உவமைகள் (Parables Bible study)
நல்ல சமாரியன் லூக் 10 : 29-37
எனக்குப் பிறன் யார்
அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான் (லூக் 10:29).
நமக்குப் பிறன் யார் என்பதை அறிந்துகொள்வதில் எல்லோருக்குமே ஆர்வம் இருக்கிறது. நியாயசாஸ்திரியும் இதே ஆர்வத்தில்தான் ""எனக்குப் பிறன் யார்'' என்று இயேசுவிடம் கேட்கிறான். தேவனாகிய கர்த்தரிடத்தில் முழுமையாக அன்புகூரவேண்டுமென்பதில் இவனுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. தேவனிடத்தில் அன்புகூரவேண்டும் என்னும் சத்தியத்தைப்பற்றி இவன் இதற்குமேல் ஒரு கேள்வியும் கேட்கவுமில்லை. ஆனால் தன்னுடைய பிறனைப்பற்றி இவனுடைய உள்ளத்தில் சந்தேகம் உண்டாயிற்று. இவன் எப்போதுமே தன்னைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறவன். தன்னுடைய நன்மையை மாத்திரமே விசாரிக்கிறவன். எல்லோரும் தன்னை மதிக்கவேண்டுமென்று சமுதாயத்தில் தன் அந்தஸ்தை உயர்த்திக் காண்பிக்கிறவன். உன்னிடத்தில் அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்னும் பிரமாணம் இவனுடைய உள்ளத்தை உருத்துகிறது.
பிறரை நேசிக்கவேண்டும் என்னும் சத்தியத்தை யூதமார்க்கத்து போதகர்கள் வித்தியாசமாக போதிக்கிறார்கள். புறஜாதியாரைத் தவிர அவர்கள் யூதருக்குள் பிறரை நேசிக்கவேண்டும் என்பதே அவர்களுடைய உபதேசம். பிறனிடத்தில் அன்புகூருவாயாக என்று இயேசுகிறிஸ்து கூறும்போது இவன் புறஜாதியாரைத் தவிர மற்ற எல்லா யூதரிடத்திலும் அன்புகூரவேண்டுமென்று நினைக்கிறான். ஏனெனில் யூதர்கள் புறஜாதியாரை தங்களுடைய பிறராக அங்கீகரிப்பதில்லை. தங்களுடைய சொந்த தேசத்தையும், சொந்த யூதமார்க்கத்ததையும் சேர்ந்தவர்களிடத்தில் மாத்திரமே அன்புகூரவேண்டும் என்பது யூதமார்க்கத்துத் தலைவர்களின் உபதேசம்.
புறஜாதியாரில் ஒருவன் மரண அவஸ்தையிலிருந்தாலும், அவனுடைய ஜீவனை காக்கும் கடமை தங்களுக்கு இல்லையென்று யூதர்கள் நினைப்பார்கள். நியாயசாஸ்திரியின் மனதில் இப்படிப்பட்ட சிந்தனை இருக்கிறது என்பதை இயேசுகிறிஸ்து அறிந்து வைத்திருக்கிறார். நியாயசாஸ்திரி தன்னை நீதிமானென்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி ""எனக்குப் பிறன் யார்'' என்று கேட்கிறான்.
கள்ளர் கையில் அகப்பட்டவன்
இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமி-ருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப்போனார்கள் (லூக் 10:30).
நியாயசாஸ்திரியிடம் உண்மையான மனிதாபிமானமில்லை. மற்றவர்களிடமிருந்து நாம் உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும், மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யவேண்டுமென்றும் இயேசுகிறிஸ்து ஒரு உவமையின் மூலமாக விளக்குகிறார். உதவி தேவைப்படுகிறவர்களையும், உதவி செய்கிறவர்களையும் நமது பிறராகவே நாம் கருதவேண்டும். மார்க்கத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு ஏதாவது பிரிவினையின் அடிப்படையிலோ மனுஷரை கூறுபோட்டு பிரித்துவிடக்கூடாது. தேவனிடத்தில் பட்சபாதமில்லை. அவரைப் பின்பற்றுகிற நம்மிடத்திலும் பட்சபாதம் இருக்கக்கூடாது.
