காணாமற்போன வெள்ளிக்காசு (லூக்கா 15:8-10) Parable study
அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணமற் போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிற வரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாம-ருப்பாளோ? கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா? (லூக் 15:8,9)
ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாக இருக்கிறாள். அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போயிற்று. இந்த உலகத்தில் பத்துகாசுகளில் காணாமற்போன ஒரு வெள்ளிக்காசைப்போல, பத்துக்கு ஒருவர் தேவனைவிட்டு பிரிந்துபோய் பாவத்தில் ஜீவிக்கிறார்கள். இதற்கு முந்திய உவமையில் நூற்றில் ஒரு ஆடு காணாமற்போயிற்று என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. நூறு பேரில் ஒருவர் தேவனுடைய சமுகத்தைவிட்டுப் பிரிந்து பாவத்தில் ஜீவிக்கிறார். நூறு பேரில் ஒருவர் பாவியாக இருந்தாலும் அல்லது பத்துபேரில் ஒருவர் பாவியாக இருந்தாலும், எல்லா பாவிகளும் மனந்திரும்ப வேண்டுமென்று தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார். இந்த உலகம் முழுவதிலும் ஒருவர் மாத்திரமே பாவியாக இருந்திருந்தாலும் அந்த ஒரு பாவி இரட்சிக்கப்பட வேண்டுமென்பதற்காக இயேசுகிறிஸ்து நிச்சயமாகவே சிலுவையில் தமது இரத்தத்தைசிந்தி மரித்திருப்பார். இயேசுகிறிஸ்துவுக்கு எண்ணிக்கை முக்கியமல்ல. ஒவ்வொருவரும் மனந்திரும்ப வேண்டும் என்பதே அவருடைய சித்தம்.
இந்த உவமையில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போயிற்று என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய ஆத்துமா வெள்ளிக்காசைப்போன்றது. வெள்ளிக்காசுக்கு நல்ல மதிப்புள்ளது. இது சாதாரண இரும்புக்காசோ அல்லது ஈயக்காசோ அல்ல. இது வெள்ளிக்காசு.
ஸ்திரீயின் பத்து வெள்ளிக்காசுகளில் ஒரு வெள்ளிக்காசு மண்ணில் விழுந்து காணாமல்போயிற்று. இந்த உலகத்தின் ஆசாபாசங்களில் மூழ்கியிருக்கும் ஆத்துமா, மண்ணில் காணாமல்போன வெள்ளிக்காசைப் போன்றது. யாராவது ஒருவர் மண்ணில் கிடக்கும் காசை கண்டுபிடித்து பயன்படுத்தினால்தான் அந்தக் காசுக்கு மதிப்பு உண்டு. இல்லையென்றால் அது மண்ணோடு மண்ணாக இருக்கும் சாதாரண பொருள்தான். அதுபோலவே உலக ஆசாபாசங்களில் மூழ்கி காணாமல்போன ஆத்துமாக்களை யாராவது கண்டுபிடித்து, உலகத்தின் பிடியிலிருந்து தூக்கி எடுத்தால்தான், அந்த ஆத்துமாவுக்கு இரட்சிப்புக் கிடைக்கும். இல்லையென்றால் அது உலகத்தில் மூழ்கியிருக்கும் சாதாரண ஆத்துமாவாகவே இருக்கும்.
காணாமல்போன வெள்ளிக்காசை தேடிக்கண்டுபிடிப்பதற்கு இந்த ஸ்திரீ அதிக பிரயாசப்படுகிறாள். விளக்கைக் கொளுத்தி, வீட்டைப்பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிற வரைக்கும் ஜாக்கிரதையாய் தேடுகிறாள். இதுபோலவே காணாமல்போன ஆத்துமாக்களை தம்மிடத்தில் அழைத்து வருவதற்காக தேவன் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறார். சுவிசேஷத்தின் விளக்கை ஏற்றி வைக்கிறார்.
