உவமைகள் ஆய்வு கட்டுரை : கடுகு விதை
மத் 13:31,32 கடுகு விதைக்கு ஒப்பான பரலோகராஜ்யம்
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொள்ளார் பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது சகல் விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல் பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார் (மத் 13:31,32).
சுவிசேஷத்தின் ஆரம்பம் சிறியதாக இருக்கும். முடிவு பெரியதாக இருக்கும். இதே சுவிசேஷம் பின்பு வளர்ந்து பெரியதாகும். கடுகு விதை அளவில் சிறியது. அதுபோலவே சுவிக்ஷேஷமும் ஆரம்பத்தில் சிறியதாகவும் பலவீனமாகவும் இருக்கிறது. சுவிசேஷத்தின் வெளிச்சம் அதிகாலையின் வெளிச்சத்தைப்போல இருக்கும். புதிய விசுவாசிகள் ஆட்டுக்குட்டிகளைப்போல இருப்பார்கள். இவர்களை தேவன் தமது கரங்களில் தூக்கி சுமப்பார். கர்த்தர் மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளை தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியில் சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார் (ஏசா 40:11).
கடுகுவிதை சிறியதாக இருந்தாலும் அது முளைத்து பெரியதாக வளர்கிறது. கடுகு அளவில் சிறியதாக இருந்தாலும், அளவில் அது விதையாக இருப்பதினால், வளர்வதற்குரிய ஆற்றல் அதற்குள் அடங்கியிருக்கிறது. அதுபோல புதிய விசுவாசிகள் தேவனுடைய ராஜ்யத்தில் சாதாரணமானவர்களாக இருந்தாலும், அவர்களுக்குள்ளும் தேவனுடைய கிருபை உறுதிபண்ணப்பட்டிருக்கிறது. வேதவாக்கியமும் விசுவாசமும் அவர்களுடைய உள்ளத்தில் ஆழமாக பதிந்துள்ளது. ஒரு சிறிய விதை வளர்வதுபோல அவர்களிடத்தில் காணப்படும் விசுவாசமும் அன்பும் வளர்கிறது.
விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் வளர்ந்து பெரியவர்களாகும்போது அவர்கள் விசுவாச வீரர்களாகவும், மற்றவர்களுக்கு பிரயோஜனமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். கடுகு விதை வளர்ந்து கிளைகள் உள்ள மரமாகும். சடையானது கிளைகள் உள்ள மரத்தைப்போல் வளரும். கடுகு மரத்தில் ஆகாயத்துப்பறவைகள் வந்து அடையும். அதுபோல தேவனுடைய சபையில் ஜனங்கள் வந்து வாசம்பண்ணுவார்கள். தேவஜனத்திற்கு தேவையான ஆவிக்குரிய போஜனமும், தெய்வீக ஆரோக்கியமும், மெய்யான சந்தோஷமும், சமாதானமும் சபையில் தாராளமாக கிடைக்கும்.
விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சி பெறும்போது அவர்கள் மற்றவர்களுக்கும் பயனுள்ளவர்களாக இருக்கவேண்டும். கடுகுவிதை வளர்ந்து மரமாகி ஆகாயத்துப்பறவைகளுக்கு பயனுள்ளதாயிற்று. அதுபோலவே வளர்ந்த விசுவாசிகள் மற்ற விசுவாசிகளுக்கும், சபைக்கு வரவேண்டிய மற்ற ஜனங்களுக்கும் பிரயோஜனமாக இருக்கவேண்டும்.
மாற்கு 4:30-32 கடுகுவிதை
பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்? அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல் விதைகளிலும் சிறிதாயிருக்கிறது; விதைக்கப்பட்டபிள்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார் (மாற்கு 4:30-32).
தேவனுடைய கிருபையின் கிரியை ஆரம்பத்தில் சிறிய அளவில் இருக்கும். முடிவில் பரிபூரணமாக இருக்கும். தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம் என்று இயேசுகிறிஸ்து கேட்கிறார். அதை எந்த உவமையினால் திருஷ்டாந்தப்படுத்துவோம் என்று இயேசு மேலும் ஒரு கேள்வியைக் கேட்கிறார். தேவனுடைய ராஜ்யம் ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது. இதற்கு முன்பு இயேசுகிறிஸ்து தேவனுடைய ராஜ்யத்தை விதைக்கப்பட்ட ஒரு விதைக்கு ஒப்பிட்டுக் கூறினார். இப்போதோ தேவனுடைய ராஜ்யம் விதைக்கப்படுவதற்கு முன்பாக இருக்கும் ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாகயிருப்பதாக கூறுகிறார்.
