இயேசுவின் சீஷர்கள் THE DISCIPLES OF JESUS CHRIST (Tamil Bible Study) 3. மத்தேயு வீட்டில் இயேசு பாவிகளோடு போஜனம் பன்னுதல் (மத் 9:9-13; மாற் 2:13-17; லூக்கா 5:27-32)

 

இயேசுவின் சீஷர்கள் THE DISCIPLES OF JESUS CHRIST (Tamil Bible Study)


3. மத்தேயு வீட்டில் இயேசு பாவிகளோடு போஜனம் பன்னுதல் (மத் 9:9-13; மாற் 2:13-17; லூக்கா 5:27-32)


ஆயத்துறையில்  மத் 9 : 9-13 


 மத்தேயு ஆயத்துறையில் உட்கார்ந்து வரிவசூலித்துக் கொண்டிருக்கிறவர். சமுதாயத்தில் வரிவசூலிப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடையாது. இவர்கள் ஜனங்களை ஏமாற்றி, அரசாங்கத்தையும் ஏமாற்றி அதிக லாபம் சம்பாதிக்கிறவர்கள். இந்த அவப்பெயர் இவர்களைப்பற்றி உள்ளது. இயேசுகிறிஸ்து வரிவசூலிக்கிறவர்கள்மீதும் அன்பாகவே இருக்கிறார். வரிவசூலிக்கிறவர்களில் ஒருவராகிய மத்தேயுவை தமது சீஷராக அழைக்கிறார். இந்த மத்தேயு பிற்காலத்தில் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷங்களில்       ஒன்றை எழுதியிருக்கிறார்.


எனக்குப் பின் சென்று வா


இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு: எனக்குப் பின் சென்றுவா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான் (மத் 9:9).


மத்தேயுவைப்போல மாற்கும் லூக்காவும் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை எழுதியிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் மத்தேயுவை லேவி என பெயரிட்டு அழைக்கிறார்கள். லேவி என்பது மத்தேயுவின் ஆரம்பகாலத்து பெயராக இருக்கலாம். இயேசுகிறிஸ்து இவரை தம்முடைய சீஷராக அழைத்து இவருடைய பெயரை மத்தேயு என மாற்றியிருக்கலாம். சீமோனின் பெயரை இயேசு பேதுரு என்று அழைத்தார். மத்தேயு என்னும் பெயருக்கு ""தேவனுடைய ஈவு'' என்று பொருள்.


இயேசுகிறிஸ்து மத்தேயுவை பார்த்தபோது அவர் ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தார். இவர் ஒரு ஆயக்காரர்  (லூக் 5:27). இயேசுகிறிஸ்து மற்ற சீஷர்களை அழைத்ததுபோலவே மத்தேயுவையும் தம்மைப் பின்பற்றி வருமாறு அழைக்கிறார் (மத் 4:18). சாத்தான் ஒரு வேலையும் செய்யாமல் சோம்பேறியாக சும்மா இருக்கிறவர்களை சோதிப்பான். தன்னுடைய கிரியைகளைச் செய்ய அவர்களை அழைப்பான். ஆனால் இயேசுகிறிஸ்துவோ சும்மா இராமல் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறவர்களையே தமது சீஷராக அழைக்கிறார்.


