இயேசு சீஷர்களுக்கு சொன்ன உபதேசம் - 1
ஆவிக்குரிய அறுவடையை குறித்து உபதேசித்தல்
கிறிஸ்து தானோ யோவா 4 : 27-30
இயேசுவின் சீஷர்
அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப் பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை (யோவா 4:27).
இயேசுகிறிஸ்து சமாரியா தேசத்து ஸ்திரீயோடு, ஆவியோடும் உண்மையோடும் கர்த்தரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார். அத்தருணத்தில் ஊருக்குள் போயிருந்த அவருடைய சீஷர்கள் இயேசுகிறிஸ்துவிடம் திரும்பி வருகிறார்கள். இவர்களுடைய வருகையினால் இயேசுகிறிஸ்து அந்த ஸ்திரீயோடு நடத்திய உரையாடல் நின்றுபோயிற்று. இயேசுகிறிஸ்து இதுவரையிலும் ஜீவத்தண்ணீரைப்பற்றி பேசி விட்டு, இப்போதுதான் தேவன் ஆவியாயிருக்கிறார் என்றும், அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டுமென்றும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். இத்தருணத்தில் சீஷர்களின் வருகையால் இந்த உரையாடல் நின்றுபோயிற்று.
சீஷர்கள் கிணற்றண்டைக்கு வந்தவுடன், இயேசுகிறிஸ்து அந்த ஸ்திரீயுடனே பேசிகிறதைக்குறித்து ஆச்சரியப்படுகிறார்கள். அவள் ஒரு அந்நிய ஸ்திரீ. முன்பின் பழக்கமில்லாதவள். அத்துடன் அவள் ஒரு சமாரியா தேசத்து ஸ்திரீயாகவும் இருக்கிறாள். அந்த ஸ்திரீயோடு இயேசுகிறிஸ்து அக்கரையாய் பேசுகிறாரே என்று சீஷர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
இந்த ஸ்திரீ ஐசுவரியம் மிகுந்தவளல்ல. சாதாரண ஏழை ஸ்திரீ. இயேசுகிறிஸ்து ஐசுவரிய சம்பன்னராக இருந்தாலும், கர்த்தாதி கர்த்தராக இருந்தாலும், இப்படிப்பட்ட சாதாரண ஸ்திரீயோடும் பேசுகிறாரே என்று ஆச்சரியப்படுகிறார்கள். இயேசுகிறிஸ்து இந்த சீஷர்களை, தம்மைப் பின்பற்றி வருமாறு அழைப்பதற்கு முன்பாக, அவர்களும் சாதாரண ஜனங்களாகத்தான் இருந்தார்கள். தங்களுடைய பழைய வாழ்க்கையை மறந்துவிட்டு, இயேசுகிறிஸ்து இந்த ஏழை ஸ்திரீயோடு பேசுவதைப்பார்த்து ஆச்சரியமடைகிறார்கள்.
ஆனாலும் ஏன் அவளுடன் பேசிகிறீரென்று ஒருவரும் இயேசுவிடத்தில் கேட்கவில்லை. ஏதோ ஒரு நல்ல காரியத்திற்காகத்தான் இயேசுகிறிஸ்து அவளோடு பேசிக்கொண்டிருப்பார் என்பது சீஷர்களுக்குத் தெரியும். ஆகையினால் என்ன தேடுகிறீர் என்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீர் என்றாவது ஒருவனும் அவளிடத்தில் கேட்கவில்லை. இயேசுகிறிஸ்து பேசுவதும் செய்வதும் நன்மையானதாகவே இருக்கும். அவர் எப்போதுமே நன்மை செய்கிறவர். சீஷர்களுடைய உள்ளத்தில் ஆச்சரியமும், பலவிதமான சிந்தனைகளும் இருக்கிறபோதிலும், அவர்கள் இயேசுகிறிஸ்துவிடம் அதைப்பற்றி ஒன்றும் பேசவில்லை.
யூதருக்கும், சமாரியருக்கும் எந்தவிதச் சம்மந்தமுமில்லை. அப்படியிருக்கும் போது, யூதராகிய இயேசு கிறிஸ்து சமாரியா ஸ்திரீயிடம் பேசுவது சீஷருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதே சமயத்தில் யூதமார்க்கத்தில் ரபீ என்று அழைக்கப்படுகிறவர்கள் பொது இடங்களில் ஸ்திரீகளோடு பேசக்கூடாது. அது மட்டுமல்ல, தன் மனைவி, சகோதரி, மகள் ஆகிய யாருடனும் தெருவிலோ, அல்லது வேறு பொது இடங்களிலோ யூதமார்க்கத்தின் ரபீமார்கள் பேசக்கூடாது. ஆகையினால் இயேசு கிறிஸ்து கிணற்றண்டையில் ஸ்திரீயிடம் பேசியது சீஷருக்கு ஆச்சரியமாக இருந்தது.
தன் குடத்தை வைத்துவிட்டு
அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி: (யோவா 4:28)
சமாரியா ஸ்திரீ தண்ணீர் மொண்டு கொள்வதற்காக கிணற்றிற்கு வந்திருக்கிறாள். வந்த இடத்தில்தான் இயேசுகிறிஸ்துவுக்கும் அந்த ஸ்திரீக்கும் உரையாடல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சீஷர்களின் வருகையால் அந்த உரையாடல் தடைபெறுகிறது. தண்ணீர் மொண்டு கொள்ள வந்த ஸ்திரீ, இயேசுகிறிஸ்துவோடு உரையாடிக்கொண்டிருக்கும்போது, தன் வந்த வேலையை மறந்துவிடுகிறாள். தான் கொண்டு வந்த குடத்தை அங்கேயே வைத்துவிட்டு ஊருக்குள்ளே போகிறாள். தண்ணீர் மொண்டு கொள்வதற்காக, ஊரிலிருந்து குடத்துடன் கிணற்றிற்கு வந்தவள், இப்போது குடத்தை அங்கேயே வைத்துவிட்டு ஊருக்குள் திரும்பிப்போகிறாள்.
ஊருக்குள் போயிருந்த இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் அவருக்கு போஜனம் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் போஜனம்பண்ணும்போது தொந்தரவாக அங்கு இருக்கக்கூடாது என்று நினைத்து, அந்த இடத்தைவிட்டு சமாரியா ஸ்திரீ ஊருக்குள்ளே போயிருக்கலாம். இயேசுகிறிஸ்துவின் உரையாடலை அவள் ஆர்வத்தோடு கேட்கிறாள். ஆயினும் அவருக்கு தொந்தரவாக இருக்க விரும்பவில்லை. போஜனம்பண்ணி முடிந்தவுடன், இயேசுகிறிஸ்து அந்த கிணற்றைவிட்டு தன்னுடைய பிரயாணத்தை மறுபடியும் ஆரம்பித்துவிடுவார் என்று அந்த ஸ்திரீ எதிர்பார்க்கிறாள். அவர் அந்த ஊரை விட்டு போவதற்குள், தன்னுடைய உற்றார் உறவினர், ஊரார் எல்லோருக்கும் இயேசுகிறிஸ்துவைப்பற்றி அறிவிக்க வேண்டுமென்று விரைந்து செயல்படுகிறாள்.