சுவிசேஷத்தின் ராஜ்யம் ஆரம்பத்தில் சிறியதாக இருக்கும். கடுகுவிதை பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியதாக இருப்பதைப்போல சுவிசேஷத்தின் ராஜ்யமும் ஆரம்பத்தில் சிறியதாகவே இருக்கிறது. ஆத்துமாவில் தேவனுடைய கிருபை கிரியை நடப்பிக்கும்போது அது ஒரு சிறிய ஆரம்பத்தின் நாளாகவே இருக்கிறது. மனுஷனுடைய கையளவு மேகத்தைப்போல தேவனுடைய கிருபை ஆரம்பத்தில் சிறிதாகவே இருக்கும். கையளவு மேகம் பெருமழையாக மாறுவதுபோல, சிறிதளவு கிருபையே பின்பு நிறைவான கிருபையாக மாறுகிறது. பெரிய காரியங்களெல்லாம் ஆரம்பத்தில் சிறியதாகவே இருக்கும். சிறியதே வளர்ந்து பெரிதாகும். அப்போஸ்தலருடைய ஊழியமும் ஆரம்பத்தில் சிறியதாகவே இருந்தது. அதன்பின்பு அவர்கள் உலகத்தை கலக்கும் அளவிற்கு பெரிய ஊழியத்தை செய்தார்கள்.
கடுகுவிதை விதைக்கப்பட்ட பின்பு அது வளர்ந்து சகல பூண்டுகளிலும் பெரிதாகும். இது ஒரு பரிபூரண வளர்ச்சி. பரிபூரணம் ஒரு ஆசீர்வாதம். ஒரு காரியத்தை ஆரம்பத்தில் பார்ப்பதைவிட, அதன் பரிபூரணத்தில் பார்க்கும்போது அது நேர்த்தியாக இருக்கும். கடுகுவிதை பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியதாக இருந்தாலும், அது விதைக்கப்பட்ட பின்பு வளர்ந்து சகல பூண்டுகளிலும் பெரிதாகிறது. சுவிசேஷத்தின் ராஜ்யமும் ஆரம்பத்தில் இந்த பூமியில் சிறிய அளவில் ஸ்தாபிக்கப்பட்டது. அது வளர்ந்து பெரிதாகி தற்போது பூமியிலுள்ள எல்லா தேசங்களிலும் பரந்திருக்கிறது.
கடுகு விதைக்கும் வளர்ந்து பெரிதான பூண்டுக்கும் பெரிய வித்தியாசமுண்டு. இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. அதுபோலவே இந்த பூமியிலுள்ள புதிய விசுவாசிகளுக்கும் பரலோகத்திலுள்ள மகிமையடைந்த பரிசுத்தவான்களுக்கும் இடையில் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. புதிய விசுவாசி ஆரம்பத்தில் கடுகுவிதையைப்போல இருக்கிறார். அந்த விதை விதைக்கப்பட்டு வளர்ந்து பெரிய பூண்டாக வளர்வது போல, புதிய விசுவாசியின் உள்ளத்தில் சுவிசேஷம் விதைக்கப்பட்டு, அவர் பரலோகத்தில் மகிமையடைந்த பரிசுத்தவானாக வளர்ச்சி பெறுகிறார்.
லூக் 13:18,19 கடுகுவிதை
அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்? அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமாயிற்று; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார் (லூக் 13:18,19)
இயேசுகிறிஸ்து தேவனுடைய ராஜ்யத்தை இரண்டு உவமைகளினால் விளக்கிக் கூறுகிறார். சுவிசேஷம் பிரபல்யமாவதன் ஸ்தாபிக்கப்படுகிறது. மூலமாக தேவனுடைய ராஜ்யம் உவமை மத்தேயு எழுதின சுவிசேஷத்திலும் விவரிக்கப்பட்டிருக்கிறது (மத் 13:31-33). தேவனுடைய ராஜ்யம் எதற்கு ஒப்பாயிருக்கிறது என்பதை இயேசுகிறிஸ்து இங்கு உவமையினால் விவரித்துக் கூறுகிறார்.
தேவனுடைய ராஜ்யம் இவ்வாறுதான் இருக்குமென்று ஜனங்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்து தேவனுடைய ராஜ்யத்திற்கு கூறும் விளக்கமோ அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. தேவனுடைய ராஜ்யம் பெரிதாக தோன்றும் என்றும் ஆரம்பமே ஆடம்பரமாகவும் அற்புதமாகவும் இருக்குமென்றும் ஜனங்கள் எதிர்பார்க்கிறார்கள். தேவனுடைய ராஜ்யம் வரும்போது அது திடீரென்று பூரண வடிவம் பெற்று வரும் என்பது ஜனங்களுடைய பொதுவான நம்பிக்கை.
இயேசுகிறிஸ்துவோ தேவனுடைய ராஜ்யத்தை கடுகுவிதைக்கு ஒப்பாக கூறுகிறார். கடுகுவிதை மிகவும் சிறியது. தேவனுடைய ராஜ்யம் ஆரம்பத்தில் கடுகுவிதையைப்போல சிறியதாகத்தான் இருக்கும். ஆனால் அது வளர்ந்து பெரிய மரமாகும்போது ஆகாத்துப் பறவைகள்கூட அதன் கிளைகளில் வந்து அடையும். கடுகுவிதை சிறியதாக இருந்தாலும் அது பெரிதாக வளரும் வல்லமை அதற்குள் இருக்கிறது. ஜனங்களோ தேவனுடைய ராஜ்யம் ஆரம்பத்திலேயே பெரியதாக இருக்குமென்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ அது ஆரம்பத்தில் கடுகுவிதையைப்போல சிறியதாக இருக்குமென்று கூறுகிறார்.