உவமைகள் முன்னுரை 2

 

உவமைகள் முன்னுரை 2


அநேக விசேஷங்கள்


அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் (மத் 13:3). 


தம்மிடத்தில் கூடி வந்திருக்கும் திரளான ஜனங்களுக்கு அவர் அநேக விசேஷங்களை கூறினார். அவர் கட்டுக்கதைகளையோ, சிரிக்க வைக்கும் வார்த்தைகளையோ பேசி ஜனங்களுக்கு வேடிக்கை காண்பிக்கவில்லை. அவர்களுடைய நித்திய ஜீவனைக்குறித்து மிகுந்த பாரத்தோடு பிரசங்கம்பண்ணுகிறார்.  தாம் கூறுவதை ஜனங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்னும் அக்கறையில் அவர்களுக்கு உவமைகளாக கூறி விசேஷங்களை விவரிக்கிறார். 


உவமைகளாக கூறி சத்தியத்தை விளக்கும்போது, ஜனங்கள் அதை எளிதில் புரிந்துகொள்வார்கள். ஜனங்களால் எந்த அளவிற்கு புரிந்துகொள்ள முடியுமோ அந்த அளவிற்குத்தான் நாம் பிரசங்கம்பண்ண வேண்டும். ஜனங்களுக்கு புரியாத  காரியங்களை பிரசங்கம்பண்ணுவதில் பயனில்லை. தேவனுடைய ரகசியங்களை ஜனங்களுக்கு புரியவைக்கவேண்டும். ஜனங்களுக்கு புரியும் பாஷையில், அவர்களுக்கு புரியும் விதத்தில் மிகவும் எளிமையாக பிரசங்கம்பண்ணவேண்டும். 


உவமைகளைப் பற்றிய விளக்கம்


    1. கிரேக்க மொழியில் ""பேரபோல்'' என்னும் சொல் தமிழில் உவமை என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது.  இந்தச் சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. ஒப்புமை (மாற்கு 4:30); அடையாளம் (எபி 9:9; எபி 11:19); பழமொழி  (லூக்கா 4:23); விளக்கம் (மத் 13:3) 


    2. உவமைகள் சத்தியத்தை விளக்கும். ஏற்கெனவே ஜனங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும் காரியங்களோடு ஒப்பிட்டு இந்த உவமை கூறப்படும். இதன் மூலமாக ஜனங்கள் சத்தியத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.


    3. மற்றவர்களைக் கடிந்து கொள்ளும்போது வார்த்தைகளை நேரடியாகப் பேசினால் அவர்களுடைய மனது புண்படும். உவமை மூலமாக மற்றவர்களைக் கடிந்து கொள்ளும்போது அவர்களுக்கு அதிக பாதிப்பு இராது. (2சாமு 12)


    4. உவமைகளால் ஒரு காரியத்தை விளக்கும்போது கேட்போருக்கு ஆர்வம் மிகுதியாகும். இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் விருப்பம் அதிகரிக்கும். (மத் 13:10-17; 2சாமு 12)


    5. ஒரு சத்தியத்தை உவமையின் மூலமாக  விளக்கும்போது உவமைக்கு அதிக முக்கியத்துவம் தராமல் சத்தியத்திற்கே முக்கியத்துவம் தரவேண்டும். சத்தியம் உண்மையானது. உவமை சத்தியத்தை விளக்கும்  விளக்கவுரை மட்டுமே. 


    6. ஒரு சத்தியத்தை உவமைகளால் விளக்கும்போது அந்த உவமைகளின் வரலாற்றுப் பின்னணிகள், சூழ்நிலைகள், கூறப்படும் காலம், ஆகிய அனைத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும்.


    7. உவமையாகக் கூறப்படும் வார்த்தைகளுக்கு ஆவிக்குரிய வியாக்கியானம் தரக்கூடாது. உவமையால் விளக்கப்படும் சத்தியத்திற்கு மட்டுமே ஆவிக்குரிய வியாக்கியானம் தரவேண்டும்.