இயேசுகிறிஸ்து கூறிய இந்த உவமையில் எருசலேமிலிருந்து புறப்பட்ட ஒரு மனுஷனைப்பற்றி கூறுகிறார். இவன் ஒரு யூதன். இவன் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிக்கொள்கிறான். நல்ல சமாரியன் ஒருவன் இவனுக்கு உதவிபுரிய முன்வருகிறான். தன்னுடைய வேலையின் நிமித்தமாக இந்த யூதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்கு அமைதியாக பிரயாணம்பண்ணுகிறான். கண்ணியமாக வேலை செய்கிறவன். எருசலேமிலிருந்து எரிகோவிற்குச் செல்லும் பிரதான சாலையின் வழியாக இவன் பயணம் செய்கிறான்.
எரிகோவிற்கு போகும் முன்பாக இவனுடைய பிரயாணத்தில் திடீரென்று பிரச்சனை உண்டாயிற்று. இவன் கள்ளர் கையில் அகப்படுகிறான். அவர்கள் முரட்டுத்தனமாக இவனைத் தாக்குகிறார்கள். அவனுடைய வஸ்திரங்களை உரிந்துகொண்டதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவனைக் காயப்படுத்தி குற்றுயிராய் விட்டுப் போகிறார்கள். நாம் ஒவ்வொரு தடைவை பிரயாணம் செய்துவிட்டு சுகபலன் பத்திரமாக வீடு திரும்பும்போதும் கர்த்தரைத் துதிக்கவேண்டும். நமது பாதைகளிலெல்லாம் நம்மை பாதுகாத்து, எல்லா தீங்குகளுக்கும் விபத்துக்களுக்கும், நாசமோசங்களுக்கும் விலக்கி காத்த கர்த்தருக்கு துதியும் ஸ்தோத்திரமும் ஏறெடுக்கவேண்டும்.
எருசலேமி-ருந்து எரிகோவுக்குப் போகும் பாதை மலையில் இருந்து தாழ்வாக இறங்கும் சாலையாகும். 18 மைல்கள் கிழக்கு முகமாக இந்தச் சாலையில்பிரயாணம் பண்ண வேண்டும். பாலஸ்தீன தேசத்தில் இந்தப் பாதை மிகவும் ஆபத்தானது. ஏனெனில் கள்ளருடைய தொந்தரவு இந்தப் பாதையில் அடிக்கடி வரும்.
கள்ளர் அந்த மனுஷனுக்குச் செய்த காரியங்கள்
1. அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டார்கள்.
2. அவனைக் காயப்படுத்தினார்கள்.
3. குற்றுயிராக விட்டுவிட்டு விட்டார்கள்.
4. அவனை விட்டுப் போனார்கள்
ஆசாரியனும் லேவியனும்
அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான் (லூக் 10:31,32).
கள்ளர்கள் கையில் அகப்பட்டு குற்றுயிராய் கிடக்கும் இந்த யூதனுக்கு ஆசாரியரும் லேவியரும் உதவிபுரிய வேண்டியவர்கள். இவனுடைய சிநேகிதராக இருந்து இவனுக்குத் தேவையான காரியங்களை செய்து இவ்விருவரும் இவனை ஆதரிக்கவேண்டும். ஆசாரியன் தேவாலயத்தில் பரிசுத்தமான ஊழியங்களில் பங்கு பெறுகிறவன். தேவனுக்கு ஊழியம் செய்கிறவர்கள் கிருபையோடும் இரக்கத்தோடும் கருணையோடும் நடந்துகொள்ளவேண்டும். பிறருக்கு உதவி தேவைப்படும்போது அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று ஆசாரியர்கள் போதிக்கிறவர்கள். நற்காரியங்களை போதிக்கும் இந்த ஆசாரியனே, உதவிசெய்யவேண்டிய சூழ்நிலை வரும்போது, குற்றுயிராக கிடக்கும் அந்த மனுஷனைக்கண்டு பக்கமாய் விலகிப்போகிறான்.
இக்காலத்தில் ஆசாரியர் பலருடைய வீடுகள் எரிகோவிலிருக்கிறது. எரிகோவிலுள்ள ஆசாரியர்கள் எருசலேமிலுள்ள தேவாலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்வதற்காக இவ்விரண்டு ஊர்களுக்கும் போக்கும் வரத்துமாக இருப்பார்கள். ஆகையினால் எருசலேமிலிருந்து எரிகோவிற்கு போகும் பாதை ஆசாரியர்களால் நிறைந்திருக்கும். இவர்களுக்கு உதவிபுரிவதற்காக லேவியரும் இவர்களோடுகூட பிரயாணம் பண்ணுவார்கள்.
