கிருபையுள்ள தகப்பனும் கெட்ட குமாரனும் லூக் 15 : 11-32 பாகம் 1

 கிருபையுள்ள தகப்பனும் கெட்ட குமாரனும் லூக் 15 : 11-32 பாகம் 1


இரண்டு குமாரர்


பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் (லூக் 15:11).


இயேசுகிறிஸ்து கெட்ட குமாரனைப்பற்றியும், அவனுடைய அன்பான தகப்பனைப்பற்றியும் இந்த உவமையினால் விளக்கிக் கூறுகிறார். தேவனுடைய அன்பை விளக்குவதே இந்த உவமையின் நோக்கம். சுவிசேஷத்தின் மூலமாக தேவனுடைய கிருபையின் ஐசுவரியம் அனைத்து ஜனங்களுக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த உவமையின் சூழ்நிலைகளை தியானித்துப் பார்க்கும்போது தேவனுடைய கிருபையின் பெரிதான அளவு நமக்குத் தெரியவரும். தேவனுடைய கிருபை எப்போதுமே குறைந்து போவதில்லை. இந்த உலகத்தார் தங்களுக்கு இஷ்டமானபடி தேவனை விட்டு விலகி ஜீவித்தாலும், கிருபையுள்ள தேவன் மனந்திரும்பும் பாவியின்மீது அன்புள்ளவராக இருக்கிறார். அவருடைய கிருபைக்கு அளவேயில்லை. 



இந்த உவமையில் கூறப்பட்டிருக்கும் தகப்பன், அகில உலகத்திற்கும் பிதாவாக இருக்கும் தேவனைக் குறிக்கிறார். நமது தேவனே நமது நித்திய பிதா. அவர் நமக்கு போதகம்பண்ணுகிறார். நம்மைப் பராமரிக்கிறார். ஆசீர்வாதங்களினால் நிரப்புகிறார். பரிசேயர்களும் வேதபாரர்களும் ஆயக்காரரையும் பாவிகளையும் வெறுத்து ஒதுக்குகிறார்கள். ஆனால் தேவனுடைய பார்வையில் இவர்கள் எல்லோருமே அவருடைய பிள்ளைகள்தான். இதன் மூலமாக ஆயக்காரரும் பாவிகளும் வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் சகோதரர்களாக இருக்கிறார்கள். தேவனுடைய கிருபை தங்களுடைய சகோதரருக்கு வெளிப்படுத்தப்படும்போது மற்ற சகோதரர்கள் சந்தோஷப்பட வேண்டும். ஆனால் வேதபாரகரும் பரிசேயருமோ அவ்வாறு சந்தோஷப்படவில்லை.


இந்த உவமையில் கூறப்பட்டிருக்கும் தகப்பனுக்கு இரண்டு குமாரர் இருக்கிறார்கள். இவர்கள் இருவருடைய சுபாவங்களும் வித்தியாசமாகயிருக்கிறது. வேறுபட்டிருக்கிறது. இதுபோலவே இந்த உலகத்திலுள்ள எல்லோருடைய சுபாவமும் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஒருவருக்கொருவர் வித்தியாசமாக இருக்கிறார்கள். இந்த உவமையில் வரும் இரண்டு குமாரர்களில் ஒருவன் அமைதியானவன். ஆனால் இவன் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கமாட்டான். மற்றவர்கள் சந்தோஷமாக இருந்தாலும் பொறுத்துக் கொள்ளமாட்டான். எப்போதுமே வேலையில் கவனமாக இருப்பான். தன் தகப்பனிடம் நன்றாக பயிற்சி பெற்றிருக்கிறான். ஆனால் தன் கற்றுக்கொண்டதை நடைமுறை வாழ்க்கையில் எளிதாக பயன்படுத்தமாட்டான். இவனுடைய சுபாவத்தை மாற்றுவது கடினம். 



இந்த தகப்பனின் மற்றொரு குமாரன் சுறுசுறுப்பானவன். வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறவன். அமைதியில்லாமல் எப்போதும் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருப்பவன். தன்னுடைய சந்தோஷத்திற்காக இவன் எதை வேண்டுமானாலும் செய்ய ஆயத்தமாக இருப்பான். இப்படிப்பட்டவன் துன்மார்க்கருடைய கைகளில் சிக்கினால் பாழாய்ப்போவான். இந்த குமாரன் ஆயக்காரருக்கும், பாவிகளுக்கும், புறஜாதியாருக்கும் ஒப்புமையாக இருக்கிறான். நல்ல சுபாவமுள்ள மூத்த குமாரனோ பொதுவாக யூதருக்கும், விசேஷமாக பரிசேயருக்கும் ஒப்புமையாக இருக்கிறான். மூத்த குமாரன் நல்லவன். இளைய குமாரன் கெட்டவன். 


இயேசு கிறிஸ்து கூறிய உவமைகளில் நூறு ஆடுகள், (லூக்கா 15:4), பத்து வெள்ளிக்காசுகள்(லூக்கா 15:8), என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்பொழுது இரண்டு குமாரர்களைப் பற்றி இயேசு கிறிஸ்து கூறுகிறார். காணாமல்போன ஆட்டையும், காணாமல்போன வெள்ளிக்காசையும் அவைக் கிடைக்கும் வரையிலும் தேடினார்கள். வெள்ளிக்காசுக்கும், ஆட்டிற்கும் சுயாதீனமாகத் தீர்மானம் பண்ணும் ஆறாவது அறிவு இல்லை. இந்த உவமையில் கூறப்பட்டிருக்கும் குமாரன் பகுத்தறிவு உள்ளவன். தன்னுடைய முடிவிற்கு இவனே காரணம். தன்னுடைய சுயத் தீர்மானத்தினாலேயே இவன் காணாமல் போனான். இப்பொழுது அதே தீர்மானத்தினாலேயே திரும்பி வந்திருக்கிறான். இவன் கண்டுபிடிக்கப்பட்டபோதும், வீட்டில் சந்தோஷம் உண்டாயிற்று.  


இளையவன்


அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படிஅவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான் (லூக் 15:12).


இளையகுமாரன் தீயசிந்தனையுள்ளவன். தன் வாழ்க்கையை எப்படியாவது நல்லமுறையில் அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறான். ஊதாரித்தனமாக செலவு செய்கிறான். இவன் ஒருநாள் தன் தகப்பனை நோக்கி ""தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும்'' என்று கூறுகிறான். இவனுடைய பேச்சே அதிகார தோரணையில் தொனிப்பது போன்றுள்ளது. ""தகப்பனே, எனக்குத் தரவேண்டும்'' என்று உரிமையோடு கேட்கிறான்.  


மிகவும் பணிவாக ""ஐயா, எனக்கு ஏதாவது கொடுத்தால் அது எனக்கு மிகுந்த பிரயோஜனமாக இருக்கும். உமக்கு மனமிருந்தால் அதை தயவு செய்து தயவாய் எனக்குத் தாரும்'' என்று பணிவோடு கேட்கவில்லை. அதற்குப் பதிலாக ""ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும்'' என்று முகத்தில் அடித்தாற்போல் கூறுகிறான். தன்னுடைய பங்கு தனக்குரியது என்று உரிமை பாராட்டுகிறான். 


இளைய குமாரனின் சுபாவம் மிகவும் மோசமானது. நாம் தேவனுடைய வரங்களை பெற்றுக்கொள்ளும்போது, அது நமது உரிமை என்றும், இதைக் கொடுப்பதற்கு தேவன் நமக்கு கடனாளியாக இருக்கிறார் என்றும் நினைக்கக்கூடாது. தேவனுடைய சமுகத்தில் எப்போதும் மிகவும் பணிவோடு போகவேண்டும். இளையகுமாரன் தன்னுடைய தகப்பனிடத்தில் தன் பங்கைக் கேட்கும்போது, எனக்குரியதை இப்போது எனக்கு தந்துவிட்டால், அவரிடத்தில் மறுபடியும் வரப்போவதில்லை என்னும் சிந்தனையோடு பேசுகிறான். ஆஸ்தியில் இவனுக்கு வரும் பங்குதான் இவனுக்கு பெரியதாக இருக்கிறது. இவனுடைய தகப்பனோ, தகப்பன் இவன் மீது வைத்திருக்கும் அன்போ, தகப்பனிடத்திலுள்ள அளவில்லாத ஐசுவரியமோ இவனுக்கு பெரியதாக தெரியவில்லை. 



விசுவாசிகளில் சிலர் இந்த இளைய குமாரனைப்போலவே இருக்கிறார்கள். தங்களுடைய ஜீவியத்தில் தேவன் இப்போது கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டால் அதுவே தங்களுக்குப் போதுமென்று நினைக்கிறார்கள். நித்திய ஜீவனைப்பற்றி நினைத்துப் பார்க்காமல் இந்த உலக ஜீவனைப்பற்றி மாத்திரம் நினைக்கிறார்கள். உலகத்தில் சந்தோஷமாகவும் ஆடம்பரமாகவும் ஜீவிப்பதற்கு தேவையானவற்றை தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்டால் அதுவே போதும் என்று ஆசைப்படுகிறார்கள். இவர்கள் தங்களுடைய நித்திய ஜீவனையும் நினைத்துப் பார்க்கவேண்டும். பிதாவாகிய தேவன் நமக்காக நம்முடைய நித்திய ஜீவனுக்கு என்று நியமித்து வைத்திருக்கும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள நாம் வாஞ்சையோடு இருக்கவேண்டும். 


உலகக்காரியங்களைப் பற்றி மாத்திரமே சிந்திக்கும் விசுவாசிகளுக்கு இந்த உலகத்தின் காரியங்களே பெரிதாக தெரியும். தங்கள் கண்கள் காண்பதையெல்லாம் இச்சிப்பார்கள். தாங்கள் பார்ப்பதெல்லாம் தங்களுக்கு வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். தற்போதைக்கு தங்களுடைய ஆசை திருப்தியானால் போதும் என்று நினைத்து, வரப்போகிற நித்திய ஆசீர்வாதத்தைக்குறித்து சிறிதும் சிந்தனையில்லாதவர்களாக இருப்பார்கள்


இளையகுமாரன் ஆஸ்தியில் தனக்கு வரும் பங்கை தன்னுடைய கைகளில் வைத்திருக்க வேண்டுமென்று விரும்புகிறான். தன்னுடைய தகப்பனுடைய ஆளுகை இவனுக்குப் பிடிக்கவில்லை. அவருடைய ஆளுகைக்கு கீழ்ப்படிந்து நடக்க இவனுக்கு விருப்பமில்லை. தன் மனம்போல சுதந்தரமாக அலைந்து திரியவேண்டுமென்று விரும்புகிறான். அதுவே தன்னுடைய சுதந்திரம் என்பது இவனுடைய எண்ணம். ஆனால் இவனுடைய எண்ணம் தவறானது. 


இந்த இளையகுமாரனைப்போலவே இன்று ஏராளமான வாலிபர்கள் சுதந்தரம் என்னும் பேரில் தங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படியாமல் தங்கள் இஷ்டம்போல ஜீவிக்கிறார்கள். ஏதாவது ஒரு வேலைக்குப் போனாலும் தங்கள் எஜமானுடைய ஆளுகைக்கும் இவர்கள் கீழ்ப்படிவதில்லை. இப்படிப்பட்டவர்களை தேவன் ஆசீர்வதிக்கமாட்டார். தேவனுடைய ஆசீர்வாதம் இவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும்.


சுதந்தரம் என்னும் பேரில் ஊதாரித்தனமாக செலவு செய்து, தங்கள் இஷ்டம்போல ஜீவித்தவர்கள் விரைவில் ஒன்றுமில்லாமல் போவார்கள். அப்போதும் இவர்களுக்கு ஆசையிருக்கும். ஆனால் அந்த ஆசையை நிறைவேற்ற இவர்களுக்கு பொருளாதார ஆசீர்வாதம் சிறிதும் இராது. அப்போதுதான் இவர்களுடைய புத்தி தெளியும். தங்களுடைய சொந்த பேராசையினால் இவர்கள் வேறு யாருக்காவது அடிமையாகிவிடுவார்கள்.  


தங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படியாமல் தாறுமாறாக ஜீவிக்கிறவர்கள் முடிவில் வேறு யாருக்காவது அடிமையாக ஜீவிப்பார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்டித்து உணர்த்தி திருத்தி வளர்க்கவில்லையென்றால், அவர்கள் பிற்காலத்தில் தாங்கள் செய்த தவறுக்காக வேறு யாரிடமாவது அடி வாங்கிக்கொண்டிருப்பார்கள். 


பாவிகள் தங்கள் சுயஇஷ்டம்போல ஜீவிக்க விரும்புகிறார்கள். ஆகையினால் தேவனிடமிருந்து இவர்கள் விலகிப்போய்விடுகிறார்கள். தேவனுடைய ஆளுகைக்கும் அவருடைய பிரமாணங்களுக்கும் இவர்கள் கீழ்ப்படிய விரும்பவில்லை. தேவனுடைய தெய்வீக ஆளுகைக்கு இவர்கள் உட்பட்டு ஜீவிக்க மறுக்கிறார்கள். தங்களுடைய ஜீவியத்திற்கு தாங்களே எஜமானாகவும், தேவனாகவும் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். இவர்களுக்கு தங்களுடைய சுய ஆசைகள் பூர்த்தியாவதே பிரதான காரியம். நன்மையானது எது என்றும், தீமையானது எது என்றும் இவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. நல்லவழியோ அல்லது தீயவழியோ, எந்த வழியாக இருந்தாலும், தங்களுக்கு பிடித்த வழியில் போகவேண்டுமென்று விரும்புகிறார்கள்


இளையகுமாரன் இது வரையிலும் தன் தகப்பனுடைய கண் பார்வையில் வளர்க்கப்பட்டிருக்கிறான். அவருடைய மேற்பார்வை இவனுக்குப் பிடிக்கவில்லை. தன் தகப்பனை தகப்பனென்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறான். அவருடைய அதிகாரத்தை அங்கீகரிக்க மறுக்கிறான். துன்மார்க்கரும் இவனைப்போலவே தேவனைக் குறித்து வெட்கப்படுகிறார்கள். இயேசுகிறிஸ்துவை கர்த்தர் என்றும், தேவன் என்றும் அழைக்க வெட்கப்படுகிறார்கள். அவருடைய சர்வ அதிகாரத்தை அங்கீகரிக்க மறுக்கிறார்கள். பாவிகளுடைய துன்மார்க்க ஜீவியத்திற்கு தேவனுடைய பார்வையிலிருந்து விலகிப்போவதே பிரதானமான காரணமாக இருக்கிறது.