    8. உவமைக்கும், சத்தியத்திற்கும் இடையிலுள்ள ஒற்றுமைகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 


    9. ஒரு சத்தியம் உவமையால் விளக்கப்படுவது தேவைப்படும்போது மட்டுமே உவமையைப் பயன்படுத்த வேண்டும். பல சத்தியங்கள் உவமை இல்லாமலேயே தெளிவாக விளங்கும்.


    10. இயேசு கிறிஸ்து தாமே வியாக்கியானம் பண்ணுவதற்குரிய வழிமுறைகளை வகுத்துத் தந்திருக்கிறார். வேத வாக்கியத்திற்கு முரணாக வியாக்கியானம் பண்ணுவது எப்போதுமே தவறு.


 மத் 13:18#23 ஆகிய வசனங்களில் விதைக்கிறவனைப் பற்றிய உவமை விளக்கப்பட்டிருக்கிறது. இது கிருபையின் காலத்தை வர்ணிக்கிறது. தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்கிற ஜனங்களுடைய இருதயங்கள் பல்வேறு விதமானவை. இருதயங்களில் வித்தியாசம் இருப்பதுபோலவே, அவர்கள் மூலமாக வெளிவரும் ஆவியின் கனியிலும் வித்தியாசம் இருக்கும். (மத் 13:24#30, 36#43).  வேலியில்லாத தோட்டத்திற்கு அருகேயுள்ள நடைபாதை. எல்லோரும் அதில் நடந்து செல்வதினால் அந்த நிலமே இறுகிப்போய்க் கடினமாக இருக்கும். கற்களும், முற்களும் அகற்றப்பட்ட விளைநிலம். நன்றாக உழுது ஆயத்தம் பண்ணப்பட்ட நிலம். விதை விதைத்தவுடன் அது வளர்வதற்கு நிலம் பக்குவமாக இருக்கிறது.


ஏன் உவமைகளாக பேசுகிறீர்


அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள் (மத் 13:10). 


இயேசுகிறிஸ்து அநேக விசேஷங்களை ஜனங்களுக்கு உவமைகளாக கூறுகிறார்.  இது சீஷர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கு முன்பு இயேசு தமது பிரசங்கத்தில் உவமைகளை பயன்படுத்தவில்லை. ஆகையினால் அவர்கள் இயேசுகிறிஸ்துவிடம்   வந்து ""ஏன் அவர்களோடே உவமைகளாக பேசுகிறீர்'' என்று கேட்கிறார்கள். 


பரலோகத்தின் சத்தியத்தை ஜனங்கள் புரிந்துகொள்ளவேண்டும்  என்னும் ஆவல் சீஷர்களிடமும் உள்ளது. ஆகையினால் அவர்கள் இயேசுவிடம் வந்து ""ஏன் அவர்களோடே பேசுகிறீர்'' என்று பொதுவாக கேட்காமல், உவமைகளை மாத்திரம் முக்கியப்படுத்தி கேட்கிறார்கள். 


இயேசு கிறிஸ்து உவமைகளைப் பயன் படுத்தியதற்குக் காரணங்கள்


    1. ஜனங்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி, சத்தியத்தை வெளிப்படுத்துவதற்காக    (மத் 13:10#11,16)


    2. ஆர்வத்தோடு கேட்பவர்களுக்கு புதிய சத்தியத்தை அறிவிப்பதற்காக             (மத் 13:11-12, 16-17)


    3. ஏற்கெனவே தெரிந்து வைத்திருக்கும் காரியங்களோடு ஒப்பிட்டு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காக (மத் 13:11)


    4. கலகக்காரர்களுக்குச் சத்தியத்தை அவர்கள் புரிந்து கொள்ளாதவாறு மறைப்பதற்காக (மத் 13:11-15)


    5. சத்தியத்தை நேசிக்கிறவர்களுக்கும், இன்னும் அதிகமாக சத்தியத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கும் அதிகமான சத்தியங்களை உபதேசம் பண்ணுவதற்காக (மத் 13:12)


    6. சத்தியத்தை விரும்பால், அதை விரோதிக்கும் ஜனங்களிடமிருந்து சத்தியத்தைத் தனியே பிரித்துச் செல்வதற்காக (மத் 13:12)


    7. தீர்க்கதரிசத்தை நிறைவேற்றுவதற்காக (மத் 13:14-17,35)


பரலோக ராஜ்யத்தின் ரகசியங்கள்


 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை (மத் 13:11). 