தனக்கு கிடைத்திருக்கும் காலத்தை இந்த ஸ்திரீ சிறிதும் வீணாக்கவில்லை. நன்மையைப்பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் நமக்குக் குறையும்போது, நன்மை செய்வதற்கான வாய்ப்புக்கள் ஏதாவது இருக்கிறதா என்று தேடிப்பார்க்க வேண்டும். இயேசுகிறிஸ்துவோடே உரையாடியதன் மூலமாக இந்த ஸ்திரீ நன்மையைப் பெற்றுக்கொண்டாள். சீஷர்கள் அங்கு வந்ததினால் உரையாடல் நின்றுபோயிற்று. இயேசுகிறிஸ்துவிடமிருந்து அவள் நன்மையைப்பெற்றுக்கொள்வதும் அத்துடன் நின்றுபோயிற்று. என்றாலும் தனக்குக் கிடைக்க வேண்டிய நன்மை குறைந்துபோன சமயத்தில், தான் பெற்ற நன்மையை மற்றவர்களுக்குக் கொடுக்க சமாரியா ஸ்திரீ விரைந்து செயல்படுகிறாள்.
தண்ணீர் மொண்டு கொள்வதற்காக தான் கொண்டு வந்த குடத்தை அந்த ஸ்திரீ இயேசுவண்டையில் வைத்துவிட்டு ஊருக்குள் போகிறாள். குடத்திலுள்ள தண்ணீர் இயேசுகிறிஸ்துவுக்குப் பயன்படும் என்று நினைத்து குடத்தை அவர் அருகிலேயே விட்டுவிட்டுச் செல்கிறாள். இயேசுகிறிஸ்துவும் சீஷர்களும் போஜனம்பண்ணும்போது ஒருவேளை அவர்களுக்கு குடிக்க தண்ணீர் தேவைப்படலாம்.
அத்தோடு இந்த ஸ்திரீ ஊருக்குப்போகும் குடத்தையும் தூக்கிக்கொண்டு போனால், அதன் பாரத்தினால் விரைந்து ஊருக்குள் போகமுடியாது. குடத்தை அங்கேயே விட்டுவிட்டுப்போய்விட்டால், பாரமில்லாமல் வேகமாக போகலாம் என்று நினைத்து, குடத்தை இயேசுவண்டையில் வைத்துவிட்டு போயிருக்கலாம்.
சமாரியா ஸ்திரீக்கு இப்போது கிணற்றுத் தண்ணீர்மீது அதிக அக்கரையோ ஆர்வமோயில்லை. இவள் இயேசுகிறிஸ்து கொடுக்கும் ஜீவத்தண்ணீரைப்பற்றி கவனமாயிருக்கிறாள். மேன்மையான காரியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, சாதாரண காரியமான தண்ணீர்மீது கவனம் செலுத்தாமல், அந்தக் குடத்தை அங்கே வைத்துவிட்டு ஊருக்குள் போகிறாள்.
வந்துபாருங்கள்
நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள் (யோவா 4:29).
தன்னுடைய ஊராருக்கு தான் சொல்ல வேண்டிய செய்தி ஒன்று தன்னிடத்தில் இருக்கிறது என்னும் தீர்மானத்தோடு, இவள் ஊருக்குள் விரைந்து போகிறாள். ஊருக்குள்ளே போய், தெருவில் வருவோரையும் போவோரையும் பார்த்து தன்னிடத்திலுள்ள செய்தியை அறிவிக்கிறாள். ""நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார் அவரை வந்து பாருங்கள்'' என்று எல்லா மனுஷரையும் அழைக்கிறாள். ""அவர் கிறிஸ்துதானோ'' என்று வந்து பாருங்கள் என்றும் ஜனங்களைக் கூப்பிடுகிறாள்.
தன்னுடைய உற்றார் உறவினரும், ஊராரும் இயேசுகிறிஸ்துவைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்று சமாரியா ஸ்திரீ விரும்புகிறாள். ஒரு பொக்கிஷத்தை கண்டெடுத்திருப்பதுபோல இந்த ஸ்திரீ இப்போது இயேசுவை கண்டுபிடித்திருக்கிறாள். ஒரு ஸ்திரீ காணாமற்போன ஒரு வெள்ளிக்காசை, ஜாக்கிரதையாய் தேடி, கண்டுபிடித்த பின்பு, தன் சிநேகிதிகளையும், அயல்வீட்டுக்காரிகளையும் கூடவரவழைத்து தன்னோடே சந்தோஷப்படுங்கள் என்று கூறுவதுபோல. (லூக் 15:9), சமாரிய ஸ்திரீ தன் ஊராரை தன்னோடு சந்தோஷப்படுங்கள் என்று கூறுகிறாள்.
சமாரியா ஸ்திரீ நல்ல எண்ணத்தோடு தன் ஊராரிடத்தில் இயேசுகிறிஸ்துவைப்பற்றி அறிவிக்கிறாள். தன்னோடுகூட சந்தோஷப்பட்டால் மாத்திரம் போதாது, தன்னுடைய ஊரார் தன்னுடைய சந்தோஷத்தில் பங்கு பெறவும் வேண்டுமென்று விரும்புகிறாள். தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து, தமது கிருபையினால் தம்மைத்தாமே நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். நமக்கு தம்மைவெளிப்படுத்திய இயேசுகிறிஸ்துவை கனப்படுத்தும் விதத்தில், நாமும் மற்றவர்களுக்கு அவரைக்குறித்து வெளிப்படுத்த வேண்டும். நாம் இயேசுகிறிஸ்துவுக்குச் செய்கிற மிகப்பெரிய ஆராதனை அவரைக்குறித்து சாட்சி கூறி அவரை பிறருக்கு அறிவிப்பதுதான். இதனால் நமக்கும் தேவனுடைய ஆசீர்வாதம் கிடைக்கும்.
சமாரியா ஸ்திரீ இப்போது ஒரு அப்போஸ்தலரைப்போல செயல்படுகிறாள். இயேசுகிறிஸ்துவைப்பற்றி அறிவிப்பதற்கு தனக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருப்பதாக தீர்மானம் செய்து, அவரைப்பற்றி அறிவிப்பது தன்மேல் விழுந்த கடமையென்று முடிவுசெய்து, இயேசுகிறிஸ்துவைப்பற்றி தன்னுடைய ஊரிலுள்ள ஜனங்களுக்கு அறிவித்து அவர்களுக்கு நன்மை செய்கிறாள்.
