் இடைவெளியில்லை. நெருக்கமான உறவு இருக்கிறது. நாம் அவருடைய சமுகத்தில் தைரியமாக பிரவேசிக்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.
இந்த விதவை அநீதியுள்ள அந்த நியாயாதிபதியினிடத்தில் வந்திருக்கிறாள். ஆனால் நம்முடைய பிதாவாகிய தேவனோ நீதியுள்ளவர். தன்னுடைய சொந்த வழக்கை விசாரித்து, தனக்கு நியாயம் செய்ய வேண்டுமென்று இந்த விதவை நியாயாதிபதியினிடத்தில் வந்திருக்கிறாள். நியாயாதிபதி மனுஷரை மதியாதவனாக இருந்தபோதிலும், எப்படியாவது தனக்கு நியாயம் கிடைக்குமென்று இவள் எதிர்பார்த்து அவனிடம் மன்றாடுகிறாள். ஆனால் தேவனுடைய சமுகத்தில் நாம் விண்ணப்பம்பண்ணும்போது, நம்மீது பிரியமுள்ள தேவன் நம்முடைய நன்மைகளை விசாரிப்பதில் சித்தமுள்ளவராகவும் ஆர்வமுள்ளவராகவும் இருக்கிறார். நாம் அவரிடத்தில் வேண்டிக்கொள்வதற்கு முன்பாகவே நம்முடைய தேவைகளை தேவன் தெரிந்து வைத்திருக்கிறார். நாம் வேண்டிக்கொள்வதற்கும், விண்ணப்பம்பண்ணுவதற்கும், நினைப்பதற்கும் அதிகமாக நம்முடைய தேவன் நமக்கு நன்மை செய்கிறவர்.
இந்த விதவை நியாயாதிபதியினிடத்தில் தன்னுடைய வழக்கை விண்ணப்பம்பண்ணிய போது இவளுக்கு உதவிபுரிய சிநேகிதர் யாருமில்லை. இவளுக்காக பரிந்து பேசுவதற்கு யாரும் முன்வரவில்லை. தன்னுடைய காரியத்தை தானே பேசுகிறாள். இவளுக்காக பரிந்து பேச ஒருவர் கூடயில்லை. ஆனால் நம்முடைய பிதாவின் சமுகத்தில் நமக்காக பரிந்துபேசும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நமக்கு உதவிசெய்கிறார்.
இந்த விதவை நியாயாதிபதியினிடத்தில் தன் வழக்கை விண்ணப்பம்பண்ணும்போது, அவன் கேட்டும் கேளாதவன்போல இருக்கிறான். சோர்ந்துபோகும் நேரத்தில் இவளுக்கு உற்சாகப்படுத்த ஒருவருமில்லை. வேறுவழியில்லாமல் தனக்கு எப்படியாவது நியாயம் கிடைக்க வேண்டுமே என்னும் எண்ணத்தில் இவள் நியாயாதிபதியின் சமுகத்தில் காத்துக்கிடக்கிறாள். ஆனால் தேவனுடைய சமுகத்தில் நாம் விண்ணப்பம்பண்ணும்போது அவருடைய வாக்குத்தத்தங்கள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்காக வேதாகமத்தில் ஏராளமான வாக்குத்தத்தங்களை கூறியிருக்கிறார். இந்த வாக்குத்தங்களெல்லாம் நமக்கே உரியவை. இவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக தேவன் நம்மைத் தெரிந்தெடுத்திருக்கிறார்.
இந்த விதவை தன் நியாயாதிபதியை எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியாது. பார்வையாளர்கள் அந்த நியாயாதிபதியை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படும் வேளையில் மாத்திரமே இவளால் அவரைப் பார்க்கமுடியும். ஆனால் கர்த்தருடைய சமுகத்தில் அவருடைய பிள்ளைகளாகிய நாம் எப்போது வேண்டுமானாலும் போகலாம். இரவும் பகலும் அவரை நோக்கிக் கூப்பிடலாம்.
இந்த விதவை தனக்கு நியாயம் செய்ய வேண்டுமென்று ஒவ்வொரு நாளும் நியாயாதிபதியினிடத்தில் கேட்பது அவனுக்கு தொந்தரவாக இருக்கிறது. இவள் தன்னை அலட்டுவதாக நினைக்கிறான். ஆனால் நாம் கர்த்தருடைய சமுகத்தில் சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணுவது தேவனைப் பிரியப்படுத்துகிறது. தேவனுடைய சமுகத்திற்கு போகும்போதே, நாம் கேட்டதைப் பெற்றுக்கொள்வோம் என்னும் நம்பிக்கையோடு போகலாம். ஜெபவேளை விசுவாசிகளுக்கு சந்தோஷமான வேளை. கர்த்தருடைய சமுகத்தில் அமர்ந்திருப்பது விசுவாசிகளுக்கு ஆறுதலை அளிக்கும் வேளை.
