காணாமற்போன ஆடு (Parable study)
அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது: உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ? (லூக் 15:3,4)
இந்த உவமைக்கு இணையான சம்பவம் மத்தேயு எழுதின சுவிசேஷத்திலும் எழுதப்பட்டிருக்கிறது (மத் 18:12). தேவன் பரிசுத்தவான்களை காத்துக்கொள்கிறார் என்பதை மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் எழுதப்பட்டிருக்கிற சம்பவம் தெளிவுபடுத்துகிறது. பாவிகள் மனந்திரும்பும்போது தேவன் சந்தோஷமடைகிறார் என்பதை இந்த சுவிசேஷத்தில் எழுதப்பட்டிருக்கும் உவமை விளக்கி கூறுகிறது.
மனந்திரும்பாத பாவிகள் பாவமான வழிகளில் தங்கள் மனம்போல ஜீவிப்பார்கள். இவர்கள் காணாமற்போன ஆட்டைப்போன்றவர்கள். வழிதப்பிப்போன ஆடுகளைப்போன்றவர்கள். இவர்கள் தேவனுடைய சமுகத்திலிருந்து காணாமற்போனவர்கள். மந்தையிலிருந்து காணாமற்போனவர்கள். இவர்கள் தங்களுடைய ஆத்துமாக்களை நஷ்டப்படுத்தி, தாங்கள் எங்கு இருக்கிறோம் என்பது தெரியாமலேயே, தங்களுக்குத் தாங்களே காணாமற்போயிருக்கிறார்கள்.
காணாமற்போன பாவிகள் திசை தெரியாமல் அலைந்து கொண்டிருப்பார்கள். முடிவு தெரியாமல் சுற்றிக்கொண்டிருப்பார்கள். தாங்கள் எங்கு இருக்கிறோம் என்பது இவர்களுக்குத் தெரியாது. இவர்களை அழித்துப்போடும் கொடிய மிருகங்களின் ஆபத்து எப்போதுமே இவர்களைச் சுற்றிலும் இருக்கும். பயமும் திகிலும் திகைப்பும் இவர்களை எப்போதும் சூழ்ந்துகொள்ளும். மேய்ப்பனின் பாதுகாப்பிலிருந்தும் பராமரிப்பிலிருந்தும் இவர்கள் விலகி போய்விட்டார்கள். பசுமையான புல்வெளியை தேடிப் போவதாக நினைப்பார்கள். ஆனால் இவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியாது. தங்களுடைய சுயமுயற்சியினால் இவர்களால் மந்தைக்கு திரும்பி வரமுடியாது.
பரலோகத்தின் தேவன் வழிதெரியாமல் அலைந்துகொண்டிருக்கும் பாவிகள்மீது கிருபையுள்ளவராக இருக்கிறார். காணாமல்போன ஆட்டுக்கு மேய்ப்பன் விசேஷித்த கவனம் செலுத்துவான். தன்னிடத்தில் நூறு ஆடுகள் இருந்தாலும், காணாமல்போன அந்த ஒரு ஆட்டுக்காக மிகுந்த கரிசனையோடிருப்பான். தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு விட்டு, காணாமற்போன அந்த ஒரு ஆட்டை கண்டுபிடிக்குமளவும் தேடித் திரிவான். மிகுந்த சிரமப்பட்டு தேடுவான். காணாமற்போன ஆட்டை கண்டுபிடிக்கும் வரையிலும் தேடுவான்.
இதுபோலவே நம்முடைய பரலோகத்தின் தேவன் காணாமற்போன ஆடுகளைப்போல பாதை தெரியாமல் சுற்றி அலையும் பாவிகளை தேடிப்போகிறார். அவர்களைக் கண்டுபிடிக்கும் வரையிலும் தேடுகிறார். பாவிகள் மனந்திரும்பி தம்முடைய சமுகத்தில் மறுபடியும் அழைத்து வரப்படும் வரையிலும் தேவன் அவர்களைத் தேடிச்செல்கிறார்.
