உவமைகள் ஆய்வு : விருந்து (Parables Study: Feast)

 உவமைகள் ஆய்வு : விருந்து

பந்தியில் உட்காருமிடம் லூக் 14 : 7-14


லூக் 14:7. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:


லூக் 14:8. ஒருவனால் க-யாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.


லூக் 14:9. அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.


லூக் 14:10. நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது , உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்.


லூக் 14:11. தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். 


லூக் 14:12. அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல் விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்.


லூக் 14:13. நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக.


லூக் 14:14. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுத-ல் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்.

முதன்மையான இடங்கள்


விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: (லூக் 14:7)  


நம்முடைய சிநேகிதர்களோடு நாம் பழகும்போதும், பந்தியில் அமர்ந்து போஜனம்பண்ணும்போதும், நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று இயேசுகிறிஸ்து இங்கு உபதேசம்பண்ணுகிறார். பரிசேயரில் தலைவனுடைய வீட்டில் இயேசுகிறிஸ்து போஜனம்பண்ணுகிறார். அவர்கள் இயேசுவுக்கு  சிநேகிதராயில்லாமல் சத்துருவாயிருக்கிறார்கள். இயேசு என்ன செய்வாரோ என்றும், என்ன சொல்வாரோ என்றும் அவர்கள் அவர்மேல் நோக்கமாயிருக்கிறார்கள். 


விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களை இயேசுகிறிஸ்துவும் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொள்கிறார்கள். பந்தியில் அமர்ந்திருக்கும்போது நம்முடைய பேச்சும், செயல்பாடுகளும் மிகவும் கண்ணியமாக இருக்கவேண்டும். மற்றவர்களை புண்படுத்தும் விதத்தில் பேசக்கூடாது. ஆனால் இயேசுகிறிஸ்துவோ விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் முதன்மையான இடங்களை தெரிந்துகொண்டதைப் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையின் மூலமாக உபதேசம்பண்ணுகிறார். பந்தியில் அமர்வது உலகப்பிரகாரமான காரியமாக இருந்தாலும், இயேசுகிறிஸ்து இந்த சம்பவத்தையும் பயன்படுத்தி அவர்களுக்கு ஆவிக்குரிய சத்தியத்தை போதகம்பண்ணுகிறார். 


நியாயசாஸ்திரிகளும், பரிசேயரும் முதன்மையான இடங்களை தெரிந்துகொள்கிறார்கள். ஜெபாலயங்களில்  இவர்கள் முதன்மையான ஆசனங்களையும் சந்தைகளில் வந்தனங்களையும் விரும்புகிறார்கள் (லூக் 11:43). ஜெபாலயங்களில்  இவர்கள் செய்யும் தவறுகளை இப்போது வீடுகளிலும் செய்கிறார்கள். விருந்துக்கு அநேகர் அழைக்கப்பட்டிருந்தாலும் அங்கு தங்களுக்கென்று முதன்மையான ஸ்தானங்கள்  இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த வரையிலும் மேன்மையான ஸ்தானத்தை தேடிப்பார்த்து அதில் அமர்ந்துகொள்கிறார்கள். நம்முடைய ஜீவியத்தில்  பொதுவான சாதாரணமான காரியமாக இருந்தாலும் இயேசுகிறிஸ்து அதையும் கண்ணோக்கிப் பார்க்கிறார். சாதாரண காரியங்களிலும் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று விவரிக்கிறார். 

முதன்மையான இடத்தில் உட்காராதே


ஒருவனால் க-யாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.  அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும் (லூக் 14:8,9).


இருதயத்தில் பெருமையுள்ளவர்கள் முதன்மையான இடத்தில் உட்கார வேண்டுமென்று விரும்புவார்கள். ஆனால் மிகவும் கண்ணியமாகவும் தாழ்மையாகவும் நடந்துகொள்கிறவர்களோ சாதாரண இடத்தில்  உட்கார்ந்தால் போதுமென்று நினைப்பார்கள். நாம் அமர்ந்திருக்கும் ஆசனத்தினால் நமக்கு மதிப்போ மரியாதையோ வரப்போவதில்லை. உண்மையான மரியாதை நமது இருதயத்தின் சுபாவத்திற்கே கிடைக்கும். ஒரு சிலர் தங்களுடைய தகுதிக்கும் அதிகமாக மேன்மையான இடங்களில் அமர்ந்திருப்பார்கள்.  அப்படிப்பட்டவர்கள் தாழ்மையான இடங்களுக்கு நிச்சயமாகவே அனுப்பப்படுவார்கள். இவர்களைவிட கனமுள்ளவர்கள் அங்கு வரும்போது இவர்கள் தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதுவரும். 