சமாரியா ஸ்திரீக்கு இயேசுகிறிஸ்துவைப்பற்றி இதுவரையிலும் ஒன்றும் தெரியாது. இவளைப் பொறுத்தவரையில் இயேசுகிறிஸ்து இவளுக்கு ஒரு அந்நியராகவே இருந்திருக்கிறார். தனக்கு அறிமுகமில்லாத இயேசுவைப்பற்றி தன்னுடைய ஊர் ஜனங்களிடம் பாராட்டி பேசுகிறாள். ""நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்'' என்று சொல்கிறாள். இந்த ஸ்திரீயின் புருஷர்களைப்பற்றி மாத்திரமே இயேசுகிறிஸ்து இவளிடத்தில் சொன்னார். வேறு எதையும் சொன்னாரா என்று தெரியவில்லை. வேதவசனத்தில் அப்படிப்பட்ட செய்திகளைப்பற்றி ஆதாரம் எதுவுமில்லை. தன்னுடைய மனச்சாட்சிக்கும், தேவனுக்கும் மாத்திரமே தெரிந்திருக்கிற ரகசிய காரியங்களை இயேசுகிறிஸ்து தன்னிடத்தில் வெளிப்படுத்திவிட்டதாக இந்த ஸ்திரீ கூறுகிறாள்.
இரண்டு காரியங்கள் சமாரியா ஸ்திரீயின் உள்ளத்தில் ஆழமாக பதிந்திருக்கிறது. அவையாவன : 1. இயேசுகிறிஸ்துவின் சர்வஞானம். 2. அவருடைய வார்த்தையின் சர்வவல்லமை. அவர் சர்வத்தையும் அறிந்திருக்கிறபடியினால், அவர் எல்லாவற்றையும் தெளிவாக வெளிப்படுத்தி விடுகிறார். அவருக்கு மறைவான காரியம் எதுவுமில்லை. நம்மால் நம்முடைய காரியங்களைக்கூட சரியாக விவரிக்க முடியாது. ஆனால் இயேசுகிறிஸ்துவோ நம்முடைய காரியங்களையும், சர்வ சிருஷ்டிகளின் காரியங்களையும் முழுவதுமாக வெளிப்படுத்திவிடுவார். இயேசுகிறிஸ்துவினுடைய வார்த்தை வல்லமையுடையது. இவளுடைய ரகசிய பாவங்கள் அனைத்தையும், இவள் செய்த எல்லாவற்றையும் இயேசுகிறிஸ்து இவளிடம் சொல்லிவிடுகிறார். அப்படிப்பட்ட மனுஷரை எல்லாரும் வந்து பாருங்கள் என்று இந்த ஸ்திரீ தன்னுடைய ஊர் ஜனங்களை அழைக்கிறாள்.
தான் செய்த எல்லாவற்றையும் இயேசுகிறிஸ்து சொன்னார் என்று மாத்திரமே சமாரியா ஸ்திரீ கூறுகிறாள். இவளுடைய செய்கைகளெல்லாம் பாவம் நிறைந்ததாக இருக்கிறபடியினால், இந்த ஸ்திரீ வெட்கப்பட்டு அதைப்பற்றி விரிவாக எதையும் கூறாமல், தான் செய்த எல்லாவற்றையும் என்று பொதுவாக கூறுகிறாள். தான் செய்த எல்லாவற்றையும் தன் வாயினால் மறுபடியும் சொல்ல இவளுக்கு மனதில்லை.
நாம் செய்த ரகசிய பாவங்கள் ரகசியமாகவே இருக்கும், யாருக்கும் தெரியாது என்று இறுமாப்பாக இருக்கலாம். ஆனால் தேவனுக்கு மறைவான காரியம் எதுவுமேயில்லை. நாம் செய்த பாவங்களெல்லாம் தேவனுடைய கண்களுக்கு முன்பாக மறைவாகயிராமல் வெளிச்சமாயிருக்கிறது என்னும் எண்ணம் நமக்குள் உண்டாக வேண்டும். அப்போதுதான் நாம் செய்த பாவங்களைக் குறித்து நமக்கு குற்றவுணர்வு உண்டாகும். நாம் செய்த பாவங்களுக்காக நாம் மனம் வருத்தப்படுவோம். நம்முடைய குற்றவுணர்வு நம்மை இயேசுகிறிஸ்துவிடம் வழிநடத்தும். தம்மிடத்தில் வருகிற யாரையும் இயேசுகிறிஸ்து புறம்பே தள்ளுவதில்லை.
தான் செய்த எல்லாவற்றையும் தனக்குச் சொன்ன இயேசுகிறிஸ்துவைக்குறித்து சமாரியா ஸ்திரீ மிகவும் ஆச்சரியப்படுகிறாள். அவரை வந்து பாருங்கள் என்று தன்னுடைய ஊராரை அழைக்கிறாள். இயேசுகிறிஸ்துவை ஒரு காட்சிப் பொருளாக பார்ப்பதற்கு அவள் தன்னுடைய ஊராரை அழைக்கவில்லை. இயேசுகிறிஸ்து இருக்கும் இடத்திற்கு வந்து, அவரோடு உரையாடுவதற்கும், அவருடைய உரையாடலைக் கேட்பதற்கும், அவருடைய ஞானமுள்ள உபதேசத்தைக் கேட்பதற்கும், தான் பெற்றுக்கொண்ட நன்மைகளைப்போல தன்னுடைய ஊர் ஜனங்களும் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சமாரியா ஸ்திரீ தன்னுடைய ஊர் ஜனங்களை அழைக்கிறாள்.
இயேசுகிறிஸ்து சமாரியா ஸ்திரீயிடம் ஜீவத்தண்ணீரைப்பற்றி பேசியபோது, இவள் இயேசுகிறிஸ்துவிடம் பல கேள்விகளைக் கேட்கிறாள். தன்னுடைய சந்தேகங்களெல்லாம் நிவிர்த்தி பெறும் விதத்தில் அவற்றை நிரூபிக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறாள். தன்னுடைய சந்தேகங்களெல்லாம் நிரூபிக்கப்பட்டால்தான் இயேசுவை கிறிஸ்துவாக அங்கீகரிக்க முடியுமென்று தன் உள்ளத்தில் நினைக்கிறாள். ஆனால் இதே ஸ்திரீ தன்னுடைய ஊருக்குள் வந்து, தன்னுடைய ஊர் ஜனங்களை இயேசுகிறிஸ்துவிடம் வருமாறு அழைத்தபோது, அந்த ஜனங்களிடம் எந்தக் காரியத்தையும் நிரூபிக்க முன்வரவில்லை.
இயேசுகிறிஸ்துவிடமிருந்து அற்புதங்களையும் அடையாளங்களையும் சில சமயங்களில் நாம் எதிர்பார்க்கிறோம். நாம் மற்றவர்களுக்கு இயேசுகிறிஸ்துவைப்பற்றி அறிவிக்கும்போது, அவர்கள் அவரை விசுவாசிக்கஅற்புதங்களையும் அடையாளங்களையும் எதிர்பார்க்கும்போது, நம்மால் எந்த அற்புதத்தையும் செய்ய முடிவதில்லை. நம்முடைய விசுவாசம் உறுதிப்பட அற்புதங்களை எதிர்பார்க்கிறோம். ஆனால் மற்றவர்களோ அற்புதங்கள் நடைபெறாவிட்டாலும் இயேசுகிறிஸ்துவை உறுதியாக விசுவாசிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்.
