பத்துக்கன்னிகைகள்
மணவாளன்
அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும் (மத் 25:1).
இயேசுகிறிஸ்து பல உவமைகளைக்கூறி பரலோக ராஜ்யத்தை விளக்குகிறார். அவருடைய உவமைகளில் சில பரலோக ராஜ்யம் இப்போது எப்படியிருக்கும் என்பதையும், வேறு சில உவமைகள் அது வருங்காலத்தில் எப்படியிருக்கும் என்பதையும் விளக்குகிறது (மத் 13). தேவனுடைய ரகசியங்களை இயேசுகிறிஸ்து தமது பிள்ளைகளுக்கு வெளிப்படுத்துகிறார். தேவனுடைய ரகசியம் முடிவு பெறும்போது தேவனுடைய ராஜ்யம் பிதாவிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படும்.
பரலோக ராஜ்யத்தை விவரிப்பதற்கு கலியாணத்தில் நடைபெறும் ஒரு சம்பவத்தை இயேசுகிறிஸ்து இங்கு விவரிக்கிறார். யூதர்களுடைய சமுதாய வாழ்வில் கலியாணம் ஒரு முக்கியமான அம்சம். கலியாண வேளையின்போது மணவாளன் தன் தோழரோடு வருவார். மணவாட்டியின் வீட்டிற்கு இரவுவேளையில் பிந்திவருவார். மணவாட்டி மணவாளனை தன் தோழிமாரோடு வரவேற்பாள். மணவாளன் மணவாட்டியின் வீட்டிற்கு அருகில் வரும்போது மணவாட்டியின் தோழிகள் தங்கள் கைகளில் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு மணவாளனை வரவேற்பார்கள். மணவாட்டியின் வீட்டிற்கு மணவாளனை அழைத்து வருவார்கள். இது யூதசமுதாயத்தில் திருமண நிகழ்ச்சியின்போது நடைபெறும் சம்பவமாகும்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மணவாளனாக இருக்கிறார். சபையானது அவருடைய மணவாட்டியாக இருக்கிறது. மணவாளன் மணவாட்டியாகிய தம் சபையின்மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார். உண்மையுள்ள, மாறாத உடன்படிக்கையை மணவாளன் தம் மணவாட்டியாகிய சபையோடு செய்திருக்கிறார்.
இந்த உவமையில் கூறப்பட்டிருக்கும் கன்னிகைகள் சபையிலுள்ள விசுவாசிகளாவார்கள். இவர்கள் மணவாட்டியின் சிநேகிதிகள்.
கலியாண வீட்டில் இந்த கன்னிகைகள் மணவாளனை வரவேற்க வேண்டும். தீவட்டிகளை பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டு போகவேண்டும். கலியாண வீட்டின் சந்தோஷத்தில் இது ஒரு முக்கியமான சம்பவம். மணவாளன் வரும்போது இந்த கன்னிகைகளெல்லாம் அவரை வரவேற்பதற்காக காத்திருக்கிறார்கள்.
இயேசுகிறிஸ்துவின் விசுவாசிகளாகிய நாமும் கிறிஸ்துவுக்கு பணிவிடை ஊழியம் செய்யவேண்டும். அவரை நமது ஊழியத்தின் மூலமாக கனப்படுத்தி மகிமைப்படுத்த வேண்டும். அவருடைய பரிசுத்த நாமத்தை உயர்த்தவேண்டும். உயர்த்தப்பட்ட இயேசுகிறிஸ்துவை நாம் துதிக்கவேண்டும். பத்துக்கன்னிகைகளும் தீவட்டிகளை பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டு போவதுபோல, நாமும் இயேசுகிறிஸ்து வரும்போது நமது துதிகளையும் ஸ்தோத்திரங்களையும் உயர்த்தி மணவாளனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு எதிர்கொண்டு போகவேண்டும்.
மணவாளனுடைய வருகையை இந்த கன்னிகைகள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதுபோலவே இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நாமும் எதிர்பார்க்கவேண்டும். கிறிஸ்தவ மார்க்கத்தில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை பற்றிய உபதேசம் மிகவும் முக்கியமான உபதேசமாகும். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியம் முழுவதும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையோடு தொடர்பு கொண்டிருக்கிறது.
மணவாளனுக்கு எதிர்கொண்டு போகும்போது கன்னிகைகள் தங்கள் கைகளில் தீவட்டிகளை பிடித்திருக்கவேண்டும். தீவட்டிகளை பிடித்திருப்பது மணவாளனை கனப்படுத்துவதற்கும், அவருக்கு ஊழியம் செய்வதற்கும் அடையாளம். கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாக இருக்கிறோம்.
புத்தியுள்ளவர்களும் புத்தியில்லாதவர்களும்
அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள் (மத் 25:2).
மணவாளனுக்கு எதிர்கொண்டுபோக பத்துக்கன்னிகைகள் புறப்படுகிறார்கள். இவர்கள் பத்துபேரும் ஒரே சுபாவமுடையவர்களல்ல. இவர்களில் ஐந்துபேர் புத்தி உள்ளவர்கள் மீதி ஐந்துபேர் புத்தியில்லாதவர்கள். இவர்கள் பத்துபேருமே ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள். ஆயினும் இவர்களுக்குள் வித்தியாசம் இருக்கிறது.
இவர்களைப்போலத்தான் விசுவாசிகள் மத்தியிலும் வித்தியாசம் இருக்கும். ஒரே சபையை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆயினும் தேவனுடைய பார்வையில் இந்த விசுவாசிகளெல்லாம் வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். தங்களுடைய ஆத்துமாக்களை பாதுகாத்து பராமரிக்கும் விஷயங்களில் சில விசுவாசிகள் புத்தி உள்ளவர்களாகவும், சில விசுவாசிகள் புத்தியில்லாதவர்களாகவும் இருப்பார்கள். இயேசுகிறிஸ்துவின் மார்க்கமே மெய்யான ஞானம். இதை புரிந்து கொள்ளாத மதியீனம் பாவம்.
மணவாளனுக்கு எதிர்கொண்டுபோக ஆயத்தமாக இருக்கிறவர்கள் புத்தியுள்ளவர்கள். ஆயத்தம் இல்லாதவர்கள் புத்தியில்லாதவர்கள்.
புத்தியில்லாதவர்கள்
புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு போனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை (மத் 25:3).
