கோதுமையும் களைகளும் (மத் 13:24-30).
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார் (மத் 13:24-30).
பரலோக ராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. அந்த நிலத்தில் சத்துரு வந்து கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டு போய்விட்டான். களைகளை யார் விதைத்தது என்று எளிதில் கண்டுபிடிக்க முடியாது. சாத்தான் பல அக்கிரம செய்கைகளை செய்வான். ஆனால் இந்த அக்கிரமங்களை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தந்திரமாக செய்வான்.
சத்துரு களைகளை விதைத்துவிட்டு இந்த இடத்தைவிட்டு போய்விடுகிறான். விதைக்கப்பட்ட களைகளோ தானாக வளர்ந்து கோதுமை பயிர்களுக்கு இடையூறாக உள்ளது. களையை வளர்க்க வேண்டிய அவசியமில்லை. அது தானாக வளர்ந்துவிடும். நல்ல விதையையோ விதைக்கவேண்டும், பராமரிக்கவேண்டும், தண்ணீர் பாய்ச்சவேண்டும் அப்போதுதான் நல்ல விதையானது வளரும். நல்ல விதையை பராமரிக்கவில்லையென்றால் அது வளராது.
பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டது. மனுஷருடைய உள்ளங்களில் துன்மார்க்கம் ரகசியமாக இடம்பெற்றிருக்கிறது. ஏதாவது ஒரு போர்வையில் பாவம் உள்ளத்தில் மறைந்திருக்கும். சமயம் வரும்போது ஒளிந்திருக்கும் பாவம் வெளிப்படும். சோதிக்கப்படும்போது நல்லவர் யார், தீயவர் யார் என்பது தெரியவரும்.
நியாயத்தீர்ப்பு நாளின்போது நீதிமான்களுக்கும் துன்மார்க்கருக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் தெளிவாக தெரியும். நியாயத்தீர்ப்பு நாளில் பாவத்தை மாய்மாலமாக மூடி மறைக்க முடியாது. அந்த நாளில் எது கோதுமை என்றும், எது களை என்றும் நாம் தெளிவாக அடையாளம் காணலாம்.
நிலத்தில் கோதுமை பயிர்களும் களைகளும் சேர்ந்து வளர்கிறது. இதை வேலைக்காரர் வந்து பார்க்கிறார்கள். தங்கள் எஜமானிடம் இதை பற்றி கூறுகிறார்கள். எஜமான் தனது நிலத்தில் நல்ல விதையைத்தான் விதைத்தார். ஆனால் அதில் எப்படியோ களை உண்டாயிற்று.
இயேசுகிறிஸ்துவும் மனுஷருடைய உள்ளத்தில் நல்ல விதையைத்தான் விதைக்கிறார். ஆனால் மனுஷருடைய ஜீவியத்தில் தீய சுபாவமும் வெளிப்படுகிறது. இந்த தீய சுபாவம் எப்படி உண்டானது என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. கர்த்தருடைய தோட்டத்தில் இதுபோன்ற களைகளை காண்பது பரிதாபமானது. நல்ல நிலம் பாழ்படுத்தப்படுகிறது. நல்ல விதை நெருக்கப்படுகிறது. நல்ல நிலத்தில் களைகள் முளைக்கும்போது கிறிஸ்துவின் நாமமும் மகிமையும் தூஷிக்கப்படுகிறது.
வேலைக்காரருக்கு களைகள் எப்படி உண்டானது என்று தெரியவில்லை. ஆனால் எஜமானுக்கு களைகள் உண்டானதன் இரகசியம் தெரிகிறது. ""சத்துரு அதை செய்தான்'' என்று எஜமான் கூறுகிறார். களைகள் முளைத்ததற்கு வேலைக்காரரை எஜமான் குற்றப்படுத்தவில்லை. வேலைக்காரரால் இந்த விஷயத்தில் ஒன்றும் செய்யமுடியாது.
இதுபோலவே கிறிஸ்துவின் ஊழியக்காரர்களும் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்கள் விசுவாசத்தோடும் உண்மையோடும் ஆர்வமாக ஊழியம் செய்கிறார்கள். ஆனால் ஜனங்கள் மத்தியில் துன்மார்க்கம் நிறைந்திருக்கிறது. இதற்கு ஊழியக்காரர்களை குறை கூறமுடியாது. நல்லவர்கள் மத்தியில் மாய்மாலக்காரரும் இருக்கிறார்கள். சபை என்னும் நல்ல நிலத்தில் நல்லோரும் தீயோரும் கலந்து இருக்கிறார்கள்.