சீஷர்களின் கேள்விக்கு இயேசுகிறிஸ்து விரிவாக பதில் கூறுகிறார். தேவனுடைய காரியங்கள் ஜனங்களுக்கு எளிதாக புரியவேண்டும். அதை அவர்களுக்கு விளக்கி கூறவேண்டும். ஜனங்களுடைய உள்ளத்திலும் பிரசங்கத்தை கேட்கவேண்டும் என்னும் ஆர்வம் ஏற்படவேண்டும். ஜனங்கள் ஆர்வமில்லாமல் இருந்தால், அவர்களிடத்தில் எதை பேசினாலும் அவர்கள் கவனிக்கமாட்டார்கள். ஆர்வமில்லாத  ஜனங்கள் எதையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆகையினால் இயேசுகிறிஸ்து இந்த ஜனங்களோடு உவமைகளாக பேசுகிறார். 


இயேசுகிறிஸ்துவின் உவமைகள் அக்கினிஸ்தம்பத்தையும் மேகஸ்தம்பத்தையும் போல இருக்கிறது. மேகஸ்தம்பம் எகிப்தியருக்கு இருளைக்கொடுத்து. அக்கினிஸ்தம்பம் இஸ்ரவேலருக்கு வெளிச்சத்தை கொடுத்து அவர்களை ஆறுதல்படுத்திற்று. அதுபோல இயேசுகிறிஸ்து கூறும் உவமைகள்   தேவனுடைய ரகசியங்களை அவர்களுக்கு வெளிச்சத்தில் வெளிப்படுத்தி ஆறுதலை கொடுக்கிறது.


பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி சீஷர்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. ஆனால் திரளான ஜனங்களுக்கோ             அது அருளப்படவில்லை. சீஷர்களிடம் தேவனைப்பற்றிய ஞானமும், அவருடைய வார்த்தையை பற்றிய அறிவும் உள்ளது. ஆனால் ஜனங்களிடமோ இந்த ஞானமில்லை. ஜனங்கள் பேதைகளாக இருக்கிறார்கள். பாலைப்பருகும் சிறு குழந்தைகளைப்போல இருக்கிறார்கள். 


சிறு குழந்தைகளுக்கு பாலைத்தான் போஜனமாக கொடுக்க முடியும். கடினமான உணவு அவர்களுக்கு செமிக்காது. இயேசுகிறிஸ்து இதை உணர்ந்து     தம்மிடத்தில் கூடி வந்திருக்கும் திரளான ஜனங்களுக்கு பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களை மிகவும் எளிமையாக விளக்கி கூறுகிறார். அவர்களுக்கு கண்கள் இருந்தும் அதை பயன்படுத்த தெரியாதவர்களாக இருக்கிறார்கள். 


சீஷர்கள் இயேசுவோடு கூடவே இருப்பதினால் அவர்களுக்கு சுவிசேஷத்தின் ரகசியங்களைப்பற்றிய தெளிவு இருக்கிறது. உவமைகளாக கூறினாலும் நேரடியாக கூறினாலும் சீஷர்கள் சுவிசேஷத்தின் ரகசியங்களை புரிந்து கொள்கிறார்கள். ஆனால்  பொதுவான ஜனங்களுக்கோ சுவிசேஷத்தின் ரகசியங்களை பற்றி ஒன்றும் தெரியாது. பக்குவமாக அவர்களுக்கு எடுத்துக்கூறினால்தான் தேவரகசியம் புரியும்.


