கவலைப் படுவதை குறித்த இயேசுவின் உபதேசம் (மத்தேயு 6:25-34)

 


கவலைப் படுவதை குறித்த இயேசுவின் உபதேசம் (மத்தேயு 6:25-34)


கவலைப்படுவது பாவம். என்னத்தைக் உண்போம் என்றும், என்னத்தைக் குடிப்போம் என்றும், என்னத்தை உடுப்போம் என்றும் நாம் கவலைப்படக் கூடாது. இதற்காக நாம் கவலைப்படும்போது கர்த்தரிடத்தில் நமக்கு விசுவாசம் இல்லையென்று பொருள். இயேசுகிறிஸ்து கவலைப்படுவதைக் குறித்து எச்சரித்துக் கூறுகிறார். நமது சரீரத்திற்காகவும் நமது ஜீவனுக்காகவும் கவலைப்படுவது தவறு.


கவலைப்படாதிருங்கள்


ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படா திருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித் தவைகள் அல்லவா? (மத் 6:25).


நாம் இந்த உலகக்காரியங்களுக்காக கவலைப்படக்கூடாது. ""உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்று நமது நியாயப்பிரமாணிக்கர் நமக்கு கட்டளை கொடுக்கிறார். நமது இருதயங்களை இவரே ஆளுகை செய்கிறவர். நமக்கு ஆறுதல் அளிக்கிறவர். நமது சந்தோஷத்திற்கு சகாயர்.  


இயேசுகிறிஸ்து பல சமயங்களில் தம்முடைய சீஷர்களிடம் உபதேசம் பண்ணும்போது இந்த உலகக்காரியங்களுக்காக  கவலைப்படக்கூடாது என்று வலியுறுத்திக் கூறுகிறார். நாம் இந்த பூமியில் இருக்கும் வரையிலும் நமக்கு உலகக்காரியங்கள் தேவைப்படுகிறது. நமது ஜீவனையும் சரீரத்தையும் நாம் பராமரிக்க வேண்டும். ஆயினும் இதற்காக கவலைப்படக்கூடாது. நமது ஜீவனைக்குறித்து அக்கறையோடிருக்க வேண்டும். இது நமது கடமை. கவலை வேறு. அக்கறை வேறு. 


ஜீவனுக்காக அக்கறைப்படும்போது அது நமக்கு கவலையை கொடுத்துவிடக்கூடாது. தேவனிடத்தில் நாம் பெற்றிருக்கும் சந்தோஷத்தை அது அழித்துப்போடக்கூடாது. ஒரு சிலர் அதிகமாக கவலைப்பட்டு இரவுவேளைகளில் நித்திரையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். கவலைப்படும்போது நமது வாழ்வை நம்மால் சந்தோஷமாக அநுபவிக்கமுடியாது.  நாம் கவலைப்படும்போது நம்மோடிருக்கும் சிநேகிதர்களையும் துக்கத்தில் ஆழ்த்திவிடுவோம். தேவன் நமக்காக கொடுத்திருக்கும் சந்தோஷத்தையும், சமாதானத்தையும், ஆசீர்வாதத்தையும் இழந்து போவோம். 


நமது ஜீவனுக்குத் தேவையான காரியங்களுக்கு தேவனையே சார்ந்திருக்கவேண்டும். கர்த்தர் நம்மை போஷித்து பராமரிப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். நமது தேவைகளையெல்லாம் அவர் சந்திப்பார். இம்மையில் மாத்திரமல்ல, மறுமையிலும் நம்மை வழிநடத்துவார். நமக்கு போஜனமும் வஸ்திரமும் கொடுத்து நம்மை ஆதரிப்பார். போஜனம் கொடுக்கிற தேவன் தினந்தோறும் நமக்கு விருந்து கொடுப்பார் என்று எதிர்பார்க்கக்கூடாது. நமது தேவைகளை மாத்திரமே தேவன் சந்திப்பார்.  நமது ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்யமாட்டார். தேவன் தினமும் நம்மை விருந்து சாப்பாடுகளினாலும், கொழுத்த போஜனங்களினாலும் போஷிப்பார் என்று எங்கும் கூறவில்லை.  


தேவனுடைய தெய்வீக பராமரிப்பில் நமது தேவைகளெல்லாம் சந்திக்கப்படும். வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறவர் உண்மையுள்ளவர். நமக்கு            போஜனம் கிடைக்குமா கிடைக்காதா என்று கவலைப்படும்போது கர்த்தருடைய வார்த்தையையே சந்தேகப்படுகிறோம். நமது வருங்காலத்தை கர்த்தருடைய கரங்களில் ஒப்புக்கொடுத்துவிடவேண்டும். நமது தேவைகள் என்ன என்பது நமக்கே தெரியாது. ஆனால் தேவன் எல்லாம் அறிந்தவர். நமது ஆத்துமாவை தேவனுடைய சமுகத்தில் இளைப்பாறப்பண்ண வேண்டும். தேவன் தமக்கு பிரியமானவர்களுக்கு சம்பூரணமான ஆசீர்வாதங்களை தருகிறவர்.  


உங்கள் ஜீவனுக்காக கவலைப்படாதிருங்கள்


இந்த உலகத்தில் நமது ஜீவனைக்குறித்து நாம் மிகுந்த எச்சரிப்போடும் கவனத்தோடும் இருக்கவேண்டும். ஆனால் நமது ஜீவனைக்குறித்து கவலைப்படக்கூடாது. நமது ஜீவனுக்குத் தேவையான எல்லாவற்றையும் நமது தேவனே நமக்கு கொடுக்கிறார். ஆயினும் நாம் அதைப்பற்றி அதிகமாக தியானிக்க வேண்டும். தேவன் தமக்கு சித்தமான பிரகாரம் நம்முடைய ஜீவனை கூட்டவோ குறைக்கவோ செய்கிறார். நமது ஜீவன் தேவனுடைய பலத்த கரத்தில் அடங்கியிருக்கிறது. அவருடைய கரம் நல்ல கரம். கிருபையுள்ள கரம். பாதுகாக்கும் கரம். பராமரிக்கும் கரம்.


