தம்முடைய வருகைக்கு ஆயத்தமாய் இருக்கும்படி இயேசுவை எச்சரித்தல்
மனுஷகுமாரன் வருவார் லூக் 12:35-40
எஜமான் வரும்போது
உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும், (லூக் 12:35)
இயேசுகிறிஸ்து வரும்போது அவரை சந்திப்பதற்கு நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவே நம்முடைய எஜமானாக இருக்கிறார். அவருடைய பிள்ளைகளாகிய நாம் எல்லோரும் அவருடைய ஊழியக்காரர்களாக இருக்கிறோம். அவருக்காக ஊழியம் செய்யும் ஊழியக்காரர்கள் மாத்திரமல்ல. அவருக்காக காத்திருக்கும் ஊழியக்காரராகவும் இருக்கிறோம். நாம் கர்த்தருடைய வருகைக்காக காத்திருக்கிறவர்களாக காணப்படவேண்டும். நம்முடைய எஜமான் எந்த நேரத்தில் வந்தாலும், எவ்வளவு தாமதமாக வந்தாலும், அவரைச் சந்திப்பதற்கு நாம் எல்லா வேளையிலும் ஆயத்தமாக இருக்கவேண்டும்.
நம்முடைய எஜமானாகிய இயேசுகிறிஸ்து இப்போது நம்மிடத்திலிருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார். அவர் இந்த பூமிக்கு மறுபடியும் திரும்பி வருவார். கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகிய நாம் நம்முடைய எஜமானாகிய இயேசுகிறிஸ்துவின் வருகைக்காக காத்திருக்கிறவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய எஜமானுடைய மகிமையின் பிரசன்னம் எப்போது தோன்றுமென்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கவேண்டும். அவர் தம்முடைய பிள்ளைகளை பரலோகத்திற்கு எடுத்துக் கொள்வதற்காக மறுபடியும் வருவார். இயேசுகிறிஸ்துவின் வருகையின் நாளில், அவருடைய வருகைக்காக காத்திருக்கிறவர்கள் அவரோடுகூட எடுத்துக்கொள்ளப்படுவார்கள். அவருடைய வருகையின்போது ஆயத்தமில்லாமல் இருக்கிறவர்கள் கைவிடப்படுவார்கள்.
நம்முடைய எஜமான் எந்த நேரத்தில் வருவாரென்று வெளிப்படுத்தப்படவில்லை. அவருடைய வருகை ஒருவேளை இரண்டாம் ஜாமத்தில் இருக்கலாம். இது நடு இரவுக்கு சற்று முந்திய வேளையாகும். ஒருவேளை அவர் மூன்றாம் ஜாமத்தில் வரலாம். இது நடு இரவுக்கு பிந்திய வேளையாகும். நாம் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார். ஆகையினால் அவருடைய வருகையை எதிர்கொள்ள நாம் எப்போதுமே ஆயத்தமாக இருக்கவேண்டும். இந்த உலகத்தார் இயேசுகிறிஸ்துவின் வருகையைக் குறித்து கவலையில்லாமல் இருக்கிறார்கள். அதைப்பற்றி அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் தேவனுடைய பிள்ளைகளாகிய நாமோ அவருடைய வருகையை எதிர்பார்க்கவேண்டும். ஒவ்வொரு வேளையிலும் அவருடைய வருகையை நினைவுகூரவேண்டும். அப்போதுதான் நாம் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வந்தாலும், அவரைச் சந்திப்பதற்கு நம்மால் ஆயத்தமாக இருக்க முடியும்.
காத்திருக்கிற மனுஷன்
தங்கள் எஜமான் க-யாணத்தி-ருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள் (லூக் 12:36).