இந்த சாலையில் தற்செயலாக ஆசாரியனும் லேவியனும் வருகிறார்கள். கள்ளர்கள் கையில் அடிபட்டு, காயப்பட்டு குற்றுயிராக கிடக்கும் இந்த மனுஷனை இவர்கள் இருவருமே காண்கிறார்கள். அருகில் வந்து இவனுடைய பரிதாபமான நிலமையைப் பார்த்தாலும் இவர்கள் இருவருமே அவனைக் கண்டு பக்கமாய் விலகிப்போகிறார்கள். இந்த மனுஷனை விட்டு தங்களால் எவ்வளவு தூரம் விலகிப்போக முடியுமோ அவ்வளவு தூரம் விலகிப் போய்விடுகிறார்கள்.
எரிகோ ஆசாரியரின் பட்டணம். அங்கு 12,000 ஆசாரியர்கள் இருந்தார்கள். தேவாலயத்தில் ஊழியம் செய்வதற்காக அவர்கள் அந்தச் சாலை வழியாகச் செல்வது வழக்கம். இது பேரீச்சை மரங்களின் பட்டணமாகும். (உபா 34:3; நியா 1:16) எருசலேமிலிருந்து 18 மைல்கள் தூரத்திலும், யோர்தானிலிருந்து 6 மைல்கள் தூரத்திலும் அமைந்துள்ளது. (யோசு 6:26=1இராஜா 16:34)
லேவியர்கள் மார்க்கக் காரியங்களில் சிறந்து விளங்கியவர்கள். பிரமாணங்களையும், பாரம்பரியங்களையும் நன்றாக கடைப் பிடிப்பார்கள். ஆனால் ஒரு மனுஷனுக்கு ஆபத்து வரும்போது, உதவி புரிய மாட்டார்கள். இங்கு நாம் வாசிக்கும் லேவியன் இரண்டு காரியங்களைச் செய்கிறான். அவையாவன: 1. அவனைக் கண்டான். 2. பக்கமாய் விலகிப் போனான். தனக்கு அந்த மனுஷன் மூலமாக எந்தத் தீட்டும் வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கிறான். இரக்கக்குணமுள்ள எந்த மனுஷனும் குற்றுயிராக இருக்கும் மனுஷனுக்கு உதவி புரிவான். அதனால் தனக்கு வரப்போகும் தீட்டைக் குறித்து, கவலைப்படமாட்டான். தன்னை மறுபடியும் சுத்திகரித்துக் கொள்வான். பிரமாணங்களைவிட சுவிசேஷமே சிறந்தது என்பதை இயேசுகிறிஸ்து பல இடங்களில் வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.
சமாரியன்
பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்டவந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களை கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான் (லூக் 10:33-35).
எருசலேமிலிருந்து எரிகோவிற்குப் போகும் சாலையில் கள்ளர்கள் கையில் சிக்கி, காயப்படுத்தப்பட்டு குற்றுயிராக இந்த மனுஷன் கிடக்கிறான். அந்த வழியாக சமாரியன் ஒருவன் வருகிறான். ஆசாரியனையும் லேவியனையும் போலவே இந்த சமாரியனும் அடிபட்டு குற்றுயிராய் கிடக்கிறவனைக் காண்கிறான். ஆனால் அவ்விருவரைப்போல இந்த சமாரியன் அவனைக்கண்டு பக்கமாய் விலகிப் போய்விடவில்லை. அதற்குப் பதிலாக அடிபட்டு குற்றுயிராக கிடக்கும் அந்த மனுஷனைக்கண்டு, அவன்மேல் மனதுருகி, அவன் கிட்ட வருகிறான்.
அடிபட்டுக் கிடக்கிறவன் ஒரு யூதன். அவனுக்கு உதவி செய்ய வருகிறவனோ ஒரு சமாரியன். இஸ்ரவேலின் வரலாற்றில் நீண்டகாலமாக சமாரியரும் யூதரும் பிரிந்தே இருக்கிறார்கள். இவர்களுக்குள் எந்த சம்பந்தமும் நடைபெறுவதில்லை. அடிபட்டுக் கிடக்கிறவன் யூதனாக இருந்தபோதிலும், சமாரியனுடைய உள்ளம் அவனைப் பார்த்தபோது மனதுருகுகிறது. ஆசாரியனோ தன்னுடைய சொந்த ஜனமாகிய யூதன் அடிபட்டுக் கிடப்பதை பார்த்தபோதிலும், அவனுடைய உள்ளம் கடினப்படுகிறது. ஆனால் இந்த சமாரியனோ யூதனுக்கு தன் இருதயத்தில் இரக்கம் காண்பிக்கிறான். அவனைக் கண்டு மனதுருகுகிறான்.
