புத்தியுள்ள உக்கிரானக்காரன்
எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போட்டவன்
பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது (லூக் 16:1).
இயேசுகிறிஸ்துவின் உபதேசங்களும் அவருடைய மார்க்கமும் தெய்வீக இரகசியங்களையும், தேவனுடைய கிருபைகளையும் இரக்கங்களையும் நமக்கு வெளிப்படுத்துகிறது. தேவரகசியங்களைப் பார்த்து நாம் ஆச்சரியப்பட்டால் மாத்திரம் போதாது. நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஆவிக்குரிய கடமைகளை புரிந்துகொண்டு, இந்த உலகத்தில் நேர்த்தியாகவும் பிரயோஜனமுள்ளவர்களாகவும் நாம் ஜீவிக்க வேண்டும். நமக்கு நாமே பிரயோஜனமுள்ளவர்களாக ஜீவித்தால் மாத்திரம் போதாது. பிறருக்கும் நாம் பிரயோஜனமுள்ளவர்களாக ஜீவிக்க வேண்டும். நம்மிடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தெய்வீக ஆசீர்வாதங்களை பிறருடைய பிரயோஜனத்திற்காகவும் பயன்படுத்த வேண்டும். பிறருக்கு நம்மால் செய்ய முடிந்த எல்லா உதவிகளையும் சந்தோஷமாக செய்ய வேண்டும். நாம் தேவனுடைய கிருபைக்கு உக்கிராணக்காரர்களாக இருக்கிறோம்.
இந்த உலகத்தில் தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களை நல்லமுறையில், பிரயோஜனமுள்ள வகையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். தெளிவான சிந்தனைக்கு தேவஞானம் தேவை. தேவன் நமக்குக் கொடுக்கும் ஞானத்தை நல்லமுறையில் பயன்படுத்தி செயல்பட்டால், நம்முடைய ஐசுவரியங்களை ஏராளமானோருக்கு பிரயோஜனமுள்ள வகையில் பயன்படுத்த முடியும். இதன் மூலமாக நம்முடைய நித்திய ஜீவன் ஆசீர்வாதமாக இருக்கும். உலகப்பிரகாரமான ஜனங்கள் இந்த உலகத்தின் ஐசுவரியங்களை தங்களுக்குப் பிரயோஜனமுள்ள வகையில் மிகவும் ஞானமாக பயன்படுத்துகிறார்கள். உலகப் பொருளினால் தங்களுக்கு மிகுந்த ஆதாயத்தைத் தேடுகிறார்கள்.
இயேசுகிறிஸ்து கூறும் இந்த உவமையில், மனுபுத்திரர் எல்லோருமே உக்கிராணக்காரர்களாக இருக்கிறார்கள். இந்த உலகத்தின் ஐசுவரியங்களில் ஒவ்வொருவருக்கும் என்னென்ன கொடுக்கப்பட்டிருக்கிறதோ, எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதற்கு அவர்கள் உக்கிராணக்காரர்கள். நம்மிடத்தில் உள்ளது எல்லாம் நமக்குரியதல்ல. இது மெய்யாகவே தேவனுக்கு மாத்திரமே உரியது. தேவனுக்குரியதை நாம் பயன்படுத்துகிறோம்.
இயேசுகிறிஸ்து கூறும் இந்த உவமையில் அவர் ஒரு உக்கிராணக்காரனைப்பற்றி கூறுகிறார். இவனுடைய எஜமான் ஒரு ஐசுவரியவான். ஆனால் இவனோ எஜமானுடைய ஆஸ்தியை சரியாக பராமரிக்கவில்லை. இவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக அந்த எஜமானுக்கு அறிவிக்கப்படுகிறது.
தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களை நாம் சரியாக பயன்படுத்தாமல் அழித்துப்போடுவோமானால், தேவனுடைய சமுகத்தில் நம்மைக் குறித்தும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டு கூறப்படும். இந்த உலகத்தில் தேவன் நம்மிடத்தில் பொறுப்பாக ஒப்படைத்திருக்கும் தாலந்துகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும். நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும். தேவன் நமக்குக் கொடுக்கும் தாலந்துகளை நல்லமுறையில் பயன்படுத்தவில்லையென்றால் தேவனுடைய கோபமும் நியாயத்தீர்ப்பும் நம்மேல் வரும். தேவன் தமது கிருபையினாலும் இரக்கத்தினாலும் நம்மை நியாயந்தீர்க்காமல் போனாலும், நாம் செய்த தவறுகளின் நிமித்தம் நாம் பாடுகளையும் வேதனைகளையும் அனுபவிக்க வேண்டியது வரும். அப்போது நம்மை நாமே நியாயந்தீர்த்து நொந்துகொள்வோம்.