தேவனுடைய சமுகத்தில் நாம் விசாரமாக இருக்கக்கூடாது. எதையோ பறிகொடுத்தவர்போல தேவனுடைய சமுகத்தில் பரிதபித்துக்கொண்டு காணப்படக்கூடாது. கர்த்தருடைய சமுகத்தில் நாம் சாந்தமாகவும், அமைதியாகவும், பயபக்தியோடும் வரவேண்டும். தேவன் தமக்கு பிரியமான காரியங்களையெல்லாம் நமக்கு செய்கிறார்.  நமது ஆசைகளெல்லாம் நிறைவேறவில்லையே என்று அவஸ்தைபடக்கூடாது. நமது ஜீவனுக்கு ஆதாரமான போஜனத்தையும் பானத்தையும் தேவன் நிச்சயமாகவே கொடுப்பார். நம்மை போஷிப்பது தேவனுடைய காரியம். ஆகையினால் என்னத்தை உண்போம் என்று நாம் கவலைப்படக்கூடாது. கர்த்தர் கொடுக்கும் போஜனத்தை நாம் உண்போம் என்று மன சாந்தத்தோடிருக்க வேண்டும். பூமியில் பலர் செல்வந்தர்களாக இருக்கலாம். பலர் தரித்திரர்களாக இருக்கலாம். யார் எப்படி இருந்தாலும் நாம் தேவனுடைய கரத்தில் இருக்க வேண்டும் என்பதே பிரதானம். 


நாளைக்காக கவலைப்படாதிருங்கள்


நாளை என்பது இனிமேல் வரப்போகிற காலம். நாம் வருங்காலத்தைக் குறித்து விரக்தியாகவோ, விசாரமாகவோ இருக்கக்கூடாது. வருங்காலத்தைக் குறித்த சிந்தனைகளினால் நமது மனம் சோர்ந்து போய்விடக்கூடாது. இயேசுகிறிஸ்துவை நம்புகிறவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்காது என்பது இதன் பொருளல்ல. கர்த்தர் நம்மை ஆளுகை செய்கிறவர். அவர் நம்மை கரம் பிடித்து வழிநடத்துகிறவர். ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும் உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள். ஆகாரமும் உடையும் நமக்குத் தேவையென்பதை நமது தேவன் அறிவார். அவருடைய கிருபையிலும் இரக்கத்திலும் நாம் நம்பிக்கையோடிருந்து பதட்டமில்லாமல் ஜீவிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பிரச்சனைகள், பாடுகள், பசி, தாகம் ஆகியவை நமக்கு வந்தாலும் கர்த்தர் மீது நாம் வைத்துள்ள விசுவாசம் குறைந்து போகக்கூடாது. தீமையை நாம் நன்மையினால் வெல்ல வேண்டியவர்கள். நமது உள்ளத்தில் கர்த்தர் மீதுள்ள விசுவாசம் வலுவாக இருக்கும்போது நமது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எளிதாக மேற்கொள்ளலாம்.


ஜீவனும் சரீரமும் விசேஷித்தவைகள்


ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும் உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள். நமது வாழ்க்கையைவிட நமது ஜீவன் ஆசீர்வாதமானது. நாம் ஜீவிப்பதற்கு போஜனமும் வஸ்திரமும் தேவை. ஆயினும் இவையெல்லாவற்றையும் விட நமது ஜீவன் எப்படி முடிகிறது என்பதே விசேஷமானது. போஜனமும் வஸ்திரமும் இந்த பூமியிலிருந்து வருகிறது. ஆனால் நமது ஜீவனோ தேவனுடைய ஜீவசுவாசத்திலிருந்து வருகிறது. 


நமது போஜனத்திற்காகவும் வஸ்திரத்திற்காகவும் தேவனை சார்ந்திருக்கவேண்டும் என்பது நமக்கு ஆறுதலான உபதேசம். தேவனை சார்ந்திருக்கும்போது நாம் இவற்றுக்காக கவலைப்படவேண்டிய தேவையில்லை. தேவன் நமக்கு சரீரத்தையும் ஜீவனையும் கொடுத்திருக்கிறார். அவரால் செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை. நமது ஆத்துமாவை அவர் நித்தியத்திற்கு அழைத்துச் செல்கிறவர். சர்வ வல்லமையுள்ளவர். இந்த சரீரத்தைவிட நமது ஆத்துமாவிற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கும் போது, தேவன் இந்த பூமியில்  நமது சரீரத்திற்குத் தேவையான போஜனத்தையும் வஸ்திரத்தையும் சேர்த்துக் கொடுப்பார். தீமைகளிலிருந்து நம்மை விலக்கி காக்கிற தேவன், நமக்கு நன்மையான ஈவுகளைக் கொடுப்பது அதிக நிச்சயம்.


நாம் கவலைப்படக்கூடாது என்பதற்குக் காரணங்கள்


    1. ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவன் விசேஷித்தது (மத் 6:25)


    2. உடையைப் பார்க்கிலும் சரீரம் விசேஷித்தது (மத் 6:25).


    3. பௌதீகப் பொருட்களைப் பார்க்கிலும் மனுஷர் விசேஷித்தவர்கள் (மத் 6:25)


    4. பறவைகளைவிட மனுஷர் விசேஷித்தவர்கள் (மத் 6:26)


    5. கவலைப்படுகிறதினாலே சரீரத்தை மாற்ற முடியாது (மத் 6:27)


    6. காட்டுப்புஷ்பங்களைப் பார்க்கிலும் மனுஷர் விசேஷித்தவர்கள் (மத் 6:28-30).


    7. எல்லா சிருஷ்டிக்கும் தேவனுடைய பராமரிப்பு உண்டு (மத் 6:26-32)


    8. கவலைப்படுவதினால் பிரயோஜனம் இல்லை. கவலைப்படுதல் பாவம்          (மத் 6:33-34)


கவலைப்படுதலின் சுபாவங்கள்


    1. பாவமானது, பயத்தை உண்டாக்கும்


    2. மற்ற தீமைகளுக்குக் காரணமாக இருக்கும் நோய்


    3. பிரச்சனைகளைக் கடன்வாங்கும். இதைத் திரும்ப அடைக்கமுடியாது.


    4. நடக்காத காரியத்திற்காகவும், நடக்க முடியாத காரியத்திற்காகவும் மனதில் பயத்தை உண்டாக்கும்.


    5. பிரச்சனை, வருத்தம், மரணம் ஆகியவற்றை உண்டாக்கும்.