இளையகுமாரன் தன் தகப்பனுடைய நிர்வாகத்தை நம்ப மறுக்கிறான். தன் தகப்பனுக்கு நிர்வாகம் பண்ணத் தெரியவில்லையென்று முடிவுபண்ணுகிறான். ஆஸ்தியில் தன்னுடைய பங்கை தன் தகப்பன் சரியாக நிர்வாகம்பண்ணவில்லையென்றும், தன்னால் தன் தகப்பனைவிட அதிக நேர்த்தியாக நிர்வாகம் பண்ணமுடியுமென்றும் சுயபெருமையோடிருக்கிறான். ஆகையினால் ஆஸ்தியில் தனக்கு வரும் பங்கை தன்னிடத்தில் கொடுத்துவிடுமாறு கூறுகிறான். 


பிள்ளைகள் பெற்றோருடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்போது, பிள்ளைகள் பெற்றோரின் ஆலோசனைகளுக்கும் ஆளுகைக்கும் உட்படவேண்டியது அவசியம். பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு செலவையும் பெற்றோர் ஆராய்ந்து பார்த்து அங்கீகரிப்பார்கள் அல்லது நிராகரிப்பார்கள். இளையகுமாரன் தன் தகப்பனோடு இருக்கும்போது, ஆஸ்தியில் தன்னுடைய பங்காக இருந்தாலும், இளையகுமாரனால் தன் இஷ்டம்போல் அதை செலவு பண்ணமுடியாது. தன்னுடைய தகப்பனாரின் அங்கீகாரத்தின்படியும், ஆலோசனையின்படியும்தான் செலவு பண்ண முடியும். இது இவனுக்குப் பிடிக்கவில்லை. ஆஸ்தியில் தன்னுடைய பங்கு தன்னுடைய கையிலிருந்தால், அதை தன் இஷ்டம்போல செலவு பண்ணலாம் என்று நினைக்கிறான். 


இளையகுமாரன் தன்னைக்குறித்து பெருமைப்படுகிறான். தனக்கு எல்லாம் தெரியுமென்றும், தன்னால் எல்லாம் முடியுமென்றும் நினைக்கிறான். ஆஸ்தியில் தன்னுடைய பங்கை தன்னிடத்தில் கொடுத்துவிட்டால், தன் தகப்பானாரைவிட தன்னால் அதை நல்லமுறையில் நிர்வாகம்பண்ண முடியுமென்று பெருமையோடு நினைக்கிறான். இக்காலத்தில் ஏராளமான வாலிபர்கள் இந்த இளையகுமாரனைப்போல தங்களைக் குறித்து சுயபெருமைப்பட்டு சீரழிந்து போகிறார்கள். மற்ற ஆசைகளினாலும் இச்சைகளினாலும் அழிந்து போவதைவிட, பெருமை என்னும் பாவம் ஏராளமானோரை அழித்துப் போடுகிறது. 


இளையகுமாரன் தன் தகப்பனிடம் ஆஸ்தியில் தனக்கு வரும் பங்கை தனக்குத் தரவேண்டுமென்று உரிமையோடு கேட்டாலும், அவனுடைய தகப்பன் அவன்மீது அன்பாகவே இருக்கிறார். தன் இரண்டு குமாரர்களுக்கும் தன்னுடைய ஆஸ்தியில் பங்கிட்டு கொடுத்துவிடுகிறார். இளையகுமாரனுக்கு உரிய பங்கை அவனிடத்தில் நியாயமான முறையில் பிரித்துக் கொடுத்துவிடுகிறார். அதுபோலவே மூத்த குமாரனுக்குரிய பங்கை மூத்த குமாரனிடத்தில் கொடுத்துவிடுகிறார். ஆனால் மூத்த குமாரனோ தன்னுடைய பங்கை பெற்றுக்கொள்ளாமல், அதை தன் தகப்பனுடைய ஆளுகைக்கும் நிர்வாகத்திற்கும் திரும்பவும் ஒப்புக்கொடுத்துவிடுகிறான். ஆகையினால்தான் இந்த தகப்பன் மூத்த குமாரனைப்பார்த்து ""மகனே நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது'' என்று கூறுகிறார் (லூக் 15:31). 


இளையகுமாரன் கேட்டதை தகப்பன் அவனிடத்தில் கொடுத்துவிடுகிறார். இளையவனுக்கு ஒருவேளை அவன் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கிடைத்திருக்கலாம். ஏனெனில் இந்த தகப்பனோ மிகவும் நல்லவர். தன் பிள்ளைகளை அதிகமாக நேசிக்கிறவர். சொத்தை பிரித்து வாங்கும்போது இளையகுமாரன் தன் தகப்பனுடைய அன்பையும் பாசத்தையும் ƒபுரிந்து வைத்திருப்பான். இளையவனுக்குரிய பங்கைக் கொடுத்து அவனை சந்தோஷப்படுத்துகிறார். தகப்பன் மறுக்கவில்லை. தேவனுடைய அன்பு நமக்கு அதிகமாக கிடைக்கும்போது, நாம் தேவனைவிட்டு பிரிந்து போய்விட்டால், அந்த அன்பை நாம் மறுபடியும் நினைத்துப் பார்த்து அவரிடத்தில் ஆசையோடு திரும்பி வந்துவிடுவோம். இளையகுமாரனும் ஆஸ்தியில் தன் பங்கை பெற்றுக்கொண்டாலும், வெகு சீக்கிரத்தில் தன்னுடைய புத்தியீனத்தை உணருகிறான். இளையகுமாரனுக்கு தன்னையே நிர்வாகம்பண்ணத் தெரியாது. இப்படிப்பட்டவனால் தன்னுடைய ஆஸ்தியையும் நிர்வாகம் பண்ண நிச்சயமாகவே தெரியாது. 


ரோமருடைய பிரமாணத்தின் படியும், யூதருடைய பிரமாணத்தின் படியும் ஒரு தந்தை தன்னுடைய எல்லா சொத்துக்களையும் தன் இஷ்டம்போல செலவு செய்துவிட முடியாது. குமாரர்களுக்குச் சுதந்தரவீதம் கொடுக்க வேண்டும். அந்த தகப்பனுக்குக் குமாரர்கள் இல்லையென்றால் குமாரத்திகள் அவர்களுடைய பங்கைப் பெற்றுக் கொள்வார்கள். (ஆதி 31:14; எண் 27:8) யோபுவின் காரியம் சற்று வித்தியாசமாக இருக்கிறது. (யோபு 42:15) மூத்தகுமாரன் இரட்டிப்பான பங்கைப் பெற்றுக் கொள்வான். (உபா 21:17)


சிலநாளைக்குப் பின்பு


சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுபோய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான் (லூக் 15:13). 


இளையகுமாரன் ஆஸ்தியில் தன் பங்கு முழுவதையும் சேர்த்துக்கொள்கிறான். தன்னுடைய தகப்பனாரின் ஆளுகைக்கு உட்பட்டு ஜீவிக்க விருப்பமில்லாமல், தன்னுடைய இஷ்டம்போல ஜீவிக்க வேண்டுமென்று விரும்பி, தன் தகப்பனைவிட்டு தூர தேசத்திற்கு புறப்பட்டுப் போய்விடுகிறான். அருகிலுள்ள தேசத்தில் இருந்தால்கூட தன் தகப்பன் அவ்வப்போது வந்து தன்னை தொந்தரவு செய்வாரென்று நினைத்து தூரதேசத்திற்கே போய்விடுகிறான்.  


தன்னுடைய பணத்தை எப்படியெல்லாம் தாறுமாறாக ஊதாரித்தனமாக செலவு பண்ண முடியுமோ அப்படியெல்லாம் செலவு பண்ணிவிடுகிறான். துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணுகிறான். இவனுடைய ஆஸ்தி இவனுடைய துன்மார்க்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. சில நாளைக்குள்ளே இவன் தன்னுடைய ஆஸ்தி முழுவதையும் செலவழித்துவிடுகிறான். இவன் துன்மார்க்கமாக ஜீவனம்பண்ணும்போதும், தன் ஆஸ்தியை ஊதாரித்தனமாக செலவுபண்ணும்போதும் இவனுடைய தகப்பனின் ஆலோசனையும் ஆளுகையும் இவனுக்குக் கிடைக்கவில்லை. இவன் தனக்குத்தானே எஜமானாக இருக்கிறான். தன்னுடைய ஆஸ்தி எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு வந்திருக்கிறான். ஒன்றும் மீதியில்லாமல் எல்லாவற்றையும் அழித்துப் போடுகிறான். 


இளையகுமாரன் கெட்ட குமாரனாக ஜீவனம் பண்ணுகிறான். இவனைப்போலவே நம்முடைய பிதாவாகிய தேவனின் ஆளுகையையும் ஆலோசனையையும் விட்டு நாம் பிரிந்துபோய்விட்டால், நம்முடைய ஜீவியமும் பாதுகாப்பில்லாமல் பாழாய்போய்விடும். நாம் துன்மார்க்கமாக ஜீவனம் பண்ணும் போது பிதாவாகிய தேவனுடைய கண்டிப்பு நமக்குக் கிடைக்காது. முடிவில் எல்லாவற்றையும் இழந்து பரிதாபமாக இருப்போம். சந்தோஷத்தையும் சமாதானத்தையும் இழந்து வேதனைகளை அனுபவிப்போம். 


தேவனைவிட்டு பிரிந்து செல்வதும், அவரைவிட்டு தூர விலகிப்போவதும் நம்மை பாவத்துக்கு வழிநடத்தும். நம்முடைய பாவம் நம்மை தேவனிடமிருந்து பிரித்து விடும். பாவம் அதிகரிக்கும்போது நாம் தேவனைவிட்டு இன்னும் அதிகமாக பிரிந்துபோய்விடுவோம். இந்த உவமையில் வரும் இளையகுமாரன் தன் தகப்பனைவிட்டு தூரதேசத்திற்கு பிரயாணமாய் போனான். அதுபோலவே பாவிகளும் கர்த்தருடைய சமுகத்தைவிட்டு மிகவும் தூரமாய் விலகிப்போய்விடுவார்கள். தங்களால் முடிந்தவரையிலும் தேவசமுகத்தைவிட்டு விலகிப்போவார்கள். 


விசுவாசிகளுக்கு இந்த உலகம் தூரதேசத்தைப்போல் இருக்கிறது. இந்த தூரதேசத்தின்மீது நாம் பற்று வைக்காமல் பரம தேசத்தின்மீதே பற்று வைக்கவேண்டும். நமக்கு நிலையான கூடாரம் இந்த பூமியில் இல்லை. தேவனுடைய சமுகத்தில் வாசம்பண்ணுவதே நமக்கு நித்திய ஜீவன். பாவிகள் தேவனைவிட்டு மிகவும் தூரமாக விலகிப்போயிருக்கிறார்கள். தூரதேசமாகிய இந்த உலகத்தின் காரியங்களில் ஐக்கியமாகிவிடுகிறார்கள். இது நரகம். தேவனைவிட்டு தூரவிலகி இருப்பதே நரகம்.  


செலவழித்த பின்பு 


எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி, (லூக் 15:14)


ஒருவன் பாவத்தில் ஜீவிக்கும்போது அவன் துன்மார்க்கமாக ஜீவனம்பண்ணி தனக்குள்ளது எல்லாவற்றையும் ஊதாரித்தனமாக செலவு செய்து முடிவில் ஒன்றுமில்லாமல் போவான். பாவ வாழ்க்கை என்பது செலவு பண்ணும் வாழ்க்கையாகும். இளையகுமாரன் துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி தன் ஆஸ்தியை அழித்துப்போடுகிறான். வேசிகளிடத்தில் தன்னுடைய ஆஸ்தியை அழித்துப்போட்டான் என்று இவனைப்பற்றி இவனுடைய மூத்த சகோதரன் கூறுகிறான் (லூக் 15:30). சில நாளைக்குள்ளே இவன் எல்லாவற்றையும் செலவழித்துவிடுகிறான். 


நல்ல வஸ்திரங்களை கிரயத்திற்கு வாங்குகிறான். தன்னுடைய சொத்தை செலவழிப்பதற்கு பலருடைய சிநேகத்தை நாடுகிறான். கெட்ட சிநேகிதர்கள் இவனை தீய வழிகளில் நடத்துகிறார்கள். வெகுசீக்கிரத்தில் இவன் ஒன்றுமில்லாமல் போகிறான். 


இளையகுமாரனைப்போலவே பாவிகளாக ஜீவிக்கிறவர்கள் தேவனுடைய கிருபையை போக்கடிக்கிறார்கள். பிதாவாகிய தேவன் தங்களுக்குக் கொடுத்திருக்கும் தெய்வீக ஆசீர்வாதங்களை இவர்கள் வீணாக்கிவிடுகிறார்கள். தங்களுடைய சிந்தனைகளை தவறான காரியங்களில் செலவு பண்ணுகிறார்கள். தங்களுடைய ஆத்துமாக்களின் பெலத்தை வீணாக்குகிறார்கள். தேவன் தங்களுக்குக் கொடுத்திருக்கும் தாலந்துகளை மண்ணில் புதைத்து வைப்பதோடு, அதைப் பாழாக்கியும்விடுகிறார்கள்.  


தேவன் தம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் தாலந்துகளைக் கொடுத்திருக்கிறார். நாம் இந்த தாலந்துகளைக் கொண்டு மேலும் அதிகமான தாலந்துகளை சம்பாதிக்கவேண்டும். இந்த தாலந்துகளினால் நாம் பிறருக்கு நன்மை செய்யவேண்டும். தேவனை ஆராதிக்க வேண்டும். நமக்கு போஜனத்தை உண்டுபண்ண வேண்டும். ஆனால் துன்மார்க்கரோ தேவன் தங்களுக்கு கொடுத்திருக்கும் தாலந்துகளை வீணாக செலவு பண்ணுகிறார்கள். தங்களுடைய மாம்ச பிரகாரமான ஆசை இச்சைகளை பூர்த்தி செய்வதற்காக இவற்றை பயன்படுத்துகிறார்கள். இவர்களுடைய ஆத்துமாக்களும் துன்மார்க்கமான ஜீவியத்தினால் பாழாய்ப்போகும்


தேவனுடைய சமுகத்தில் நீதிமானாக ஜீவிக்க வேண்டியவர்கள் துன்மார்க்கராக ஜீவிக்கிறார்கள். தேவனைத் துதிக்கும் துதியினால் நிறைந்திருக்க வேண்டிய இவர்களுடைய ஆத்துமாக்கள் துன்மார்க்கத்தினால் நிறைந்திருக்கிறது. தேவன் தங்களுக்குக் கொடுத்திருக்கும் தாலந்துகளை ஊதாரித்தனமாக செலவு செய்து முடிவில் எல்லாவற்றையும் இழந்து ஒன்றுமில்லாமல் போய்விடுகிறார்கள்.  


துன்மார்க்கமாக ஜீவிக்கிறவர்களுக்கு குறைவு உண்டாகும். தேவனுக்குப் பிரியமாக ஜீவிக்கும்போது நிறைவு உண்டாகும். தேவனுடைய நிறைவான ஆசீர்வாதம் நம்மீது தங்கும். இளையகுமாரன் துன்மார்க்கமாக ஜீவனம் பண்ணினான். முடிவில் அவன் குறைவுபடத் துவங்கினான். நம்முடைய பொருளாதார ஆசீர்வாதங்களை நாம் தாறுமாறாக ஊதாரித்தனமாக வேண்டுமென்றே செலவு செய்தால் நமக்கு இப்படித்தான் குறைவு உண்டாகும். நம்முடைய ஜீவியம் கர்த்தருக்குப் பிரியமாக இல்லாமல், நம்முடைய மனம் போனபடி ஜீவிப்போமென்றால், வெகு விரைவில் நாம் புசிக்கும் அப்பத்திற்குக்கூட நமக்கு குறைவு உண்டாகும். 


