கடன மன்னிப்பது பற்றிய உவமை
சரியாய் நிதானித்தாய்
அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது. கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார். சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்-, (லூக் 7:41-43)
தம்முடைய உபதேசத்தை உறுதிபண்ணுவதற்காக இயேசுகிறிஸ்து ஓர் உவமையைக் கூறுகிறார். இந்த ஸ்திரீயானவள் அநேகம் பாவங்கள் செய்திருக்கிறாள். இவளுக்கு அதிகமாய் மன்னிக்கப்பட்டிருப்பதினால் இவள் இயேசுகிறிஸ்துவின்மீது அதிகமாய் அன்பு கூருகிறாள். பரிசேயனாகிய சீமோனும் இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை புரிந்துகொண்டு இந்த சம்பவத்தை தன் உள்ளத்தில் அங்கீகரிக்கிறான்.
ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருக்கிறார்கள். கடன்பட்ட இருவருக்குமே கடனைத் திருப்பிக் கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாமல் போயிற்று. இவர்கள் வாங்கிய கடனில் வித்தியாசமுள்ளது. ஒருவன் ஐநூறு வெள்ளிக்காசு கொடுக்கவேண்டும். மற்றொருவன் ஐம்பது வெள்ளிக்காசு கொடுக்கவேண்டும். ஒருவருடைய கடனைவிட மற்றவனுடைய கடன் பத்துமடங்கு அதிகம். கடன் கொடுத்தவனோ இருவருக்குமே கடனை மன்னித்துவிடுகிறான். இவர்களை நீதிமன்றத்திற்கு இழுத்துச்சென்று தண்டனை வாங்கி கொடுப்பதற்குப் பதிலாக, தன்னுடைய இரக்க குணத்தினால் இருவருடைய கடன்களையும் மன்னிக்கிறான். கடன்பட்ட இவ்விருவருமே அவன் கடனை மன்னித்ததினிமித்தம், கடன்கொடுத்தவன்மீது, அன்பாயிருக்கிறார்கள்.
இயேசுகிறிஸ்து இந்த உவமையைக்கூறி ""அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல்'' என்று பரிசேயனிடம் ஒரு கேள்வி கேட்கிறார். அதற்குப் பரிசேயனாகிய சீமோன் பிரதியுத்தரமாக ""எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன்'' என்று கூறுகிறான். கடன் கொடுத்தவனுக்கும் கடன்பட்டவனுக்கும் இடையிலுள்ள உறவை பரிசேயன் புரிந்து வைத்திருக்கிறான்.
கடன்பட்டவனிடம், கடனைத் திருப்பிக் கொடுக்க ஏதாவது நிர்வாகமிருந்தால் அதை கடன்கொடுத்தவனுக்கு திருப்பிக் கொடுக்கவேண்டும். கடன் வாங்கும்போது அங்கீகரித்த நிபந்தனையின்படி கடன்பெற்றவன் நடந்துகொள்ளவேண்டும்.
ஏதாவது சில சூழ்நிலைகளில் கடன்பட்டவனுக்கு கடனை திருப்பிக்கொடுக்கும் நிர்வாகம் இல்லாவிட்டால், கடன்கொடுத்தவன் இவனை துன்புறுத்தக்கூடாது. மனப்பூர்வமாக மன்னித்துவிடவேண்டும்.
தான் பட்ட கடனை மன்னித்ததற்காக கடன்பட்டவனும் கடன்கொடுத்தவனுக்கு நன்றியுள்ளவனாக நடந்துகொள்ளவேண்டும். அவனை நேசிக்க வேண்டும். கடனை திருப்பிக்கொடுக்க தனக்கு நிர்வாகமில்லையென்றால் கடன்பட்டவன் கடன்கொடுப்பவனிடம் தன்னுடைய இயலாமையை பணிவுடன் விளக்கிக் கூறவேண்டும். அவனை தூற்றி தூசிக்கக்கூடாது. கடன் வாங்கும்போது இருந்த பணிவு கடனை திருப்பிக்கொடுக்கும் வரையிலும் இருக்கவேண்டும். ஆனால் ஒரு சிலர் கடன் வாங்கியபின்பு, தான் பட்ட கடனை திருப்பிக் கொடுப்பதற்குப் பதிலாக, கடன் கொடுத்தவர்களை தூசிக்கிறார்கள். பகைக்கிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள்.
