பொக்கிஷத்தை குறித்த இயேசுவின் உபதேசம்

 


பொக்கிஷத்தை குறித்த இயேசுவின் உபதேசம்


மனுஷருடைய புகழ்ச்சியை நாம் விரும்பக்கூடாது. இந்த உலகத்தின் பொக்கிஷங்களின் மேலும் நாம் ஆசை வைக்கக்கூடாது. உலக பொக்கிஷத்தைக் குறித்து நாம் மிகுந்த எச்சரிப்போடு இருக்கவேண்டும். மாய்மாலக்காரர்கள் பொக்கிஷத்தை இச்சித்து சேர்ப்பதைப்போல, நாமும் இந்த பூமியில் பொக்கிஷங்களை இச்சித்து சேமித்து வைக்கக்கூடாது. இந்த உலகத்தில் உண்டாகும் மதிப்பையும் பெருமையையும் மாய்மாலக்காரர்கள் தங்களுக்கு உயர்வாக கருதுகிறார்கள். இவர்கள்  பரலோகத்தைப் பற்றி சிந்தனையில்லாதவர்கள். 


இந்த பூமியிலுள்ள ஒவ்வொரு மனுஷனும்  தனக்கு எதையாவது சேர்த்து வைக்கிறான். அதை தன் இருதயத்தில் வாஞ்சிக்கிறான். மனுஷனுடைய சரீர வாஞ்சையைவிட அவனுடைய ஆத்துமா வாஞ்சையே சிறந்தது. இந்த பூமியில் நமக்கு எந்த சொத்தும் இருக்கக்கூடாது என்று இயேசு தடைபண்ணவில்லை. ஆனால் தேவன்மீது பக்தியாக இருப்பதற்குப்      பதிலாக இந்த பூமியிலுள்ள பொக்கிஷங்களின்மீது பக்தியாக இருக்கக்கூடாது. 


பூமியில் பொக்கிஷம்


பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள் (மத் 6:19). 


இந்த பூமிக்குரிய பொக்கிஷம் நிரந்தரமானதல்ல. தற்காலிகமானது. இதன்மீது  நமது ஆசையை வளர்க்கக்கூடாது. நமது சந்தோஷத்தை பூமியிலுள்ள பொக்கிஷத்தின்மீது கட்டியெழுப்பக்கூடாது. பூமியிலே நமக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைக்கவேண்டாம் என்று இயேசுகிறிஸ்து உபதேசம் பண்ணுகிறார். 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் தங்களுக்கிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றி வந்தார்கள். அந்த நல்லமனது அவர்களிடம் தொடர்ந்து காணப்படவேண்டுமென்று இயேசுகிறிஸ்து விரும்புகிறார். இந்த பூமியில் பொக்கிஷங்களே மிகவும் உன்னதமானது என்னும் எண்ணம் நமது உள்ளத்தில் எழக்கூடாது. அவற்றை நாம் மகிமைப்படுத்தவும் கூடாது. பூமிக்குரிய பொக்கிஷத்திற்குப் பதிலாக  பரலோகத்தின் ஆசீர்வாதத்தையே நாம் மகிமையானதாக எண்ணவேண்டும்.


இந்த பூமியில் ஏராளமான பொக்கிஷங்களை சேர்த்து வைக்கவேண்டுமென்று ஆசைப்படவும் கூடாது. நமக்கு போதுமானது எது என்று தெரியாமலேயே பேராசைப்பட்டு சொத்துக்களை சேர்த்து குவிக்கக்கூடாது. நமது வருங்காலத்திற்கு உலகப் பொக்கிஷம் போதுமானதென்று தவறாக எண்ணக்கூடாது. பொன்னைப்பார்த்து நீயே எனது நம்பிக்கையென்று கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. 


இந்த பூமியில் நமக்கு பொக்கிஷம் மாத்திரம் அதிகமாக இருந்தால் அதுவே நமக்கு போதுமானது என்று திருப்தி அடையக்கூடாது.  அதேவேளையில் நமக்கு பொக்கிஷம் இல்லையே என்று அதை தேடுவதற்காக நமது முழு கவனத்தையும் செலுத்தி பேராசையோடு அலைந்து திரியக்கூடாது. 