இளையகுமாரன் எல்லாவற்றையும் செலவழித்தபின்பு கொடிய பஞ்சம் உண்டாயிற்று. இதுபோன்ற தீய காலங்கள் நம்முடைய பாடுகளை அதிகரிக்கச் செய்யும். துன்மார்க்கருக்கு தேவனுடைய கிருபை கிடைக்காது. இவர்கள் தங்களுடைய காரியங்களை தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும். இவர்கள் தங்கள் மனம்போல ஜீவிக்கிறவர்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே பரிதாபப்பட்டுக் கொண்டு யாருக்கும் பிரயோஜனமில்லாமல் எல்லோருக்கும் பாரமாக ஜீவிப்பார்கள்.


மாம்ச இச்சையின் பிரகாரமாக ஜீவிக்கிறவர்கள் எல்லாவற்றையும் இழந்துபோவார்கள். உலகத்தின் ஐசுவரியமே தங்களுக்கு பிரதானமாக தேவையென்று அதன்மீது ஆசை வைத்திருக்கிறவர்கள் சீரழிந்து போவார்கள். தங்களுடைய ஐசுவரியம் குறைவுபடத் துவங்கும்போது இவர்களுடைய சந்தோஷமும் நிம்மதியும் குறைந்துபோகும். இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய ஆத்துமாக்களுக்கு தேவையானவற்றை சேர்த்து வைக்காமல் தங்கள் சரீரத்திற்கும் சரீரத்தின் இச்சைகளுக்குமே செலவு செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு குறைவு வரும்போது எல்லாமே குறைந்துபோகும்.


துன்மார்க்கருக்கு அப்பம் குறைவுபடும். வஸ்திரம் குறைவுபடும். தேவகிருபை இவர்கள்மீது இல்லஃ ôமல் போவதினால் இவர்களுக்கு தேவனுடைய பராமரிப்பும் இனிமேல் கிடைக்காது. துன்மார்க்கமாக ஜீவிக்கிறவர்களுடைய ஜீவியம் கொடிய பஞ்சத்தில் அவதிப்படும் தேசத்தைப் போலிருக்கும். துன்மார்க்கர் தங்களுடைய துன்மார்க்கமான கிரியைகளினால் தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தை இழந்து தங்களைத் தாங்களே தரித்திரராக்கிவிடுவார்கள்.  


பன்றிகளை மேய்க்கும்படி


அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான் (லூக் 15:15).  


ஒருவன் பாவத்தில் மூழ்கியிருக்கும்போது அவன் பரிதாபமான நிலைமையில் இருப்பான். இப்படிப்பட்டவர்கள் மிகவும் இழிவான வேலை செய்தாலும், தன் போஜனத்திற்குக்கூட கஷ்டப்பட வேண்டியதுவரும். இளையகுமாரன் துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். தேசத்திலே கொடிய பஞ்சம் உண்டானபோது, அவன் குறைவுபடத் தொடங்கினான். அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். தன் தகப்பனுடைய அன்பை விட்டு பிரிந்து விலகிப்போனவன், இப்போது வேறு வழியில்லாமல் யாரோ ஒருவனுடைய அதிகாரத்திற்கு தன்னை உட்படுத்துகிறான். இந்த குடியானவனோ இவனுக்கு கண்ணியமான வேலையைக் கொடுக்கவில்லை. அவனை தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்புகிறான்.


இதற்கு முன்பு ஊதாரித்தனமாக செலவு செய்தவன் இப்போது பன்றிகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான். கட்டுப்பாடில்லாமல் தாறுமாறாக செலவு செய்தால் பன்றிகளைக் கட்டுப்படுத்த வேண்டியதுவரும். இப்படிப்பட்ட நிலமைதான் வரும். நல்ல அந்தஸ்தில் இருந்தவன் இப்போது பன்றிகளை மேய்க்கும் நிலமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறான். தன் தகப்பனின் அன்பை விட்டு பிரிந்துபோனதினால் இவனுக்கு இப்படிப்பட்ட பரிதாபமான நிலமை உண்டாயிற்று


இவனுடைய தகப்பன் இவனை வயல்வெளியில் வேலை செய்யச் சொல்லியிருப்பார். தன்னுடைய ஆடுகளை மேய்க்கச் சொல்லியிருப்பார். தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்க விருப்பமில்லாமல் அவனைவிட்டு பிரிந்துபோனவன் இப்போது வேறு ஒருவனுடைய பன்றிகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான். தன் தகப்பனுக்கு வேலை செய்தால் இவனுக்கு கண்ணியமாக இருந்திருக்கும். தன்னுடைய புத்திரசுவீகாரத்தின் சிலாக்கியத்திற்காக இவன் தன் தகப்பனோடு வேலை செய்ய வேண்டியவன். ஆனால் இப்போதோ இவன் பிசாசுக்கு அடிமையாகி துன்மார்க்கமாக ஜீவித்ததினால் பிசாசின் பிள்ளையாக இருக்கிறான். 


பிசாசின் பிள்ளைகளுக்கு தேவனுடைய சுதந்திரம் கிடைப்பதில்லை. இவர்களுக்கு தெய்வீக ஆசீர்வாதம் கிடைக்காது. தன்னுடைய மாம்சத்தின் இச்சைகளை நிறைவேற்றுவதற்காகவும், தன்னுடைய மாம்சத்தைப் போஷிப்பதற்காகவும் இளையகுமாரன் பன்றிகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான். இயேசுகிறிஸ்துவின் காலத்தில் பன்றிகளை மேய்ப்பது ஒரு அருவருப்பான தொழிலாக கருதப்பட்டது. யூதருக்கு பன்றி புசிக்கத்தகாத ஒரு அருவருப்பான மிருகம்.


தங்களைத் தாங்களே பாவத்தினால் தீட்டுப்படுத்திக்கொள்பவர்கள் இப்படித்தான் பரிதாபமாக ஜீவிப்பார்கள். பன்றி பெருந்தீனி உண்ணும். சேற்றில் புரண்டு உருளும். அப்படிப்பட்ட பன்றிகளை மேய்க்கும்போது இவன் ஒரு பன்றியைப்போல தன்னை தாழ்த்திக்கொண்டு, அவற்றை மேய்த்துக்கொண்டிருக்கிறான். தன்னுடைய சுயாதீனத்தை தவறாக பயன்படுத்துகிறவர்களுக்கு இப்படிப்பட்ட அவமானம்தான் உண்டாகும்.


பன்றிகளை மேய்ப்பது யூதமார்க்கத்திலும், வேறுபல மார்க்கங்களிலும் இழிவான வேலையாக கருதப்பட்டது. எகிப்து தேசத்தில் பன்றிகளை மேய்க்கிறவர்கள் சமுதாயத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களால் எகிப்தியரின் தெய்வங்களை ஆராதிப்பதற்கு அவற்றின் கோவில்களுக்கு வரமுடியாது. கெட்ட குமாரனுடைய பரிதாபமான நிலையை விளக்கிக் கூறுவதற்காகவே இயேசு கிறிஸ்து அவனைப் பன்றிகளை மேய்க்கிறவனாகக் குறிப்பிடுகிறார். பாவிகளுடைய நிலைமையும் இதைப்போல பரிதாபமாகவே இருக்கிறது.


பன்றிகள் தின்கிற தவிடு


அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினால் தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான். ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை (லூக் 15:16).


இளைய குமாரனை பன்றிகளை மேய்க்கச் சொன்ன குடியானவன் அவனை கடினமாக வேலை வாங்குகிறான். ஆனால் அவனுடைய பசிக்கு போஜனம் எதுவும் கொடுக்கவில்லை. பன்றிகளை மேய்க்கும் இளையகுமாரனுக்கு பசியுண்டாயிற்று. அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினால் தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான். ஆனால் அதைக்கூட அவனுக்கு ஒருவனும் கொடுக்கவில்லை. பன்றியைவிட இவன் கேவலமாக மதிக்கப்படுகிறான். ஒருவன் பாவத்தில் சிக்கிக்கொள்ளும்போது அவனுக்கு மதிப்பு, மரியாதை எதுவும் இராது. அவமானம்தான் இருக்கும். 


தன் தகப்பனுடைய வீட்டில் மிகவும் மரியாதையோடு இருக்க வேண்டிய இளையகுமாரன், இப்போது பன்றிகளை மேய்த்துக்கொண்டு சாப்பிட ஒன்றுமில்லாமல் பசியாக இருக்கிறான். பன்றி தின்னும் தவிடுகூட இவனுக்குக் கொடுக்கப்படவில்லை. தேவனைவிட்டு பிரிந்து போகிறவர்களுக்கு தேவனுடைய வாக்குத்தத்தங்களும் ஆசீர்வாதங்களும் கிடைக்காது. தேவனைவிட்டுப் பிரியும்போது ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக இருப்பதுபோல தெரியும். தங்களுக்குத் தாங்களே சிறிது காலம் சந்தோஷமாக இருப்பார்கள். 



தேவன் இல்லாவிட்டாலும் தாங்கள் திருப்தியோடிருப்பதாக இவர்கள் நினைப்பார்கள். ஆனால் மிக விரைவில் இவர்கள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக்கொண்டதை உணருவார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதை புரிந்துகொள்வார்கள். தேவனைவிட்டு பிரிந்திருக்கும் பாவிகள் அப்பமல்லாததற்காக தங்கள் பணத்தையும், திருப்தி செய்யாத பொருளுக்காக தங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பார்கள் (ஏசா 55:2).   


தவிடு பன்றி தின்னக்கூடிய உணவு. இது மனுஷனுடைய உணவு அல்ல. இந்த உலகத்தின் ஐசுவரியமும், ஆடம்பரமான களியாட்டுக்களும் சரீரத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம். ஆனால் நம்முடைய சரீரத்திற்குள்ளே நமக்கு விலையேறப்பெற்ற ஆத்துமாவும் உள்ளது. இந்த ஆத்துமாவை உலகப்பிரகாரமான காரியங்களினால் திருப்தி பண்ணமுடியாது. தேவனால் மாத்திரமே நம்முடைய ஆத்துமாவின் தேவைகளை பூரணமாக சந்திக்க முடியும்.


ஒருவன் பாவத்தில் சிக்கியிருக்கும்போது அவன் எல்லா பக்கத்திலும் நெருக்கப்படுவதை உணருவான். இந்த நெருக்கத்திலிருந்து தான் விடுதலைபெறுவதற்கு வழியே இல்லையென்று சோர்ந்து போவான். தனக்கு யாரும் உதவிபுரியமாட்டார்கள் என்பதையும் புரிந்துகொள்வான். இளையகுமாரன் தன் தகப்பனோடு இருந்தபோது, தன் குடும்ப வயலில் வேலை செய்தால் அவனுக்கு திருப்தியான போஜனம் கிடைத்திருக்கும். ஆனால் இப்போதோ பன்றிகளை மேய்க்கும் வேலையை செய்தாலும் இவனுக்கு சாப்பாடு கிடைக்கவில்லை. ஒரு பிச்சைக்காரனைப்போல தன் போஜனத்திற்கு பிறரிடம் கெஞ்சி பிச்சைக்கேட்கிறான். பன்றிகள் தின்கிற தவிடு கிடைத்தால்கூட போதுமென்று நினைக்கிறான். ஆனால் அதைக்கூட ஒருவனும் அவனுக்கு கொடுக்கவில்லை. 


தேவனைவிட்டு விலகிப்போனவர்களுக்கு ஒரு உதவியும் கிடைக்காது அவர்களுக்கு ஆதரவான எல்லா கதவுகளும் அடைக்கப்படும். எந்த சிருஷ்டியும் இவர்களுக்கு உதவுபுரியாது. இந்த உலகம் தங்களை போஷிக்கும் என்று எதிர்பார்த்து ஏமார்ந்து போவார்கள். வீணாக புலம்புவார்கள். தங்களுடைய நிலமையைக் குறித்து நொந்துபோய் பேசுவார்கள். இவர்கள் தங்களுடைய ஆத்துமாக்களை கெடுத்துப்போட்டவர்கள். பாவம் என்னும் விஷத்தினால் இவர்கள் தங்கள் ஆத்துமாக்களை பாழாக்கிவிட்டார்கள். தங்கள் ஆத்துமாக்களை கெடுத்துப்போட்டவர்களுக்கு போஜனம் கிடைக்காது.


பாவத்தில் சிக்கியிருக்கிறவர்கள் மரித்துப்போன நிலமையில் இருப்பார்கள். இளையகுமாரன் புத்தி தெளிந்து தன் தகப்பனிடத்தில் வந்தபோது, அந்த தகப்பன் இவனைப்பார்த்து ""என் குமாரனாகிய இவன் மரித்தான்'' என்றே கூறுகிறார். தனக்குப் பிரியமான குமாரனை தகப்பன் இதுவரையிலும் மரித்துப்போனவனாகவே காண்கிறார். பாவியாக இருக்கிறவன் நியாயப்பிரமாணத்தில் மரித்துப்போயிருக்கிறான். இவனுக்கு நியாயப்பிரமாணத்தின்படி மரண தண்டனை கொடுக்கப்படுகிறது. தன்னுடைய பாவங்களினாலும், மீறுதல்களினாலும் இவனுடைய ஆவிக்குரிய ஜீவியம் பரிதாபமாக மரித்துப்போயிற்று. பாவிகளுக்கு கிறிஸ்துவோடு ஐக்கியம் இராது. இவர்கள் தேவனுக்காக ஜீவிக்கமாட்டார்கள். தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் பாவிகள் பூரணமாக மரித்துப் போயிருக்கிறார்கள். 


தூரதேசத்திலிருந்த இளைய குமாரன் அவனுடைய தகப்பனுக்கும், அவனுடைய குடும்பத்தாருக்கும் மரித்தவனாகவே இருந்தான். யாரும் இவனை சாகடிக்கவில்லை. தன்னுடைய மீறுதலினாலும், கீழ்ப்படியாமையினாலும், இவன் தன் தகப்பனுக்கும் குடும்பத்தாருக்கும் மரித்துப்போனவனாக காணப்படுகிறான்.


