70 சீஷர்களும் ஊழியத்தை முடித்து திரும்பி வருதல்

 

70 சீஷர்களும் ஊழியத்தை முடித்து திரும்பி வருதல்


எழுபது பேரும் திரும்பிவந்து


பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள் (லூக் 10:17).  


இயேசுகிறிஸ்து வேறே எழுபது பேரை நியமித்து அவர்களை ஊழியத்திற்கு அனுப்புகிறார். அந்த எழுபது பேரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்தை நிறைவேற்றிவிட்டு சந்தோஷத்தோடே இயேசுகிறிஸ்துவிடம் திரும்பி வருகிறார்கள். தங்களுடைய பிரயாணக் களைப்பைக்குறித்து  முறையிடவில்லை. ஊழியத்தில் தங்களுக்கு ஏற்பட்ட வெற்றியை நினைத்து சந்தோஷப்படுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே பிசாசுகளும் அவர்களுக்கு கீழ்ப்படிவது, அவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கிற்று. இயேசுகிறிஸ்துவிடம் திரும்பி வந்தவுடன் முதல் காரியமாக ""ஆண்டவரே உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது'' என்று கூறுகிறார்கள். 


தங்களுடைய ஊழியத்தில் கிடைத்த வெற்றிக்கு அவர்கள் இயேசுகிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறார்கள். தாங்கள் இயேசுவின் நாமத்தினால் பிசாசுகளைத் துரத்தியதை அங்கீகரிக்கிறார்கள். சாத்தான்மீது நமக்குக் கிடைக்கும் வெற்றிகளெல்லாம், இயேசுகிறிஸ்துவிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட வல்லமையினால் கிடைத்த வெற்றிகளாகும். நம்முடைய ஆவிக்குரிய சத்துருக்களை நம்முடைய சுயபலத்தினால் சந்திக்காமல், இயேசுவின் நாமத்தினால் சந்தித்து, அவர்களை மேற்கொள்ள வேண்டும். 


நாம் இயேசுவின் நாமத்தினால் ஒரு வேலையைச் செய்து முடிக்கும்போது அவருடைய நாமத்திற்குரிய கனத்தையும் மரியாதையையும் நாம் அவருக்குச் செலுத்த வேண்டும். சீஷர்கள் மிகுந்த ஆச்சரியத்தோடு இயேசுவின் நாமத்தினால் பிசாசுகள் தங்களுக்கு கீழ்ப்படிவதை இயேசுகிறிஸ்துவிடம் அறிவிக்கிறார்கள். பிசாசுகளே நமக்கு கீழ்ப்படியும்போது நமக்கு எதிராக நிற்பவன் வேறு யாரும் இல்லை. 


சாத்தான் விழுகிறான்


 அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்தி-ருந்து விழுகிறதைக் கண்டேன்  (லூக் 10:18). 


எழுபது பேரும் தங்களுடைய ஊழியத்தில்  கிடைத்த வெற்றியை இயேசுகிறிஸ்துவிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். இயேசுகிறிஸ்துவோ  தமது கண்களால் கண்ட சாட்சியின் மூலமாக அவர்களுடைய வார்த்தைகளை அங்கீகரிக்கிறார். சாத்தான் மின்னலைப்போல  வானத்திலிருந்து விழுகிறதை தாம் கண்டதாக இயேசுகிறிஸ்து அந்த எழுபது பேரிடம் கூறுகிறார். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்போது, சுவிசேஷ வார்த்தைக்கு முன்பாக சாத்தானும் அவனுடைய ராஜ்யமும் கீழே விழும். வானத்திலிருந்து ஒரு மின்னல் கீழே விழுவதைப்போல சாத்தான் கீழே விழுவான். மின்னல் கீழே விழும்போது அது சடுதியாக இருக்கும். கீழே விழுந்த மின்னல் மறுபடியும் வானத்திற்கு ஏறிப்போகாது. அதுபோலவே கீழே விழுந்த சாத்தானால் மறுபடியும் எழும்பி நிற்கமுடியாது. 


மனுஷருடைய இருதயத்தின் சிங்காசனத்திலிருந்து சாத்தான் எப்பொழுது கீழே விழுகிறானோ, அப்போதே அவன் வானத்திலிருந்து விழுந்துவிடுகிறான். சுவிசேஷம் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் சாத்தானுடைய ராஜ்யம் கீழே விழுவதை இயேசுகிறிஸ்து காண்கிறார். இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தானை சுவிசேஷத்தின் வல்லமை துரத்திவிடுகிறது. 