சாதாரண ஜனங்களையே இயேசுகிறிஸ்து தமது சீஷராக அழைக்கிறார். ஆயக்காரர்கள் சமுதாயத்தில் மோசமானவர்களாக கருதப்பட்டார்கள். ஆயக்காரரில் ஒரு சிலரே கண்ணியமாக அந்த வேலையை    செய்தவர்கள். இயேசுகிறிஸ்துவின் ஜனங்கள் எல்லா தொழிலையும் செய்கிறார்கள். சமுதாயத்தின் எல்லா நிலைகளிலிருந்தும் அவர் தம்முடைய பிள்ளைகளை தெரிந்தெடுக்கிறார். இயேசுகிறிஸ்து ஒருவரை தம்முடைய பிள்ளையாக தெரிந்தெடுக்கும்போது, நாம் அவருடைய கிரியையை நியாயம் தீர்க்கக்கூடாது. இயேசுகிறிஸ்து யாரையும் பாவத்திற்கு அழைப்பதில்லை.  பரிசுத்தத்திற்கே அழைக்கிறார். பாவ வாழ்க்கையில் இருக்கிறவர்களை இயேசுகிறிஸ்து மீட்டு இரட்சித்து, அவர்களை சுத்திகரித்து தமது ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்கிறார். இயேசுகிறிஸ்துவின் அழைப்பு கிருபையின் அழைப்பாகும். இவருடைய அழைப்பு நியாயப்பிரமாணத்தின் அழைப்பல்ல. 


இதற்கு முன்பு மத்தேயு இயேசுகிறிஸ்துவை பின்பற்ற வேண்டும் என்று வாஞ்சிக்கவில்லை. இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை  கேட்பதற்காக எப்போதுமே திரளான ஜனங்கள் கூடியிருப்பார்கள். அந்த கூட்டத்திலும் மத்தேயு காணப்படவில்லை. அப்படிப்பட்ட மத்தேயுவை இயேசுகிறிஸ்து தேடி வருகிறார். தன்னை சீஷராக ஏற்றுக்கொள்ளுமாறு மத்தேயு விண்ணப்பம் பண்ணவும் இல்லை. இயேசுகிறிஸ்துவே அவனிடம்  முதலாவதாகப் பேசுகிறார். நாம் இயேசுவை தெரிந்து கொள்ளவில்லை. அவரே நம்மை தெரிந்து கொண்டார். 


இயேசு மத்தேயுவிடம் ""எனக்கு பின் சென்று வா'' என்று கூறுகிறார். இயேசுவின் அழைப்பு அதிகாரமுள்ளது. கிருபை நிறைந்தது. இயேசுவின் அழைப்பைக் கேட்டவுடன் மத்தேயு  தான் உட்கார்ந்திருந்த ஆயத்துறையிலிருந்து உடனடியாக எழுந்து இயேசுவுக்குப் பின் செல்கிறான். மத்தேயு காலதாமதம் பண்ணவில்லை. இயேசுவின் அழைப்பைக் கேட்டு அவரிடம் விவாதம் பண்ணவும் இல்லை. 


தெய்வீக கிருபை வெளிப்படும்போது எல்லா தடைகளும் அகற்றப்படும். தேவனுடைய சித்தம் நிறைவேறும். இதுவரையிலும் மத்தேயு ஆயத்துறையில் உட்கார்ந்திருந்து,  ஆயம் வசூலிப்பதையே தன்னுடைய தொழிலாக செய்து கொண்டிருந்தான். இப்போது இயேசுகிறிஸ்து தன்னை அழைத்தவுடன், தன்னுடைய வேலையைப் பற்றியோ, தன்னுடைய வருங்காலத்தைப் பற்றியோ சிந்தனை செய்யாமல் அவருக்குப்  பின் செல்கிறான். 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் சிலர் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்தார்கள். இயேசுவின் அழைப்பைப் பெற்று இந்த    சீஷர்கள் மீன் பிடித்தொழிலையும், தங்கள் படவையும், வலைகளையும் விட்டு அவரைப் பின்பற்றிச் சென்றார்கள். அவர்கள்கூட சில சமயங்களில் மறுபடியும் கடலுக்குச்சென்று மீன் பிடித்திருக்கிறார்கள். ஆனால்    மத்தேயுவோ இயேசுகிறிஸ்துவின் சீஷனான பின்பு, மறுபடியும் ஆயத்துறையில் உட்கார்ந்து வரிவசூலித்ததாக குறிப்பு எதுவுமில்லை.


இயேசுவின் போஜனபந்தி


 பின்பு அவர் வீட்டிலே போஜன பந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள் (மத் 9:10).