    6. நாளைக்காக நாம் கடனாக வாங்கும் பாரச்சுமைகளை மற்றவர்கள் சுமக்க வேண்டும்


    7. கவலைப்படும் பாரம் நம்மை அற்ப ஆயுசில் கொன்றுபோடும்


    8. மனக்குழப்பமும், தற்கொலையும் உண்டாக்கும்.


    9. கவலைப்படுதல் நம்மீது இரக்கம் காண்பிக்காமல் நமது சவக்குழியைத் தோண்டும்.


    10. கவலைப்படும் நேரம் வீணாய்ப் போகிறது. இதை நல்ல காரியங்களுக்காகப் பயன்படுத்தலாம்.


    11. கர்த்தரிடத்தில் நாம் வைக்கும் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் நமது சமாதானத்தையும் கவலை திருடும்.


    12. மற்றவர்களுக்கு நமது கவலை இடறுவதற்கு ஏதுவான கல்லாக இருக்கும்.


    13. தேவனுக்கு அவகீர்த்தியை உண்டு பண்ணும்


    14. நாளைக்காகக் கவலைப்படுவதால் இன்றைக்கும் நிம்மதியாக இருக்க முடியாது.


    15. கர்த்தரை நம்புகிறவர்கள் கவலைகளில் சிக்கிக்கொள்ள மாட்டார்கள்


    16. கர்த்தருடைய பிள்ளைகள் தங்களுக்கு வரும் பிரச்சனைகளைச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார்கள்.


    17. நாம் கவலைப்படுவதினால் நமக்கு பரலோகப்பிதா இருந்தும், நாம் ஒரு அனாதையைப்போல வாழ்வதற்கு சமம்.


    18. கவலைப்படுவது தேவனுக்கு எதிராகவும், மனுஷனுக்கு எதிராகவும் செய்யும் பாவம்.


    19. கவலைப்படுவது தன்னுடைய மனதையும்,  மற்றவர்களுடைய மனதையும் துன்புறுத்தும்.


    20. கவலைப்படுவது மதியீனமானது. நமக்கு நடக்கப் போவதை நாம் கவலைப் படுவதினால் தடுத்து நிறுத்த முடியாது. நமக்கு பிரச்சனைகள் வந்தாலும், கர்த்தரிடத்தில் நம்பிக்கையோடு ஜீவிப்போம் என்றால் கர்த்தர் நமது பிரச்சனைகளிலிருந்து நம்மை விடுவிக்க வல்லவராக இருக்கிறார். 


ஆகாயத்துப் பட்சிகள்


ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? (மத் 6:26).


தேவன் மனுஷனை போஷித்து, பராமரித்து அவனுக்கு பிழைப்பூட்டுகிறார்.  மனுஷரை மாத்திரமல்ல சாதாரண பட்சிகளையும் பிழைப்பூட்டுகிறார். தேவனுடைய தெய்வீக பராமரிப்பைப் புரிந்து கொள்ளாதவர்கள் ஆகாயத்துப் பட்சிகளிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவை நமக்கு தேவனுடைய   தெய்வீக பராமரிப்பைப் பற்றி கற்றுத்தரும்.


ஆகாயத்துப் பட்சிகளை நாம் கவனித்துப் பார்த்து நமது ஆகாரத்திற்காக கர்த்தரை சார்ந்து கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.  தேவன் அவற்றையும் எவ்வாறு போஷித்துப் பராமரிக்கிறார் என்பதை கவனித்துப் பார்க்க வேண்டும். ஆகாயத்துப் பட்சிகளில் பல விதங்கள் உண்டு. அவை எண்ணிக்கையில் ஏராளம். சில பட்சிகள் சைவ உணவு சாப்பிடும். சில பட்சிகள் அசைவ உணவு சாப்பிடும். தேவன் அவற்றுக்கு ஏற்ற உணவு வகைகளை கொடுக்கிறார். 


மனுஷன் ஆகாயத்துப் பட்சிகளை போஷித்து பராமரிப்பதில்லை. ஆகையினால் அவற்றை பிழைப்பூட்டும் பொறுப்பை. தேவனே ஏற்றுக்கொள்கிறார். மனுஷன் பட்சிகளுக்கு போஜனம் கொடுக்காமல் அவற்றையே தனக்கு  போஜனமாக புசிக்கிறான். நமது பரமபிதா ஆகாயத்துப் பட்சிகளுக்கு போஜனம் கொடுத்து பிழைப்பூட்டுகிறார். ஆகாயத்துப் பட்சிகளைப் பற்றி நமக்கு தெரிவதைவிட அவற்றை சிருஷ்டித்த நமது தேவனுக்கு நன்றாகத் தெரியும். அவை எங்கு வசிக்கின்றன. அவற்றுக்கு போஜனம் எது என்பதெல்லாம் நமது தேவனுக்கு நன்றாகத் தெரியும். இந்த பட்சிகள் எதுவுமே தங்கள் போஜனத்திற்காக வயல்களில் விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை, களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. ஒவ்வொரு நாளும் தேவன் அவற்றுக்குத் தேவையான போஜனங்களை கொடுக்கிறார்.  ஆகாயத்துப் பட்சிகள் ஒவ்வொரு நாளும் தங்கள் போஜனத்திற்காக தேவனையே நோக்கிப் பார்க்கின்றன. மாம்சமான யாவருக்கும், எல்லா ஜீவஜந்துக்களுக்கும் தேவன் தமது தெய்வீக பராமரிப்பின் பிரகாரமாக போஜனங்களைக் கொடுத்து பிழைப்பூட்டுகிறார். 


நாம் வானத்து பட்சிகளைவிட விசேஷித்தவர்கள்


நமது பரலோகப் பிதாவிற்கு நாம் சுதந்தரவாளிகளாக இருக்கிறோம். வானத்து பட்சிகளைவிட நாம் விசேஷித்தவர்கள். ஞானமுள்ளவர்கள். விவேகமுள்ளவர்கள். ஆனால் விசுவாசத்தில் வானத்து பட்சிகள் நம்மைவிட உயர்ந்திருக்கின்றன. வானத்து பட்சிகளை நமது தேவனே சிருஷ்டித்திருக்கிறார்.  அவரே அவற்றின் எஜமானனாக இருக்கிறார். ஆனால் நமக்கோ தேவன் நமது பரலோகப்பிதாவாக இருக்கிறார். நாம் அவருடைய பிள்ளைகளாகவும் சுதந்தரவாளிகளாகவும் இருக்கிறோம்.


