கவலைப்படுவதை குறித்த இயேசுவின் எச்சரிக்கை
கவலைப்படாதிருங்கள் லூக் 12:22-30
ஜீவனும் சரீரமும்
பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது (லூக் 12:22,23).
பொருளாசை அநேகரை பாவத்தில் விழ வைக்கும் கண்ணியாக இருக்கிறது. பொருளாசையினால் அநேகர் அழிந்து போய் உள்ளனர். ஆகையினால் இயேசுகிறிஸ்து இந்த சத்தியத்தை விளக்கும்போது ""இப்படியிருக்கிறபடியினால்'' என்னும் ஆரம்ப வார்த்தையைக் கூறி தமது உபதேசத்தை சீஷர்களிடம் கூறுகிறார். பொருளாசையைக் குறித்து விசுவாசிகள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். பொருளாசையில் நம்மை சிக்க வைக்கும் கண்ணிகளிலிருந்து நாம் விலகி ஓடவேண்டும்.
அப்போஸ்தலர் பவுல் பொருளாசையைக் குறித்து தனது நிருபத்தில் எச்சரித்து எழுதுகிறார். ""ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் இதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவ பக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு'' (1தீமோ 6:9-11).
இந்த உலகில் நாம் ஜீவிப்பதற்கு பல காரியங்கள் தேவைப்படுகிறது. உண்ண உணவும் உடுக்க உடையும் நமக்குத் தேவை. இவையெல்லாம் அடிப்படை காரியங்கள். ஆனாலும் இவற்றைக் குறித்தும் நாம் கவலைப்படாதிருக்க வேண்டுமென்று இயேசுகிறிஸ்து நமக்கு உபதேசிக்கிறார். நம்முடைய ஜீவனுக்காகவும், சரீரத்திற்காகவும் நாம் கவலைப்படக்கூடாது.
இதற்கு முந்திய உபதேசத்தில் பொருளாசையைக் குறித்தும், திரளான ஐசுவரியத்தைக் குறித்தும் இயேசுகிறிஸ்து எச்சரித்து உபதேசம் பண்ணினார். பொருளாசையினால் அதிக ஐசுவரியங்களை சேர்த்து வைப்போருக்கு என்னென்ன ஆபத்துக்களெல்லாம் வருவதற்கு வாய்ப்புள்ளது என்று இயேசு இதற்கு முன்பு எச்சரித்தார். களஞ்சியத்தை இடித்து, பெரிதாக கட்டினாலும், அவனுடைய ஜீவன் அவனை விட்டு எடுக்கப்பட்டால், அவன் சேகரித்தவைகளினால் அவனுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை. ஆனால் இந்த பகுதியில் கூறப்பட்டுள்ள உபதேசத்தில் இயேசுகிறிஸ்து திரளான ஐசுவரியத்தைப்பற்றி குறிப்பிடாமல், மனுஷருடைய அன்றாட தேவையான உணவுக்கும் உடைக்கும் நாம் கவலைப்படக்கூடாது என்று உபதேசம் பண்ணுகிறார். உணவுக்காகவும் உடைக்காகவும் கவலைப்படுவது பொருளாசையின் ஒரு பகுதியாகும். இந்த உலகில் சிறிய காரியமாக இருந்தாலும், இதுவும் மனுஷனை சோதனைக்குள் விழச்செய்து அவனை பாவம் என்னும் கண்ணியில் சிக்க வைத்துவிடுகிறது.
நம்முடைய அன்றாட ஜீவியத்திற்கு பல தேவைகள் இருந்தாலும், அவற்றில் சில அடிப்படைத் தேவைகளாக இருந்தாலும் நாம் அவற்றைக் குறித்தும் கவலைப்படக்கூடாது. என்னத்தை உண்போமென்று நம்முடைய ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போமென்று நம்முடைய சரீரத்திற்காகவும் நாம் கவலைப்படாதிருக்க வேண்டும். இதே எச்சரிப்பு மத்தேயு எழுதின சுவிசேஷத்திலும் கொடுக்கப்பட்டிருக்கிறது (மத் 6:25-34).
தேவன் நமக்கு ஏராளமான காரியங்களை ஏற்கெனவே செய்து முடித்திருக்கிறார். நம்முடைய தேவைகளுக்காக நாம் தேவனையே சார்ந்திருக்க வேண்டும். தேவனே நமக்கு ஜீவனையும் சரீரத்தையும் கொடுத்திருக்கிறவர். தேவன் கொடுத்திருக்கும் ஜீவனுக்கு உண்ண உணவைக் கொடுக்குமாறும், சரீரத்திற்கு உடுக்க உடையைக் கொடுக்குமாறும் நாம் தேவனிடமே விண்ணப்பம் பண்ணவேண்டும். அவர் நம்மை ஆதரிப்பார் என்னும் விசுவாசத்தோடு உணவுக்காகவும் உடைக்காகவும் நாம் கவலைப்படாதிருக்க வேண்டும்.