உக்கிராணக்காரன் என்பவன் ஒரு எஜமானுடைய வீட்டையும், வீட்டிலுள்ள பொருட்களையும் வீட்டில் வேலை பார்க்கும் வேலையாட்களையும் பராமரிக்கிறவன். தன்னுடைய எஜமானுக்கு நன்மை செய்து அவனுடைய பிள்ளைகளுக்கும் இவன் பயிற்சி கொடுக்க வேண்டும்.
உக்கிராணக்காரன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப் போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்படுகிறது. உக்கிராணக்காரன்மீது குற்றம் சுமத்தப்படுகிறது. தன்னுடைய உக்கிராண ஊழியத்தில் அவன் பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை. அவன் மூலமாக எஜமானுக்கு இலாபம் வருவதற்குப் பதிலாக ஒருவேளை நஷ்டம் வந்திருக்கலாம்.
உன் உக்கிராணக்கணக்கை ஒப்புவி
அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான் (லூக் 16:2).
தன்னுடைய ஆஸ்தியை தன் உக்கிராணக்காரன் அழித்துப்போடுகிறதாக இந்த எஜமானுக்கு அறிவிக்கப்படுகிறது. அப்போது எஜமான் அவனை தன்னிடத்தில் வரவழைக்கிறார். ""உன்னைக்குறித்து நான் இப்படி கேள்விப்படுகிறது என்ன'' என்று அவனிடம் கேட்கிறார். தன் உக்கிராணக்காரனை இந்த எஜமான் பூரணமாக நம்பியிருந்தார். ஆனால் இவனோ தன் எஜமானை ஏமாற்றிவிடுகிறான். தன் உக்கிராணக்காரன் தன்னுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக கேள்விப்பட்ட போது எஜமானுடைய இருதயம் வருத்தப்பட்டிருக்கும்.
எஜமான் வருத்தப்பட்டாலும் உக்கிராணக்காரன் எந்த வழியிலும் தப்பமுடியாது. உக்கிராணக்காரன் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவன். தன்னிடத்தில் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டிருக்கும் ஆஸ்தியைக் குறித்து உக்கிராணக்காரன் மறுப்பு சொல்லாமல் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். எஜமான் அவனைப்பார்த்து ""உன் உக்கிராணக்கணக்கை ஒப்புவி'' என்று கூறுகிறார். இதற்கு அவர் கால அவகாசம் எதுவும் தரவில்லை. உக்கிராணக்காரன் தன் கணக்கை ஒப்புவிக்க எல்லா வேளையிலும் ஆயத்தமாக இருக்க வேண்டும். எஜமான் எப்போது கேட்டாலும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். ""இனி நீ உக்கிராணக்காரனாக இருக்கக்கூடாது'' என்றும் கூறிவிடுகிறார். இவன் பணிநீக்கம் செய்யப்படுகிறான். பணியிலிருந்து நீக்கப்பட்டாலும் இவன் கணக்கு ஒப்புவித்தே ஆகவேண்டும்.
இந்த உவமையின் மூலமாக இயேசுகிறிஸ்து நம்முடைய உக்கிராண ஊழியத்தை விவரிக்கிறார். இந்த உலகத்தில் தேவன் ஒவ்வொரு மனுஷருக்கும் உக்கிராண ஊழியத்தை கொடுத்திருக்கிறார். வெகுவிரைவில் தேவன் நம்முடைய உக்கிராண ஊழியத்தைவிட்டு நம்மை நீக்கிவிடுவார். ஒருவேளை நமக்கு சரீர மரணம் உண்டாகலாம். நாம் மரித்தபின்பு தேவன் தம்முடைய ஊழியத்திற்கு இந்த பூமியில் வேறொருவரை உக்கிராணக்காராக நியமிக்கலாம். நம்முடைய உக்கிராண ஸ்தானத்தில் வேறொருவர் வருவார்.