புத்தியில்லாத கன்னிகைகள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு போனார்கள். எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை. சிறிது நேரம் எரிவதற்கு மாத்திரம் அவர்களிடத்தில் எண்ணெய் இருந்தது. அந்த கொஞ்சம் எண்ணெயை வைத்து தாங்களும் தீவட்டி பிடிக்கிறவர்கள் என்று தங்களை காண்பித்துக்கொள்கிறார்கள். மணவாளனைக்கு எதிர்கொண்டுபோக தங்களுக்கும் ஆர்வம் இருப்பதாக காண்பித்துக்கொள்கிறார்கள். மணவாளன் வருவதற்கு தாமதமானபோதோ, இவர்களுக்குப் பிரச்சனை உண்டாயிற்று. இவர்களுடைய தீவட்டி தொடர்ந்து எரிவதற்கு இவர்களிடத்தில் போதுமான அளவு எண்ணெயில்லை. ஆரம்பத்தில் சிறிது நேரம் எரிவதற்கு எண்ணெய் இருந்தது. ஆனால் முடிவு வரையிலும் எரிவதற்கு இவர்களிடத்தில் எண்ணெயில்லை. ஆயத்தமில்லாத மாய்மாலக்காரர்களாக இருக்கிறார்கள்.
புத்தியில்லாத கன்னிகைகள் சிந்தையில் தெளிவில்லாதவர்கள். வாழ்க்கையில் நோக்கமில்லாதவர்கள். தங்களுடைய கரங்களில் தீவட்டிகளை பிடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய இருதயத்திலோ அந்த தீவட்டி எரியவேண்டும் என்னும் சிந்தனையில்லை. இதுபோலவே சில விசுவாசிகளும் இருக்கிறார்கள். விசுவாசி என்னும் பெயரை தரித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய உள்ளத்திலோ தாங்கள் விசுவாசிக்கு ஏற்ற பிரகாரம் ஜீவிக்கவேண்டும் என்னும் சிந்தனையில்லை. ஆயத்தம் இல்லாமல் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் விசுவாசிகளாக இருக்கிறார்கள். அதன்பின்பு விசுவாச ஜீவியத்தில் பாடுகளும், உபத்திரவங்களும், வேதனைகளும், மேடுகளும், பள்ளங்களும் வரும்போது அவற்றை எதிர்கொள்வதற்கு விசுவாசமில்லாதவர்களாக போய்விடுகிறார்கள்.
புத்தியில்லாத விசுவாசிகள் சோதனைகளை சகிக்கமாட்டார்கள். தங்களுடைய ஜீவியத்தில் எப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றாலும், அதை தாங்கிக்கொள்வதற்கு அவர்களிடத்தில் விசுவாசமோ, பெலனோ இராது. சோதனைகளை தாங்கிக்கொள்ள தங்களை ஒருபோதும் ஆயத்தப்படுத்தமாட்டார்கள். மணவாளனுக்கு எதிர்கொண்டுபோக எல்லோரும் தீவட்டி பிடித்துக்கொண்டு போகிறார்கள் என்று நினைத்து, புத்தியில்லாத கன்னிகைகளும் தீவட்டி பிடித்துக்கொண்டு போகிறார்கள். ஆரம்பத்தில் தாங்களும் மணவாளனை வரவேற்க ஆர்வமுள்ளவர்கள் போல காண்பிக்கிறார்கள். ஆனால் இவர்களிடத்தில் போதுமான அளவு எண்ணெயில்லை. ஆயத்தமில்லாமல் வருகிறார்கள்.
விசுவாசிகளில் சிலரும், இவர்களைப் போலவே இருக்கிறார்கள். எல்லோரும் சபைக்கு வருகிறார்கள் என்று தாங்களும் வருகிறார்கள். இயேசுகிறிஸ்துவை நேசிப்பதாக ஆரம்பத்தில் காண்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் தொடர்ந்து விசுவாச ஜீவியம் ஜீவிப்பதற்கு இவர்களிடத்தில் போதுமான அளவு விசுவாசமில்லை. தங்களை ஆயத்தப்படுத்தாமல் அழிந்துபோகிறார்கள். எறும்பு வருங்காலத்திற்கு தேவையானதை சேகரிக்கும். அதைப்போல நாமும் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளும்படி வருங்காலத்திற்காக நமக்கு நல்ல ஆவிக்குரிய ஆகாரத்தை பொக்கிஷமாக வைத்திருக்கவேண்டும் (1தீமோ 6:19). பொறுப்பில்லாமல் ஜீவிக்கக்கூடாது.
புத்தி உள்ளவர்கள்
புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள் (மத் 25:4).
பத்துக்கன்னிகைகளில் ஐந்துபேர் புத்தி உள்ளவர்கள். இவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூட, தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்கள் ஜீவியத்தில் நல்ல கொள்கையும், நல்ல குறிக்கோளும் உடையவர்கள். தங்களுக்கு கொடுக்கப்படும் வேலைகளை தெளிவாக திட்டமிட்டு, முடிவு வரையிலும் அந்த வேலையை செய்து முடிப்பார்கள்.
நம்முடைய இருதயமே பாத்திரமாக இருக்கிறது. நமது இருதயத்தில் நமது ஞானமும், நமது பொக்கிஷமும், நம்முடைய எல்லா காரியங்களும் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. நமது இருதயம் கெட்டுப்போனால் நம்முடைய சுபாவமும் கெட்டுப்போகும். இருதயம் சுத்தமாக இருந்தால்தான் பேச்சும் சுத்தமாக இருக்கும். ஆகையினால் நமது இருதயமாகிய பாத்திரத்தை எப்போதும் பரிசுத்தமாக வைத்திருக்கவேண்டும்.
தேவனுடைய கிருபையே எண்ணெயாக இருக்கிறது. நமது இருதயம் என்னும் பாத்திரத்தில் தேவனுடைய கிருபை நிரம்பியிருக்கவேண்டும். மனுஷருக்கு முன்பாக நமது வெளிச்சம் பிரகாசிக்கவேண்டும். நமது நற்கிரியைகள் மூலமாக தேவனுடைய நாமம் மகிமைப்படவேண்டும். கிறிஸ்துவின்மீது நமக்கு விசுவாசமில்லையென்றால், தேவனிடத்திலும் மனுஷரிடத்திலும் நாம் அன்புகூரவில்லையென்றால், நாம் மற்றவர்களுக்கு வெளிச்சம் தரமாட்டோம். நாம் மற்றவர்களுக்கு உதவியாக எந்த நற்கிரியையும் செய்யமாட்டோம்.