மீன் பிடிக்கிற தொழிலை செய்து வந்த இயேசுகிறிஸ்துவின்  சீஷர்கள் ஏழைகள். அவர்களை இயேசுகிறிஸ்து தமது சீஷர்களாக  அழைத்தபோது அவர்கள் யாரும் இயேசுவுக்கு விருந்து ஆயத்தம்பண்ணவில்லை. இவர்களுக்கு விருந்து ஆயத்தம்பண்ண பொருளாதார வசதியுமில்லை. மத்தேயு ஒரு செல்வந்தன். இயேசுகிறிஸ்து இவனை தம்முடைய சீஷனாக அழைத்தவுடன் தன்னுடைய வீட்டிலே     அவருக்கு ஒரு விருந்து ஒழுங்குபடுத்துகிறான். மத்தேயு தான் எழுதின சுவிசேஷத்தில் இந்த சம்பவத்தைப் பற்றி எழுதும்போது இந்த வீடு தன்னுடைய வீடு என்று குறிப்பிடவில்லை. இந்த விருந்தை தான் ஆயத்தம் பண்ணியதாகவும் எழுதவில்லை. இயேசு வீட்டிலே போஜனபந்தியிருந்தார் என்று பொதுவாக எழுதுகிறார். நாம் செய்த நற்காரியங்களை நாமே விளம்பரம் பண்ணுவதில்லை. அதுபோல மத்தேயுவும் தான் செய்த இந்த விருந்தை தனக்கு விளம்பரமாக எழுதிக்கொள்ளவில்லை.  


மத்தேயு இயேசுகிறிஸ்துவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்தபோது அவருடன் இருந்த மற்ற சீஷர்களையும் தன் வீட்டிற்கு அழைக்கிறார். இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறவர்கள் அவருடைய பிள்ளைகள் எல்லோரையும் ஏற்றுகொள்வார்கள்.  இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தம் தங்களுடைய இருதயங்களில் அவர்களுக்கு இடம் கொடுப்பார்கள். அதுபோலவே மத்தேயுவும் இயேசுகிறிஸ்துவையும் அவருடைய சீஷர்களையும் தம்முடைய வீட்டிற்கு அழைத்து வருகிறார்.


மத்தேயுவுக்கு பல சிநேகிதர்கள் இருக்கிறார்கள். இவர்களில் அநேகர் ஆயக்காரரும் பாவிகளும் ஆவர். மத்தேயு அவர்களையெல்லாம் அழைத்து வந்து இயேசுவுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார்.    தன் வீட்டில் மத்தேயு விருந்து ஒழுங்குபடுத்துவதன் நோக்கமே இதுதான். தன்னுடைய நண்பர்களை இயேசுவுக்கு அறிமுகம் செய்து வைக்கவேண்டும். தன்னுடைய தொழிலில் தன்னோடு வேலை பார்த்தவர்களனைவரும் இயேசுகிறிஸ்துவைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறார். மத்தேயுவுக்கு தன் சிநேகிதரிடத்தில் உண்மையான அன்பு இருக்கிறது. ஆகையினால் அவர்கள் கெட்டுப்போகாமல் இயேசுகிறிஸ்துவிடம் வரவேண்டும் என்று விரும்புகிறார். மெய்யான அன்புள்ளவர்கள்  தனிமையாக போஜனம் உட்கொள்ள மாட்டார்கள். போஜனம் பண்ணுமாறு மற்றவர்களையும் தங்களோடு அழைப்பார்கள். இயேசுகிறிஸ்துவை பின்பற்றியவர்கள் அவரிடம் மற்றவர்களையும் அழைத்து வந்திருக்கிறார்கள். அந்திரேயா, பிலிப்பு ஆகியோர் இயேசுகிறிஸ்துவிடம் இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் (யோவா 1:40,45; 4:29).