தன்னுடைய ஊழியக்காரன் தனக்காக காத்திருக்க வேண்டுமென்றும் தான் வந்து தட்டும்போது உடனே தனக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவாரென்று காத்திருக்க வேண்டுமென்றும் எஜமான் விரும்புகிறான். இது வேலைக்காரரிடமிருந்து எல்லா எஜமான்களும் எதிர்பார்க்கும் ஒரு காரியம். தன்னுடைய ஊழியக்காரர்கள் தங்களுக்கு ஊழியம் செய்ய தங்கள் அரைகளை கட்டிக்கொண்டிருக்க வேண்டுமென்று எஜமான்கள் எதிர்பார்க்கிறார்கள். ஊழியக்காரரின் வஸ்திரம் நீளமாக இருக்கும்போது அது ஊழியம் செய்வதற்கும், எஜமானுக்கு பணிவிடை செய்வதற்கும் இடையூறாக இருக்கும். ஆகையினால் நீளமாக இருக்கும் தன் வஸ்திரத்தை ஊழியக்காரன் தன் அரையில் கட்டிக்கொள்ள வேண்டும். எஜமான் வீட்டிற்குள் வரும்போது வீட்டில் வெளிச்சம் இருக்கவேண்டும். அதற்காக ஊழியக்காரரின் கையிலுள்ள விளக்கு எரிந்துகொண்டிருக்க வேண்டும். எரியாத விளக்கைப் பிடித்திருப்பதினால் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
இயேசு கிறிஸ்து வரும்போது நாம் விழித்திருக்கிறவர் களாகவும், ஆயத்தமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை இந்த உவமை விளக்குகிறது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை இந்த வசனம் குறிக்கும் என்றும், சபை எடுத்துக் கொள்ளப்படுவதை இந்த வசனம் குறிக்காது என்றும் சிலர் இந்த வசனத்திற்கு வியாக்கியானம் கூறுகிறார்கள்.
வெளி 19:1-10 ஆவது வசனங்களில் மணவாட்டியின் கலியாண விருந்து கூறப்பட்டிருக்கிறது. இந்தத் திருமண விருந்திற்குப் பின்பு இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இருக்கும். (வெளி 19:11-21).
எஜமான் ஊழியம் செய்வார்
எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரை கட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக் 12:37).
ஊழியக்காரர்கள் தங்கள் எஜமான்களுக்கு அதிகநேரம் ஊழியம் செய்தாலும், அதிகநேரம் காத்திருந்தாலும் எஜமான் வரும்போது விழித்திருக்கிறவர்களாக காணப்படுகிற ஊழியக்காரர் மாத்திரமே பாக்கியவான்களாக இருப்பார்கள். எஜமான் தன் வீட்டின் அருகில் வந்து கதவை ஒருமுறை தட்டியவுடனேயே, ஊழியக்காரன் உடனே வந்து கதவைத் திறக்க வேண்டும். அப்படிப்பட்ட ஊழியக்காரன்தான் பாக்கியவானாக இருப்பான். எஜமான் திரும்ப திரும்ப கதவைத் தட்டினாலும், வீட்டிற்குள் விழித்திராமல் நித்திரை செய்து கொண்டிருக்கும் ஊழியக்காரன் ஆசீர்வதிக்கப்படமாட்டான்.
பாக்கியவான்களாக இருக்கும் ஊழியக்காரருக்கு அவர்களுடைய எஜமான் அவர்களுக்கு ஊழியம் செய்வார். அவர் தம்முடைய அரையைக் கட்டிக்கொண்டு, அவர்களை பந்தியிருக்கச் செய்து, சமீபமாய் வந்து அவர்களுக்கு ஊழியம் செய்வார். மணவாளன் தன் மணவாட்டியை பந்தியிருக்கச் செய்து, அவளுக்கு ஊழியம்செய்வது பாலஸ்தீன தேசத்தில் ஒரு பொதுவான மரபு. ஆனால் தன் ஊழியக்காரருக்காக எஜமான் ஊழியம் செய்வது என்பது மனுஷர் மத்தியிலே காணப்படாத சம்பவம். ஆனால் நம்முடைய ஆண்டவரும் எஜமானுமாகிய இயேசுகிறிஸ்துவோ தம்முடைய ஊழியக்காரருக்காக ஊழியம் செய்கிறார். தம்முடைய அரையைக் கட்டிக்கொண்டு, தமது சீஷர்களின் பாதங்களைக் கழுவி அவர்களுக்கு ஊழியம் செய்தார்.