இளையகுமாரன் தன் தகப்பனிடம் திரும்பி வரும்போது ""இவன் காணாமல் போனான்'' என்று தகப்பன் அறிவிக்கிறார். பாவத்தில் சிக்கி தேவனைவிட்டுப் பிரிந்துபோயிருக்கிறவர்கள் தேவனுடைய நன்மைக்கும் ஆசீர்வாதங்களுக்கும் காணாமல் போனவர்களாக இருப்பார்கள். இளையகுமாரன் தன் தகப்பனுடைய வீட்டிலிருந்து காணாமல்போய்விட்டான். தேவனைவிட்டுப் பிரிந்துபோயிருக்கும் ஆத்துமாக்கள் காணாமல்போன ஆத்துமாக்கள்


ஒருவர் பிரயாணம் பண்ணும்போது பாதை மாறிப்போய், பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து காணாமல்போவது போல பாவிகள் தங்களுடைய இலக்குத் தெரியாமல் தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் காணாமல் போய்விடுகிறார்கள். நாம் பாதை விலகிப் போகும்போது தேவனுடைய கிருபையும் இரக்கமும் நம்மை எச்சரிக்கும். தேவனுடைய எச்சரிப்பின் சத்தத்திற்கு நாம் கீழ்ப்படியவில்லையென்றால் நாம் நிரந்தரமாக காணாமல் போய்விடுவோம். மறுபடியும் நித்திய வழியில் வருவதற்கு பாதை தெரியாமல், எங்கேயாவது அலைந்து கொண்டிருப்போம். முடிவில் அழிந்துபோவோம். 


இளைய குமாரன் தன் விருப்பத்திற்கு மாறாக அடிமையாக இருக்கிறான். கடினமாக வேலைசெய்கிறான். ஆனால் அவனுக்கு உணவு கொடுக்கப் படவில்லை. பன்றிகள் தின்கிற தவிட்டைத் தின்பதற்குக்கூட விரும்புகிறான். ஆனால் அதுகூட அவனுக்குக் கிடைக்கவில்லை. பன்றியின் தவிட்டை அவன் தின்றுவிட்டால் அவனைக் களவு செய்தவனாகக் கருதி, பிடித்துத் தண்டிப்பார்கள்.


புத்தி தெளிந்தபோது


அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூ-க்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன் (லூக் 15:17).


ஒருவன் பாவத்தில் மூழ்கியிருக்கும்போது அவன் தெளிந்த புத்தியுள்ளவனாக இருக்கமாட்டான். பைத்தியக்காரன்போல தாறுமாறாக சிந்திப்பான். கெட்ட குமாரன் தன் தகப்பனைவிட்டுப் பிரிந்து புத்திதெளிவில்லாமல் இருந்தான். பல கஷ்டங்களை அனுபவித்தான். பன்றிகள் தின்கிற தவிடுகூட அவனுக்கு ஆகாரமாக கிடைக்கவில்லை. அப்போது அவனுக்கு புத்தி தெளிந்தது. தன் தகப்பனைவிட்டு பிரிந்து போனபோதே அவன் புத்தி தடுமாற ஆரம்பித்துவிட்டது. அவன் தூரதேசத்திற்குப் போய் துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணியபோது அவனுடைய புத்தியின் தடுமாற்றம் மிகவும் அதிகரித்திருக்கிறது. 


கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்கிறவர்கள் இந்த கெட்டகுமாரனைப்போல புத்தி தெளிவில்லாதவர்களாய் இருக்கிறார்கள். தங்களுடைய மதியீனமான ஆசைகளினால் தங்களைத் தாங்களே கெடுத்துக்கொள்கிறார்கள். இவர்களுடைய நம்பிக்கைகளும் மதியீனமாகவே இருக்கும். அதை நம்பி தங்களைத் தாங்களே வஞ்சித்துக் கொண்டு முடிவில் ஒன்றுமில்லாமல் கெட்டுப் போகிறார்கள்.


புத்தி தெளிவில்லாத கெட்ட குமாரனுக்கு மறுபடியும் புத்திதெளிகிறது. புத்தியின் தடுமாற்றத்தில் அவன் குறைவுபடத் தொடங்கினான். பல பாடுகளை அனுபவித்தான். சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லாமல் பசியும் பட்டினியுமாக கிடந்தான். அப்போதுதான் அவனுக்கு புத்தி தெளிகிறது. நம்முடைய ஜீவியத்திலும் பாடுகள் வரும் போதுதான் நமக்கு புத்தி தெளிகிறது. தேவனுடைய கிருபையினால் பரிசுத்தமாக்கப்பட்ட பாடுகளை நாம் அனுபவிக்கும்போது நமக்கு பல நன்மைகள் உண்டாகும். பாவிகளை தங்கள் பாவ வழிகளிலிருந்து திருப்பி தம்மிடத்தில் சேர்த்துக் கொள்வதற்காக தேவன் சில சமயங்களில் அவர்களுக்கு பாடுகளை அனுமதிக்கிறார். 


நாம் சந்தோஷமாக இருப்பதற்கு எல்லா வழிகளிலும் முயற்சி செய்வோம். எந்த வழியில் முயற்சிபண்ணினாலும் நமக்கு சந்தோஷமே கிடைக்கவில்லையென்றால் நம்முடைய பிரயாசமெல்லாம் வீணாகப்போகும். பணத்தைசெலவு செய்து பார்ப்போம். அதன் மூலமாகவும் நமக்கு நிம்மதி கிடைக்காது. முடிவில் நம்முடைய பணமும் செலவழிந்து ஒன்றுமில்லாமல் இருப்போம். நம்முடைய சரீர ஆரோக்கியமும் கெட்டுப்போய் பலவீனமாக இருப்போம். அப்போதுதான் நம்முடைய புத்தி தெளியும். இவ்வளவு கஷ்டங்களையும் அனுபவித்த பின்புதான் தேவனிடத்தில் திரும்பிப்போகலாமே என்னும் எண்ணம் வர ஆரம்பிக்கும். 


நம்முடைய சரீரத்தில் கொடிய வியாதிகள் வரும்போது நம்முடைய பணத்தையும், மருத்துவ சிகிச்சைகளையும், மருத்துவர்களையும் நம்புவோம். எல்லாம் பிரயோஜனமில்லாமல் போகும்போதுதான் கர்த்தர் நமக்கு பரம வைத்தியராக தெரிவார். மருத்துவரால் கூடாத காரியத்தை கர்த்தரால் செய்யக்கூடும் என்னும் விசுவாசம் அப்போதுதான் நமக்குள் வரும். நம்முடைய தேவைகளை மனுஷரால் சந்திக்கமுடியாது. நமக்குத் தேவையான ஆசீர்வாதங்களை மனுஷரால் கொடுக்க முடியாது. ஆனால் தேவனால் எல்லாம் கூடும். எல்லா கஷ்டங்களையும் அனுபவித்த பின்பு, வேறு வழியில்லாமல் தேவனிடத்திற்கு திரும்பி வருவதைவிட, தேவனை விட்டுப் பிரியாமல் இருப்பது நமக்கு மிகுந்த ஆசீர்வாதமாகும். ஆகையினால் நாம் எப்போதும் கர்த்தரைப் பற்றிக்கொள்ள வேண்டும். அவருடைய ஆலோசனைகளுக்கு நாம் கீழ்ப்படிந்து ஜீவிக்கவேண்டும். 


கெட்ட குமாரனுடைய புத்தி தெளிந்தபோது அவன் தெளிவாக சிந்திக்க ஆரம்பிக்கிறான். அப்போதுதான் அவனுடைய தகப்பனைப்பற்றி அவனுக்குள் நல்ல எண்ணம் உண்டாகிறது. தன் தகப்பனுக்கு ஏராளமான கூலிக்காரர் இருப்பது இப்போதுதான் அவனுக்குப் புரிகிறது. இவனுக்கு பன்றிகள் தின்கிற தவிடுகூட கிடைக்கவில்லை. ஆனால் தன் தகப்பனுடைய கூலிக்காரருக்கு பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது. ஆனால் இவனோ பசியாக சாகிறான். தன்னுடைய பசியையும், பட்டினியையும், தான் பசியினால் சாவதையும் புரிந்துகொள்கிறான். தன்னுடைய நிலமையையும் தன் தகப்பனுடைய வேலைக்காரரின் நிலமையையும் ஒப்பிட்டுப் பார்க்கிறான்.


கெட்ட குமாரனுக்கு பசியின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது. பசியினால் சாகக்கூடிய அளவிற்கு வந்துவிட்டான். அப்போதுதான் அவனுடைய புத்தி தெளிகிறது. பாவிகளும் இப்படிப்பட்ட பரிதாபமான நிலமைக்கு தள்ளப்பட்டால்தான் அவர்கள் கிறிஸ்துவைப்பற்றி நினைத்துப் பார்க்கிறார்கள். அதுவரையிலும் பாவச்சேற்றில் மூழ்கியிருப்பார்கள். கர்த்தரை ஆராதிப்பதற்குப் பதிலாக உலகத்தின் ஆசாபாசங்களை கடைசி வரையிலும் அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.


நாம் கர்த்தரைவிட்டுப் பிரிந்துபோனாலும், புத்தி தெளிந்து மறுபடியுமாக நாம் அவரிடம் திரும்பி வரும்போது, கர்த்தர் நமக்காக வெட்கப்படமாட்டார். ஓடிப்போன நாம் திரும்பி வருவதினால் தம்முடைய மகிமை குறைந்துபோயிற்று என்று தேவன் ஒருபோதும் நினைப்பதில்லை. நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தரிடத்தில் திரும்பி வந்தாலும் அவர் நம்மை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார். அவருடைய கிருபையும் இரக்கமும் அவரை மகிமைப்படுத்துகிறது.


கெட்ட குமாரன் பன்றிகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது பசியினால் வாடுகிறான். தன் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்கு பூர்த்தியான சாப்பாடு இருக்கிறதை சிந்தித்துப் பார்க்கிறான். அவன் தகப்பனுடைய வீடு அவ்வளவு நேர்த்தியானது. அதை வேண்டாமென்று விட்டுவிட்டுத்தான் இப்போது பன்றிகளுக்கு நடுவில் இருக்கிறான். 


நம்முடைய பரலோகப் பிதாவின் வீட்டில் அவருடைய பிள்ளைகள் எல்லோருக்கும் போஜனம் உள்ளது. கர்த்தரிடத்தில் உள்ள போஜனம் நமக்கு போதுமானது. நாம் பூர்த்தியாக புசித்தது போக அங்கு மீதியும் இருக்கும். கர்த்தருடைய ஆசீர்வாதம் அவருடைய பிள்ளைகளுக்கு போதுமானது. மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதற்கு கர்த்தருடைய ஆசீர்வாதம் குறைவில்லாமல் அதிகமாக இருக்கிறது. கர்த்தருடைய மேஜையிலிருந்து விழும் துணிக்கையினால் கூட ஏராளமானோர் திருப்தியாக புசிக்கலாம்.


தேவனுடைய குடும்பத்தில் ஏராளமான ஊழியக்காரர்கள் ஊழியம் செய்கிறார்கள். அவர்களெல்லோரையும் தேவன் நேர்த்தியாக போஷிக்கிறார். அவர்களை பாதுகாத்து பராமரிக்கிறார். பாவிகள் பசியினாலும் பட்டினியினாலும் வேதனையினாலும் பாடுகளை அனுபவிக்கும்போது, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை பாதுகாத்து பராமரிக்கிறார். திருப்தியாகப் போஷிக்கிறார். பாவிகள் மனந்திரும்பி, புத்தி தெளிந்து, கர்த்தரிடத்தில் திரும்பி வந்தால், அவர்களுக்கும் தெய்வீக ஆசீர்வாதம் கிடைக்கும். தேவனைவிட்டுப் பிரிந்துபோனவர்கள் மறுபடியும் தேவனிடத்தில் வந்தால்தான் அவர்களுடைய பாடுகள் ஓயும். இல்லையென்றால் இந்தக் கெட்ட குமாரனைப்போல பசியினால் சாகவேண்டியதுதான். 


அவனுடைய பரிதாபமான சூழ்நிலை அவனுடைய புத்தியைத் தெளிய வைக்கிறது. இந்த வேலையை அவன் தொடர்ந்து செய்து வந்தால் பட்டினியாகக் கிடந்து மரித்தே போவான். அதையும் சிந்தித்துப் பார்க்கிறான். தன்னுடைய தகப்பனுடைய கூலிக்காரரைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்கிறான். 


தகப்பனிடத்திற்குப் போய்


நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன் (லூக் 15:18). 


கெட்ட குமாரனுக்கு புத்தி தெளிந்தபோது அவன் தன் தகப்பனுடைய வீட்டைப்பற்றியும் அவருடைய வேலைக்காரைப்பற்றியும் சிந்தித்துப் பார்க்கிறான். தானும் அங்கிருந்தால் தன்னுடைய பசியும் பட்டினியும் தீர்ந்துபோகுமே என்று யோசிக்கிறான். தன் தகப்பனின் ஆசீர்வாதத்தை மறுபடியும் பெற்றுக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டுமென்று சிந்தனை பண்ணுகிறான். ""நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போவேன்'' என்று தீர்மானம் பண்ணுகிறான்.


நம்முடைய வாழ்க்கையில் நல்ல நோக்கங்கள் இருக்கவேண்டும். நாம் நல்லவற்றை சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்காரியங்கள் நம்முடைய சிந்தனையில் இருந்தால் மாத்திரம் அது போதுமானதல்ல. அதை நடைமுறையில் செயல்படுத்தவும் வேண்டும். 


கெட்ட குமாரன் தன் தகப்பனுடைய வீட்டைப்பற்றி மறுபடியும் சிந்தித்துப் பார்ப்பது நல்ல காரியம்தான். அதைவிட தான் எழுந்து, தன் தகப்பனுடைய வீட்டிற்குப் போகவேண்டுமென்று தீர்மானம் பண்ணி புறப்பட்டுப் போவது தான் மிகவும் நல்ல காரியம். கெட்ட குமாரனின் தீர்மானம் மிகவும் நல்லது. அவனுக்குப் புத்திதெளிந்தபோது இப்போது தெளிவாக சிந்திக்கிறான். தன் தகப்பனுடைய வீட்டிற்குப் போகும்போது அவரிடத்தில் என்ன பேசவேண்டுமென்றும் யோசித்துப் பார்க்கிறான். இதுதான் உண்மையான மனந்திரும்புதல். தங்கள் பாவ ஜீவியத்திலிருந்து மெய்யாகவே மனந்திரும்புகிறவர்கள் தங்கள் பாவத்திலிருந்து எழுந்திருந்து தேவனிடத்தில் புறப்பட்டு வருவார்கள். 


நம்முடைய பாவ ஜீவியத்திலிருந்து புறப்பட்டு, நாம் தேவனிடத்திற்கு திரும்பி வரும்போது, அவருடைய சமுகத்தில் நாம் பேசும் வார்த்தைகளெல்லாம் நன்றி நிறைந்ததாக இருக்கும். தேவசமுகத்தில் மனந்திரும்பிப் போகும்போது நாம் என்ன பேசவேண்டும் என்னும் சிந்தனை நமக்குள் தோன்றும். அதுபோலத்தான் கெட்ட குமாரனும் இங்கு சிந்தித்துப் பார்க்கிறான். ""தகப்பனே பரத்திற்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன்'' என்று சொல்ல வேண்டுமென்று யோசிக்கிறான். 