இந்த உலகத்தில் நம்முடைய உக்கிராண ஊழியத்திலிருந்து நாம் நீக்கப்படும்போது, நாம் எல்லோருமே கர்த்தருக்கு முன்பாக கணக்கு ஒப்புவிக்கவேண்டும். இந்த உலகத்தில் நாம் உயிரோடிருக்கும்போது கர்த்தர் நம்மிடத்தில் நம்பி ஒப்புவித்த ஊழியங்களை சரியாக செய்தோமா, நமக்குக் கொடுத்த ஆசீர்வாதங்களை பிரயோஜனமுள்ள வழிகளில் பயன்படுத்தினோமா என்றெல்லாம் நாம் கர்த்தருக்கு கணக்கு ஒப்புவிக்கவேண்டும். கர்த்தருடைய ஆசீர்வாதங்களை நாம் வீணாக பயன்படுத்தி அவற்றை விரையம் செய்துவிட்டால் தேவன் நம்மை நீதியாக நியாயந்தீர்ப்பார். தேவனுக்கு கணக்கு ஒப்புவிப்பதிலிருந்து யாரும் தப்பித்துப் போகமுடியாது. ஒவ்வொருவருக்கும் மரணம் வரும். அப்போது நம்முடைய உக்கிராணத்துவ ஊழியம் நம்மிடத்திலிருந்து எடுத்துப்போடப்படும். அப்போது நாம் நிச்சயமாகவே நம்முடைய உக்கிராணக்கணக்கை கர்த்தருக்கு ஒப்புவிக்க வேண்டும்.
உக்கிராணக்காரனுடைய கணக்கு வழக்குகள் சரியாக இருந்து, அவனிடத்தில் ஒரு தவறும் இல்லையென்று நிரூபிக்கப்படும் வரையிலும் அவனால் உக்கிராணக்காரனாக தொடர்ந்து வேலை செய்ய முடியாது.
நான் என்ன செய்வேன்
அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பி-ருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன் (லூக் 16:3).
எஜமான் இந்த உக்கிராணக்காரனை அவனுடைய உக்கிராண விசாரிப்பிலிருந்து நீக்கிவிடுகிறார். இதனால் என்ன செய்வது என்று அறியாமல் உக்கிராணக்காரன் திகைக்கிறான். குழப்பத்திலிருக்கிறான். இதன் மத்தியிலும் அவன் என்ன செய்ய வேண்டுமென்று ஞானமாய் சிந்திக்கிறான். தான் இனிமேல் என்ன செய்ய வேண்டுமென்று தீர்மானம் பண்ணியதை, இதற்கு முன்பே செய்திருந்தால் அது இவனுக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும். ஒன்றும் செய்யாமல் இருப்பதைவிட காலதாமதமாகவாவது செய்வது பரவாயில்லை. உக்கிராண விசாரிப்பலிருந்து இவன் நீக்கப்பட்டாலும் இவன் எப்படியாவது தன் வாழ்க்கையை நடத்த வேண்டும். இவன் தன்னை போஷிக்க வேண்டும். பராமரித்துக் கொள்ள வேண்டும்.
உக்கிராணக்காரன் தன்னைப்பற்றி ஆராய்ந்து பார்க்கிறான். தன்னால் என்ன செய்ய முடியும் என்றும், என்ன செய்ய முடியாது என்றும் யோசித்துப் பார்க்கிறான். இவன் ஒரு கடின உழைப்பாளியல்ல. ஆகையினால் கொத்துகிறதற்கு இவனுக்கு பெலனில்லை. இதற்கு முன்பு இவன் நிலத்தை கொத்தி விவசாயம் பண்ணியதில்லை. இவனால் முடியாது என்பதல்ல. ஆனால் இவன் இதுவரையிலும் எந்த வேலையும் செய்யவில்லை. சோம்பேறியாக இருந்திருக்கிறான். இவனுக்கு கொத்துகிற வேலை கொடுத்தாலும் செய்யமாட்டான். ஒரு எஜமானுக்குக் கீழ் உக்கிராணக்காரனாக வேலை செய்வதினால் தான் நிலத்தைக் கொத்தி கடினமாக வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நினைத்திருக்கிறான். இது வரையிலும் பழகிக்கொள்ளாத ஒரு வேலையை இனிமேல் திடீரென்று செய்ய முடியாது.
