இயேசுவின் சீஷர்கள் THE DISCIPLES OF JESUS CHRIST (Tamil Bible Study)
சீஷர்களின் ஆழைப்பு
4. இயேசு 12 சீஷர்களை தெரிந்து கொள்ளுதல் (மாற்கு 3:13-19; லூக்கா 6:12-16)
தமக்குச் சித்தமானவர்கள்
பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள் (மாற்கு 3:13).
தம்மோடு எப்போதும் கூடயிருக்கவும், பிரசங்கம் பண்ணும்படியாகவும் இயேசுகிறிஸ்து பன்னிரண்டு அப்போஸ்தலர்களை தெரிந்தெடுக்கிறார். இயேசு ஒரு மலையின்மேல் ஏறி தமக்கு சித்தமானவர்களை தம்மிடத்தில் வரவழைக்கிறார். பொதுவாக இந்த மலையில் இயேசுகிறிஸ்து தனிமையாக ஜெபம்பண்ணுவது வழக்கம்.
தம்முடைய சீஷர்களை தெரிந்தெடுக்கும்போது இயேசு தமது சித்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். சீஷர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதைப்பார்த்து, அந்த தகுதிகளின் அடிப்படையில் இயேசு தமது சீஷர்களை தெரிந்தெடுக்கவில்லை. சீஷர்களுடைய தகுதி எதுவாக இருந்தாலும், இயேசு தமக்கு சித்தமானவர்களை தமது சீஷர்களாக தெரிந்தெடுக்கிறார். தமது அழைப்புக்கு அவர்கள் பாத்திரவான்களா என்பதை இயேசுகிறிஸ்து பார்க்கவில்லை. அதற்குப் பதிலாக அவர்களை அழைத்தபின்பு, தமது அழைப்புக்கு அவர்களை பாத்திரவான்களாக மாற்றுகிறார்.
தம்முடைய ஊழியத்தை செய்யுமாறு இயேசுகிறிஸ்து நம் எல்லோரையும் அழைக்கிறார். அவர் நமது தகுதியை பார்க்கவில்லை. நமது கீழ்ப்படிதலையே பார்க்கிறார். நாம் இயேசுவின் அழைப்புக்கு கீழ்ப்படிந்து, அவருக்கு ஊழியம் செய்யும்போது, தமது ஊழியத்தை செய்வதற்கு அவர் நம்மை தகுதிப்படுத்துகிறார்.
தம்மோடு கூட இருக்கவும்
அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், (மாற்கு 3:14)
இயேசுகிறிஸ்துவை சுற்றிலும் திரளான ஜனங்கள் கூடியிருக்கிறார்கள். அந்த ஜனங்களிலிருந்து இயேசு தமக்கு சித்தமானவர்களை வேறு பிரித்து, அவர்களை தம்மிடத்தில் வரவழைக்கிறார். அவர்களும் கூட்டத்திலிருந்து பிரிந்து இயேசுவினிடத்திற்கு வருகிறார்கள். தமக்கு சித்தமானவர்களை இயேசுகிறிஸ்து அழைக்கும்போது, அழைக்கப்பட்டவர்கள் இயேசுகிறிஸ்துவின் சித்தத்திற்கு தங்களை ஒப்புக்கொடுப்பதற்கும் அவர்களை வழிநடத்துகிறார். ஒருவரை இயேசு அழைக்கும்போது, தேவனுடைய கிருபையினால் அந்த நபர் இயேசுவுக்கு கீழ்ப்படிந்து அவரிடத்திற்குப் போகிறார்.
தம்மிடத்தில் வந்த பன்னிரண்டு பேரை இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷராக தெரிந்துகொள்கிறார். அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம் பண்ணும்படியாகவும் இயேசு அவர்களை பிரதிஷ்டை பண்ணுகிறார். இயேசுகிறிஸ்துவின் உபதேசத்திற்கும், ஜீவியத்திற்கும், பொறுமைக்கும் அவர்கள் சாட்சியாக இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் மனதை அவர்கள் பூரணமாக புரிந்துகொள்ளவேண்டும். அதற்காக இந்த சீஷர்கள் இயேசுவோடுகூடவே இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவிடமிருந்து போதனைகளை கற்றுக்கொள்ளவேண்டும். மற்றவர்களுக்கு போதிக்கும் தகுதியையும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.
சீஷர்கள் தங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சி பெறவேண்டும். ஒரே நாளில் வளர்ச்சி பெறமுடியாது. வளருவதற்கு கால அவகாசம் தேவை. தாங்கள் இயேசுகிறிஸ்துவின் பூரண சீஷராக வளருவதற்காக அவர்கள் இயேசுவோடு கூடவே இருக்கிறார்கள். கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகிய நாமும் நமது ஆவிக்குரிய ஜீவியங்களில் பெலப்படவும், தேவன் நமக்கு கொடுத்திருக்கும் ஊழியத்தை வல்லமையோடு செய்யவும், நாமும் தேவனுடைய சமுகத்தில் அமர்ந்திருக்கவேண்டும்.
அதிகாரமுடையவர்களாயிருக்க
வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார் (மாற்கு 3:15).