யூதர்கள் ஒரு சில ஜனங்களைப் பாவிகள் என்று பிரித்து வைத்திருந்தார்கள். இவர்கள் தங்கள் பாவ ஜீவியத்தில் வெளிப்படையாக ஜீவித்து வந்தவர்கள். யூதமார்க்கத்தில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை, யூதமார்க்கத்துப் பிரமாணங்களைக் கடைப்பிடிப்பதும் இல்லை. பாவிகள் ஆயக்காரரோடு சேர்த்து ஒன்பது இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். தேவன் பாவிகளுடைய ஜெபத்தைக் கேட்க மாட்டார் என்பது யூதர்களுடைய நம்பிக்கை. (யோவான் 9:31) புறஜாதிகள் எல்லோரையும் யூதர்கள் பாவிகள் என்றே கருதினார்கள். (கலா 2:15-17) கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்களைப் புதிய ஏற்பாடு பாவிகள் என்று கூறுகிறது. (ரோமர் 3:19-23; ரோமர் 5:12-21) இயேசு கிறிஸ்து பாவிகளை இரட்சிப்பதற்கு வந்தார். நீதிமான்களை இரட்சிப்பதற்கு வரவில்லை.  


பரிசேயரின் விவாதம்


பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள் (மத் 9:11).


ஆயக்காரரும் பாவிகளும் வந்து இயேசுவோடும் அவருடைய சீஷரோடுங்கூட பந்தியிருக்கிறார்கள். இது பரிசேயருக்கு அருவருப்பாக இருக்கிறது. உங்கள்  போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறது என்ன என்று பரிசேயர் இயேசுகிறிஸ்துவின் சீஷர்களிடம் கேட்கிறார்கள். இயேசுகிறிஸ்து என்ன கூறினாலும், என்ன செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்க வேண்டுமென்று பரிசேயர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். பாவிகளை இரட்சிப்பதற்காகவே இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். பாவிகள் நிமித்தமாக தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் இயேசுகிறிஸ்து  பொறுமையோடு சகித்துக்கொள்கிறார். 


நம்முடைய விசுவாச வாழ்க்கையில் நமக்கும் நிந்தனைகள் வரலாம். அவற்றை பொறுமையோடு சகித்துக்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும். இங்கு பரிசேயர்கள் விவாதம் பண்ணுகிறார்கள். இவர்கள் பாவிகளோடு எந்த சம்பந்தமும் கலப்பதில்லை. அவர்களை வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள். பரிசேயர்கள் பாவிகளை ஒதுக்கினாலும், பாவங்களை வெறுத்து ஒதுக்குவதில்லை.    வெளி வேஷத்தில் இவர்கள் தங்களை பக்திமான்களாக காண்பித்துக் கொள்கிறார்கள். பக்தியின் வேஷத்தை தரித்திருக்கிறார்கள். ஆனால் தேவத்துவத்திற்கு இவர்கள் விரோதிகளாக இருக்கிறார்கள்.


பரிசேயர்கள் தங்களுடைய குற்றசாட்டுக்களை இயேசுகிறிஸ்துவிடம் கூறாமல்  அவருடைய சீஷர்களிடம் கூறுகிறார்கள். இயேசுகிறிஸ்துவை சந்திக்கும் துணிச்சல் பரிசேயர்களுக்கு இல்லை. ஆகையினால் சீஷர்களோடு மோதுகிறார்கள். இயேசுகிறிஸ்து செய்த காரியத்திற்காக பரிசேயர்கள் சீஷர்களிடம் கோபித்துக் கொள்கிறார்கள். 


இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யும்போது நம்மிடமும் சிலர் தேவையில்லாமல் விவாதம் பண்ண வரலாம். அவர்களுக்கு எப்படிப்பட்ட பதிலுரைகளை கூறவேண்டும் என்று நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்.  நம்மிடத்தில் இருக்கிற நம்பிக்கையைக் குறித்து நம்மிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும், வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல நாம் எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும் (1பேது 3:15). 