இயேசுகிறிஸ்து சமாரியாவிலுள்ள சீகார் ஊருக்கு வெளியிலுள்ள கிணற்றண்டையில் இருக்கிறார். சமாரியா ஸ்திரீ ஊருக்குள் வந்து ஜனங்களை அழைத்துக்கொண்டிருக்கிறாள். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் இந்த மேசியாவைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருந்தார்கள். அந்த கிறிஸ்துவைப் பார்ப்பதற்குத்தான் சமாரியா ஸ்திரீ தன்னுடைய ஊர் ஜனங்களை அழைக்கிறாள். ""அவர் கிறிஸ்துதானோ'' என்று தன் ஊர் ஜனங்களிடம் கூறுகிறாள்.
கிணற்றண்டையில் உட்கார்ந்திருப்பது கிறிஸ்துவாகிய மேசியா தான் என்று சமாரியா ஸ்திரீயினால் உறுதியாக சொல்ல முடியவில்லை. தன்னுடைய விசுவாசத்தை ஊர் ஜனங்களிடத்தில் வலுக்கட்டாயமாக திணிக்கவில்லை. இயேசுகிறிஸ்துவை தான் மேசியா என்று நினைப்பதை இவள் தன் ஊர் ஜனங்களுக்கு அறிவிக்கிறாள். தன்னுடைய விசுவாசத்தை அவர்களுக்கு ஒரு ஆலோசனையாக கூறுகிறாள். இவளுடைய சாட்சி மென்மையாக இருந்தபோதிலும், இயேசுகிறிஸ்துவை தேடுகிறவர்கள் நிச்சயமாகவே கண்டுபிடிப்பார்கள். மனம் இருக்கும்பொழுது மார்க்கம் உண்டாகும். இவளுடைய வார்த்தை ஊர் ஜனங்களுடைய உள்ளத்தில் பதிகிறது. இவள் தன் ஊர் ஜனங்களுடைய மனச்சாட்சியோடு பேசுகிறாள். அப்பொழுது அந்த ஊர் ஜனங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுகிறிஸ்துவிடம் வருகிறார்கள்.
அவரிடத்தில் வந்தார்கள்
அப்பொழுது அவர்கள் ஊரி-ருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள் (யோவா 4:30).
சமாரியா ஸ்திரீயின் அழைப்புக்கு நல்ல பிரதிபலன் உண்டாயிற்று. ஜனங்கள் தங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுகிறிஸ்துவிடத்தில் வருகிறார்கள். தங்கள் ஊருக்கு இயேசுகிறிஸ்துவை அழைத்துக்கொண்டு வருவதற்கு ஆட்களை அனுப்பாமல், அந்த ஊர் ஜனங்களே இயேசுகிறிஸ்துவிடத்தில் வருகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் அவர் இருக்கும் இடத்தில் அவரைச் சந்திப்பதற்கு வர ஆயத்தமாக இருக்கவேண்டும். தம்முடைய நாமத்தை எந்த ஸ்தலத்தில் பிரஸ்தாபப்படுத்துகிறாரோ அந்த ஸ்தலத்தில் அவரைச் சந்திக்கவேண்டும்.
சீஷரோடு சம்பாஷணை யோவா 4 : 31-38
ரபீ, போஜனம்பண்ணுங்கள்
இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள் (யோவா 4:31).
இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் ஊரிலிருந்து போஜனபதார்த்தங்களை வாங்கிக்கொண்டு அவரிடத்தில் வந்தபோது, சமாரியா ஸ்திரீ தண்ணீர் குடத்தை வைத்துவிட்டு ஊருக்குள்ளே போகிறாள். அந்த நேரத்தில் இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரோடு உரையாடுகிறார். தமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மணித்துளியையும் இயேசுகிறிஸ்து ஆவிக்குரிய காரியங்களுக்காக பயன்படுத்துகிறார். இயேசுகிறிஸ்துவின் பிரசன்னத்திற்கு முன்பாக வர நமக்கு சிறிது நேரம் மாத்திரமே கிடைத்தாலும், நாம் அதையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரோடு உரையாடும்போது இரண்டு சத்தியங்களை நாம் கவனிக்கலாம். அவையாவன: 1. தம்முடைய கிரியையில் இயேசுகிறிஸ்து சந்தோஷப்படுகிறார். 2. தம்முடைய சீஷர்களும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஊழியங்களில் கவனமாக இருக்கவேண்டுமென்று இயேசுகிறிஸ்து விரும்புகிறார்.
இயேசுகிறிஸ்து பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் யாக்கோபுடைய கிணற்றுக்கு அருகே உட்காருகிறார். அவருக்கு சற்று ஓய்வும் போஜனமும் தேவைப்படுகிறது. சரீரத்தில் களைப்பும் பசியும் இருந்தாலும், இயேசுகிறிஸ்து அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆத்தும ஆதாயம் செய்வதற்கு தம்முடைய நேரத்தை பயன்படுத்துகிறார். இயேசுகிறிஸ்துவின் களைப்பை பார்த்து, சீஷர்கள் அவரை போஜனம்பண்ணுமாறு வேண்டிக்கொள்கிறார்கள். ஆனால் அவரோ ""நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு'' என்று தம்முடைய சீஷர்களிடம் கூறிவிடுகிறார்.
தங்களுடைய ஆண்டவர்மீது உண்டான அன்பினால் சீஷர்கள் இயேசுகிறிஸ்துவை போஜனம்பண்ணுமாறு வேண்டிக்கொள்கிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தம்முடைய சரீரத்தின் தேவையைக்கவனிப்பதைவிட அழிந்துபோகிற ஆத்துமாக்களின் தேவையை அதிகமாக கவனிக்கிறார். போஜனம்பண்ண தமக்கு அழைப்புக்கொடுப்பதைவிட, ஆத்துமாக்கள் தம்மிடத்தில் வருவதற்கு அழைப்புக்கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறார். பிரயாணத்தில் இளைப்படைந்தவராக இருந்தாலும், தாம் புசிப்பதற்கு வேறொரு போஜனமுள்ளது என்று இயேசுகிறிஸ்து கூறியபோது, சீஷர்களில் யாராவது ஒருவர் அவருக்கு போஜனம் கொண்டு வந்திருப்பாரோ என்று அவர்கள் தங்களுக்குள் சந்தேகப்படுகிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ அதைப்பற்றி கவலைப்பட்டவராக தெரியவில்லை.
நீங்கள் அறியாத ஒரு போஜனம்
அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார் (யோவா 4:32).