இந்த பூமியில் நமது ஜீவியத்திற்கு தேவையான பொருளை சம்பாத்தியம் பண்ணுவதில்  தவறில்லை. நாம் பொக்கிஷத்தை ஞானமாக ஆளுகை செய்யவேண்டும். பொக்கிஷம் நம்மை ஆட்டிப்படைக்கக்கூடாது. 


நம்மை கர்த்தர் எவ்வாறு சிருஷ்டித்திருக்கிறார், எதற்காக சிருஷ்டித்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் தாலந்துகள் எவை, இவற்றை எவ்வாறு தேவநாம மகிமைக்காகவும், பரிசுத்தவான்களின் பிரயோஜனத்திற்காகவும் பயன்படுத்தவேண்டுமென்று தெளிவுபெற வேண்டும். 


இந்த பூமியில் நாம் நிலையானவர்கள் அல்ல என்பதையும், மரணம் ஒரு நாள் நமக்கு சம்பவிக்கும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.  மரித்தபின்பு நமது ஆத்துமா எங்கே போகும், பரலோகத்திற்கு போகுமா அல்லது நரகத்திற்குப் போகுமா என்பதைக் குறித்து எச்சரிப்போடு இருக்கவேண்டும். இந்த பூமியில் பொக்கிஷங்களை சேர்த்து வைத்து நமது ஆத்துமாவை இழந்துவிடக்கூடாது. 


இந்த பூமிக்குரிய காரியங்கள் எதையும் நமது பொக்கிஷமாக கருதக்கூடாது. ஏனெனில்  இவை கெட்டுப்போகும். திருடப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. பொக்கிஷங்கள் தானாகவே கெட்டுப்போகும். இந்த பூமியிலுள்ள பூச்சியும் துருவும் பூமிக்குரிய பொக்கிஷங்களை கெடுக்கும். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேல் புத்திரர்கள் வனாந்தரத்தில் பிரயாணம் பண்ணியபோது, வானத்திலிருந்து மன்னாவை வரவழைத்து தேவன் அவர்களை போஷித்தார். அவர்கள் அன்றன்று தங்களுக்கு தேவையான மன்னாவை மாத்திரம் சேகரித்துக் கொள்ளவேண்டும். தங்களுடைய தேவைக்கு அதிகமாக, பல நாட்களுக்கு உதவியாக இருக்குமென்று, ஒரு சிலர் மன்னாவை அதிகமாக சேகரித்தார்கள். ஆனால் அந்த மன்னா புசிப்பதற்கு உகந்ததாகயிராமல் கெட்டுப்போயிற்று.  


பூச்சியும் துருவும் உலோகங்களையும் வஸ்திரங்களையும் கெடுக்கும். இந்த பூமிக்குரிய ஐசுவரியங்கள் தாங்களாகவே கெட்டுப்போய் அழிந்துபோகும். திருடர்களும் பொக்கிஷங்களை திருடி சேர்க்கவேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். அவர்கள் கன்னமிட்டு திருடுகிறார்கள். பொக்கிஷங்கள் குவிந்திருக்கும் இடத்தில் சண்டையும், சச்சரவும், பலாத்காரமும்   நிறைந்திருக்கும். எந்த பொக்கிஷத்தையும் இந்த பூமியில் பாதுகாப்பாக சேமித்து வைக்கமுடியாது. சில சமயங்களில் பொக்கிஷங்கள் அதன் சொந்தக்காரரை கெடுத்துப்போடும். செல்வந்தர்களின் குணங்கள் மாறி அவர்கள் மாறுபாடாக ஜீவிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. எளிதில் கொள்ளை போகக்கூடிய பொக்கிஷங்களை சேமித்து வைப்பதினால் நமக்கு ஒரு பயனுமில்லை. 