சாத்தான் மின்னலைப்போல வானத்தி-ருந்து விழுகிறான். ஆதாமின் காலத்திற்கு முன்பாக சாத்தான் வானத்திலிருந்து கீழே தள்ளப்பட்டான்.          ஆதாமின் வீழ்ச்சிக்குப் பிறகு சாத்தான் மறுபடியும் தன் கிரியைகளை மனுஷர் மத்தியில் நடப்பித்து வருகிறான். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக அவன் மறுபடியும் பாதாளத்தில் தள்ளப்படுவான். (வெளி 12:7-12)


சர்ப்பங்களை மிதிக்கவும்


இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது (லூக் 10:19). 


தாம் ஊழியத்திற்கு நியமித்த இந்த எழுபது பேருடைய ஊழிய எல்லையை இயேசுகிறிஸ்து விஸ்தாரம்பண்ணுகிறார். சர்ப்பங்களை மிதிக்கும் அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுக்கிறார். சாத்தானுக்கு விரோதமாக அவர்கள் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜெயம் பெற்றிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து இப்போது அவர்களுக்கு மேலும் அதிக வல்லமையைக் கொடுக்கிறார். சர்ப்பங்களையும் தேள்களையும்  மிதித்து அவற்றை அழிக்கும் வல்லமையை தமது ஊழியக்காரர்களுக்குக் கொடுக்கிறார். பிசாசுகளும் அசுத்த ஆவிகளும் பழைய சர்ப்பமாக இங்கு வர்ணிக்கப்படுகிறது. பிசாசுகள் இயேசுவின் நாமத்தினால் ஊழியக்காரர்களுக்கு இப்பொழுது கீழ்ப்படிவதுபோல, இனிமேலும் கீழ்ப்படியும். 


இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியக்காரர்களுக்கு தங்களை பாதுகாக்கும் அதிகாரத்தையும் கொடுக்கிறார். ஒன்றும் அவர்களை சேதப்படுத்தமாட்டாது. சர்ப்பமாக இருந்தாலும், தேள்களாக இருந்தாலும் கர்த்தருடைய ஊழியக்காரர்களை ஒன்றும் சேதப்படுத்தாது. துன்மார்க்கர்கள் நமக்கு சர்ப்பங்களைப்போல் இருக்கலாம். நாம் ஒருவேளை தேள்களைப்போல கொட்டும்  துன்மார்க்கருக்கு மத்தியில் வாசம்பண்ணலாம். நாம் அவற்றின் வல்லமையை மிதித்து, அவற்றை மேற்கொள்ளும் அதிகாரத்தை இயேசுகிறிஸ்து நமக்குக் கொடுத்திருக்கிறார். சர்ப்பங்களும் தேள்களும் நம்மைப் பார்த்து சீறலாம். ஆனால் அவற்றால் நம்மை சேதப்படுத்த முடியாது. 


சாத்தானுடைய அந்தகார சக்திகளை மேற்கொள்வதற்கு இயேசு கிறிஸ்து தமது பிள்ளைகளுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்.   சர்ப்பங்கள், தேள்கள் என்பவை சாத்தானுடைய அந்தகார வல்லமையைக் குறிக்கும். இவற்றை விசுவாசிகள் மேற்கொள்ளலாம்.  


பரலோகத்தில் எழுதியிருக்கிறது


ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்  (லூக் 10:20).


ஊழியத்தை முடித்துவிட்டு எழுபது பேரும் சந்தோஷத்தோடே இயேசுகிறிஸ்துவிடம் திரும்பி வருகிறார்கள். இயேசுகிறிஸ்து அவர்களுடைய சந்தோஷத்தை சரியான பாதையில் வழிநடத்துகிறார். ஆவிகள் அவர்களுக்கு கீழ்ப்படிகிறதற்காக அவர்கள் சந்தோஷப்பட வேண்டியதில்லை. இதற்காக மாத்திரம் அவர்கள்  பிரதானமாக சந்தோஷப்படக்கூடாது. இந்த சந்தோஷத்தைவிட அவர்களுக்கு வேறொரு விசேஷமான சந்தோஷம் நியமிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறது. விசுவாசத்தின் மூலமாக அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள். தங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதியிருப்பதற்காக  இயேசுவின் பிள்ளைகள் சந்தோஷத்தினால் நிரம்பியிருக்க வேண்டும். ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவப்புஸ்தகத்தில் நம்முடைய பெயர்கள் எழுதப்பட்டிருப்பது நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய சிலாக்கியம். இந்த சிலாக்கியத்திற்காகவே நாம் சந்தோஷப்பட வேண்டும். 


