கிருபையுள்ள தகப்பனும் கெட்ட குமாரனும் லூக் 15 : 11-32 பாகம் 2

 

கிருபையுள்ள தகப்பனும் கெட்ட குமாரனும் லூக் 15 : 11-32 பாகம் 2

எனக்கு ஒன்றும் கொடுக்கவில்லை


அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான் (லூக் 15:29,30).


ஒரு குடும்பத்தில் தங்கள் பெற்றோருக்கு நல்ல பிள்ளைகளாக நடந்து அவர்களுக்கு உதவி செய்யும் பிள்ளைகள், தங்களுடைய பெற்றோரின் அன்பும் ஆதரவும் தங்களுக்கு மாத்திரமே பிரதானமாக கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பெற்றோருக்கு ஆறுதலாகவும், பெற்றோரை சந்தோஷப்படுத்தவும் செய்கிற பிள்ளைகள், தங்களைத்தவிர வேறு யாரையும் தங்கள் பெற்றோர் நேசிக்கக்கூடாது என்று பேராசைப்படுவார்கள். தங்களுடைய குடும்பத்தில் யாராவது சிலர் ஊதாரிகளாக செலவு பண்ணி, உருப்படாமல் ஜீவித்தால், தங்கள் பெற்றோர் அவர்களை நேசிக்கவேகூடாது என்று தீர்மானமாக இருப்பார்கள். இது மனுஷருடைய இயல்பு. சிறு பிள்ளைகள்கூட தங்கள் தாயின் அன்புக்காக சவலையாக இருக்கும்.


தேவனுடைய குடும்பத்திலும் இப்படிப்பட்ட காரியம் நடப்பதுண்டு. ஒரு சில விசுவாசிகள் கள்ளம் கபடமில்லாமல் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள்கூட தேவன் தங்கள்மீது மாத்திரமே விசேஷித்த அன்பு பாராட்ட வேண்டுமென்றும், தேவனுடைய விசேஷித்த சிலாக்கியம் தங்களுக்கே கிடைக்க வேண்டுமென்றும் எதிர்பார்ப்பார்கள். மனந்திரும்புகிற பாவியின்மீது தேவன் பொறுமையாக இருந்து, அவர்களுக்கு ஆசீர்வாதங்களைக் கொடுக்கும்போது பழைய விசுவாசிகளால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. இந்த உவமையில் மூத்த குமாரன் இப்படிப்பட்ட சுபாவத்தில் இருக்கிறான். 


முதலாவதாக இவன் தன்னைத்தான் பெருமையாக நினைக்கிறான். தன்னுடைய தகப்பனுக்கு தான் கீழ்ப்படிவதும், தகப்பனுக்கு ஊழியம் செய்வதும், தகப்பனுடைய கற்பனையை மீறாமல் இருப்பதும் தன்னுடைய நல்ல சுபாவங்களுக்கு எடுத்துக்காட்டு என்று பெருமைப்படுகிறான். ""இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியம் செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாமலிருந்தேன்'' என்று கூறுகிறான். 


மற்றவர்களைவிட நல்ல சுபாவத்தோடும் நற்குணங்களோடும் இருக்கிறவர்கள் தங்களைப்பற்றி இவ்வாறு பெருமையாக நினைப்பதும் பேசுவதும் இயல்பான காரியமே. ஆனால் இந்த மூத்த குமாரனோ தன்னைப்பற்றிய காரியத்தை மிகைப்படுத்திக் கூறுகிறான். தன் தகப்பனுடைய கற்பனையை ஒருக்காலும் மீறவில்லையென்று தன்னுடைய கீழ்ப்படிதலை பெருமைப்படுத்துகிறான். அப்படிப்பட்டவன் இப்போது கோபப்படுவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. தகப்பனுடைய காரியத்தை மீறாதவன், இப்போது தன் இளைய சகோதரனுக்கு தன் தகப்பன் விருந்து பண்ணும்போது, அதையும் மீறாமல் அங்கீகரிக்க வேண்டும். ஆனால் இந்த மூத்த குமாரனோ அதை அங்கீகரிக்காமல் கோபமாக இருக்கிறான். 


ஒரு சிலர் தேவனுடைய ஊழியத்தை நீண்டகாலமாக செய்து வருவார்கள். பாவத்தில் விழுந்துவிடாதவாறு தேவன் அவர்களை நெடுங்காலமாக பாதுகாத்து பராமரித்து வந்திருப்பார். இப்படிப்பட்டவர்கள் தேவன் தங்கள்மீது காண்பிக்கும் அன்புக்காக நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். தேவனுடைய சமுகத்தில் தங்களைத் தாழ்த்த வேண்டும். கர்த்தருக்கு தாங்கள் செய்யும் ஊழியத்தையோ அல்லது தங்களுடைய பரிசுத்தமான ஜீவியத்தையோ பெருமை பாராட்டக்கூடாது. 


