தர்மம் பன்னுதல் குறித்த இயேசுவின் உபதேசம்

 

தர்மம் பன்னுதல் குறித்த இயேசுவின் உபதேசம்


மாய்மாலத்தைக்குறித்து நாம் எச்சரிக்கையோடிருக்க வேண்டும். பரிசேயரின் உபதேசமும் நடத்தையும் மாய்மாலமானது. அவர்கள் புளித்த மாவைப்போல ஜனங்களை பாழாக்கிவிடுகிறார்கள். ""நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்'' (லூக் 12:1) என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். தானதர்மம் பண்ணுவது, ஜெபம்பண்ணுவது, உபவாசம்பண்ணுவது ஆகிய மூன்றும் விசுவாசிகளின் முக்கியமான கடமைகளாகும்.  நாம் தீமையைவிட்டு விலகி வந்தால் மட்டும் போதாது. நன்மையும் செய்யவேண்டும். நன்மையை நல்லமுறையில் செய்யவேண்டும். நமது நன்மை மாய்மாலமில்லாமல் நல்ல நோக்கத்தோடும், நல்ல மனதோடும் செய்யப்படவேண்டும். 


தானதர்மம் செய்வதில் பரிசேயர்கள் மாய்மாலமாக செயல்படுகிறார்கள். நாம் மாய்மாலமாக தானதர்மம் பண்ணக்கூடாது. இந்த விஷயத்தில் நாம் மிகுந்த எச்சரிப்போடு இருக்கவேண்டும். மாய்மாலம் பண்ணுவது பாவம். இதனால் வீண் பெருமை உண்டாகும். நமக்குத் தெரியாமலேயே நாம் இந்த பாவத்தில் சிக்கி தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளத் தவறிவிடுவோம். மாய்மாலத்தில் சிக்கி இருக்கிறவர்கள். பாவத்தில் சிக்கி இருக்கிறார்கள். தாங்கள் பாவத்தில் விழுந்திருக்கிறோம் என்பது தெரியாமலேயே பாவத்தில் இருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் தானதர்மம்பண்ணுகிறார்கள். இது நல்ல காரியம் தான். ஆனால் இந்த நல்ல காரியத்தை தவறான நோக்கத்தோடு செய்கிறார்கள். ஆகையினால் இதைக்குறித்து நாம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். மாய்மாலம் நம்மை ஆளுகை செய்தால் அது நம்மை அழித்துப்போடும். தைலக்காரனுடைய தைலத்தில் ஒரு செத்த ஈ விழுந்துவிட்டால், அது அந்த தைலம் முழுவதையும் கெட்டுப்போகப்பண்ணும். அதுபோல நம்முடைய நற்கிரியையில் மாய்மாலம், பெருமை போன்ற பாவங்கள் கலந்துவிட்டால், அது நமது நற்கிரியைகளை பயனற்றதாக்கிவிடும்.


மனுஷர் காணவேண்டுமென்று செய்யும் தானதர்மம்


மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்தி-ருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 6:1,2). 


தானதர்மம் பண்ணுவது நமது கடமை. ஒவ்வொரு விசுவாசியும் தங்களுடைய திராணிக்குத் தக்கவாறு தானதர்மம் பண்ணவேண்டும். ஏழைக்கு இரங்குவது நீதியான காரியம் என்று யூதர்கள் நினைக்கிறார்கள். பிச்சைக்காரனுடைய கையிலிருக்கும் திருவோட்டை நீதியின் திருவோடு என்று யூதர்கள் அழைக்கிறார்கள்.  நாம் தானதர்மம் செய்வதினால் பரலோகத்திற்குப் போய்விடமுடியாது. பரலோகம் செல்லுவதற்கு தானதர்மம் அனுமதி சீட்டு அல்ல. அதே சமயத்தில் நாம் தானதர்மம் பண்ணாமலும் பரலோகத்திற்கு போகமுடியாது. ஆகையினால் தானதர்மம் செய்வது நமது கடமையாக இருக்கிறது. நமது கடமையை நிறைவேற்றும்போது நம்மிடம் காணப்படவேண்டிய மனப்பான்மையைக் குறித்து இயேசுகிறிஸ்து விவரிக்கிறார். 