கர்த்தர் நமக்கு கொடுக்கும் ஊழியத்தை உண்மையோடு செய்யவேண்டும். வேலைக்காரர்கள் களைகளை பார்த்தபோது அவற்றை உடனே பிடிங்கிப்போட வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆனால் எஜமானோ மிகவும் ஞானமாகவும் கிருபையாகவும் பதில் கூறுகிறார். வேலைக்காரர்களுடைய விருப்பத்தை வேண்டாமென்று கூறி தடுத்துவிடுகிறார். ""வேண்டாம், களைகளை பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையும்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு இரண்டையும் அறுப்பு மட்டும் வளரவிடுங்கள்'' என்று கூறுகிறார்.
ஆரம்பகாலத்தில் கோதுமைக்கும் களைக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை அடையாளம் காண்பது கடினம். ஆயினும் அறுவடையின்போது இவ்விரண்டையும் எளிதாக வேறுபிரித்துவிடலாம். இதுபோலத்தான் சபைகளில் பக்தியுள்ளவர்களும், துன்மார்க்கரும் இருக்கிறார்கள். இவர்களை ஆரம்பத்தில் வேறுபிரித்து காண்பது சிரமம். நியாயத்தீர்ப்பு நாளில் நல்லவர் யார், துன்மார்க்கர் யார் என்பது ஒளிவு மறைவில்லாமல் தெளிவாக வெளிவரும். கோதுமையும் களையும் தோற்றத்தில் ஒன்றுபோல் இருப்பதால் களைகளை பிடுங்குவதற்குப் பதிலாக கோதுமையை பிடுங்குவதற்கு வாய்ப்புள்ளது.
சபையில் நீதிமான்களோடு துன்மார்க்கரும் சேர்ந்திருக்கும்போது, உடனே இருவரையும் வேறுபிரித்து, துன்மார்க்கரை வெளியேற்றிவிடக்கூடாது. பாவிகள்மீது பொறுமையாகவும் கிருபையாகவும் இருக்கவேண்டும். கர்த்தருடைய இரட்சிக்கும் கிருபையினால் பாவிகள் மனந்திரும்பி இரட்சிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. அந்த நாளுக்காக சகவிசுவாசிகளும், ஊழியக்காரர்களும் பாவிகள்மீது நீடிய பொறுமையோடு காத்துக்கொண்டிருக்க வேண்டும்.
கிழக்கு தேசங்களில் இப்பேர்ப்பட்ட பழக்கம் உள்ளது. ஒருவர் வயலில் நன்றாக விதை விதைத்திருக்கும்போது அவனுடைய விரோதியானவன் இரவு வேளையிலே அவனுடைய நிலத்தில் களைகளை விதைத்துவிட்டுப் போய்விடுவான். நல்ல பயிர் வளரும்போது களைகள் அதிகமாக வளர்ந்து, நிலத்தைப் பாழாக்கிவிடும். நல்ல பயிர்களையும் வளரவிடாது. இவ்வாறு பாழாக்கப்பட்ட நிலத்தைத் திருத்துவதற்கு பல வருஷங்கள் ஆகும்.
களைகளை விதைத்த சத்துருவிற்குத் தான் விதைத்த களை முளைக்குமா என்னும் சந்தேகமே அவனுடைய உள்ளத்தில் இல்லை. களைகள் நிச்சயமாக முளைக்கும். நிலம் பாழாகும் என்று தன்னுடைய துர்க்கிரியைக் குறித்து நம்பிக்கையோடே போனான். சத்திய வசனம் என்னும் நல்ல விதையை விதைக்கும் நமக்கும் நாம் விதைத்த விதை முளைக்கும் என்னும் நம்பிக்கை நம்முடைய இருதயங்களில் உறுதியுடன் இருக்க வேண்டும்.
கோதுமையும், களையும் சேர்ந்தே வளரும். காலத்தின் முடிவு வரையிலும் நீதிமான்களும், துன்மார்க்கரும் இந்த உலகத்தில் சேர்ந்தேயிருப்பார்கள். பின்பு இருவரும் பிரிக்கப்படுவார்கள்