இயேசுகிறிஸ்துவின் உபதேசங்கள்
1. மாய்மாலத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். (லூக்கா 12:1)
2. எல்லா இரகசியங்களும் வெளிப்படுத்தப் படும். (லூக்கா 12:2-3).
3. மனுஷனுக்குப் பயப்படவேண்டாம். தேவனுக்கு மட்டுமே பயப்படவேண்டும். (லூக்கா 12:4-5).
4. தேவனுடைய பராமரிப்பு எல்லோருக்கும் கிடைக்கும். (லூக்கா 12:7)
5. கிறிஸ்துவை அறிக்கையிட வேண்டும். (லூக்கா 12:8-9).
6. பரிசுத்த ஆவியானவரைக் கனம்பண்ண வேண்டும். (லூக்கா 12:10).
7. பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்திருக்க வேண்டும். (லூக்கா 12:12)
8. மற்றவர்களுடைய வழக்குகளைத் தீர்த்து வைப்பதற்கு முன்நிற்கக்கூடாது. (லூக்கா 12:13-14)
9. பேராசையைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். (லூக்கா 12:15).
10. ஆஸ்தியைவிட ஜீவன் உயர்ந்தது. (லூக்கா 12:15)
11. ஆஸ்தியில் பாதுகாப்பு இல்லை. (லூக்கா 12:20).
12. ஐசுவரியத்தை நாடக்கூடாது. (லூக்கா 12:15-21)
13. ஐசுவரியத்தில் நம்பிக்கை வைக்கக்கூடாது. (லூக்கா 12:15-21).
14. நமது ஜீவன் நிலையற்றது. (லூக்கா 12:18-20).
15. மரணம் உறுதி. (லூக்கா 12:20).
16. நீண்டகாலம் ஜீவிக்கலாம் என்னும் மனுஷனுடைய திட்டம் வீணானது. (லூக்கா 12:18-21; சங் 91).
17. தேவனுக்குக் கணக்கொப்புவிக்க வேண்டும். (லூக்கா 12:20-21)
18. நமது ஐசுவரியங்களை ஞானமாக பயன்படுத்த வேண்டும். (லூக்கா 12:20).
19. சரீரத்தைவிட ஆத்துமாவை நன்றாகப் பராமரிக்க வேண்டும். (லூக்கா 12:18-21).
20. ஆவியை அழித்துப்போட்டு, ஐசுவரியத்தைத் தேடக்கூடாது. (லூக்கா 12:18-20).
21. ஐசுவரியத்தைத் தேடுவதற்காக ஜீவனை வீணாக்கக்கூடாது. முக்கியமான காரியங்களுக்கு நம் வாழ்வில் முன்னுரிமை தரவேண்டும். (லூக்கா 12:16-21)
22. இந்தப் பூமியில் ஐசுவரியங்களைச் சேர்த்து வைப்பது நமது ஆத்துமாவை அழித்துப்போடும். (லூக்கா 12:21,33-34).
23. நமது ஜீவியத்தின் தேவைகளுக்காகக் கவலைப்படக்கூடாது. (லூக்கா 12:22-30; மத் 6:25-34).
24. ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவன் விசேஷித்தது. (லூக்கா 12:23)
25. உடையைப் பார்க்கிலும் சரீரம் விசேஷித்தது. (லூக்கா 12:23).
26. பறவைகளைப் பார்க்கிலும் மனுஷர் விசேஷித்தவர். (லூக்கா 12:24).
27. கவலைப்படுவது பாவம். (லூக்கா 12:22,25-26).
28. காட்டுப்புஷ்பங்களைவிட தேவன் மனுஷர்மீது அதிக அக்கரையுள்ளவராக இருக்கிறார். (லூக்கா 12:27-28).
29. சந்தேகப்படாமல் ஜீவிக்க வேண்டும். (லூக்கா 12:28-29)
30. முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தைத் தேடவேண்டும். அப்போது உலக ஆசீர்வாதங்கள் நமக்குக்கூடக் கொடுக்கப்படும். (லூக்கா 12:29-31).
31. நம்முடைய எல்லாத் தேவைகளையும் தேவன் அறிந்திருக்கிறார். (லூக்கா 12:29-31).