தானதர்மம்பண்ணுகிறவர்களுக்கு கர்த்தர் பலனளிக்கிறார். கர்த்தருடைய வெகுமதி அவர்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த தானதர்மத்தை நாம் மாய்மாலமாக செய்தால் கர்த்தருடைய வெகுமதியை இழந்துபோவோம். நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் நமக்கு பதில் செய்யப்படும் (லூக் 14:4). நாம் நித்திய ஐசுவரியங்களை சுதந்தரித்துக்கொள்வோம். இதுவே கர்த்தர் நமக்கு கொடுக்கும் வெகுமதி. 


நாம் எவ்வளவு தானதர்மம் செய்கிறோமோ அதை மாத்திரமே பரலோகத்தில் பெற்றிருப்போம். இந்த பூமியில் நாம் கொடுப்பது பரலோகத்தில் திரும்பக் கொடுக்கப்படும். இந்த பூமியில் யாருக்கும் கொடுக்காமல் நமக்கென்று வைத்திருப்பது நம்மோடு பரலோகத்திற்கு வராது. 


மாயக்காரரும் தானதர்மம் பண்ணுகிறார்கள். ஆனால் மாய்மாலமாக தானதர்மம் செய்கிறார்கள். தேவனுக்கு கீழ்ப்படியவேண்டும் என்னும் நோக்கதோடோ, அல்லது மனுஷர்மீதுள்ள அன்பினாலோ மாயக்காரர் தானதர்மம் பண்ணுவதில்லை. தங்களுடைய பெருமைக்காக, வீணான புகழ்ச்சிக்காக மாயக்காரர் தர்மம்பண்ணுகிறார்கள். இவர்கள் ஏழைகள் மீது இரங்குவதுமில்லை, மனதுருகுவதுமில்லை. தங்கள் சுய பெருமைக்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் தானதர்மம் பண்ணுகிறார்கள். 


விளம்பரத்தை தேடுகிறவன் யாரும் இல்லாத இடத்தில் தனியாக தானதர்மம் பண்ணமாட்டான். மாயக்காரர்கள் விளம்பரத்தை தேடுகிறபடியினால் அவர்கள் செய்யும் தானதர்மங்களை ஆலயங்களிலும், வீதிகளிலும் செய்கிறார்கள். ஆலயங்களிலும்,  வீதிகளிலும் எப்போதும் ஜனங்கள் நிறைந்திருப்பார்கள். ஜனங்கள் அதிகமுள்ள இடத்தை மாயக்காரர் தெரிந்தெடுத்து, எல்லா ஜனங்களுக்கும் முன்பாக தானதர்மம் செய்து தங்களை பெருமைப்படுத்திக் கொள்கிறார்கள். 


மனுஷர் காணும்படி தானதர்மம்பண்ணுவது தவறல்ல. யாராவது நம்மைப் பார்த்துவிட்டால் நாம் தானதர்மம் பண்ணக்கூடாது என்று பிரமாணத்தில் கூறப்படவில்லை.  எல்லா இடத்திலும் நாம் தானதர்மம் பண்ணவேண்டும். ஆனால் மனுஷர் நம்மைக் காணவேண்டும் என்பதற்காக தானதர்மம் பண்ணக்கூடாது. தரித்திரருக்கு உதவி செய்யவேண்டும் என்னும் நோக்கத்தில் தான் தானதர்மம் பண்ணவேண்டும். 


மாயக்காரர்கள் தங்கள் வீடுகளில் தானதர்மம் செய்தால் தாரை ஊதி எல்லோருக்கும் அதை விளம்பரம் பண்ணுவார்கள். தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள எல்லா ஜனங்களுக்கும் தாங்கள் செய்யும் தானதர்மம் விளம்பரமாகவேண்டும் என்று தாரை ஊதி ஆரவாரம்பண்ணுவார்கள். தங்களுடைய தானதர்மத்தை பிறருக்கு தெரியாமல் அமைதலாக செய்யமாட்டார்கள்.  