காணாமல் போன ஆடு என்பது ஒரு நம்பிக்கையும் இல்லாமல் பாவத்தில் சிக்கியிருக்கும் பாவிகளைக் குறிப்பிடும். இவர்கள் பாவத்திற்கு தங்களை ஒப்புக் கொடுக்கிறார்கள். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். எல்லோருக்குமே தங்கள் வீட்டிற்குப் போவதற்குப் பாதை தெரியும். மிருகங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லும். பறவைகளும், தங்கள் கூடுகளுக்குத் திரும்பும். பாதைமாறி காணாமல்போய்விட்டால், யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இயேசு கிறிஸ்து கூறியிருக்கும் உவமைக்கு யாரும் எளிதாகப் பதில் கூறிவிடுவார்கள். காணாமல்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும் அளவும் மேய்ப்பன் நிச்சயமாகவே அதைத் தேடித்திரிவான். (லூக்கா 15:7) இந்த உவமை மத் 18:12 ஆவது வசனத்திலும் கூறப்பட்டிருக்கிறது.
தோள்களின் மேல் போட்டுக்கொண்டு
கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, (லூக் 15:5)
காணாமற்போன ஆடு பாதை தெரியாமல் பல இடங்களுக்கும் சுற்றி அலைந்து கொண்டிருக்கும். முடிவில் இனிமேல் நடப்பதற்கு சரீர பலன் இல்லாமல் களைப்படைந்து ஓய்ந்து போயிருக்கும். மேய்ப்பன் இந்த ஆட்டைக் கண்டுபிடிக்கும்போது, இந்த ஆட்டினால் மந்தைக்கு நடந்து வரமுடியாது. அந்த அளவுக்கு இது சோர்ந்து போயிருக்கும். மேய்ப்பனோ இந்த ஆட்டின்மீது மிகுந்த கரிசனையோடிருக்கிறான். இந்த ஆட்டினால் நடந்து வரமுடியவில்லையென்றாலும் அதை தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு வீட்டிற்குத் திரும்பி வருவான்.
காணாமற்போன ஆடு வனாந்தரத்திலேயே அழிந்து போகட்டும் என்று மேய்ப்பன் விட்டுவிடமாட்டான். எப்படியாவது அதை தேடிக்கண்டுபிடித்து தன்னுடைய வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ப்பான். வனாந்தரத்தில் காணாமற்போன ஆடு நடக்க முடியாமல் சோர்ந்து போயிருந்தால், அது எப்படியாவது நடந்துதான் வரவேண்டுமென்று அதை அடித்து துன்புறுத்தமாட்டான். அதன்மீது மிகுந்த கரிசனையும் அன்பும் காட்டி, அது எவ்வளவு பாரமாக இருந்தாலும், அதை ஒரு பாரமாக நினைக்காமல், தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு சந்தோஷமாக வீட்டிற்குத் திரும்பி வருவான்.
இழந்துபோனதை தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் (லூக் 19:10). தேவன் தம்முடைய ஆடுகளை தமது கரங்களில் கூட்டிச்சேர்க்கிறார். அவர்களை தமது மடியில் சுமந்து செல்கிறார். இவையெல்லாம் தேவனுடைய இரக்கத்தையும் கரிசனையையும் காண்பிக்கிறது. காணாமற்போன ஆடு இப்போது தன் மேய்ப்பனுடைய தோள்களின்மேல் அமர்ந்திருக்கிறது. இனிமேல் அது காணாமல்போகாது. தன்னுடைய தோள்களின்மேல் இருக்கும் ஆட்டை மேய்ப்பன் பத்திரமாக தன் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ப்பான். அதுபோலவே கர்த்தருடைய கூடாரமறைவில் தங்கியிருக்கிறவர்களுக்கு தெய்வீக பாதுகாப்பு உண்டு. கர்த்தர் நம்முடைய கரங்களைப் பற்றிக்கொள்ளும்போது நம்மை முற்றும் முடிய காத்து வழிநடத்துவார்.