இயேசுகிறிஸ்து ஒரு சமயம் தம்முடைய சீஷர்களோடு போஜனம்பண்ணிக் கொண்டிருக்கையில், அவர் போஜனத்தை விட்டெழுந்து, தமது வஸ்திரங்களை கழற்றி வைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களை கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார் (யோவா 13:4,5). நமக்கு ஒரு முன்மாதிரியாக இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு முன்பாக தம்மையே தாழ்த்தியிருக்கிறார்.
நினையாத நேரத்தில்
அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள். திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்ன மிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள். அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார் (லூக் 12:38-40).
இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு மறுபடியும் வரும் அந்த குறிப்பிட்ட வேளை நமக்கு அறிவிக்கப்படவில்லை. நாம் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார். ஆகையினால் அவர் எப்போது வந்தாலும் அவரை சந்திப்பதற்கு நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும். ஒரு வீட்டு எஜமான் கவனக்குறைவுள்ளவனாக இருந்தாலும், திருடன் இன்ன நேரத்தில் வருவான் என்று அவனுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டை கன்னமிடவொட்டான். ஆனால் இன்ன நேரத்தில் திருடன் வருவானென்று தெரியாதிருந்தால், திருடனை தடுப்பதற்கு வீட்டெஜமானால் முடியாது.
நம்முடைய எஜமானாகிய இயேசுகிறிஸ்து இன்ன நேரத்தில் வருவாரென்று நமக்குத் தெரியாது. நாம் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார். ஆகையினால் நாம் எப்போதுமே இயேசுகிறிஸ்துவை சந்திப்பதற்கு, ஆயத்தமாக இருக்கவேண்டும். நம்முடைய அரைகள் எப்போதும் கட்டப்பட்டதாகவும், நம்முடைய விளக்குகள் எரிகிறதாகவும் இருக்கவேண்டும். எஜமான் எப்பொழுது வருவாரென்று அவருக்கு காத்திருக்கிறவர்களாகவும் நாம் இருக்கவேண்டும்.
இயேசுகிறிஸ்து மறுபடியும் வரும்போது அவரைச் சந்திப்பதற்கு நாம் ஆயத்தமாக இருக்கவேண்டுமென்பது மிகவும் முக்கியமான சத்தியமாகும். இந்த சத்தியத்தை விசுவாசியாதவர்களுக்கும், விசுவாசித்தும் கவனக்குறைவாக இருக்கிறவர்களுக்கும் பரிதாபமான முடிவு நியமிக்கப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய வருகை எப்படியிருக்குமென்று வேதம் தெளிவுபடுத்துகிறது. ஒரு திருடன் இரவுவேளையில் வருவதுபோல அவருடைய வருகை இருக்கும். அதே வேளையில் நாம் நினையாத நேரத்திலும் அவருடைய வருகை இருக்கும்.
உலகப்பிரகாரமான வீட்டு எஜமான்கள் தங்களுடைய வீடுகளை எல்லா காவல்களோடும் பாதுகாப்பது போல, நாமும் நம்முடைய ஆத்துமாக்களை மிகுந்த கவனத்தோடும் ஞானத்தோடும் காவல் காக்கவேண்டும். விழித்திருந்து திருடன் வரும்போது தன் வீட்டை கன்னமிடவொட்டாத வீட்டெஜமான் போல, நாமும் விழித்திருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவை சந்திப்பதற்கு நாம் எப்போதுமே ஆயத்தமாக இருக்கவேண்டும்.