புத்தியுள்ள ஐந்து கன்னிகைகளும் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போகிறார்கள். ஒருவேளை மணவாளன் வருவதற்கு தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். நம்முடைய ஜீவியத்தில்கூட நமக்கு நன்மை மாத்திரமே நடக்கும் என்று நினைத்து இறுமாப்பாக இருந்துவிடக்கூடாது. உபத்திரவம் வருவதற்கும் நமக்கு வாய்ப்புள்ளது என்று எதிர்பார்த்து, அதற்கு இப்போதே ஆயத்தமாக இருக்கவேண்டும். சத்துருக்கள் ஒரு பட்டணத்தை முற்றிக்கையிடும்போது, அந்த பட்டணத்திலுள்ள ஜனங்கள் தங்களுக்கு தேவையானவற்றை பராமரித்து சேமித்து வைத்திருப்பார்கள். அதுபோல சாத்தான் நம்மை முற்றிக்கையிடும்போது அவன்மீது ஜெயம் பெறும் வரையிலும் நமது விசுவாசத்தையும், தேவவசனத்தையும் நமது உள்ளத்தில் நிரப்பி வைத்திருக்கவேண்டும்.
மணவாளன் வர தாமதம்
மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள் (மத் 25:5).
மணவாளன் வருவதற்கு தாமதமாகிறது. அப்போது மணவாளனுக்கு எதிர்கொண்டு போக புறப்பட்ட பத்து கன்னிகைகளும் நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிடுகிறார்கள். இவர்கள் எதிர்பார்த்த சமயத்தில் மணவாளன் வரவில்லை. நிச்சயமாகவே நடைபெறும் என்று நாம் எதிர்பார்க்கும் காரியங்களுக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். அது விரைவில் நடந்தாலும், தாமதமானாலும் நாம் எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும். கிறிஸ்துவின் வருகைகூட தாமதமாவதுபோன்று நமக்குத் தெரிகிறது. ஆயினும் மெய்யாகவே அவருடைய வருகை நிச்சயமாக வரும்.
நமது சித்தத்தின் பிரகாரமாக இயேசுகிறிஸ்து வரவில்லையென்றாலும், தமது சித்தத்தின் பிரகாரமாக தாம் குறித்த வேளையில் அவர் நிச்சயமாகவே வருவார். இயேசுகிறிஸ்துவின் வருகை தாமதமாகும்போது அவருக்காக காத்திருக்கிறவர்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. எந்த நோக்கத்திற்காக காத்திருக்கிறார்களோ அந்த நோக்கத்தை மறந்துவிடக்கூடாது. இங்கு பத்து கன்னிகைகளும் மணவாளனுக்கு எதிர்கொண்டு போக புறப்பட்டவர்கள். மணவாளன் வர தாமதமானபோது, இவர்கள் தங்கள் கடமையை மறந்துவிட்டு, நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிடுகிறார்கள். தூங்குபவர்கள் ஒருபோதும் ஆயத்தமாக இருக்கமாட்டார்கள். பத்து கன்னிகைகளும் மணவாளனுடைய வருகையையே மறந்துவிட்டு அயர்ந்து தூங்குகிறார்கள்.
நிச்சயமாக நடைபெறப்போகிற காரியங்கள், நாம் எதிர்பாராத சமயத்தில் திடீரென்று நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது. ஒரு காரியம் தாமதமாவதினால் அது இனிமேல் நடைபெறாது என்று இறுமாப்பாக இருக்கக்கூடாது. ஒரு காரியம் நடைபெறாது என்பதற்கு தாமதம் அடையாளமாகாது.
பத்து கன்னிகைகளில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுகூட பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போனார்கள். ஆனால் இவர்களோ விழித்திருக்க தவறிவிடுகிறார்கள். பாத்திரத்தில் எண்ணெய் இருந்தும், தங்கள் சரீரத்தில் நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிடுகிறார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளில் சிலர் இவர்களைப்போலவே இருக்கிறார்கள். கர்த்தருக்காக நீண்டகாலமாக ஊழியம் செய்கிறார்கள். ஆயினும் தேவனுடைய கிருபை இவர்களிடத்தில் காணப்படுவதில்லை. இவர்களுடைய கிரியைகளும் தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாக இருப்பதில்லை. இவர்கள் தேவனிடத்தில் அன்புகூருகிறார்கள். ஆயினும் தேவனிடத்தில் இவர்கள் ஆதியில் கொண்டிருந்த அன்பைவிட்டு விலகிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட ஊழியக்காரர்களிடத்தில் ஆவியானவருடைய அபிஷேகம் இருக்கிறது. ஆனால் இந்த அபிஷேகத்தை பயன்படுத்த வேண்டிய சமயத்திலோ அதை பயன்படுத்தாமல் நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிடுகிறார்கள்.
இதோ மணவாளன் வருகிறார்
நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று (மத் 25:6).
பத்துக்கன்னிகைகளும் தூங்கிக்கொண்டிருக்கும்போது, மணவாளனுக்கு எதிர்கொண்டு போக புறப்படுமாறு இவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்படுகிறது. இவர்கள் எதிர்பாராத சமயத்தில் இந்த அழைப்பு வருகிறது. நடுராத்திரியிலே, ""இதோ மணவாளன் வருகிறார். அவருக்கு எதிர்கொண்டுபோக புறப்படுங்கள்'' என்கிற சத்தம் உண்டாயிற்று. கிறிஸ்துவின் வருகை தாமதமானாலும், அவர் ஏற்ற வேளையில், குறித்த காலத்தில் நிச்சயம் வருவார். அவருடைய வருகை தாமதமாக இருந்தாலும், அவர் நிச்சயமாக வருவார். அவருக்காக காத்திருக்கிறவர்கள் அவரைக் கண்டு ஆறுதல் அடைவார்கள். இரட்சிப்பின் வருஷம் நியமிக்கப்பட்ட பிரகாரம் நிச்சயமாகவே வரும்.
கிறிஸ்துவின் வருகை நமக்கு நடுராத்திரியிலே வரும். அவருடைய வருகையை நாம் எதிர்பாராத சமயத்தில் அவர் வருவார். தம்முடைய ஜனத்திற்கு ஆறுதல் கொடுப்பதற்காகவும், விடுதலையை கொடுப்பதற்காகவும் அவர் வருவார். ஆயினும் அவருடைய வருகை சமீபத்தில் இருப்பதுபோல நமக்கு தெரிவதில்லை. அவர் தமக்கு சித்தமான, பிரியமான சமயத்தில் வருவார். தமது தெய்வீக ஆளுகையை காண்பிப்பதற்காக தமக்கு ஏற்ற வேளையில் அவர் வருவார். தம்முடைய வருகையின் காலத்தை அவர் நமக்கு அறிவிக்கவில்லை. அவர் வரும்வரையிலும் நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியங்களை நாம் தொடர்ந்து நிறைவேற்றவேண்டும்.