தகப்பனுடைய கற்பனையை மீறாமலிருப்பதாக பெருமை பேசும் மூத்த குமாரன், ""என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாய் இருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை'' என்று தன் தகப்பனை குற்றப்படுத்துகிறான். மூத்த குமாரன் கோபத்தோடு பேசுகிறான். இவன் தன் தகப்பனிடம் இதற்கு முன்பு தனக்கு ஒரு ஆடு வேண்டுமென்று கேட்டிருந்தால், அவனுடைய தகப்பன் நிச்சயமாகவே அவனுக்குக் கொடுத்திருப்பார். அவன் கேட்பதை கொடுக்காமல் மறுத்திருக்கமாட்டார். 


தன் இளையகுமாரனுக்கு விருந்து செய்வதற்கு தகப்பன் கொழுத்த கன்றை கொண்டு வந்து அடிக்கச் சொல்கிறார். இதைப் பார்க்கும்போது மூத்த குமாரனுக்கு பொறாமை உண்டாயிற்று. ஒருவேளை அது சாதாரண கன்று என்றால் கோபப்படாமல் அமைதியாக இருந்திருப்பான். ஆனால் இது கொழுத்த கன்றாக இருப்பதினால், விருந்தும் பெரிய விருந்தாக இருக்கிறது. இவனுடைய கோபமும் அதிகரிக்கிறது. மனுஷருடைய புத்தி தெளிவில்லாமல் இருக்கும்போது அவர்களுடைய மனது இப்படித்தான் தாறுமாறாக சிந்திக்கும். எல்லோரும் சந்தோஷமாக இருக்கும்போது இவர்கள் மாத்திரம் துக்கமாக இருப்பார்கள்.


மூத்த குமாரன் தன் குடும்பத்தில், தன் தகப்பனாரோடு பல சமயங்களில் சந்தோஷமாக இருந்திருக்கிறான். குடும்பத்தில் பல திருவிழாக்களை கொண்டாடியிருப்பார்கள். அப்பொதெல்லாம் கன்றுகள் அடிக்கப்பட்டு விருந்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கும். ஆனால் இப்போது அடிக்கப்பட்டிருக்கும் கன்றோ, அந்தக் கன்றுகள் எல்லாவற்றையும்விட கொழுத்ததாக இருக்கிறது. இதைத்தான் மூத்த குமாரனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன் இளைய குமாரனைவிட தானே உயர்ந்தவனென்று மூத்த குமாரன் கற்பனை பண்ணுகிறான்.


பல சமயங்களில் கர்த்தருடைய ஊழியக்காரர்களும் மூத்த குமாரனைப்போலவே தவறு செய்கிறார்கள். தங்களைப்பற்றியும், தங்களுடைய ஊழியத்தைப்பற்றியும் சிந்திக்க வேண்டியதற்கு அதிகமாக சிந்திக்கிறார்கள். மற்றவர்களைவிட தாங்கள் உயர்ந்த ஊழியக்காரர்கள் என்று நினைத்து இவர்கள் தங்களைத் தாங்களே உயர்த்துகிறார்கள். தாங்கள் கடினமாக ஊழியம் செய்வதாகவும், மற்ற ஊழியக்காரர்களெல்லாம் சரியாக ஊழியம் செய்யாமல் சும்மாயிருப்பதாகவும் இவர்கள் நினைக்கிறார்கள். ஆகையினால் தேவனுடைய பெரிய ஆசீர்வாதங்களெல்லாம் தங்களுக்கே கிடைக்க வேண்டுமென்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தேவன் தங்களை ஆசீர்வதிப்பதைவிட மற்றவர்களை அதிகமாய் ஆசீர்வதிக்கும்போது இவர்களால் அதை தாங்கிக்கொள்ள முடிவதில்லை.


தேவன் நமக்குக் கொடுக்கும் ஆசீர்வாதங்களெல்லாம் அவருடைய இரக்கத்தினாலும் கிருபையினாலும் நமக்குக் கொடுக்கப்படுகிறது என்னும் அடிப்படை எண்ணம் நமது சிந்தையில் இருக்கவேண்டும். தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் எந்தவிதத்திலும் பாத்திரவான்களல்ல என்று நம்மைக் குறித்து மனத்தாழ்மையோடு எண்ணவேண்டும். தேவனுடைய நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நமக்கு எவ்விதத்திலும் தகுதியில்லை என்னும் எண்ணம் நமது இருதயத்தின் ஆழத்தில் பதிந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட நல்ல சுபாவம் உள்ளவர்கள் மற்றவர்கள்மீது பொறாமைப்படமாட்டார்கள். தேவன் மற்றவர்களை ஆசீர்வதிக்கும்போது வருத்தப்படமாட்டார்கள். 