தேவனுடைய பிள்ளைகளாக இருக்கும் சிலாக்கியம் மற்ற எல்லா சிலாக்கியங்களையும்விட உன்னதமானது. அற்புதங்களைச் செய்யும் வல்லமைகளைவிட, தேவனுக்கு பிள்ளைகளாக இருப்பது மிகவும் மேன்மையானது. ஏனெனில் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் பிசாசுகளைத் துரத்தியவர்களைக்கூட, இயேசுகிறிஸ்து தமது நியாயத்தீர்ப்பு நாளில், அவர்களை அங்கீகரியாமல் புறக்கணித்து துரத்திவிடுவார். ஆனால் பரலோகத்தில் பெயர்கள் எழுதப்பட்டிருக்கிறவர்களோ ஒருபோதும் அழிந்துபோவதில்லை. நாம் தேவனுடைய ஆடுகளாக இருக்கிறோம். தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு அவர் நித்திய ஜீவனைக்கொடுக்கிறார். பரிசுத்தமான அன்பே  பிரதானம். தேவன் தமது தெய்வீக அன்பினால் நம்மை தெரிந்தெடுத்து, நம்முடைய பெயர்களை பரலோகத்தில் எழுதியிருக்கிறார். அதற்காக நாம் சந்தோஷப்பட வேண்டும். 


ஆவிகள் நமக்குக் கீழ்ப்படிகிறது. இது சந்தோஷமான காரியமே என்றாலும் நமது சந்தோஷத்திற்கான ஆதாரம் இதுவாக இருக்கக்கூடாது. நமது பெயர்கள் பரலோகத்தில் கர்த்தருடைய ஜீவப்புஸ்தகத்தில் எழுதப் பட்டிருக்கிறது. நாம் அதற்காகச் சந்தோஷப்பட வேண்டும் நம் மூலமாக கர்த்தர் அற்புதம் செய்யும்போது கர்த்தருடைய சமூகத்தில் நம்மை நாமே தாழ்த்த வேண்டும். நமக்குள் பெருமை வந்துவிடக்கூடாது. விசுவாசிகள் மிகுந்த எச்சரிப்போடு இருக்க வேண்டும்.


பிதாவின்ƒதிருவுளத்துக்கு பிரியமானது


 அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும்  மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது        (லூக் 10:21). 


இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரம் பண்ணுகிறார். இந்த சம்பவம் மத்தேயு சுவிசேஷத்திலும் எழுதப்பட்டிருக்கிறது (மத் 11:25-27). லூக்கா இந்த சம்பவத்தை எழுதும்போது ""அந்த வேளையில்'' என்னும் வார்த்தையை இங்கு குறிப்பிடுகிறார். அந்த வேளை என்பது சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுந்ததை இயேசுகிறிஸ்து கண்ட வேளையாகும். அந்த வேளையில் இயேசு தமது ஆவியிலே களிகூருகிறார். 


இயேசுகிறிஸ்துவின் சந்தோஷம் உறுதியானது. மெய்யானது. அவர் தமது ஆவியிலே களிகூருகிறார். பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரம் பண்ணுவதற்கு முன்பாக, இயேசுகிறிஸ்து தமது ஆவியிலே களிகூருகிறார்.  பரிசுத்தமான சந்தோஷமுள்ளவர்களால்தான் தேவனை மெய்யாகவே ஸ்தோத்திரம் பண்ணமுடியும். பரிசுத்தமான சந்தோஷமே பிதாவைத் துதிக்கும் நமது ஸ்தோத்திர பலிகளுக்கு ஆதரமாக இருக்கிறது. 


இயேசுகிறிஸ்து இரண்டு காரியங்களுக்காக பிதாவைத் துதிக்கிறார். குமாரன் மூலமாக பிதா வெளிப்படுத்தியிருக்கும் காரியத்திற்காகவும், பிதாவினால் தமக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கும் சகல காரியத்திற்காகவும் இயேசுகிறிஸ்து பிதாவைத் துதிக்கிறார். 