இயேசுகிறிஸ்து வரும்போது அவருக்கு எதிர்கொண்டுபோக நாம் புறப்பட்டுப்போக வேண்டும். அவருக்காக காத்திருக்கிறவர்களுக்கு ""அவருக்கு எதிர்கொண்டுபோக புறப்பட்டுப்போங்கள்'' என்னும் அழைப்பு கொடுக்கப்படும். அவருடைய வருகைக்காக ஆயத்தமாக இருக்கிறவர்களால் மாத்திரமே அவருக்கு எதிர்கொண்டுபோக முடியும். இயேசுகிறிஸ்துவின் வருகையைப்பற்றிய செய்தி நம் எல்லோருக்குமே கொடுக்கப்படுகிறது. அவரை சந்திப்பதற்கு நாம் எல்லோருமே விழித்திருந்து ஆயத்தமாக இருக்கவேண்டும்.
இயேசுகிறிஸ்துவின் வருகையின்போது, அவருடைய வருகையை அறிவிக்கும் சத்தம் உண்டாகும். அவருடைய முதலாம் வருகை ரகசியமாக இருக்கும். அப்போது அவருடைய வருகையைப்பற்றிய அறிவிப்பு கொடுக்கப்படாது. ஆனால் அவருடைய இரண்டாம் வருகையிலோ அவருடைய வருகையைக் குறித்த அறிவிப்பு உலகம் முழுவதும் எக்காளம் ஊதி அறிவிக்கப்படும். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை ரகசிய வருகையாகயிராது.
யூதருடைய திருமணச் சடங்குகள் மாலை வேளையில் ஆரம்பிக்கும். நடு இரவு வரையிலும் திருமணச் சடங்குகள் நடைபெறும். இந்தத் திருமணத்தில் மணவாளன் வருவதற்கு தாமதமாயிற்று. உரிய நேரத்தில் மணவாளனால் வரமுடியவில்லை. ஆகையினால் மணவாளன் நடுராத்திரியிலே வருகிறான்.
""மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று'' என்பதும் யூதருடைய திருமணச்சடங்கில் ஒரு வழக்கம். மணவாளன் தன் வீட்டிலிருந்து புறப்படும் வேளையிலிருந்தே அவனுடைய தோழர்கள் வழி நெடுக ""மணவாளன் வருகிறார்'' என்று சந்தோஷமாக ஆர்ப்பரித்துக் கொண்டே செல்வார்கள். மணவாட்டியின் வீடு வரையிலும் சந்தோஷமாக சத்தமிட்டுக் கொண்டே வருவார்கள். அவர்களுடைய சத்தம் தான் இந்த வசனத்தில் கேட்கிறது.
மணவாளனை வரவேற்பதற்காக மணவாட்டி தன்னுடைய தோழிகளில் சிலரை ஏற்கெனவே தெரிந்து வைத்திருப்பாள். அவர்கள் மணவாளனை வரவேற்பதற்காக எதிர்கொண்டு போக வேண்டும். (மத் 25:1,6,10)
எல்லோரும் எழுந்திருந்தார்கள்
அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள் (மத் 25:7).
மணவாளனுடைய வருகையைப்பற்றிய அறிவிப்பு எல்லோருக்கும் கொடுக்கப்படுகிறது. பத்துக்கன்னிகைகளும் அந்த சத்தத்தைக்கேட்டு எழுந்திருக்கிறார்கள். தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்துகிறார்கள். தீவட்டிகளில் எண்ணெயை ஊற்றி, திரிகளை தீண்டிவிட்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோக துரிதமாக செயல்படுகிறார்கள். பத்துக்கன்னிகைகளில் புத்தியுள்ள ஐந்து கன்னிகைகளிடம் மாத்திரமே எண்ணெய் உள்ளது. புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளிடம் எண்ணெயில்லை. மணவாளன் வரும் சத்தத்தைக்கேட்டு, பத்துக்கன்னிகைகளும் எழுந்திருந்தாலும், ஐந்து கன்னிகைகளின் தீவட்டிகள் மாத்திரமே எரியும் நிலையில் ஆயத்தமாக உள்ளது. மற்ற ஐந்து பேரிடமும் தீவட்டிகள் இருந்தாலும், அவை எரிவதற்கு ஆயத்தமாக இல்லை.
இயேசுகிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்திருக்கும் நாம், எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும். தேவனுடைய வருகை வர காத்திருக்கிற நாம் கறையற்றவர்களும், பிழையில்லாதவர்களுமாய், சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும் (2பேது 3:14). ஒரு சிலர் தங்கள் மரணத்திற்கு ஆயத்தமாக இருப்பார்கள். தங்கள் மரணத்திற்கு பின்பு குடும்பத்தினர் குறைவில்லாமல் வாழ்வதற்கு தேவையான பொருளாதார வசதிகளை சேமித்து வைத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள்கூட கர்த்தருடைய வருகைக்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். எஜமான் வரும்போது ""அப்படி செய்கிறவனாக'' காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான் (மத் 24:46). இயேசுகிறிஸ்துவின் வருகையின்போது நாம் தரித்துக்கொண்டவர்களாக இருக்கவேண்டும். நிர்வாணிகளாய் காணப்படக்கூடாது (2கொரி 5:3).
இயேசுகிறிஸ்துவின் வருகையின் நாள் நம்மை சோதித்துப்பார்க்கும் நாளாகவும், நம்மை விசாரிக்கும் நாளாகவும் இருக்கும். அந்த சமயத்தில் நாம் எப்படியிருக்கிறோம் என்பதே மிகவும் முக்கியம். புத்தியில்லாத கன்னிகைகள் தங்களுக்கு உதவிபுரியாத மாயைகளை நம்பினார்கள். தாங்கள் ஆயத்தமாக இல்லாமல் இருந்ததை அவர்கள் உணராமல் இருந்தார்கள். நாம் புத்தியில்லாத கன்னிகைகளைப்போல இந்த உலகத்தில் உணர்வற்றவர்களாக இருக்கக்கூடாது. இயேசுகிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்து அவருக்கு எதிர்கொள்ள நாம் எப்போதும் ஆயத்தமாகவே இருக்கவேண்டும்.