மூத்த குமாரன் தன் சிநேகிதரோடே சந்தோஷமாக இருக்கும்படிக்கு தனக்கு ஒரு ஆட்டுக்குட்டிகூட கிடைக்க வில்லை என்று கோபப்படுகிறான். இந்த சிநேகிதர்கள் இவன் வீட்டாரல்ல. வீட்டிற்குப் புறம்பே இருக்கிறவர்கள். வெளியிலுள்ள சிநேகிதர்களுக்காக இவன் பரிந்துபேசுகிறான். ஆனால் தன் சொந்த வீட்டிலுள்ளவர்களை இவன் மறந்துவிடுகிறான். தகப்பன் கொழுந்த கன்றை அடித்து வீட்டுக்கு வெளியில் உள்ளவர்களுக்கு விருந்துபண்ணச் சொல்லவில்லை. வீட்டிலுள்ளவர்கள் புசித்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் கொழுத்த கன்றை கொண்டு வந்து அடிக்கச் சொல்கிறார். தகப்பனுக்கு தன் வீட்டாரின் சந்தோஷமே மிகவும் முக்கியமாக இருக்கிறது. 


நம்முடைய பரலோகப் பிதாவுக்கும் தம்முடைய பிள்ளைகளின் சந்தோஷமே முக்கியமானதாக இருக்கும். உலகப் பிரகாரமான ஜனங்களை சந்தோஷமாக வைத்திருப்பதற்குப் பதிலாக, தேவன் தம்முடைய சொந்த பிள்ளைகளை போஷித்து சந்தோஷமாக வைத்திருக்க விரும்புகிறார். தேவனுக்கு அவருடைய குடும்பத்தாரே முக்கியம். 


தன்னுடைய இளைய சகோதரன் வீட்டைவிட்டு வெளியேறிப்போய், இப்போது திரும்பி வந்திருப்பதில், மூத்த குமாரனுக்கு சிறிதும் சந்தோஷமில்லை. இளைய குமாரன் உண்மையாகவே மனந்திருந்தாமல், மனந்திரும்பியது போல நடிக்கிறானோ என்னும் சந்தேகம் மூத்த குமாரனுக்குள் வந்திருக்கலாம். தன் இளைய சகோதரன் வந்ததற்காக இவன் ஏதோ ஒரு காரணத்தினால் சந்தோஷப்படவில்லை. 


கர்த்தருடைய பிள்ளைகளில் சிலர் இப்படிப்பட்ட தவறுகளை செய்துவிடுகிறார்கள். ஒருசிலர் மனந்திரும்பி இரட்சிக்கப்படும்போது, அவர்களுடைய மனமாற்றத்தை அங்கீகரிக்க மறுத்துவிடுகிறார்கள். அவர்களுடைய சாட்சி சரியில்லையென்றும், அவர்களுடைய ஜீவியம் தங்களைப்போல ஆவிக்குரிய ரீதியாக நேர்த்தியாக இல்லையென்றும் அவர்களைக் குறித்து குற்றப்படுத்துகிறார்கள். தங்களைப்போல அவர்கள் நன்றாக ஊழியம் செய்யவில்லையென்றும், ஆவியின் வரம் அவர்களிடத்தில் கிரியை நடப்பிக்கவில்லையென்றும் அவர்களைக் குறித்து ஏளனமாக நினைக்கிறார்கள். மற்றவர்களை குற்றப்படுத்துவதும், மற்றவர்களை ஏளனப்படுத்துவதும் கிறிஸ்துவின் ஆவி அல்ல. இது பரிசேயரின் ஆவி. 


மூத்த குமாரன் தன் உள்ளத்தில் கோபமடைந்து வீட்டிற்குள்ளே போக மனதில்லாமல் இருக்கிறான். இவனுடைய மனது என்னும் வீட்டில் இவனுடைய சொந்த சகோதரனுக்கு இடமில்லை. ஆனால் இவனுடைய தகப்பனின் வீட்டில் இவனுக்கும் இடம் இருக்கிறது. இவனுடைய சகோதனுக்கும் இடம் இருக்கிறது. 


விசுவாசிகளாகிய நாம் அக்கிரமக்காரரோடு ஐக்கியமாக இருக்க வேண்டியதில்லை. அதே வேளையில் அக்கிரமக்காரர்கள் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டிருக்கும்போது, அவர்களோடு ஐக்கியமாக இருக்க நாம் வெட்கப்படக்கூடாது. அவர்கள் மூலமாக நமக்கு நல்ல ஆலோசனைகள் கிடைக்குமென்றால் அதை ஏற்றுக்கொள்ள தயங்கக்கூடாது. ஒரு காலத்தில் துன்மார்க்கராக இருந்தவரோடு நாம் ஐக்கியமாக இருந்தால் சமுதாயத்தில் நமது அந்தஸ்து கேள்விக்குறியாகிவிடுமென்று யோசிக்கக் கூடாது. இளையகுமாரனின் தகப்பன் அவனை தன் வீட்டிற்குள் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் மூத்த குமாரனோ அந்த வீட்டிற்குள் பிரவேசித்து தன் இளைய சகோதரனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறான். 


