பிரிவினையை மே உண்டாக்க வந்தேன் என்று இயேசு எச்சரித்தல்

 

பிரிவினையை மே உண்டாக்க வந்தேன் என்று இயேசு எச்சரித்தல்


பூமியின்மேல் அக்கினி


பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன்           (லூக் 12:49). 


இயேசுகிறிஸ்து தம்முடைய பாடுகளைக் குறித்தும், தம்மைப் பின்பற்றுகிறவர்களுடைய பாடுகளைக் குறித்தும் இங்கு வெளிப்படுத்துகிறார். தாம் பூமியின்மேல் அக்கினியை போடவந்ததாக கூறுகிறார். இந்த வாக்கியத்திற்கு வியாக்கியானம் கூறும்போது ஒரு சிலர் இதற்கு சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணுவது என்றும், பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரியை பரிசுத்த அக்கினியாக ஊற்றுவது என்றும் பொருள் கூறுகிறார்கள். ஆனால் இந்த வாக்கியத்திற்கு உபத்திரவத்தின் அக்கினி என்றும் வியாக்கியானம் பண்ணுவதும் சிறப்பாக இருக்கும். இயேசுகிறிஸ்து உபத்திரவத்திற்கு காரணர் அல்ல. உபத்திரவப்படுத்துகிறவர்களின் பாவமே விசுவாசிகளுடைய உபத்திரவங்களுக்கு காரணமாகும். விசுவாசிகளின் உபத்திரவத்திற்கு இயேசுகிறிஸ்து காரணமாக இல்லாவிட்டாலும், தம்மை விசுவாசிக்கிறவர்களின் ஜீவியத்தில் உபத்திரவம் வருவதற்கு அவர் அனுமதிக்கிறார். பொன்னானது அக்கினியினால் புடமிட்டு, சோதிக்கப்பட்டு, பரிசுத்தப்படுவதுபோல, விசுவாசிகளும் உபத்திரவங்களினால் சோதிக்கப்பட்டு பரிசுத்தப்படுத்தப்படுகிறார்கள். விசுவாசிகளை  பரீட்சை செய்து பார்ப்பதற்காக உபத்திரவம் அவர்களுடைய ஜீவியத்தில் சோதனையாக அனுமதிக்கப்படுகிறது. 


அக்கினி உருவகமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கும் விதம்


    1. எரிச்சல் (உபா 4:24; எசே 36:5)


    2. மனுஷனுடைய கோபம் (நீதி 16:27)          


    3. தேவனுடைய வார்த்தை (எரே 5:14)


    4. பாவம் (நீதி 6:27; ஏசா 9:18)


    5. நாவு (யாக் 3:5-6)


    6. ஊழியக்காரர்கள் (சங் 104:4; எபி 1:7)


    7. கிறிஸ்து (மல் 3:2)


    8. பரிசுத்த ஆவியானவர் (மத் 3:11; வெளி 4:5)


    9. உபத்திரவம் (சங் 66:12; 1பேதுரு 1:7)


    10. தேவனுடைய கோபம் (ஏசா 31:9)           


    11. நியாயத்தீர்ப்பு (சக 13:9)                    


    12.    சுவிசேஷத்தின் நிமித்தமாக உபத்திரவமும், பிரிவினையும்          (லூக்கா 12:49)


முழுக வேண்டிய ஒரு ஸ்நானம்


ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்  (லூக் 12:50).


இயேசுகிறிஸ்து பலவிதமான பாடுகள், உபத்திரவங்கள் வழியாக கடந்து செல்ல வேண்டும். உபத்திரவம் என்னும் அந்த அக்கினி ஏற்கெனவே பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இந்த ஸ்நானத்தில் இயேசுகிறிஸ்து முழுக வேண்டும். உபத்திரவங்களும் பாடுகளும் அக்கினியோடும் தண்ணீரோடும் ஒப்பிட்டுக் கூறப்பட்டிருக்கிறது (சங் 66:12). இயேசுகிறிஸ்துவின் பாடுகள் இவ்விரண்டையுமே குறிக்கும். தம்முடைய பாடுகளை இயேசுகிறிஸ்து தாம் முழுக வேண்டிய ஒரு ஸ்நானம் என்று கூறுகிறார் (மத் 20:22). இஸ்ரவேல் ஜனங்கள்  செங்கடலில் ஸ்நானம் பெற்றது போல இயேசுகிறிஸ்துவும் இந்த ஸ்நானத்தில் பங்கு பெறுகிறார் (1கொரி 10:2). 