தம்முடைய வேலையே இயேசுகிறிஸ்துவுக்கு போஜனமாக இருக்கிறது. சமாரியா ஸ்திரீக்கு சத்தியத்தை உபதேசம்பண்ணியது, ஊரிலிருந்து தம்மை பார்க்க வந்திருக்கும் சமாரியருக்கு ஊழியம் செய்வது ஆகியவையே இயேசுகிறிஸ்துவுக்கு போஜனபானமாக இருக்கிறது. ஒரு மனுஷன் நேர்த்தியான போஜனத்தினால் திருப்தியடைவதுபோல, இயேசுகிறிஸ்து ஆத்துமாக்களுக்கு நன்மைசெய்து திருப்தியடைகிறார். இந்த போஜனத்தைப்பற்றி இயேசுகிறிஸ்துவின் சீஷர்களுக்குப் புரியவில்லை. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் உலகப்பிரகாரமான போஜனத்தினால் மாத்திரம் திருப்தியடைய வேண்டுமென்று எண்ணக்கூடாது. உலகப்பிரகாரமான ஜனங்களுக்குத் தெரியாத ஒரு போஜனம் நமக்கு உண்டு. ஆத்துமாக்களுக்கு ஊழியம் செய்வதே தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் போஜனம். சரீரப்பிரகாரமாக நாம் பசியாகவும் பட்டினியாகவும் இருந்தாலும், ஆத்தும ஆதாயம் செய்து தேவனுடைய போஜனத்தை புசிக்க வேண்டும்.
ஆத்தும திருப்தி என்பதைச் சீஷர்கள் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. ஒரு சமாரியா ஸ்திரீ மனந்திரும்பி இரட்சிக்கப்படும்போது, இயேசு கிறிஸ்துவின் ஆத்துமாவில் சந்தோஷமும், சமாதானமும், திருப்தியும் உண்டாகும்.
என்னுடைய போஜனம்
அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது (யோவா 4:33,34).
பிதாவாகிய தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார். தம்முடைய சித்தத்தின்படி செய்து நிறைவேற்றுவதற்காகவே இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். பிதாவின் சித்தத்தின்படி செய்து, அவருடைய கிரியையை முடிப்பதே இயேசுகிறிஸ்துவின் போஜனமாகும். தம்முடைய போஜனத்தைப்பற்றி இயேசுகிறிஸ்து கூறுவது சீஷர்களுக்கு புரியவில்லை. ஆகையினால் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து ""யாராவது அவருக்கு போஜனம் கொண்டுவந்திருப்பானோ'' என்று தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
பாவிகளுடைய இரட்சிப்பே தேவனுடைய சித்தம். அவர்களை இரட்சிப்புக்குள் வழிநடத்துவது தேவனுடைய கிரியை. இந்த சித்தத்தின்படி செய்து, இந்த கிரியையை முடிப்பதே இயேசுகிறிஸ்துவுக்கு போஜனமாக இருக்கிறது. இயேசுகிறிஸ்து தம்முடைய பிதாவின் சித்தத்தின்படி செய்து, அவருடைய கிரியையை முடிப்பதில் மிகுந்த சந்தோஷமடைகிறார். தேவனுடைய சித்தத்தை மிகவும் ஆர்வத்தோடு செய்கிறார். மிகுந்த ஈடுபாடோடு தேவனுடைய கிரியையை செய்து முடிக்கிறார். தமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியத்திலிருந்து இயேசுகிறிஸ்து ஒருபோதும் சோர்ந்துபோய், ஊழியம் செய்யாமல் நிறுத்திவிடவில்லை. ""எல்லாம் முடிந்தது'' என்று தம்முடைய வாயினால் அறிக்கை செய்யும் வரையிலும் இயேசுகிறிஸ்து தம்மை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து, அவருடைய கிரியையை முடிக்கிறார்.
கர்த்தருடைய ஊழியக்காரர்களில் அநேகர் ஆரம்பத்தில் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஊழியம் செய்வார்கள். ஆனால் போகப்போக ஊழியத்தில் சோர்வடைந்துவிடுவார்கள். உற்சாகம், சுறுசுறுப்பு, விறுவிறுப்பு எல்லாம் சிறிது சிறிதாக குறைந்துபோகும். ஊழியத்தை ஆரம்பிக்கிறவர்களில் அநேகர் முடிவு வரையிலும் ஊழியத்தில் நிலைத்திருப்பதில்லை. நாம் ஒவ்வொரு நாளும் திருப்தியாய் புசிப்பதுபோல, கர்த்தருடைய ஊழியத்தையும் திருப்தியாய் செய்யவேண்டும்.
இயேசு கிறிஸ்து ஜீவியத்தின் இலக்கணத்தைத் தெளிவாகக் கூறுகிறார். தேவனுடைய சித்தத்தைச் செய்வது நமது வாழ்வின் இலக்காக இருக்க வேண்டும். அதற்காகவே நாம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கும்.
இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது
அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் (யோவா 4:35).
தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகளை சீஷர்கள் ஆர்வத்தோடு செய்யவேண்டும். ஊழியத்தில் அக்கறை காண்பிக்க வேண்டும். இயேசுவின் சீஷர்கள் அவரோடுகூட ஊழியம் செய்கிற உடன்ஊழிக்காரர்கள். ஆகையினால் தங்களுடைய சுபாவத்தின்படி ஊழியம் செய்யாமல், இயேசுகிறிஸ்துவைப்போல ஊழியம் செய்யவேண்டும். சுவிசேஷத்தை பிரசங்கம் பண்ணுவதே அவர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியம். இந்த ஊழியம் விளைந்திருக்கிற கதிர்களை அறுவடை செய்யும் வேலைக்கு ஒப்புமையாக இங்கு கூறப்பட்டிருக்கிறது.
அறுவடைக்காலத்தில் அறுக்கிறவர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பார்கள். அறுக்கிறவர்களின் எல்லா கைகளும் அறுவடை செய்யும் வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும். அறுவடைக்காலம் சிறிதுகாலமாகவே இருக்கும். ஒரு பயிர் மூன்று மாதம் விளைந்தாலும், அதை ஒரே நாளில் அறுவடை செய்துவிடுவார்கள். சுவிசேஷ ஊழியமும் அறுவடை செய்கிற ஊழியத்தைப்போன்றது. எப்பொதெல்லாம் ஆத்துமா இரட்சிக்கப்படுவதற்கு ஆயத்தமாக இருக்கிறதோ, அதுவே அந்த ஆத்துமாவின் அறுவடை காலமாகும். அந்தக் காலத்தை ஊழியக்காரர்கள் தவற விட்டுவிடக்கூடாது. அறுக்கிறவர்கள் மிகுந்த கவனத்தோடு அறுவடைக்காலத்தில் தானியங்களை அறுப்பதுபோல, ஊழியக்காரர்களும் மிகுந்த கவனத்தோடு ஊழியம் செய்து, ஆத்துமாக்களை கர்த்தருக்காக அறுவடை செய்யவேண்டும். குறிப்பிட்டகாலத்தில் அறுவடை செய்யவில்லையென்றால் தானியங்கள் பாழாய்ப்போகும். அதுபோலவே ஆத்துமாக்களை ஏற்றவேளையில் ஆதாயம் பண்ணவில்லையென்றால் அந்த ஆத்துமாக்களும் பாழாய்ப்போகும்.