இந்த உவமையின் மூலமாக பாவிகளாகிய நாம் எல்லோருமே தேவனுக்கு கடன்பட்டிருக்கிறோம் என்னும் சத்தியம் தெளிவுபடுத்தப்படுகிறது. நம்முடைய பாவங்கள் நம்மேல் விழுந்துள்ள கடனாக இருக்கிறது. பாவிகள் சர்வவல்லமையுள்ள தேவனுக்கு கடன்பட்டவர்களாக இருக்கிறார்கள். சிருஷ்டிகளாகிய நாம் தேவனுக்கு கீழ்ப்படிய கடன்பட்டவர்களாக இருக்கிறோம். தேவனிடமிருந்து ஏராளமான நன்மைகளை நாம் பெற்றுக்கொண்டாலும் அவற்றை அவருக்கு திருப்பிச் செலுத்தும் நிர்வாகம் நம்மில் யாருக்குமேயில்லை. தேவன் நமக்கு செய்திருக்கும் நன்மையான காரியங்கள் பலவற்றை வீணாக செலவு செய்திருக்கிறோம். ஆகையினால் தேவனுக்கு திருப்பிச் செலுத்த நமக்கு நிர்வாகமில்லாமல் போயிற்று.
நம்மில் பலர் தேவனுக்கு அதிக கடன்பட்டவர்களாக இருக்கிறோம். மற்றவர்களுடைய பாவங்களைவிட நம்முடைய பாவம் அதிகமாக இருக்கும்போது நாம் தேவனுக்கு அதிக கடனாளிகளாக இருக்கிறோம்.
இந்த உவமையில் ஒருவன் ஐநூறு வெள்ளிக்காசும், மற்றொருவன் ஐம்பது வெள்ளிக்காசும் கடன்பட்டிருக்கிறார்கள். பரிசேயர்கள் குறைவாக கடன்பட்டிருக்கிறார்கள். இவர்களுடைய கடன் குறைவாக இருந்தாலும் இவர்களும் கடனாளிகளே. ஆனால் இவனோ மற்றவர்களைவிட தன்னை பரிசுத்தவானாக நினைத்துக்கொள்கிறான். தேவனுடைய பார்வையில் இவனும் பாவியாகத்தான் இருக்கிறான். தான் கடன்பட்டவனல்ல என்று நினைக்கிறான். இவன் தன்னைக்குறித்து நினைப்பதற்கு அதிகமாக நினைத்துப் பெருமைப்படுகிறான்.
பாவியாகிய இந்த ஸ்திரீயானவள் அதிகம் கடன்பட்டிருக்கிறாள். இவளைப்போல பாவியாக இருக்கிறவர்கள் அதிக பாவங்களை செய்து அதிக கடன்பட்டிருக்கிறார்கள். நம்முடைய கடன் குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் நம்முடைய கடனை திருப்பிக்கொடுப்பதற்கு நம்மில் யாருக்குமே நிர்வாகமில்லை. நம்மால் திருப்பிக்கொடுக்க முடியாத அளவிற்கு நம்முடைய கடன் சுமை நம்மிடத்திலுள்ளது. நாம் பட்ட கடனை நம்மால் திருப்பிச் செலுத்த முடியாது. நம்மிடத்திலுள்ள எல்லாவற்றையும் நாம் விற்று செலுத்தினாலும், நம்முடைய கடனை நம்மால் அடைக்க முடியாது.
நம்முடைய நீதி எவ்வளவுதான் அதிகமாகயிருந்தாலும் அது நம்முடைய பாவத்தை மன்னிப்பதற்கு போதுமானதாக இராது. நாம் எவ்வளவுதான் வருத்தப்பட்டாலும், ஒழுக்கமாக ஜீவித்தாலும் நம்முடைய வருத்தமும் சுய ஒழுக்கமும் நம்முடைய பாவத்தை மன்னிப்பதற்கு போதுமானதல்ல. கடன்பட்டோர் எல்லோருமே ஒழுக்கமாகத்தான் ஜீவிக்கவேண்டும்.