மணவாளனுடைய தோழர்களின் சத்தத்தைக் கேட்டபோது தீவட்டிகளைப் பிடித்திருந்த கன்னிகைகள் தங்கள் தூக்கத்தை விட்டு எழுந்திருந்தார்கள். தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் அவர்களுடைய தீவட்டிகளில் எண்ணெய் இருந்தது. இப்பொழுதோ தீவட்டிகள் தொடர்ந்து எரிய மேலும் எண்ணெய் தேவைப்படுகிறது. ஐந்து கன்னிகைகளிடம் மட்டுமே எண்ணெய் இருக்கிறது. இவர்கள் புத்தியுள்ளவர்கள். மீதி ஐந்து கன்னிகைகளிடம் எண்ணெய் இல்லை. இவர்கள் புத்தியில்லாதவர்கள்.
தீவட்டிகள் அணைந்துபோகிறதே
புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாம-ராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள் (மத் 25:8,9).
புத்தியில்லாத கன்னிகைகளிடம் தீவட்டிகள் இருந்தது. ஆனால் அவர்களுடைய தீவட்டிகள் அணைந்துபோயிற்று. அவர்களிடம் தீவட்டிகளை தொடர்ந்து எரிய வைப்பதற்கு போதுமான எண்ணெயில்லை. மாய்மாலக்காரர்களும் இந்த உலகத்தில் புத்தியில்லாத கன்னிகைகளைப்போலவே ஜீவிக்கிறார்கள். இந்த உலகத்தில் ஆடம்பரமாக ஜீவிக்கும்போது தேவனையும், மறுஜீவனையும், நியாயத்தீர்ப்பையும் மறந்துவிட்டு தங்களுடைய சுயஇஷ்டம்போல ஜீவிக்கிறார்கள். அவர்களுடைய மரணப்படுக்கையில் கர்த்தர் அவர்களுடைய மனக்கண்களை திறக்கும்போது, தாங்கள் புத்தியில்லாதவர்களாகவும், தேவனை சந்திப்பதற்கு ஆயத்தமில்லாதவர்களாகவும் இருப்பதை உணர்ந்து புலம்புகிறார்கள். இப்படிப்பட்ட மாய்மாலக்காரர்கள் மரித்தபின்பு அவர்களுக்கு மிகப்பெரிய துயரம் காத்திருக்கிறது. அவர்களுடைய நியாயத்தீர்ப்பின்போது அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் நரகத்தில் தள்ளப்பட்டு நித்திய வேதனைகளை அனுபவிப்பார்கள்.
புத்தியில்லாத கன்னிகைகளின் தீவட்டிகள் அணைந்துபோயிற்று. மாய்மாலக்காரர்களின் தீவட்டிகள் இதுபோலவே அணைந்துபோகும். ஆவியில் ஆரம்பித்த அவர்களுடைய ஜீவியம் மாம்சத்தில் முடிந்துபோகும். அவர்களுடைய ஊழியம் ஒன்றுமில்லாமல் போகும். சமுதாயத்தில் அவர்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையையும் அழிந்து போகும். அவர்களுடைய நம்பிக்கை வீணாய் போகும். அவர்களுக்கு சமாதானமும் ஆறுதலும் இராது. மாய்மாலமான ஊழியக்காரர்களை இயேசுகிறிஸ்து தமது நியாயத்தீர்ப்பு நாளின்போது ""அக்கிரமச்செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்றுபோங்கள்'' என்று கூறி அவர்களை நரகத்திற்கு அனுப்பிவிடுவார் (மத் 7:22,23).
புத்தியில்லாத கன்னிகைகளுக்கு எண்ணெய் தேவைப்படுகிறது. அவர்களுக்கு தேவைப்படும்போது அந்த தேவையை சந்திப்பதற்கு அவர்களிடத்தில் எண்ணெயில்லை. உலகப்பிரகாரமான ஜனங்கள் இந்த புத்தியில்லாத கன்னிகைகளைப்போலவே இருக்கிறார்கள். உலகத்திற்கு ஊழியம் செய்து அதில் சந்தோஷப்படுகிறார்கள். உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்கிறார்கள். மரணத்தின் பள்ளத்தாக்கு வழியாக அவர்கள் பிரயாணம் பண்ணும்போது தங்களுடைய பரிதாபமான நிலையை புரிந்துகொண்டு, புலம்புகிறார்கள்.
தீவட்டிகள் அணைந்துபோகும்போது புத்தியில்லாதவர்கள் புத்தி உள்ளவர்களை நோக்கி ""உங்கள் எண்ணெயில் எங்களுக்கு கொஞ்சம் கொடுங்கள்'' என்று கேட்கிறார்கள். இந்த கன்னிகைகளைப்போலவே உலகப்பிரகாரமான ஜனங்கள் இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை ஏற்றுக்கொள்ளாமல், அவருடைய கடிந்து கொள்ளுதலுக்கு செவி கொடுக்காமல், தங்கள் சுய இஷ்டம்போல ஜீவிக்கிறார்கள். ஆயினும் தாங்கள் மரிக்கும்போது ஆறுதலான நல்ல வார்த்தையை கேட்கவேண்டுமென்று விரும்புகிறார்கள். மரணப்படுக்கையில் எல்லோருடைய உதவியையும் கேட்கிறார்கள். பாவியாக ஜீவித்தாலும் சமாதானமாக மரிக்கவேண்டுமென்பது இவர்களுடைய எண்ணம். துன்மார்க்கமான காரியங்களை இந்த ஜீவியத்தில் தாராளமாக செய்திருந்தாலும், நியாயத்தீர்ப்பு நாளின்போது தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவேண்டுமென்று பிறருடைய உதவியை எதிர்பார்க்கிறார்கள். கவனக்குறைவாக ஜீவிக்கிறவர்களுக்கும் மரணம் வரும். நீதிமான் மரிப்பதுபோலவே துன்மார்க்கனும் மரிப்பான்.
துன்மார்க்கன் மரிக்கும்போது தனக்காக நல்ல வார்த்தைகளை கர்த்தரிடம் விண்ணப்பம் பண்ணுமாறு ஊழியக்காரர்களிடம் கேட்டுக்கொள்வான். நியாயத்தீர்ப்பு நாளின்போது இந்த விண்ணப்பம் பலனளிக்காது. நியாயாசனத்தில் வீற்றிருக்கும் நம்முடைய கர்த்தாதி கர்த்தருக்கு நம்முடைய சுபாவம் அனைத்தும் பூரணமாக தெரியும். அவர் ஒவ்வொரு மனுஷனையும் ஆராய்ந்து அறிந்து வைத்திருக்கிறார்.