வானத்து பட்சிகளை போஷிக்கிற தேவன் நிச்சயமாகவே நம்மையும் போஷிப்பார். நமது பரலோகப்பிதாவை வானத்து பட்சிகள் விசுவாசிக்கின்றன. அவரை நமது போஜனத்திற்காக நாமும் விசுவாசிக்கவேண்டும்.  வானத்து பட்சிகள் தங்கள் போஜனத்திற்காக கர்த்தரை நம்புவதினால் அவை கவலைப்படுவதில்லை. கர்த்தர் தங்களை எப்படியும் போஷிப்பார் என்று வானத்தில் சந்தோஷமாக பறந்து செல்கின்றன. அவற்றைப்போல விசுவாசிகளாகிய நாமும் கர்த்தர் நம்மை போஷிப்பார் என்று விசுவாசித்து, நாளைய தினத்திற்காக கவலைப்படாமல் சந்தோஷமாக கர்த்தருடைய சமுகத்திற்கு வந்து  அவரைப் பாடி துதிக்கவேண்டும்.


காட்டுப்புஷ்பங்கள் 


உடைக்காகவும் நீங்கள் கவலைப் படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்  (மத் 6:28,29)..


மனுஷனுடைய தேவைகளில் அவன் உடுத்திக்கொள்ளவேண்டிய வஸ்திரங்களும் ஆகும். மனுஷர்கள் ஏதாவது வஸ்திரத்தை தங்கள் சரீரத்தின்மீது உடுத்தவேண்டும். உணவைப்போல வஸ்திரமும் முக்கியமான தேவையாக இருக்கிறது. என்னத்தை உடுப்போம் என்று நாம் நமது சரீரத்திற்காக கவலைப்படக்கூடாது. காட்டுப் புஷ்பங்கள் எப்படி  வளர்கிறதென்று நாம் கவனித்துப் பார்க்கவேண்டும். நாம் புஷ்பங்களின் அழகை ரசிக்கிறோம். சாதாரணமாக பார்ப்பது என்பது வேறு. ஒன்றை கவனித்துப் பார்ப்பது என்பது வேறு. நாம் இந்த காட்டுப்புஷ்பங்களை கவனித்துப் பார்க்கவேண்டும். இயற்கையிலுள்ள அழகை நாம் ரசிக்கவேண்டும். அதேவேளையில் நாம் ரசிப்பதோடு நின்று விடக்கூடாது. அதை கவனித்தும் பார்க்கவேண்டும். கர்த்தர் அன்றாடம் நாம் காணும் இயற்கையின் மூலமாக நமக்கு நல்ல சத்தியங்களை உபதேசம் பண்ணுவார். 


காட்டுப் புஷ்பங்கள் நிலத்திலுள்ள காட்டுப்புல்லைப்போல உள்ளது. இன்று இருக்கும் இந்த காட்டுப்புல் நாளைக்கு அடுப்பிலே போடப்படும். நமது சரீரமும் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது.  காட்டுப் புஷ்பங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அது உலர்ந்த பின்பு அதை அடுப்பில் போட்டு எரிப்பதற்குத்தான் பயன்படும். அதுபோல நமது சரீரமும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். சிலர் தங்கள் சரீரங்களை கவர்ச்சிக்காக அழகு படுத்துகிறார்கள். ஆனால் இவையும் காட்டுப்புல்லைப்போல ஒருநாள் அழிந்து போகும் என்பதை மறக்கக்கூடாது. இன்று புல்லாக இருப்பது நாளைக்கு அடுப்பில் போட்டு எரிக்கப்படும் எரிபொருளாக உள்ளது. 


நாம் இந்த பூமியில் ஜீவிக்கும்போது நமது சரீரத்தைப் பார்த்து நாம் பெருமைப்படலாம். பலர் நமது அழகை ரசிக்கலாம். நமது சரீரம் அழிந்து போனபின்பு நம்மை எல்லோரும் மறந்து விடுவார்கள். நாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவோம். இன்று நமக்கு பல வர்ண வஸ்திரங்களை நேசித்து உடுத்தலாம். நாம் மரித்தபின்போ நமக்கு கல்லறையில் அடக்கம் பண்ணுவதற்குரிய மரண வஸ்திரந்தான் உடுத்துவிக்கப்படும். அதுதான் கடைசி வஸ்திரம். ஆகையினால் நாம்                  நாளைக்கு என்னத்தை உடுத்துவது என்று கவலைப்படக்கூடாது. நாளை நாம் ஒருவேளை மரித்துப்போய் மரண வஸ்திரம் தரிக்கவேண்டிய சூழ்நிலை வந்தாலும் வரலாம். 


காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று  நாம் கவனித்துப் பார்க்கவேண்டும். இவை கவலைப்படுவதில்லை. உழைக்கிறதுமில்லை. நூற்கிறதுமில்லை. ஆனாலும் இந்த காட்டுப் புஷ்பங்கள் அழகாக உடுத்துவிக்கப்பட்டிருக்கிறது. 


காட்டுப்புஷ்பங்கள் ஒருவேலையும் செய்யாமல் இருப்பதைப்போல நாமும் ஒரு வேலையும் செய்யவேண்டியதில்லை என்பது இதன் பொருளல்ல. நமக்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் கடமைகளை நிறைவேற்றவேண்டும். சோம்பேறியாக இருந்தால் சோதனை வரும். சோம்பேறி தேவனை பரீட்சைப் பார்ப்பான். தேவனை விசுவாசிக்கமாட்டான். 


காட்டுப்புஷ்பங்கள் மிகவும் மெல்லியதாக இருக்கும். அழகானதாகவும் இருக்கும். அவை எவ்வாறு வளருகிறதென்று கவனித்துப் பார்க்க வேண்டும். ஒரு சிறிய வேர் பகுதியிலிருந்து அது வளருகிறது. காட்டுப் புஷ்பத்தின் வேர்பகுதி மழைகாலத்தில் பூமிக்குள் புதைந்திருக்கும். வசந்தகாலம் வரும்போது அது சிறிது சிறிதாக முளைத்து அழகிய காட்டுப் புஷ்பமாக மலரும். சிறிது காலத்தில் காட்டுப் புஷ்பம் வளர்ந்து பெரிதாகிவிடும். 


கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் காட்டுப்புஷ்பங்களைப்போல வளருகிறோம். சாதாரண துவக்கத்திலிருந்து தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்று மேன்மையடைகிறோம். காட்டுப்புஷ்பங்கள் வளரும்போது அவை அழகாக இருக்கும். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் சாலொமோன் ராஜா செல்வச்செழிப்பு மிகுந்தவனாக இருந்தான். மெல்லிய வஸ்திரங்களை அணிந்திருந்தான். அவனுடைய வஸ்திரம் கூட காட்டுப்  புஷ்பத்தின் வஸ்திரத்திற்கு ஒப்பானதல்ல. அவன் எவ்வளவுதான் விலையுயர்ந்த வஸ்திரங்களை அணிந்திருந்தாலும் அது காட்டுப்புஷ்பத்தைப் போல அழகாக இராது. 


நாம் சாலொமோனைப்போல ஆடம்பரமான வஸ்திரங்களை உடுத்த  வேண்டுமென்று விரும்பக்கூடாது. அதற்குப் பதிலாக சாலொமோனைப்போல நமக்கு தெய்வீக ஞானம் வேண்டுமென்று விரும்பவேண்டும். காட்டுப்புஷ்பங்களுக்கு ஞானமில்லை. சாலொமோனோ ஞானத்தில் சிறந்தவன். காட்டுப்புஷ்பங்கள் சாலொமோனை விட அழகில் சிறந்தது. சாலொமோன் தனக்குத்தானே வஸ்திரங்களை அணிந்து கொள்கிறான். ஆனால் காட்டுப் புஷ்பங்களுக்கோ தேவன் உடுத்துவிக்கிறார். ஆகையினால் இவை அழகாக உள்ளன. 


தேவனுடைய ஞானமும் கிருபையும்  மனுஷனை பூரணப்படுத்தும். அழகும் வஸ்திரமும் மனுஷனை பூரணப்படுத்துவதில்லை. தேவன் காட்டுப்புல்லுக்கு அழகிய வஸ்திரங்களை உடுத்துவிக்கிறார். சிருஷ்டிகளின் அழகெல்லாம் தேவனிடத்திலிருந்தே வருகிறது. குதிரைக்கு அவர் வீரியத்தைக் கொடுக்கிறார். காட்டுப்புஷ்பத்திற்கு அவர் அழகை கொடுக்கிறார். இவற்றின் தேவைகளை சந்திக்கும் தேவன், அவருடைய பிள்ளைகளாகிய நம்முடைய தேவைகளையும் சந்திப்பது அதிக நிச்சயம். 


நமது வஸ்திரங்களுக்காக பேராசைப்படக்கூடாது. அவற்றை இச்சிக்கக்கூடாது. அவற்றின்மீது பெருமைப்படவுங்கூடாது. காட்டுப்புஷ்பங்களின் வஸ்திரங்கள் நமது வஸ்திரங்களைவிட அழகானவை. நாம் எவ்வளவுதான் முயற்சிபண்ணினாலும், செலவு செய்தாலும் காட்டுப்புஷ்பங்களைப்போல நம்மால் அழகாக உடுத்த முடியாது. காட்டுப்புஷ்பங்கள் அழகாக இருந்தாலும் அவை விரைவில் உலர்ந்து அழிந்துபோகும். அதுபோல நமது சரீரத்திற்கு எவ்வளவுதான் அழகான வஸ்திரங்களை உடுத்தினாலும் இந்த சரீரமும் விரைவில் அழிந்துபோகும். 


நமது வஸ்திரங்களுக்காக  தேவனையே சார்ந்திருக்கவேண்டும். காட்டுப்புல்லுக்கு உடுத்துவிக்கும் தேவன் தமது பிள்ளைகளாகிய நமக்கும் உடுத்துவிப்பது அதிக நிச்சயம். 


அற்பவிசுவாசிகளே


அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?  (மத் 6:30).


இயேசுகிறிஸ்து நம்மை அற்பவிசுவாசிகளே என்று அழைக்கிறார். நம்மை அற்பவிசுவாசி என்று அழைப்பது நமது பலவீனத்தைக் குறிப்பிடுகிறது. ஆயினும் மெய்யான விசுவாசத்திற்கு இதில் ஒரு ஆறுதலான சத்தியம் உள்ளது. பெரிய விசுவாசம் மிகவும் நல்லது. பெரிய விசுவாசம் இருக்கிறவர்கள். தேவனிடத்திலிருந்து பெரிய காரியங்களை எதிர்பார்ப்பார்கள். தேவனுக்காக பெரிய காரியங்களை செய்வார்கள். பெரிய விசுவாசிகளை தேவன் ஆசீர்வதிக்கிறார். அதே சமயத்தில் அற்பவிசுவாசிகளை தேவன் புறக்கணித்து தள்ளிவிடுவதில்லை.


விசுவாசத்தில் உறுதியாக இருக்கிறவர்களுக்கு தேவன் அவர்களுக்கு தேவைப்படும் பராமரிப்புக்களைத் தருகிறார். குழந்தைகளாக இருக்கிறவர்களுக்கு நாம் போஜனம் கொடுத்து உடுத்துவிப்பதுபோல, விசுவாசத்தில் குழந்தைகளாக இருக்கும் நம்மை தேவன் விசேஷித்த கரிசனையோடு பராமரிக்கிறார். அற்பவிசுவாசிகளை தேவன் கடிந்து கொண்டாலும், அவர்களுக்கு தேவனுடைய கரிசனையான பராமரிப்பு அதிகமாக இருக்கும். 


கிழக்கு தேசத்து ஜனங்கள் விறகுகளாலும், புல்லுகளாலும் சமையல் பண்ணும் அடுப்புக்களை எரிப்பார்கள். காட்டுப்புல் முக்கிய எரிபொருள்.            (1இராஜா 17:10; சங் 58:9)


அற்பவிசுவாசிகளே


    1. ஜீவனைக்குறித்து கவலைப்படுகிறர்கள்  (மத் 6:30)


    2. பயப்படுகிறவர்கள் (மத் 8:26)


    3. அற்புதங்களை விசுவாசியாதவர்கள் (மத் 14:31)


    4. போஜனத்தைக் குறித்துக் கவலைப் படுகிறவர்கள். (மத் 16:6-12)


அஞ்ஞானிகள் நாடித் தேடுவது


ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார் (மத் 6:31,32). 