கிழக்கு தேசத்து நாடுகளில் ஆடை ஆபரணங்கள், பொன் வெள்ளி,போர்ஆயுதங்கள், ஆகியவற்றைப் பொக்கிஷங்களாகச் சேர்த்து வைத்தார்கள். உலோகங்கள் துருப்பிடித்துப் போகும். திருடர்கள் பொக்கிஷங்களைத் திருடிச் சென்றுவிடுவார்கள். 


பரலோகத்தில் பொக்கிஷம்


பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கொடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை (மத் 6:20) .


நாம் பூமியில் பொக்கிஷங்களை சேர்த்து வைக்கக்கூடாது. ஆனால் பரலோகத்திலே நமக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைக்கவேண்டும். பரலோகத்தின் சந்தோஷத்தையும், மகிமையையும், மேன்மையையும் நாம் நாடவேண்டும். பரலோகத்திற்குரியவைகள் நித்தியமானவைகள்.  பரலோகம் நித்தியமானது. அந்த பரலோகத்தில் நமக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைத்தால் அது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். 


பூமியில் பொக்கிஷங்கள் இருப்பதுபோல, பரலோகத்திலும் பொக்கிஷங்கள் உள்ளன. பரலோகத்திலுள்ள பொக்கிஷங்களே மெய்யான பொக்கிஷங்கள். அந்த பொக்கிஷங்களில் நமது பொக்கிஷங்களை சேர்த்து வைப்பது ஞானமான காரியம். இயேசுகிறிஸ்துவின் மூலமாக நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வதே நாம் சேர்த்து வைக்கவேண்டிய முக்கியமான பொக்கிஷம். நமது சந்தோஷத்திற்கு ஆதாரமாக நம்முடைய நித்திய ஜீவனையே சார்ந்திருக்கவேண்டும். இந்த பூமிக்குரிய காரியங்களெல்லாம் நித்திய ஜீவனுக்கு இணையானதல்ல என்றும், நித்திய ஜீவனை விட இவை தாழ்ந்தவைதான் என்றும் எண்ணவேண்டும். 


பரலோகத்தில் பொக்கிஷங்களை நமக்கு சேர்த்து வைக்கும்போது, கர்த்தர் அவற்றை நமக்காக பாதுகாப்பார் என்று நம்பிக்கையோடிருக்கலாம். இந்த உலகத்திற்குரிய பணத்தின்மீது பேராசைப்படக்கூடாது. இந்த உலகத்தின் பணத்தை  தேவனுடைய ஊழியத்திற்காக செலவு செய்து, விசுவாசிகளாகிய நாம் பரலோகத்தில் நமக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைக்க பிரயாசப்படவேண்டும். 


பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்த்து வைப்பது பாதுகாப்பானது. அங்கு பூச்சியும் துருவும் அந்த பொக்கிஷத்தைக் கெடுப்பதில்லை.  திருடர்களும் பரலோகத்தில் கன்னமிட்டு திருடுகிறதில்லை. திருடுகிறவன் பரலோகத்திற்கு வரமாட்டான். என்றுமே அழியாத பொக்கிஷத்தை பரலோகத்தில் நமக்கு சேர்த்து வைப்பது ஞானமுள்ள காரியம். இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் கொடுக்கும் நித்தியஜீவனை சுதந்தரித்துக் கொள்வதே நாம் சேர்த்து வைக்கவேண்டிய மிகப்பெரிய பொக்கிஷம். 


பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பது என்பது தேவனுக்கு நம்மைப் பிரதிஷ்டை பண்ணுவதும், தேவையுள்ள ஜனங்களுக்கு உதவி புரிவதும் ஆகும். நாம் கொடுக்கும் ஒரு கலசம் தண்ணீர்கூட கர்த்தருடைய பார்வையில் மிகவும் அருமையானது. கர்த்தர் இதற்கும் பலனளிப்பார். (மத் 10:40,42).