இது கிருபையின் காலம். இந்த காலத்தில் நாம் தேவனுடைய கிருபையை பெற்றுக்கொண்டு அவருக்கு பிரியமாக ஜீவிக்கவேண்டும். அவருடைய கிருபை நமக்கு தேவையில்லையென்று அசட்டையாக ஜீவிக்கக்கூடாது. இந்த பூமியில் நாம் ஜீவிக்கும்போது கர்த்தருடைய வார்த்தை நம்மை பரிசுத்தப்படுத்துவதற்கு ஒப்புக்கொடுத்து ஜீவிக்கவேண்டும். தேவனுடைய பிரமாணம் நம்முடைய ஜீவியத்தின் எல்லாப் பகுதியையும் ஆளுகை செய்யவேண்டும். காலம் தாழ்த்துவது தாமதமாகிவிடும். காலம் கடந்தபின்பு நம்மால் கிரியை செய்யமுடியாது. எல்லாம் முடிந்துபோன பின்பு மறுபடியும் துவக்குவதற்கு வாய்ப்பில்லை. ஆகையினால் வாய்ப்பு இருக்கும்போதே, நமக்கு கொடுக்கப்படும் வாய்ப்புக்களை பயன்படுத்தி கர்த்தருக்கு பிரியமானவர்களாக ஜீவிக்கவேண்டும்.
புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களிடம் எண்ணெய் கேட்கிறார்கள். ஆனால் புத்தியுள்ளவர்களோ தங்கள் எண்ணெயை அவர்களுக்கு கொடுக்க மறுத்துவிடுகிறார்கள். மூலபாஷையில் ""அப்படியல்ல'' என்று மாத்திரமே புத்தியுள்ளவர்கள் கூறுகிறார்கள். தாங்கள் மறுப்பதற்கு காரணம் எதையும் கூறவில்லை. இந்த வசனத்தில் புத்தியுள்ளவர்கள் புத்தியில்லாதவர்களிடம் ""எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்தில்போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள்'' என்று காரணம் கூறுவதாக எழுதப்பட்டிருக்கிறது. மூலபாஷையில் இந்த வாக்கியம் இல்லை. மொழிபெயர்ப்பாளர்கள் இந்த வாக்கியத்தை தங்கள் மொழிபெயர்ப்புக்களில் இணைத்திருக்கிறார்கள்.
புத்தியுள்ள ஸ்திரீகள் எந்தவிதமான காரணமும் கூறாமல் ""அப்படியல்ல'' என்று கூறி மறுத்துவிடுகிறார்கள். இவர்களுடைய மறுப்பு தெளிவாகவும் தீர்மானமாகவும் இருக்கிறது. பிறருக்கு தேவைப்படும்போது நாம் உதவி செய்யவேண்டும். நம்மை நேசிப்பதுபோல நாம் பிறரையும் நேசிக்கவேண்டும். ஆயினும் நம்மால் உதவி செய்ய கூடாத ஒரு காலமும் உண்டு. உதவி செய்யமுடியாத காலத்தில் நாம் உதவி செய்தால், அது நமக்கும் அவர்களுக்கும் போதாமலிருக்கும். மற்றவர்களுக்கு உதவிசெய்யும்போது நாம் நம்முடைய நிலமையையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும். பிறருக்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள் முதலாவதாக தங்கள் சொந்த குடும்பத்தை பராமரிக்கவேண்டும். நன்மை செய்வது தன் குடும்பத்தில் ஆரம்பமாகவேண்டும்.
புத்தியுள்ளவர்கள் புத்தியில்லாதவர்களுக்கு உதவி செய்ய மறுத்துவிடுகிறார்கள். ""நீங்கள் விற்கிறவர்களிடத்தில் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள்'' என்று கூறிவிடுகிறார்கள். இரட்சிக்கப்படுகிறவர்கள் தேவனுடைய கிருபையினால் தங்களுடைய ஆத்துமாக்களை தாங்களே காத்துக்கொள்ள வேண்டும். எப்போதுமே மற்றவர்களுடைய விசுவாசத்தையும், ஜெபத்தையும், ஆலோசனைகளையும், உதவிகளையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. பரிசுத்தவான்களின் ஐக்கியத்தினாலும், ஜெபத்தினாலும் நமக்கு பிரயோஜனமுண்டு. ஆயினும் நம்முடைய பரிசுத்தத்திற்கு நாமே உத்திரவாதம் கொடுக்கவேண்டும். மற்றவர்களுடைய பரிசுத்தத்தினால் நாம் பரிசுத்தமாகமுடியாது. நமது இரட்சிப்புக்கு தேவையான தேவகிருபையை நாமே தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும். மற்றவர்களுடைய இரட்சிப்பினால் நாம் இரட்சிப்படைய முடியாது. ஒவ்வொருவரும் தன்னுடைய கிரியைக்குத்தக்காக கர்த்தருக்கு கணக்கு ஒப்புவிக்கவேண்டும். நியாயத்தீர்ப்பு நாளின்போது நாம் மற்றவர்களுடைய கணக்குகளை சொல்லிக்கொண்டிருக்க முடியாது.
ஒருவருக்கு தேவகிருபை அதிகமாக இருந்தால், நியாயத்தீர்ப்பு நாளின்போது அவர் அந்த கிருபையை மற்றவருக்கு இலவசமாகவோ, இரவலாகவோ கொடுத்து உதவிபுரிய முடியாது. நமக்கு வாய்ப்பு கொடுக்கும்போது தேவகிருபையை இயேசுகிறிஸ்துவிடமிருந்து மாத்திரமே நாம் பெற்றுக்கொள்ளவேண்டும். நியாயத்தீர்ப்பு நாளின்போது தேவகிருபையை யாரும் யாரிடமிருந்தும் இரவலாக பெற்றுக்கொள்ள முடியாது. யாருக்கும் இரவலாக கொடுக்கவும் முடியாது.
புத்தியுள்ள கன்னிகைகள் புத்தியில்லாத கன்னிகைகளை குறை கூறவில்லை. அவர்கள் ஆயத்தமாக இல்லாததற்காக அவர்களை கடிந்து கூறவுமில்லை. அவர்களுக்கு நல்ல ஆலோசனையை கூறுகிறார்கள். ""நீங்கள் விற்கிறவர்களிடத்தில் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள்'' என்று ஆலோசனை கூறுகிறார்கள்.
