மற்றவர்களுக்கு நாம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய இயேசுவின் உபதேசம்

 

மற்றவர்களுக்கு நாம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய இயேசுவின் உபதேசம்


செபதேயுவின் குமாரர்


அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப் போகிறதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலதுபாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குகே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பபீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனாலும் என் வலதுபாரிசத்திலும் என் இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார் (மாற்கு 10:35-40).


இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் இருவர்  தங்களுடைய ஆசைகள் நிறைவேற வேண்டுமென்று விண்ணப்பம்பண்ணுகிறார்கள். இந்த சம்பவம் மத் 20:20-ஆவது வசனத்திலும்  விவரிக்கப்பட்டிருக்கிறது. மத்தேயு எழுதின சுவிசேஷத்தில், இந்த விண்ணப்பத்தை இவ்விரண்டு சீஷர்களின் தாயார் இயேசுகிறிஸ்துவிடம் கேட்டதாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் மாற்கு எழுதின சுவிசேஷத்திலோ, இவ்விரண்டு சீஷர்களுமே  இயேசுகிறிஸ்துவிடம் தங்களுடைய விண்ணப்பங்களை ஏறெடுக்கிறார்கள். 


ஒரு சிலர் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்களை சரியாக பயன்படுத்துவதில்லை. வேறு சிலரோ தங்களுடைய ஆசீர்வாதங்களை தவறாகப் பயன்படுத்துவார்கள். இயேசுகிறிஸ்துவிடம் எதைக் கேட்டாலும் அதை அவர் தங்களுக்கு அருளுவார் என்று இவ்விரண்டு சீஷர்களும் எதிர்பார்க்கிறார்கள். இவர்களுடைய ஆசைக்கு  அளவேயில்லை. இயேசுகிறிஸ்துவின் மகிமையில், இவர்களில் ஒருவன் அவருடைய வலதுபாரிசத்திலும், வேறொருவன் அவருடைய இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள். நாம் வேண்டிக்கொள்கிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் இயேசுகிறிஸ்து நமக்குள்ளே  கிரியை செய்ய வல்லவராயிருக்கிறார் (எபே 3:20) என்றாலும் நாம் வேண்டிக்கொள்வதும், நினைப்பதும் தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ற பிரகாரம் இருக்கவேண்டும். 


இவ்விரண்டு சீஷர்களுக்கும் தங்கள் கேட்டுக்கொள்கிறது இன்னதென்று அவர்களுக்கே தெரியவில்லை. இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தால் அவர் ராஜாவாக இருப்பாரென்று செபதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் கற்பனை பண்ணுகிறார்கள். அவர் ராஜாவானால் அப்போஸ்தலர்கள் அவருடைய பிரபுக்களாகவும், மந்திரிகளாகவும், உயர்பதவி வகிக்கும் அதிகாரிகளாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இவ்விரண்டு சீஷர்களும் இயேசுகிறிஸ்துவுக்கு மிகவும் நெருக்கமாக மற்றவர்களைவிட உயர்ந்த அந்தஸ்தில் இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள். அவருடைய வலதுகரமாகவும் இடதுகரமாகவும் இருக்கவேண்டுமென்பது இவர்களுடைய விருப்பம். 


இவ்விரண்டு சீஷர்களும் நல்லவர்களாக இருக்க விரும்பவில்லை. தாங்கள் நல்லது செய்யவேண்டுமென்று விண்ணப்பம் பண்ணவில்லை. மற்றவர்கள் மத்தியில், அவர்களுடைய பார்வையில் தாங்கள் உயர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். பல சமயங்களில் நம்முடைய ஜெபங்களில் நாமும் எதைக் கேட்க வேண்டுமென்று தெரியாமல் விண்ணப்பம்பண்ணுகிறோம். நமது பலவீனமும் அதரிசனமும் ஆவிக்குரிய மனக்கண்களை மூடிப்போடுகிறது. தேவனிடத்தில் நாம் உத்தரவு போடக்கூடாது. அவருடைய உத்தரவுக்கு காத்திருந்து நாம் கீழ்ப்படிய வேண்டும். இதுவே  ஞானமான செயல். 


பாடுகளை சந்திப்பதற்கு நம்மை ஆயத்தப்படுத்துவதே கிறிஸ்துவின் சித்தம். நமது ஜெபமும் கிறிஸ்துவின் சித்தத்திற்கு ஏற்ற பிரகாரமாக இருக்கவேண்டும். பாடுகளை அனுபவிப்பதற்கு பயிற்சி எடுக்க வேண்டிய     நாம், மேன்மைக்கும் பெருமைக்கும் ஆசைப்படக்கூடாது. இயேசுகிறிஸ்துவோடு எப்படி பாடு அனுபவிப்பது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை அறிந்து கொள்வதற்கு தேவனுடைய ஞானமும் கிருபையும் நமக்கு தேவை. இயேசுகிறிஸ்துவோடு நாம் பாடுபட்டால் அவரோடுகூட நாம் ஆளுகையும் செய்வோம். யாக்கோபும் யோவானும் இயேசுகிறிஸ்துவோடு எப்படி பாடுபடுவது என்பதைப் பற்றி அவரிடம் கேட்காமல், அவருடைய மகிமையில் பங்கு பெறவேண்டும் என்று மாத்திரமே கேட்கிறார்கள். கிறிஸ்துவின் பாடுகளில் பங்குபெறாதவர்கள் அவருடைய மகிமையிலும் பங்கு பெறமாட்டார்கள். 