 பரலோகத்தில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. அங்கே பூச்சிகளின் பிரச்சனை இல்லை. உலோகங்கள் துருப்பிடிக்காது. திருடர் பயம் அங்கில்லை. எல்லாருடைய இருதயமும் பயமின்றி இருக்கும். 


பொக்கிஷமும் இருதயமும்


உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும் (மத் 6:21). 


நமது இருதயம் பொக்கிஷத்தை நாடிப் போவது இயல்பான காரியம். பொக்கிஷம் பூமியில் இருந்தால் நமது இருதயமும் பூமியில் இருக்கும். நமது பொக்கிஷம் பரலோகத்தில் இருந்தால் நமது இருதயமும் பரலோகத்தில் இருக்கும். சூரியகாந்திப்பூ சூரியன் இருக்கும் திசையில் சாய்வது போல நமது இருதயமும் நமது பொக்கிஷம் இருக்கும் பக்கமாகவே சாயும். 


பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அந்த இடத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் தருவோம். பொக்கிஷம் யாரிடத்தில் இருக்கிறதோ அந்த நபருக்கும் அதிக மேன்மையை கொடுப்போம். பணம் அதிகமாக இருந்தால் அங்கு அன்பும் பாசமும் பொங்கி வழியும். ஐசுவரியம் இருக்குமிடத்தில் பூமிக்குரிய  சந்தோஷம் நிறைந்திருக்கும். நமது சிந்தனைகளெல்லாம் பொக்கிஷத்தைப் பற்றியும், அது இருக்கும் இடத்தைப் பற்றியும் தீவிரமாக இருக்கும். 


நமது இருதயம் பொக்கிஷத்திற்கு உரியதல்ல. தேவனே இருதயத்தை சிருஷ்டித்தவர். நமது இருதயம் தேவனுக்கே உரியது. இருதயத்தை பொக்கிஷத்திற்கு விற்றுவிடக்கூடாது. நாம் பொக்கிஷங்களை சேர்த்தால் அதை இயேசுகிறிஸ்து என்னும் அஸ்திபாரத்தின்மீதே சேர்க்கவேண்டும். அப்போது நமது இருதயம் பொக்கிஷத்தின்மீது இராமல் தேவன் மீதே இருக்கும். 


ஜெபம், உபவாசம், ஏழைகளுக்கு உதவிபுரிதல் ஆகியவையே நமது பொக்கிஷங்களாக இருக்கவேண்டும். இவற்றைக்கூட மனுஷர் காணும்விதமாக, மனுஷர் நம்மை புகழவேண்டும் என்பதற்காக செய்யக்கூடாது. அப்படி செய்தால் நாம் நமது பொக்கிஷங்களை பூமியில் சேர்த்து வைக்கிறோம் என்று பொருள். மனுஷருடைய புகழ்ச்சி நிலையானது அல்ல. அது நேரத்திற்கு நேரம் மாறும். பொக்கிஷம் கெட்டுப்போவதுபோல மனுஷருடைய புகழ்ச்சியும் கெட்டுப்போகும். கெட்டுப்போகக்கூடிய காரியத்தின்மீது நாம் ஆசைப்படக்கூடாது. 


ஜெபம், உபவாசம், தானதர்மம்பண்ணுதல் ஆகியவை கர்த்தருக்கு உகந்த நற்கிரியைகளாக இருப்பதினால் இவற்றை மிகுந்த எச்சரிப்போடு நிறைவேற்றவேண்டும். இவற்றுக்குள் சுய இச்சையும், பெருமையும் புகுந்து இதன் மேன்மையை கெடுத்துவிடக்கூடாது. செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமள தைலத்தை  நாறிக்கெட்டுப்போகப்பண்ணும். ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனை சொற்பமதியீனமும் அப்படியே செய்யும் (பிர 10:1). 


புறங்கூறுகிறவர்களும், அவதூறு பேசுகிறவர்களும் திருடர்களைப்போல இருக்கிறார்கள். இவர்கள் இந்த பூமிக்குரிய பொக்கிஷங்களைத் திருடிக்கொண்டு போவார்கள்.   மாய்மாலமான ஆராதனையினால் பரலோகத்தில் ஒரு பிரயோஜனமும் உண்டாகாது (ஏசா 58:3). 