கவலைப்படுகிறதினால் நம்மில் யாரும் தன்னுடைய சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்ட முடியாது. நமது சொந்த பராமரிப்பினாலும், சுய முயற்சியினாலும் நமது சரீரத்தில் வளர்ச்சியை பெற்றுக்கொள்ள முடியாது. தேவனுடைய கிருபையினால் நாம் வளருகிறோம்.  தேவனுடைய பராமரிப்பே நம்மை வளர்க்கிறது. 


பிறந்த குழந்தை ஒரு முழம் உயரமுள்ளதாக இருக்கும். அது ஆறு அடி உயரமுள்ள பெரிய மனுஷனாக வளர்கிறது. ஆயினும் அந்த நபருக்கு தான் எப்படி சிறிய குழந்தையிலிருந்து பெரிய நபராக வளர்ந்தோம் என்று தெரியாது. தேவனுடைய வல்லமையினாலும் அவருடைய நன்மையினாலும் நம்முடைய சரீரத்தில் வளர்ச்சி  உண்டாகிறது. தேவன் நம்மை சிருஷ்டிக்கும்போது இதற்கு ஒரு அளவைக் கொடுத்திருக்கிறார். கவலைப்படுவதினால் இந்த அளவைக் கூட்டவோ குறைக்கவோ நம்மால் முடியாது. 


நம்மை சிருஷ்டித்திருக்கும் தேவன் நமக்கு தேவையானவற்றைக் கொடுத்து நம்மைப் பராமரிக்கவும் செய்கிறார். முதிர்வயதைக்குறித்து நாம் அதிகமாக சிந்திப்பதில்லை. ஆயினும் நமக்கு முதிர்வு உண்டாகிறது. இதுவரையிலும் நம்மை வளர்த்த தேவன் இனிமேலும் நம்மை வளர்ப்பார் என்று அவரிடத்தில் நம்பிக்கையாயிருக்க வேண்டும். நமது வளர்ச்சி கர்த்தருடைய கரத்தில் உள்ளது. நாம் விரும்பிய பிரகாரமாக நமது சரீரத்தின் அளவைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ நம்மால் முடியாது. 


இந்த பூமியிலுள்ள நம் எல்லோருடைய சரீரமும் ஒரே அளவில் இருப்பதில்லை. சரீர அளவு ஒருவருக்கொருவர் வித்தியாசப்படும். சரீரத்தில் நமது உயரம் எவ்வளவு, நமது பருமன் எவ்வளவு என்று அளந்து பார்த்துக் கூறுகிறோம். அதுபோலவே இந்த உலகப்பிரகாரமாக நமது அந்தஸ்து எந்த அளவில் உள்ளது என்றும் அளவிடுகிறோம்.  இந்த உலக ஐசுவரித்தை வைத்து நம்மை அளந்து பார்க்கக்கூடாது. உலக ஐசுவரியத்தால் நமது சரீரத்தின் அளவைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது. கர்த்தருடைய கிருபையினால் கொஞ்சம் கொஞ்சமாக நாம் வளர்ச்சியடைகிறோம். நமது சரீர வளர்ச்சியில் இதையே எதிர்பார்க்கவேண்டும். நமது செல்வத்தைப் பயன்படுத்தி ஒரே நாளில் சரீர வளர்ச்சி பெற்றுவிடலாம் என்று எதிர்பார்க்கக்கூடாது. 


நமது சரீர வளர்ச்சியைக்குறித்து ஒவ்வொரு நாளும் நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆயினும் ஒவ்வொரு நாளிலும் நாம் வளர்ச்சி பெறுகிறோம். நமது சரீரத்தைக் குறித்து அக்கறையோடிருந்தாலும், அக்கறையில்லாமலிருந்தாலும் நமது சரீரம் வளர்ச்சி பெறுகிறது. ஆகையினால் நமது சரீரத்தைப் பற்றிய சிந்தனை நமக்கு பாரமாகிவிடக்கூடாது. நமது சரீரம் எந்த வளர்ச்சியில் இருக்கிறதோ அந்த வளர்ச்சியில் நாம் திருப்தியோடிருக்கவேண்டும். இல்லாததை நினைத்து கவலைப்படுவதற்குப் பதிலாக, இருப்பதை நினைத்து திருப்தியோடிருப்பது நல்லது. 


என்னத்தை உண்போம் என்றும், என்னத்தை குடிப்போம் என்றும், என்னத்தை உடுப்போம் என்றும் அஞ்ஞானிகள் நாடித் தேடுகிறார்கள். அஞ்ஞானிகளுக்கு உணவு, உடைகளைத் தவிர மேன்மையான வேறு காரியங்களைப் பற்றி எதுவும் தெரியாது. இவர்கள் இந்த உலகக்காரியங்களுக்காக கவலைப்படுகிறார்கள். இதன்மீது வாஞ்சையாக இருக்கிறார்கள். பரலோகக் காரியங்களுக்கு அஞ்ஞானிகள் அந்நியர்களாக இருக்கிறார்கள். உலகத்தின் பொக்கிஷங்களை மிகுந்த  அக்கறையோடு தேடி தங்களுக்கு சம்பாதித்து வைக்கிறார்கள். இவர்கள் இந்த உலகத்தில் தேவனற்றவர்கள். பணமே இவர்களுடைய தேவன். தேவனுடைய பராமரிப்பைப் பற்றி இவர்களுக்குத் தெரியவில்லை. ஆகையினால் தங்களைத் தாங்களே பராமரித்துக்கொள்ள வேண்டுமென்று பிரயாசப்படுகிறார்கள். தங்களுடைய விக்கிரகங்களுக்குப் பயந்து அவற்றை ஆராதிக்கிறார்கள். ஆனால் அவற்றை எவ்வாறு நம்புவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. கிறிஸ்தவ விசுவாசிகளாகிய   நாம் அஞ்ஞானிகளைப்போல உலகப் பொருட்களை நாடித் தேடிப்போகக்கூடாது.


அஞ்ஞானிகள் தங்கள் இருதயங்களிலும் சிந்தனைகளிலும் உலகப் பொருட்களைக் குறித்த காரியங்களினால் நிரம்பியிருக்கிறார்கள். விசுவாசிகளாகிய நம்மிடத்திலோ தேவனுடைய சிந்தனையும் அவருடைய காரியங்களும் நிறைந்திருக்கவேண்டும். 