அடிப்பட்டுக் கிடக்கிறவன் யூதனாக இருந்தாலும் அவனும் ஒரு மனுஷன்தான் என்று சமாரியன் நினைக்கிறான். அடிபட்டு வருத்தத்தில் இருக்கிறவனுக்கு உதவி தேவைப்படுவதை இந்த சமாரியன் காண்கிறான். எல்லோரையும் கனம்பண்ணவேண்டுமென்றும், தன்னைப்போல பிறரையும் நேசிக்கவேண்டுமென்றும் இந்த சமாரியன் தன் உள்ளத்தில் உறுதியாக இருக்கிறான். ஆகையினால் அடிபட்டு கிடக்கிறவன்மீது மனதுருகி அவனுக்கு உதவிபுரிய முன்வருகிறான்.
சமாரியனுடைய மனதுருக்கம் சாதாரணமானதல்ல. அடிபட்டு கிடக்கிறவனைப் பார்த்து, ""ஐயோ பாவம்'' என்று ஆறுதலான வார்த்தை கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு சென்றுவிடும் சாதாரண பரிதாபமல்ல. அவனுடைய உள்ளத்தில் மனதுருக்கம் வந்தபோது, அவனுடைய கரங்கள் மனதுருக்கத்தினால் செயல்படுகின்றன. தேவையுள்ள இந்த மனுஷனுக்கு சமாரியனின் கரங்கள் உதவிபுரிய முன்வருகிறது.
இந்த சமாரியன் அடிபட்டுக் கிடக்கும் யூதனைப்பார்த்து சிநேகித மனதோடு அவனுக்கு உதவிபுரிய முன்வருகிறான். லேவியரும் ஆசாரியரும் அடிபட்டுக் கிடக்கிறவனுக்கு அருகில் போகாமல், அவனைக்கண்டும் பக்கமாய் விலகிப்போனார்கள். அவர்களைப்போல இந்த சமாரியன் மனிதாபமில்லாமல் நடந்துகொள்ளவில்லை.
ஒரு மருத்துவன் என்ன செய்யவேண்டுமோ அந்த மருத்துவ சிகிச்சைகளை இந்த சமாரியனும் செய்கிறான். அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து அவனுடைய காயங்களைக் கட்டுகிறான். தன்னுடைய விலையுயர்ந்த வஸ்திரத்தையே அவனுடைய காயத்தை கட்டுவதற்குப் பயன்படுத்துகிறான். அவனுடைய காயங்களை கழுவுவதற்கு திராட்சரசத்தையும், காயத்தை ஆற்றுவதற்கு எண்ணெயையும் வார்த்து, தன்னுடைய வஸ்திரத்தினால் அவனுக்கு காயங்கட்டுகிறான். அடிபட்டுக் கிடக்கிறவனை பார்க்கும்போது இந்த சமாரியனுடைய இருதயம் அவனுக்காக பரிதாபப்பட்டுத் துடிக்கிறது.
இந்த சமாரியன் அவனுடைய காயங்களைக்கட்டி அவனை தன் சுயவாகனத்தில் ஏற்றுகிறான். இதுவரையிலும் வாகனத்தில் ஏறிவந்தவன், இப்போது அடிபட்டுக் கிடக்கிறவனைத் தன் வாகனத்தில் ஏற்றி, இவன் நடந்து செல்கிறான். அவனைத் தன் வாகனத்திலேயே ஏற்றி சத்திரத்திற்கு கொண்டு போகிறான். இந்த சமாரியன் ஏதோ ஒரு வேலை விஷயமாக இந்த சாலையில் போய்கொண்டிருக்கிறான். தன்னுடைய வேலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், ஒருவருக்கு உதவி தேவைப்படும்போது அவருக்கு உதவிƒசெய்வதும் தன்னுடைய வேலை என்பதை இவன் புரிந்து வைத்திருக்கிறான். ஏழைகளுக்கு இரக்கம் காண்பிப்பதும் தன்னுடைய வேலையில் ஒருபகுதி என்பதைப் புரிந்துகொண்டு இந்த சமாரியன் அவனுக்கு உதவி புரிகிறான்.