நாம் உபவாசம் பண்ணும்போதும், ஜெபம்பண்ணும்போதும், தர்மம்பண்ணும்போதும் இவற்றை உண்மையாகவும், நேர்மையாகவும், மனத்தாழ்மையாகவும் செய்யும்போது பரலோகத்தில் நாம் நமக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைக்கிறோம். நாம் செய்யக்கூடிய எல்லாக் காரியங்களும் தேவனுக்கு மாத்திரம் தெரிந்திருந்தால் போதுமானது. கர்த்தருக்கு பயந்திருக்கிறவர்களுக்காகவும், அவருடைய நாமத்தை தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகபுஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது (மல் 3:16). கர்த்தர்  நமது நற்கிரியைகளை இந்த ஞாபகபுஸ்தகத்தில் எழுதி வைத்து அதற்கேற்ற பிரகாரமாக நம்மை ஆசீர்வதிப்பார். 


மாய்மாலக்காரர்களின் கிரியைகள் இந்த பூமிக்குரிய புஸ்தகங்களில் எழுதி வைக்கப்படும். பூமிக்குரிய காரியங்கள் நிலையானது அல்ல. தேவனுடைய பரிசுத்தவான்களின் காரியங்களோ பரலோகத்தில் எழுதப்பட்டிருக்கும். நமது நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காக நாம் சந்தோஷப்படவேண்டும் (லூக் 10:20). நல்லது, உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாக இருந்தாய் என்று கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறவர்கள் கர்த்தருடைய சமுகத்தை என்றென்றும் தரிசிப்பார்கள். நமது பொக்கிஷங்கள் கர்த்தரிடத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கவேண்டும். நமது இருதயங்களும் கர்த்தரிடத்திலேயே நிலைத்திருக்க வேண்டும். கர்த்தருடைய சமுகத்தைவிட நமது இருதயத்தை வைத்திருப்பதற்கு பாதுகாப்பான இடம் வேறொன்றுமில்லை. 


கண் 


கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்! (மத் 6:22,23)


மனுஷருடைய கண்களை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். ஒன்று சரீரத்தின் கண். வேதபண்டிதர்களில் சிலர் இதை இருதயம் என்று வியாக்கியானம்பண்ணுகிறார்கள். மற்றொன்று   கெட்ட கண்ணாகும். 


நமது இருதயம் நன்மையை தேடினால் அது சுயாதீனமாக இருக்கும். இந்த இருதயம்  ஆவியின் கனியை வெளிப்படுத்தும். இவருடைய கிரியைகளும் பேச்சுக்களும் வெளிச்சமுள்ளவையாக இருக்கும். மனுஷருக்கு முன்பாக பிரகாசமாக எரியும். இப்படிப்பட்ட இருதயமே நல்ல இருதயம். இதுவே இங்கு தெளிவான கண் என்று கூறப்பட்டுள்ளது. 


சிலருடைய கண் கெட்டதாக இருக்கும். இது அவர்களுடைய கெட்ட இருதயத்தைக் குறிக்கும் என்று வேதபண்டிதர்கள் வியாக்கியானம் கூறுகிறார்கள். கெட்ட இருதயம் பேராசைப்படும், தீமையை யோசிக்கும். கெட்ட இருதயத்தை உடைய சரீரம் முழுவதும் இருளாய் இருக்கும். இவர்களுடைய பேச்சும் கிரியையும் ஆவிக்குரியதாக இராது. பரிசுத்தமாக இராது. மாம்சத்திற்குரியதாகவும், அசுத்தமானதாகவும் இருக்கும். 


