மன்னிப்பு, விசுவாசம் இவைகளை குறித்த இயேசுவின் போதனை டக்

 

மன்னிப்பு, விசுவாசம் இவைகளை குறித்த இயேசுவின் போதனை


இடறல்


பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!  அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும் அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்             (லூக் 17:1,2).


கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இடறல் உண்டாக்குவது மிகப் பெரிய பாவம். ஆகிலும் விசுவாசிகளாகிய நமக்கு இடறல்கள் வராமல் போவது கூடாதகாரியம் என்று இயேசுகிறிஸ்து  எச்சரிப்பாக கூறுகிறார். இடறல் வருவதற்கு வாய்ப்புள்ளதினால் நாமும் நம்முடைய ஜீவியத்தில் இடறல்களைப்பற்றி மிகுந்த கவனத்தோடு ஜீவிக்க வேண்டும். நமக்கு இடறல் உண்டாக்குகிறவர்களுக்கு தேவன் மிகப்பெரிய தண்டனையைக் கொடுப்பார். 


கழுத்தில் இயந்திரக்கல் கட்டப்பட்டு, சமுத்திரத்தில் தள்ளப்பட்டுப்போவதுபோல மிகப்பெரிய தண்டனை நமக்கு இடறல் உண்டுபண்ணுகிறவர்களுக்கு கொடுக்கப்படும். கிறிஸ்துவின் சாதாரண சிறியரில் ஒருவரை உபத்திரவப்படுத்துகிறவனுக்கும் மிகப் பெரிய தண்டனை கொடுக்கப்படும். இயேசுகிறிஸ்துவின் சத்தியங்களை திரித்துக்கூறி, மாறுபாடான உபதேசங்களை பேசுகிறவர்களுக்கும் மிகப்பெரிய தண்டனை கொடுக்கப்படும். இப்படிப்பட்டவர்கள்  கர்த்தருடைய பிள்ளைகளின் சிந்தைகளை கெடுத்துப்போடுகிறார்கள்.


ஒரு சிலர் துன்மார்க்கமாக ஜீவிப்பார்கள்.  பிறருக்கு எந்தவிதமான உபகாரமும் செய்யாமல் உபத்திரப்படுத்துவார்கள். இப்படிப்பட்டவர்கள்  கர்த்தருடைய பிள்ளைகளின் கரங்களை பலவீனப்படுத்துவார்கள். அவர்களுடைய இருதயங்களை நோகப்பண்ணுவார்கள். இப்படிப்பட்டவர்கள்மீதும் தேவனுடைய தண்டனை வரும்.


புதிய ஏற்பாட்டில் ""ஐயோ'' என்னும் சொல் 40 தடவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்து 31 இடங்களில் ஐயோ என்னும் வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். பட்டணங்கள், வேதபாரகர், பரிசேயர், விசுவாசமில்லாத ஜனங்கள் ஆகியோர்மீது நியாயத்தீர்ப்பை அறிவிப்பதற்காக ஐயோ என்னும் சொல்லை இயேசு பயன்படுத்துகிறார்.


எச்சரிக்கையாயிருங்கள்


உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக  (லூக் 17:3). 


நமக்கு விரோதமாக இடறல் உண்டாக்குகிறவர்களை மன்னிப்பது விசுவாசிகளின் கடமை. பிறரை மன்னிப்பது நாம்  எச்சரிக்கையாயிருக்க வேண்டும். பிறருக்கு இடறல் உண்டுபண்ணாமலும் நம்மைக் குறித்து நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அதே வேளையில் நமக்கு விரோதமாக இடறல் பண்ணுகிறவர்கள், தாங்கள் உண்டுபண்ணின  இடறல்கள் நிமித்தம் மனஸ்தாபப்பட்டால், நாம் அவர்களை மன்னிப்பதற்கும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.