அறுவடை செய்கிற வேலை மிகவும் அவசியமான வேலை. நாம் கட்டாயம் அறுவடை செய்தே ஆகவேண்டும். அறுவடைக்கு ஆயத்தமாக இருக்கும் தானியங்களை அறுவடை செய்யவில்லையென்றால் ஒரு பிரயோஜனம் நமக்கு உண்டாகாது. ஆகையினால் விவசாயம் பண்ணுகிறவர்கள், அறுவடை செய்யவேண்டிய காலத்தை மனதில் சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள். ""அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும்'' என்று மாதத்தை எண்ணிக்கொண்டேயிருப்பார்கள்.
அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று அவர்கள் சொன்னாலும், இயேசுகிறிஸ்துவோ காலத்தை வித்தியாசமாக பார்க்கிறார். ""இதோ வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது'' என்று இயேசுகிறிஸ்து அறிவிக்கிறார். இதை சாதாரணமாக பார்த்தால் தெரியாது. கண்களை ஏறெடுத்துப் பார்த்தால்தான் தெரியும். வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது என்று ஒவ்வொரு ஊழியக்காரரும் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்து தெரிந்துகொள்ளவேண்டும்.
இஸ்ரவேல் ஜனங்கள் விதை விதைக்கும்போது, விதைக்கிறவர்களை உற்சாகப்படுத்துவதற்காக, விதைக்கும் காலத்திலேயே அறுவடைக்காலத்தைப்பற்றி பேசுவது வழக்கம். விதை விதைத்து நாலுமாதம் கழித்துத்தான் அறுப்புக்காலம் வரும். இந்த அறுப்புக்காலத்தைப்பற்றி விதைக்கும் காலத்திலேயே பேசி, இஸ்ரவேலர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொள்வார்கள்.
நம்முடைய அறுவடையில் கர்த்தரும் பிரியமாக இருக்கிறார். ஒவ்வொரு வருஷமும் நமக்கு அறுப்புக்காலம் உண்டாகுமென்று கர்த்தர் வாக்குப்பண்ணியிருக்கிறார். அதற்காக அவர் அறுப்பின் வாரப்பண்டிகையை நியமனம் செய்திருக்கிறார். அறுப்புக்காலம் எப்போது வரும் என்பதை, அறுப்பின் பண்டிகையை கணக்கிட்டு நாம் புரிந்துகொள்ளலாம்.
இயேசுகிறிஸ்து இங்கு அறுப்புக்காலத்தைப்பற்றி பேசுவது, சுவிசேஷத்தின் அறுப்புக்காலத்தைப்பற்றியதாகும். ஒவ்வொரு ஆத்துமாவும் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது என்று நம்முடைய கண்களை ஏறெடுத்துப் பார்க்கவேண்டும். இயேசுகிறிஸ்து கிணற்றண்டையில் இளைப்படைந்தவராக இருக்கும்போது, அவர் சமாரியரின் ஆத்தும அறுவடையைப்பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில்தான் சீஷர்கள் அவரை போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொள்கிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ போஜனம்பண்ணுவதைவிட, தமக்கு ஆத்தும அறுவடை செய்யவேண்டிய வேலை காத்திருப்பதாக கூறுகிறார். போஜனம்பண்ணுவதைவிட ஆத்தும அறுவடை செய்யும் வேலையே மிகவும் முக்கியமானது.
சமாரியர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுகிறிஸ்துவிடம் வருகிறார்கள். தம்மிடத்தில் வருகிற அந்த சமாரியரை, இயேசுகிறிஸ்து, தம்முடைய கண்களை ஏறெடுத்துப் பார்க்கிறார். அவர்களெல்லோரும் அறுப்புக்கு விளைந்திருக்கிறார்கள். இதுவே அவர்களுடைய ஆத்தும அறுவடைக்காலம். சீஷர்களுக்கு ஆத்தும அறுவடையைப்பற்றித் தெரியவில்லை. ஆகையினால் இயேசுகிறிஸ்து அவர்களிடம், தம்மிடத்தில் வந்துகொண்டிருக்கும் சமாரியர்களை, இவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, அவர்களுடைய ஆத்துமாக்கள் அறுப்புக்கு விளைந்திருக்கிறது என்பதை பார்க்கவேண்டும் என்று கூறுகிறார்.
கர்த்தருடைய ஊழியக்காரர் சுவிசேஷச் செய்தியை பிரசங்கம்பண்ணும்போது, அந்தச் செய்தியைக் கேட்பதற்காக ஏராளமான ஜனங்கள் கூடிவருவதைப் பார்க்கும்போதும், அவர்கள் தங்கள் இருதயத்தில் இயேசுகிறிஸ்துவை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு, தங்கள் ஜீவியத்தை கர்த்தரிடத்தில் அர்ப்பணிப்பதற்கு ஒப்புக்கொடுப்பதற்காக திரளாக முன்வருவதை பார்க்கும்போதும், ஊழியக்காரருக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கும். ஊழியக்காரர் இதைப்பார்த்து உற்சாகமடைவார்.
இயேசுகிறிஸ்து வயல்நிலங்கள் இப்பொழுதுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது என்று கூறுகிறார். சமாரியர்கள் திரளாக வந்து இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை கேட்கிறார்கள். அவர்களுடைய ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு ஆயத்தமாக இருக்கிறது. இந்த சம்பவத்தைப்போலவே, இக்காலத்தில் நாம் சுவிசேஷச் செய்தியை பிரசங்கிக்கும்போது, வயல்நிலங்கள் அறுப்புக் விளைந்திருக்கிறது போல, திரளான ஜனங்கள் தங்கள் ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு கூடிவருகிறார்கள்.
கர்த்தருடைய ஊழியத்தில் நாம் எந்தப் பகுதியைச் செய்தாலும், வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது என்பதை நம்முடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்து புரிந்துகொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்து கூறும் இந்த வாக்கியம், அவருடைய ஊழியத்தைச் செய்யும் எல்லோருக்குமே அதிக உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய வாக்கியமாகும். ஒவ்வொரு வேலையை செய்வதற்கும் தேவன் ஒரு காலத்தை நியமித்திருக்கிறார். அந்தந்த வேலையை அதனதன் காலத்தில் செய்யும்போது மிகுந்த ஆசீர்வாதமும் பிரயோஜனமும் உண்டாகும். ஒவ்வொரு வேலைக்கும் ஒரு காலம் இருப்பதுபோல, விளைந்திருக்கிற தானியத்தை அறுவடை செய்கிறதற்கும் ஒரு காலமுண்டு. இதுவே அந்தக்காலம். ஏனெனில் வயல்நிலங்கள் இப்பொழுதே அறுவடைக்கு விளைந்திருக்கிறது.