""இரண்டாம் ஜாமம்'' என்பது இரவு 9 மணி முதல் நடுஇரவு 12 மணி வரையிலும் உள்ள நேரமாகும். ""மூன்றாம் ஜாமம்'' என்பது நடுஇரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையிலும் உள்ள நேரமாகும்.
எல்லாருக்கும் சொல்லுகிறீரோ
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான் (லூக் 12:41).
இயேசுகிறிஸ்து கூறிய உவமையைக் குறித்து பேதுரு ஒரு கேள்வி கேட்கிறார். ஆண்டவரே இந்த உவமையை எங்களுக்கு மாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்கிறான். பேதுரு பொதுவாக எல்லா சீஷர்களுடைய சார்பாகவும் பேசுகிறவனாகவே இருப்பான். இக்காலத்திலும் ஜனங்களுடைய உள்ளக் கருத்துக்களை வெளிப்படையாக பேசுகிற தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் கர்த்தரைத் துதிக்க வேண்டும். ஒருவன் பிறருக்கு தலைவனாகவும், பிறருடைய கருத்துக்களை பிரதிபலிப்பவனாகவும் இருந்தாலும் அவனுக்குள் சுயபெருமை காணப்படக்கூடாது. தன்னுடைய கேள்விக்கு இயேசுகிறிஸ்து பதில் கொடுக்க வேண்டுமென்று பேதுரு விரும்புகிறான்.
இயேசுகிறிஸ்துவின் உவமை தங்களுக்கு மாத்திரமா அல்லது எல்லோருக்கும் சொல்லப்படுகிறதா என்பதுதான் பேதுருவின் கேள்வி. இயேசுகிறிஸ்து இந்தக் கேள்விக்கு ஏற்கெனவே பதில் கூறியிருக்கிறார். ""நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்கிறேன்'' (மாற் 13:37) என்பதுதான் பேதுருவின் கேள்விக்கு இயேசுகிறிஸ்து கூறும் பதிலாகும். இயேசுகிறிஸ்து தமது பதிலை இவ்வாறு கூறியிருக்கிறபோதிலும் சீஷர்களுக்கு இதைக் குறித்து மிகுந்த கரிசனை உண்டாயிற்று. ஆகையினால் இந்த உவமையை இயேசுகிறிஸ்து தங்களுக்கு மாத்திரம் சொல்லுகிறாரோ என்பதை தெரிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் யாரிடம் பேசப்படுகிறதோ அவர்கள் அந்த வார்த்தைகளை தங்கள் காதுகளினால் கேட்டு, அவற்றை தங்கள் இருதயத்தில் பதித்துக்கொள்ள வேண்டும். இயேசுகிறிஸ்து எப்போதுமே மனுஷருடைய இருதயங்களோடு பேசுகிறவர்.
உண்மையும் விவேகமும்
அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்? (லூக் 12:42)
பேதுருவின் கேள்விக்கு பதில் கூறும்போது இயேசுகிறிஸ்து பேதுருவிடமும் மற்ற சீஷர்களிடமும் சில விசேஷித்த சத்தியத்தை வெளிப்படுத்துகிறார். இந்த சத்தியத்தை கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் எல்லோருமே தங்களுடைய வாழ்க்கையில் நடைமுறையில் செயல்படுத்த வேண்டும். ஏனெனில் கிறிஸ்துவினுடைய வீட்டில் அவருடைய ஊழியக்காரர்கள் எல்லோருமே அவருக்கு உக்கிராணக்காரர்களாக இருக்கிறார்கள்.
உக்கிராணக்காரர்களுடைய கடமை என்ன என்பதும், அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டிருக்கும் ஊழியம் என்ன என்பதும் இந்த பகுதியில் விளக்கப்பட்டிருக்கிறது. தேவனுடைய வீட்டில் இயேசுகிறிஸ்து இவர்களை அதிகாரிகளாக நியமித்திருக்கிறார். தேவனுடைய வீடு கிறிஸ்துவுக்குரியது. இந்த வீட்டில் அதிகாரிகளாக இருக்கும் சிலாக்கியம் கிறிஸ்துவின் மூலமாக அவருடைய ஊழியக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவனுடைய பிள்ளைகளுக்கு, ஊழியக்காரர்கள் ஏற்ற வேளையில் அவர்களுக்குத் தேவையான ஆவிக்குரிய போஜனத்தைக் கொடுக்க வேண்டும்.