இயேசுகிறிஸ்துவின் கரத்திலிருக்கும் விளக்கை, நம்மிடத்தில் வருவதற்கு அவருக்கு பாதையைக் கண்டுபிடிப்பதற்காக பயன்படுத்துவார் என்று நினைக்கக்கூடாது. அவருக்கு விளக்கின் வெளிச்சம் தேவையில்லை. அவரே வெளிச்சமாக இருக்கிறார். சுவிசேஷத்தின் விளக்கு நமக்குத்தான் பிரயோஜனமாக இருக்கும். தேவனிடத்தில் சேரும் வழியை நாம் கண்டுபிடிப்பதற்காகவே கர்த்தர் நமக்கு சுவிசேஷத்தின் வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறார்.
காணாமல்போன வெள்ளிக்காசை அந்த ஸ்திரீ மிகவும் ஜாக்கிரதையாக தேடுகிறாள். அவளுடைய எண்ணம் முழுவதும் அந்த வெள்ளிக்காசைப்பற்றியதாகவே இருக்கும். அதுபோலவே இயேசுகிறிஸ்துவின் இருதயம் முழுவதும் காணாமல்போன ஆத்துமாக்களைப் பற்றிய சிந்தனையினால் நிறைந்திருக்கும். தம்மைவிட்டு தூரமாக விலகிப்போயிருக்கும் ஆத்துமாக்களை எப்படியாவது தம்மிடத்தில் அழைத்து வரவேண்டும் என்னும் சிந்தனையே கிறிஸ்துவின் உள்ளத்தில் நிரம்பியிருக்கும்.
காணாமல்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்த பின்பு அவள் மிகவும் சந்தோஷப்படுவாள். தன்னுடைய சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும் கூடவரவழைத்து தன்னோடுகூட சந்தோஷமாக இருக்குமாறு கூறுவாள். காணாமல்போன வெள்ளிக்காசை கண்டுபிடித்தேன். என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்று கூறுவாள்.
சந்தோஷமாக இருக்கிறவர்கள் தங்களுடைய சந்தோஷத்தை சுயநலமாக பயன்படுத்தக்கூடாது. மற்றவர்களும் தங்களோடு சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று விரும்பவேண்டும். காணாமல்போன வெள்ளிக்காசை கண்டுபிடித்த போது அவளுக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்திருக்கும். ""கண்டுபிடித்தேன், கண்டுபிடித்தேன்'' என்று சந்தோஷமாக கூறியிருப்பாள்.
காணாமல்போன காசு இரட்சிக்கப்படாத பாவிக்கு ஒப்பாயிருக்கிறது. ஒருபொருள் காணாமல்போய் அதிக காலம் ஆகிவிட்டால் அதைத் தேடுவது கடினம். அதுபோலவே ஒரு பாவி பாவத்தில் ஆழமாக மூழ்கிவிட்டால் அவனை மீட்பதும் கடினம். அவனுடைய இருதயம் கடினமாகி விடும். தன் இருதயக் கடினத்தினிமித்தம் சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்ளாமல் நித்திய அழிவில் போய்ச் சேர்ந்துவிடுவான்.
காணாமல்போன ஆடும், காணாமல்போன வெள்ளிக்காசும்
1. காணாமல்போனது - ஒருஆடு, ஒரு வெள்ளிக்காசு (லூக்கா 15:4,8)
2. தேடுகிறவன் செய்தது - கருத்தாய் தேடுகிறான் (லூக்கா 15:4,8)
3. தேடுகிறவனின் உறுதி - கண்டுபிடிக்கும் வரையிலும் தேடுகிறான்
4. தேடுகிறவன் அன்பு - திரும்பக் கொண்டு வருகிறான்
5. தேடுகிறவனின் சந்தோஷம் - சந்தோஷமடைகிறான் (லூக்கா 15:6,9)
6. தேடுகிறவனின் ஐக்கியம் - தன்னுடைய நண்பர்களோடும், உறவினர்களோடும் சந்தோஷப்படுகிறான்.
மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம்
அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (லூக் 15:10).
இயேசுகிறிஸ்து இந்த இரண்டு உவமைகளையும் ஒரே சத்தியத்தை தெளிவுபடுத்துவதற்காகவே கூறியிருக்கிறார். மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்பது இயேசுகிறிஸ்துவின் உபதேசம்.
மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணுற்றொன்பது நீதிமான்களைக் குறித்து சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும், மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும். மனந்திரும்புகிற இந்தப் பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாக சந்தோஷம் உண்டாயிருக்கும்.
இந்த பூமியில் பாவிகள் மனந்திரும்புவது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். பூமியில் இந்த மகிழ்ச்சி உண்டாகும்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும். ஒருவன் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் அவனும் மனந்திரும்பி இரட்சிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. நமக்கு ஜீவன் இருக்கும் வரையிலும் நாம் இரட்சிக்கப்படுவதற்கு நம்பிக்கையும் உள்ளது. தம்முடைய இரக்கத்தைக் காண்பிப்பதற்கு தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார். அதில் சந்தோஷப்படுகிறார்.
பரலோகத்தில் எப்போதுமே சந்தோஷம் உண்டாயிருக்கும். தம்முடைய எல்லாக் கிரியைகளையும் பார்த்து கர்த்தர் சந்தோஷமாக இருக்கிறார். அதிலும் விசேஷமாக தம்முடைய கிருபையின் கிரியைகளைக் குறித்து கர்த்தர் மிகுந்த சந்தோஷமடைகிறார். மனந்திரும்புகிற பாவிகளுக்கு நன்மை செய்யும்போது கர்த்தருடைய இருதயம் சந்தோஷத்தினால் நிறைந்திருக்கிறது. ஒரு தேசம் முழுவதும் இரட்சிக்கப்படும்போது கர்த்தர் சந்தோஷப்படுகிறார். அதே வேளையில் ஒரே ஒரு பாவி மாத்திரம் மனந்திரும்பினாலும் கர்த்தர் சந்தோஷப்படுவார்.
தேவனுடைய இரட்சிக்கும் கிருபை வெளிப்படும்போது தேவனுடைய தூதரும் சந்தோஷப்படுவார்கள். மனுஷருடைய இரட்சிப்பு தேவதூதருக்கு முன்பாக சந்தோஷமான காரியம். தேவதூதர்கள் சந்தோஷப்படும்போது ""உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை உண்டாவதாக'' என்று சந்தோஷத்தோடு துதித்துப் பாடுவார்கள் (லூக் 2:14).
மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்று ஒன்பது நீதிமான்களைக் குறித்து பரலோகத்தில் நிச்சயமாகவே சந்தோஷம் உண்டாயிருக்கும். இந்த சந்தோஷத்தைவிட மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும். புறஜாதியார் மனந்திருந்தி இரட்சிக்கப்படும்போது பரலோகத்தின் சந்தோஷம் மிகுதியாக இருக்கும். ஆயக்காரர் இரட்சிக்கப்படும்போதும் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்.
இயேசுகிறிஸ்துவின் பிரசங்கத்தை ஆயக்காரரும் பாவிகளும் இப்போது கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வசனத்தைக் கேட்டு இரட்சிப்பைப் பெறும்போது இயேசுகிறிஸ்துவின் சந்தோஷம் மிகுதியாக இருக்கும். பரிசேயரும் வேதபாரகரும் கர்த்தரைத் துதிக்கும்போது உண்டாகும் சந்தோஷத்தைவிட, ஆயக்காரர் மனந்திருந்தி இரட்சிக்கப்படும்போது உண்டாகும் சந்தோஷம் அதிகமாக இருக்கும்.