நமக்கு உணவும் உடையும் வேண்டியவை என்று நமது பரமபிதா அறிந்திருக்கிறார். நமது தேவைகளை அவர் கிருபையோடு சந்திக்கிறார். ஆகையினால் நமது கவனத்தை உணவின்மீதும் உடையின்மீதும் செலுத்தாமல் இவற்றைக் கொடுக்கும் தேவன் மீதே செலுத்தவேண்டும். நம்முடைய தேவைகளைப்பற்றி நமக்கு தெரிவதைவிட  நமது பரலோகப்பிதாவிற்கு நன்றாக தெரியும். நமது தேவன் இரக்கமுள்ளவர். நமக்கு உதவிபுரிய ஆயத்தமாக இருக்கிறவர். நமது தேவைகளை அறிந்திருக்கிறவர். நமது தேவைகளை சந்தித்து உதவிபுரிகிறவர். நம்முடைய தேவைகளைப்பற்றி தேவன் அறிந்திருக்கிறபடியினால், அவற்றையெல்லாம் அவருடைய பாதத்தில் சமர்ப்பித்துவிட்டு நமது இருதயத்தில் சமாதானமாக ஜீவிக்கவேண்டும். 


புறஜாதியாருக்கு அவர்களுடைய வயிறு தான் தெய்வம். தங்களுடைய மாம்சத்தின் இச்சைப் பிரகாரம் அவர்கள் தங்கள் தெய்வங்களை ஆராதிக்கிறார்கள். ஜீவியத்தின் பெருமை, கண்களின் இச்சை, ஆகியவை அஞ்ஞானிகளை ஆட்கொள்ளுகிறது.              (1யோவான் 2:15-17)


தேவனுடைய ராஜ்யமும் அவருடைய நீதியும்


முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் (மத் 6:33).


நமது உணவையும் உடையையும் நாம் தேடக்கூடாது. தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடவேண்டும். பூமிக்குரிய காரியங்களை நாம் தேடக்கூடாது. பரலோகத்திற்குரிய காரியங்களை நாம் தேடவேண்டும். சரீரத்தின் ஜீவனைக்குறித்து கவலைப்படக்கூடாது. ஆத்துமாவின் ஜீவனைக்குறித்து நாம் கரிசனையோடிருக்க வேண்டும். உலக சந்தோஷத்திற்காக கவலைப்படாமல் நித்திய சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ள வாஞ்சிக்கவேண்டும். இதுவே தேவையான ஒன்று (லூக் 10:42). நமது முழு சிந்தனையும் ஆத்துமாவைக் குறித்ததாக இருக்கவேண்டும். தேவனுடைய ராஜ்யத்தை முதலாவது தேடும்போது நமக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும் பூமிக்குரிய ஆசீர்வாதங்களுக்கும் கிடைக்கும். உணவையும் உடையையும் பிரயாசப்பட்டு தேடுவதற்குப் பதிலாக, தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடும்போது உணவும் உடையும் நமக்கு எளிதாக கிடைக்கிறது. நமது தேவைகளை சந்திப்பதற்கு இதுவே எளிதான வழியும் பாதுகாப்பான வழியுமாகும். 


தேடுவது நமது கடமை. நாம் பெற்றுக்கொள்ளாவிட்டாலும் தொடர்ந்து தேடவேண்டும். நாம் தேடிய பல காரியங்களை இன்னும் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறோம். சோர்வடைந்து விடக்கூடாது. உண்மையாக தேடுகிறவர்கள் கண்டடைவார்கள். பரலோகமே நமது முயற்சிகள் அனைத்திற்கும் முடிவாக இருக்கவேண்டும். பரிசுத்தத்தின் பாதையில் பரலோகத்திற்கு செல்லவேண்டுமென்று வாஞ்சிக்கவேண்டும். 


நாம் பரலோகத்திற்கு போகவில்லையென்றால் இந்த பூமியில் நமது பிரயாசமெல்லாம் விருதா. இந்த பூமியில் நாம் எவ்வளவுதான் அழகாக உடுத்தியிருந்தாலும், எவ்வளவுதான் போஜனங்களை நேர்த்தியாக புசித்திருந்தாலும் பரலோகத்திற்குப் போனால்தான் நமக்கு நித்தியஜீவன் உண்டு. 


தேவனுடைய ராஜ்யத்தில் மெய்யான சந்தோஷமுள்ளது. நாம் அந்த சந்தோஷத்தைத் தேடும் போது தேவனுடைய நீதியையும் தேடவேண்டும். நமது சொந்த காரியங்களைவிட தேவனுடைய காரியங்களை அதிகமாக தேடவேண்டும். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேடவேண்டுமென்று இயேசுகிறிஸ்து வலியுறுத்துகிறார். நமது ஜீவியத்தின் ஆரம்ப காலத்திலேயே தேவனை தேட ஆரம்பித்துவிடவேண்டும். நமது வாலிபப் பிராயத்தை தேவனுக்கு அற்பணிக்கவேண்டும். ஒவ்வொரு நாளிலும் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் பிரதானமாக தேடவேண்டும். காலையில் எழும்பியவுடன் நமது சிந்தனை தேவனைப்பற்றியதாகவும் அவருடைய நீதியைப்பற்றியதாகவும் இருக்கவேண்டும். தேவனே ஆதியாக இருக்கிறவர். அவரே நமது ஜீவியத்திலும் முதன்மையானவராக இருக்கவேண்டும்.


தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடும்போது இவைகளெல்லாம் நமக்கு கூட கொடுக்கப்படும்.  இவைகள் எல்லாம் என்பது இந்த பூமியில் நாம் ஜீவிப்பதற்குத் தேவையான ஆசீர்வாதங்கள் எல்லாம் என்று பொருள். நாம் வேண்டிக்கொள்வதற்கும் நினைப்பதற்கும் அதிகமாக தேவன் நமக்கு கொடுக்கிறார். கடையில் ஒரு பொருளை வாங்கும்போது கடைக்காரர் அந்த பொருளோடு இலவசமாக ஒரு பொருளைக் கொடுப்பதுபோல இந்த காரியம் உள்ளது. நாம் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுகிறோம். தேவன் நமக்கு தம்முடைய ராஜ்யத்தையும் தம்முடைய நீதியையும் கொடுக்கிறார். அத்துடன் உலகப்பிரகாரமான நமது தேவைகளையும் சந்திக்கிறார். ""சரீர முயற்சி அற்பபிரயோஜனமுள்ளது. தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்கு பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது'' (1தீமோ 4:8).