இயேசு பிதாவைத் துதிக்கும்போது ""பிதாவே! வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே!'' என்று கூறி அவரைத் துதிக்கிறார்.  மனுஷர்கள் இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனோடு ஒப்புரவாகுவது தேவனுடைய தெய்வீக ஆலோசனையாகும். இந்த சத்தியம் தேவனுடைய பிள்ளைகளில் சிலருக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்களில்   சிலர், இந்த இரட்சிப்பின் சத்தியத்தை, ஒப்புரவாகுதலின் சத்தியத்தை மற்றவர்களுக்கு உபதேசம் பண்ணும் அளவிற்கு தகுதி பெற்றிருக்கிறார்கள். தேவனுடைய இரட்சிப்பின் சத்தியம் உலகத்தோற்றம் முதற்கொண்டு மறைவாகயிருந்தது. ஆனால் இப்போதோ அந்த சத்தியம் தேவனால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 


தமது இரட்சிப்பின் சத்தியத்தை தேவன் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்திருக்கிறார். ஆனால் பாலகருக்கோ இந்தச் சத்தியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இவர்கள் ஞானத்திலும், அறிவிலும், புரிந்துகொள்ளும் ஆற்றலிலும் குழந்தைகளாக இருந்தாலும், பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையினால், தங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கும் தேவனுடைய இரட்சிப்பின் சத்தியத்தை புரிந்துகொள்கிறார்கள். இரட்சிப்பட்ட பிள்ளைகளாகிய நாம் இதற்காக தேவனைத் துதிக்கவேண்டும். நாம் பலவீனமானவர்களாக  இருந்தாலும் தேவன் நம்மை பலப்படுத்தியிருக்கிறார். நாம் பாலகராக இருந்தாலும் தேவன் நமக்கு தமது வெளிப்பாட்டின் ஞானத்தைக் கொடுக்கிறார். ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் கிடைக்காத பெரிய சிலாக்கியம் அவருடைய பிள்ளைகளாகிய நமக்குக் கிடைத்திருக்கிறது. தேவனே நமது பலவீனத்தை நீக்கி நம்மை பலப்படுத்தும் மெய்யான பெலனாகயிருக்கிறார். 


இந்த வாக்கியத்தில் ஞானிகளும் கல்விமான்களும் என்னும் வார்த்தையானது புறஜாதிமார்க்கத்து தத்துவ மேதைகளையும், யூதமார்க்கத்தின் ரபீமார்களையும் குறிக்கும் வார்த்தையாகும். சுவிசேஷத்தின் இரகசியம் இவர்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. தேவனுடைய ராஜ்யத்தைப்பற்றி பிரசங்கிக்கும் ஊழியம் இவர்களிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படவில்லை. 


அப்போஸ்தலர் பவுல் யூதமார்க்கத்தில் தேறியவராக இருந்தார். கமாலியேலின் பாதபடியில் அமர்ந்து கல்விபெற்ற ஞானியாக இருந்தார். அப்படிப்பட்ட ஞானி இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரானபோது  அவர் தமது ஞானத்தில் குழந்தையானார். சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவைத் தவிர வேறு எதையும் பிரசங்கிக்கத் தெரியாத சாதாரண பாலகரைப்போல கர்த்தருக்கு உண்மையாக ஊழியம் செய்தார். 


அப்போஸ்தலர் பவுல் கொரிந்தியர் சபையாரிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியை சிறந்த வசனிப்போடாவது  ஞானத்தோடாவது அறிவிக்கிறவராக வரவில்லை. இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் அவர்களுக்குள்ளே அறியாதிருக்க தீர்மானித்திருந்தார். அல்லாமலும் அவர் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் அவர்களிடத்தில் இருந்தார்.  அவர்களுடைய விசுவாசம் மனுஷருடைய ஞானதில் அல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு அவருடைய பேச்சும், அவருடைய பிரசங்கமும் மனுஷஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்பட்டதாயிருந்தது (1கொரி 2:1-5).  


