விதைக்கிறவனைப்பற்றிய உவமை மத்தேயு 13:3-8 ; மாற்கு 4:4-8 ; லூக்கா 8:5-8
மத்தேயு 13:3-8 அநேக விசேஷங்கள்
அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார் கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவள் விதைக்கப் புறப்பட்டான் (மத் 13:3-8).
தம்மிடத்தில் கூடி வந்திருக்கும் திரளான ஜனங்களுக்கு அநேக விசேஷங்களை கூறினார். அவர் கட்டுக்கதைகளையோ, சிரிக்க வைக்கும் வார்த்தைகளையோ பேசி ஜனங்களுக்கு வேடிக்கை காண்பிக்கவில்லை. அவர்களுடைய நித்திய ஜீவனைக்குறித்து மிகுந்த பாரத்தோடு பிரசங்கம்பண்ணுகிறார். கூறுவதை ஜனங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்னும் அவர்களுக்கு உவமைகளாக கூறி விசேஷங்களை விவரிக்கிறார்.
உவமைகளாக கூறி சத்தியத்தை விளக்கும்போது ஜனங்கள் அதை எளிதில் புரிந்துகொள்வார்கள். ஜனங்களால் எந்த அளவிற்கு புரிந்துகொள்ள முடியுமோ அந்த அளவிற்குத்தான் நாம் பிரசங்கம்பண்ண வேண்டும். ஜனங்களுக்கு புரியாத காரியங்களை பிரசங்கம்பண்ணுவதில் பயனில்லை. தேவனுடைய ரகசியங்களை ஜனங்களுக்கு புரியவைக்கவேண்டும். ஜனங்களுக்கு புரியும் பாஷையில், அவர்களுக்கு புரியும் விதத்தில் மிகவும் எளிமையாக பிரசங்கம்பண்ணவேண்டும்.
மாற்கு 4:4-8 விதைக்கிறவன்
கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டாள். அவன் விதைக்கையில், சிலவிதை வழியருகே விழுந்ததூ; ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது; வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று. சிலவிதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி, அதை நெருக்கிப்போட்டது. சிலவிதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவள் என்று அவர்களுக்குச் சொன்னார் (மாற்கு 4:3-9).
விதைக்கிறவனைப்பற்றிய உவமை மத்தேயு 13-ஆவது அதிகாரத்திலும் எழுதப்பட்டிருக்கிறது. மாற்கு இந்த உவமையைப்பற்றி எழுதும்போது முதலாவது வார்த்தையாக “கேளுங்கள்" என்னும் வார்த்தையினால் ஆரம்பிக்கிறார் இந்த உவமையை முடிக்கும்போது “கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்” (மாற் 4.9) என்னும் வார்த்தைகளினால் முடிக்கிறார். (மாற் 4:3).
நாம் கவனித்து கேட்கவேண்டும். அவருடைய சத்தியங்களை நாம் பூரணமாக புரிந்து கொள்ள முடியாமல் போனாலும், வேதத்தின் ரகசியத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாமல் போனாலும், இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை மிகுந்த கவனத்தோடு கேட்கவேண்டும். திரும்ப திரும்ப கேட்கவேண்டும். முதலாவது கேட்கும்போது சத்தியத்தை நாம் புரிந்துகொள்வதைவிட, அதை மறுபடியும் கேட்கும்போது சத்தியத்தை மேலும் அதிகமாக புரிந்துகொள்வதற்கு வாய்ப்புண்டாகும்.
விதைக்கிறவனைப்பற்றிய உவமை லூக் 8 : 4-15
லூக் 8:4. சகல பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் அவரிடத்தில் வந்து கூடினபோது, அவர் உவமையாகச் சொன்னது:
லூக் 8:5. விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
லூக் 8:6. சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று.
லூக் 8:7. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.
லூக் 8:8. சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்-, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.
லூக் 8:9. அப்பொழுது அவருடைய சீஷர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
லூக் 8:10. அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
லூக் 8:11. அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
லூக் 8:12. வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்தி-ருந்து எடுத்துப்போடுகிறான்.
லூக் 8:13. கற்பாறையின் மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும் போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக் கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர் கொள்ளாதபடியினாலே, கொஞ்சக் காலமாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.
லூக் 8:14. முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன் கொடாதிருக்கிறார்கள்.
