தினம் ஒரு மிஷனரி
புனித பேசில் 330-379
பெருமை நமக்கு வேண்டாம்
பதவியும் பட்டங்களும் பெறுவது மட்டுமா வாழ்க்கை? இல்லை. இல்லவே இல்லை.
சிலர் பதவி வந்ததும் தங்களையும் மறப்பர். தங்களைச் சுற்றி உள்ளோரையும் மறந்து விடுவர்.
இப்படிப்பட்ட உலகத்தில் ஓர் முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்துக் காட்டியவர் தான் பேசில். கல்வியில் சிறந்தவர்; கற்றுத்தந்தவர்களையும் மிஞ்சியவர்; பேச்சிலே வல்லுநர்; நட்புப் பாராட்டுவதில் நல்லுள்ளம் கொண்டவர். சொற்பொழிவாற்றுவதில் சிறந்தவராகக் காணப்பட்டதால் நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார். புகழும் செல்வமும் அவரைத் தேடி வந்தன. பலபதவிகளும் அவரை நாடி வந்தன. நண்பர்கள் வட்டம் நாலாபுறமும் இருந்து குவிந்தது. பரி.கிரகெரி என்பவர் மட்டுமே இவரின் உண்மை நண்பராக உறுதுணையானா
பதவியில் நம்மைப் பறிகொடுத்துவிட்டால் பின்னர் பரிதாபம்தான். பேசில் இதை உணர்ந்தார். பெருமை என்னும் சோதனைக்கு உள்ளாவதை வெறுத்தார். தன்னைத் தேடி வந்த பதவிகள் அனைத்தையும் உதறி கூட தள்ளினார். தன் செல்வமனைத்தையும் எடுத்து, தரித்திரர், நோய்வாய்ப்பட்டோர் போன்றவர்களைப் பராமரிக்கவும், ஆண்டவரின் அன்பு, தியாகம் போன்றவைகளை எடுத்துரைக்கவும் பயன்படுத்தினார். அருட்பணிக்கே முதலிடம் கொடுத்தார்.
வழக்கறிஞர் தொழிலை விட்டு, துறவறம் மேற்கொண்டார். ஏழைகளை அரவணைத்து அவர்களுக்குப் பலவித உதவிகளையும் செய்தார். நாள்தோறும் இவரின் பிரசங்கத்தைக் கேட்க மக்கள் கூட்டம் கூடினர். மக்களுக்காகவே, சிறந்த போதகராய் மாறி, அவர்களின் ஆன்மீக வாழ்வை உயர்த்தினார். ஆயிரக்கணக்கானோர் மறுபிறப்படைந்தனர்.
அன்பரே! மக்களுக்காகவே வாழ்ந்த இம்மாமனிதரைப் போன்று சுயநலமில்லா வாழ்க்கை வாழ ஆயத்தமா?