தகுதியான காலத்தில் படி அளப்பதுதான் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஊழியம். கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு இவர்கள் சத்திய வசனத்தின் மூலமாக ஆறுதல் கூறவேண்டும். அவர்கள் தேவனுக்கு விரோதமாகவும் சத்திய வசனத்திற்கு விரோதமாகவும் விரோதமாக இருக்கும்போது அவர்களை கடிந்து கொள்ளவேண்டும். அவர்களுடைய தவறுகளை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இவையெல்லாவற்றையும் கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் விசுவாசிகளுக்கு தகுதியான காலத்திலே கொடுக்க வேண்டும். இருதயத்தில் களைப்பாக இருக்கிறவனுக்கு ஏற்ற காலத்தில் கொடுக்கப்படும் ஆறுதலான வார்த்தை அவனுக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கும்.
கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் உண்மையும் விவேகமும் உள்ளவர்களாக இருக்கவேண்டும். தங்கள் எஜமானாகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தங்களோடு ஊழியம் செய்யும் உடன் ஊழியக்காரர்களுக்கும் இவர்கள் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். அதேவேளையில் இவர்கள் விவேகமுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் ஆற்றல் நிறைந்தவர்களாகவும், அறிவும் விவேகமும் மிகுந்தவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும் இருக்கவேண்டுமென்பது இயேசுகிறிஸ்துவின் உபதேசம்.
உயர்த்தப்படும் விசாரணைக்காரன்
எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான். தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக் 12:43,44).
ஒரு எஜமான் தன்னுடைய ஊழியக்காரனை உண்மையும் விவேகமுமுள்ளவன் என்று அங்கீகரிப்பது அவனுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். அப்படிப்பட்ட ஊழியக்காரனே பாக்கியவானாக இருப்பான். இவன் சும்மாயிராமல் தனக்குக் கொடுக்கப்படும் வேலையை உண்மையாகவும் விவேகமாகவும் செய்வான். தனக்குக் கொடுக்கப்படும் வேலையை எப்படி நிறைவேற்ற வேண்டுமோ அப்படி நிறைவேற்றுவான். கிறிஸ்துவின் ஊழியக்காரன் தன் வாயின் வார்த்தையினால் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதோடு, தான் பிரசங்கித்த சுவிசேஷத்திற்கு சாட்சியாகவும் ஜீவிப்பான்.
உண்மையும் விவேகமும் உள்ள ஊழியக்காரர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்தை தொடர்ந்து செய்து அதை நிறைவேற்றுவார்கள். ஏதோ ஒரு ஆர்வத்தில் ஊழியத்தை ஆரம்பித்துவிட்டு அதன்பின்பு அதை அரையும் குறையுமாக விட்டுவிட மாட்டார்கள். நம்முடைய எஜமானாகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வரும்வரையிலும் உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஊழியத்தை மனப்பூர்வமாகவும், உண்மையாகவும், விவேகமாகவும் செய்வார்கள். இவர்களே பாக்கியவான்கள்.
கர்த்தருடைய ஊழியக்காரர் ஆரம்பத்தில் சாதாரண ஊழியத்தை செய்து கொண்டு வந்தாலும், அவர் கர்த்தருடைய பார்வையில் உண்மையும் விவேகமுமுள்ளவராக ஊழியம் செய்யும்போது, கர்த்தர் அவரை உயர்த்துவார். சாதாரண ஊழியத்திற்குப் பதிலாக அவருக்கு பெரிய ஊழியத்தைக் கொடுப்பார். அவருடைய ஊழியத்தின் எல்லைகளை கர்த்தரே விஸ்தரிப்பார். கர்த்தர் அவரை உயர்த்துவார். தனக்குள்ளது எல்லாவற்றின் மேலும் எஜமான் உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனை விசாரணைக்காரனாக வைப்பதுபோல, கர்த்தரும் தம்முடைய உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்களை உயர்த்துவார்.