32. வருங்காலத்திற்காகப் பயப்படக்கூடாது. (லூக்கா 12:32)
33. தம்முடைய பிள்ளைகளைத் தமது ராஜ்ஜியத்தில் சேர்ப்பது தேவனுக்குப் பிரியமான காரியம். (லூக்கா 12:32)
34. பரலோகத்தில் சேர்த்து வைக்கப் பட்டிருக்கும் பொக்கிஷங்கள் நிலைத்திருக்கும். (லூக்கா 12:33-34)
35. கிறிஸ்துவின் வருகைக்காக நாம் காத்திருக்கிற மனுஷரைப் போல இருக்க வேண்டும். (லூக்கா12:35-38)
36. கிறிஸ்துவின் வருகைக்காக நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். (லூக்கா 12:39-40)
37. கிறிஸ்துவின் வருகைக்காக உண்மையும், விவேகமும் உள்ள விசாரணைக்காரராக இருக்க வேண்டும். (லூக்கா 12:41-48)
38. நமக்கு விரோதமாக இருக்கிறவர்களோடு ஒப்புரவாக வேண்டும். (லூக்கா 12:49-53)
39. காலத்தை அறிந்து கொள்ளுங்கள் (லூக்கா 12:54-57)
40. எல்லா ஜனங்களோடும் சமாதானமாக ஜீவனம் பண்ணுங்கள். (லூக்கா 12:58-59).
பறவைகள்
காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள் (லூக் 12:24).
தேவன் இந்த உலகத்தில் ஏராளமான ஜீவராசிகளை சிருஷ்டித்திருக்கிறார். அவற்றில் மிகவும் சாதாரணமான சிருஷ்டிகளைக்கூட அவர் போஷித்து பராமரிக்கிறார். காகங்கள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை. ஆயினும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார். நாம் காகங்களை விடவும் மற்ற பறவைகளை விடவும் விசேஷித்தவர்களாக இருக்கிறோம். காட்டு புஷ்பங்கள் உழைக்கிறதுமில்லை நூற்கிறதுமில்லை. ஆகிலும் தேவன் அவற்றையும் உடுத்துவிக்கிறார். காட்டு புஷ்பங்களை உடுத்துவிக்கும் தேவன், நமக்கும் உடையைக் கொடுத்து உடுத்துவிப்பாரென்று நாம் அவரையே சார்ந்திருக்க வேண்டும்.
நம்முடைய விசுவாசம் அற்ப விசுவாசமாக இருக்கக்கூடாது. நம்முடைய விசுவாச பலவீனத்தினால் எல்லா காரியத்திற்காகவும் பதறக்கூடாது. நம்முடைய தேவைகளுக்காக தேவனையே விசுவாசித்து சார்ந்திருக்க வேண்டும். நமது தேவன் சர்வ வல்லமையுள்ளவர். அவரால் கூடாத காரியம் ஒன்றுமேயில்லை. அவர் அன்புள்ளவர். நம்மீது பிரியமாக இருக்கிறவர். நாம் அவருக்கு விசேஷித்தவர்கள். நம்மை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார் என்னும் விசுவாசத்தோடு, நமது உடைக்காகவும் உணவுக்காகவும் நாம் கவலைப்படுவதை விட்டு ஒழித்துவிடவேண்டும். தேவையில்லாத காரியங்களை கற்பனை செய்து பயப்படக்கூடாது. தேவனுக்குச் சித்தமான காரியம் மாத்திரமே நமது ஜீவியத்தில் நடைபெறும் என்று விசுவாசிக்க வேண்டும்.
மனுஷர் கவனித்துப் பார்க்க வேண்டிய காரியங்கள்
1. தேவன் (உபா 4:39; உபா 8:5)
2. தேவனுடைய நன்மை (1சாமு 12:24)
3. தேவனுடைய கிரியைகள் (யோபு 37:14; சங் 8:3)
4. இயேசு கிறிஸ்து (எபி 3:1; எபி 12:3)
5. ஒருவரையொருவர் (எபி 10:24)
6. கடந்த காலத்தையும், வருங்காலத்தையும் (உபா 32:7,29)
7. தங்களுடைய வழிகள் (ஆகாய் 1:5-7)
8. எறும்பையும், அதன் வழிகளையும் (நீதி 6:6)
9. காட்டுப்புஷ்பங்கள் (மத் 6:28)
10. காகங்கள் (லூக்கா 12:24)
கவலைப்படுகிறதினால்
கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான் (லூக் 12:25).