ஊழியக்காரர்களாகிய நாம் ஆத்துமாக்களுக்கு தகுந்த சமயத்தில் ஞானமுள்ள ஆலோசனைகளைக் கூறவேண்டும். ஜனங்கள் உலகப்பிரகாரமாக ஜீவிக்கும்போது அவர்களை வேதவசனத்தின் மூலமாக எச்சரித்து அவர்களுக்கு ஆலோசனை கூறவேண்டும். அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கும்போது அவர்களை சந்தித்து பாவ அறிக்கை செய்யச்சொல்லலாம் என்று கவனமில்லாமல் இருப்பது ஆபத்தில் முடிந்துவிடும். இரட்சிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கும்போது, கர்த்தருடைய கிருபையினால் இரட்சிப்பை பெற்றுக்கொண்டு இயேசுகிறிஸ்துவை சந்திப்பதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும்.
புத்தியுள்ள கன்னிகைகள் மற்ற கன்னிகைகளுக்கு அவர்களுடைய கஷ்டமான சூழ்நிலையில் நல்ல ஆலோசனைகளை கூறுகிறார்கள். புத்தியுள்ள கன்னிகைகளால் அவர்களுக்கு உதவிபுரிய முடியவில்லை. ஆலோசனை மாத்திரமே கூறமுடிகிறது. ஏற்ற காலத்தில் கூறப்படும் ஆலோசனை எப்போதுமே பிரயோஜனமுள்ளது. தேவையற்ற, பிரயோஜனமற்ற எதிர்பார்ப்புக்களை கொடுக்காமல் ""நீங்கள் விற்கிறவர்களிடத்தில் போய் உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள்'' என்று நல்ல ஆலோசனையை கூறுகிறார்கள்.
தீவட்டிக்கு தேவைப்படும் எண்ணெய். ஒருசிலர் எண்ணெயைப் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் என்று கூறுகிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை வாங்கவோ, விற்கவோ தங்களுக்குள் விருப்பப்பட்டால் பகிர்ந்து கொள்ளவோ முடியாது. ஆகையினால் எண்ணெய் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைக் குறிக்காது என்று சிலர் கூறுகிறார்கள். (ஆதி 28:18; 2இராஜா 4:1-6; லூக்கா 7:46; லூக்கா 16:6)
மணவாளன் வந்துவிட்டார்
அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் க-யாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது (மத் 25:10).
புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளும் எண்ணெய் விற்கிறவர்களிடத்தில் போய் தங்கள் தீவட்டிகளுக்கு எண்ணெய் வாங்கப்போகிறார்கள். அப்போது மணவாளன் வந்துவிடுகிறார். கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் ஊழியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதை ஏற்ற வேளையில் செய்து முடித்துவிடவேண்டும். கடைசியில் செய்து கொள்ளலாம் என்று காலதாமதம் பண்ணக்கூடாது. காலதாமதம் எப்போதுமே ஆபத்தானது. காலதாமதம் பண்ணும் காரியத்தை ஒரு வேளை நம்மால் செய்து முடிக்க முடியாமலேயே போய்விடலாம்.
தேவனுடைய கிருபையை குறித்த காலத்தில், ஏற்ற வேளையில் பெற்றுக்கொள்ள வேண்டும். அவசரம் அவசரமாக தேவகிருபையை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைப்பது தவறு. மரணப்படுக்கையில் இருக்கிறவர் அவசரம் அவசரமாக தன்னை மன்னிக்குமாறு ஜெபம்பண்ணும்போது, அவருடைய உள்ளம் குழப்பத்திலேயே இருக்கும். தன்னுடைய முடிவு எப்படியிருக்கும் என்று அவருக்கே தெரியாது. தெளிவற்றவராக இருப்பார். இந்த குழப்பம் காலதாமதத்தினால் வந்த விளைவு. புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளும் தங்கள் தீவட்டிகளை எரிய வைத்து தங்கள் கரங்களில் பிடிக்க வேண்டிய வேளையில், எண்ணெய் வாங்குவதற்காக போகிறார்கள். காலதாமதம் பண்ணுகிறார்கள். அதுபோலவே ஒரு சிலர் கிருபையை பயன்படுத்த வேண்டிய காலத்தில், கிருபையை பெற்றுக்கொள்வதற்காக முயற்சி பண்ணுகிறார்கள்.
மணவாளன் வந்துவிட்டார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மகா நாளின்போது தம்முடைய பிள்ளைகளுக்காக மணவாளனாக வருவார். அவர் பரிசுத்த அலங்காரத்துடனே வருவார். தமது மகிமை பொருந்தினவராக வருவார்.
ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூட கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள். தேவனுடைய சமுகத்தில் ஆயத்தமாக இருக்கிறவர்கள் மாத்திரமே நித்திய மகிமையை பெற்றுக்கொள்ள முடியும். அவரோடு நெருங்கிய ஐக்கியத்தில் இருக்கவேண்டும். இப்படிப்பட்ட பரிசுத்தவான்கள் மாத்திரமே பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பார்கள்.
மணவாளனும் ஆயத்தமாகயிருந்தவர்களும் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்த பின்பு கதவு அடைக்கப்பட்டது. இரண்டு காரணங்களுக்காக கதவு அடைக்கப்படுகிறது. கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தவர்கள் அங்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும். கவனக்குறைவினால் கலியாண வீட்டை விட்டு வெளியேறிவிடக் கூடாது. அதற்காக கதவு அடைக்கப்பட்டது. தேவன் ஆதாமை ஏதேன் தோட்டத்தில் வைத்தார். ஏதேன் தோட்டத்தின் கதவு அடைக்கப்படாமல் திறந்து வைக்கப்பட்டிருந்தது. கதவு திறந்திருந்ததினால் ஆதாம் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறிப் போய்விட்டார். பரிசுத்தவான்கள் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசித்தவுடன் அவர்கள் அங்கு பாதுகாப்பாக அடைக்கப்பட்டிருப்பார்கள்.
கலியாண வீட்டிற்கு ஆயத்தமில்லாமல் வெளியே இருக்கிறவர்கள் உள்ளே பிரவேசித்து விடாதவாறு கதவு அடைக்கப்படுகிறது. இப்போதோ பரலோக ராஜ்யத்திற்குப் போகும் வாசல் குறுகலாகவும் நேராகவும் இருக்கிறது. ஆயினும் இந்த வாசல் இப்போது திறந்திருக்கிறது. காலம் ஒருநாள் வரப்போகிறது. அப்போது பரலோகத்தின் வாசல் அடைக்கப்படும். பரலோகத்திற்கும் நரகத்திற்கும் இடையே பெரும் பிழப்பு உண்டாகும்.
யூதருடைய திருமண வீடுகளில் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும். அழைக்கப்படாதவர்கள் வீட்டிற்குள் வரமுடியாது. ஒருவேளை திருடர்களுடைய பயத்தினால் இப்படி கதவுகள் அடைக்கப்பட்டிருக்கலாம்.