இயேசுகிறிஸ்து தம்முடைய பாடுகளையும் உபத்திரவங்களையும் முன்னறிந்து தீர்க்கதரிசனமாக தரிசிக்கிறார். ஆகையினால்தான் இந்த வசனத்தில் இதைப் பற்றி கூறும்போது ""நான் முழுகவேண்டிய       ஒரு ஸ்நானம் உண்டு'' என்று அறிவிக்கிறார். ஸ்நானம் என்பது தண்ணீரை பார்த்துவிட்டு அதைக் கடந்து செல்வதல்ல. ஞானஸ்நானம் பெறுகிறவர் தண்ணீருக்குள் முழுக வேண்டும். அவர் தண்ணீருக்குள் முழுகினாலும் அதில் முழுவதுமாக மூழ்கி அமிழ்ந்து போய்விடுவதில்லை. ஞானஸ்நானம் ஒரு பரிசுத்த நியமனமாக நியமிக்கப்பட்டிருக்கிறது.  ஞானஸ்நானம் சரீர சுத்திகரிப்புக்கு பிரயோஜனமானது. இயேசுகிறிஸ்து தம்முடைய பாடுகளை கண்டு அவற்றைவிட்டு விலகி ஒதுங்கிப்போகாமல், அவற்றை எதிர்கொள்வதற்காக முன்னோக்கிப் போகிறார். தாம் முழுக வேண்டிய ஞானஸ்நானம் முடியுமளவும் தாம் எவ்வளவோ நெருக்கப்படுவதாகக் கூறுகிறார். 


தாம் பாடுகளை அனுபவித்து, கல்வாரி சிலுவையில் தமது ஜீவனை ஒப்புக்கொடுக்கப்போகும் வேளையை இயேசுகிறிஸ்து ஆவலோடு நோக்கிப் பார்க்கிறார். தம்முடைய பாடுகள் நிமித்தமாக  தாம் மகிமையடைப் போவதையும் இயேசுகிறிஸ்து நோக்கிப் பார்க்கிறார். கிறிஸ்துவின் பாடுகள் அவருடைய ஆத்துமாவின் பாரமாக இருக்கிறது. அந்த பாரத்தை இயேசுகிறிஸ்து சந்தோஷமாக  தம்மீது ஏற்றுக்கொள்கிறார். மனுஷருடைய மீட்பு தமது மரணத்தின் மூலமாக நியமிக்கப்பட்டிருப்பதினால், இயேசுகிறிஸ்துவின் இருதயம் பாவிகளுக்காக இரத்தத்தைச் சிந்துவதற்கு ஆயத்தமாக இருக்கிறது. 


பிரிவினை


 நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய்ப் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி, மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருந்திருப்பார்கள் என்றார் (லூக் 12:51-53).  


இயேசுகிறிஸ்து இந்த பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்ததாக ஜனங்கள் நினைக்கிறார்கள். இதைக் குறித்தும் இயேசுகிறிஸ்து இங்கு தமது உபதேசத்தைக் கூறுகிறார். தாம் பாடுகளையும் வேதனைகளையும், உபத்திரவங்களையும் அனுபவிப்பதுபோல, தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கும் பாடுகளும், உபத்திரவங்களும், வேதனைகளும் நியமிக்கப்பட்டிருக்கிறது என்பதை இயேசுகிறிஸ்து இங்கு தெளிவுபடுத்துகிறார். 


சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்போது உலகத்திலுள்ள எல்லா ஜனங்களும் அதை வரவேற்பார்களென்றும், தங்கள் உள்ளத்தில் அந்தச் செய்தியை உடனே சந்தோஷமாக ஏற்றுக்கொள்வார்களென்றும்  ஊழியக்காரர்கள் ஆரம்பத்தில் நினைத்தார்கள். ஏனெனில் இயேசுகிறிஸ்து சமாதானக் கர்த்தர். மனுஷருக்கு சமாதானம் தேவை. ஆகையினால் எல்லோரும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அங்கீகரிப்பார்களென்றும், இயேசுகிறிஸ்து பூமியிலே சமாதானத்தை உண்டுபண்ண வந்தாரென்று அவரை அங்கீகரிப்பார்களென்றும்  நினைக்கிறார்கள்.


ஆனால் அவர்களுடைய எண்ணம் தவறு என்றும் தாம் சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்ததாகவும் இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்குத் தெளிவுபடுத்துகிறார். இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை தங்களுடைய இருதயங்களில் ஏற்றுக்கொள்வோருக்கு சமாதானம் உண்டு.  ஆயினும் எல்லோரும் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்வதில்லை. நாம் ஊழியம் செய்யும்போது சுவிசேஷத்திற்கு சிறப்பான வரவேற்பு இருக்குமென்று கற்பனை செய்து எதிர்பார்க்கக்கூடாது. சுவிசேஷ பிரபல்யத்திற்கு எதிர்ப்புக்கள் உண்டாகலாம். 


 சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்போது  அதன் விளைவாக பிரிவினையே உண்டாகும். மனுஷரை பரிசுத்த அன்பினால் கட்டி இணைப்பதே சுவிசேஷத்தின் நோக்கம். எல்லோரும் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டால்  ஜனங்கள் மத்தியில் மெய்யான சமாதானம் உண்டாகும். ஆனால் மனுஷரில் பலர் பிசாசுக்கு கீழ்ப்படிந்து, சுவிசேஷச் செய்தியை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கு எதிர்த்து நிற்கிறார்கள். இதனால் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கும், ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கும் இடையே ஒரு பிரிவினை உண்டாகிறது.