நாம் கவலைப்படுவதினால் நமக்கு ஒரு பிரயோஜனமுமில்லை. இதனால் நமக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. நமது விருப்பங்கள் நிறைவேறப்போவதில்லை. நம்முடைய கவலைகள் நமது முயற்சிகளை தடைபண்ணும். கவலைப்படுகிறதினால் நம்மில் யாரும் நம்முடைய சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டமுடியாது. நமது சுயபலத்தினால் ஒரு காரியத்தையும் நம்மால் செய்ய இயலாது. நம்மால் செய்ய முடியாத ஒரு காரியத்திற்காக, நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? மிகவும் அற்பமான காரியங்களைக்கூட நம்மால் செய்ய முடியாது. அப்படியிருக்கும்போது மற்ற காரியங்களுக்காக நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
நம்முடைய சரீர அளவை மாற்றும் வல்லமை நம்மிடத்திலில்லை. நம்முடைய சரீரத்தின் மீதே நாம் பெலனற்றவர்களாக இருக்கும்போது, மற்ற காரியத்தின்மீது நமக்கு நிச்சயம் பெலனிராது. நம்முடைய சரீரம் எப்படியிருந்தாலும் அதை அப்படியே அங்கீகரித்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக நம்முடைய சரீரத்தின் அளவை கூட்டவோ அல்லது குறைக்கவோ முயற்சி பண்ணுவது தேவையற்றது. தேவன் நமக்கு தம்முடைய சித்தத்தின் பிரகாரம் சரீர அளவைக் கொடுத்திருக்கிறார். தேவன் தீர்மானம் பண்ணி கொடுத்திருப்பதை நாம் மாற்றுவதற்கு முயற்சி பண்ணக்கூடாது. தேவன் நமக்கு எதைக் கொடுத்திருக்கிறாரோ அதை நல்ல முறையில் பயன்படுத்த பயிற்சி பெறவேண்டும். இதை விடுத்துவிட்டு சரீரத்திற்காக கவலைப்படுவதினால் நமக்கு ஒரு பிரயோஜனமும் உண்டாகாது.
கவலைப்படுகிறதென்ன
மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டி-ருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள் (லூக் 12:26-29).
நாம் இந்த உலகத்தில் ஜீவிப்பதற்கு உலகப் பிரகாரமான சில காரியங்கள் நமக்குத் தேவைப்படுகிறது. அவற்றில் சில அத்தியாவசியமான காரியங்கள். என்றாலும் கர்த்தருடைய பிள்ளைகள் அவற்றைப் பற்றிக்கூட கவலைப்படக்கூடாது. என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று நாம் கேளாமலும், சந்தேகப்படாமலும் இருக்கவேண்டும். நம்முடைய இருதயத்தை கவலையினாலும் சந்தேகத்தினாலும் நிரப்பக்கூடாது.
இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் போஜனத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கக்கூடாது. அவற்றை நாடிப் போகக்கூடாது. அதற்குப் பதிலாக தேவனிடம் தங்களுக்குத் தேவையான அன்றன்றுள்ள ஆகாரத்தை தருமாறு விண்ணப்பம்பண்ணி, அவருடைய சமுகத்தில் விசுவாசத்தோடு ஜீவிக்கவேண்டும்.
தேவனுடைய பிள்ளைகளுக்கு தெளிந்த சிந்தனை வேண்டும். இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலை தடுமாறுவான். அவனுடைய மனம் அலைபாயும். காற்றில் அடித்துச் செல்லப்படும் சிறு தூசியைப்போல அவனுடைய மனது எல்லா இடத்திற்கும் அலைபாய்ந்து செல்லும். ஒவ்வொரு முறை காற்று அடிக்கும்போதும் சிறிய தூசிகள் அங்கும் இங்கும் பறந்து செல்வதுபோல, இவனும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பான். ஓரிடத்தில் நிலைத்து நிற்கமாட்டான்.
தேவனுடைய பிள்ளைகளாகிய நாமோ கர்த்தரிடத்தில் விசுவாசம் வைத்து நிலைத்திருக்க வேண்டும். நம்முடைய விசுவாசம் நமக்கு ஆத்தும நங்கூரமாக இருக்கிறது. நம்முடைய இருதயத்தை தேவனுடைய சிந்தனைகளினால் நிரப்பிக்கொள்ள வேண்டும். நமக்கு என்ன நேரிடுமோ என்று பயப்படுவதற்குப் பதிலாக, நமக்கு எது நேர்ந்தாலும் அது கர்த்தரின் சித்தத்தின் பிரகாரமாகவே நேரிடும் என்று விசுவாசித்து அமைதியோடிருக்க வேண்டும்.