""தேவனே உமக்கு ஸ்தோத்திரம்'' என்று பரிசேயர் கர்த்தரைத் துதிப்பார்கள். தங்களைத் தாங்களே நீதிமான்களாக நினைத்துக்கொள்ளுகிற யூதரும் கர்த்தரைத் துதிப்பார்கள். தாங்கள் மனந்திரும்ப அவசியமில்லை என்பது இவர்களுடைய எண்ணம். இவர்கள் பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுவார்கள். இவர்களுடைய ஜெபங்களிலும் துதிகளிலும் கர்த்தர் பிரியமாக இருப்பதற்குப் பதிலாக, பாவிகள் கண்ணீர்விட்டு ""ஆண்டவரே எங்கள்மீது கிருபையாக இரங்கும், எங்கள் பாவங்களை மன்னியும், எங்களை இரட்சியும்'' என்று விண்ணப்பம் பண்ணும்போது, இதில்தான் கர்த்தர் பிரியமாக இருப்பார்.
ஒரு சிலர் பாவமில்லாமல் பரிசுத்தமாக ஜீவிப்பார்கள். தாங்கள் மனந்திரும்ப அவசியமில்லையென்று நினைப்பார்கள். ஆனால் பாவிகளோ தாங்கள் மனந்திரும்பினாலும் கர்த்தர் தங்களை இரட்சித்து அங்கீகரித்துக் கொள்வாரா என்று சந்தேகத்தோடு பயப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள் கண்ணீரோடு ஏறெடுக்கும் விண்ணப்பம் கர்த்தருக்குப் பிரியமானது.
தேவனுடைய பிரசன்னத்தைவிட்டு வழிவிலகிப் போவது நம்முடைய ஆத்துமாவிற்கு மிகவும் ஆபத்தானது. அதே வேளையில் நாம் கர்த்தரைவிட்டுப் பிரிந்திருந்தாலும் தேவனுடைய கிருபை நம்மை மறுபடியும் அவருடைய சமுகத்திற்கு அழைத்து வருகிறது. இதுவரையிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப்போகாத ஆத்துமாக்களுக்கும் கர்த்தர் கிருபையுள்ளவர். அதே வேளையில் பின்வாங்கிப் போன ஆத்துமாக்கள் மனந்திரும்பி கர்த்தரிடத்தில் மறுபடியும் வரும்போது தேவகிருபை அங்கு அதிகமாக வெளிப்படும்.
மனந்திரும்ப அவசியமில்லாத நீதிமான்கள் கர்த்தரிடத்தில் பக்திவைராக்கியமாக இருக்கமாட்டார்கள். ஆனால் இரட்சிக்கப்பட்ட பாவிகளோ கர்த்தரிடத்தில் மிகுந்த பக்திவைராக்கியமாக இருப்பார்கள். எவருடைய பாவங்கள் அதிகமாக மன்னிக்கப்பட்டதோ அவர் கர்த்தரிடத்தில் மிகுந்த பக்தியோடிருப்பார். தன்னுடைய பழைய பாவவாழ்க்கையையும், கர்த்தர் தன்னை கிருபையாக இரட்சித்ததையும் நினைவுகூர்ந்து அவரைத் துதிப்பார்.
நம்மிடத்தில் உள்ளதற்காக நாம் சந்தோஷப்படுவதைவிட, நமக்குரிய பொருள் காணாமல்போய் அதை கண்டுபிடிக்கும்போது நமக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும். ஒருவனுக்கு வியாதியில்லாமல் ஆரோக்கியமாக இருப்பதினால் உண்டாகும் சந்தோஷத்தைவிட, வியாதியுள்ளவன் தன் வியாதி நீங்கி ஆரோக்கியமடையும்போது அவன் மிகவும் சந்தோஷப்படுவான். ஒருவர் பக்திவைராக்கியமாக கர்த்தருக்கு ஊழியம் செய்யும்போது அவர் தனக்குள் சந்தோஷமாக இருப்பார். அதேவேளையில் ஒருவர் தன்னுடைய பாவவழிகளை விட்டு, கர்த்தரைப் பின்பற்றி, அவருக்காக ஊழியம் செய்யும்போது அவருடைய உள்ளத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்.