மனுஷரால் புகழப்படுவதற்காக தானதர்மம் செய்கிறவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்துவிட்டார்கள் என்று இயேசுகிறிஸ்து உபதேசிக்கிறார். சுய விளம்பரமும், பெருமையும் அவர்கள் விரும்பும் பலன். அதை அவர்கள் தங்கள் விளம்பர யுக்திகளின் மூலமாக பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் மெய்யான பலன் தேவனிடமிருந்தே வருகிறது. அந்த பலனை மாய்மாலக்காரர்கள் பெற்றுக்கொள்ளத் தவறிவிடுகிறார்கள். நன்மைசெய்கிறவர்களுக்கு பலனளிப்பதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார். மாய்மாலக்காரரோ நன்மை செய்தும் தேவன் கொடுக்கும் பலனை பெற்றுக்கொள்ளாமல் போகிறார்கள். மனுஷனால் புகழப்படுவதற்கும் தேவனால் புகழப்படுவதற்கும் வித்தியாசமுள்ளது. தேவனால் புகழப்படுகிறவனே உத்தமன். மனுஷர் காணவேண்டுமென்று மாயக்காரர்கள் தானதர்மம் செய்யும்போது அதற்கு ஏற்ற இடத்தை தெரிவு செய்கிறார்கள். விளம்பரப்படுத்துகிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கிற பிரகாரம் மாயக்காரர் செய்யும் தானதர்மங்களை மனுஷரும் காண்கிறார்கள். இதுதான் அவர்கள் விரும்பியது. அவர்கள் விரும்பியதைப் பெற்றுக்கொள்கிறார்கள். 


மாயக்காரர் விரும்பும் பலன் இந்த பூமிக்குரியது. இவர்கள் இந்த பூமிக்குரிய புகழ்ச்சியைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால்  இவர்கள் செய்த நன்மையினால் பரலோகத்தில் இவர்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்காது. மாயக்காரரின் ஆஸ்தி இந்த பூமிக்குரியது. ஆனால் விசுவாசிகளாகிய நமது ஐசுவரியமோ பரலோகத்தில் இருக்கிறது. இந்த பூமியிலுள்ள ஐசுவரியங்கள் நமது பராமரிப்புக்காக கர்த்தர் கொடுத்திருப்பது.  ஆனால் மாயக்காரரோ இந்த பராமரிப்பையே தங்களுடைய ஐசுவரியம் என்று தவறாக நினைத்து இந்த பூமியில் ஐசுவரியங்களை சேர்த்து வைக்கிறார்கள். பூமிக்குரிய காரியங்களை சிந்திக்கிறார்கள். பூமிக்குரிய காரியங்களையே செய்கிறார்கள். இதனால் இவர்களுக்கு பூமிக்குரிய பலனே கிடைக்கிறது. தேவனிடமிருந்து வரும் பரலோகத்திற்குரிய பலன் எதுவும் இவர்களுக்கு கிடைப்பதில்லை.  


தர்மம் செய்யும்போது நாம் கவனிக்க வேண்டிய காரியங்கள்


    • 1. தர்மம் பண்ணும்போது இருதயத்தில் எளிமையுடனும் (மத் 6:1-4) உதாரத்துவமாகவும் (உபா 15:11; ரோமர் 12:8) சந்தோஷமாகவும் (2கொரி 9:7) கொடுக்க வேண்டும்.


    • 2. தர்மம் பண்ணும்போது நாம் அதில் சந்தோஷமாயிருக்க வேண்டும்.        (லேவி 25:35; உபா 15:7-11; ஏசா 58:7)  


    • 3. தர்மம் பண்ணுவதற்குப் பலன் உண்டு. (உபா 14:28-29; உபா 15:10; மத் 10:42)  


    • 4. தர்மம் பண்ணுவதற்கு எடுத்துக் காட்டுக்கள் (லூக்கா 19:8; அப்  9:36; அப் 10:2; 2கொரி 8-9)


 நாம் செய்யும் ஒவ்வொரு நற்கிரியையையும் சரியான நோக்கத்தோடு தேவநாம மகிமைக்காகவும், ஜனங்களின் பிரயோஜனத்திற்காகவும் செய்யும்போது கர்த்தர் நமக்குப் பலன் தருவார்.  