நமக்கு விரோதமாக தவறு செய்தவர்கள்  நம்மிடத்தில் மன்னிப்பு கோரும்போது, நாம் அவர்களை மன்னிப்பதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும். மனஸ்தாபப்படுகிறவர்கள்மீது  நாம் மனக்கசப்பாக இருக்கக்கூடாது. நமக்கு விரோதமாக குற்றம் செய்கிறவனை கடிந்துகொள்ளும் உரிமை நமக்கு உண்டு. தேவைப்பட்டால் இப்படிப்பட்டவர்களை நாம் கடிந்துகொள்ளலாம். அவர்களை குற்றப்படுத்தும் நோக்கத்தில் நாம் கடிந்து கொள்ளக்கூடாது.  தாங்கள் செய்த தப்பிதங்களை அவர்கள் உணர்ந்துகொள்ளும் விதத்தில் அவர்களை கடிந்துகொள்ள வேண்டும். 


நமக்கு விரோதமாக குற்றம் செய்தவர்கள்  செய்த தப்பிதங்களை அவர்களுக்கு விளக்கிக் கூறவேண்டும். நமக்கு விரோதமாக பிறர் செய்யும் தப்பிதங்கள் பெரியதாக இருந்தாலும் அவர்களையும் மன்னிக்க நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். 


குற்றம் செய்தவர்கள் மனஸ்தாபப்படும்போது, நாம் அவர்களை மன்னித்துவிட வேண்டுமென்று இயேசுகிறிஸ்து  நமக்கு கட்டளை கொடுத்திருக்கிறார். அவர்கள் மூலமாக நமக்கு உண்டான எல்லா காயங்களையும் நாம் மறந்துவிடவேண்டும். அவர்கள்  நம்முடைய இருதயத்தை வேதனைப்படுத்தியிருந்தாலும் அதையும் மறந்துவிட வேண்டும். மறுபடியும் நினைத்துப் பார்க்கக்கூடாது. நமக்கு விரோதமாக            தவறு செய்கிறவர்கள் மனஸ்தாபப்படவில்லையென்றாலும், நாம் அவர்கள்மீது கோப உணர்ச்சியோடோ, பழிவாங்கும் உணர்ச்சியோடோ இருக்கக்கூடாது. நமக்கு விரோதமாக பிறர் செய்த     தப்பிதங்களை எப்போதும் தியானித்துக் கொண்டிருக்கக்கூடாது. கர்த்தரையும் அவருடைய வார்த்தையையும் பற்றிய தியானமே நமக்குள் நிறைந்திருக்க வேண்டும். 


ஏழுதரம்


அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார் (லூக் 17:4). 


ஒரு சிலர் நமக்கு விரோதமாக தொடர்ந்து குற்றம் செய்து கொண்டு வரலாம். ஒவ்வொருமுறை குற்றம் செய்யும்போதும், தாங்கள் செய்த குற்றத்திற்காக அவர்கள் ஒவ்வொரு முறையும் மனஸ்தாபப்பட்டால், நாமும் அவர்களை ஒவ்வொரு முறையும் மன்னிக்க வேண்டும். ஒரே நாளில் ஏழுதரம் நமக்கு விரோதமாக குற்றம் செய்து, ஏழுதரமும் மனஸ்தாபப்பட்டால், நாமும் அவர்களை  ஏழுதரமும் மன்னிக்கவேண்டும். இந்த வாக்கியத்திற்கு இப்படிப்பட்டவர்களை நாம் தொடர்ந்து மன்னிக்க வேண்டும் என்பதே பொருளாகும். 


விசுவாசிகளிடத்தில் மன்னிக்கும் ஆவி இருக்கவேண்டும். ஒவ்வொருவரோடும் சமாதானமாக பேசி பழகவும், ஒவ்வொருவரிடத்திலும் காணப்படும் நல்ல சுபாவங்களை கண்டுபிடிக்கவும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். எல்லோரிடத்திலும் ஏதாவது ஒரு நல்ல சுபாவம் இருக்கும். நாம் அந்த நல்ல சுபாவத்தை கண்டுபிடிப்பதற்கு முயற்சிபண்ண வேண்டுமேயல்லாமல், அவர்கள் செய்த தப்பிதங்களையே நினைத்துக்கொண்டிருக்கக்கூடாது.


நமக்கு விரோதமாக ஒருவர் தப்பிதம் செய்யும்போது, நாம் அவரை மன்னித்து விட்டோம் என்பதையும், அவர்மீது நமக்கு எந்தவிதமான கோப உணர்ச்சியோ அல்லது காழ்ப்புணர்ச்சியோ அல்லது பழிவாங்கும் உணர்ச்சியோ இல்லையென்பதை  அவருக்குத் தெளிவுபடுத்தவேண்டும். 


விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் 


அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள் (லூக் 17:5).


நம்முடைய விசுவாசம் வர்த்திக்க வேண்டும். விசுவாசமாகிய கிருபை வளர்ந்து பெருகும்போது, நம்மிடத்தில் மற்ற கிருபைகளெல்லாம் வளர்ந்து பெருகும். சீஷர்கள் கர்த்தரிடம் ""எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார்கள்.


சீஷர்கள் அப்போஸ்தலர்களாக இருந்தாலும் விசுவாசத்தில் தாங்கள் பலவீனமானவர்கள் என்பதை அறிக்கை செய்கிறார்கள். தங்களிடத்தில் போதுமான அளவு விசுவாசம் இல்லையென்பதை அங்கீகரிக்கிறார்கள். தங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ண தங்களுக்கு கிறிஸ்துவின் கிருபை தேவை என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். ஆகையினால்தான் அப்போஸ்தலர்கள் இயேசுகிறிஸ்துவிடம் ""எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும்'' என்று விண்ணப்பம்பண்    ணுகிறார்கள்.


நாம் கர்த்தரிடத்தில் பல காரியங்களுக்காக ஜெபம்பண்ணலாம். நம்முடைய விசுவாசம் வர்த்திக்கப்பட வேண்டுமென்பது நம்முடைய ஜெபத்தின் முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும். இதையே நாம் நாடவேண்டும். நமக்கு விரோதமாக மற்றவர்கள் குற்றம் செய்யும்போது  அவர்களை நாம் மன்னிக்க வேண்டும் என்று இயேசுகிறிஸ்து உபதேசம்பண்ணுகிறார். இந்த உபதேசத்தைக் கேட்டவுடன் சீஷர்கள் இயேசுவிடம் ""எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார்கள். விசுவாசமில்லையென்றால் தங்களுக்கு விரோதமாக தப்பிதம் செய்தவர்களை தங்களால் மன்னிப்பது கடினம் என்பதை புரிந்துகொள்கிறார்கள். 


நாமும் விசுவாசத்தினால் இரட்சிக்கப்படுகிறோம். தேவனுடைய இரக்கத்தையும் மன்னிக்கும் கிருபையையும் நாம் விசுவாசித்தே தேவனுடைய கிருபாசனத்தண்டையில் சென்று, நம்முடைய பாவங்களை அறிக்கை செய்கிறோம். தேவனுடைய மன்னிக்கும் கிருபையை நாம் விசுவாசிக்கும்போது, நமக்கு விரோதமாக தப்பிதம் செய்தவர்களை மன்னிப்பதற்கு நம்மிடத்திலுள்ள விசுவாசம் வர்த்திக்கும். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது கூடாதகாரியம்.  


பெந்தெகொஸ்தே நாளில் சீஷர்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்ட போது, இயேசு கிறிஸ்து இந்த விண்ணப்பத்திற்குப் பதில் கொடுத்தார். நாம் எல்லோருமே விசுவாசம் என்னும் வரத்திற்காக ஜெபிக்க வேண்டும். அதை நாடவேண்டும். (1கொரி 12:8-11,30) விசுவாசம் வேதவசனத்தைக் கேட்பதினாலேயே வரும். (ரோமர் 10:17)


கடுகுவிதையளவு


 அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கட-லே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்  (லூக் 17:6). 


இயேசுகிறிஸ்து மெய்யான விசுவாசத்தைப்பற்றியும், விசுவாசத்தினால் செய்யக்கூடிய மிகப்பெரிய காரியங்களைப்பற்றியும் இங்கு விவரித்துக்கூறுகிறார். கடுகுவிதையளவு விசுவாசம் நமக்கு உண்டாயிருந்தாலும், நம்மால் மிகப்பெரிய காரியங்களை செய்ய முடியும். கடுகு விதை அளவில் சிறியது. அதேவேளையில் நிலத்தில் ஊடுருவிச் செல்லும் அளவிற்கு கூர்மையானது. நம்முடைய விசுவாசம் சிறியதாக இருந்தாலும் அது கூர்மையானதாக இருக்கவேண்டும். 