கெட்ட குமாரன் முதலாவதாக தான் ஒரு பாவி என்பதை அங்கீகரிக்கிறான். தன்னுடைய தவறுகளை உணருகிறான். தேவனுக்கு முன்பாக நாம் எல்லோருமே அவருக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறோம். எல்லோரும் பாவம் செய்து ஏகமாய் கெட்டுப்போனோம் என்று சத்திய வசனம் கூறுகிறது. ஆகையினால் நாம் தேவனுடைய சமுகத்திற்கு முன்பாக நிற்கும்போது நாம் ஒரு பாவி என்பதை நினைவுகூர்ந்து நமது பாவத்தை அங்கீகரிக்க வேண்டும். நம்முடைய இருதயத்தில் சமாதானமும் நமக்கு பாவமன்னிப்பும் வேண்டுமென்றால் முதலாவதாக தேவனுடைய சமுகத்தில் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடவேண்டும். நாம் பாவிகள் என்பதை அங்கீகரிக்க வேண்டும். நமக்குள் பாவம் இல்லை என்று சொல்வோமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாக இருப்போம். 


நம்முடைய தேவன் கிருபையுள்ளவர். தமது கிருபையினாலும் இரக்கத்தினாலும் அவர் நம்மோடு உடன்படிக்கை செய்திருக்கிறார். நம்முடைய பாவங்களை தேவனுடைய சமுகத்தில் வந்து அறிக்கை செய்து விட்டுவிடும்போது அவர் நம்மை மன்னிப்பதற்கு சித்தமுள்ளவராக இருக்கிறார். ஆகையினால் நாம் மனத்தாழ்மையோடு, கீழ்ப்படிதலுள்ள இருதயத்தோடு, பயபக்தியோடு தேவனுடைய கிருபாசனத்தண்டையில் கிட்டிச் சேர்ந்து நம்முடைய பாவங்களை அறிக்கை செய்யவேண்டும்.


நாம் பாவஅறிக்கை செய்யும்போது நம்முடைய இருதயத்தில் பாவத்தின் சுமை அதிகமாக இருக்கும். நாம் இதுவரையிலும் சுமந்து வந்த பாவசுமைகளை தேவனுடைய சமுகத்தில் இறக்கி வைப்பதற்காகவே நம்முடைய பாவங்களை அறிக்கையிடுகிறோம். புத்தி தெளிந்து தன் தகப்பனிடம் வந்த இளையகுமாரன் ""பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன்'' என்று அறிக்கை செய்தான். உலகப்பிரகாரமான பெற்றோருக்கு விரோதமாக நாம் பாவம்செய்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பிள்ளைகளாக இருந்து நம்முடைய பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை நாம் செய்யாமல் இருப்போமென்றால் அதற்காகவும் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 


நாம் பரத்துக்கு விரோதமாகவும் தேவனுக்கு முன்பாகவும் பாவம் செய்வோமென்றால் இந்தப் பாவம் தேவனுக்கு விரோதமாக செய்த பாவமாக இருக்கும். தேவன் நம்மீது வைத்திருக்கும் உரிமைக்கும் அதிகாரத்திற்கும் விரோதமாக நாம் பாவம் செய்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் தேவன் வைத்திருக்கும் ஆளுகையை மீறி ஜீவித்து பாவம் செய்கிறோம்.   


தேவனுடைய அதிகாரத்தை நாம் மீறும்போது பரத்துக்கு விரோதமாக பாவம் செய்கிறோம். நம்முடைய பாவத்தின் உக்கிரம் அதிகரிக்கிறது. அதிகமாக பாவம் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டு வானளாவிய பாவங்களை செய்கிறோம். இதுவே பரத்துக்கு விரோதமான பாவம். நாம் எவ்வளவுதான் பாவம் செய்தாலும் நம்முடைய பாவம் தேவனையோ அல்லது பரலோகத்தையோ ஒருபோதும் பாதிக்காது. நாம் செய்யும் பாவம் நம்மையே பாதிக்கும். அது பரலோகத்தை பாதிக்கப்போவதில்லை. 


தேவனுக்கு முன்பாகவும் பரத்துக்கு விரோதமாகவும் பாவம் செய்கிறவர்கள் தங்களைத் தாங்களே அழித்துப்போடுகிறார்கள். வானத்தில் கல்லெறியும் போது அது மறுபடியும் கீழே வந்து நம்மீது விழுவதுபோல, பரத்துக்கு விரோதமாகவும் தேவனுக்கு விரோதமாகவும் நாம் செய்யும் பாவம் நமக்கே சாபமாக வரும். எல்லா சூழ்நிலைகளிலும் தேவன் நம்மை கண்ணோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார். கர்த்தருடைய பார்வையிலிருந்து நாம் ஒருபோதும் தப்பிச் செல்லமுடியாது. இரகசியமாக பாவம் செய்து தேவனுடைய சமுகத்திலிருந்து மறைந்து கொள்ளலாமென்று நாம் யோசிக்கக்கூடாது. தேவனுக்கு அறியாத காரியம் ஒன்றுமில்லை. அவர் சர்வ ஞானமுள்ளவர். இளையகுமாரன் இதை உணர்ந்ததினால்தான் ""நான் பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன்'' என்று அறிவிக்கிறான். இவனைப்போலவே நாமும், பாவத்திலிருந்து மனந்திரும்பி தேவனுடைய சமுகத்திற்கு முன்பாக பயபக்தியோடு நின்று ""ஆண்டவரே, நான் பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன்'' என்று அறிக்கை செய்யவேண்டும்.   


பாத்திரனல்ல


இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூ-க்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்-; (லூக் 15:19) 


இளையகுமாரன் தன் பாவத்தை உணர்ந்ததினால், தன் தகப்பனிடம் எந்தவிதமான உரிமையும் கொண்டாடவில்லை. குடும்பத்தில் தனக்குள்ள எந்த சிலாக்கியத்தையும் கொடுக்காமல் சாதாரண வேலைக்காரனைப்போல தன்னை ஏற்றுக்கொண்டால் போதுமென்று நினைக்கிறான். ""இனிமேல் உம்முடைய குமாரனென்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல'' என்று தன் தகப்பனிடம் அறிவிக்க வேண்டுமென்று தீர்மானம் பண்ணுகிறான். 


தன் தகப்பனுக்கும் தனக்குமுள்ள உறவை இவன் மறுக்கவில்லை. இவன் தன் தகப்பனைவிட்டு தூர தேசத்திற்கு பிரிந்துபோய்விட்டாலும், இவனுடைய உள்ளத்தில் தன் தகப்பனைப்பற்றிய உணர்வு இருக்கிறது. தன்னுடைய துன்மார்க்கத்தினால் தன் தகப்பன் தன்மீதுள்ள உறவை நியாயமாக புறக்கணித்துவிடுவாரோ என்னும் பயம் இவனுடைய உள்ளத்தில் காணப்படுகிறது. ஏனெனில் இவன் ஏற்கெனவே ஆஸ்தியில் தனக்கு வரும் பங்கு முழுவதையும் பிரித்துக்கொண்டு தன் தகப்பனைவிட்டு தூரதேசத்திற்கு போய்விட்டவன். தன்னுடைய பங்கு முழுவதையும் ஏற்கெனவே பெற்றுவிட்டதினால், இனிமேல் தன் தகப்பனுடைய ஆஸ்தியில் தனக்கு பங்கு எதுவுமில்லையென்று இளையகுமாரன் நியாயமாக யோசிக்கிறான். 


இவனைப்போலவே பாவிகளாகிய நாம், தேவனுடைய சமுகத்திற்கு முன்பாக செல்லும்போது, ""ஆண்டவரே உம்முடைய கிருபையையும், இரக்கத்தையும், சிலாக்கியத்தையும் பெற்றுக்கொள்வதற்கு நான் எந்தவிதத்திலும் பாத்திரனல்ல'' என்று நம்மைப்பற்றி தாழ்மையாக அறிக்கை செய்யவேண்டும். 


தனக்கு தகுதியில்லையென்றாலும், தன் தகப்பனுடைய வீட்டில் எப்படியாவது பிரவேசித்துவிட வேண்டுமென்று இளையகுமாரன் விரும்புகிறான். தனக்கு மகனுக்குரிய அந்தஸ்து கிடைக்கவில்லையென்றாலும், ஒரு கூலிக்காரனாக ஆவது அந்த வீட்டிற்குள் பிரவேசிக்க விரும்புகிறான். மரியாதை கிடைக்கவில்லையென்றாலும், தன் தகப்பனுடைய வீட்டில் ஒரு தாழ்மையான வேலையை செய்துகொண்டாவது, அங்கு இருக்க வேண்டும் என்பது இவனுடைய விருப்பம். ""உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்'' என்று தன் தகப்பனிடம் கேட்க வேண்டுமென்று சிந்திக்கிறான். கூலிக்காரனாக இருந்தால் அது போதும். அதுவே தனக்கு பெரிய காரியம் என்று திருப்தியோடு இருக்கிறான். 


ஒரு காலத்தில் இதே வீட்டில் குமாரனுக்குரிய அந்தஸ்தோடு இருந்தவன், குமாரனுக்குரிய எல்லா சிலாக்கியங்களையும் அனுபவித்தவன், தன் துன்மார்க்கமான ஜீவியத்தினால் எல்லாவற்றையும் இழந்து, தன்னைப்பற்றி நினைக்கும்போது, தன்னை ஒரு குமாரனாக நினைக்க முடியாமல், சாதாரண கூலிக்காரனாக நினைத்துப் பார்க்கிறான்.  


திரும்பி வரும் வீடு தன் தகப்பனுடைய வீடாக இருந்தாலும், கூலிக்காரரில் ஒருவனாக வேலை செய்வதற்கு இவன் வெட்கப்படவில்லை. அவர்களுக்குக் கொடுக்கப்படும் வேலையை இவன் சந்தோஷமாக செய்ய முன்வருகிறான். அவர்களுக்கு கொடுக்கப்படும் சாதாரண சாப்பாடு தனக்கும் போதும் என்று நினைக்கிறான். பன்றிகளை மேய்த்துக்கொண்டு, சாப்பிடுவதற்கு பன்றியின் தவிடுகூட கிடைக்காமல், பசியினால் சாகும் இந்த நிலமைக்கு, தன் தகப்பனுடைய வீட்டின் வேலைக்காரனாக இருப்பது எவ்வளவு மேலானது என்பது இவனுடைய எண்ணம். 


தன் தகப்பனுடைய வீட்டைவிட்டு பிரிந்து போன இளையகுமாரன், தன் தகப்பனுக்கும் அவனுடைய வீட்டிற்கும் ஒரு மகனாக இருந்து செய்ய வேண்டிய கடமைகளை செய்ய மறுத்துவிட்டு வீட்டைவிட்டு இவன் ஓடிப்போனான். ஆனால் இப்போதோ ஒரு சாதாரண கூலிக்காரனாக இருந்து தன் தகப்பனுடைய வீட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய ஆயத்தமாக இருக்கிறான்.  


இளைய குமாரனுடைய மனதில் இப்படிப்பட்ட எண்ணங்கள் பலவிதமாக உதித்தபோதிலும், அவனுடைய மனதில் தன் தகப்பனைக்குறித்த எண்ணம் தெளிவாக இருக்கிறது. குமாரனாகிய தன்னை ஒரு கூலிக்காரனாக நினைத்துப் பார்க்கிறான். அதே வேளையில் தன் தகப்பனை தன் தகப்பனாகத்தான் நினைக்கிறான். ""நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போவேன்'' என்று தான் அவன் தன் தகப்பனைப்பற்றி நினைக்கிறான். ""என் தகப்பனிடம் இவ்வாறு பேசுவேன்'' என்று தான் அவன் தன் தகப்பனைப்பற்றி நினைக்கிறான். பன்றி மேய்த்துக் கொண்டிருந்தாலும், இளையகுமாரனுக்கு புத்தி தெளிந்தபோது, ""தன் தகப்பன்'' அவனுக்கு தன் தகப்பனாகவே தெரிகிறான். 


நாமும் நம்முடைய எல்லா சூழ்நிலைகளிலும் நம்முடைய பரலோகத்தின் பிதாவை நினைத்துப் பார்க்கும்போது அவரை நம்முடைய பிதாவாகவே நோக்கிப் பார்க்கவேண்டும். நம் பிதாவாக அவரை அங்கீகரித்தால் மாத்திரமே, மனந்திரும்பி அவரிடத்தில் போகவேண்டும் என்னும் எண்ணம் நமக்குள் உருவாகும். கர்த்தரை நம்முடைய பிதாவாக நினைத்துப் பார்க்கும்போது, நம்முடைய மனந்திரும்புதல் மெய்யானதாக இருக்கும். நம்முடைய பிதாவாகிய தேவன் தம்முடைய கிருபையினால் நம்மை எப்படியும் மன்னித்துவிடுவார் என்னும் நம்பிக்கை நமக்குள் உண்டாகும். தம்முடைய பிள்ளைகள் தம்மை ""பிதாவே'' என்று அழைக்கும்போது தேவன் சந்தோஷப்படுகிறார். தம்மிடத்தில் வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் ஏறெடுகிறவர்களும், தம்மிடம் வந்து பாவஅறிக்கை செய்கிறவர்களும் தம்மை ""பிதாவே'' என்று அழைக்க வேண்டும் என்றே தேவன் விரும்புகிறார்.


இளையகுமாரனுடைய உள்ளத்தில் தன்னைப்பற்றியும், தன் தகப்பனைப்பற்றியும், தான் பேசவேண்டியதைப்பற்றியும் பலவிதமான எண்ணங்கள் தோன்றிற்று. இவன் சிந்தனை பண்ணினாலும், தொடர்ந்து சிந்தித்துக் கொண்டேயிருக்கவில்லை. தன்னுடைய சிந்தனைக்கு விரைவில் செயல்வடிவம் கொடுக்கிறான். நாமும் ஆவிக்குரிய காரியங்களை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதேவேளையில் ஏற்றவேளை வரும்போது நம்முடைய நடைமுறை ஜீவியத்திலும் அவற்றை செயல்படுத்த வேண்டும். சிந்தனையும் வேண்டும் சிந்தனைக்கு செயல்வடிவமும் கொடுக்கவேண்டும்.


இளையகுமாரன் தான் என்ன செய்யவேண்டுமென்று தன் மனதிற்குள் சிந்தித்த பின்பு ""எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்திற்கு வந்தான்''. தாமதமில்லாமல் தன் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கிறான். ஒரு இரும்பை அடித்து வளைக்கும்போது, அதை வளைப்பதற்கு பக்குவமாக இருக்கும்போதே இரும்பை வளைத்துவிட வேண்டும். காலம் தாமதப்படுத்தினால் இரும்பை வளைப்பது கடினமாக இருக்கும். வளைக்க முடியாமலும் போய்விடும். 