நம்முடைய இருதயத்தில் நம்மைக்  குறித்து எப்படி சிந்திக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். நமக்குள் நம்மைக்குறித்து பெருமையான எண்ணம் தோன்றக்கூடாது. உலகப்பிரகாரமான காரியங்களை வைத்து நம்மை உயர்த்திக் கொள்ளக்கூடாது. நம்முடைய சாதனைகளை நினைத்து பெருமைப்படக்கூடாது. தன்னைத்தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். 


விருந்துக்கு எஜமான் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் அனைவரையும்  ஆராய்ந்து பார்ப்பான். அவர்களுடைய அந்தஸ்துக்கு தக்கவாறு அவர்களை அமரச் செய்யவேண்டுமென்று விரும்புவான். அதிக கனமுள்ளவன் தாழ்மையான இடத்தில் அமர்ந்திருந்தால் அவனை உயர்ந்த இடத்தில்  அமரச்செய்வான். அதுபோலவே தாழ்மையானவனும் உயர்ந்த இடத்தில் அமர்ந்திருந்தால் அவனை தாழ்மையான இடத்தில் அமரச்செய்வான். தன்னுடைய மெய்யான அந்தஸ்துக்கு அதிகமாக தன்னை உயர்வாக நினைத்து உயர்ந்த இடத்தில் அமர்ந்திருக்கிறவனிடம் ""இவருக்கு இடங்கொடு'' என்று அவனுடைய ஸ்தானத்தை வேறொருவனுக்கு கொடுத்துவிடுவான். பெருமை வெட்கத்தைக்கொடுக்கும். முடிவில் அது வீழ்ச்சியடையும். 

தாழ்ந்த இடத்தில் உட்காரு


நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்  (லூக் 14:10). 


மனத்தாழ்மையுள்ளவர்கள் எப்போதுமே தாழ்ந்த இடத்தில் உட்காருவதையே விரும்புவார்கள். விருந்துக்கு அழைக்கப்பட்ட மற்றவர்கள் தங்களைவிட அதிக கனமுள்ளவர்கள் என்னும் எண்ணம் இவர்களுடைய உள்ளத்தில் இருக்கும். தங்களைவிட தாழ்ந்தவர்களையும் இவர்கள் உயர்வாகவே நினைப்பார்கள். தாழ்ந்த இடத்தில் உட்கார்ந்திருக்கும்போது ""விருந்துக்கு அழைத்தவன் நம்மைப்பார்த்து ""சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும்'' என்று  அழைப்பான். அப்போது நம்முடனேகூட பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக நமக்கு கனமுண்டாகும். தாழ்மையாக ஆரம்பிப்பதே உயர்வடைவதற்கு மெய்யான வழியாகும். நம்மைநாமே தாழ்த்தும்போது மற்றவர்கள் நம்மை உயர்த்துவார்கள்.


நாம் கனமுள்ள அந்தஸ்துள்ளவர்களாக இருந்தாலும் தாழ்ந்த இடத்தில் உட்கார்ந்திருக்கும்போது நம்முடைய மனத்தாழ்மை வெளிப்படும். விருந்துக்கு அழைத்தவரும், அழைக்கப்பட்டவர்களும் நம்மை தாழ்மையுள்ள மனுஷராக காண்பார்கள். நமக்கு கிடைக்கும் எல்லாவற்றையும்விட மற்றவர்கள் நம்முடைய மனத்தாழ்மையை காண்பதே நமக்கு கிடைக்கும் அதிக கனமாகும். 

தன்னைத்தான் உயர்த்துகிறவன்


தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்  (லூக் 14:11).  