கர்த்தர் கூறும் உவமைகள் ஒரு பழத்தை பாதுகாக்கும் மேல் தோலைப்போன்றது. சோம்பேறியாக இருக்கிறவர்கள் பழத்தை உரித்து சாப்பிட மனமில்லாதவர்களாக இருப்பார்கள். பழம் வேண்டும் என்று விரும்புகிறவர்களோ, அதன் தோலை உரித்து, அதற்குள் பக்குவமாக பாதுகாக்கப்பட்டிருக்கும் பழத்தை விரும்பி புசிப்பார்கள். 


பரலோக ராஜ்யத்தின் ரகசியங்கள் சீஷர்களுக்கு கிருபையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் இயேசுவோடுகூட இருப்பதினால் அந்த ரகசியங்களோடும் கூடவே இருக்கிறார்கள். தேவன் கொடுக்கும் முதலாவது வரமே அவருடைய ஞானம்தான். கர்த்தருக்கு பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம். 


அப்போஸ்தலர்கள் தெய்வீக ஞானத்தை கிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் கிறிஸ்துவோடு கூடவே இருந்து, அவரை நெருக்கமாக பின்பற்றி தேவஞானத்தை பெற்றுக்கொண்டார்கள். நாமும் இயேசுகிறிஸ்துவோடு நெருங்கி வந்து, ஜெபத்தில் அவரோடு அந்நியோன்யமாக சம்பாஷணை பண்ணும்போது, சுவிசேஷத்தின் ரகசியங்கள்  நமக்கும் தெளிவாகும்.


இந்த உலகத்திலுள்ள எல்லா ஞானத்தையும்விட, சுவிசேஷத்தின் ரகசியத்தை அறியும் ஞானமே பிரதானமானது. இயேசுகிறிஸ்துவை மெய்யாக பின்பற்றுகிற எல்லா விசுவாசிகளுக்கும் இந்த தெய்வீக ஞானம் கொடுக்கப்படும். 


முன்பு இரகசியமாகவும், மறைபொருளாகவும் இருந்தவை இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளுக்குத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தை ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு எதுவுமே மறைபொருளாயிராது. (மத் 13:19;  2கொரி 4:3-4)


நாம் ஜீவிக்கும் காலத்தில் களையும், பயிரும் சேர்ந்திருக்கிறது. நல்ல நிலமும், மோசமான நிலமும் சேர்ந்தேயிருக்கிறது. நீதிமான்களும், துன்மார்க்கரும் சேர்ந்தேயிருக்கிறார்கள். இக்காலத்தின் முடிவில் இவர்கள் பிரிக்கப்படுவார்கள். துன்மார்க்கர் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள். நீதிமான்களோ தேவனுடைய இராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். 


உள்ளவனும் இல்லாதவனும்


உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்          (மத் 13:12).


தேவன் தமது வரங்களை தம்முடைய சித்தத்தின் பிரகாரமாக விசுவாசிகளுக்கு பகிர்ந்து கொடுக்கிறார். இவற்றை பகிர்ந்து கொடுக்கும்போது தாம் கடைபிடிக்கும் நியதிகளை இயேசு இங்கு விவரிக்கிறார். வரங்களை பெற்றுக்கொண்டவர்கள் அதை பயன்படுத்தி வளப்படுத்தினால் அவர்களுக்கு மேலும் அதிகமான வரங்களை கொடுப்பார். வரங்களை பெற்றுக்கொண்டவர்கள் அதை பயன்படுத்தாமல்  பூமியில் புதைத்துவைத்துவிட்டால், ஏற்கனவே கொடுத்த வரங்களையும் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்வார்.


ஆகையினால் வரங்களை பெற்றிருக்கிறவன் அவற்றை பயன்படுத்தவேண்டும். உள்ளவன் எவனோ அவனுக்கு கொடுக்கப்படும். பயன்படுத்துகிறவர்களுக்கு மேலும் அதிகமாக கொடுக்கப்படும். இவர்களுக்கு தேவனுடைய கிருபையும் சிலாக்கியமும் அதிகமாக கிடைக்கும்.   தேவன் எங்கு அஸ்திபாரம் போட்டிருக்கிறாரோ அங்கு அந்த அஸ்திபாரத்தின்மீது அவர் கட்டியெழுப்புவார். 