யோவான்ஸ்நானன் கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தினான். இயேசுகிறிஸ்துவை சந்திப்பதற்கு யோவான்ஸ்நானன் ஜனங்களை ஆயத்தம் செய்தான். தேவனுடைய ராஜ்யத்தைப்பற்றி அவன் பிரசங்கம்பண்ண ஆரம்பித்தான். யோவான்ஸ்நானனுடைய காலம் முதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது. யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள் (லூக் 16:16). வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறபடியினால், அறிவாளில் கைவைத்து இப்போதே அறுவடை செய்ய ஆரம்பித்துவிடவேண்டும். காலதாமதம்பண்ணாமல் அறுவடை செய்கிற வேலையை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும்.
விளைந்திருக்கிற தானியங்களை ஏற்றக்காலத்தில் அறுவடை செய்யவில்லையென்றால், அந்தத் தானியம் நிலத்தில் விழுந்து வீணாய்போய்விடும். அதுபோலவே இரட்சிக்கப்படுவதற்கு ஆயத்தமாக இருக்கிற ஆத்துமாக்களை உடனடியாக இரட்சிப்புக்குள் வழிநடத்தவேண்டும். அவர்களுடைய ஆத்துமாக்களுக்குத் தேவையான எல்லா ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்யவேண்டும். ஆத்துமாக்களுக்கு ஏற்றக்காலத்தில் இரட்சிப்புக்கு ஏதுவான உதவிகளைச் செய்யவில்லையென்றால், அந்த ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படாமல் அழிந்துபோகும்.
பஸ்கா பண்டிகைக்குப் பின்பு அறுப்புக்காலம் வரும். பஸ்கா ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். இயேசு கிறிஸ்து இங்கு கூறியிருக்கும் மாதம் டிசம்பர் மாதத்துக் குளிர்காலமாகும்.
சமாரியர்கள் பட்டணத்திலிருந்து இயேசு கிறிஸ்து இருக்கும் கிணற்றண்டையில் வருகிறார்கள். அறுப்புக்கு விளைந்திருக்கிறது என்பது சமாரியருடைய ஆத்தும அறுவடையைக் குறிப்பிடும். அறுவடை சமீபமாக இருக்கிறது. அறுவடை பண்ண வேண்டிய காலம் ஒருநாள் வரும். ஆவிக்குரிய அறுவடைகளுக்கு நாம் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சத்திய வசனங்களை நாம் ஏற்கெனவே விதைத்திருக்கிறோம். விதைப்புக்கு ஏற்ற விளைச்சல் நிச்சயமாக இருக்கும்.
அறுக்கிறவன் கூலியை வாங்கி
விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூ-யை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக் கொள்ளுகிறான் (யோவா 4:36).
அறுவடை செய்கிற வேலை மிகுந்த ஆசீர்வாதமான வேலை. அறுவடை செய்வதினால் மிகுந்த பிரயோஜனமும் ஆதாயமும் உண்டாகும். அறுவடை செய்கிறவர்களுக்கு அதிக பலன் கிடைக்கும். அவர்களுக்கு மாத்திரமல்ல விதைக்கிறவர்களுக்கும் பலன் உண்டாகும். அறுக்கிறவன் கூலியை வாங்குகிறான். கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை அறுவடை செய்கிறவர்கள் ஆவியின் கனியை பெற்றுக்கொள்வார்கள். ஆத்துமாக்கள் இரட்சிப்பபடுவதே ஊழியக்காரர்களுக்கு கிடைக்கிற பலன். ஆத்தும ஆதாய ஊழியத்தில் பங்கு பெறுகிறவர்கள், நித்திய ஜீவனுக்காக பலனை சேர்த்துக்கொள்கிறார்கள். இவர்களும் இரட்சிக்கப்படுகிறார்கள். இவர்கள் பிரசங்கம்பண்ணும் சுவிசேஷச் செய்தியை கேட்கிறவர்களும் இரட்சிப்படுகிறார்கள்.
இயேசுகிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழியக்காரர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். அவர்கள் தேவனுடைய ஆறுதலைப் பெற்றுக்கொள்வார்கள். விலைமதிக்க முடியாத, விலையேறப்பெற்ற ஆத்துமாக்கள் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வதற்காக கர்த்தருடைய ஊழியக்காரர்கள் ஊழியம் செய்கிறார்கள். இவர்களுடைய ஊழியம் உலகத்திற்குரியதல்ல. பரலோகத்திற்குரியது.
விளைந்த தானியங்களை அறுவடைசெய்யும்போது, விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்து சந்தோஷப்படுவார்கள். சுவிசேஷச் செய்தியை பிரசங்கித்து, கர்த்தருடைய ஊழியத்தை ஆரம்பித்து வைக்கிறவர்கள் விதைக்கிறவர்களைப் போன்றவர்கள். இவர்கள் கர்த்தருடைய வசனத்தை மனுஷருடைய ஆத்துமாக்களில் விதைக்கிறார்கள். ஆத்துமாக்களில் விதைக்கப்பட்டிருக்கும் வசனங்கள் முளைத்து வளருவதற்கு உதவியாக உபதேசம்பண்ணுகிறவர்களும், போதகம்பண்ணுகிறவர்களும், ஆத்துமாக்களை அறுவடை செய்கிறார்கள்.
ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய ராஜ்யத்தில் சேர்க்கப்படும்போது அந்த ஆத்தும இரட்சிப்பில் பங்குபெற்றுள்ள எல்லா ஊழியக்காரர்களுக்கும் மிகுந்த சந்தோஷம் உண்டாகும். அறுவடையின்போது விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்து சந்தோஷப்படுவார்கள். அதுபோலவே ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படும்போது, அந்த ஆத்துமாவுக்கு சுவிசேஷத்தை அறிவித்த ஊழியக்காரரும், அந்த ஆத்துமா ஆவிக்குரிய ரீதியாக வளர்ச்சிப்பெற்று ஆவிக்குரிய கனிதருவதற்கு உதவியாக ஊழியம் செய்த ஊழியக்காரரும் ஒருமித்து சந்தோஷப்படுவார்கள். அறுக்கிறவர்கள் அறுவடையின் சந்தோஷத்தில் பங்குபெறுவார்கள்.
இயேசு கிறிஸ்து சமாரிய ஸ்திரீயின் இருதயத்திலே சுவிசேஷ விதையை விதைத்திருக்கிறார். ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணுவதற்கான கூலியை அவர் ஏற்கெனவே வாங்கியிருக்கிறார். அவர் விதையை விதைத்து, நித்திய ஜீவனுக்கான கனியை அன்றைய தினமே அறுவடை செய்கிறார். விதைக்கிறவரும், அறுக்கிறவரும் இந்த வசனத்தில் இயேசு கிறிஸ்துவே. இயேசு கிறிஸ்து அந்த நாளின் அறுவடைக்காக மிகுந்த சந்தோஷமடைகிறார்.
விதைக்கிறவன் ஒருவன், அறுக்கிறவன் ஒருவன்
விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது. நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார் (யோவா 4:37,38).