நம்முடைய கடன் சுமை அதிகமாகயிருந்தாலும் நம்முடைய பரலோகத்தின் தேவன் நம்மை மன்னிப்பதற்கு ஆயத்தமாக இருக்கிறார். நம்முடைய பாவம் அநேகமாக இருந்தாலும் பாவிகளை மன்னிப்பதற்கு கிறிஸ்துவின் கிருபை போதுமானதாக இருக்கிறது. நாம் செய்த பாவங்களுக்காக மனம்வருந்தி, பாவங்களிலிருந்து மனந்திருந்தி, இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசம் வைத்து. அவருடைய சமுகத்திற்கு அருகில் வரும்போது அவர் நம்முடைய பாவங்கள் எல்லாவற்றையும் மன்னிக்கிறார்.
நம்முடைய பாவங்களிலிருந்து நிவிர்த்தி செய்வதற்கு நமக்கு நிர்வாகமில்லாதிருந்தபோதிலும், தேவன் தமது கிருபையினால் நம்முடைய பாவங்கள் எல்லாவற்றையும் மன்னிக்கிறார். தேவனுடைய நாமம் கிருபையுள்ளவர், இரக்கமுள்ளவர் என்பதாகும். அவர் நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கு எப்போதுமே ஆயத்தமாக இருக்கிறார்.
நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும்போது, நம்மை மன்னித்த தேவனிடத்தில் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும். அவரை நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நேசிக்க வேண்டும். யாருக்கு அதிகமாய் மன்னிக்கப்படுகிறதோ அவர்கள் தேவனிடத்தில் அதிகமாய் அன்புகூருவார்கள். இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக அநேக பாவங்களில் சிக்குண்டு துன்மார்க்கமாக ஜீவித்தவர்கள், இரட்சிக்கப்பட்ட பின்பு மற்ற விசுவாசிகளைவிட நல்ல பரிசுத்தவான்களாக ஜீவிப்பார்கள். கர்த்தருக்காக வைராக்கியமாக ஊழியம் செய்வார்கள். ஊழியத்தினிமித்தமாக வரும் பாடுகளையும் வேதனைகளையும் சகித்துக்கொள்வார்கள். ஏனெனில் தங்களுடைய அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறது என்பதை இவர்கள் எப்போதுமே நினைவுகூர்ந்து, தேவனிடத்தில் அதிகமாய் அன்புகூருவார்கள்.
அப்போஸ்தலர் பவுல் இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக கிறிஸ்தவர்களை துன்புறுத்தும் சவுலாக இருந்தார். தேவன் இவரை சந்தித்தார். பவுல் இரட்சிப்பட்டார். இரட்சிக்கப்பட்ட பின்பு அப்போஸ்தலர் பவுல் அநேக பாடுகளையும், வேதனைகளையும், துன்பங்களையும் சகித்துக்கொண்டு, அவற்றிற்கு மத்தியிலும் இயேசுகிறிஸ்துவுக்காக வைராக்கியமாக ஊழியம் செய்தார். எவனுக்கு கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ அவன் கொஞ்சமாய் அன்புகூருவான். எவனுக்கு அதிகமாய் மன்னிக்கப்படுகிறதோ அவன் அதிகமாய் அன்புகூருவான்.
கடன் கொடுத்தவன் நியாயப்பிரமாணத்தின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரம். ஆனால் இது நீதியாக நடைபெற வேண்டும். (யாத் 22:25-27) ஏழு வருஷத்திற்கு ஒருமுறை சகோதரருடைய கடன்களையெல்லாம் தள்ளுபடி பண்ண வேண்டும். அந்நியருடைய கடனைத் தள்ளுபடி பண்ண வேண்டியதில்லை. (யாத் 21:2-6; உபா 15:2-3) விசுவாசிகள் கடன் கொடுப்பதற்கு புதிய ஏற்பாட்டில் வேறுவிதமாக ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது. (மத் 5:42; லூக்கா 6:34).