வரங்களை பெற்றுக்கொண்டு அவற்றை பயன்படுத்தாதவர்களுக்கு எச்சரிப்பின்  வார்த்தை கூறப்பட்டிருக்கிறது. தேவன் இவர்களுக்கு வரங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் இவர்களோ அவற்றை  பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். பயன்படுத்தாத வரங்களை தேவன் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்வார். நம்முடைய கரங்களிலிருந்து  தாம் கொடுத்த தாலந்துகளை தேவன் எடுத்துக்கொண்டால், நமது நிலமை பரிதாபமாக இருக்கும். வியாபாரத்தில் எல்லாவற்றையும் இழந்து திவாலாவானவர்களை போல இருப்போம்.


விசுவாசிகள் அறிவிலும், ஞானத்திலும் விருத்தியடைவார்கள். தேவனைப் பற்றிய இரகசியங்கள் விசுவாசிகளுக்கு அதிகமாக வெளிப்படுத்தப்படும். அவர்கள் வெளிச்சத்தைக் கண்டடைந்து, வெளிச்சத்தில் நடப்பார்கள். அவிசுவாசிகளோ அறியாமையில் மூழ்கி, இருளில் நடப்பார்கள்.  


 மனுஷனுடைய அவிசுவாசத்தினாலும், இருதயத்தின் கலகக் குணத்தினாலும், இவர்களுக்கு இப்படிப்பட்ட பரிதாபமான சூழ்நிலை வரும். இது சாத்தானின் கிரியை. (மத் 13:15,19; 2கொரி 4:3-4)


காணாதவர்களும் கேளாதவர்களும்


அவர்கள் கண்டும் காணாதவர் களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன் (மத் 13:13).


இயேசுகிறிஸ்து இரண்டுவிதமான ஜனங்களைப்பற்றி இங்கு குறிப்பிடுகிறார். இவர்கள் மத்தியில்தான் இயேசுகிறிஸ்து ஊழியம் செய்கிறார். ஒரு சிலர் வேண்டுமென்றே பேதைகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கு என்னசொன்னாலும் புரியாது. இவர்கள் காண்கிறார்கள். ஆனால் எதையும் பார்ப்பதில்லை. 


கிறிஸ்துவினுடைய உபதேசத்தின் மூலமாக வெளிப்படும் சுவிசேஷத்தின் ரகசியங்களை இவர்கள் காணாதபடிக்கு தங்கள் கண்களை மூடிக்கொள்கிறார்கள். இவர்களுடைய கண்கள் மூடப்பட்டு         அந்தகார இருளில் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களிடமிருந்து தேவன் தமது சுவிசேஷத்தின் ரகசியம் என்னும் வெளிச்சத்தை அகற்றிப்போடுகிறார். இவர்கள் தாங்களாகவே, வேண்டுமென்றே, சுவிசேஷத்திற்கு தங்கள் கண்களை மூடிக்கொண்டவர்கள்.


இவர்கள் ஆவிக்குரிய குருடர்களாகவும், செவிடர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் காதுகளால் கேட்கிறார்கள். ஆனால் தாங்கள் கேட்ட சத்தியத்தின் பொருளை உணராதிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் கண்களால் காண்கிறார்கள். ஆனால் தாங்கள் கண்டதை தங்களுடைய உள்ளத்தில் அறியாதிருக்கிறார்கள். 


அவர்களால் காணமுடியும். ஆனால் காண மறுக்கிறார்கள். அவர்களால் கேட்க முடியும். ஆனால் கேட்க மறுக்கிறார்கள். அவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் சத்தியத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். தங்களுடைய சொந்த மார்க்கங்களையும், பாரம்பரிய பழக்கவழக்கங்களையும் விட்டுவெளியேவர அவர்களுக்கு மனமில்லை. ஒளியில் நடந்து புதிய ஜீவனைப் பெற்றுக் கொள்ள அவர்களுக்கு ஆர்வம் இல்லை.  (மத் 13:11)


ஏசாயாவின் தீர்க்கதரிசனம்


ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே          (மத் 13:14,15).