நம்மிடத்திலுள்ள வெளிச்சம் இருளாக இருக்கக்கூடாது. அப்படி இருளாக இருந்தால் அந்த இருள் மிகவும் அதிகமாக இருக்கும். நம்முடைய வெளிச்சம் வெளிச்சமாகவே இருக்கவேண்டும். ஒரு மனுஷனிடத்தில் நல்ல சுபாவம் இல்லையென்றால் அவன் நற்கிரியைகளை செய்யமாட்டான். நமது உள்ளத்தில் வெளிச்சத்திற்குப் பதிலாக இருள் இருந்தால் நம்மால் ஆவிக்குரிய நற்காரியங்கள் எதையும் செய்யமுடியாது. இருளில் இருக்கிறவர்களால் தெளிவான கிரியைகள் எதையும் செய்ய இயலாது.


வெளிச்சத்தில் இருக்கிறவர்கள் நற்காரியங்களை செய்வார்கள்.  தங்களுக்கு உள்ளவைகளை விற்று பிச்சை கொடுப்பார்கள். பழமையாய் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷங்களையும் பரலோகத்திலே தங்களுக்கு சம்பாதித்து வைப்பார்கள் (லூக் 12:33). இவர்கள் விசனமாயுமல்ல. கட்டாயமாயுமல்ல. தங்கள் மனதில் நியமித்தபடியே கொடுப்பார்கள். உற்சாகமாய் கொடுக்கிற இவர்களிடத்தில் தேவன் பிரியமாய் இருக்கிறார் (2கொரி 9:7). 


கண் என்பதை பகுத்தறிதல் என்றும் வேதபண்டிதர்களில் சிலர் வியாக்கியானம் பண்ணுகிறார்கள். சரீரத்தின் காரியங்களை வழிநடத்துவதற்கு கண் பயன்படுவதுபோல ஆத்துமாவின் காரியத்தை வழிநடத்துவதற்கு பகுத்தறிவு தேவைப்படுகிறது. இந்த கண் பூரணமாக இருந்தால் நீதியாக நியாயந்தீர்க்கும். நித்தியபாதையில் நடத்தும். கிருபையின் வெளிச்சத்தில் ஆத்துமாவை அழைத்துச்செல்லும். ஆத்துமாவிற்கு ஆறுதலும் இளைப்பாறுதலும் கிடைக்கும். 


ஒருவனுடைய பகுத்தறிவு தெளிவில்லாமல் இருளாக இருக்குமென்றால் அவன் தீமையை யோசிப்பான். துன்மார்க்கமான காரியங்களைச் செய்வான். அவனுடைய பேச்சும் செயலும் பாவம் நிறைந்ததாக இருக்கும். அவன் நிதானிப்பதும் தவறாகவே இருக்கும். இப்படிப்பட்டவன் நன்மையை தீமையென்றும், தீமையை நன்மையென்றும் தவறாக நிதானிப்பான்.  ""தீமையை நன்மையென்றும் நன்மையை தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாக பாவித்து, கசப்பை தித்திப்பும், தித்திப்பை கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ'' (ஏசா 5:20). 


கண்ணானது நம்முடைய நோக்கமும் ஆவலுமாக இருக்கிறதென்று வேதபண்டிதர்களில் சிலர் வியாக்கியானம் பண்ணுகிறார்கள். நமது கண்ணால் நமது முடிவைப் பார்க்கிறோம். மார்க்ககாரியங்களில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தின்மீதும் நமது பார்வையை செலுத்தவேண்டும். நமது பார்வை சுத்தமாக இருந்தால் தேவனுக்கு மகிமை உண்டாகும். நாம் தேவனுடைய மகிமையையும்  கனத்தையும் நாடுவோம். எல்லாவற்றையும் தேவனுக்கு நேராக நோக்கிப்பார்ப்போம். நமது கண் வெளிச்சமாக இருந்தால் நமது சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும். நமது செயல்கள் அனைத்தும் நேராகவும் கிருபையுள்ளதாகவும் இருக்கும். இவை தேவனுக்கு பிரியமாக இருக்கும். தேவனை மகிமைப்படுத்தும். நமக்கும் ஆறுதலாக இருக்கும். 