இதுவரையிலும் உக்கிராண ஊழியம் செய்தததினால் சமுதாயத்தில் கௌரவமான அந்தஸ்துடன் வாழ்ந்திருக்கிறான். தன்னுடைய வாழ்க்கைத் தரத்தை தாழ்த்த இவனுக்கு மனமில்லை. இரக்கவும் வெட்கப்படுகிறான். மற்றவரிடத்தில் அப்பத்திற்காக கையேந்தி பிச்சைக்கேட்க இவனுக்கு மனதில்லை. ""இரக்கவும் வெட்கப்படுகிறேன்'' என்று இவன் கூறுவது இவனுடைய பெருமையின் வார்த்தையாகும். ""கொத்துகிறதற்கு எனக்கு பெலனில்லை'' என்று கூறுவது இவனுடைய சோம்பேறித்தனத்தின் வார்த்தையாகும்.
மற்றவரிடம் பிச்சைக்கேட்டு பிழைப்பது இவனுக்கு வெட்கப்படும் காரியமாக தெரிகிறது. ஆனால் இவன் சிறிதும் வெட்கப்படாமல் தன் எஜமானை ஏமாற்றி அவனுடைய ஆஸ்திகளை அழித்துப்போட்டிருக்கிறான். பிச்சைகேட்க வெட்கப்படுகிறவன், தன் எஜமானை ஏமாற்ற வெட்கப்படவில்லை. தன் எஜமானை ஏமாற்றியபோது இவனுக்கு வெட்கம் வந்திருக்கவேண்டும். அப்போது வெட்கப்பட்டு எஜமானை ஏமாற்றாமல் உக்கிராண ஊழியத்தை நேர்மையாக நிறைவேற்றி இருக்க வேண்டும்.
உக்கிராணக்காரனுடைய சரீரத்தில் வேலை செய்வதற்குப் பெலனில்லை. பிச்சை எடுத்து பிழைப்பதற்கும் வெட்கப்படுகிறான். ஆனால் தன் எஜமானை ஏமாற்ற அவன் வெட்கப்பட வில்லை.
தள்ளப்படும்போது
உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்-க்கொண்டு; தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான். பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான் (லூக் 16:4-7).
தான் இனிமேல் என்ன செய்யவேண்டுமென்று உக்கிராணக்காரன் யோசித்துப் பார்க்கிறான். தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை தனக்கு சிநேகிதர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் பண்ணுகிறான். உக்கிராண விசாரிப்பை விட்டு இவன் தள்ளப்பட்டிருக்கிறபடியினால் இவனை தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் இவனுக்குத் தேவைப்படுகிறார்கள். இதை யோசித்துப் பார்த்து ""இனிமேல் நான் செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது'' என்று தனக்குள்ளே சொல்லிக்கொள்கிறான்.
இவனுடைய எஜமானிடத்தில் ஏராளமானோர் கடன்பட்டிருக்கிறார்கள். இவன் தன் எஜமானிடம் உக்கிராண ஊழியம் செய்தபோது, தன் எஜமானிடம் கடன்பட்டவர்களிடம் நெருங்கிப் பழகியிருக்கிறான். அவர்களுக்கு அவ்வப்போது சில நன்மைகளைச் செய்திருக்கிறான். தற்போது தன்னுடைய உக்கிராண ஊழியத்தைவிட்டு நீக்கப்பட்ட இந்த வேளையில், அவர்களுக்கு மேலும் ஒரு நன்மையை செய்ய விரும்புகிறான். இந்த நன்மையை அவர்களுக்கு செய்வதன் மூலமாக, அவர்கள் தன்னை தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறான்.
எஜமான் தன்னை உக்கிராண விசாரிப்பிலிருந்து நீக்கிவிட்டாலும், யாராவது தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறான். தன்னை ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்வதற்கு இவனுக்கு இன்னும் காலஅவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவன் தன்னுடைய உக்கிராணக்கணக்கை தன் எஜமானிடம் ஒப்புவிக்கவேண்டும். அதுவரையிலும் இவன் முழுவதுமாக உக்கிராண விசாரிப்பிலிருந்து நீக்கப்படவில்லை. தன்னுடைய உக்கிராண விசாரிப்பின் ஊழியம் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்பது இவனுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அந்த சிறுகாலத்திற்குள் இவன் சீக்கிரமாக செயல்பட விரும்புகிறான். தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களுக்கு நன்மை செய்து, தான் உக்கிராண விசாரிப்பிலிருந்து நீக்கப்பட்ட பின்பு, தன்னால் நன்மை பெற்றவர்களுடைய வீடுகள் ஒவ்வொன்றாக சென்று பிழைத்துக்கொள்ளலாம் என்று சிந்தித்து செயல்படுகிறான்.