மற்றவர்களின் எரிச்சல்


மற்றப் பத்துப்பேரும் அதைக் கேட்டு, யாக்கோபின்மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள் (மாற்கு 10:41).


யாக்கோபும் யோவானும் கிறிஸ்துவின் மகிமையில் மேன்மையான இடத்தில் இருக்க வேண்டுமென்று விண்ணப்பம்பண்ணுவதை மற்ற பத்து சீஷர்களும் கேட்கிறார்கள். அதைக் கேட்டு இவ்விரண்டு சீஷர்கள்மீதும் அவர்களுக்கு  கோபமுண்டாயிற்று. இவர்கள்மீது எரிச்சலாகிறார். ஏனெனில் சீஷர்கள் ஒவ்வொருவருமே தங்களுக்குத்தான் அந்த மேன்மையான இடம் என்று கற்பனை பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். தாங்கள் விரும்புவதை இவ்விரண்டு சீஷர்களும் கேட்கிறார்களே என்று நினைத்து இவர்கள்மீது எரிச்சலாகிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ  சீஷர்களின் எண்ணத்தை அறிந்து அவர்களை எச்சரிக்கிறார். 


பணிவிடைக்காரனும் ஊழியக்காரனும்


 அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்  (மாற்கு 10:42-45).


இந்த உலகத்தின் அதிகாரிகள் தங்களுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள். மற்றவர்களை இறுமாப்பாய் ஆளவேண்டுமென்பதே அவர்களுடைய விருப்பம். ஜனங்கள் மூலமாக தங்களுக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்பதிலேயே உலகத்தின் அதிகாரிகள் கவனம் செலுத்துகிறார்கள். தங்களுடைய ஆடம்பரத்தையும், வசதிகளையும் அதிகாரத்தையும் எப்படி பெருக்கிக்கொள்வது என்பதே அவர்களுடைய எண்ணம். ஜனங்கள் தங்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் உலகத்தின் அதிகாரிகள் ஜனங்களுக்கு ஒரு நன்மையும் செய்யமாட்டார்கள். 


உலகத்தின் அதிகாரிகளைப்போல சபையில் இறுமாப்பான ஆளுகை இருக்கக்கூடாது. போதகர்கள் மேய்ப்பர்களாக ஊழியம் செய்யவேண்டும். தங்களுடைய சபையிலுள்ள ஆத்துமாக்களை ஆடுகளாக நினைத்து அவர்களைப் பராமரிக்க வேண்டும். அவர்களை அமர்ந்த தண்ணீரண்டையில் வழிநடத்தி ஆதரிக்க வேண்டும். அவர்களுக்கு போஜனம் கொடுக்க வேண்டும். ஊழியக்காரர்கள் அவர்களுக்கு ஊழியம் செய்கிறவர்களாக இருக்கவேண்டும். ஒரு சில போதகர்கள் தங்கள் விசுவாசிகளை ஆடுகளாகப் பார்ப்பதற்குப் பதிலாகப் குதிரைகளாக, பார்ப்பார்கள். ஆடுகளை அன்பாக மேய்ப்பதற்குப் பதிலாக, குதிரைகளை சவுக்கினால் அடித்து  மேய்ப்பதுபோல சபையை நடத்துவார்கள். 


யாராவது முதன்மையானவனாக இருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாக இருக்கவேண்டும். யாராவது  பெரியவனாக இருக்க விரும்பினால் அவன் எல்லோருக்கும் பணிவிடைக்காரனாக இருக்கவேண்டும். முதன்மையானவர்களும் பெரியவர்களும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய  தங்களை பிரதிஷ்டை பண்ணவேண்டும். நாம் பிறருக்கு பயனுள்ளவர்களாக இருக்கவேண்டும். இந்த சத்தியத்தை விளக்குவதற்கு இயேசுகிறிஸ்து தம்மையே முன்மாதிரியாக சீஷர்களிடம் கூறுகிறார். மனுஷகுமாரன் ஊழியங்கொள்ளும்படி வராமல் ஊழியம் செய்வதற்காகவே வந்திருக்கிறார். அநேகரை மீட்கும் பொருளாக தம்முடைய ஜீவனைக் கொடுக்கவே இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வந்திருக்கிறார். கர்த்தருடைய ஊழியக்காரர்களாகிய நாமும் ஊழியம் கொள்ளாமல்  ஊழியம் செய்ய வேண்டும். 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.