இயேசுகிறிஸ்து பரலோகத்தில்  நமக்காக பரிந்து பேசுகிறார். பூமியில் நாம் இயேசுகிறிஸ்துவின் காரியங்களுக்காக நம்மிடத்தில் கேட்கிறவர்களுக்கு உத்தரவு சொல்ல வேண்டும். நாம் இயேசுகிறிஸ்துவுக்காக இந்த பூமியில் பரிந்து பேசவேண்டும்.


நாம் துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடக்கக்கூடாது. பாவிகளுடைய வழியில் நிற்கக்கூடாது.  பரியாசக்காரர் உட்காருமிடத்தில் உட்காரக்கூடாது (சங் 1:1). ஆனால் இயேசுகிறிஸ்துவோ ஆயக்காரரோடும் பாவிகளோடும் பந்தியிருக்கிறார். துன்மார்க்கரோடு ஐக்கியமாக இருப்பது தேவனுடைய  பிரமாணத்திற்கு விரோதமானது. இந்த சத்தியத்தை பரிசேயர்கள் சீஷர்களிடம் கூறுகிறார்கள். சீஷர்கள் இதை சிந்தித்துப் பார்த்து இயேசுகிறிஸ்துவை விட்டு விலகிப்போய் விடுவார்கள் என்று  பரிசேயர்கள் நினைக்கிறார்கள். 


ஆயக்காரரோடு ஐக்கியமாக இருப்பது மூப்பர்களுடைய பாரம்பரியத்திற்கு விரோதமானது. இந்த பாரம்பரிய பிரமாணத்தை மீறியதற்காக பரிசேயர்கள் இயேசுகிறிஸ்துவோடு கோபமாக இருக்கிறார்கள். பரிசேயர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு தீங்கு செய்ய விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் தங்களுக்குத் தெரிந்த காரணங்களையெல்லாம் ஒன்று சேர்த்து, அலங்காரமான வார்த்தைகளை பயன்படுத்தி குற்றப்படுத்துகிறார்கள். 


இவர்கள் ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் நன்மை செய்ய விரும்பவில்லை. ஆகையினால் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் இயேசுகிறிஸ்துவை வெறுக்கிறார்கள்.  பரிசேயர்களிடம் தேவனுடைய கிருபை வெளிப்படவில்லை. தேவனுடைய கிருபையை இவர்கள் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதுமில்லை.


பிணியாளிகளுக்கு வைத்தியம்


இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை   (மத் 9:12).


பரிசேயர்கள் இயேசுகிறிஸ்துவிடம் கோபப்படாமல் அவருடைய சீஷர்களிடம் கோபப்படுகிறார்கள். இயேசுகிறிஸ்து ஆயக்காரரோடும் பாவிகளோடும் பந்தியிருப்பதை குற்றப்படுத்துகிறார்கள். தம்முடைய செய்கையை இயேசுகிறிஸ்து நியாயம்படுத்துகிறார். தமக்காகவும் தம்முடைய சீஷர்களுக்காகவும் இயேசுகிறிஸ்துவே வழக்காடுகிறார். 


ஆயக்காரருக்கு இயேசுகிறிஸ்துவின் உதவி தேவைப்படுகிறது. பரிசுத்தமான பரலோகத்திலிருந்து ஆயக்காரரைப்போன்ற பாவிகளை இரட்சிப்பதற்காகவே இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வந்திருக்கிறார். அவர்கள் பாவிகளாகவும், அசுத்தமானவர்களாகவும் இருந்தாலும் அவர்களை இரட்சித்து சுத்திகரிக்க வேண்டுமென்பது  இயேசுகிறிஸ்துவின் சித்தம்.  