தன்னுடைய எண்ணத்தின் பிரகாரமாக தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக தன்னிடத்தில் வரவழைக்கிறான். ஒருவன் தன் எஜமானுக்கு நூறுகுடம் எண்ணெய் கடன்பட்டிருக்கிறான். உக்கிராணக்காரன் அவனை நோக்கி ""நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது'' என்று கூறுகிறான். இவ்வாறாக அவன் பட்ட கடனில் பாதியைக் குறைத்து அவனுக்கு நன்மை செய்கிறான். கடன்பட்டவன் உட்கார்ந்து சீக்கிரமாய் எழுதவேண்டும் இல்லையென்றால் சந்தேகம் வந்துவிடும். உக்கிராண விசாரிப்பிலிருந்து இவன் விரைவில் தள்ளப்படப்போகிறான். ஆகையினால் இவன் எதை செய்தாலும் சீக்கிரமாக செய்து முடிக்க வேண்டும். சீக்கிரமாய் எழுதவில்லையென்றால் இனிமேல் எழுதமுடியாமல் போய்விடும்.
தன் எஜமானிடத்தில் கடன்பட்ட வேறொருவனை நோக்கி ""நீ பட்ட கடன் எவ்வளவு'' என்கிறான். அவன் நூறுகலம் கோதுமை கடன்பட்டிருக்கிறான். அவனைப்பார்த்து ""நீ உன் சீட்டை வாங்கி எண்பது என்று எழுது'' என்று கூறுகிறான். நம்முடைய உலகத்தின் சம்பத்துக்கள் இப்படித்தான் நிலையில்லாமல் இருக்கும். இந்த உலகப்பொருளின்மீது ஆசை வைத்திருக்கிறவர்கள் ஏமாந்து போவார்கள். மற்றவர்களை ஏமாற்றி பணம் சேமித்து வைக்கிறவர்கள் முடிவில் தாங்களும் ஏமாந்து போவார்கள். தன்னுடைய உலக சம்பத்தை அதிகரிக்கச் செய்வதற்காக, தன்னுடைய ஆஸ்தியையே அழித்துப்போடுகிற ஒருவனை இந்த எஜமான் தன்னுடைய உக்கிராணக்காரனாக வைத்திருக்கிறான்.
இந்த உலகக்காரியங்களை ஒருவரிடம் நாம் எவ்வளவுதான் நம்பிக்கையாக ஒப்படைத்தாலும் அந்த நபர் நம்மை ஏமாற்றிவிடுவதற்கு வாய்ப்புள்ளது. மிகவும் நம்பிக்கைக்குரியவர்கூட சில சமயங்களில் துரோகம் செய்துவிடுவார். இந்த எஜமானுடைய உக்கிராணக்காரன் தன் எஜமானுக்கு இப்படித்தான் துரோகம்பண்ணுகிறான். இதுவரையிலும் துரோகம்செய்தவன், தன்னுடைய உக்கிராண விசாரிப்பு முடியப்போகும் நேரத்திலும் தொடர்ந்து துரோகம் செய்கிறான். தவறு செய்கிறவர்கள் இவனைப்போலவே தொடர்ந்து தவறு செய்துகொண்டிருப்பார்கள். ஒரு சிலர் மாத்திரமே தாங்கள் செய்த தவற்றை நினைத்து வருந்தி, உணர்ந்து, திருந்துவார்கள். தவறு செய்கிறவர்கள்கூட மிகவும் ஞானமுள்ளவர்களாக தவறுசெய்வார்கள். ஆனால் இவர்கள் தங்கள் ஞானத்தை தவறான வழியில் பயன்படுத்துகிறார்கள்.
தன்னுடைய எஜமானிடம் கடன்பட்டவர்கள் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று உக்கிராணக்காரன் ஒருசில காரியங்களைச் செய்கிறான்.
அக்காலத்தில் எண்ணெயை அளப்பதற்குக் குடத்தைப் பயன்படுத்தினார்கள். ஒரு குடம் என்பது சுமாராக 40 லிட்டர் அளவாகும். தானியத்தை அளப்பதற்குப் பழைய ஏற்பாட்டுக் காலத்திலும், புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் பயன்படுத்தப்பட்ட அளவு. ஒரு கலம் என்பது சுமார் 10 மரக்கால் அல்லது 80 லிட்டர் அளவாகும்.