விசுவாசிகளில் சிலர் இந்த மூத்த குமாரனைப்போல தங்களைப்பற்றி பெருமையாக நினைத்துக்கொள்கிறார்கள். ஒரு சிலரை தேவன் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டாலும் இவர்கள் அப்படிப்பட்டவர்களை ஏற்றுக்கொள்ளவேமாட்டார்கள். தேவன் இவர்களோடு ஐக்கியமாக இருந்தாலும் இந்த விசுவாசிகள் அவர்களோடு ஐக்கியமாக இருக்கமாட்டார்கள். அவர்களைவிட்டு பிரிந்தே இருப்பார்கள். 


மூத்த குமாரன் தன்னுடைய இளைய சகோதரனைப்பற்றி பேசும்போது அவனை தன் சகோதரன் என்று அங்கீகரிக்கவில்லை. அவனை தன் தகப்பனிடம் ""உம்முடைய குமாரனாகிய இவன்'' என்றே கூறுகிறான். இவனுடைய வார்த்தையில் அன்பு இல்லை. தன் சகோதரனை சகோதரன் என்று அழைக்க இவனுக்கு மனமில்லை. தன் தகப்பனின் குமாரனென்றே கூறுகிறான். நம்முடைய உற்றார் உறவினரை, அவர்களுடைய உறவு முறை பெயரைச் சொல்லி அழைப்பதற்கு நாம் வெட்கப்படக்கூடாது. நம்முடைய சகோதரரை சகோதரர் என்று சொல்வதில் நமக்கு எந்தவிதமான தயக்கமோ வெட்கமோ தேவையில்லை. 


சபையில் விசுவாசிகளெல்லாம் கர்த்தருக்குள் சகோதரராகவும் சகோதரிகளாகவும் இருக்கிறார்கள். ஐசுவரியவானாகிய ஒரு சகோதரன், சபையிலுள்ள தரித்திரனைப்பார்த்து ""சகோதரனே'' என்றுதான் அழைக்க வேண்டும். நமக்கு வேறு உறவு முறை எதுவும் கொடுக்கப்படவில்லை. ஒருவன் துன்மார்க்கமாக ஜீவித்து மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டிருக்கும்போது, அவனை ஆவிக்குரிய சகோதரனாக ஏற்றுக்கொள்ள நாம் வெட்கப்படக்கூடாது. கர்த்தர் இப்படிப்பட்டவர்களை அங்கீகரிக்கும்போது, நாம் அவர்களை அங்கீகரிக்காமல் புறக்கணித்துவிடக்கூடாது. 


மூத்த குமாரன் தன்னுடைய இளைய சகோதரனைக்குறித்து மிகவும் கேவலமாக பேசுகிறான். ""வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன்'' என்று தன் இளைய சகோதரனைப்பற்றி கூறுகிறான். இளையகுமாரன் தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணினான். இவன் ஆஸ்தியில் தன்னுடைய பங்கைத்தான் அழித்துப்போட்டான். குடும்பத்தின் எல்லா சொத்தையும் அழித்துப்போட்டானா என்று சரியாக சொல்லப்படவில்லை. 


தகப்பனுடைய சொத்தை இவன் அழித்துப்போட்டதாக சான்று எதுவுமில்லை. இவன் துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணினான் என்று தான் இளைய குமாரனைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இவன் வேசிகளிடத்தில் ஆஸ்தியை அழித்துப்போட்டதாக சொல்லப்படவில்லை. ஒருவேளை மூத்தகுமாரன் தன் சகோதரன் மீதுள்ள கோபத்தினால் இவ்வாறு மிகைப்படுத்தி பேசினானா என்பது தெரியவில்லை. இளைய குமாரன் தன் தகப்பனுடைய ஆஸ்தி முழுவதையும் அழித்துப்போடவில்லை. அவர் இன்னும் தன் பிள்ளைகளுக்கு போதுமான அளவு ஆஸ்தி வைத்திருக்கிறார். 


விசுவாசிகளில் சிலர், இந்த மூத்த குமாரனைப்போல, தங்களுக்கு யாரையாவது பிடிக்கவில்லையென்றால் அவரைப்பற்றி தாறுமாறாக பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்கள் செய்தது, செய்யாதது எல்லாவற்றையும் தங்கள் இஷ்டம்போல சிந்தித்து, எதையாவது பேசிவிடுகிறார்கள். தங்கள் உள்ளத்தில் உண்டாயிருக்கும் கற்பனைகளையெல்லாம் மெய்யான சம்பவம்போல ஜோடித்துவிடுகிறார்கள். நாம் எப்படிப்பட்டவர்கள் என்பது நமது தேவனுக்குத் தெரியும். அவருக்கு மறைவான காரியம் ஒன்றுமேயில்லை. தேவனே ஒருவரை அங்கீகரிக்கும்போது, நாம் அவரை அங்கீகரியாமல், அந்த நபர்மீது பழிச்சொற்களைக் கூறுவது விவேகமான செயல் அல்ல. 