நமது பார்வை இருளாக இருந்தால் அது தேவனுடைய மகிமையை பார்க்காது. நம்முடைய சுய மகிமையையே பார்க்கும். தேவனை நாம் மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்கு பதிலாக ஜனங்கள் நம்மைப் மகிமைப்படுத்த வேண்டும் என்று பார்க்கும். தேவனை மகிமைப்படுத்துகிறோம் என்று வாய் கூறும். ஆனால் இருதயமோ ஜனங்கள் தங்களை மகிமைப்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கும். மெய்யான ஊழியம் செய்யாமல் மாய்மாலமான ஊழியம் செய்யும். 


மாய்மாலக்காரர்கள் கானல்நீரைப் போன்றவர்கள். ஓரிடத்தில் இருப்பதுபோன்று இருப்பார்கள். ஆனால் அங்கே இருக்கமாட்டார்கள். மெய்யான விசுவாசிகளோ ஒரு குறிக்கோளோடு பிரயாணம் பண்ணுகிறவர்களைப் போன்றவர்கள். சேரவேண்டிய இலக்கு இவர்களுடைய கண்களில்  நிலைத்திருக்கும். 


மாய்மாலக்காரர்கள் வானத்தில் பறக்கும் பட்டத்தைப் போன்றவர்கள்.   பூமியிலுள்ள கயிறு அறுந்துவிட்டால் இந்த பட்டம் இருக்கும் இடம் தெரியாது. காணாமல் போய்விடும். அதுபோல மாய்மாலக்காரர்களும் பூமியின் பெருமைமீது சார்ந்திருக்கிறார்கள். பெருமை அழிந்துபோனால் இவர்களும் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள்.  


மெய்யான விசுவாசிகளோ வானத்தில் உயரப் பறக்கும் வானம்பாடி பறவைகளைப் போன்றவர்கள். இவை உயரத்தில் பறக்கும்போது கீழே உள்ளதை மறந்துவிட்டு, பறக்கவேண்டிய வானத்தையே நோக்கிப்பார்த்து, வானத்தில் அதிக உயரத்தில் பறக்கும். அதுபோல விசுவாசிகள் பூமிக்குரிய காரியங்களை மறந்து விட்டு பரலோகக் காரியங்களையே நோக்கிப் பார்த்து மேலே முன்னேறிச்செல்வார்கள். 


யூதருடைய வழக்கத்தில் பொறாமைக்காரன், துஷ்டன் ஆகியோருடைய கண்களைக் கெட்ட கண் என்பார்கள். அவர்களுடைய கண் பார்வையே மற்றவர்களுக்குத் துன்பத்தை உண்டாக்கும் என்பது யூதருடைய நம்பிக்கை.


இரண்டு எஜமான்கள்


இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது (மத் 6:24).


நாம் ஊழியம் செய்யும் எஜமான் யார் என்பதைக் குறித்து நாம் மிகுந்த கவனத்தோடு இருக்கவேண்டும். மாய்மாலத்திற்கும் உலகப்பிரகாரமான காரியங்களுக்கும் ஊழியம் செய்கிறோமா அல்லது தேவனுக்கும் பரலோகத்திற்கடுத்த காரியங்களுக்கும் ஊழியம் செய்கிறோமா என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏனெனில் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது. 


சரீரத்தில் ஒரு இருதயம்தான் இருக்கும். யாருக்கும் இரண்டு இருதயம் இருக்காது.  இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்வது சரீரத்தில் இரண்டு இருதயம் இருப்பதைப்போன்றது. ""பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன். இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும் வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது'' என்று சங்கீதக்காரன் கூறுகிறான்          (சங் 123:1,2).