உக்கிராணக்காரனுக்கு எஜமான் சில பொறுப்புக்களைக் கொடுத்திருந்தான். கடன் கொடுப்பது, ஒப்பந்தங்கள் செய்வது, குத்தகைக்கு விடுவது, அதற்குரிய ஒப்பந்தங்களை எழுதுவது ஆகியவை எல்லாமே உக்கிராணக்காரனுடைய வேலை. எஜமானிடம் கடன்பட்டவர்களிடத்தில் இந்த உக்கிராணக்காரன் சென்று, கடன் ஒப்பந்தப் பத்திரங்களை எல்லாம் மாற்றி எழுதுமாறு கூறுகிறான். இதன் மூலமாக கடன் பட்டவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். உக்கிராணக்காரன் வேலையிலிருந்து நின்றபிறகு கடனாளிகள் இவனுக்கு நண்பர்களாக இருப்பார்கள்.
புத்தியாய் செய்தான்
அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள் (லூக் 16:8).
தன்னுடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய் செய்தானென்று எஜமான் கண்டு அவனை மெச்சிக்கொள்கிறான். தன்னை பராமரிப்பதைக் குறித்தும், உக்கிராண விசாரிப்பிலிருந்து நீக்கப்பட்ட பின்பு எப்படி வாழ்வது என்பதைக் குறித்தும் இவன் ஞானமாய் யோசனைபண்ணி புத்தியாய் கிரியை செய்கிறான். இவன் தன்னை ஏமாற்றி தன் ஆஸ்தியை அழித்துப்போட்டாலும், இவன் புத்தியாய் செய்தது இவனுடைய எஜமானுக்கு பிரியமாயிருக்கிறது.
இயேசுகிறிஸ்து இந்த உவமையைக் கூறி, இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப் பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாய் இருக்கிறார்கள் என்று விளக்கம் கூறுகிறார். இந்த உக்கிராணக்காரன் தன்னுடைய எஜமானுக்கு தவறு செய்கிறான். ஆனால் தனக்கு காரியங்களை புத்தியாய் செய்துகொள்கிறான்.
ஒரு வழியில் இந்த உக்கிராணக்காரன் தன் எஜமானுக்கும் நன்மை செய்கிறான். அவன் நீதியாய் நடந்துகொள்வதற்கு உதவிபுரிகிறான். தனக்கு கடன்பட்டவர்களிடம் எஜமான் அநியாயமாக நடந்துகொள்கிறான். தன்னுடைய நிலத்திற்கு அதிகமான குத்தகை நியமித்து அதிக லாபம் சம்பாதிக்க ஆசைப்படுகிறான். இவ்வளவு அதிகமான குத்தகை தொகையை கடன்பட்டவர்களால் கொடுக்க முடியவில்லை. இதனால் அவர்கள் தொடர்ந்து இந்த எஜமானுக்கு கடன்காரர்களாகவே இருக்கிறார்கள். உக்கிராணக்காரனுக்கு தன் எஜமானுடைய இரகசியங்களெல்லாம் தெரியும். ஆகையினால் இப்போது தன்னுடைய உக்கிராண விசாரிப்பு முடிவுக்கு வரும்போது, தன் எஜமானிடம் கடன்பட்டவர்களுக்கு நீதியும் உதவியும் செய்ய முன்வருகிறான்.
இந்த உக்கிராணக்காரன் இதுவரையிலும் தன்னுடைய எஜமானுக்கு மாத்திரமே உண்மையுள்ளவனாக உழைத்தான். தன் எஜமானின் நன்மையை மாத்திரம் மனதில் வைத்திருந்து அவனுக்காகவே பாடுபட்டான். ஆனால் இப்போதோ எஜமானிடத்தில் கடன்பட்டவர்களையும் அன்போடு நோக்கிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறான். இவனுக்கு இப்போது கடன்காரர்களின் உதவியும் தேவைப்படுகிறது. தன்னுடைய எஜமான் தன்னை உக்கிராண விசாரிப்பிலிருந்து தள்ளிப்போட்ட பின்பு, தன் எஜமானிடம் கடன்பட்டவர்கள் தன்னை அன்போடு ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறான்.
இந்த உலகத்தில் நாம் எவ்வளவுதான் சம்பாதித்தாலும், மரித்தபின்பு நம்முடைய சம்பாத்தியம் நம்மோடுகூட வரப்போவதில்லை. இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் இந்த சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். தங்களுடைய பிரபஞ்சத்தின் சம்பாத்தியங்களை நல்லமுறையில் பயன்படுத்தி தங்களுக்கு நன்மை உண்டாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் ஒளியின் பிள்ளைகளுக்கோ இவர்களைப்போல புத்திமான்களாக செயல்படத் தெரியவில்லை. விசுவாசிகள் தங்களுடைய ஆத்துமாக்களையும் நித்திய ஜீவனையும் குறித்து மிகுந்த எச்சரிப்போடு ஜீவிக்கவேண்டும்.
இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாக இருப்பதுபோல, ஒளியின் பிள்ளைகளாகிய கர்த்தருடைய பிள்ளைகள் தங்களுடைய ஆத்துமாக்களைக் குறித்து அதிக புத்திமான்களாக இருக்கவேண்டும். தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களை நல்லமுறையில் பயன்படுத்தி தங்களுடைய ஆத்துமாக்களுக்கு தேவையான காரியங்களை விரைந்து செய்யவேண்டும். நம்முடைய ஆவிக்குரிய காரியங்களில் புத்திமான்களாக நடந்துகொள்ளவேண்டும். அநீதியுள்ள உக்கிராணக்காரன், தன்னுடைய உக்கிராண விசாரிப்பு முடிவுக்கு வரப்போகிறது என்பது தெரிந்தவுடன் அவன் விரைந்து செயல்படுகிறான். ஞானத்துடன் நடந்துகொள்கிறான்.
ஒளியின் பிள்ளைகளைப் பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகளே தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாய் இருக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் மெய்யாகவே புத்திமான்கள் அல்ல. இவர்கள் தங்கள் சந்ததியில் மாத்திரமே புத்திமான்களாக இருக்கிறார்கள். இந்த சந்ததியில் இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகள் ஒளியின் பிள்ளைகளைவிட அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். நாம் இந்த பூமியில் ஜீவிக்கும்போது, இங்கு நிரந்தமாக ஜீவிப்போமென்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். நாம் மரித்தபின்பு மற்றும் ஒரு வாழ்வு உள்ளது என்பதை சிந்திப்பதேயில்லை. நாம் ஒளியின் பிள்ளைகளாக இருந்தாலும் நமக்கு முன்பாக நியமிக்கப்பட்டிருக்கும் நித்திய ஜீவனைக்குறித்து அக்கறை கொள்வதேயில்லை. நித்திய ஜீவனை சந்திப்பதற்கு நாம் நம்மை ஆயத்தப்படுத்துவதேயில்லை. நித்திய ஜீவனில் நமக்கு நன்மையும் ஆசீர்வாதங்களும் உண்டாயிருக்கும்படி, இந்த உலகத்தில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் எதையும் புத்தியாய் செய்வதில்லை.
அநீதியுள்ள உக்கிராணக்காரன் தன் எஜமானுக்கு விரோதமாக தவறு செய்கிறான். ஆயினும் தன்னுடைய வருங்காலத்தை நினைத்துப் பார்த்து புத்தியாய் நடந்துகொள்கிறான். தன்னுடைய காரியங்களை விரைவாக செய்கிறான். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமோ தவறு செய்யக்கூடாது. அதேவேளையில் நம்முடைய நித்திய ஜீவனை நோக்கிப்பார்த்து புத்தியாய் நடந்துகொள்ள வேண்டும். காரியங்களை விரைந்து செய்ய வேண்டும்.
அந்த உக்கிராணக்காரனுடைய எஜமான் அவனை மெச்சிக் கொண்டான். ஆனால் இயேசு கிறிஸ்து அவனைப் பாராட்டவில்லை. ஒளியின் பிள்ளைகள் என்பது விசுவாசிகளைக் குறிக்கும். இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் என்பது அவிசுவாசிகளைக் குறிக்கும்.
அநீதியான உலகப்பொருளான
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள் (லூக் 16:9).
இயேசுகிறிஸ்து இந்த உவமையைக் கூறிய பின்பு இதன் மையக்கருத்தை இங்கு தெளிவுபடுத்துகிறார். தம்முடைய சீஷர்களை நோக்கி (லூக் 16:1) ""நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று கூறுகிறார். ""உங்களுக்கு இந்த உலகத்தில் சிறிதளவே வசதி வாய்ப்புக்கள் இருந்தாலும், அந்த சிறிதளவை வைத்துக்கொண்டு உங்களால் முடிந்த எல்லா நன்மைகளையும் செய்யவேண்டும்'' என்பதே இயேசுகிறிஸ்துவின் உபதேசம்.