விளைந்த தானியத்தை அறுவடை செய்கிறவனுடைய வேலை மிகவும் எளிதான வேலை. அறுக்கிறவன் விதைக்கவில்லை. தண்ணீர் பாய்ச்சவில்லை. கொத்தி எருபோடவில்லை. இவையெல்லாம் செய்தால்தான் தானியம் அறுவடைக்கு ஆயத்தமாக இருக்கும். அந்த வேலையை வேறொருவன் செய்துவிட்டான். அறுவடை செய்கிறவன் தன்னுடைய வேலையை ஆரம்பிப்பதற்கு முன்பாக, மற்ற வேலைகள் அனைத்தையும் வேறு சிலர் அவனுக்கு முன்பாகவே செய்து முடித்திருக்கிறார்கள்.
விதைக்கிறவன் ஒருவன், அறுக்கிறவன் ஒருவன் என்பது யூதருடைய வழக்கச்சொல். மோசே, தீர்க்கதரிசிகள், யோவான்ஸ்நானன் ஆகியோர் சுவிசேஷத்திற்கு பாதையை செம்மைப்படுத்திக் கொடுத்தார்கள். ""நீங்கள் பிரயாசப்பட்டு பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன்'' என்று இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியக்காரர்களுக்கு அறிவிக்கிறார். இயேசுகிறிஸ்து கூறும் இந்த வாக்கியத்தில் பழைய ஏற்பாட்டு ஊழியத்தைப்பற்றிய இரண்டு காரியங்கள் தெளிவுபடுத்தப்படுகிறது.
புதிய ஏற்பாட்டு ஊழியத்தைவிட பழைய ஏற்பாட்டு ஊழியம் மிகவும் சிறியது. மோசேயும் மற்ற தீர்க்கதரிசிகளும் விதைத்தார்கள். ஆனால் அறுவடை செய்யவேண்டும் என்னும் கட்டளை அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் தீர்க்கதரிசன செய்திகளை ஆகமங்களாக எழுதினார்கள். அவர்களுடைய எழுத்துக்கள் இக்காலம் வரையிலும் தொடர்ந்து பிரயோஜனமுள்ளதாக இருக்கிறது. அக்காலத்தில் கர்த்தருடைய செய்தியை பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனமாக அறிவித்தார்கள். தேவனுடைய செய்தியை பிரசங்கம்பண்ணினார்கள்.
அவர்கள் கொடுத்த பிரசங்கச் செய்தியைவிட, அவர்கள் எழுதியுள்ள ஆகமங்கள் நமக்கு மிகுந்த பிரயோஜனமுள்ளதாக இருக்கிறது. புதிய ஏற்பாட்டு ஊழியத்திற்கு, பழைய ஏற்பாட்டு ஊழியங்கள் பாதையை செம்மைப்பண்ணி கொடுக்கிறது. பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் கர்த்தருடைய வார்த்தையை ஜனங்களுடைய உள்ளத்தில் விதைத்திருக்கவில்லையென்றால், இந்த சமாரியா ஸ்திரீயினால் ""கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறாரென்று அறிவேன்'' என்று சொல்லியிருக்கவே முடியாது.
""நீங்கள் பிரயாசப்பட்டு பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன்'' என்று இயேசுகிறிஸ்து சொல்லும்போது, அவருடைய அப்போஸ்தலர்களுடைய ஊழியத்தின் இரண்டு காரியங்கள் தெளிவுபடுத்தப்படுகிறது. முதலாவதாக அப்போஸ்தலர்களுடைய ஊழியம் கனிகொடுக்கக்கூடிய ஊழியம். அறுக்கிறவர்கள் தாங்கள் அறுவடை செய்ததை ஓரிடத்தில் சேர்த்து வைக்கிறார்கள். யாரோ ஒருவர் விதைத்து, நீர்பாய்ச்சி, கொத்தி எருப்போட்டு வளர்த்ததை, அறுவடை செய்கிறவர்கள் இப்போது அறுக்கிறார்கள்.
பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் கர்த்தருடைய வார்த்தையை கண்ணீரோடு விதைத்தார்கள். வீணாக பிரயாசப்பட்டோமே என்று அவர்கள் பல சமயங்களில் வருத்தப்பட்டு புலம்பியிருக்கிறார்கள். ஆனால் புதிய ஏற்பாட்டுக்காலத்தில், ஆத்துமாக்களை அறுவடை செய்கிற அப்போஸ்தலர்களோ சந்தோஷமாய் அறுவடை செய்கிறார்கள். ""எங்களுக்கு எப்போதுமே வெற்றி கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்'' என்று ஆனந்த கெம்பீரமாக பாடி அறுவடை செய்கிறார்கள். விதைத்தவர்களோ கண்ணீரோடு விதைத்தார்கள். அறுவடை செய்கிறவர்களோ ஆனந்த சந்தோஷத்தோடு அறுவடை செய்கிறார்கள்.
நம்முடைய காலத்திற்கு முன்பு ஏராளமான ஊழியக்காரர்கள் இரத்த சாட்சிகளாக மரித்திருக்கிறார்கள். பலவிதமான உபத்திரவங்களையும், பாடுகளையும் அனுபவித்து கடினமான பகுதிகளிலும் ஊழியம் செய்திருக்கிறார்கள். தங்கள் கண்களால் அவர்கள் கனியைக் காணவில்லை. அவர்களுடைய ஊழியக்காலத்தில் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவில்லை. அவர்களுக்கு பின்வந்த தற்காலத்து ஊழியர்கள் அவர்களுடைய பிரயாசத்தின் பலனைப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் அக்காலத்தில் கண்ணீரோடு விதைத்ததை, இக்காலத்து ஊழியக்காரர்கள் ஆனந்த சந்தோஷத்தோடு அறுவடை செய்கிறார்கள். நம்முடைய காலத்திற்கு முன்பு கர்த்தருடைய ஊழியத்தை செய்த பரிசுத்தவான்களுக்காக நாம் கர்த்தரைத் துதிக்கவேண்டும். ஏனெனில் அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நாம் இப்போது பெற்றுக்கொண்டிருக்கிறோம்.
இயேசு கிறிஸ்து தமது சீஷர்களை ஆத்தும அறுவடைக்காக அனுப்புகிறார். அவர்கள் அறுவடையின் பலனைப் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் சீஷர்கள் சத்தியவசனங்களை விதைக்கவில்லை. அவர்களுக்கு முன்பிருந்த பரிசுத்தவான்களும், தீர்க்கதரிசிகளும் வேத வசனத்தை ஜனங்களுடைய இருதயத்தில் விதைத்திருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவும், யோவான் ஸ்நானனும் ஏற்கெனவே சத்திய வசனத்தை ஜனங்கள் மத்தியிலே விதைத்திருக்கிறார்கள். அவர்கள் ஏற்கெனவே பலருக்கு சத்திய வசனங்களைப் பிரசங்கம்பண்ணி, ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறார்கள். ஏராளமான வியாதியஸ்தர்களைக் குணப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் பிரயாசப்பட்டு, பயிரிட்டார்கள். அவர்களுடைய பிரயாசத்தின் பலனைச் சீஷர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.