""மாயக்காரர்''  மாய்மாலம் செய்வார்கள். இவர்கள் உள்ளத்தில் உண்மையான அன்பு இராது. வேஷதாரிகள். சுய பெருமைக்காரர்கள். விளம்பரப் பிரியர்கள். பொது இடங்களில் தர்மம் செய்து எல்லோரும் தங்களைப் புகழ வேண்டுமென்று விரும்புகிறவர்கள்.   மற்றவர்களுடைய புகழ்ச்சியே இவர்களுக்குக் கிடைக்கும் பலன். பரலோகத்திலிருக்கிற கர்த்தரிடமிருந்து இவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமும் வராது.


அந்தரங்கமான தானதர்மம் 


நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது (மத் 6:3) .


    நாம் செய்யும் தானதர்மம் அந்தரங்கமாக இருக்கவேண்டும். நமது வலதுகையினால் செய்யும் தானதர்மம் நமது இடதுகைக்கு அறியாதிருக்கவேண்டும். வலதுகையினால் தானதர்மம் செய்வது என்பது மனப்பூர்வமாகவும், தீர்மானமாகவும் தானம்பண்ணுவதைக் குறிப்பிடுகிறது. முடிந்தவரையிலும் நமது தானதர்மக் காரியங்களை மற்றவர்களுக்கு விளம்பரம்பண்ணாமல் அந்தரங்கமாக செய்யவேண்டும் என்பது இந்த வாக்கியத்தின் பொருளாகும். 


நாம் செய்யும் தானதர்மத்தை மற்றவர்கள் பார்ப்பார்கள் என்று நினைத்து தானதர்மம் செய்யாமலேயே இருந்துவிடக்கூடாது. தானதர்மம் செய்வது நல்லது என்று நினைத்து செய்யவேண்டும். தானதர்மம் செய்வதினால் நமக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று நினைத்து செய்யக்கூடாது. 


மற்றவர்களுக்கு விளம்பரப்படுத்தி, மற்றவர்கள் அறியும்விதமாக தானதர்மம் செய்யும்போது நாம் புகழ்ச்சியை விரும்புகிறோம்.   நமது தானதர்மத்தை அந்தரங்கத்தில் செய்தால் மற்றவர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. தானதர்மம் பண்ணும்போது நம்மைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது. நமது தர்மத்தைப் பெற்றுக்கொள்கிற ஏழையின்மீது மனதுருக்கமாக இருந்து அவரை நினைத்தே நாம் தர்மம் பண்ணவேண்டும். நம்மைப் பற்றியே நினைப்பதன் விளைவினால் சுய பெருமை உண்டாகும். நாம் எப்போதுமே நமது நிழலில்  தங்கவேண்டுமென்று முயற்சி பண்ணக்கூடாது. தேவனுடைய நிழலே நமக்கு பாதுகாப்பானது.   


ஒரு சிலர் நல்ல உதவிகளை செய்து தாங்கள் செய்த உதவிகளை மறந்து விடுகிறார்கள். ஆனால் அந்த உதவிகளைப் பெற்றவர்களோ அவர்களை மறவாமல் இருப்பார்கள். நாங்கள் பசியாக இருந்தோம், நீங்கள் எங்களுக்கு போஜனம் கொடுத்தீர்கள்.  நாங்கள் தாகமாக இருந்தோம் நீங்கள் எங்களுக்கு பருகக்கொடுத்தீர்கள் என்று நம்மிடம் நினைவுபடுத்துவார்கள். தானதர்மம் பண்ணும்போது நமது மனநிலை நம்மைப் பற்றியதாக இராமல் தரித்திரர் மீது கரிசனையுள்ளதாகவே இருக்கும் போது, தேவன் நம்மை நினைவு கூர்ந்து ஆசீர்வதிப்பார்.  