அடிபட்டுக் கிடக்கிறவனை சத்திரத்திற்குக் கொண்டுபோய் இவன் பராமரிக்கிறான். அவனுக்குத் தேவையான போஜனம் கொடுத்து, அவனைப் படுக்கையில் படுக்க வைத்து, அவனுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளையெல்லாம் செய்து அவனை ஆதரிக்கிறான். அவன்மீது இரக்கப்பட்டு இந்த சமாரியன் ஒருவேளை அவனுக்காக ஜெபம்பண்ணி இருக்கக்கூடும். அடிப்பட்டுக் கிடக்கிறவனைத் தன்னுடைய சொந்த மகன் போல பாவித்து இந்த சமாரியன் அவனுக்கு உதவிபுரிகிறான்.
மறுநாளிலே இந்த சமாரியன் தன் வேலையின் நிமித்தமாக சத்திரத்தைவிட்டு புறப்பட்டுப் போகப்போகிறான். சத்திரத்தில் தான் கொண்டு வந்து சேர்த்த யூதனை அப்படியே விட்டுவிட்டுப்போக சமாரியனுக்கு மனதில்லை. ஆகையினால் தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, அவனை பராமரிப்பதற்காக சத்திரத்தான் கையில் கொடுக்கிறான். பணத்தைக் கொடுக்கும்போது, இவனை விசாரித்துக்கொள்ளும் பொறுப்பை சத்திரத்தானிடம் ஒப்புக்கொடுக்கிறான். இவனை விசாரித்தால் மாத்திரம் போதுமானது என்றும், இதற்காக ஆகும் செலவை தான் பொறுப்பெடுத்துக் கொள்வதாகவும் சமாரியன் சத்திரத்தானிடம் கூறுகிறான்.
இவனுக்காக அதிகமாக ஏதாகிலும் செலவழித்தால், தான் திரும்பி வரும்போது அதை சத்திரத்தானுக்குத் தருவதாக அவனுக்கு உறுதி கூறுகிறான். அக்காலத்தில் இரண்டு பணம் என்பது அதிகமான தொகைக்கு சமமானது. இரண்டு பணத்தை வைத்துக்கொண்டு ஒரு மனுஷனை அக்காலத்தில் பலநாட்களுக்கு பராமரிக்க முடியும். இரண்டு பணத்தைக் கொடுத்தாலும், அந்த மனுஷனுக்கு எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்று சமாரியன் விரும்புகிறான். அவனைப் பூரணமாக கவனிக்கும் முழுப்பொறுப்பையும் இந்த சமாரியனே ஏற்றுக்கொள்கிறான்.
சமாரியன் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்த்து இந்த உதவிகளை அடிபட்டவனுக்குச் செய்யவில்லை. தன்னுடைய மனதுருக்கத்தினாலும், இரக்கத்தினாலும், உதவி தேவைப்படுகிறவனுக்கு உதவி செய்யவேண்டியது தன்னுடைய கடமை என்பதை உணர்ந்து இந்தக் காரியத்தைச் செய்கிறான். ஆசாரியரும், லேவியரும் செய்யாத உதவிகளை, யூதருக்கு சத்துருவாக கருதப்பட்ட இந்த சமாரியன் செய்கிறான். இவன் அந்நியனாக இருந்தாலும் மற்றவர்களை அந்நியனாக கருதவில்லை. தன்னுடைய சுயஜனத்தைப்போலவே கவனித்து, அவனைப் பராமரிக்கிறான். அவனுக்கு உதவிசெய்கிறான்.
இயேசுகிறிஸ்து இந்த உவமையைக் கூறி ஆவிக்குரிய சத்தியங்களை விவரிக்கிறார். பாவிகளாக இருக்கும் மனுக்குலத்தின்மீது தேவன் காண்பிக்கும் கிருபையும் மனதுருக்கமும் இந்த உவமையின் மூலமாக வெளிப்படுகிறது. கள்ளர் கையில் சிக்குண்டு, அடிபட்டுக் கிடக்கும் அந்த மனுஷனைப்போலவே நாமும் இந்த பூமியில் குற்றுயிராகக் கிடக்கிறோம். நாம் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கும்போது, நமக்கு உதவி தேவைப்படும்போது, மோசேயின் பிரமாணம் நமக்கு உதவி செய்யாமல் நம்மைக் கண்டும் பக்கமாய் விலகிப்போகிறது. நமக்கு உதவிபுரிய மோசேயின் பிரமாணத்திற்கு வல்லமையில்லை. அது நம்மீது இரக்கம் காண்பிக்காது.