நம்முடைய பாவங்களைக்குறித்து நாம் மனம் வருத்தப்படும்போது, காலதாமதம் பண்ணாமல் தேவனுடைய சமுகத்திற்குச் சென்று நம்முடைய பாவங்களைக் குறித்து அறிக்கை செய்யவேண்டும். உடனடியாக எழுந்து புறப்படவேண்டும். நாம் எவ்வளவு களைப்பாக இருந்தாலும், நம்முடைய கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தாலும், இருதயத்தின் பாரம் அதிமாக இருந்தாலும் கர்த்தருடைய சமுகத்திற்குச் செல்ல காலதாமதம் பண்ணவேகூடாது. ஏனெனில் நம்முடைய ஆத்துமாவிற்கு ஆரோக்கியமும் பெலமும் தெம்பும் தேவனுடைய சமுகத்தில் மாத்திரமே நமக்குக் கிடைக்கும். தேவனுடைய சமுகத்திற்குப் போகவேண்டுமென்று நீண்டகாலமாக யோசித்துக் கொண்டிருப்பதினால் ஒரு பிரயோஜனமுமில்லை. நமக்கு பிரயோஜனம் உண்டாக தேவனுடைய சமுகத்திற்கு காலதாமதம் பண்ணாமல் போய்விடவேண்டும். 


தேவனுடைய சமுகத்திற்குப் போகும்போது நமக்கு பலவிதமான ஆச்சரியங்கள் அங்கு காத்திருக்கும். நம்முடைய சிந்தனை ஒருவிதமாக இருக்கும். அங்கு நடைபெறும் சம்பவம் வேறுவிதமாக இருக்கும். நம்முடைய எதிர்பார்ப்பு ஒருவிதமாக இருக்கும். ஆனால் தேவனுடைய கிரியையோ வேறுவிதமாக இருக்கும். நம்முடைய பாவங்களினிமித்தம் தேவன் நம்மை தண்டிப்பார் என்று எதிர்பார்த்து அவருடைய சமுகத்திற்குப் போவோம். ஆனால் தேவனோ நம்மை தண்டியாமல் தமது கிருபையை நம்மீது அளவில்லாமல் ஊற்றுவார். தேவன் நம்மை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வாரோ என்று சந்தேகத்தோடு போவோம். ஆனால் தேவனோ நம்மை அங்கீகரித்து தமக்கு அருகாமையில் வைத்துக்கொள்வார்.


இளையகுமாரனும் தன் மனதில் பலவிதமான சிந்தனைகளோடும் கேள்விகளோடும் தன் தகப்பனிடத்தில் வருகிறான். தன் தகப்பன் தன்னை ஏற்றுக்கொள்வாரோ என்னும் சந்தேகம் இவனுடைய உள்ளத்தில் இருந்தது. ஆனால் இவன் தகப்பனோ, இவன் தூரத்தில் வரும்போதே இவனைக் கண்டு, மனதுருகி ஓடி, இவன் கழுதைக்கட்டிக்கொண்டு, முத்தம் செய்கிறார்.

பிள்ளைகள் துன்மார்க்கராக இருந்தாலும், கீழ்ப்படியாமல் போனாலும், விவேகமில்லாமல் செயல்பட்டாலும் இவர்களுடைய பெற்றோர் இவர்கள்மீது அன்பாகவே இருக்கிறார்கள். பிள்ளைகள் பெற்றோரின் உறவை முறித்துக்கொண்டு போய்விட்டாலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள்மீது பாசமாகவே இருக்கிறார்கள். பிள்ளைகள் ஞானமில்லாமல் துன்மார்க்கமான காரியங்களைச் செய்தாலும், பெற்றோர் ஞானத்தோடு தங்கள் பிள்ளைகளை அன்பாய் சேர்த்துக்கொள்கிறார்கள். 


இளையகுமாரனுடைய தகப்பன் இவன்மீது அன்போடிருக்கிறார். இந்த உவமையில் சொல்லப்படும் இந்த தகப்பன். பிதாவாகிய தேவனுடைய அன்பை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறார். பாவிகள்மீது தேவன் கிருபையும் இரக்கமுள்ளவர். நாம் மனந்திரும்பி தேவனிடத்தில் திரும்பி வரும்போது நம்முடைய பாவங்களை மன்னிக்கவும், நம்மை மறுபடியும் தம்முடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளவும் தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார். 


தூரத்தில் வரும்போதே


எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான் (லூக் 15:20).

வீட்டுக்குத் திரும்பி வரும் இளைய குமாரனை அவனுடைய தகப்பன் மிகுந்த அன்போடும் பாசத்தோடும் ஏற்றுக்கொள்கிறார். அவன் தூரத்தில் வரும்போதே அவனுடைய தகப்பன் அவனை காண்கிறார். தான் மனந்திரும்பியதை இளையகுமாரன் அறிக்கை செய்வதற்கு முன்பாகவே அவனுடைய தகப்பன் அவனை மன்னித்து, அவன்மீது வைத்திருக்கும் தன்னுடைய அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துகிறார். நம்முடைய பிதாவாகிய தேவனும் நாம் விண்ணப்பம் பண்ணுவதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் முன்பாகவே நமக்கு பதில் கொடுக்கிறவர். நம்முடைய இருதயங்களை தேவன் ஆராய்ந்து அறிந்திருக்கிறார். 


இளையகுமாரனின் தகப்பனுடைய கண்கள் இரக்கம் நிறைந்தது. தன் மகன் தூரத்தில் வரும்போதே அவனை இரக்கம் நிறைந்த இந்தக் கண்கள் காண்கிறது. ஒவ்வொரு நாளும் தன்னுடைய மகனின் வருகைக்காக இந்தக் கண்கள் ஏங்கி தவித்துக்கொண்டிருக்கிறது. இளையகுமாரன் வீட்டைவிட்டு போன நாளிலிருந்து, ஒவ்வொரு நாளும் தன் மகன் வீட்டிற்குத் திரும்பி வரமாட்டானா என்று ஏக்கத்தோடு வழியேயே பார்த்துக் கொண்டிருக்கிறது. 


தன்னைவிட்டுப் பிரிந்துபோன இளையகுமாரன் எப்படியாவது வந்துவிடுவானென்று அவனுடைய தகப்பன் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார். அவனை மறுபடியும் காணும் சிலாக்கியம் தனக்குக் கிடைக்குமென்று நம்புகிறார். நம்முடைய தேவனும் நம்மீது கிருபையும் இரக்கமும் மிகுந்தவர். பாவிகள் மனந்திரும்பி தம்மிடத்தில் வரவேண்டுமென்று மிகுந்த ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார். மனந்திருந்தி நாம் பிதாவாகிய தேவனுடைய சமுகத்திற்கு முன்பாக போகும்போது அவர் நம்மை ஆவலோடு ஏற்றுக்கொள்கிறார். நம்முடைய மனம்திரும்புதலை நாம் அறிக்கை செய்வதற்கு முன்பாகவே நம்முடைய உள்ளத்தில் ஏற்பட்டிருக்கும் மனமாற்றத்தை தேவன் அறிந்திருக்கிறார். 


பிதாவாகிய தேவன் இரக்கம் மிகுந்தவர். நாம் மனந்திரும்பி வரமாட்டோமா என்று ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் மனதுருக்கம் மிகுந்தவர். மனதுருக்கத்தின் மூலமாகவே இரக்கம் வெளிப்படுகிறது. பாவிகள்படும் வேதனைகளைக்கூட பிதாவாகிய தேவன் கண்டு மனதுருகுகிறார். பாவிகளுக்கு கிடைக்கும் தண்டனையை தேவன் தமது மனதுருக்கத்தினால் தம்மீது ஏற்றுக்கொள்கிறார். 


தேவனுடைய கால்களும் இரக்கமுள்ளது. நாம் தேவனிடத்தில் வரும்போது அவர் ஓடிவந்து நம்மை சேர்த்துக்கொள்கிறார். இந்த உவமையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகப்பன், தூரத்தில் அவனுடைய மகன் வரும்போதே, அவனைக்கண்டு மனதுருகி ஓடுகிறார். மனந்திரும்பிய கெட்ட குமாரன் மெதுவாக நடந்து வருகிறான். வெட்கமும் பயமும் அவன்மீது பாரசுமையாக இருக்கிறது. அவனுடைய நடை தள்ளாடுகிறது. ஆனால் இரக்கமுள்ள தகப்பனோ அவனைச் சந்திப்பதற்கு ஓடிவருகிறார். அவர் ஓடிவருவதே அந்த மகனை உற்சாகப்படுத்துகிறது. 


பிதாவாகிய தேவனுடைய கரங்கள் கிருபையும் இரக்கமும் நிறைந்திருக்கிறது. நாம் தேவனிடத்தில் வரும்போது தமது கரத்தினால் அவர் நம்மை கட்டிக்கொள்கிறார். இந்த உவமையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகப்பன், தன் மகனைக்கண்டு மனதுருகி ஓடி அவன் கழுதைக்கட்டிக்கொள்கிறார். இளையகுமாரன் தவறு செய்தவன். அவன் ஒரு குற்றவாளி. தண்டிக்கப்படுவதற்கு பாத்திரவான். ஆனால் கிருபை மிகுந்த தகப்பனோ அவனை அடித்து தண்டிக்காமல் தன்னுடைய கரங்களில் ஏற்றுக்கொள்கிறார். அவனுடைய கழுத்தை கட்டிக்கொள்கிறார். தன்னுடைய மார்போடு சேர்த்து அணைத்துக்கொள்கிறார். தேவனிடத்தில் மெய்யாகவே மனந்திரும்பி வருகிறவர்களுக்கு தேவனுடைய அன்பு இதுபோல வெளிப்படும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம்மை அன்போடு அழைத்து தமது மார்போடு சேர்த்து அணைத்துக்கொள்வார்.


இளையகுமாரனின் தகப்பனுடைய கைகளும் கால்களும் கிருபையும் இரக்கமும் நிறைந்திருப்பதுபோல அவருடைய உதடுகளும் கிருபை நிறைந்ததாக இருக்கிறது. தன் குமாரனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனை முத்தம்செய்கிறார். இளையகுமாரன் வரவேற்கப்படுகிறான் என்பதை தகப்பனுடைய முத்தம் உறுதிபண்ணுகிறது. அத்தோடு தகப்பன் இளையகுமாரனை மன்னித்துவிட்டதையும் முத்திரைபண்ணுகிறது. அவனுடைய பழைய துன்மார்க்கமான ஜீவியங்கள் அனைத்தையும், பாவ பழக்கவழக்கங்கள் அனைத்தையும் கிருபை நிறைந்த தகப்பன் மன்னித்துவிடுகிறார். அவனுடைய பழைய வாழ்க்கையைப்பற்றி ஒரு வார்த்தைகூட பேசி அவனை கடிந்துகொள்ளாமல், தன் உதடுகளினால் அவனை முத்தம் செய்கிறார். 


மனந்திரும்ப வேண்டுமென்று தீர்மானம் பண்ணினால் மட்டும் போதாது. அதைச் செயலிலும் காண்பிக்க வேண்டும். உண்மையான மனந்திரும்புதல் நமது வார்த்தைகளிலும், கிரியைகளிலும் வெளிப்படும்.


இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தன்னை ஆதரிக்கும் தகப்பனிடம்தான் வரவேண்டும். இது நல்ல தீர்மானம். லூக்கா 15:20-24 ஆகிய வசனங்களில் தகப்பன் செய்த காரியங்களை நாம் வாசிக்கிறோம்.


    1. அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டான்.

    2. மனதுருகினான்

    3. அவனைச் சந்தித்து தன்னுடைய வீட்டிற்கு அழைப்பதற்காக ஓடினான்.

    4. அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

    5. தன் குமாரனின் பாவஅறிக்கையைக் கேட்டு அவனை மன்னித்தான்.

    6. உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, அவனுக்கு உடுத்தினான்.

    7. அவன் கைக்கு மோதிரத்தைப் போட்டான்.

    8. அவன் கால்களுக்குப் பாதரட்சைகளைப் போட்டான்.

    9. பெரிய விருந்தை ஆயத்தம்பண்ணினான்.

    10. சந்தோஷப்படத் தொடங்கினான்.


நான் பாவம் செய்தேன்


குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள் (லூக் 15:21,22).

இளையகுமாரன் தன் தகப்பனிடம் வந்து தான் செய்த பாவங்களையெல்லாம் அங்கீகரிக்கிறான். ""தகப்பனே.... பாவம் செய்தேன்'' என்று பாவஅறிக்கை செய்கிறான். இளையகுமாரன் தன்னுடைய பாவத்தை அறிக்கை செய்வதற்கு முன்பாகவே அவனுடைய தகப்பன் இவன்மீது தன்னுடைய அன்பை வெளிப்படுத்துகிறார். தகப்பனுடைய அன்பை பெற்றுக்கொண்ட பிறகு, இளையகுமாரனால் மௌனமாக இருக்க முடியவில்லை. இவனுடைய உள்ளத்தில் பாவ உணர்வு மிகவும் அதிகரிக்கிறது. தான் செய்த பாவத்தை தன் தகப்பனிடம் அறிக்கை செய்ய வேண்டுமென்று விரும்புகிறான். 

இதுவரையிலும் தன் தகப்பன் தன்னை ஏற்றுக்கொள்வாரோ என்னும் சந்தேகம் இவனுடைய உள்ளத்தில் இருந்தது. ஆனால் அந்த தகப்பனோ இவன்மீது அன்பை வெளிப்படுத்துகிறார். இவனைக் கட்டிஅணைத்து முத்தம் செய்கிறார். கடினவார்த்தைகளினால் திட்டுவதற்குப் பதிலாக இவனை ஆதரவாக அணைத்து முத்தம் பண்ணுகிறார். இந்த சூழ்நிலையில் இளையகுமாரன் தன் தகப்பனிடம் ""தகப்பனே நான் பாவம் செய்தேன்'' என்று அறிவிக்கிறான்.


கர்த்தருடைய சமுகத்தில் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருந்தாலும், நாம் எப்போதுமே தேவனுடைய கிருபையினால் மன்னிக்கப்பட்டிருக்கும் பாவிகள்தான் என்னும் உணர்வு நமக்குள் காணப்படவேண்டும். நம்முடைய மனந்திரும்புதல் உண்மையானதாகவும் நீடித்து நிலைப்பதாகவும் இருக்கவேண்டும். நம்முடைய இருதயத்தின் மனமாற்றம் மெய்யானதாக இருக்க வேண்டும். தேவன் நம்மை மன்னிப்பதற்கு ஆயத்தமாக இருக்கிறார். அவருடைய மன்னிக்கும் கிருபையை நாம் அதிகமாக தியானித்துப் பார்க்கும்போது, நம்மை நம்மாலாயே மன்னிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும். நம்முடைய உள்ளத்தின் குற்ற உணர்வு நம்மை வருத்தும்.