மாய்மாலக்காரர்கள் தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியம் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். இந்த உலகத்தையும் தேவனையும் வெவ்வேறாக பிரித்து, தேவனுக்கு தனியாகவும், உலகத்திற்கு தனியாகவும் ஊழியம் செய்யலாம் என்று கருதுகிறார்கள். பூமியிலும் பொக்கிஷத்தை சேர்த்து, பரலோகத்திலும் பொக்கிஷத்தை சேர்த்துக் கொள்ளலாம் என்பது இவர்களுடைய எண்ணம். இவர்கள் தேவனையும்  பிரியப்படுத்தலாம் அதேவேளையில் மனுஷரையும் பிரியப்படுத்தலாம் என்று கற்பனை செய்கிறார்கள். 


ஆனால் இயேசுகிறிஸ்துவோ இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவராலும் கூடாது என்று தீர்மானமாக கூறுகிறார்.  ஒரு எஜமான் ஒரு கட்டளை கொடுப்பான். மற்றொரு எஜமான் வேறொரு கட்டளை கொடுப்பான். இவ்விரண்டு கட்டளைகளும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருந்தால் வேலைக்காரரின் பாடு திண்டாட்டமாக இருக்கும். 


இரண்டு எஜமான்களும் ஒன்றுபோல் சிந்தித்து, ஒரேமாதிரியான கட்டளை கொடுத்தால் வேலைக்காரருக்கு பிரச்சனை இருக்காது. இரண்டு எஜமான்களுக்கும் ஊழியம் செய்யலாம். ஆனால் எஜமான்கள் பிரிந்திருக்கும்போது வேலைக்காரன் தன்னுடைய ஏஜமான் யார் என்பதை தீர்மானம் பண்ணவேண்டும்.


தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்ய உங்களால் கூடாது என்று இயேசுகிறிஸ்து தெளிவுபடுத்துகிறார். உலகப் பொருள் என்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை ""மம்மோன்'' என்பதாகும். இது சீரியா பாஷையிலுள்ள வார்த்தை. இதற்கு லாபம் என்று பொருள். எதுவெல்லாம் நமக்கு லாபம் என்று நினைக்கிறோமோ அதுவெல்லாம் உலகப் பொருளாகும். ""எனக்கு லாபமாயிருந்தவைகள் எவைகளோ அவைகளை கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்'' என்று பவுல் கூறுகிறார் (பிலி 3:7). மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை ஆகியவை அனைத்தும் உலகப்பொருள் ஆகும்.  இவற்றை நமது சரீரம் லாபம் என்று நினைக்கிறது. உலகப்பொருள் தேவனுக்கு பகையானது. ஆகையினால் உலகப்பொருளுக்கும் ஊழியம் செய்து, தேவனுக்கும் ஊழியம் செய்வது என்பது நம்மால் கூடாத காரியம். நாம் இவ்விரண்டையும் நேசிக்க முடியாது. 


உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும்  அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை (1யோவா 2:15). உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை. ஆகையினால் உலகத்திற்கு சிநேகிதனாக இருக்க விரும்புகிறவன் தேவனுக்கு பகைஞனாகிறான் (யாக் 4:4). உலக சிநேகமும் தேவபக்தியும் ஒன்றுக்கொன்று முரண்பாடுள்ளது. உலகப் பொருளும்  தேவனும் வெவ்வேறான எஜமான்கள். ஆகையினால் இவ்விரண்டு எஜமான்களுக்கும் கீழ்ப்படிந்து ஊழியம் செய்வது என்பது கூடாத காரியம். 


ஒரு சிலர் தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் இடைப்பட்ட சம நிலையை தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதுவும் ஆபத்தானதுதான். இவர்களுக்கு தேவனுடைய ஆசீர்வாதமும் கிடைக்காது. உலகப்பொருளின் ஆசீர்வாதமும் கிடைக்காது. இப்படிப்பட்டவர்கள் தேவனுக்கும் பாகாலுக்கும் நடுவில் நின்று இரண்டு பேரையும் ஆராதிக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இன்று யாரை சேவிக்கப்போகிறோம், தேவனை சேவிக்கப் போகிறோமா அல்லது பாகாலை சேவிக்கப்போகிறோமா என்று தீர்மானம் பண்ணவேண்டும். நாம் எடுத்த தீர்மானத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.