தேவன் சர்வஞானமுள்ளவர்.  அவர் சர்வ ஆளுகையுமுள்ளவர். ஒவ்வொரு காரியத்தையும் அவர் தமது சர்வ ஆளுகையினால் ஆளுகை செய்கிறார். தம்முடைய திருவுளத்துக்கு பிரியாமாயிருக்கிறது எதுவோ அதை மாத்திரமே அவர் செய்வார்.  தம்முடைய சர்வ ஆளுகையின்படி தமது கிருபையையும் ஞானத்தையும் ஒவ்வொரு மனுஷருக்கும் ஒவ்வொரு அளவில் தருகிறார். ஆகையினால் தேவனுடைய கிருபையை குறைவாக பெற்றிருக்கிறவர்கள் அதற்காகத் தேவனைக் குறைகூறக்கூடாது. நிறைவாக பெற்றிருக்கிறவர்களைப் பார்த்து பொறாமைப்படவும் கூடாது. தேவன் தமது தெய்வீக ஆளுகையின் பிரகாரம் தமது கிருபையில் இந்த அளவை நமக்கு கொடுத்திருக்கிறார் என்பதை அங்கீகரித்து திருப்தியோடிருக்க வேண்டும். நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கிருபையின் அளவிற்காக தேவனைத் துதிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தம்முடைய சித்தத்தின் பிரகாரமாக, தாம் தீர்மானித்திருக்கும் அளவின் பிரகாரமாக, கிருபையைக் கொடுப்பது  தேவனுடைய திருவுளத்துக்கு பிரியமாக இருக்கிறது. 


தேவன் தம்முடைய திருவுளத்தின் பிரகாரமாக சுவிசேஷத்தின் செய்தியை புரிந்துகொள்ளும் கிருபையை சிலருக்கும், தாங்கள் புரிந்துகொண்ட சுவிசேஷத்தை மற்றவர்களுக்கு பிரசங்கம்பண்ணும் கிருபையை  வேறு சிலருக்கும் கொடுக்கிறார். தம்முடைய சுவிசேஷச் செய்தியை மரக்காலில் மூடி வைக்காமல், விளக்குத் தண்டின்மீது ஏற்றி, தெய்வீக வல்லமையினால் பிரகாசமாக எரியச் செய்கிறவர்களிடத்தில் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும் பொறுப்பை ஒப்புக்கொடுக்கிறார். தேவனுடைய ஊழியத்தை மனுஷ முயற்சியினால் நாம் நிறைவேற்ற  முயற்சி பண்ணக்கூடாது. மனுஷ முயற்சி அற்பபிரயோஜனமுள்ளது. தேவனுடைய வல்லமையோ எல்லாவற்றிற்கும் பிரயோஜனமுள்ளது. 


இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியிலே களிகூர்ந்தார். இதுவே சந்தோஷத்தின் உண்மையான ஆதாரம். ஆவியில் களிகூரும்போது நமக்கு ஆவிக்குரிய பெருமை வராது. 


 இயேசு கிறிஸ்து ""பிதாவே'' என்னும் வார்த்தையை 180 இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். ஜெபத்தில் தேவனைக் குறிப்பிடும்போது ""பிதா'' என்னும் வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். யோவான் சுவிசேஷத்தில் மட்டும் ""பிதா'' என்னும் வார்த்தையை 112 தடவை பயன் படுத்தியிருக்கிறார். யோவான் சுவிசேஷம் பிதாவாகிய தேவனையும், குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் விரிவாக விளக்குகிறது. மேலும் ""பிதா'' என்னும் சொல் மத்தேயு சுவிசேஷத்தில் 44 தடவைகளும், மாற்கு சுவிசேஷத்தில் 5 தடவைகளும் லூக்கா சுவிசேஷத்தில் 17 தடவைகளும், அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகத்தில் இரண்டு தடவைகளும், புதிய ஏற்பாட்டின் மற்ற புஸ்தகங்களில் 88 தடவைகளும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 


பிதாவிற்கு வழங்கப்பட்டிருக்கிற பெயர்கள்


    1. என் பிதா  (யோவான் 5:17-18; யோவான் 8:16-38,54;         யோவான் 14:28)


    2. பரமபிதா (மத் 6:14-32)


    3. வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவர் (மத் 11:25; லூக்கா 10:21)


    4. பரிசுத்த பிதா (யோவான் 17:11)


    5. நீதியுள்ள பிதா (யோவான் 17:25)


    6. நம்முடைய பிதாவாகிய தேவன் (ரோமர் 1:7; 1கொரி 1:3)


     7. பிதாவாகிய ஒரே தேவன் (1கொரி  8:6; கலா 1:1; 1தெச 1:1)


    8. நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதா (2கொரி 1:3;  2கொரி 11:31; எபே 1:3; எபே 3:14; எபே 6:23; கொலோ 1:3)


    9. இரக்கங்களின் பிதா (2கொரி 1:3)


    10. மகிமையின் பிதா (எபே 1:17)


    11. ஆவிகளின் பிதா (எபி 12:9)


    12. சோதிகளின் பிதா (யாக் 1:17)


குமாரன் இன்னரென்று


சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்  (லூக் 10:22).