லூக் 8:15. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
இயேசுகிறிஸ்து பட்டணங்கள்தோறும், கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியை கூறி பிரசங்கித்து வருகிறார். ஓய்வில்லாமல், சோர்வடையாமல் தொடர்ந்து பிரசங்கம்பண்ணுகிறார். ஜனங்களும் சகல பட்டணங்களிலுமிருந்து திரளாக அவரிடத்தில் வந்துகூடி அவருடைய பிரசங்கத்தை ஆர்வத்தோடு கேட்கிறார்கள்.
இயேசு பட்டணங்கள்தோறும் பிரயாணம்பண்ணுகிறார். ஆனால் ஜனங்களோ சகல பட்டணங்களிலுமிருந்து அவரிடத்திற்கு வருகிறார்கள். இயேசுகிறிஸ்து தங்களுடைய பட்டணத்திற்கு வரும்வரையிலும் அவர்கள் காத்திருக்காமல், அவர் இருக்கும் பட்டணத்திற்கே வந்து அவருடைய பிரசங்கத்தைக் கேட்கிறார்கள். இயேசுகிறிஸ்து தங்களுடைய பட்டணத்திற்கு வரும் முன்பாகவே அவருடைய சுவிசேஷச் செய்தியை கேட்டு இரட்சிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறார்கள். தங்களுடைய பட்டணத்திற்கு இயேசுகிறிஸ்து வந்து, பிரசங்கம்பண்ணிவிட்டு, தங்கள் பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, இவர்களும் அவரோடுகூட சுவிசேஷ ஊழியத்திற்கு புறப்பட்டுப் போகவேண்டுமென்று தீர்மானம்பண்ணுகிறார்கள்.
இயேசுகிறிஸ்துவினிடத்தில் கூடிவரும் ஜனங்களின் எண்ணிக்கை திரளான இருக்கிறது. இயேசுகிறிஸ்து வலையை வீசும்போது அதில் திரளான மீன்கள் அகப்படுகிறது.இயேசுகிறிஸ்து அவர்களெல்லாருக்கும் உபதேசம்பண்ணுவதற்கு ஆயத்தமாக இருக்கிறார். யாரெல்லாம் கற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாக இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் கற்றுக்கொடுப்பதற்கு இயேசுகிறிஸ்துவும் ஆயத்தமாக இருக்கிறார்.
இயேசுகிறிஸ்து தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக்கூறி பிரசங்கம்பண்ணும்போது, அதைக்கேட்கிறவர்களும் மிகுந்த கவனத்தோடு கேட்கவேண்டும். தம்முடைய பிரசங்கச் செய்தியையும், கேட்கிறவர்களின் மனப்பக்குவத்தையும் இயேசுகிறிஸ்து ஒரு உவமையினால் விவரிக்கிறார். இது விதைக்கிறவனைப்பற்றிய உவமை என்று அழைக்கப்படுகிறது. இயேசுகிறிஸ்து இந்த உவமையைக் கூறும்போது, இந்த உவமையின் கருத்து என்னவென்று அறிந்துகொள்வதில் அவருடைய சீஷர்கள் மிகுந்த ஆர்வதோடிருக்கிறார்கள். ""இந்த உவமையின் கருத்து என்ன'' என்று சீஷர்கள் இயேசுவினிடத்தில் கேட்கிறார்கள்.
நாம் சத்திய வசனத்தைக் கேட்கும்போது, அதன் முழுமையான பொருளை அறிந்துகொள்வதில் ஆர்வம் காண்பிக்கவேண்டும். சத்திய வசனத்தின் இரகசியத்தை பூரணமாக புரிந்துகொள்ள விரும்பவேண்டும். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களுக்கு தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி அவர்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. ஆனால் மற்றவர்களுக்கோ இதே போல் அருளப்படவில்லை.
மற்றவர்களுக்கு உவமையாக கூறப்படும் காரியம், நமக்கு தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறிவதற்கு ஏதுவான சத்தியமாக அறிவிக்கப்படுகிறது. தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியம் நமக்கு தெளிவுபடுத்தப்படுவதினால் நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும். அவருடைய இலவச கிருபையினாலேயே தேவனுடைய சத்தியம் நமக்கு தெளிவுபடுத்தப்படுகிறது. மற்றவர்களுக்கு உவமையாக இருப்பது நமக்கு சத்தியமாக இருக்கிறது. மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருப்பது நமக்கு தெளிவான சத்தியமாக இருக்கிறது.