வெளியரங்கமான பலன்


அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்            (மத் 6:4). 


நமது தானதர்மம் அந்தரங்கமாக இருக்கும்போது நமது பரலோகப் பிதா அதைப் பார்க்கிறார். நாம் நேர்மையாகவும் உண்மையோடும், தாழ்மையோடும், பணிவோடும் தானதர்மம்பண்ணுவதை தேவன் கண்ணோக்கிப் பார்க்கிறார். நமது வலதுகை செய்கிற தர்மத்தை இடதுகை அறியாதிருக்குமாறு அந்தரங்கமாக செய்த நமது தானதர்மத்தையெல்லாம் கர்த்தர் கண்ணோக்கிப் பார்க்கிறார். அவர் அந்தரங்கத்தில் பார்க்கிறவர். அவருக்கு மறைவான காரியம் ஒன்றுமில்லை.


நாம் செய்யும் நல்ல காரியங்களை ஒருவேளை நாம் கவனியாமல் மறந்துவிடலாம். ஆனால் கர்த்தர் நமது நற்கிரியைகள் அனைத்தையும் கவனிக்கிறார். தமது நினைவில் வைத்திருக்கிறார். கர்த்தர் அந்தரங்கத்தில் பார்க்கிறார் என்பது விசுவாசிகளுக்கு ஆறுதலான சத்தியம். 


நாம் அந்தரங்கத்தில் தானதர்மம் பண்ணும்போது பரலோகத்திலிருக்கிற நமது பிதா தாமே நமக்கு வெளியரங்கமாய் பலனளிக்கிறார்.   கர்த்தர் நமக்கு பலனளிக்கிறவர் மாத்திரமல்ல நமக்கு மகா பெரிய பலனாக இருக்கிறவர் கர்த்தரே. கர்த்தர் ஆபிரகாமிடம் ""நீ பயப்படாதே, நான் உனக்கு கேடகமும், உனக்கு மகா பெரிய  பலனுமாயிருக்கிறேன்'' (ஆதி 15:1) என்று கூறினார். அதே கர்த்தரே நமக்கும் மகா பலனாகயிருக்கிறார். 


கர்த்தர் நமக்கு கொடுக்கும் பலன் ஒரு எஜமான் தன் வேலைக்காரனுக்கு கொடுப்பதுபோல இராது. வேலைக்காரனுக்கு எஜமான் சம்பளம் கொடுப்பான். தனக்கு திருப்தியாக வேலைசெய்தால் எஜமான் சம்பளத்தில் சிறிது உயர்த்திக் கொடுப்பான். ஆனால் கர்த்தருக்கும் நமக்கும் உரிய உறவு ஒரு தகப்பனுக்கும் அவருடைய பிள்ளைக்கும் உரிய உறவாகும். ஆகையினால் கர்த்தர் நமக்கு கொடுக்கும் பலன் ஒரு தகப்பன் தனது பிள்ளைக்கு கொடுக்கும் பலனைப் போன்றிருக்கும். தகப்பன் தன் பிள்ளைக்கு கஞ்சத்தனமில்லாமல் தாரளமாக கொடுப்பார். எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுப்பார். கேட்டதையும், கேட்கத் தவறியதையும் அன்போடு கொடுப்பார். தமக்கு ஊழியம் செய்கிற பிள்ளைகளை கர்த்தர் அதிகமாக ஆசீர்வாதிப்பார். கர்த்தருக்காக நாம் செய்யும் ஊழியங்களை சுய பெருமைக்காவும், சுய விளம்பரத்திற்காகவும் செய்யாமல், தேவ நாம மகிமைக்காகவும், பரிசுத்தவான்களின் பிரயோஜனத்திற்காகவும் செய்யும்போது கர்த்தர் நம்மை வெளியரங்கமாக ஆசீர்வதிப்பார்.  நமது ஊழியம் வெளியரங்கமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் கர்த்தருடைய ஆசீர்வாதம் வெளியரங்கமாக இருக்கும். மனுஷருடைய புகழ்ச்சியைவிட கர்த்தருடைய ஆசீர்வாதமே நல்லது. 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.