அநீதியான உலகப்பொருளினால் நமக்கு சிநேகிதரை சம்பாதிக்கவேண்டும். ஆவிக்குரிய பிள்ளைகள் தங்களிடத்திலுள்ள பொருளாதாரத்தை செலவு செய்யும்போது, தங்களுடைய நித்திய ஜீவனில் தங்களுக்கு நன்மை உண்டாகும்படி செலவு பண்ணவேண்டும். நம்முடைய பணத்தை வைத்துக்கொண்டு இப்போதுள்ள லௌகீக காரியத்தை மாத்திரமே பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. இனிமேல் வரப்போகிற நித்திய ஜீவனில் நமக்கு அதிக நன்மை கிடைக்கும் என்று விசுவாசித்து அதற்குரிய காரியங்களை இந்த பூமியில் நாம் புத்தியாய் செய்யவேண்டும்.
நம்மிடத்திலுள்ள ஐசுவரியங்கள் அனைத்தும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கே உரியது. அவரே ஐசுவரிய சம்பன்னர். தம்முடைய ஐசுவரியத்தை கர்த்தர் நம்முடைய பொறுப்பில் பராமரிப்பதற்காக கொடுத்திருக்கிறார். நாம் தேவனுடைய உக்கிராணக்காரர்களாக இருக்கிறோம். தேவனுடைய ஐசுவரியத்தை நமக்காக மாத்திரம் சுயநலத்தோடு செலவுபண்ணாமல், பிறருடைய நன்மைகளையும் மனதில் நினைத்துப்பார்த்து செலவு பண்ணவேண்டும்.
இந்த உலகத்தின் ஐசுவரியம் ""அநீதியான உலகப்பொருள்'' என்று அழைக்கப்படுகிறது. இது தவறான உலகப்பொருளாகும். ஐசுவரியம் அழிந்துபோகும். ஐசுவரியத்தையே முழுவதுமாக நம்பிக்கொண்டிருப்பவர்கள் ஏமாந்துபோவார்கள். நம்முடைய சந்தோஷத்திற்கு அநீதியான உலகப்பொருளை ஆதாரமாக நம்பக்கூடாது. ஐசுவரியத்தை நாம் நம்பவில்லையென்றாலும், ஐசுவரியத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலமாக நமக்கு நிச்சயமாகவே சந்தோஷம் உண்டாகும். ஐசுவரியத்தில் நமக்கு பூரண திருப்தி ஏற்படாமற்போனாலும், இந்த ஐசுவரியத்தினால் நமக்கு சிநேகிதரை சம்பாதிக்கலாம்.
நமக்கு மரணம் வரும்போது நம்முடைய உலகப்பிரகாரமான காரியங்கள் எல்லாமே முடிந்துபோகிறது. ஒரு வியாபாரி தன் பொருளாதாரத்தில் திவாலாவானவுடன் அவன் ஒன்றுமில்லாமல் போவதுபோல, நமக்கு மரணம் வரும்போது நாமும் சரீரப்பிரகாரமாக ஒன்றுமில்லாமல் போய்விடுவோம். நம் எல்லோருக்குமே மரணம் நியமிக்கப்பட்டிருக்கிறது. அது நம்மை எப்போது சந்திக்கும் என்று நமக்குத் தெரியாது. அது எந்தவேளையில் வேண்டுமானாலும் வரலாம். நமக்கு மரணம் வரும்போது நம்முடைய ஐசுவரியத்தை நம்மால் செலவு பண்ணமுடியாது. நாம் மரித்தபின்பு நம்முடைய பணத்தை நமது கையால்கூட தொடமுடியாது. கைகள் செத்து செயலிழந்துபோகும்.
நாம் மரிக்கும்போது நம்முடைய பொருளாதாரத்தினால் நமக்கு ஒரு பிரயோஜனமும் உண்டாகாது. ஆகையினால் நாம் உயிரோடிருக்கும்போதே நம்முடைய ஐசுவரியத்தை பயனுள்ள வழியில் செலவு பண்ணவேண்டும். நாம் மாளும்போது நம்மை நித்தியமான வீடுகளே ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி அநீதியான உலகப்பொருளால் நமக்கு சிநேகிதரை சம்பாதிக்க வேண்டும்.
""இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும். நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுண முள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு'' (1தீமோ 6:17-19) என்று அப்போஸ்தலர் பவுல் தீமோத்தேயுவுக்கு ஆலோசனை கூறுகிறார்.