போஜனபந்திக்கு ஆயக்காரரையும் பாவிகளையும்  ஆயக்காரனாகிய மத்தேயுவே அழைத்து வந்திருக்கிறார். தனக்கு ஒரு இரட்சகர் தேவை என்பதை மத்தேயு உணர்ந்திருக்கிறார். தன்னைப்போலவே பாவிகளாக இருக்கும் மற்ற ஆயக்காரருக்கும் இயேசுகிறிஸ்து தேவை என்பதை        உணர்ந்து அவர் எல்லோரையும் அழைத்து வந்திருக்கிறார். இவர்கள் எல்லோருமே ஆவிக்குரிய ரீதியாக பிணியாளிகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆவிக்குரிய வைத்தியர் தேவைப்படுகிறார்.


இயேசுகிறிஸ்து பரிசேயரிடம் பிணியாளிகளுக்கு வைத்தியன் தேவைப்படுவதை உணர்த்துகிறார். சுகமுள்ளவர்களுக்கு வைத்தியர் தேவைப்படமாட்டார். ஆயக்காரர்கள் பாவிகளாகவும் பிணியாளிகளாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. அவர்களுடைய பிணி குணமாக்கப்படவேண்டும். ஆனால் பரிசேயர்களோ அவர்களைப்பற்றி சிந்தித்துப் பார்ப்பதில்லை. பரிசேயர்கள் ஆயக்காரரை பாவிகளாக காண்கிறார்கள். ஆனால் அவர்களும் குணப்படுத்தப்படவேண்டிய பிணியாளிகளே என்று காண்பதில்லை.


பாவம் ஆத்துமாவின் வியாதியாக இருக்கிறது. இது ஒரு மனுஷனுடைய ஆத்துமாவை பலவீனப்படுத்தி பாழாக்குகிறது.  ஆத்துமாவின் வியாதியை தேவனால் குணப்படுத்த முடியும். இயேசுகிறிஸ்து ஆத்துமாவை குணப்படுத்துகிற பரம வைத்தியராக இருக்கிறார். பாவத்தினால் ஆத்துமாவில் வியாதி உண்டாயிருக்கிறவர்கள் ஆத்தும வைத்தியராகிய இயேசுகிறிஸ்துவிடம் வரவேண்டும். ஆத்தும வியாதி பயங்கரமானது. உலகப்பிரகாரமாக ஆத்தும வியாதிக்கு மருந்து எதுவுமில்லை. இயேசுகிறிஸ்துவே ஆத்தும வியாதியை குணப்படுத்துகிற வைத்தியர். ஆத்தும வியாதி உடையவருக்கு மனுஷரால் உதவிபுரிய முடியாது. இயேசுகிறிஸ்துவின் இரட்சிக்கும் கிருபையில்லாமல் யாராலும் ஆத்தும வியாதியிலிருந்து குணமடைய முடியாது. 


இக்காலத்தில் ஏராளமான ஜனங்கள் தங்களுடைய ஆத்துமாவிற்கு எந்த வியாதியும் இல்லையென்று வெளி வேஷமாக  பேசுகிறார்கள். தங்கள் ஆத்துமாவில் ஆரோக்கியமாக இருப்பதாக கூறுகிறார்கள். தங்களுக்கு பரம வைத்தியராகிய  இயேசுகிறிஸ்து தேவையில்லை என்று நினைக்கிறார்கள். இவர்கள் லவோதிக்கேயா சபையாரைப் போன்றவர்கள். இப்படிப்பட்டவர்கள் நிர்ப்பாக்கியமுள்ளவர்களாவும், பரிதபிக்கப்படத்தக்கவர்களாகவும், தரித்திரராகவும், குருடராகவும், நிர்வாணிகளாகவும் இருக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் தங்கள் உண்மை  நிலையை அறியாமல் தாங்கள் ஐசுவரியவான்கள் என்றும், திரவியசம்பன்னர் என்றும், தங்களுக்கு ஒரு குறைவுமில்லை என்றும் சொல்லுகிறார்கள் (வெளி 3:17).