மனுஷருடைய இருதயம் தேவனுடைய வார்த்தையாகிய விதை விதைக்கப்படும் நிலமாக இருக்கிறது. நிலம் விதையைப் பெற்றுக்கொள்கிறது. நிலத்தில் விதை முளைத்து அது கனிகளைத் தருகிறது. நிலத்தில் விதை விதைக்கப்படாவிட்டால், அந்த விதை ஒருபோதும் கனிதராது. ஆகையினால் சுவிசேஷ ஊழியம் செய்கிறவர்களாகிய நாம் விதையையும் நிலத்தையும் ஒன்றுசேர்க்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தையும் அதைக் கேட்கும் ஜனங்களையும் ஒன்றுசேர்க்கவேண்டும்.
நாம் விதைக்கும் விதை முளைத்து கனி தரவேண்டுமென்றால், அந்த நிலமும் பக்குவமானதாகவும், நல்ல நிலமாகவும் இருக்கவேண்டும். கர்த்தருடைய வார்த்தை நமக்கு ஜீவனைக்கொடுக்கும் ஜீவவார்த்தையாக இருக்கவேண்டும்.
பிசாசு நமக்கும், கர்த்தருடைய வார்த்தைக்கும் சத்துருவாக இருக்கிறான். கர்த்தருடைய வார்த்தையை நாம் கவனமில்லாமல் கேட்டு அசட்டையாக இருந்தால் அவன் நம்முடைய இருதயத்திலிருந்து கர்த்தருடைய வசனத்தை எடுத்துப்போடுகிறான். இப்படிப்பட்டவர்களால் வசனத்தை விசுவாசித்து இரட்சிக்கப்பட முடியாது. நாம் விசுவாசிக்கவில்லை யென்றால் நம்மால் இரட்சிக்கப்பட முடியாது. ஆகையினால் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிப்பதற்கு எந்தெந்த வழிகளிலெல்லாம் தடைகளை உண்டுபண்ண முடியுமோ, அந்த வழிகளை ஆராய்ந்து பார்த்து, பிசாசானவன் அந்த வழிகளில் தடைகளை ஏற்படுத்துகிறான். நாம் சத்திய வசனத்தை கேட்கும்போதும், வாசிக்கும்போதும், அந்த வசனத்தை நாம் விசுவாசியாதவாறு பிசாசானவன் நம்மைத் தடுக்கிறான். வசனத்தைக்கேட்டு கொஞ்ச காலம் நமது இருதயத்தில் அதை வைத்திருந்தாலும், பிசாசானவன் நமக்கு ஞாபக மறதியைக்கொடுத்து அந்த வசனத்தை நமது இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான். ஆகையினால் நாம் கேட்டவைகளைவிட்டு விலகாதபடிக்கு அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய் கவனிக்கவேண்டும்(எபி 2:1).
சில சமயங்களில் நாம் வசனத்தைக்கேட்டு அதை நமது நினைவில் வைத்திருப்போம். ஆனால் நம்முடைய சிந்தை அதை விசுவாசியாதபடிக்கு முரண்பட்டிருக்கும். சாத்தான் நமது மனதை வேறு திசையில் திருப்பி சத்திய வசனத்தைவிட்டு நம்மை விலகிப்போக வைக்கிறான். நாம் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்கு இவையெல்லாம் பிசாசானவன் நமக்கு கொடுக்கும் சோதனைகளாகும்.
வழியருகே விதைக்கப்பட்ட விதை மிதியுண்டு போகும். ஆகாயத்துப் பறவைகள் வந்து அதை பட்சித்துப்போடும். தேவனுடைய வசனத்தை நாம் கவனமில்லாமல் கேட்போமானால் அது நம்முடைய இருதயத்தில் பலன்தராது.
சில சமயங்களில் சத்திய வசனங்களை நாம் கேட்கும்போது ஆரம்பத்தில் ஆர்வமாக கேட்போம். அதை சந்தோஷத்துடனே ஏற்றுக்கொள்வோம். ஆனால் அந்த வசனம் நம்முடைய இருதயத்தில் வேர்கொண்டு நிலைத்திராது. ஆகையினால் அது நம்முடைய மனதில் நீண்டநாள் தங்கியிராது. நாம் வசனத்தை கொஞ்சகாலம் மாத்திரம் விசுவாசித்து சோதனைக்காலத்திலே பின்வாங்கிப் போய்விடுவோம்.