ஒரு சில விசுவாசிகளுக்கு விசுவாசமும் இருக்கும். பயமும் இருக்கும். விசுவாச குறைவினால் பயம் வருகிறது. ஒரு சிலர் விசுவாசத்திற்கும் பயத்திற்கும் நடுவே போராடிக்கொண்டிருப்பார்கள். கர்த்தரை விசுவாசிக்கும் தேவனுடைய பிள்ளைகளுக்கு பயம் தேவையில்லை. விசுவாசமே தேவை.
தேவனையும், அவருடைய நீதியையும் நாம் ஆர்வத்தோடு தேடவேண்டும். இதற்கே முக்கியத்துவம் தரவேண்டும். இதைத் தேடும்போது மற்றவைகளெல்லாம் நமக்குக் கூடக் கொடுக்கப்படும்.
சந்தேகப்படுவது புறஜாதியாருடைய பழக்கம். அவர்கள் மாயவித்தைகளையும், அஞ்சனம் பார்க்குதலையும், குறிசொல்லுவதையும், சந்தேகத்தோடே செய்வார்கள். தாங்கள் கூறியது நிறைவேறுமா, நிறைவேறாதா என்னும் நிச்சயம் அவர்களிடத்தில் இராது. இவை பிசாசின் கிரியைகள். பிசாசு பொய் கூறும்.
தடைபண்ணப்பட்டிருக்கிற பழக்க வழக்கங்கள்
1. மந்திரவித்தை (யாத் 7:11,22; யாத் 8:7,18)
2. சூனியம் (யாத் 22:18; உபா 18:10)
3. சூனியம் (யாத் 7:11; ஏசா 47:9,12)
4. நாள்பார்த்தல் (ஏசா 2:6; தானி 2:27)
5. குறிசொல்லுதல் (எண் 22:7; எண் 23:23)
6. சூனியம் (யாத் 22:18; லேவி 19:31)
7. செத்தவர்களிடத்தில் குறிகேட்டல் (உபா 18:11; ஏசா 8:19; 1சாமு 28)
8. மந்திரவாதம் ஆதி 41:8,24; யாத் 7:11,22)
9. சன்னதம் கூறுதல் (ஏவல் செய்தல்) (உபா 18:11; ஏசா 19:3)
10. ஜோசியம் (ஏசா 47:13)
11. ஜோசியம் (லேவி 19:26; லேவி 18:10)
12. ஜாதகம் (ஏசா 47:13; எரே 10:2)
கர்த்தரை நாம் விசுவாசிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவருடைய ஆலோசனையைக் கேட்க வேண்டும். இப்படிச் செய்வதற்குப் பதிலாகப் புறஜாதியார்கள் பிசாசுகளையும், அசுத்த ஆவிகளையும் நம்பி, அவற்றின் ஆலோசனையைக் கேட்கிறார்கள். அவற்றின் முடிவு அழிவு.
உலகத்தார்
இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார் (லூக் 12:30).
உலகப் பிரகாரமான ஜனங்கள் உணவையும் உடையையும் நாடித் தேடுகிறார்கள். உலகத்தார் உலகக் காரியங்களைக் குறித்து மாத்திரமே சிந்தனை செய்வார்கள். இந்த உலகத்தில் புசித்துக் குடிப்பது மாத்திரமே அவர்களுக்கு பிரதான காரியமாக தெரியும். இம்மைக்குரிய காரியங்களில் கவனம் செலுத்தும் இவர்கள் மறுமையைப்பற்றி சிந்திக்கமாட்டார்கள். விசுவாசிகளாகிய நாம் இந்த உலகத்தாரைப்போல உணவையும் உடையையும் நாடித் தேடக்கூடாது.
நமக்கு உணவும் உடையும் வேண்டியவைகள் என்று நம்முடைய பரம பிதா அறிந்திருக்கிறார். நம்முடைய உலகப்பிரகாரமான தேவைகள் சந்திக்கப்படுவதில் தாமதம் உண்டாகும்போது, நாம் அந்த சூழ்நிலையிலும் தேவனுடைய பிள்ளைகளுக்கு ஏற்றாற்போலவே சிந்திக்க வேண்டும், செயல்படவேண்டும். உலகக் காரியங்களில் நாம் உலகத்தாரைப்போல சிந்திக்கப் பழகிவிடக்கூடாது. நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் இயேசுகிறிஸ்துவுக்குள் மனரம்மியமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
நம்முடைய ஜீவனுக்கும், சரீரத்திற்கும் தேவையானதை எப்படி பெற்றுக்கொள்வது என்னும் கவலை நமக்குத் தேவையற்றது. ஏனெனில் இவைகள் நமக்கு வேண்டியவைகள் என்று நம்முடைய பரமபிதா அறிந்திருக்கிறார். தேவன் தாமே தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தினால் நம்முடைய தேவைகள் அனைத்தையும் சந்திப்பார். அவர் நமது பரமபிதாவாக இருக்கிறபடியினால் நமக்குத் தேவையான நல்ல ஈவுகள் அனைத்தையும் நமக்குக் கொடுத்து நம்மை ஆதரிப்பார்.