இளையகுமாரனுக்காக தகப்பன் விருந்து பண்ணுகிறார். தன் குடும்பத்தார் எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக கொழுத்த கன்றை அடிக்கச் சொல்கிறார். தன் தகப்பன் இளைய குமாரன் மீது இவ்வளவு அன்பாக இருப்பதை மூத்தகுமாரனால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. ""இவன் வந்தவுடனே, கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே'' என்று புலம்புகிறான். தன் சகோதரன்மீது பொறாமைப்படுகிறான். தேவனுடைய கிருபை ஒருவருக்குக் கிடைக்கும்போது நாம் அதைப் பார்த்து பொறாமைப்படக்கூடாது. மனந்திரும்பிய பாவியின்மீது தேவகிருபை வந்து இறங்குவதைக் கண்டு நாம் வேதனைப்படக்கூடாது. 


ஒருவர் எவ்வளவுதான் துன்மார்க்கமாக ஜீவித்தாலும் அவர் மனந்திரும்பி பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும்போது தேவனுடைய கிருபையும் ஆசீர்வாதமும் அவருக்குக் கொடுக்கப்படுகிறது. தேவனுடைய பொதுவான பராமரிப்புக்கள் அவருக்கு கிடைக்கிறது. தேவனுடைய புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்கள் அவருக்கு தாராளமாக கொடுக்கப்படுகிறது. மனந்திரும்பிய ஒரு பாவி தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதைப் பார்த்து நாம் பொறாமைப்படக்கூடாது. தேவனுடைய கிருபையின் வரங்கள் அப்படிப்பட்டவர்களுக்குக் கிடைக்கும்போது நாம் வேதனையோடு புலம்பக்கூடாது. 


அப்போஸ்தலர் பவுல் மனந்திரும்பி கிறிஸ்தவராக ஆவதற்கு முன்பு, கர்த்தருடைய பிள்ளைகளை துன்பப்படுத்தினார். இயேசுகிறிஸ்துவுக்கும் அவருடைய உபதேசத்திற்கும் முரணாக ஜீவித்தார். இப்படிப்பட்ட பவுல் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்ட பிறகு தேவனுடைய கிருபையை அளவில்லாமல் பெற்றுக்கொண்டார். மற்ற அப்போஸ்தலர்களைவிட தேவகிருபை இவருக்கு அதிகமாக கொடுக்கப்பட்டது. தேவனுடைய தெய்வீக பராமரிப்பு கிடைத்தது. பரம தரிசனங்களை தரிசித்தார். கல்வாரி தரிசனத்தை இவர் மறந்துவிடவில்லை. பவுலின் ஊழிய எல்லையை கர்த்தர் விரிவுபடுத்தினார். தம்மைப்பற்றிய வெளிப்பாடுகளை தேவன் பவுலுக்குக் கொடுத்தார். 


இதனால் மற்ற அப்போஸ்தலர்கள் பவுலின்மீது பொறாமைப்படவில்லை. அவர்களெல்லோரும் பவுலோடு சேர்ந்து, பவுலுக்குக் கொடுக்கப்பட்ட இந்த கிருபைகளுக்காக கர்த்தரை ஏகோபித்துத் துதித்தார்கள். ஸ்தோத்திரம் செய்தார்கள். விசுவாசிகளாகிய நமக்கு அப்போஸ்தலர்களுடைய இந்த சுபாவம் முன்மாதிரியாக இருக்க வேண்டும். மூத்த குமாரனைப்போல தன் சொந்த சகோதரன்மீது பொறாமைபட்டு, சந்தோஷத்தை இழந்து, சமாதானத்தை இழந்து, நிம்மதியில்லாமல் பொறாமைப்பட்டு தவித்துக்கொண்டிருக்கக் கூடாது. 


தகப்பன்


அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது (லூக் 15:31). 


தகப்பனுடைய வீட்டிற்குள்ளே இளைகுமாரன் பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறான். மூத்த குமாரனோ வீட்டிற்குள்ளே வர மனதில்லாமல், வீட்டிற்கு வெளியே கோபமாக பேசிக்கொண்டிருக்கிறான். இந்த தகப்பன் தன் இளைய குமாரனையும் நேசிக்கிறார். தன் மூத்த குமாரனையும் நேசிக்கிறார். மூத்த குமாரன் வீட்டிற்கு வெளியே கோபத்தோடு நின்று கொண்டிருந்தாலும், அவன்மீதும் அன்பாக இருக்கும் தகப்பன், வெளியே வந்து அவனையும் வீட்டிற்குள் வருமாறு வருந்தி அழைக்கிறார். மூத்த குமாரனுடைய இருதயம் வேதனையடைந்திருந்தாலும் அந்த வேதனையை நீக்க முயற்சி பண்ணுகிறார். அவனுடைய கோபத்தை ஆற்றுகிறார். மனந்திரும்பி வந்திருக்கும் தன் இளையகுமாரன் மீது அன்பாக இருக்கும் இந்த தகப்பன், தன்னோடு கூடவேயிருந்து இத்தனை வருஷகாலமாய் தனக்கு ஊழியம் செய்து, தன்னுடைய கற்பனையை மீறாமலிருக்கும் இந்த மூத்த குமாரன்மீதும் இந்த தகப்பன் பிரியமாயிருக்கிறார். 