கற்பாறையில் விழுந்த விதை முளைக்கும். ஆனால் முளைத்த பின் அதற்கு ஈரமில்லாததினால் அது உலர்ந்து போகும். அதுபோலவே வசனத்தை அக்கறையில்லாமல் ஏற்றுக்கொண்டால் அது சிறிதுகாலம் நமக்கு பலன்கொடுப்பது போன்று தெரியும். சிறிது காலத்திற்கு வசனத்தினால் சந்தோஷம் உண்டாகும். ஆனால் இந்த சந்தோஷம் நிலைத்திராது. ஆரம்பத்தில் உண்டான சந்தோஷம் சோதனைக்காலம் வரும்போது நம்மைவிட்டு நீங்கிப்போகும். விசுவாச ஜீவியத்தில் முன்னேறிப்போகாமல் சோதனையினால் பின்வாங்கிப் போய்விடுவோம். ஆரம்பம் சந்தோஷமாக இருந்தாலும் முடிவு வருத்தமாக இருக்கும்.
மனுஷருக்கு பிரபஞ்சத்திற்குரிய கவலைகளும் ஐசுவரியங்களும், சிற்றின்பங்களும் ஆபத்தான கண்ணிகளாக உள்ளன. இந்த கண்ணிகளினால் நெருக்கப்பட்டிருக்கிறவர்கள் வசனத்தினால் எந்தவித ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போகிறார்கள். முள்ளுள்ள இடங்களில் விதை முளைக்கும்போது, விதையோடு முள்ளும் கூடவளரும். அந்த முள் விதையை நெருக்கிப்போடும். அதுபோலவே இந்த பிரபஞ்சத்தின் கவலைகளினாலும், ஐசுவரியத்தினாலும், சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு இவர்கள் பலன்கொடாதிருக்கிறார்கள். இவர்கள் வசனத்தை கேட்கிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களால் பலன்கொடுக்க இயலவில்லை.
நாம் சாதாரணமாக பலன் கொடுத்தால் போதாது. நல்ல மரம் நல்ல தரமான பழங்களைக் கொடுக்கும். அதுபோல நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திலும் நாம் நல்ல பலன் கொடுக்கவேண்டும். நாம் நல்ல கனி கொடுக்கவில்லையென்றால், நாம் கனிகொடாதவர்களாகவே கணிக்கப்படுவோம்.
நல்ல நிலத்தில் விதைக்கப்படும் விதை முளைத்து ஒன்று நூறாக பலன்கொடுக்கும். நம்முடைய இருதயம் உண்மையும் நன்மையுமாக இருக்குமென்றால் அது நல்ல நிலத்தைப்போல் இருக்கிறது. நமது இருதயம் தேவனுக்கு முன்பாக செம்மையாக இருக்க வேண்டும். வசனத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். வசனத்தைக் கேட்டு அதை இருதயத்திலே காத்துக்கொள்ள வேண்டும். நல்ல நிலமானது விதையை வாங்கிக்கொள்வது மாத்திரமல்ல, அதை தன்னிடத்தில் காத்துக்கொண்டு முளைக்கிறது. அதுபோலவே நாமும் வசனத்தைக் கேட்டு அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துக்கொள்ள வேண்டும்.
நமது இருதயத்தில் வசனத்தைக் காத்துக்கொண்டால் நாம் ஏற்ற வேளையில் கனிதருவோம். நாம் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாக இருப்போம். முடிவு வரையிலும் நாம் தொடர்ந்து நற்கிரியை செய்யவேண்டுமென்றால் நமக்கு நீடிய பொறுமை தேவைப்படுகிறது.
ஆகையினால் நாம் கேட்கிற விதத்தைக்குறித்து கவனிக்க வேண்டும். நாம் கேட்கும் வார்த்தையினால் பொறுமையுடனே பலன் கொடுக்கிறோமா என்பதை நிதானித்துப் பார்க்க வேண்டும். நாம் கேட்கும் வசனம் பலன் தராதவாறு ஏதாவது சில காரியங்கள் நம்மை தடைபண்ணுகிறதா என்பதை ஆராய்ந்து பார்த்து, அவற்றையெல்லாம் நம்மைவிட்டு அகற்றிப்போடவேண்டும். நாம் கவனமில்லாமலும் அக்கறையில்லாமலும் வசனத்தைக் கேட்டால் அந்த வசனம் நமக்குள்ளே வேர்கொள்ளாது ஒரு வேளை நாம் கேட்ட வசனத்தை கொஞ்சகாலம் மாத்திரம் விசுவாசிப்போம். சோதனை காலத்திலோ பின்வாங்கிப்போய்விடுவோம். பலன் கொடுக்கமாட்டோம்.