நமது பிரயாசங்களை தேவனோடு ஆரம்பிக்கும்போது நமது முடிவு ஆசீர்வாதமானதாக இருக்கும். நமது தேவன் யெகோவாயீரேயாக இருக்கிறார். நமது தேவைகளை கர்த்தர் பார்த்துக்கொள்வார். நமக்கு தேவையானது எது என்பது அவருக்குத் தெரியும். நாம் வேண்டிக்கொள்வதற்கும் நினைப்பதற்கும் அதிகமாக நமக்கு கொடுத்து நம்மை ஆசீர்வதிப்பார். இஸ்ரவேல் புத்திரர்களை கானான் தேசத்திற்கு அழைத்து வந்த தேவன், அவர்கள் வனாந்தரத்தில் பிரயாணம் பண்ணியபோது அவர்களுக்கு போஜனம் கொடுத்து  அவர்களை போஷித்தார். அவர்களுடைய வஸ்திரங்கள் பழசாய்ப் போகாதவாறு பாதுகாத்துக்கொண்டார். அவர்களை பராமரித்து வழிநடத்தினார். அதுபோல பரலோகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் தேவன், இந்த பூமியில் நாம் ஜீவனோடிருக்கும் காலமெல்லாம் நமக்கு போஜனம் கொடுத்து, நமக்கு வஸ்திரத்தை உடுத்தி நம்மை பராமரிப்பார். 


அந்தந்தநாளுக்கு அதினதின் பாடுபோதும்


ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்  (மத் 6:34) .


ஒவ்வொரு நாளும் நமக்கு பாடுகள் நிறைந்திருக்கிறது. புதிதுபுதிதாக பிரச்சனைகளும் பாடுகளும் நாளுக்கு நாள் வருகிறது. அந்தப் பாடுகளோடு நமக்கு பெலனும் பராமரிப்பும் உண்டாகிறது. ஒவ்வொரு நாளும் நமக்கு பிரச்சனைகள் உண்டாகும்போது தேவன் அந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு தேவையான உபகாரங்களையும் நமக்கு கொடுத்து உதவிபுரிகிறார். ஆகையால் நாளை தினத்தில் என்ன நடைபெறும் என்று நாம் கவலைப்படவேண்டாம். நாளை தினத்தை கர்த்தர் பார்த்துக்கொள்வார். நாளை தினத்தில் என்னென்ன நடைபெறும் என்பதை தேவன் அறிவார். நாளை தினம் தன்னுடையவைகளுக்காக கவலைப்படும். நாளைய தினத்தில் பிரச்சனைகள் மறுபடியும் வரும். இன்றையதினத்தில் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கர்த்தர் எவ்வாறு உதவிபுரிந்தாரோ, அதுபோல நாளை தினத்திலும் வரப்போகிற அந்தப் பிரச்சனை தீர்ப்பதற்கு கர்த்தர் நிச்சயமாகவே உதவிபுரிவார்.  ""நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே. அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள். உமது உண்மை பெரிதாயிருக்கிறது'' (புல 3:22,23). ஒவ்வொரு நாளிலும் நாம் இந்த வாக்கியத்தை நமது இருதயத்தில் நினைவுகூரவேண்டும். 


நாளைய தினத்திற்காக கவலைப்படக் கூடாது என்பதற்காக, நாளைய தினத்திற்கு ஆயத்தப்படக்கூடாது என்பது பொருளல்ல. வரப்போகிற காரியங்களை நாம் தீர்க்கதரிசனமாக கணித்து அதற்கு ஆயத்தப்படவேண்டும். துன்பங்களும், துயரங்களும் வருமே என்று பயந்துவிடக்கூடாது.  துன்பமும் இன்பமும் வரலாம். எதுவந்தாலும் அவற்றை சமாளிப்பதற்கு நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும். அன்றன்றுள்ள நமது கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். கர்த்தர் மீது நமது பாரத்தை வைத்துவிட வேண்டும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். நாளைய தினத்திற்காக இன்றைக்கே கவலைப்படாமல், இன்றைய தினத்தில் வந்துள்ள பாடுகளுக்காக கர்த்தரிடத்தில் ஜெபித்து அவருடைய கிருபைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். 


ஒவ்வொரு நாளும் நமக்கு வரும் பாடுகளை மேற்கொள்வதற்கு தேவன் புதிய கிருபைகளையும் புதிய பெலனையும் தருவார்.  நாளைய தினத்தில் வரப்போகிற பாடுகளை இன்றே வரவழைத்துக்கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்தால் நமது பாடுகளை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. ஒரு வேளையில் ஒரு பிரச்சனையை மாத்திரமே நம்மால் சமாளிக்க முடியும். பிரச்சனைகள் அதிகமானால் அவற்றை தீர்த்து வைப்பது சிரமமாக இருக்கும். பிரச்சனைகள் நம்மை ஆளுகை செய்ய ஆரம்பித்துவிடும். 


என்றோ வரப்போகிற பிரச்சனையைக் குறித்து இன்றே கவலைப்படுவதற்குப் பதிலாக, இன்று வந்துள்ள பிரச்சனையை தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்பது நமது ஆத்துமாவிற்கு எளிதாக இருக்கும். ஒவ்வொரு நாளும் ஜெபித்து தேவனுடைய பெலனை பெற்றுக்கொண்டு, அன்றன்று வரும் பிரச்சனைகளை மேற்கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாளும் நமக்கு சோதனைகள் வரலாம். இந்த சோதனைகளை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய  கிருபைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். நாளைய தினத்திற்காக கவலைப்படாமல், அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும் என்றிருந்தால், பாடுகள் நம்மை மேற்கொள்ளாது. தேவனுடைய கிருபையினால் நாம் பாடுகளை மேற்கொள்வோம்.


இன்றுபோலத் தான் நாளையும் இருக்கும். ஆகையினால் நாளைக்காகக் கவலைப் படுவதினால் எவ்வித பிரயோஜனமுமில்லை. அந்தந்த நாளுக்கு தேவையானதை நம் ஆண்டவர் தருவார் என்று விசுவாசத்தோடு ஜீவிக்க வேண்டும். வருங்காலத்தைக் குறித்த சிந்தையோடு இருப்பது தவறல்ல. ஆனால் வருங்காலத்தைக் குறித்த கவலை விசுவாசிகளிடம் இருக்கக்கூடாது. (மத் 6:25)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.