மனந்திரும்பி தேவனுடைய சமுகத்திற்கு வந்து பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும் பாவிகள்மீது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கிருபையும் இரக்கமும் நிறைந்தவராக இருக்கிறார். அதே வேளையில் அவர் தம்முடைய பரிசுத்தவான்களையும் கைவிட்டுவிடவில்லை. பரிசுத்தவான்களின் நன்மைகளையும் தேவன் விசாரிக்கிறார். மனந்திரும்பி வரும் பாவியை அங்கீகரித்து அவர்களை ஆசீர்வதிக்கும் தேவன், தம்மோடு கூடயிருக்கும் பரிசுத்தவான்களையும் மறந்துவிடாமல் ஆசீர்வதிக்கிறார்.


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் பல சமயங்களில் தவறுகள் செய்தார்கள். தேவனுடைய அன்பை மெய்யாக வெளிப்படுத்த முடியாமல் போனார்கள். அவர்களிடத்திலும் சில குறைபாடுகள் காணப்பட்டன. அப்படியிருந்த போதிலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் அன்பாகவே இருந்தார். அவர்களுடைய குறைகளினிமித்தம் இயேசு ஒருபோதும் அவர்களை ஒதுக்கி தள்ளிவிடவில்லை. 


மூத்த குமாரன் கோபமடைந்து வீட்டிற்குள்ளே போக மனதில்லாமல் இருக்கிறான். அப்போது அவனுடைய தகப்பனோ வெளியேவந்து அவனை வருந்தி அழைக்கிறார். அவனுக்கு நல்ல ஆலோசனை கூறுகிறார். அவனை அன்போடு அழைக்கிறார். அவன் எப்படியாவது உள்ளே வந்து குடும்பத்தின் சந்தோஷத்தில் பங்கு பெற வேண்டுமென்று விரும்புகிறார். தகப்பன் ஏனோ தானோ வென்று எடுத்தெரிந்து பேசிவிடவில்லை. ""மூத்த குமாரன் உள்ளே வந்தால் வரட்டும், வரவில்லையென்றால் வெளியே நிற்கட்டும்'' என்று கூறிவிடவில்லை. அல்லது ""இது என் வீடு, இங்கு எனக்கு இஷ்டமானதுதான் நடக்கும்'' என்று ஆணவமாகவும் இறுமாப்பாகவும் பேசவில்லை. அல்லது ""கொழுத்த கன்று என்னுடையது, அதை அடிக்கவோ, அல்லது வளர்க்கவோ அல்லது மற்றவருக்கு விற்றுவிடவோ எனக்கு உரிமை உண்டு'' என்று தன் இஷ்டம் போல பேசவில்லை.


வீட்டிற்கு வெளியே வந்து இளையகுமாரனை வரவேற்ற கிருபையுள்ள தகப்பன், இப்போது மறுபடியும் வீட்டிற்கு வெளியே வந்து தன் மூத்த குமாரனையும் வருந்தி அழைக்கிறார். நம்முடைய பரம தகப்பனும் இதுபோலவே அன்புள்ளவராக இருக்கிறார். பாவிகளை நேசிக்கிறவர் பரிசுத்தவான்களையும் நேசிக்கிறார். தம்மிடத்தில் வருகிற யாரையும் தேவன் புறம்பே தள்ளுவதில்லை. தம்மை கோபப்படுத்துகிறவர்கள்மீதும் தேவன் அன்பு செலுத்தி அவர்களையும் ஆதரிக்கிறார். தவறு செய்கிறவர்களை நியாயமாக தண்டிப்பதற்கு தமக்கு அதிகாரம் இருக்கிறபோதிலும், தண்டிக்கும் அதிகாரத்தை பயன்படுத்தாமல், அவர்களை ஆதரவாக அரவணைக்கிறார்.


கர்த்தருடைய ஊழியக்காரர்களும் இந்த உவமையில் கூறப்பட்டிருக்கும் தகப்பனைப்போல அன்பு மிகுந்தவர்களாக இருக்கவேண்டும். எல்லோரையும் பொறுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். வார்த்தையில் அன்பும் கிருபையும் நிறைந்திருக்க வேண்டும். தமக்கு கீழ் உள்ளவர்களை அதிகாரம் செலுத்தி ஆளுகை செய்யாமல், அவர்களோடு அன்பின் வார்த்தைகளினால் பரிந்து பேசவேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அதிகமாக கோபப்படுத்தக்கூடாது. எஜமான்கள் தங்கள் வேலையாட்களை அடக்கி ஆளக்கூடாது. பலவீனமாக இருக்கிறவர்களிடத்தில் நமது பலத்தை காண்பிக்காமல் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.