தேவனிடத்திலிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் எல்லா கிருபைகளிலும் விசுவாசமே மிகவும் உன்னதமானது. நம்மிடத்தில் விசுவாசம் இருக்கும்போது நம்மால் கூடாதகாரியம் ஒன்றும் இருக்காது. தேவனுடைய நாம மகிமைக்காக நாம் பல காரியங்களைச் செய்வோம். ஒரு காட்டத்தி மரத்தை வேரோடு பிடுங்கி அதை கடலிலே நடுமளவிற்கு நம்முடைய செய்கைகள் சிறப்பாக இருக்கும். தேவனால் கூடாதகாரியம் ஒன்றுமேயில்லை. ஆகையினால் தேவனை விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும். 


விசுவாசத்தின் அளவைக் குறித்து இயேசு கிறிஸ்து மறுபடியுமாகக் கூறுகிறார். விசுவாசத்தினால் மலைகளும், மரங்களும் அகன்று போகும். (மத் 17:20; லூக்கா 17:6) விசுவாசத்தினால் எல்லாவற்றையும் செய்ய முடியும். (மத் 21:22) விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் ஆகும் (மத் 17:20; மாற்கு 9:23).  


அப்பிரயோஜனமான ஊழியக்காரர்


உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வய--ருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ? நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக் குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா? தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே.  அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார் (லூக் 17:7-10).  


நாம் கர்த்தருக்காக எப்படிப்பட்ட ஊழியம் செய்தாலும் நம்மிடத்தில் பெருமை இருக்கக்கூடாது. மனத்தாழ்மையே இருக்க வேண்டும். அப்போஸ்தலர்கள் மற்ற எல்லா விசுவாசிகளைவிட கர்த்தருக்காக அதிகமாய்  ஊழியம் செய்தவர்கள். அவர்கள்கூட தங்களுடைய ஊழியத்தில் பெருமைப்படக்கூடாது. தாங்கள் செய்யும் ஊழியத்தின் மூலமாக தேவன் தங்களுக்கு கடனாளி என்னும் சிந்தனை அப்போஸ்தலருக்கு வந்துவிடக்கூடாது. 


விசுவாசிகளாகிய நாம் எல்லோருமே கர்த்தருக்கு ஊழியக்காரர்களாக இருக்கிறோம். நம்முடைய முழுபலமும் முழுநேரமும் கர்த்தருக்கே உரியது. இவற்றை அவருடைய சித்தத்தின் பிரகாரம் அவருக்காகவே பயன்படுத்த வேண்டும். தேவன் நமக்கு கொடுத்திருக்கும் எல்லா நேரத்திலும் நாம் அவருக்காக ஊழியம் செய்யவேண்டும். ஒரு ஊழியம் நிறைவுபெறும்போது நாம் அடுத்த ஊழியத்தை ஆரம்பித்துவிடவேண்டும். 


இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியக்காரரைப்பற்றி விவரிக்கும்போது, வயல்வெளியில் வேலைசெய்யும் ஒரு எஜமானுடைய ஊழியக்காரனைப்பற்றி குறிப்பிடுகிறார். இவன் தன்  எஜமானுடைய வயலில் உழுது அல்லது எஜமானுடைய மந்தைகளை மேய்த்து வயலிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வருகிறான். 


இவனுடைய வேலை இத்துடன் முடிந்துபோகவில்லை. தன் எஜமான் வீட்டில் செய்யவேண்டிய வேலை இவனுக்காக இன்னும்  காத்திருக்கிறது. தன் எஜமானுக்கு சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, அவர் போஜனபானம் பண்ணுமளவும் அவருக்கு ஊழியம் செய்யவேண்டும். 


நாம் கர்த்தருக்காக ஊழியம் செய்யும்போது நம்முடைய ஊழியம் ஒருபோதும் முடிந்துவிடுவதில்லை. நாம் தேவனுக்காக செய்ய வேண்டிய ஊழியம் இன்னும் இருக்கிறது.  அது எப்போதும் இருக்கும். கர்த்தர் வருமளவும் இருக்கும். கர்த்தருக்காக ஊழியம் செய்வது மாத்திரமே நம்முடைய கடமை. நமக்கு ஆறுதலைக்கொடுப்பதும், இளைப்பாறுதலைக் கொடுப்பதும், நம்மைப் பாராட்டுவதும் கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரம் நடைபெறும்.  ஊழியம் செய்வதை மாத்திரம் நாம் செய்துகொண்டு, மற்ற காரியங்களை கர்த்தருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்துவிடவேண்டும். 