பிதாவாகிய தேவனையும் குமாரனாகிய  இயேசுகிறிஸ்துவையும் பற்றிய இரகசியம் இங்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. பிதாவாகிய தேவன் குமாரனிடத்தில் பரிபூரண நம்பிக்கை வைத்திருக்கிறார். ஆகையினால் சகலமும் பிதாவினால் குமாரனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லா பரிபூரணமும் குமாரனிடத்தில் வாசம்பண்ணுகிறது. குமாரனிடமிருந்தே நிறைவான ஆசீர்வாதங்கள் புறப்பட்டு வருகிறது.  தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்த சகல சத்தியங்களையும் பிதாவாகிய தேவன் குமாரனிடத்தில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். 


பிதாவாகிய தேவனுக்கும் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கும் இடையிலுள்ள பந்தம் இந்த வசனத்தில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான். குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான்.  


காணுங் கண்கள்


 பின்பு தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (லூக் 10:23,24).


தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியம் சீஷர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து தமது சீஷரிடத்தில் திரும்பி, அவர்களிடத்தில் தனித்து இந்த சம்பவத்தைப் பேசுகிறார். ஏராளமானோர் தேவனுடைய இரகசியத்தை காணவேண்டுமென்று  பிரயாசப்பட்டார்கள். ஆனால் அதைக் காணும் சிலாக்கியம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. தேவனுடைய ரகசியம் சீஷர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் தங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த இரகசியத்தை மற்றவர்களுக்கு உபதேசம் பண்ணும் ஊழியமும் இவர்களிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையினால் சீஷர்கள் தேவனுடைய சமுகத்தில் மிகுந்த சந்தோஷத்தோடிருக்க வேண்டும். இவர்கள் தேவனுடைய பார்வையில் விசேஷித்தவர்கள். பாக்கியவான்கள். தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறவர்கள். 


சீஷர்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் தொடர்ந்து வளர்ச்சி பெறுகிறார்கள். தேவனுடைய ராஜ்யத்தைப்பற்றிய ரகசியம் இவர்களுக்கு சிறிது சிறிதாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறிந்துகொள்வதினால் மாத்திரம் ஒருவன் இரட்சிக்கப்பட முடியாது. ஆயினும் இரட்சிக்கப்படுவதற்கு தேவனுடைய ராஜ்யத்தைப்பற்றிய அறிவு அவசியமாக இருக்கிறது. ஆகையினால் சீஷர்கள் காண்கிறவைகளை காணுங்கண்கள் பாக்கியமுள்ளவைகள். 


""அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும்''  என்று மத்தேயு குறிப்பிடுகிறார் (மத் 13:17). லூக்கா இந்த சம்பவத்தை எழுதும்போது ""அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும்'' என்று குறிப்பிடுகிறார். சீஷர்கள் காண்கிறவர்களை காணவேண்டுமென்றும், இவர்கள் கேட்கிறவர்களை கேட்கவேண்டுமென்றும் அநேக தீர்க்கதரிசிகளும், நீதிமான்களும், ராஜாக்களும் விரும்பியும் காணாமலும் கேளாமலும் போனார்கள். 


புதிய ஏற்பாட்டுக்கால பரிசுத்தவான்களுக்கு மிகப்பெரிய சிலாக்கியம் ஆசீர்வாதமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டுக்காலத்து தீர்க்கதரிசிகள், ராஜாக்கள் ஆகியோரைவிட புதியஏற்பாட்டுக் காலத்து பரிசுத்தவான்கள் பாக்கியமுள்ளவர்கள். தேவனுடைய ராஜ்யத்தைப்பற்றிய மகிமைகள்  பழைய ஏற்பாட்டுக்காலத்து பரிசுத்தவான்களுக்கு நிழலைப்போல சிறிதளவே வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் புதிய ஏற்பாட்டுக்காலத்து பரிசுத்தவான்களுக்கோ தேவனுடைய ராஜ்யத்தின் மகிமை பூரணமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் நிழலாக கண்டவற்றை, புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பிரத்தியட்சமாக காண்கிறார்கள்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.