ஜெபத்தில் கர்த்தருக்காக காத்திருக்கும்போது விசுவாசிகள் சில வேளையில் களைப்படைந்துƒவிடலாம். சோர்வடைந்துவிடலாம். ஆகையினால்தான் இயேசுகிறிஸ்து ""மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தை காண்பாரோ'' என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு மறுபடியும் வரும்போது, இங்கு அவர் விசுவாசத்தைக் காண்பாரா என்றும் இந்த வாக்கியத்திற்கு வியாக்கியானம் கூறலாம்.
இயேசுகிறிஸ்துவின் இந்தக் கேள்விக்கு, ""மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தை காணமாட்டார்'' என்று தான் பதில்கூறவேண்டும். இயேசுகிறிஸ்துவும் தமது கேள்விக்கு உரிய பதிலை முன்னறிந்திருக்கிறார். தம்முடைய பிள்ளைகளிடத்தில் இயேசுகிறிஸ்து எதிர்பார்க்கும் மிகப்பெரிய காரியம் அவர்களுடைய விசுவாசமே. தம்முடைய பிள்ளைகள் நீதிமான்களாக இருப்பார்களா என்றோ, அல்லது அவர்கள் கள்ளம் கபடமில்லாதவர்களாக இருப்பார்களோ என்றோ அவர் பார்க்கமாட்டார். அவர் தம் பிள்ளைகளிடத்தில் விசுவாசத்தையே பார்க்க வேண்டுமென்று விரும்புகிறார். நம்மிடத்தில் சிறிதளவு விசுவாசம் இருந்தாலும் அதையும் அவர் பார்ப்பார். கடுகு விதையளவு விசுவாசத்தினால் நாம் பெரிய காரியங்களையும் செய்வதற்கு வாய்ப்புள்ளது.
மனுஷகுமாரன் இந்த பூமிக்கு வரும்போது மனுஷருடைய விசுவாசம் குறைந்துபோகும். தேவப்பிள்ளைகளிடத்தில் அற்ப விசுவாசம் மாத்திரமே காணப்படும். நல்லவர்கள் ஒரு சிலர் மாத்திரமே இருப்பார்கள். ஏராளமானோர் தேவபக்தியின் வேஷத்தை தரித்திருப்பார்கள். ஒரு சிலரிடத்தில் மாத்திரமே உண்மையும், நேர்மையும் விசுவாசமும் காணப்படும். இயேசுகிறிஸ்துவின் வருகையைக் குறித்து ஒரு சிலர் மாத்திரமே விசுவாசத்தோடு காத்திருப்பார்கள்.
இயேசுகிறிஸ்துவின் வருகை தாமதப்படுவதினால் துன்மார்க்கர் தங்கள் இருதயத்தில் துணிகரம் கொண்டு இன்னும் அதிகமாக துன்மார்க்கம் பண்ணுவார்கள். இவர்களுடைய இருதயம் கடினப்படும். கிறிஸ்துவின் வருகை தாமதப்படும்போது கர்த்தருடைய பிள்ளைகளும் சோர்ந்துபோவார்கள். ஆனாலும் தமக்கு நியமிக்கப்பட்ட ஏற்ற வேளையில் இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு மறுபடியும் வருவார். அப்போது தேவனுடைய வாக்குத்தத்தங்கள் அவிசுவாசிகளுக்கு சித்திக்காது. தேவனுடைய பிள்ளைகளோ கர்த்தருடைய வாக்குத்தத்தத்தின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வார்கள்.
அநீதியுள்ள நியாயாதிபதியிடம் விதவை விடாமுயற்சியோடு தொடர்ந்து சென்று தனக்கு நியாயம் கேட்டுக் கொண்டாள். இதுபோலவே தேவனுடைய பிள்ளைகளும் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். தேவன் நீதியுள்ளவர். கிருபையுள்ளவர். அநீதியுள்ள நியாயாதிபதியே அந்த விதவையின் விண்ணப்பத்திற்குப் பதில் கொடுத்தான் என்றால் நம்முடைய பரமபிதா தமது பிள்ளைகளின் ஜெபத்திற்குப் பதில் கொடுப்பது அதிக நிச்சயம்.