பொக்கிஷமும் இருதயமும் லூக் 12:31-34
தேவனுடைய ராஜ்யம்
தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் (லூக் 12:31).
கர்த்தருடைய பிள்ளைகள் என்னத்தை உண்போமென்றும் என்னதைக் குடிப்போமென்றும் நாடித் தேடுவதற்குப் பதிலாக தேவனுடைய ராஜ்யத்தையே தேடவேண்டும். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கிக்க வேண்டியவர்கள். பிரசங்கிக்க வேண்டியவர்களே இதைத் தேடாமல் உலகத்தாரைப்போல உணவையும் உடையையும் தேடுவது முறையல்ல. இரட்சிக்கப்படவேண்டிய எல்லா ஆத்துமாக்களும் தேவனுடைய ராஜ்யத்தையே தேடவேண்டும். தேவனுடைய ராஜ்யத்தில் மாத்திரமே நம்முடைய ஆத்துமாக்களுக்கு பாதுகாப்பு நியமிக்கப்பட்டிருக்கிறது. நாம் தேவனுடைய ராஜ்யத்தைத் தேடும்போது, இவைகளெல்லாம் நமக்குக் கூடக்கொடுக்கப்படும். நம்முடைய ஆத்துமாக்களை முழுக்காவலோடும் காத்துக்கொள்ளவேண்டும். நம்முடைய எல்லாக் காரியங்களுக்கும் தேவனையே சார்ந்திருக்க வேண்டும்.
பயப்படாதே, சிறுமந்தையே
பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார் (லூக் 12:32).
இந்த உலகத்தில் தேவப்பிள்ளைகளாகிய நாம் உணவையும் உடையையும் தேடுவதற்குப் பதிலாக, மிகவும் முக்கியமான காரியமாகிய தேவனுடைய ராஜ்யத்தையே தேடவேண்டும். தேவனுடைய ராஜ்யமே விசுவாசிகளுடைய நம்பிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்க வேண்டும்.
நமக்கு ஏதாவது தீங்கு வந்துவிடுமோ என்று நமக்கு நாமே பயப்படும்போது, இந்த பயத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான உபாயத்தைத் தேடவேண்டும். பொதுவாக எல்லா பயங்களுமே மனுஷருடைய பலவீனத்தினாலும், சொந்தக் கற்பனையினாலுமே வருகிறது. ஆகையினால் இயேசுகிறிஸ்து தமது பிள்ளைகளாகிய நம்மைப் பார்த்து ""பயப்படாதே, சிறு மந்தையே'' என்று கூறுகிறார். நமக்கு ராஜ்யத்தைக் கொடுக்க நம்முடைய பிதா பிரியமாக இருக்கிறார். இந்த ஆறுதலான வார்த்தை மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் குறிப்பிடப்படவில்லை.
இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகள் இந்த உலகத்தில் ஒரு சிறிய மந்தையைப்போல் இருக்கிறார்கள். தேவனுடைய சபையானது இந்த உலகத்தின் மிகப் பெரிய வனாந்தரத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஒரு சாதாரண திராட்சத்தோட்டம் போலவே காணப்படுகிறது.
கர்த்தருடைய பிள்ளைகள் இந்த உலகத்தில் சிறிய மந்தையாக இருக்கலாம். சத்துருக்கள் எண்ணிக்கையில் திரளாக இருக்கலாம். இருப்பினும் விசுவாசிகளாகிய நாம் பயப்படக்கூடாது என்பதே கிறிஸ்துவின் சித்தமாகும். ஆகையினால்தான் இயேசுகிறிஸ்து நம்மைப்பார்த்து ""பயப்படாதே சிறு மந்தையே'' என்று கூறுகிறார். நாம் சிறு மந்தையாக இருந்தாலும் நம்மை மேய்க்கும் பிரதான மேய்ப்பராகிய நல்ல மேய்ப்பர். சர்வ வல்லமையுள்ள தேவன். அவருடைய பாதுகாப்பிலும், வழிநடத்துதலிலும் நடக்கும் நமக்கு எப்போதுமே பாதுகாப்பு உண்டு. ஆகையினால் நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
கிறிஸ்துவின் சிறு மந்தையில் இடம் பெற்றுள்ள எல்லோருக்குமே தேவன் ஒரு ராஜ்யத்தை ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிறார். இது கர்த்தருடைய பிள்ளைகளுக்கு மட்டுமே உரியது. இயேசுகிறிஸ்துவின் சிறு மந்தையில் இடம் பெற்றிருக்கிற நாம், பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவோம் (1பேது 5:4).