என்னோடேகூட சந்தோஷப்படுங்கள்
வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா? அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாம தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக் 15:6,7).
பாவிகள் மனந்திரும்பும்போது தேவன் சந்தோஷப்படுகிறார். பாவிகளை தமது தோள்களின்மேல் போட்டுக்கொண்டு தேவன் சந்தோஷப்படுகிறார். காணாமற்போன ஆட்டை தேடிப்போனபோது, எப்படியாவது அதைக் கண்டுபிடித்துவிடலாம் என்னும் நம்பிக்கையில்தான் மேய்ப்பன் ஆவலோடு புறப்பட்டுப்போனான். அவனுடைய நம்பிக்கை இப்போது நிறைவேறிற்று. ஆகையினால் அவனுக்குள் மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. தன்னுடைய சந்தோஷத்தை மற்றவர்களோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறான்.
காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடித்து அதைத்தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, வீட்டிற்கு வந்து, தன் சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து, தன்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்று கூறுவான். ""காணாமற்போன என் ஆட்டை கண்டுபிடித்தேன், என்னோடேகூட சந்தோஷப்படுங்கள்'' என்று கூறுவான். இந்த ஆடு காணாமற்போனாலும் மேய்ப்பன் இதை ""என் ஆடு'' என்று கூறுகிறான். இந்த ஆடு வழிதப்பி, தாறுமாறாக போனாலும் இதை மேய்ப்பன் எப்போதுமே தன் ஆடாகத்தான் பாவிக்கிறான்.
""காணாமற்போன என் ஆட்டை கண்டுபிடித்தேன்'' என்று கூறுகிறான். இவன் தான் கண்டுபிடித்தான். காணாமற்போன ஆட்டை கண்டுபிடிப்பதற்கு மேய்ப்பன் வேறு யாரையும் அனுப்பவில்லை. அந்த ஆட்டின் மீதுள்ள அன்பினாலும், அதை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்னும் அக்கறையினாலும் மேய்ப்பனே அதைத் தேடிப்போகிறான்.
காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பி அலைந்துகொண்டிருக்கும் பாவிகளை தேடிக் கண்டுபிடிப்பதற்கு தேவன் தீர்க்கதரிசிகளையோ அல்லது வேறு ஊழியக்காரர்களையோ அனுப்பவில்லை. தம்முடைய சொந்தக் குமாரனையே அனுப்புகிறார். அவரே நம்முடைய நல்ல மேய்ப்பர். பிரதான மேய்ப்பர். தாம் தேடுவதை அவர் நிச்சயமாக கண்டுபிடிப்பார். தம்மைத் தேடாதவர்களைக்கூட இயேசுகிறிஸ்து தேடிச் சென்று கண்டுபிடிப்பார்.
நீதிமான்கள் நீதியுடையவர்கள். அவர்கள் மனந்திரும்ப வேண்டிய அவசியமில்லை. (லூக்கா 5:32) அவர்கள் ஏற்கெனவே மனந்திரும்பி விட்டார்கள். தங்கள் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறார்கள். (ரோமர் 1:16-17; ரோமர் 5:1; 2கொரி 7:9-10). தொண்ணூற்றொன்பது நீதிமான்களும் மனந்திருந்தியபோது நிச்சயமாகவே பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருந்திருக்கும். அதுபோலவே ஒருபாவி மனந்திரும்பும்போதும் பரலோகத்தில் சந்தோஷம் உண்டாயிருக்கும். பாவிகளை இரட்சிப்பதற்காகவே இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். பரிசேயர் இயேசுவின் ஊழியத்தைக் குறித்து, முறுமுறுப்பதில் அர்த்தமேயில்லை. இயேசு கிறிஸ்து தமக்கு நியமிக்கப்பட்ட ஊழியத்தையே செய்கிறார்.