இந்த தீர்க்கதரிசனம் ஏசாயா 6:9,10#ஆகிய வசனங்களிலிருந்து மேற்கோளாக கூறப்பட்டிருக்கிறது. புதிய ஏற்பாட்டில் ஆறு இடங்களில் இந்த தீர்க்கதரிசனம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏசாயாவின் காலத்தில் இருந்த பாவிகளைப்பற்றி கூறப்பட்டுள்ள இந்த தீர்க்கதரிசனம் இயேசுகிறிஸ்துவின் காலத்தில் நிறைவேறிற்று. இந்த தீர்க்கதரிசனம் இன்னும் நிறைவேறிக்கொண்டிருக்கிறது.


பாவிகள் தாங்களாகவே, வேண்டுமென்றே குருடராக இருட்டில் இருக்கிறார்கள். குருடும் இருட்டும் இவர்களுடைய பாவமாகும். ஜனங்களுடைய இருதயம் கொழுத்திருக்கிறது. இருதயம் கொழுத்திருக்கும்போது அவர்களுடைய சரீரத்தின் அவயவங்கள் சுறுசுறுப்பாக செயல்படாது. காதுகள் மந்தமாக கேட்கும். கண்கள் மூடிக்கொள்ளும். இந்த உலகத்தில் நீதியின் சூரியன் உதித்திருப்பதை இவர்கள் காணாமல் குருடராகவே இருக்கிறார்கள். இவர்களுக்கு கண்களும் காதுகளும் இருக்கிறது. ஆனால் இவை செயல்படவேண்டிய விதமாக செயல்படாமல் மந்தமாக இருக்கிறது. 


பாவிகள் தங்கள் காதுகளால் கேளாமல் இருக்கிறார்கள். கண்களால் காணாமல் இருக்கிறார்கள். இவர்களிடத்தில் தேவனுடைய கிருபை இருக்கிறது. ஆனால் இந்த கிருபையினால் இவர்களுக்கு பிரயோஜனம் எதுவும் இல்லை. இவர்கள் ஜீவனுள்ள பிரமாணத்திற்கு அருகில் இருக்கிறார்கள். ஆனால் இவர்களுடைய இருதயமோ குணப்படாமல் மரித்துப்போயிற்று. தேவனுடைய பிரமாணங்களை இவர்களால் உணரமுடியவில்லை.


இவர்கள் தங்கள் இருதயத்தில் உணர்ந்து மனந்திரும்பாமல் இருக்கிறார்கள். ஆகையினால் தேவன் இவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கிறார். 


ஒருவருடைய மனமாற்றத்திற்கு காண்பதும், கேட்பதும், உணர்ந்து கொள்வதும் மிகவும் அவசியமாகும். தேவன் தம்முடைய கிருபையின் கிரியைகளினால் மனுஷரோடு கிரியை நடப்பிக்கிறார்.  பல சமயங்களில் தேவன் தமது கிருபைகளை மனுஷர் மூலமாகவே அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். மனுஷருடைய இருதயத்தை திறந்து அவர்களை குணப்படுத்துகிறார். அன்பின் கயிறுகளால் அவர்களை கட்டி தமது பக்கமாக அழைத்து வருகிறார். அந்தகார இருளிலிருந்து அவர்களை வேறு பிரித்து, சாத்தானுடைய வல்லமையிலிருந்து அவர்களை விடுவித்து,       தம் பக்கமாக அழைத்துவருகிறார். 


இரட்சிக்கப்படுகிறவர்கள் இருளை விட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பி வருகிறார்கள் (அப் 26:18). உண்மையாகவே தேவனிடத்திற்கு மனந்திரும்பி வருகிறவர்களை அவர் மெய்யாகவே குணப்படுத்துகிறார். ஆகையினால் நமது கண்கள் காண்கிறதாகவும், காதுகள் கேட்கிறதாகவும் இருக்குமானால் அவைகள் பாக்கியமுள்ளவைகள். 


பாக்கியமுள்ள கண்களும் காதுகளும்


உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள் (மத் 13:16).