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு பிதாவாகிய தேவன் ராஜ்யத்தைக் கொடுக்க பிரியமாயிருக்கிறார். தேவனுடைய பிரியத்தினாலேயே இது நமக்கு கொடுக்கப்படுகிறது. தேவனுடைய ராஜ்யம் நமக்கு கடனாக கொடுக்கப்படுவதில்லை. தேவனுடைய கிருபையினாலே இது நமக்கு ஈவாக கொடுக்கப்படுகிறது.
தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்போம் என்னும் நம்பிக்கையுள்ளவர்கள் பயத்தை புறம்பே தள்ளவேண்டும். இந்த உலகத்தில் கிறிஸ்துவின் சிறு மந்தையாக இருக்கும் நம்மிடத்தில் மனுஷர் பயம் காணப்படக்கூடாது. தேவபயம் மாத்திரமே நம்மிடத்தில் நிறைந்திருக்க வேண்டும். பிரச்சனைகளும், போராட்டங்களும், உபத்திரவங்களும் நமக்கு வருமோ என்று பயந்துவிடக்கூடாது. பிரச்சனைகள் நமக்கு வரலாம். உபத்திரவங்கள் நமக்கு வரலாம். ஆயினும் இந்தப் பிரச்சனைகளும் உபத்திரவங்களும் நமக்கும் தேவனுடைய ராஜ்யத்திற்கும் இடையில் இடையூறாக இருக்கக்கூடாது. தேவப் பிள்ளைகளாகிய நாம் பயத்தை புறம்பே அகற்றி, தேவனுடைய ராஜ்யத்தையே விசுவாசத்தோடு நோக்கிப் பார்க்கவேண்டும். தேவனுடைய அன்பிலிருந்து நம்மை எந்த சக்தியினாலும் பிரிக்க முடியாது. நாம் பயந்து நடுங்குவது, தேவனுடைய அன்பின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு தடையாக இருக்கக்கூடாது.
பரலோகத்திலே பொக்கிஷம்
உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும் (லூக் 12:33,34).
நாம் பரலோகத்திலே அழியாத பொக்கிஷங்களை நமக்கு சம்பாதித்து வைக்கவேண்டும். இதற்காக நாம் இந்த பூமியில் ஒரு சில காரியங்களை செய்யவேண்டுமென்று இயேசுகிறிஸ்து நமக்கு கட்டளை கொடுக்கிறார்.
முதலாவதாக நமக்குள்ளவைகளை விற்று பிச்சை கொடுக்க வேண்டும். நமக்கு பயன்படாத பொருட்கள், தேவைப்படாத பொருட்கள் ஆகியவற்றை நமக்காக சேமித்து வைக்காமல், அவற்றை விற்று தேவையுள்ளவர்களுக்கு உதவிபுரிய வேண்டும். நம்மிடத்தில் நமது தேவைக்கு அதிகமாக இருக்குமானால் அதையும் விற்று ஏழைகளுக்கு பிச்சைக்கொடுக்கலாம். நம்மிடத்தில் நமக்குள்ளவைகள் கிறிஸ்துவின் ஊழியத்தை செய்வதற்கு இடையூறாக இருக்குமானால் அதை விற்று பிச்சை கொடுக்க வேண்டும். பணத்தை சேமித்து வைக்கவேண்டும் என்பதற்காக நமக்குள்ளவைகளை அதிக விலைக்கு விற்கக்கூடாது. அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்பதற்காக இயேசுகிறிஸ்து நம்மை விற்கச் சொல்லவில்லை. பிச்சை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நமக்குள்ளவைகளை இயேசுகிறிஸ்து விற்கச் சொல்கிறார். பரிசுத்தமான சிந்தையோடு நாம் கொடுக்கும் பிச்சைகள், பரலோகத்தில் நமக்கு பொக்கிஷமாக சேமித்து வைக்கப்படும்.