உதவியில்லாத சூழ்நிலையில், நாம் இந்த பூமியில் பரிதபித்துக்கொண்டிருக்கும்போதுதான், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, நமக்கு உதவிபுரிவதற்காக, நல்ல சமாரியனைப்போல நம்மைத் தேடி வந்திருக்கிறார். அவர் நம்மீது மனதுருகி நமக்கு உதவிபுரிகிறார். நம்முடைய காயங்களைக் கட்டுகிறார். நம்மை ஆதரிக்கிறார். நம்மை பராமரிக்கிறார். அவர் நம்மீது வைத்திருக்கும் கிருபையும் இரக்கமும் மிகவும் பெரியது. இயேசுகிறிஸ்து நம்மீது காண்பிக்கும் அளவில்லாத அன்பிற்கும் உதவிக்கும் நம்மால் கைமாறாக, பிரதிபலனாக எதையுமே அவருக்குச் செய்யமுடியாது.
யூதர்கள் சமாரியரை வெறுத்தார்கள். (லூக்கா 9:52) ஆனால் இந்தச் சமாரியன்தான் இரக்கக்குணமுள்ளவனாக இருக்கிறான். குற்றுயிராக இருப்பவனுக்கு உதவி புரிய முன்வருகிறான். ஆசாரியரும், லேவியரும் அந்த மனுஷனைக் கைவிட்டுவிட்டார்கள். சமாரியனும், அவர்களால் கைவிடப்பட்டவனே. என்றாலும் சமாரியன் அவனுக்கு அன்போடு உதவி புரிகிறான்.
சமாரியன் அவனைக் கண்டு, மனதுருகினான். சமாரியனிடம் மனதுருக்கம் இருந்தது. அவனுக்கு யூதமார்க்கத்தைப் பற்றி சரியாக தெரிந்திருக்காது. ஆனால் மனுஷனுக்கு உதவி புரியத் தெரிந்திருந்தது.
சமாரியன் செய்த காரியங்கள்
1. அவனைக் கண்டான்.
2. மனதுருகினான்
3. கிட்டவந்தான்.
4. அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்தான்
5. காயங்களைக் கட்டினான்
6. அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றினான்
7. அவனைச் சத்திரத்துக்குக் கொண்டு போனான்
8. அவனைப் பராமரித்தான்
9. இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்தான்
10. நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்
""இரண்டு பணம்'' என்பது ஒருவனுடைய ஜீவனை மீட்கும் கிரயப்பணம். (யாத் 30:12-13). சாதாரண வேலையாளுக்கு இது இரண்டுநாள் சம்பளம். (மத் 20:1-16) சத்திரத்தானுக்கு சமாரியன் போதுமான அளவு பணம் கொடுத்திருக்கிறான்.
எவன் பிறன்
இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித்தோன்றுகிறது என்றார். அதற்கு அவன்: அவனுக்குக் இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனைநோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார் (லூக் 10:36,37).
இயேசுகிறிஸ்து இந்த உவமையை நியாயசாஸ்திரியிடம் கூறுகிறார். இந்த உவமையைக் கூறி முடித்த பின்பு இயேசு அவனிடம் ஒரு கேள்விக் கேட்கிறார். ""இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்'' என்பது இயேசுவின் கேள்வி. கள்ளர் கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்று பேரில் ஒருவன் அவனுக்கு பிறனாயிருக்கிறான். ""நியாயசாஸ்திரிக்கு எப்படித் தோன்றுகிறது'' என்பது இயேசுவின் கேள்வியாகும். இயேசுவின் கேள்விக்கு நியாயசாஸ்திரி நேரடியாக ""சமாரியன்தான்'' என்று பதில் கூறவேண்டும். ஆனால் அவன் சமாரியனுடைய பெயரைக் கூட தன்னுடைய வாயினால் உச்சரிக்காமல் ""அவனுக்கு இரக்கம் செய்தவனே'' என்று கூறுகிறான். சமாரியர் மீது யூதருக்கு மெய்யான அன்பில்லை.