யூதருடைய சமுதாயத்தில் பரம்பரையாக சொல்லப்படும் ஒரு கதை ஒன்று உள்ளது. யூத ரபீமார்கள் மனத்தாழ்மையை விளக்குவதற்கு இந்தக் கதையை அதிகமாக பயன்படுத்துவார்கள். ஒரு ராஜா மூன்று பேரை விருந்துக்கு அழைத்தார். அவர்களில் ஒருவன்  ராஜபிரபு. மற்றொருவன் மிகப்பெரிய ஞானி. வேறொருவனோ சாதாரணமான மனுஷன். ராஜபிரபுவும், ஞானியும் தங்களைத் தாங்களே உயர்த்தி விருந்தில் முதன்மையான இடத்தில் அமர்ந்திருந்தார்கள். உயர்ந்த இடத்தில் அமருவதற்கு தாங்கள் தகுதியுள்ளவர்கள் என்று நினைத்தார்கள். ஆனால் சாதாரண மனுஷனோ  ராஜாவின் அரண்மனையில் விருந்தில் பங்குபெறுவதற்குக்கூட தனக்குத் தகுதியில்லை என்று நினைத்து, தன்னைத்தாழ்த்தி, மிகவும் சாதாரண இடத்தில் அமர்ந்திருந்தான். ராஜா இவனுடைய மனத்தாழ்மையைப் பார்த்து, அவனைப் பாராட்டி, உயர்ந்த ஸ்தலத்தில் உட்காரவைத்தார். இருதயத்தில் பெருமைப்பட்டு, உயர்ந்த ஸ்தானத்தில் பெருமையோடு உட்கார்ந்திருந்த  ராஜபிரபுவையும், ஞானியையும் தாழ்ந்த இடத்தில் உட்கார வைத்துவிட்டார். இந்தக் கதை யூதர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானது. 


இந்தக் கதையை அடிப்படையாக வைத்து  இயேசுகிறிஸ்து இந்த உவமையின் முடிவுரையாக  ""தன்னைத்தான் உயர்த்துகிறவன் எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்'' என்று கூறுகிறார். நம்முடைய இருதயத்தில் பெருமை வரக்கூடாது. பிறருக்கு முன்பாக நம்மை நாமே  பெருமைப்படுத்தி பேசுவதும் நினைப்பதும் தவறு. தாழ்மையோடு இருப்பதும் சுயத்தை வெறுப்பதுமே நமக்கு அதிக கனத்தைத் தரும்.

தன்னைத்தான் உயர்த்துகிறவர்களுக்கு எடுத்துக்காட்டுக்கள்


    1. லூசிபர் (ஏசா 14:12-14; எசே 28:11-17; 1தீமோ 3:6)

    2. ஆதாமும், ஏவாளும் (ஆதி 3:8; யோபு 31:33)

    3. பார்வோன் (யாத் 9:17)

    4. கோராகும், அவன் புத்திரரும் (எண்  16)

    5. சனகெரிப்  (2நாளா 32:9-19)

    6. நேபுகாத்நேச்சார் (தானி 4:30; தானி 5:20)

    7. பெல்ஷாத்சார் (தானி 5)

    8. ஆமான் (எஸ்  3:1-15; எஸ் 5:8-10)

    9. மாயவித்தைக்காரனாகிய சீமோன் (அப் 8:9)

    10. ஏரோது (அப் 12:20-23)

பதிலுக்குப் பதில் செய்வது


 அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல் விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்  (லூக் 14:12). 


விருந்துக்கு எஜமான் ஐசுவரிவான்களை  அழைத்து வந்திருக்கிறார். ஆனால் நாமோ விருந்துக்கு தரித்திரரை அழைத்து வரவேண்டுமென்று இயேசுகிறிஸ்து உபதேசம் பண்ணுகிறார். கர்த்தர் நமக்கு கொடுத்திருப்பதை பிறருக்கு கொடுத்து உதவிபுரியவேண்டும்.  ஐசுவரியவான்களுக்கு போஜனம் கொடுத்தால் அவர்கள் நமக்கு திரும்பவும் போஜனம் கொடுப்பார்கள். ஆனால் தரித்திரருக்கு போஜனம் கொடுக்கும்போது அவர்களால் நமக்கு எதையும் திருப்பிக்கொடுக்க முடியாது. 