பழமையாய் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே நமக்கு சம்பாதித்து வைக்கவேண்டும். நாம் பரலோகத்திற்குப் போகும்போது தேவனுடைய கிருபை நம்மோடு கூடவரும். ஏனெனில் தேவக்கிருபை நம்முடைய ஆத்துமாவோடு பின்னி பிணைந்திருக்கிறது. இந்த பூமியில் நாம் செய்யும் நற்கிரியைகளும் நம்மோடுகூட பரலோகத்திற்கு வரும். இவையே நமக்கு பரலோகத்தில் பொக்கிஷமாக இருக்கும். நாம் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளும்போது இவை நம்மை பரலோகத்தில் ஐசுவரியவான்களாக்கும்.
பரலோகத்தில் நாம் சம்பாதித்து வைக்கும் பொக்கிஷம் ஒருபோதும் குறைந்துபோவதில்லை. பரலோகத்திலுள்ள பொக்கிஷத்தை நாம் நித்திய காலமாக செலவு பண்ணலாம். எவ்வளவுதான் செலவு செய்தாலும் பரலோகத்தில் நாம் சம்பாதித்து வைக்கும் பொக்கிஷம் ஒருபோதும் குறைந்துபோகாது.
பரலோகத்திலுள்ள பொக்கிஷம் குறைந்து போகாதது போல, அங்கே அதை யாரும் திருடவும் முடியாது. திருடனுக்கு பரலோகத்தில் இடமில்லை. பரலோகத்தில் நாம் சம்பாதித்து வைக்கும் பொக்கிஷத்தை எந்த சத்துருவும் அபகரித்துக் கொள்ள முடியாது.
பரலோகத்தில் நாம் சம்பாதித்து வைக்கும் பொக்கிஷத்தை பூச்சி கெடுத்துப்போடாது. இந்த பொக்கிஷத்தை நாம் செலவு செய்யும்போது எதுவுமே வீணாய் போகாது. நாம் இந்த பூமியில் ஜீவிக்கும்போது, நம்முடைய இருதயம் பரலோகத்தில் இருந்தால்தான், நம்மால் பரலோகத்திலே நமக்கு பொக்கிஷத்தை சம்பாதித்து வைக்கமுடியும். நாம் இந்த பூமியில் ஜீவிக்கும்போது, நம்முடைய இருதயம் இந்த உலகத்தின் மீதும், இந்த உலகக் காரியங்களின் மீதும் பதிந்திருக்குமானால், நம்மால் பரலோகத்தில் பொக்கிஷத்தை சம்பாதிக்க முடியாது. பூமியில் நாம் சம்பாதித்து வைத்திருக்கும் பொக்கிஷம் நமக்கு பயத்தையே கொடுக்கும். இந்த உலகத்தார் இந்த உலகத்தைவிட்டு பிரிந்து செல்லும்போது இந்த உலகத்தில் அவர்கள் சம்பாதித்து வைத்திருக்கும் பொருட்கள் எதுவும் அவர்களோடு கூட வராது. அவர்கள் போனபின்பு அவர்களுடைய பொக்கிஷங்களை யார் அனுபவிப்பார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.
கர்த்தர் தடை பண்ணியிருக்கும் ஐசுவரியம் நம்மிடத்தில் இருக்குமென்றால் அதை விற்று, பிச்சை கொடுத்து விடவேண்டும். நமக்குத் தேவைப்படும் வீடு, வாசலை விற்று, பிச்சை கொடுக்க வேண்டுமென்று இந்த வசனம் கூறவில்லை. (லூக்கா 12:34) தன்னுடைய குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு மனுஷனுக்கு உண்டு. (1தீமோ 5:8) நம்மிடத்தில் பேராசை இருக்கக்கூடாது என்பதே இங்கு வலியுறுத்திக் கூறப்படும் சத்தியமாகும். (லூக்கா 12:13-21)
அரசாங்கத்தின் கஜானாக்களில் பொக்கிஷங்களைப் பணப்பைகளில் சேர்த்து, மூட்டையாகக் கட்டியிருப்பார்கள். பணப்பைகளைப் பற்றிய குறிப்பு சில வேதவசனங்களில் காணப்படுகிறது. (2இராஜா 5:23; யோபு 14:17; யோவான் 12:6) நாம் இந்த உலகத்தில் ஐசுவரியங்களைச் சேர்ப்பதற்கு முக்கியத்துவம் தராமல் பரலோகத்தில் ஐசுவரியங்களைச் சேர்ப்பதற்கே முக்கியத்துவம் தரவேண்டும். ஏனெனில் நம்முடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே நம்முடைய இருதயமும் இருக்கும்.