மார்க்கப்பிரகாரமான சடங்குகளில் ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கலாம். இவை தேவனுடைய கிருபையின் ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்கக்கூடாது.  நாம் செய்யும் எல்லாக் காரியங்களிலும் தேவனுடைய நாமம் மகிமைப்படவேண்டும். நமது கிரியைகள் மூலமாக மனுஷருக்கு ஆவிக்குரிய பிரகாரமாக ஆசீர்வாதங்கள் உண்டாகவேண்டும். பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம் (1சாமு 15:22,23). பாரம்பரியத்தின் சடங்காச்சாரங்களைவிட  மற்றவர்களுக்கு நன்மை புரிவதே உத்தமம். நாம் மனுஷருக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி அழிந்துபோகும் ஆத்துமாவிற்கு ஜீவப்பாதையை காண்பித்து அழிவிலிருந்து அந்த ஆத்துமாவை இரட்சிப்பதுதான். தப்பிப்போன மார்க்கத்திலிருந்து பாவியை திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து திரளான பாவங்களை மூடுவான் என்று அறியக்கடவன் (யாக் 5:20).


பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தவர்


ப-யையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார் (மத் 9:13). 


தேவன் பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறார். இதன் கருத்தை பரிசேயர்கள் புரிந்து கொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்து பரிசேயரிடம் இந்த வாக்கியத்தின் கருத்து இன்னதென்று போய் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். வேதவாக்கியங்களை மனப்பாடம் செய்தால் மாத்திரம் போதாது. அதன் மெய்ப்பொருளை புரிந்து கொள்ளவேண்டும். பரிசேயர்கள் வேதவாக்கியத்தைக் கற்று அதன் பொருளையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் தாங்கள் கற்றுக்கொண்டதை தேவனுடைய நாம மகிமைக்காகவோ, ஜனங்களுடைய ஆவிக்குரிய பிரயோஜனத்திற்காகவோ இவர்கள் பயன்படுத்தவில்லை. தாங்கள் செய்யும் தவறுகளை மூடி மறைப்பதற்கும், தங்களுடைய பாரம்பரியமான பழக்க வழக்கங்களை நியாயப்படுத்துவதற்கும் தங்களிடத்திலுள்ள வேத அறிவை பரிசேயர்கள் பயன்படுத்துகிறார்கள்.


தேவன் பலியை விரும்பாமல் இரக்கத்தை விரும்புகிறார். இரக்கம் காண்பிப்பதே மெய்யான மார்க்கம். பலி செலுத்துவது வெளிப்படையான அடையாளம். மற்றவர்களுக்கு நன்மை செய்யும்போது அந்த உதவி அவர்களுடைய சரீரத்திற்கும் ஆத்துமாவிற்கும் உதவிபுரிய வேண்டும். இதன் மூலமாக அவர்களுக்கு நீதியும் சமாதானமும் உண்டாக வேண்டும். பரிசேயர்கள் மார்க்க சடங்குகளை தங்களுடைய சுய லாபத்திற்காக மாய்மாலமாக கடைபிடிக்கிறார்கள். பாரம்பரிய பழக்க வழக்கங்களைவிட நற்கிரியைகளே மேன்மையானது. 


இயேசுகிறிஸ்து பாவிகளை மனந்திரும்புகிறதற்கே இந்த பூமிக்கு வந்திருக்கிறார். ஆகையினால் அவர் பாவிகளோடும் ஆயக்காரரோடும் பந்தியில் அமர்ந்திருக்கிறார். இயேசுகிறிஸ்து பந்தியில் இருந்தாலும் போஜனபந்தி அவருக்கு முக்கியமல்ல. தம்மோடு பந்தியில் அமர்ந்திருக்கும் பாவிகளே இயேசுவுக்கு முக்கியமானவர்கள். அவர்களை மனந்திரும்புமாறு அழைப்பதே அவருடைய பிரதான நோக்கம். அழைப்பு கொடுக்கும்போது பாவிகளுடைய சிந்தனையும் அவர்களுடைய வழிகளும் மாறும். 