நியாயசாஸ்திரி தன்னுடைய பதிலைக் கூறியவுடன் இயேசு அவனை நோக்கி ""நீயும் போய் அப்படியே செய்'' என்று கூறுகிறார். சமாரியன் ஒரு யூதனுக்கு உதவிபுரிந்திருக்கிறான். அதுபோல யூதனாகிய இந்த நியாயசாஸ்திரி சமாரியனுக்கும் உதவிபுரியவேண்டும். ஒருவன் சமாரியன் என்பதற்காக, அவனுக்கு உதவி தேவைப்படும்போது, தான் செய்ய வேண்டிய உதவியை மறுத்துவிடக்கூடாது. துன்பப்படுகிறவர்கள், துயரப்படுகிறவர்கள் எல்லோருக்குமே உதவிபுரியவேண்டும்.
நியாயசாஸ்திரிக்கு உதவிபுரியும் வாய்ப்பு எப்பொழுதெல்லாம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் அவன் அந்த வாய்ப்பை பயன்படுத்தி, கிருபையோடும் மனதுருக்கத்தோடும் உதவிபுரியவேண்டும். நமது உதவி பிரதிபலன் எதிர்பார்க்காமல் இலவசமாக செய்யக்கூடியதாக இருக்கவேண்டும். நம்முடைய சொந்த பந்தம், இனத்தார் மத்தியில் மாத்திரமே உதவி செய்வேனென்று நம்முடைய எல்லைகளை சுருக்கிக் கொள்ளாதவாறு, உதவி எங்கு தேவைப்பட்டாலும் அந்த உதவியை செய்யவேண்டும். உதவி செய்யும்போது முறுமுறுப்போடு செய்யாமல், மனதுருக்கத்தோடும் இரக்கத்தோடும் செய்யவேண்டும்.
நியாயசாஸ்திரி இயேசுகிறிஸ்துவை சோதிக்கும்படியாக அவரிடத்தில் வந்து ""போதகரே நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும்'' என்று கேள்விக் கேட்டான். இயேசுகிறிஸ்துவோ இந்த நியாயசாஸ்திரியை சமாரியனுடைய பாடசாலைக்கு அனுப்பி, தன்னுடைய கடமையைக் குறித்து சமாரியனிடம் கற்றுக்கொள்ளுமாறு அனுப்பிவிடுகிறார். ""நீ போய் அந்தப்படியே செய்'' என்று இயேசு கூறிய வார்த்தைக்கு ""நீ போய், அந்த சமாரியன் உதவி செய்ததுபோலவே நீயும் செய்'' என்பது பொருளாகும். நாம் எல்லோருமே ஒருவருக்கொருவர் உதவிபுரியவேண்டும். அதிலும் விசேஷமாக விசுவாசிகளாகிய நாம் எல்லோருக்கும் உதவிபுரிய ஆயத்தமாக இருக்கவேண்டும். நியாயசாஸ்திரியைப்போல வேதத்தில் ஞானமுள்ள விசுவாசிகள், எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல், மனதுருக்கத்தோடு பிறருக்கு உதவிபுரியவேண்டும்.
இந்த உவமையின் மூலமாக இயேசு கிறிஸ்து கூறவிரும்பும் விளக்கம் இதுதான். இயேசு கிறிஸ்துவின் உபதேசம் எப்போதும் தெளிவாக இருக்கும். நாம்தான் சத்தியத்தை ஏற்றுக் கொண்டு அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். பலசமயங்களில் ஜனங்கள் இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களைக் கேட்பார்கள். ஆனால் தங்கள்இருதயத்தைக் கடினப்படுத்தி உபதேசத்திற்குச் செவிகொடுக்க மாட்டார்கள். சத்தியத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதனால் அவர்களுக்குக் கேடு வரும்.
நியாயசாஸ்திரிக்கு இயேசு கிறிஸ்து கூறிய காரியம் ""நீயும் போய் அந்தப்படியே செய்'' என்பதுதான். நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு அவன் இதைத்தான் செய்ய வேண்டும். நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிற மனுஷன் இந்தக் காரியங்களைத் தானாகவே செய்வான். யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ அவன்தான் பிறன்.