தகப்பன் தன் வீட்டில் நடைபெறும் விருந்தைப்பற்றி தன் மூத்த குமாரனுக்கு எடுத்துக் கூறுகிறார். தன் இளைய குமாரன்மீது, மூத்த குமாரனைவிட, அதிக அன்பாக இருப்பதினால் இந்த விருந்து நடைபெறவில்லையென்றும், இந்த விருந்தின் மூலமாக மூத்த குமாரன்மீது தனது அன்பு குறைந்துபோகவில்லையென்றும் தகப்பன் உறுதிபண்ணுகிறார். தன்னிடத்தில் பட்சபாதமில்லையென்று விளக்கிக்கூறுகிறார். ""மகனே நீ எப்போதும் என்னோடிருக்கிறாய்'' என்று தகப்பன் மூத்த குமாரன்மீது தான் வைத்திருக்கும் அன்பை மறுபடியும் உறுதிபண்ணுகிறார். இளையகுமாரனை ஏற்றுக்கொள்வது மூத்த குமாரனை புறக்கணிப்பது ஆகாது என்பதை தெளிவுபடுத்துகிறார். தன்னுடைய சொத்தைக் குறித்தும், மூத்த குமாரனைக்குறித்தும் தகப்பனுடைய உள்ளத்தில் ஏற்கெனவே ஒரு திட்டமுள்ளது. ""எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது'' என்று தன் நிலமையை தெளிவுபடுத்துகிறார். 


மூத்த குமாரன் தன் சிநேகிதரோடே சந்தோஷமாய் இருக்கும்படி அவனுக்கு அவன் தகப்பன் ஒருக்காலும் ஒரு ஆட்டுக்குட்டியைக் கூட கொடுக்கவில்லை. ஆனால் அந்த மூத்த குமாரன் தன் தகப்பனுடைய பந்தியில் அனுதினமும் குறைவில்லாமல் போஜனம் பண்ணியிருக்கிறான். தன் சிநேகிதரோடு சந்தோஷமாக இருப்பதைவிட தன் தகப்பனோடு சந்தோஷமாக இருப்பது நல்லது என்பதை தெளிவுபடுத்துகிறார். 


விசுவாசிகளாகிய நமக்கும் இந்த சத்தியம் மெய்யாகவே பயனுள்ளது. உலகப்பிரகாரமான நம்முடைய சிநேகிதர்களோடு சந்தோஷமாக இருப்பதைவிட பரலோகப் பிதாவாகிய தேவனுடைய சமுகத்தில் சந்தோஷமாக இருப்பதே நமக்கு ஆசீர்வாதமானது. 


கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அவருடைய சமுகத்தில் எப்போதும் தரித்திருப்பது மிகுந்த பாக்கியமானது. இது ஒரு சிலாக்கியம். நாம் எப்போதுமே அவருடைய சமுகத்தில் அவரோடு கூடயிருக்க நாடவேண்டும். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே (ரோம 8:17). கர்த்தருடைய ஆசீர்வாதங்களெல்லாம் அவருடைய பிள்ளைகளுக்கே உரியது. 


தேவன் மற்றவர்கள்மீது கிருபையாக இருக்கும்போது நாம் அவர்களைப் பார்த்து பொறாமைப்படக்கூடாது. ஏனெனில் தேவன் மற்றவர்கள்மீது கிருபையாக இருப்பதினால், அவர் நம்மீது வைத்திருக்கும் கிருபை ஒருபோதும் குறைந்துபோவதில்லை. தேவனுடைய கிருபை மற்றவர்களுக்கு எவ்வளவுதான் கொடுக்கப்பட்டாலும், நமக்குரிய பங்கு குறைவில்லாமல் நமக்குக் கிடைக்கும். 


நாம் மெய்யாகவே தேவனுடைய விசுவாசிகளாக இருப்போமென்றால் தேவனுக்குரியது எல்லாமே நமக்கும் உரியதாக இருக்கும். நாம் அவருடைய பிள்ளைகளாக இருப்பதினால் அவருடைய சுதந்தரவாளிகளாகவும் இருக்கிறோம். மற்றவர்களும் தேவனை விசுவாசிக்கும்போது அவர்களும் தேவனுக்குப் பிள்ளைகளாக இருக்கிறார்கள். தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு அவர்களும் சுதந்தரவாளிகளாக இருப்பார்கள். 


நாம் எல்லோருமே நீதியின் சூரியனாகிய தேவனுடைய வெளிச்சத்தில் நடக்கிறோம். சூரியனின் வெளிச்சம் ஒருபோதும் குறைந்து போவதில்லை. அது எல்லோருக்கும் பொதுவாகக் கிடைக்கும். சூரிய வெளிச்சத்தின் ஆசீர்வாதம் எல்லோருக்கும் பொதுவானது. ஒருவருக்கு சூரிய வெளிச்சம் கிடைப்பதினால் அந்த வெளிச்சம் மற்றவருக்கு குறைந்துபோய்விடாது.


மகிழ்ச்சியாயிருக்க வேண்டும்


உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனாபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார் (லூக் 15:32). 