மணவாளன், மணவாட்டி, கன்னிகைகள் - இந்த உவமையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சத்தியங்கள்
1. இயேசு கிறிஸ்துவைத் தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறவர்கள் அனைவருமே தேவனுடைய பிள்ளைகளாகிறார்கள். இரட்சிக்கப் பட்டவர்களுக்குள் வேறுபாடில்லை. (மத் 13:38-49; மத் 18:3)
2. இந்த உவமையில் எண்ணெய் என்பது பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைக் குறிப்பிடாது. (மத் 25:8)
3. இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். (யோவான் 3:5; ரோமர் 8:9-16) இரட்சிப்பு வேறு, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் வேறு. இவ்விரண்டுமே வெவ்வேறு அனுபவங்கள். (லூக்கா 11:13; யோவான் 7:37-39; யோவான் 14:16-17)
4. உபத்திரவக் காலம் ஆரம்பமாவதற்கு முன்பாகவே சபை எடுத்துக் கொள்ளப் படும்.
5. இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்வதற்கு தேவையான பெலனைப் பெற்றுக் கொள்வதற்காக. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் விசுவாசிகளுக்கு அருளப்படுகிறது. (லூக்கா 24:49; யோவான் 7:37-39; யோவான் 14:12; அப் 1:4-8)
6. ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தில் எல்லா விசுவாசிகளுமே பங்குபெறுவார்கள். சபை எடுத்துக் கொள்ளப்படும்போது எல்லா விசுவாசிகளும் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
7. புதிய எருசலேமில் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் இருப்பார்கள். (வெளி 21:2,9-10) (எபி 11:10-16; எபி 13:14; யோவான் 14:1-3)
8. உபத்திரவக்காலத்தில்கூட கிருபையின் கதவுகள் யூதருக்கும், புறஜாதியாருக்கும் அடைக்கப்படுவதில்லை. உபத்திரவக் காலத்திலும் திரளான ஜனங்கள் இரட்சிக்கப்படுவார்கள். (அப் 2:16-21; வெளி 7:1-17; வெளி 12:17)
ஆண்டவரே ஆண்டவரே
பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து. ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள் (மத் 25:11).
கலியாண வீட்டின் கதவு அடைக்கப்பட்ட பின்பு புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளும் வருகிறார்கள். காலதாமதமாக வருகிறார்கள். இதுபோலவே ஏராளமான ஜனங்கள் ஏற்ற காலத்தில் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்காமல், பரலோகத்தின் கதவு அடைக்கப்பட்ட பின்பு, அங்கு பிரவேசிப்பதற்காக கூடி வருவார்கள். ஏசா தன் சுதந்தரவீதத்தின் ஆசீர்வாதத்தை அசட்டைபண்ணி அதை இழந்துபோனான். அதன்பின்பு அவன் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள விரும்பியும் அவனால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஏசாவைப்போல பலர் பரலோக ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை அசட்டை பண்ணுகிறார்கள். மாய்மாலமாக ஜீவிக்கிறார்கள். பரலோக ராஜ்யத்திற்குள் எப்படியாவது போய்விடலாமென்று இறுமாப்பாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு பரலோக ராஜ்யத்தின் சந்தோஷம் தூரமாகவே இருக்கும். இவர்கள் பரலோக ராஜ்யத்தின் வாசலுக்குப் போவார்கள். உள்ளே பிரவேசிக்கவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணுவார்கள். ஆனால் பரலோகத்தின் கதவு இவர்களுக்கு அடைக்கப்பட்டிருக்கும். இவர்கள் பரலோகத்திற்கு வெளியேதான் நிற்பார்கள்.
உங்களை அறியேன்
அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத் 25:12).
கலியாண வீட்டின் கதவை தங்களுக்கும் திறக்கவேண்டுமென்று புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளும் கூறுகிறார்கள். ஆனால் மணவாளனோ ""உங்களை அறியேன்'' என்று கூறிவிடுகிறார். அடைக்கப்பட்ட கலியாண வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. தேடுகிறவர்கள் கண்டடைவார்கள். நாம் கர்த்தரை கண்டடையத்தக்கதாக, அதற்குரிய ஏற்ற காலத்தில் அவரை தேடவேண்டும். காலம் தாமதித்து கர்த்தரை தேடினால் அவரை கண்டுபிடிக்க முடியாது. தட்டுங்கள் அப்போது உங்களுக்கு திறக்கப்படும் என்று கர்த்தர் நமக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார். புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளும் பூட்டப்பட்டிருக்கும் கதவை தட்டுகிறார்கள். ஆனால் காலதாமதம் ஆனதினால் தட்டியும் இவர்களுக்கு கதவு திறக்கப்படவில்லை. ஆண்டவரே ஆண்டவரே எங்களுக்கு திறக்கவேண்டும் என்று புத்தியில்லாத ஐந்து கன்னிகைகளும் விண்ணப்பம் பண்ணியபோது ""உங்களை அறியேன்'' என்று மணவாளன் கதவை திறக்க மறுத்துவிடுகிறார்.
விழித்திருங்கள்
மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள் (மத் 25:13).
இந்த உவமையின் மையக்கருத்து ""நாம் விழித்திருக்கவேண்டும்'' என்பதாகும். இயேசுகிறிஸ்து ஏற்கனவே இந்த சத்தியத்தை வலியுறுத்தியிருக்கிறார் (மத் 24:42). அதே சத்தியத்தை இங்கு மறுபடியும் கூறுகிறார். விழித்திருப்பது நமது பிரதான கடமை. நாம் விழித்திருந்து ஜெபிக்கவேண்டும். கர்த்தரின் வருகைக்காக நாம் விழித்திருந்து ஆயத்தமாக இருக்கவேண்டும். மிகுந்த எச்சரிப்போடு ஜீவிக்க வேண்டும். கர்த்தருடைய வருகை எப்போது இருக்குமென்று நமக்குத் தெரியாது. மனுஷகுமாரன் வரும் நாளையாவது, நாழிகையையாவது நாம் அறியாதிருக்கிறோம். ஆகையினால் நாம் எப்போதுமே விழித்திருக்கவேண்டும்.
இந்தப்பதிவை வேர்ட் டாகுமெண்ட் ஆக நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் தயவு செய்து 25 வினாடிகள் காத்திருக்கவும் அதன்பிறகு டவுன்லோட் லிங்க் உங்களுக்கு கொடுக்கப்படும்.