கர்த்தருடைய கிருபையையும் இரக்கத்தையும் பெற்றுக்கொண்ட ஊழியக்காரர்கள் அவருக்கு உண்மையும் விவேகமுமுமாக ஊழியம் செய்யவேண்டும். அப்படிப்பட்ட ஊழியக்காரர்களுக்கு தேவகிருபையும் தேவஇரக்கமும் இன்னும் அதிகமாக கொடுக்கப்படும். கர்த்தருடைய நாளில் உண்மையுள்ள ஊழியக்காரர்களுக்கு விசேஷித்த வெகுமதிகளும் கொடுக்கப்படும்.
பணிவிடைக்காரன் பாக்கியவானாயிருக்கிறான். இவன் தன்னுடைய சொந்த நன்மையைக் கவனிப்பதற்குப் பதிலாக எஜமானுடைய நன்மையையே அதிகமாக கவனித்தான். உண்மையுள்ளவனாக இருந்தான். ஆகையினால் எஜமான் இவனைக் கனப்படுத்துவான்.
தண்டிக்கப்படும் ஊழியக்காரன்
அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்-க் கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால், அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான் (லூக் 12:45,46).
உண்மையுள்ள ஊழியக்காரன் உயர்த்தப்படுவான். உண்மையில்லாத ஊழியக்காரனோ தண்டிக்கப்படுவான். இந்த சம்பவம் மத்தேயு எழுதின சுவிசேஷத்திலும் எழுதப்பட்டிருக்கிறது. உண்மையில்லாத ஊழியக்காரன் தன் எஜமான் வர நாள் செல்லுமென்று தனக்குள்ளே சொல்லிக்கொள்வான். கிறிஸ்துவின் பொறுமையை ஒரு சிலர் தாமதம் என்று தவறாக வியாக்கியானம் பண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட வியாக்கியானம் கர்த்தருடைய பிள்ளைகளை சோர்வடையச் செய்யும், அவருடைய சத்துருக்களை உற்சாகப்படுத்தும்.
கர்த்தருடைய பிள்ளைகளை ஒரு சிலர் துன்புறுத்துகிறார்கள். அவர்களுக்கு கர்த்தரைக் குறித்தும் அவருடைய பிள்ளைகளைக் குறித்தும் தெளிந்த சிந்தனை இல்லை. அவர்கள் புசித்துக் குடித்து வெறித்திருப்பதினால் அவர்களுடைய புத்தி தடுமாறிப்போறிற்று. நியாயத்தில் சந்தோஷப்படாமல் இவர்கள் அநியாயத்தில் சந்தோஷப்படுகிறார்கள். கர்த்தர் வருவதற்கு நாள் செல்லுமென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டு, கர்த்தருடைய ஊழியக்காரர்களையும், ஊழியக்காரிகளையும் இவர்கள் அடித்து துன்புறுத்துகிறார்கள். அதன்பின்பு இவர்கள் புசித்துக் குடித்து வெறிக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய பாவத்தைக் குறித்தும் உணர்வடைவதில்லை. மற்றவர்களுடைய பாடுகளையும் வேதனைகளையும் வருத்தங்களையும் குறித்தும் சிந்தித்துப் பார்ப்பதுமில்லை.