அற்புதங்களை செய்வதற்கு இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு வல்லமையை கொடுக்கிறார். அதிகாரம் கொடுக்கிறார். அவர்கள் வியாதிகளை குணமாக்கவேண்டும். பிசாசுகளை துரத்தவேண்டும். இந்த ஊழியத்தை தமது நாமத்தினாலே செய்வதற்கு இயேசுகிறிஸ்து அவர்களை பிரதிஷ்டை பண்ணுகிறார்.
இயேசுகிறிஸ்துவும் அற்புதங்களை செய்கிறார். அற்புதங்களை செய்யும் வல்லமையை இயேசு யாரிடமும் பெற்றுக்கொள்ளவில்லை. அந்த வல்லமை அவருக்கே உரியது. இயேசுகிறிஸ்து தேவனுடைய ஒரே பேறான குமாரன். இயேசு யாருக்கும் வேலைக்காரரல்ல. இயேசுகிறிஸ்துவிடம் ஜீவன் உள்ளது. அவரே வழியும், சத்தியமும், ஜீவனுமாக இருக்கிறவர். பரிசுத்த ஆவியானவர் அவரிடத்தில் அளவில்லாமல் இருக்கிறார். தம்மிடத்தில் உள்ள வல்லமையை தமது சித்தத்தின் பிரகாரமாக, தமக்குச் சித்தமானவர்களுக்குக் கொடுக்கிறார். இந்த உலகத்தில் பலவீனமாக இருக்கிறவர்களுக்கும், பைத்தியமாக இருக்கிறவர்களுக்கும் இயேசுகிறிஸ்து தமது வல்லமையையும் அதிகாரத்தையும் கொடுத்து, அவர்களை தமது ஊழியத்தில் பயன்படுத்துகிறார்.
பன்னிரெண்டு சீஷர்களுக்கும் இயேசு கிறிஸ்து கொடுத்த கட்டளைகள்
1. தம்மோடிருக்க வேண்டும் (மாற்கு 3:14).
2. பிரசங்கம் பண்ண வேண்டும். (மாற்கு 3:14; மாற்கு 6:12; மாற்கு 16:15-20; மத் 10:7,20; லூக்கா 9:2,6; அப் 1:8)
3. வியாதிகளைக் குணமாக்க வேண்டும். (மாற்கு 3:15; மாற்கு 6:13; மாற்கு 16:15-20; மத் 10:1-8; லூக்கா 9:1,6; அப் 1:8)
4. பிசாசுகளைத் துரத்த வேண்டும். (மாற்கு 3:15; மாற்கு 6:13; மாற்கு 16:15-20; மத் 10:1-8; லூக்கா 9:1-6).
பன்னிரண்டுபேர்
அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார். செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார், அந்திரேயா, பி-ப்பு, பர்த்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே (மாற்கு 3:16-19).
இயேசுகிறிஸ்து தமது பன்னிரண்டு சீஷர்களை தெரிந்தெடுத்து அவர்களை தமது ஊழியத்திற்கு பிரதிஷ்டை பண்ணுகிறார். இஸ்ரவேலில் பன்னிரண்டு கோத்திரத்தார் இருந்ததுபோல, இயேசுகிறிஸ்துவுக்கு பன்னிரண்டு சீஷர்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய பெயரை மாற்கு இங்கு வரிசையாக எழுதுகிறார். ஏற்கெனவே மத்தேயுவும் இந்த சீஷர்களின் பெயரை அட்டவணைப்படுத்தியிருக்கிறார். இவ்விரண்டு அட்டவணைகளிலும் சீஷர்களின் பெயர்கள் ஒன்றுபோல் வரிசைப்படுத்தப்படவில்லை. இங்கு சீமோனின் பெயர் முதலாவதாகவும், யூதாஸ்காரியத்தின் பெயர் கடைசியாகவும் வந்திருக்கிறது.
மத்தேயுவின் பெயர் தோமாவுக்கு முன்பு வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் மத்தேயுவின் பெயர் தோமாவுக்கு அடுத்ததாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து யாக்கோபையும் யோவானையும் பொவனெர்கேஸ் என்று பெயரிடுகிறார். இதற்கு இடிமுழக்க மக்கள் என்று அர்த்தமாம். இவர்கள் ஒருவேளை சத்தத்தை உயர்த்தி பேசக்கூடியவர்களாக இருக்கலாம். பக்தி வைராக்கியமுள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் இடிமுழக்க மக்களில் ஒருவராகிய யோவானோ மென்மையான சுபாவம் கொண்டவர். இயேசுவுக்கு மிகவும் பிரியமாக இருந்தவர். அன்பு நிறைந்தவர். இவரும் இடிமுழக்க மக்களில் ஒருவர் என்று அழைக்கப்படுகிறார்.
யாக்கோபுக்கும், யாக்கோபின் சகோதரனாகிய யோவானுக்கும். இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்று பெயரிட்டார். இவர்கள் வல்லமையாகப் பிரசங்கம் பண்ணியதினாலோ, அல்லது ஒரு பட்டணத்தைப் பரலோகத்திலிருந்து மின்னலும், இடியும் வந்து அழிக்க வேண்டும் என்று வைராக்கியமாக இருந்ததினாலோ இவர்களுக்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம். (லூக்கா 9:53-54)
""ததேயு'' என்பவன் யாக்கோபின் சகோதரனாகிய யூதா என்றும் இவன் அழைக்கப்பட்டான். இவனுக்கு ததேயு , லபேயு என்னும் மறுபெயரும் உண்டு. (மத் 10:3).