இதுவரையிலும் கெஞ்சி, கொஞ்சி, சமாதானமாக பேசிக்கொண்டிருந்த தகப்பன், இப்போது தன்னுடைய அதிகாரத்தை தெளிவுபடுத்துகிறார். ""நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டும்'' என்னும் தன்னுடைய தீர்மானத்தை மூத்த குமாரனிடம் திட்டவட்டமாக அறிவிக்கிறார். இளையகுமாரன் மறுபடியும் திரும்பி வந்ததினால் குடும்பத்திலுள்ள எல்லோரும் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்பது என்னுடைய விருப்பம். விருப்பம் மட்டுமல்ல இது அவருடைய கட்டளையும்கூட. ஆகையினால் தன்னுடைய கட்டளைக்கு நீ கீழ்ப்படிய வேண்டுமென்று மூத்த குமாரனிடம் தன்னுடைய அதிகாரத்தை தெளிவுபடுத்துகிறார். 



பல சமயங்களில் அதிகாரமுள்ள வார்த்தைக்கு மதிப்பு இல்லாமல் போய்விடுகிறது. அடிக்கடி அதிகாரத்தை பயன்படுத்தும்போது அந்த வார்த்தைக்கு அதிகாரமில்லாமல் போய்விடுகிறது. அதிகாரமுள்ளவர்களின் வார்த்தைகளை சிலர் ஏளனமாக நினைத்து அதற்கு கீழ்ப்படிய மறுத்துவிடுகிறார்கள். அதிகாரமுள்ள வார்த்தைக்கும் சாதாரண வார்த்தைக்கும் வித்தியாசமில்லாமல் அதை அலட்சியம் பண்ணிவிடுகிறார்கள். 


தன்னுடைய அதிகாரமுள்ள வார்த்தையை தகப்பன் தெளிவுபடுத்துகிறார். நாம் ஏன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்கு போதுமான காரணங்களைக் கூறுகிறார். கடமையில் தவறாத தன் மகன் தன்னோடுகூட இருப்பதைவிட, மரித்துப்போன தன் மகன் மறுபடியும் உயிரோடு திரும்பி வந்தது தனக்கும் தன் குடும்பத்திற்கும் சந்தோஷமான சம்பவம். தந்தையின் கற்பனையை மீறாத மூத்த குமாரனால் குடும்பத்திற்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் உண்டு. இருந்தாலும் மரித்துப்போன இளைய குமாரன் மறுபடியும் உயிரோடு வந்திருப்பதே சந்தோஷமானது என்பதை தகப்பன் தெளிவுபடுத்துகிறார். 



ஒரு குடும்பத்தில் பலவிதமான சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். புதிய சொத்துக்களை வாங்குவார்கள். புதிய வீடுகளை கட்டுவார்கள். இவையெல்லாம் நடைபெறும்போது சந்தோஷமாகவே இருக்கும். இந்த சந்தோஷம் எல்லாவற்றையும்விட, குடும்பத்தில் மரித்துப்போன ஒருவர் உயிரோடு எழும்பி வரும்போது மிகப்பெரிய சந்தோஷம் உண்டாயிருக்கும். குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்கள் சரீர ஆரோக்கியத்தோடும், நீடித்த ஆயுளோடும் இருப்பதினால் உண்டாகும் சந்தோஷத்தைவிட, குடும்பத்தில் மரித்துப்போன ஒருவர் மறுபடியும் உயிரோடு வருவதுதான் மிகப்பெரிய சந்தோஷம்.


நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டும்'' என்று தகப்பன் கட்டளையிட்டபோது மூத்த குமாரன் அதற்கு மறுப்பு ஒன்றும் சொல்லவில்லை. தன் தகப்பனின் கட்டளைக்கு கீழ்ப்படிகிறான். மூத்த குமாரன் தன் சகோதரனைப்பற்றி தன் தந்தையிடம் பேசும்போது ""உம்முடைய குமாரனாகிய இவன்'' என்று கூறினான். ஆனால் தகப்பனோ தன் இளையகுமாரனைப்பற்றி மூத்தவனிடம் கூறும்போது ""உன் சகோதரனாகிய இவன்'' என்று கூறுகிறார். 


நற்குணமுடையவர்களுக்கு சில சமயங்களில் கோபம் வரலாம். ஆயினும் அவர்களுக்கு நல்ல ஆலோசனைகளைக் கூறும்போது, தேவகிருபையினால் அவர்களுடைய கோபம் தணியும். மூத்த குமாரன் நல்ல குமாரனாக இருக்கிறான். அவனுக்கு நல்ல ஆலோசனைகளை அவனுடைய தகப்பன் கூறியபோது அவனுடைய கோபமெல்லாம் தணிகிறது. ஆவிக்குரிய சகோதரர்கள் கோபமடையும்போது அவர்களுடைய கோபத்தை தூண்டிவிடாமல், அதை தணிப்பதற்கு நல்ல ஆலோசனைகளைக் கூறவேண்டும். பிறருடைய கோபம் பற்றியெறியும்போது அதில் நாம் குளிர்காய விரும்பக்கூடாது. 


பாகம் 1 ஐ படிக்க இங்கே கிளிக் செய்யவும்




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.