துன்மார்க்கர் எல்லோருக்கும் மரணமும் நியாயத்தீர்ப்பும் நியமிக்கப்பட்டிருக்கிறது. துன்மார்க்கரின் நியாயத்தீர்ப்பு அவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பாக இருக்கும். அதிலும் விசேஷமாக கர்த்தருடைய ஊழியக்காரர்கள் உண்மையில்லாமல் துன்மார்க்கராக இருப்பார்களென்றால் அவர்கள் கடினமாக தண்டிக்கப்படுவார்கள். தாங்கள் தண்டிக்கப்படுவது துன்மார்க்கமான ஊழியக்காரர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஏனெனில் இவர்கள் நினையாத நாளிலும் அறியாத நேரத்திலும் கர்த்தருடைய வருகை இருக்கும். கர்த்தருடைய வருகை தாமதமாக இருக்குமென்று நினைத்து இப்படிப்பட்ட ஊழியக்காரர்கள், கர்த்தருக்கு உண்மையாக ஊழியம் செய்வதற்குப் பதிலாக உண்மையில்லாமல், மற்ற ஊழியக்காரர்களை துன்புறுத்துகிறார்கள்.
இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றிய சத்தியம் நமது இருதயத்திற்குள் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். சபை எடுத்துக் கொள்ளப்படுவதாக இருந்தாலும், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையாக இருந்தாலும் இந்தச் செய்தி நமது இருதயத்திற்குள் எப்போதும் தொனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
உண்மையில்லாத ஊழியக்காரன் செய்யும் பாவங்கள்
1. அவனுடைய இருதயத்தில் அவனுடைய எஜமானனைப் பற்றிய எண்ணம் இல்லை.
2. தன் வேலைக்காரனை அடிக்கிறான்.
3. பெருந்தீனி தின்கிறான்.
4. புசித்துக் குடிக்கிறான். (கலா 5:19-20; 1கொரி 6:9-11).
இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிற எஜமான் யாரென்று நமக்கு அறிவிக்கப்படவில்லை. நமக்கு எஜமான் இயேசு கிறிஸ்து. அவர் வரும்போது அவர் நம்மை விசாரிப்பார். அவருடைய நன்மைக்குப் பாத்திரவான்களாக நாம் நடந்து கொள்ள வேண்டும்.
அதிகமாய் கேட்கப்படும்
தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங்கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங்கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள் (லூக் 12:47,48).
தங்களுடைய கடமை என்ன என்பதைத் தெரிந்திருந்தும், அதை சரியாக நிறைவேற்றாமல் போவது மிகப்பெரிய பாவம். இவர்களுடைய தண்டனையும் அதிகமாக இருக்கும். இவர்களுடைய முடிவும் பரிதாபமாக இருக்கும். தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமல், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். அவனுடைய தண்டனை பல மடங்கு அதிகரிக்கும்.
ஒரு மனுஷன் செய்யும் தப்பிதம் இங்கு இரண்டுவிதமாக பிரிக்கப்படுகிறது. ஒன்று அறியாமல் செய்கிற தப்பிதம். மற்றொன்று துணிகரமாக செய்யும் தப்பிதம் (எண் 15:29,30). நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் கடமையை செய்யாமலிருப்பதும் பாவமே. நமது கடமை என்ன என்பதை அறியாமலிருந்தாலும், அதை செய்யாமலிருக்கும்போது அது நமக்கு பாவமாகவே கருதப்படுகிறது. இதற்கு ஒருவேளை தண்டனை குறைவாக கிடைத்தாலும், இதற்கும் தண்டனை உண்டு. தன் எஜமானனுடைய சித்தத்தை அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளை செய்தவன் சில அடிகள் அடிக்கப்படுவான். அடிகளிலிருந்து தப்பிக்கமாட்டான். இவனுடைய அறியாமை இவனுடைய தண்டனையில் ஒரு பகுதியை குறைத்துப்போடுகிறது. ஆயினும் அறியாமை ஒருபோதும் தண்டனையை முற்றிலுமாக நீக்கிப்போடுவதில்லை.