பலவான் தன்னுடைய பராக்கிரமத்தினால்  தன் அரண்மனையைக் காப்பான். அவனுடைய பொருட்கள் பத்திரமாக இருக்கும். அதுபோலவே  இந்த புறஜாதி உலகத்தில், புறஜாதி ஜனங்கள் தங்களுடைய மாயையான நம்பிக்கைகளையும், மார்க்க காரியங்களையும் பாதுகாத்து பத்திரப்படுத்தி வைக்கிறார்கள். தங்களுடைய நம்பிக்கைகளை உறுதிபண்ணுவதற்கு பலவிதமான தத்துவ கதைகளைக் கூறுகிறார்கள். தங்களுக்கென்று இவர்கள் பல்வேறு தெய்வங்களை உண்டுபண்ணி அவற்றையே தங்கள் தெய்வங்களாக வழிபடுகிறார்கள். 


இப்படிப்பட்ட புறஜாதியார் மத்தியில் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும்போது, ஒரு சிலர் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை தங்கள் உள்ளங்களில் ஏற்றுக்கொண்டு, சாத்தானுடைய அந்தகார வல்லமையிலிருந்து விடுபட்டு வெளியேறி, இயேசுகிறிஸ்துவின் காணியாட்சிக்குள் பிரவேசிக்கிறார்கள். ஆனால் வேறு சிலரோ கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கு எதிர்த்து நிற்கிறார்கள். இயேசுவின்மீதும் அவருடைய சுவிசேஷத்தின்மீதும் கோபப்படுகிறார்கள். இதனால் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும்போது, அதை ஏற்றுக்கொண்டு விசுவாசிக்கிறவர்களுக்கும், அதை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கிறவர்களுக்குமிடையே மிகப்பெரிய  பிரிவினை உண்டாயிற்று. இயேசுகிறிஸ்துவும் இந்த பிரிவினையை அங்கீகரிக்கிறார். தங்களுக்கு பாடுகளும் உபத்திரவங்களும் புறஜாதியார் மூலமாக வரும்போது விசுவாசிகள் அவற்றை சகித்து தாங்கிக் கொள்ளவேண்டும். உபத்திரவத்தின் வழியாக கடந்துசெல்ல விசுவாசி ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ள வேண்டும். உபத்திரவத்தை தாங்குவதற்குத் தேவையான பொறுமையையும் பலத்தையும் நாம் இயேசுகிறிஸ்துவிடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும்.


சுவிசேஷத்தினால் உண்டாகும் பிரிவினை  சில குடும்பத்திற்குள்ளும் பிரவேசிக்கிறது. சுவிசேஷத்தினிமித்தம் தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும் விரோதமாய் பிரிந்திருப்பார்கள். தகப்பன், மகன் ஆகிய இருவரில் ஒருவன் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்கிறான். மற்றொருவன் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துவிடுகிறான். சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்கிறவன் இயேசுகிறிஸ்துவுக்கு பக்தி வைராக்கியமாக ஜீவிக்கிறான். சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாத அவிசுவாசியோ தன்னுடைய பேச்சிலும் செயலிலும் இயேசுகிறிஸ்துவுக்கும்  அவருடைய சுவிசேஷத்திற்கும் எதிர்த்து நிற்கிறான். 


அவிசுவாசி விசுவாசியை விரோதிக்கிறான். அவன்மீது கோபப்படுகிறான்.  விசுவாசியும் அவிசுவாசியோடு ஒத்துப்போவதில்லை. இதனால் ஏற்படும் பிரச்சனையில் அவிசுவாசி விசுவாசியை குற்றப்படுத்தி, துன்பப்படுத்தி, உபத்திரவப்படுத்துகிறான். சில குடும்பங்களில்  சுவிசேஷத்தினிமித்தம் தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும், மருமகள் மாமிக்கும் விரோதமாக பிரிந்திருப்பார்கள். 


இயேசுகிறிஸ்துவையும் அவருடைய சுவிசேஷத்தையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் விசுவாசிகளை துன்பப்படுத்த எப்போதுமே ஆயத்தமாக இருக்கிறார்கள். விசுவாசியும் அவிசுவாசியும் குடும்பக் காரியங்களில் நெருங்கிய உறவு முறையில் இருந்தாலும், சுவிசேஷத்தினிமித்தமாக அவர்களுக்குள் பிரிவினை உண்டாகிறது. சுவிசேஷம் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அப்போஸ்தலர்களுக்கு உபத்திரவம் உண்டாயிற்று என்று அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகம் தெளிவுபடுத்துகிறது. சுவிசேஷத்திற்கு எதிர்ப்புக்கள் இருப்பதினால், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறவர்கள் இந்தப் பூமியில் தங்களுக்கு  எல்லா இடங்களிலும் சமாதானமும் வரவேற்பும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஆகையினால் இயேசுகிறிஸ்து பூமியில் சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்ததாகத் தம்முடைய சீஷர்களிடம் தெளிவுபடுத்துகிறார்.   


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.