எந்த எஜமானும் தான் சாப்பிடுவதற்கு முன்பாக, தன் ஊழியக்காரனைப்பார்த்து, ""நீ முன்பு போய் சாப்பிட்டு வா'' என்று சொல்லவேமாட்டார். பகல் நேரத்தில் நாம் செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடித்த பின்பு, நமக்கு ஓய்வுகொடுத்து அனுப்பிவிடமாட்டார்.  நாம் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் இருக்கும்போது, அந்த வேலைகளைச் செய்யுமாறு நமக்கு கட்டளையிடுவார். ஆகையினால் தேவன் நமக்குக் கொடுக்கும் ஊழியங்களை உண்மையோடும், உத்தமத்தோடும், மனத்தாழ்மையோடும், பொறுப்போடும் நிறைவேற்ற வேண்டும். இதற்கு ஏற்ற பலன் ஏற்ற காலத்தில் தேவனிடமிருந்து வரும்.


நாம் கர்த்தருடைய ஊழியக்காரர்கள் என்றால், நம்முடைய எஜமானாகிய கர்த்தருக்கு  ஊழியம் செய்ய வேண்டியது நம்முடைய கடமை. இந்த ஊழியமே நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும்  மிகப்பெரிய சிலாக்கியம். நம் எஜமானுக்காக அரைக்கட்டிக்கொண்டு ஊழியம் செய்யவேண்டும். எஜமானுக்கு சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைக்கட்டிக்கொண்டு, அவர் போஜனபானம் பண்ணுமளவும் அவருக்கு ஊழியம் செய்யவேண்டும். அதன்பின்பு நாம் புசித்து குடிப்பதற்கு நம்முடைய எஜமான் நமக்கு அனுமதி கொடுப்பார். 


கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் அவருக்காக ஊழியம் செய்யும்போது தங்களுடைய அரைகளைக் கட்டிக்கொள்ள வேண்டும். இடுப்பில் உள்ள வஸ்திரத்தினால்  நம்முடைய அரையை அதாவது இடுப்பை, கட்டிக்கொள்ளும்போது, நம்முடைய மற்ற வஸ்திரங்கள் நம்முடைய ஊழியத்திற்கு இடையூறாக இராது. கர்த்தருக்கு ஊழியம் செய்யும்போது, நம்முடைய வஸ்திரத்தையும் கவனிக்க வேண்டும் என்னும் அவசியமில்லை.  அரைகட்டப்பட்டிருக்கும்போது எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் பாதுகாப்பாக இருக்கும். வஸ்திரம் கழண்டு விழுந்துவிடாது. ஆகையினால் ஊழியக்காரர்களாகிய நம்முடைய அரை கட்டப்பட்டதாக இருக்கவேண்டும். அரைக்கட்டப்படுவது நம்முடைய பணிவையும், ஆயத்தத்தையும் வெளிப்படுத்துகிறது. 


தமக்கு ஊழியம் செய்யும்போது, தம்முடைய ஊழியக்காரர்களுடைய அரைகள் கட்டப்பட்டிருக்க வேண்டுமென்று எஜமான்  எதிர்பார்க்கிறார். இயேசுகிறிஸ்து நம்மிடம் இப்படி எதிர்பார்த்தாலும், அவர் ஒருபோதும் நம்மை கட்டாயப்படுத்துவதில்லை. ஏனெனில்  தம்முடைய சீஷர்கள் நடுவே அவரும் ஊழியம் செய்யும் ஒருவராகவே கிரியை செய்து வந்தார். இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு ஊழியம் கொள்ளவராமல் ஊழியம் செய்வதற்காகவே வந்திருக்கிறார். தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவி தாம் ஊழியம் செய்வதற்கு வந்திருப்பதை உறுதிபண்ணுகிறார். 


கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் கர்த்தருக்காக ஊழியம் செய்யும்போது, தாங்கள் செய்யும் ஊழியத்திற்காக கர்த்தர் தங்களை பாராட்ட வேண்டுமென்றோ அல்லது அவர் தங்களுக்கு நன்றி கூறவேண்டுமென்றோ எதிர்பாôர்க்ககூடாது. தான் கட்டளையிட்டவைகளை தன்னுடைய வேலைக்காரன் செய்ததற்காக, எந்த எஜமானும் அவனுக்கு உபசாரம் செய்யமாட்டான். கர்த்தருக்காக ஊழியம் செய்யும் ஊழியக்காரர்கள், தாங்கள் செய்யும் ஊழியத்தினால், கர்த்தரிடமிருந்து உபசாரத்தை  எதிர்பார்க்கக்கூடாது. தேவனுடைய கரத்திலிருந்து நன்மையைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் தகுதியுள்ளவர்களல்ல. நம்முடைய ஊழியமும் தகுதியானது அல்ல. தேவனுடைய கிருபையையும் நன்மையையும் நம்முடைய கிரியைகளினால் சம்பாதிக்க முடியாது. 


நாம் கிறிஸ்துவுக்காக எந்த ஊழியம் செய்தாலும் அது நம்முடைய கடமை என்று மாத்திரமே நினைக்க வேண்டும்.  கர்த்தருக்கு ஊழியம் செய்தால் அவர் நமக்கு உபகாரம் செய்வாரென்றோ அல்லது நம்மை பெருமைப்படுத்தி உயர்த்துவாரென்றோ எதிர்பார்க்கக்கூடாது. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கர்த்தர் நமக்கு கட்டளையிட்ட யாவற்றையும் செய்து முடிக்க வேண்டும். 


ஆனால் கர்த்தருடைய ஊழியக்காரர்களாகிய நாமோ பல சமயங்களில்  கர்த்தர் நமக்கு கட்டளையிட்ட யாவற்றையும் செய்து முடிக்க தவறிவிடுகிறோம். நம்முடைய ஊழியங்களில் குறை காணப்படுகிறது. கர்த்தருக்காக நாம் செய்யும் எல்லா ஊழியத்தையும்  நாம் அவர்மீது வைத்திருக்கும் அன்பினால் நிறைவேற்ற வேண்டும். நம்முடைய முழு இருதயமும் முழு ஆத்துமாவும் கர்த்தரிடத்தில் அன்புகூரவேண்டும். இந்த அன்பின் நிமித்தமாகவே நாம் கர்த்தருக்காக ஊழியம் செய்கிறோம். 


 கிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரர்களாக  ஊழியம் செய்கிறவர்கள் தங்களை பெருமைப்படுத்தாமல் கர்த்தருக்கு முன்பாக தங்களைத் தாழ்த்துவார்கள். தாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர் என்று தேவனுடைய சமுகத்தில் தங்களைத் தாழ்த்தி அங்கீகரிப்பார்கள். நம்முடைய ஊழியத்தின் மூலமாக தேவனுக்கு ஒரு பிரயோஜனமும் உண்டாகாது. நம்மால் தேவனுக்கு ஒரு லாபமும் இல்லை.  நம்முடைய ஊழியத்தின் மூலமாக தேவன் ஒருபோதும் நமக்கு கடனாளியாக இருக்கமாட்டார். ஆகையினால் தேவனுக்கு முன்பாக நம்மை நாமே அறிக்கை செய்யும்போது ""நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்'' என்று அறிக்கை செய்யவேண்டும். அவருடைய ஊழியம் பிரயோஜனமுள்ள ஊழியம். ஆனால் நாமோ அப்பிரயோஜனமான ஊழியக்காரர். 


தேவனுடைய ஊழியக்காரர்கள் தாங்கள் செய்யும் காரியங்களுக்குப் பெருமைப்படக் கூடாது. நம்மிடம் எப்போதும் தாழ்மை இருக்க வேண்டும். நாம் செய்ய வேண்டியதை மாத்திரமே செய்திருக்கிறோம் என்று எண்ண வேண்டும். (லூக்கா 18:1)


 பிரதிபலன் எதிர்பாராமல் நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும். உண்மையோடும், உத்தமமாகவும் மனத்தாழ்மையோடும் கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும். நமது ஊழியத்தில் பெருமைப்பாராட்டக்கூடாது.  (மத் 6:1-6; யோவான் 12:43)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.