யூதர்கள் தங்கள் அறியாமையினால் இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள். இவர்கள் அறியாமையினால் செய்த பாவங்களை மன்னிக்குமாறு இயேசுகிறிஸ்து பிதாவானவரிடம் விண்ணப்பம் பண்ணுகிறார். தாங்கள் செய்கிறதை இவர்கள் இன்னதென்று அறியாமல் செய்வதாக இயேசுகிறிஸ்து பிதாவிடம் விண்ணப்பம் பண்ணி, இவர்கள் அறியாமல் செய்த தப்பிதங்களை இவர்களுக்கு மன்னிக்குமாறு இயேசுகிறிஸ்து இவர்களுக்காக பரிந்து பேசுகிறார்.
நம்முடைய கடமையைக் குறித்த தெளிவான ஞானம் நம்மிடம் இருக்க வேண்டும். கர்த்தருடைய ஊழியக்காரர்களுக்கு அவருடைய சித்தம் என்ன என்பது தெரிந்திருக்க வேண்டும். கர்த்தருடைய சித்தத்தை அறிந்திருந்தும், அதை செய்வதற்கு ஆயத்தமாகயிராமல், அவருடைய சித்தத்தின்படி செய்யாமல் இருக்கும் ஊழியக்காரர்கள் அதிகமாக தண்டிக்கப்படுவார்கள். தேவன் தமது நீதியினால் இப்படிப்பட்டவர்கள்மீது அதிக தண்டனையை சுமத்துவார். ஏனெனில் இவன் வேண்டுமென்றே தன்னுடைய அறிவுக்கு விரோதமாக பாவம் செய்கிறான். அதே வேளையில் தான் செய்யும் பாவத்தை, அது பாவமென்று தெரிந்திருந்தும், வேண்டுமென்றே துணிகரமாக செய்கிறான்.
இயேசுகிறிஸ்து இந்த சத்தியத்தை விவரிக்கும்போது ""எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்'' என்று கூறுகிறார். ஒரு சில ஊழியக்காரர்களுக்கு மற்ற ஊழியக்காரர்களைவிட அதிக ஞானமும், அதிக கல்வியும், அதிக பேச்சாற்றலும், வேதத்தில் அதிக அறிவும் இருக்கும். இவையெல்லாமே தேவனிடமிருந்து இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற தாலந்துகள். அதிகமாக பெற்றிருக்கிற இவர்கள் தேவனுக்காக அதிகமாக ஊழியம் செய்யவேண்டும். மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய் கேட்பார்கள். இதுபோலவே கர்த்தருடைய ஊழியக்காரர்களும் அதிகமான தாலந்துகளை தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளும்போது அவர்கள் தமக்கு அதிகமாக ஊழியம் செய்யவேண்டும் என்று தேவன் கேட்பார்.
நாம் ஏற்றுக் கொண்ட சத்தியத்தின் பிரகாரம் நமக்கு நியாயத்தீர்ப்பு உண்டு. இந்த ஊழியக்காரனுக்கு எஜமானுடைய சித்தம் தெரியும். இருந்தாலும் அவன் ஆயத்தமாக இல்லை. ஆகையினால் அவனுக்கு அநேக அடிகள் கிடைக்கிறது. யூதருடைய பிரமாணத்தின் பிரகாரமாக அவர்கள் 40 தடவைகள் அடித்தார்கள். (உபா 25:3) இதன்பின்பு, ஒவ்வொரு குற்றத்திற்கும் இதைப் போன்று யூதர்கள் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
யூதமார்க்கத்து பிரமாணத்தின் பிரகாரம் சிறிய தவறு செய்தவனுக்கு ஒருசில அடிகள் மட்டுமே கிடைக்கும். அதுபோலவே இந்த வசனத்தில் அறியாமல் தவறு செய்கிறவனுக்குச் சில அடிகள் மட்டுமே கிடைக்கிறது. எஜமானுடைய சித்தத்தைத் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு வரும்போது அதைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது தவறு. ஆவிக்குரிய ஜீவியத்தில், நமக்கு சத்தியம் அறிவிக்கப்படுகிறது. சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாமல் போவது நியாயத்தீர்ப்பு ஏதுவான குற்றமாகக் கருதப்படும்.