இயேசுகிறிஸ்துவின் உபதேசங்களை அவருடைய சீஷர்கள் மிகுந்த ஆர்வத்தோடு கவனித்து கேட்கிறார்கள். தேவனுடைய காரியங்களை இயேசுகிறிஸ்து உவமைகளினால் விளக்கி கூறுகிறார்.  இதனால் சுவிசேஷத்தின் ரகசியங்கள் சீஷர்களுக்கு எளிமையாக புரிகிறது. அவர்கள் அதன் வியாக்கியானத்தை புரிந்து கொள்கிறார்கள். இவர்களுடைய கண்கள் காண்கிறதாகவும், காதுகள் கேட்கிறதாகவும் இருக்கிறது. 


கண்கள் காண்பதும், காதுகள் கேட்பதும் தேவனுடைய கிரியையாகும். இது அவருடைய ஆசீர்வாதமான கிரியை. நாம் தேவனுடைய வல்லமையினால் நிரப்பப்படும்போது நமது கண்கள் தெளிவாக காணும். காதுகள் தெளிவாக கேட்கும். இப்போது இருளில் பார்க்கிற ரகசியங்களை, ஏற்ற காலத்தில் முகம்முகமாக தரிசிப்போம். அப்போது மங்கலாக இருப்பவையெல்லாம் வெளிச்சமாக இருக்கும்.  அப்போஸ்தலர்கள் மற்றவர்களுக்கு உபதேசம் பண்ணவேண்டியவர்கள். அந்த உபதேச சத்தியங்களை இப்போது இயேசுகிறிஸ்துவின் மூலமாக தெளிவாக கற்றுக்கொள்கிறார்கள்.


காணாமலும் கேளாமலும் போனவர்கள்


அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 13:17).


தேவனுடைய ஆசீர்வாதங்களை அநேகர் விரும்புகிறார்கள். ஆனால் எல்லோருமே அவற்றை பெற்றுக்கொள்வதில்லை. தீர்க்கதரிசிகளிலும், நீதிமான்களிலும் அநேகர் தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளாமல் போய் இருக்கிறார்கள். பழைய ஏற்பாட்டுக்கால பரிசுத்தவான்களுக்கு சுவிசேஷ வெளிச்சத்தில் ஒரு பகுதி மாத்திரமே  காண்பிக்கப்பட்டது. அவர்கள் அந்த வெளிச்சத்தை முழுமையாக தரிசிக்க விரும்பினார்கள். ஆனால் அது அவர்களுக்கு கூடாமற்போயிற்று.


இயேசுகிறிஸ்துவை பற்றிய ரகசியம் பழைய ஏற்பாட்டுக்காலத்து தீர்க்கதரிசிகளுக்கும் நீதிமான்களுக்கும் முழுமையாக வெளிப்படுத்தப்படாமல் ஒரு பகுதி மாத்திரமே வெளிப்படுத்தப்பட்டது. அவர்கள் நம்மை அல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார் (எபி 11:40).  


ƒபுதிய ஏற்பாட்டுக்காலத்து விசுவாசிகளாகிய நாம் கர்த்தருக்குள் பாக்கியவான்கள். நாம் அனுபவிக்கும் சிலாக்கியத்தை நமது உள்ளத்தில் புரிந்து கொள்ளவேண்டும். சுவிசேஷத்தின் மூலமாக நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கும் ரகசியங்கள் மிகவும் விசேஷமானது. பழைய ஏற்பாட்டு காலத்து பரிசுத்தவான்களுக்கு கிடைக்காத மிகப்பெரிய சிலாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. 


விசுவாசிக்கிறவர்களுக்குத் தேவனுடைய ஆசீர்வாதங்கள்


    1. மனந்திரும்புதலும், புதிய சிருஷ்டியும், கர்த்தரோடு நடப்பதும்         (சங் 19:7)           


    2. சரீர சுகமாதல், இயேசு கிறிஸ்துவிற்குள் புதிய ஆரோக்கியம்         (சங் 91)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.