இயேசுகிறிஸ்து நீதிமான்களை மனந்திரும்புகிறதற்கு அழைக்க வரவில்லை. மனுஷகுமாரர்கள் பாவிகளாக  இருக்கவில்லை யென்றால் இயேசுகிறிஸ்து இந்த பூமியில் வரவேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆனால் மனுஷர் எல்லோருமே பாவம் செய்து தேவமகிமையற்றவர்களாக இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் பிரதான ஊழியம் பிரதான பாவிகளை மனந்திரும்புமாறு அழைப்பதாகும்.  ஒரு பிணியாளியினுடைய வியாதி அதிகமாக இருந்தால் அவருக்கு வைத்தியரின் உதவி அதிகமாக தேவைப்படும். அவருக்கு அவசர சிகிச்சையெல்லாம் கொடுக்கவேண்டும். இயேசுகிறிஸ்து பாவிகளை இரட்சிப்பதற்காக வந்திருக்கிறவர். ஒருவர் தன்னை பாவிகளில் பிரதான பாவியென்று அங்கீகரித்து இயேசுகிறிஸ்துவிடம் பணிவோடு விண்ணப்பம் பண்ணினால்  இயேசுவின் கிருபை இந்த நபருக்கு அதிகமாக காண்பிக்கப்படும் (1தீமோ 1:15).


தங்களை நீதிமான்கள் என்று ஒரு சிலர் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே இவர்களும் பாவிகள்தான். தாங்கள் பாவிகள் என்று தங்களை இவர்கள் அங்கீகரிப்பதில்லை. இயேசுகிறிஸ்து இப்படிப்பட்ட மாய்மாலக்காரர் மத்தியில் ஊழியம் செய்யவில்லை. தங்களை பாவிகளென்று அறிக்கை செய்து, தமது சமுகத்தில் மனத்தாழ்மையோடு வருகிறவர்களையே  இயேசுகிறிஸ்து இரட்சிக்கிறார். தங்களை நீதிமான்கள் என்று கருதுபவர்களிடமும் பாவங்கள் உள்ளன. இவர்களுடைய பாவம் ஆத்துமாவின் வியாதியாக இருக்கிறது. தங்களுக்கு வியாதி இருக்கிறது என்பதையே இவர்கள் உணர்ந்துகொள்ளாமல், வைத்தியரிடம் வர மறுக்கிறார்கள். ஆனால் ஆயக்காரரும், பாவிகளுமோ தங்களுடைய ஆத்துமாவில் வியாதி இருப்பதை உணர்ந்து, பரம வைத்தியராகிய இயேசுகிறிஸ்துவிடம்       தங்களை தாழ்த்தி ஒப்புக்கொடுக்கிறார்கள். இயேசுகிறிஸ்து இப்படிப்பட்ட பாவிகளை மனந்திரும்புவதற்கு அழைப்பதற்கே வந்தவர். இவர்களும் இயேசுகிறிஸ்துவை அன்போடு ஏற்றுக்கொள்வார்கள்.


""ப-யையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்....நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்''  என்று இயேசுகிறிஸ்து சொல்லுகிறார். ஓசி 6:6; 1சாமு 15:22 ஆகிய வசனங்களிலிருந்து மேற்கோளாகக் கூறப்பட்டிருக்கிறது. நமது இருதயங்களில் பலிகளை விட இரக்கங்களைத் தேவன் அதிகமாக எதிர்பார்க்கிறார். நாம் பாவிகளோடு இருப்பதினால் அசுத்தமானவர்களாக இருக்கிறோம் என்னும் எண்ணம் நம்மிடத்தில் இருக்குமானால் நமது பலியினால் பிரயோஜனம் எதுவுமில்லை. இயேசு கிறிஸ்து பாவத்தை வெறுக்கிறார். ஆனால் பாவியையோ நேசிக்கிறார். 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.