இளையகுமாரன் பன்றிகளை மேய்த்துக்கொண்டிருக்கும்போது, தன் தகப்பனிடத்தில் திரும்பி போகவேண்டுமென்றும், ""உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்'' என்று கேட்கவேண்டும் என்றும் தீர்மானம்பண்ணியிருந்தான். ஆனால் இவன் தன் தகப்பனிடத்தில் வந்தபின்பு, தகப்பன் இவனை கட்டி அணைத்து முத்தம் செய்த பின்பு, இளையகுமாரன் இந்த வாக்கியத்தை தன் தகப்பனிடம் சொல்ல தவறிவிடுகிறான். தான் சொல்ல வேண்டுமென்று தீர்மானம்பண்ணியிருந்ததை இப்போது சொல்லாமல் விட்டுவிடுகிறான். 


தன் தகப்பனுடைய அன்பைப் பார்த்து இளையகுமாரன் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. ""உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்'' என்று சொல்ல வேண்டும் என்னும் எண்ணம் இவனுடைய உள்ளத்தில் இருக்கிறது. ஆனால் இந்த வாக்கியத்தை இவன் பேசுவதற்கு முன்பாகவே, இவனுடைய தகப்பன் தன் அன்பை மிகவும் தெளிவாக வெளிப்படுத்துகிறார். அவனை அன்போடும் ஆதரவோடும் வரவேற்கிறார். தன் பிரியமுள்ள குமாரனாக இவனை அங்கீகரிக்கிறார். தன்னை ஒரு குமாரனாக அங்கீகரித்துவிட்ட தன் தகப்பனிடம், தன்னை ஒரு கூலிக்காரரில் ஒருவனாக வைத்துக்கொள்ளும் என்று கேட்பது இவனுக்கு அவசியமில்லாமல் போயிற்று. 


திரும்பி வந்த இளையகுமாரனை தகப்பன் ஒரு வார்த்தைகூட கடிந்து பேசவில்லை. அவன் செய்த தவறுக்கு அவனை கண்டிக்க வேண்டுமென்று சொல்லவில்லை. எந்த தண்டனையும் கொடுக்கவில்லை. அவனுடைய தவற்றைப்பற்றியே பேசவில்லை. ""தகப்பனே, நான் பாவம் செய்தேன்'' என்று இளையகுமாரன் அறிக்கை செய்தும், அவனுடைய தகப்பன் அதைப்பற்றி ஒன்றும் பேசவில்லை. 


நம்முடைய தேவன் நம்முடைய பாவங்களை மன்னிக்கும்போது, அவற்றை மன்னித்து மறந்துவிடுகிறார். தாம் மன்னித்த பாவங்களை தேவன் இனிமேல் நினைத்துப் பார்ப்பதில்லை. நம்முடைய பாவங்களை மன்னிப்பதோடு, நாம் எதிர்பாராத ஆசீர்வாதங்களையும் அவர் நமக்குத் தருகிறார். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, சாபங்கள் நம்மைவிட்டு நீங்கினாலே போதுமானது என்று நாம் நினைப்போம். ஆனால் தேவனோ நம்முடைய பாவங்களை மன்னித்து, சாபங்களை நீக்கி, நாம் எதிர்பாராத ஆசீர்வாதங்களையும் நமக்குத் தருகிறார்.


கெட்ட குமாரன் தன் தகப்பனிடம் திரும்பி வந்தபோது, அவர் தன்னை தம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக ஏற்றுக்கொண்டால் போதுமானது என்று எதிர்பார்த்துத்தான் வருகிறான். அவருடைய கூலிக்காரருக்கு கொடுக்கப்படும் வேலையைக்கொடுத்து, அவர்களோடு சாப்பிடக்கூடிய சிலாக்கியம் கிடைத்தாலே அது தனக்குப் போதுமானது என்று நினைத்துத்தான் இவன் தன் தகப்பனை தேடி வருகிறான். ஆனால் தகப்பனின் அன்போ மிகவும் பெரியது. இளையகுமாரன் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய விருந்தை அவனுக்கு ஆயத்தம்பண்ணுகிறார்.


நம்முடைய பிதாவாகிய தேவனும் தம்முடைய சமுகத்தில் மனந்திரும்பி இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும் விசுவாசிகள்மீது தம்முடைய இரக்கத்தையும் கிருபையையும் தாராளமாக வெளிப்படுத்துகிறார். நாம் வேண்டிக்கொள்வதற்கும் விண்ணப்பம் பண்ணுவதற்கும் அதிகமாக கொடுத்து நம்மை ஆசீர்வதிக்கிறார். இளையகுமாரன் தன் தகப்பனிடம் வந்தபோது அவனுடைய உள்ளத்தில் நம்பிக்கையும் பயமும் கலந்திருந்தது. தன் தகப்பன் தன்னை ஏற்றுக்கொள்ளாமல் விலக்கிவிடுவாரோ என்னும் பயம் அவனுடைய உள்ளத்தில் காணப்பட்டது. அதேவேளையில் ஒரேவேளை தன் தகப்பன் தன்னை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்வார் என்னும் விசுவாசமும் அவனுடைய உள்ளத்தில் இருந்தது.


ஆனால் அவனுடைய தகப்பன் அவன் பயந்ததுபோல தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தவில்லை. அவனை ஏற்றுக்கொள்ளாமல் துரத்திவிடவில்லை. அவன் பயந்ததுபோல அங்கு ஒன்றுமே நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக அவன் எதிர்பார்த்துபோல அவன் தகப்பன் அவனை ஏற்றுக்கொள்கிறார். தன்னை ஒரு கூலிக்காரரில் ஒருவனாக ஏற்றுக்கொள்வாரென்று இளையகுமாரன் எதிர்பார்த்தான். ஆனால் அந்த தகப்பனோ அவனை தனக்குப் பிரியமான குமாரனாக ஏற்றுக்கொள்கிறார். அவன் எதிர்பார்த்தற்கும் அதிகமாக இளையகுமாரனுக்கு நன்மை உண்டாயிற்று. 


இளையகுமாரன் தன் தகப்பனுடைய வீட்டிற்கு வரும்போது கந்தை துணிகளை அணிந்து வருகிறான். பன்றி மேய்த்தவனுக்கு இதைவிட நல்ல துணி கிடைக்காது. ஆனால் அவன் தகப்பனோ அவனுக்கு உயர்ந்த வஸ்திரத்தை உடுத்தச் சொல்வது மாத்திரமல்ல அவனை அழகுபடுத்தவும் செய்கிறார். ""தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி, நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக்கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள்'' என்று கூறுகிறார். இவனுடைய தகப்பன் இவனை கந்தை துணியில் பார்க்க பிரியப்படவில்லை. 


கந்தை துணிக்குப் பதிலாக துவைத்த துணியே போதுமானது. ஆனால் அவன் தகப்பனோ சாதாரணமாக துவைத்த துணியை தன் குமாரனுக்குப்போட பிரியப்படாமல் அவனுக்கு உயர்ந்த வஸ்திரத்தைக்கொண்டு வரச் சொல்கிறார். இது சாதாரண வஸ்திரமல்ல. அவன் தகப்பனிடத்திலுள்ள உயர்ந்த வஸ்திரம். இந்த வஸ்திரத்தை குமாரன் தானாக அணிந்து கொள்ளவேண்டியதில்லை. அவனுடைய ஊழியக்காரர் இந்தக் குமாரனுக்கு உயர்ந்த வஸ்திரத்தை அணிவிப்பார்கள். 


தகப்பனுடைய உயர்ந்த வஸ்திரம் அவருடைய அதிகாரத்திற்கும் அந்தஸ்திற்கும் அடையாளமாக இருக்கிறது. இதுவரையிலும் கந்தை துணியில் இருந்த இளையகுமாரன் இந்த உயர்ந்த வஸ்திரத்தை அணிவதற்கு வெட்கப்படலாம். இதை அணிய விருப்பமில்லாமல் தவிர்க்கலாம். பன்றிகளை மேய்த்த தனக்கு உயர்ந்த வஸ்திரம் தேவையில்லையென்று அதை ஒதுக்கலாம். ஆனால் அவனுடைய தகப்பனோ தன் குமாரனுக்கு உயர்ந்த வஸ்திரம் தேவை என்று தீர்மானம் பண்ணுகிறார். 


இதுவரையிலும் இளையகுமாரனுடைய கைகள் பன்றிகளை மேய்க்கும் கம்புகளைப் பிடித்துக்கொண்டிருந்தது. இவனுடைய விரல்களில் பன்றி தின்னும் தவிடும், பன்றிகளை விரட்டும் கம்பும் இருந்தது. ஆனால் அந்த விரல்களுக்கு மோதிரத்தை போடுமாறு தகப்பன் கூறுகிறார். தகப்பன் கொடுக்கும் மோதிரம் முத்திரை மோதிரமாகும். தன் குடும்பத்தில் இவனுக்கு குமாரனுக்குரிய அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த மோதிரம் உறுதிபண்ணுகிறது. தகப்பன் இளையகுமாரனை தன் குடும்பத்தில் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதை இந்த மோதிரம் எல்லோருக்கும் முன்பாக முத்திரை பதிக்கிறது. 


இளையகுமாரன் பன்றிகளை மேய்க்கும் வயல்வெளியிலிருந்து தன் தகப்பனிடத்திற்கு வரும்போது அவனுடைய கால்களில் பாதரட்சைகள் இல்லை. எல்லாவற்றையும் இழந்தவன் தன் பாதரட்சைகளையும் இழந்திருக்கிறான். வெறுங்கால்களால் நடந்து களைத்துப் போயிருக்கிறான். வெயிலிலும், காடுமேடான பகுதிகளிலும் நடந்து அவனுடைய கால்கள் நொந்துபோயிருக்கிறது. அந்தக் கால்களுக்கு பாதரட்சைகளைப் போடுமாறு அவனுடைய தகப்பன் கூறுகிறார்.


கர்த்தரிடத்தில் உண்மையாய் மனந்திரும்பி வருகிறவர்களுக்கு அவர் இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களையும் தெய்வீக பராமரிப்புக்களையும் கொடுப்பார். கிறிஸ்துவின் நீதி உயர்ந்த வஸ்திரமாக இருக்கிறது. நாம் மனந்திரும்பும்போது தேவன் நம்மை இரட்சிப்பின் வஸ்திரத்தினால் உடுத்துவிக்கிறார். இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையே தரித்துக்கொள்கிறார்கள். இவர்களுடைய பழைய சுபாவம் நீக்கப்பட்டு இவர்களுக்கு புதிய சுபாவம் கொடுக்கப்படுகிறது. கெட்ட குமாரனுக்கு கந்தை வஸ்திரம் அகற்றப்பட்டு அவனுக்கு உயர்ந்த வஸ்திரம் கொடுக்கப்பட்டதுபோல, இரட்சிக்கப்படுகிறவர்களும் கிறிஸ்துவின் நீதி என்னும் உயர்ந்த வஸ்திரத்தினால் அணிவிக்கப்படுகிறார்கள். 


மனந்திரும்பிய கெட்ட குமாரனின் கைக்கு மோதிரம் போடப்பட்டது. இந்த மோதிரம் தன் தகப்பனுடைய குடும்பத்தில் அங்கீகரிக்கப்பட்டு, அவருடைய ஆசீர்வாதங்களுக்கு இவனும் பாத்திரமானவன் என்பதற்கு அச்சாரமாகும். இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு தேவன் ஆவி என்னும் அச்சாரத்தைத் தருகிறார். இனிமேல் தேவன் நமக்குக் கொடுக்கப்போகும் பரிபூரணமான ஆசீர்வாதங்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் அச்சாரமாகும்.


இளையகுமாரன் தன் விரல்களில் மோதிரத்தைப் பார்க்கும்போதெல்லாம் தன் தகப்பனுடைய அன்பையும், இரக்கத்தையும், கிருபையையும் நினைவுகூருவான். தகப்பனின் அன்பை மறக்கமாட்டான். அதுபோலவே பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை அச்சாரமாக பெற்றிருக்கும் தேவனுடைய பிள்ளைகள், அவருடைய அன்பை மறந்துவிடக்கூடாது. எப்போதும் தேவஅன்பை நினைவுகூரவேண்டும்


பாதரட்சைகளைப்பற்றி அப்போஸ்தலர் பவுல் எழுதும்போது ""சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை'' (எபே 6:15) என்று எழுதுகிறார். கர்த்தருடைய பிள்ளைகள் இந்த பாதரட்சைகளை தங்களுடைய கால்களில் தொடுத்திருக்க வேண்டும். பாதரட்சையில்லாமல் வெறுங்கால்களால் நடக்கும்போது நமக்கு எந்த நேரத்தில் என்ன பாதிப்பு உண்டாகும் என்று நமக்குத் தெரியாது. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் நிச்சயமில்லாமல் நடந்து கொண்டிருப்போம். கால்களில் பாதரட்சை இருக்கும்போது கரடுமுரடான பாதைகளிலும், முட்களிலும், வெயிலிலும் நடக்கும்போது நமக்கு ஒரு பாதுகாப்பு உண்டு என்னும் நிச்சயம் நமக்குள் காணப்படும். சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சைகளை காலில் தொடுத்திருக்கும் விசுவாசிகள் கர்த்தர்மீது தங்கள் நம்பிக்கையை வைத்து சந்தோஷமாக முன்னேறிச் செல்லவேண்டும். நம்முடைய நடை ஸ்திரமாக இருக்க வேண்டும். 


அடிமையானவனுக்கு மோதிரம், பாதரட்சையும் கிடையாது. விடுதலையோடு வேலை செய்கிறவனுக்கே இவை கொடுக்கப்படும். பழங்காலத்தில் அடிமைகளின் பாதரட்சைகளை அகற்றி விடுவார்கள். (ஏசா 20:2) அவர்கள் விடுதலை பெறும்போது மறுபடியும் அவர்களுக்கு பாதரட்சைகளைக் கொடுப்பார்கள்.


இவன் மரித்தான்


கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள் (லூக் 15:23,24).


இளையகுமாரன் பன்றி தின்கிற தவிடுகூட கிடைக்காமல், மிகவும் பசியோடு தன் தகப்பனுடைய வீட்டிற்கு வருகிறான். அவன் தகப்பனோ இவனுக்கு பெரிய விருந்தை ஆயத்தம்பண்ணி போஜனம் கொடுக்கிறார். ""கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள். நாம் புசித்து சந்தோஷமாய் இருப்போம்'' என்று தகப்பன் சந்தோஷத்தில் கூறுகிறார். தன்னிடத்திலுள்ள கன்றுகளில் கொழுத்த கன்றை தன் மகனுக்கு கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறார். இளையகுமாரன் இப்படிப்பட்ட விருந்தை எதிர்பார்க்கவேயில்லை. சற்று நேரத்திற்கு முன்புதான் பன்றிகள் தின்கிற தவிட்டினால் தன் வயிற்றை நிரப்ப இவன் ஆசையாயிருந்தான். ஆனால் ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. இப்போதோ கொழுத்த கன்றை அடித்து இவனுக்கு விருந்து பரிமாறப்படுகிறது. இதுவே புது உடன்படிக்கையின் இரகசியம். 


நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு கர்த்தருடைய பிள்ளைகளாக நாம் மாறும்போது அவர் நம்மோடு புதிய உடன்படிக்கை பண்ணுகிறார். இதுவரையிலும் நம்முடைய பிரயாசங்களெல்லாம் வீணாக இருந்தாலும், இனிமேல் புதிய உடன்படிக்கையின் பிரகாரம் நம்முடைய பிரயாசங்கள் ஆசீர்வாதமாக மாறும். நம்முடைய தேவைகள் எல்லாவற்றையும் கர்த்தர் சந்திப்பார். பன்றிகளை மேய்க்கும்போது ""என் தகப்பனுடைய வீட்டில் கூலிக்காரர் எத்தனையோ பேருக்கு பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது'' என்று இளையகுமாரன் சிந்தித்துப் பார்த்தான். அவனுடைய வார்த்தை இப்போது மெய்யாயிற்று. கூலிக்காரருக்கு மாத்திரமல்ல கெட்ட குமாரனாகிய இவனுக்கும் பெரிய விருந்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறது. நம்முடைய பிதாவின் வீட்டில் நமக்குத் தேவையான ஆசீர்வாதங்களும், பிறருக்கு பகிர்ந்து கொடுக்கக்கூடிய அளவிற்கு மேலான ஆசீர்வாதங்களும் உண்டு. 


இளையகுமாரன் வீட்டிற்குத் திரும்பி வந்ததினால் அவன் தகப்பனுக்கு மிகப்பெரிய சந்தோஷம் உண்டாயிற்று. ஆகையினால் அவர் கொழுத்த கன்றை கொண்டு வந்து அடிக்குமாறு கூறுகிறார். பொதுவாக பெரிய விருந்து பரிமாறப்படும்போதுதான் இதுபோன்று கொழுத்த கன்று அடிக்கப்படும். பண்டிகை காலங்களில்தான் இதுபோன்று பெரிய விருந்து பரிமாறப்படும். இளையகுமாரன் மறுபடியும் வீட்டிற்கு வந்தது அவனுடைய தகப்பனுக்கு மிகப்பெரிய பண்டிகை காலத்து சந்தோஷம் போல இருக்கிறது. தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி ""நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்'' என்று கூறுகிறார். அவருடைய குமாரன் திரும்பி வந்திருக்கும் இந்த நாள் அவருக்கு மிகவும் சந்தோஷமான நாளாகும். தன் குமாரன் மரித்துப்போனான் என்றே இவர் நினைத்தார். மரித்துப்போன குமாரனுக்காக துக்கமாக இருப்பதுபோல அவர் இதுவரையிலும் அதிக துக்கத்தோடிருந்தார். ஆனால் இப்போதோ குமாரன் திரும்ப வந்திருப்பது, அவன் திரும்பவும் உயிர்ப்பெற்றதுபோல இவருடைய உள்ளத்தில் சந்தோஷத்தை உண்டுபண்ணிற்று. இளையகுமாரன் இதுவரையிலும் காணாமல் போனவனாகவும், இப்போது திரும்பவும் காணப்பட்டவனாகவும் இருக்கிறான்.  


ஒரு ஆத்துமா பாவத்திலிருந்து விடுதலைபெற்று தேவனிடத்தில் திரும்பி வரும் அனுபவம், மரித்த ஆத்துமா ƒதிரும்பவும் உயிர்ப்பெற்றதற்கு சமமாகும். மரித்த நிலமையிலிருந்து தேவனே அந்த ஆத்துமாவை மறுபடியும் உயிர்பெறச் செய்கிறார். தேவனுடைய சமுகத்தைவிட்டு காணாமற்போன ஆத்துமாவை தேவன் மறுபடியும் கண்டுபிடிக்கிறார். இந்த மாற்றம் மிகப்பெரியது. அற்புதமானது. சந்தோஷமானது


பாவிகள் மனந்திரும்பும்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும். பரலோகத்தின் தேவன் இதைப்பார்த்து மிகுந்த சந்தோஷமடைவார். பாவிகள் மனந்திரும்பும்போது தேவனுடைய குடும்பத்தில் அங்கத்தினார்களாக இருக்கிறவர்கள் எல்லோருமே ஒன்று சேர்ந்து சந்தோஷப்பட வேண்டும். பரலோகம் சந்தோஷப்படும்போது, பூமியிலுள்ள நாமும் சந்தோஷப்பட வேண்டும். 


இளையகுமாரன் திரும்பி வந்தபோது அவனுடைய தகப்பன் இந்த சந்தோஷத்தை துவக்குகிறார். தகப்பனிடத்தில் சந்தோஷம் ஆரம்பமாகும்போது, அந்த சந்தோஷம் அவருடைய வீட்டிலுள்ள எல்லோரையும் சந்தோஷப்பட வைக்கிறது. தகப்பன் சந்தோஷப்படும்போது, அவருடைய ஊழியக்காரர்கள் எல்லோரும் அப்படியே சந்தோஷப்படுகிறார்கள். 


குடும்பத்திலுள்ள அங்கத்தினர்கள் எல்லோரும் குடும்பத்தின் தலைவரையே சார்ந்திருப்பார்கள். குடும்பத்தலைவன் வருத்தமாக இருந்தால் குடும்பத்திலுள்ள எல்லோருமே வருத்தப்படுவார்கள். குடும்பத்தலைவன் சந்தோஷமாக இருந்தால் எல்லோருமே சந்தோஷப்படுவார்கள். இங்கு இளையகுமாரன் திரும்பி வந்ததைப் பார்த்து அவனுடைய தகப்பன் சந்தோஷப்படுகிறார். அப்போது அவருடைய வீட்டிலுள்ள எல்லோருமே சந்தோஷப்படத் தொடங்குகிறார்கள். தேவனுடைய பிள்ளைகளாகிய நம்மிடத்திலும் இப்படிப்பட்ட மனப்பக்குவம் காணப்படவேண்டும். கர்த்தர் சந்தோஷப்படும் காரியங்களில், கர்த்தருடைய பிள்ளைகளும், அவருடைய ஊழியக்காரர்களும் சந்தோஷப்பட வேண்டும். 


மூத்த குமாரன்


அவனுடைய மூத்தகுமாரன் வய-ருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு; ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான். அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான் (லூக் 15:25-28).


கெட்ட குமாரனைப்பற்றிய உவமையில், மூத்த குமாரன் கோபப்படுகிறவனாகவும் பொறாமை நிறைந்தவனாகவும் காணப்படுகிறான். இவன் பரிசேயருக்கும் வேதபாரகருக்கும் ஒப்புமையாக கூறப்பட்டிருக்கிறான். இளையகுமாரன் வீட்டிற்குத் திரும்பி வரும்போது அங்கு பெரிய விருந்து நடைபெறுகிறது. இதைப்பார்த்து மூத்த குமாரன் பொறாமைப்பட வேண்டியதில்லை. 


கோபப்பட வேண்டியதில்லை. ஏனெனில் இந்தக் குடும்பத்தில் மூத்த குமாரன் மூத்தகுமாரனாகவே அங்கீகரிக்கப்படுகிறான். மூத்த குமாரனுக்குரிய சிலாக்கியத்தை இளைய குமாரன் பறித்துக்கொள்ளவில்லை. 


இயேசுகிறிஸ்து பல சமயங்களில் பரிசேயரையும் வேதபாரகரையும் கடிந்துகொள்கிறார். அதே வேளையில் இயேசு அவர்களை முற்றிலுமாக ஒதுக்கி தள்ளிவிடவில்லை. ஆயக்காரர்மீதும், பாவிகள்மீதும் அவர்களும் அன்புள்ளவர்களாக இருக்கவேண்டும். அவர்களை வெறுத்து ஒதுக்கிவிடக்கூடாது. தேவனுடைய ஆசீர்வாதங்களை அவர்கள் பெறுவதற்கு இவர்கள் தடையாக இருக்கக்கூடாது. 


இந்த உவமையில் மூத்த குமாரன் நல்லவனாகவே இருக்கிறான். இவன் வீட்டைவிட்டு பிரிந்துபோய்விடவில்லை. துன்மார்க்கமாக ஜீவிக்கவில்லை. ஆகையினால் இவன் இளையகுமாரனைப்போல மனந்திரும்புவதற்கு அவசியமில்லாதவன் போல இருக்கிறான். இவனைப்பார்த்து இவனுடைய தகப்பன் ""மகனே நீ எப்பொழுதும் என்னோடிருக்கிறாய்'' என்று கூறுகிறார். 


இளையகுமாரனுக்கு வீட்டில் விருந்து உபசரிப்போடு வரவேற்பு நடக்கும்போது மூத்தகுமாரன் புத்தியீனமாகவும் கோபமாகவும் நடந்துகொள்கிறான். இந்த விருந்தில் மூத்த குமாரன் பிரியப்படவில்லை. இளையகுமாரன் வீட்டிற்கு வரும்போது மூத்த குமாரன் வயலில் இருக்கிறான். வயலிலிருந்து இவன் வீட்டிற்குத் திரும்பி வரும்போது, வீட்டில் விருந்து ஆரம்பமாயிற்று. அவன் திரும்பி வீட்டிற்கு சமீபமாய் வருகிறபோது கீதவாத்தியத்தையும் நடனகளிப்பையும் கேட்கிறான். ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து ""இது என்ன'' என்று கேட்கிறான். இளையகுமாரன் வீட்டிற்குத் திரும்பி வந்ததையும், அவன் சுதந்தரத்துடனே தன் தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினால், கொழுத்த கன்று அடிக்கப்பட்டு விருந்து நடைபெறுகிறது என்றும் ஊழியக்காரன் அறிவிக்கிறான்.


இளையகுமாரன் மறுபடியும் சுதந்தரத்துடனே வந்து சேர்ந்தான் என்று தமிழ்மொழியில் எழுதப்பட்டிருக்கும் வாக்கியமானது ""அவன் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வந்து சேர்ந்தான்'' என்று பொருள்படுமாறு கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. இளையகுமாரன் தன் சரீரத்திலும் சிந்தையிலும் ஆரோக்கியத்தோடு வந்திருக்கிறான். 


தகப்பன் இளையகுமாரனை ஏற்றுக்கொள்ளும்போது அவனுடைய சரீர ஆரோக்கியம் பழுதில்லாமல் நன்றாக உள்ளது. அதே வேளையில் அவன் புத்தி தெளிந்தவனாக மனந்திரும்பி வந்திருக்கிறான். அவனுடைய பழைய தீய சுபாவங்களெல்லாம் அவனைவிட்டுப் போயிற்று. இளையகுமாரன் புத்தி தெளிந்து ஆரோக்கியமாக வந்தபடியினால் இந்த விருந்து நடைபெறுகிறது. ஊழியக்காரன் இப்படிச் சொன்னவுடன் மூத்த குமாரன் கோபமடைகிறான். வீட்டிற்குள்ளே போக மனதில்லாதவனாக இருக்கிறான். இளையகுமாரனை வீட்டிற்குள் சேர்த்துக்கொள்ளாமல் அவனை திரும்ப வெளியே அனுப்பிவிடவேண்டும் என்று மூத்த குமாரன் எதிர்பார்க்கிறான். அவனோடு எந்தவிதமான உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது மூத்த குமாரனின் விருப்பம். 


இளைய குமாரனின் சுபாவங்கள்       


1. புத்தி குறைந்திருந்தது - விளைவுகள் (லூக்கா 15:12-16)

    2. மனந்திரும்புவதும், தாழ்மையும் (லூக்கா 15:17-19)

    3. வீட்டிற்குத் திரும்பி வருவதும், ஏற்றுக் கொள்ளப்படுவதும் (லூக்கா 15:20)

    4. தந்தையின் மனதுருக்கம் (லூக்கா 15:20)

    5. தந்தையிடம் பாவஅறிக்கை செய்வதும் அவனுடைய தாழ்மைக்கு எடுத்துக்காட்டும். (லூக்கா 15:21)

    6. தந்தையின் வெகுமதிகள் (லூக்கா 15:22-23)

    7. காரணம் (லூக்கா 15:24)


மூத்தகுமாரனின் சுபாவங்கள்            


    1. புத்தி குறைந்திருந்தது - விளைவுகள் (லூக்கா 15:25-28)

    2. கோபம் (லூக்கா 15:28)

    3. தந்தையின் சமாதான வார்த்தை (லூக்கா 15:28)

    4. தன்னைப் பற்றி உயர்த்திக் கூறுதல் (லூக்கா 15:29)

    5. தன் தந்தையையும், சகோதரனையும் குறைகூறுதல் (லூக்கா 15:29-30)

    6. தந்தையின் வெகுமதிகள் (லூக்கா 15:31-32)

    7. காரணங்கள் (லூக்கா 15:32)


மூத்த குமாரனுக்கும், பரிசேயருக்கும் இடையே காணப்படும் ஒப்புமைகள்


    1. இருவரும் முறுமுறுத்தார்கள் (லூக்கா 15:2,29-30)

    2. பாவிகள்மீது இருவரும் பொறாமையோடு இருந்தார்கள் (லூக்கா 15:2,30).

    3. பாவிகள்மீது இருவருக்கும் அன்பில்லை (லூக்கா 15:2,27-32).

    4. இருவரும் பாவிகள் மன்னிப்பு பெறுவதில் மனதில்லாமல் இருந்தார்கள் (லூக்கா 15:2,28).

    5. பாவிகள் ஆசீர்வதிக்கப்படுவதை இருவரும் கண்டார்கள் (லூக்கா 15:1-2,25-27).

    6. நடைபெற்றுக் கொண்டிருக்கும் காரியங்களை இருவரும்புரிந்து கொள்ளவில்லை (லூக்கா 15:1-2,26).

    7. இருவரும் கோபமடைந்தார்கள் (லூக்கா 15:2,28).

    8. இருவருக்கும் விளக்கம் கூறப்பட்டது (லூக்கா 15:3-7,28).

    9. இருவரும் தங்கள் செயல்களை நியாயமானதாக விவாதம் பண்ணினார்கள் (லூக்கா 15:7,29-30).

    10. பாவிகளை ஆசீர்வதிக்கக்கூடாது என்று இருவரும் எதிர்பார்த்தார்கள் (லூக்கா 15:2,28-32).

    11. பாவிகள்மீது இருவருக்கும் அன்பில்லை. (லூக்கா 15:2,28-32).

    12. இருவரும் தங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று விரும்பினார்கள் (லூக்கா 15:29; லூக்கா 18:9-14).

    13. இருவரும் சுயநீதியுடையவர்கள் (லூக்கா 15:29; மத் 23:28).

    14. இருவரும் பிரமாணங்களைக் கடைப்பிடிப்பதாகக் கூறினார்கள். (லூக்கா 15:29; லூக்கா 18:9-14; மத் 23:3).

    15. இருவரும் குற்றம் கண்டுபிடித்தார்கள். (லூக்கா 15:2,29).


பாகம் 2 ஐ படிக்க இங்கே கிளிக் செய்யவும்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.