நம்முடைய சிநேகிதரையும், சகோதரையும், பந்து ஜனங்களையும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையும் நாம் விருந்திற்கு அழைக்க வேண்டியதில்லை. அழைத்தால் அவர்களும் பதிலுக்கு நம்மை விருந்துக்கு அழைப்பார்கள். அது நமக்கு  பதிலுக்குப் பதில் செய்ததாகும். இவர்களை அழைப்பதினால் நம்முடைய சிநேகம் விருத்தியாகும். உறவு மேம்படும். இது தவிர நமக்கு வேறு ஒரு பிரயோஜனமும் உண்டாகாது. ஐசுவரியவான்களுக்கு கொடுக்கப்படும் ஒரு விருந்தை, ஏராளமான தரித்திரருக்கு பலமுறை போஜனமாக கொடுக்கலாம். ஆகையினால்  நம்முடைய சுயபெருமைக்காகவோ, சுயகௌரவத்திற்காகவோ ஐசுவரிவான்களை விருந்துக்கு அழைப்பதினால் நமக்கு ஒரு நன்மையும் உண்டாகப்போவதில்லை. ஆடம்பரமான விருந்தினால் நாம் சேமித்து வைத்திருக்கும் பணம்தான் வீணாக செலவாகும். நமது சொந்த பணத்தினால் நமக்குநாமே சம்பளம் கொடுத்ததுபோல இருக்கும். நம்முடைய பணத்தையே நாம் சம்பளமாக பெற்றுக்கொண்டால் நமக்கு ஒரு ஆதாயமும் இல்லை. 


ஐசுவரியவான்களை விருந்துக்கு அழைப்பதினால் ஒரு பிரயோஜனமும் இல்லையென்று இயேசுகிறிஸ்து  போதகம் பண்ணுகிறார். ஐசுவரியவான்களை விருந்துக்கு அழைக்கும்போது அவர்களும் நம்மை பதிலுக்கு விருந்துக்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தே  அழைக்கிறோம். பதிலுக்குப் பதில் செய்வது விருந்து அல்ல. இது வியாபாரம். பிரதிபலன் எதிர்பார்த்து செய்வது உதவியல்ல. இதுவும் வியாபாரந்தான்.  


மனுஷர் பதிலுக்குப் பதில் செய்துவிட்டால் தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதம் வராது. ஏழைகளுக்கு உதவும்போது அவர்களால் பதிலுக்கு உதவ முடியாது. அப்பேர்ப்பட்ட உதவிகளுக்குத் தேவன் பலன் அளிப்பார்.

உயிர்த்தெழுதலில் பதில் செய்யப்படும்


நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுத-ல் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்                   (லூக் 14:13,14). 


நாம் விருந்து பண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைக்க வேண்டும். அவர்களுக்கு  புசிப்பதற்கு ஒன்றும் இராது. அவர்களால் வேலை செய்து பிழைக்கவும் முடியாது. இவர்கள் சரீரத்தில் அங்கவீனமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்குத்தான் நாம் உதவிபுரிய வேண்டும். இவர்களுக்கே உதவி தேவைப்படுகிறது. போஜனம் தேவைப்படுகிறது.  இவர்களுக்கு உதவிசெய்யும்போது இவர்கள் நமக்கு பதிலுக்கு உதவி செய்யமாட்டார்கள். இவர்களால் நமக்கு உதவிசெய்யவும் முடியாது. ஆனால் இவர்கள் நமக்காக ஜெபிப்பார்கள். நாம் செய்யும் உதவிக்காக இவர்கள் கர்த்தரைத் துதிப்பார்கள். 


ஏழைகளுக்கு உதவி செய்வதினால் நமக்கு  அவர்களிடமிருந்து ஒரு நன்மையும் வராது. ஆகையினால் நாம் இதை நஷ்டம் என்று எண்ணக்கூடாது. இவர்கள் நமக்கு பதிலுக்கு நன்மை செய்யவில்லையென்றாலும் நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் நமக்கு பதில் செய்யப்படும் என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார்.  


இந்த உலகத்தில் தரித்திரருக்கு நாம் செய்யும் உதவிகளுக்கு இந்த பூமியில் நமக்கு  வெகுமதி கிடைக்காமல் போகலாம். வெகுமதி கிடைத்தாலும் அது பூமிக்குரிய மாம்ச பிரகாரமான வெகுமதியாகத்தான் இருக்கும்.  பூமிக்குரிய காரியம் மேன்மையான காரியமல்ல. பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் பரலோகத்திற்கு வந்து சேராது. பரலோகத்தின் ஆசீர்வாதங்கள் மாத்திரமே  பரலோகத்தில் பிரயோஜனமுள்ளதாக இருக்கும். நாம் இந்த பூமியில் தரித்திரருக்கு பிரதிபலன் எதிர்பாராமல் உதவிசெய்யும்போது, நமக்கு இந்த பூமியில் வெகுமதி கிடைக்கவில்லையென்றாலும்,  நாம் செய்த உதவியானது பரலோகத்தில் நமது கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். பரலோகத்தில் நம்முடைய உயிர்த்தெழுதலின்போது நமக்கு வெகுமதி கொடுக்கப்படும்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.