தம்மை பின்பற்றுகிறார்கள் செலுத்த வேண்டிய கிராமத்தை குறித்த இயேசுவின் உபதேசம்
பகையை சிலுவையில் அழிப்பதற்காகவே இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வந்திருக்கிறார். மனுஷருக்கு மத்தியில் பகையை உண்டுபண்ணுவது இயேசுவின் ஊழியமல்ல. சமாதானப்படுத்துவதே இயேசுவின் ஊழியம். மனுஷருடைய ஆத்துமாவை இரட்சிப்பதற்கு மாத்திரமல்ல, அவர்களுடைய ஜீவனை இரட்சிப்பதற்கும் இயேசுகிறிஸ்து வந்திருக்கிறார். தம்மைப்போலவே தமது சீஷர்களும் நன்மை செய்யவேண்டுமென்று இயேசு எதிர்பார்க்கிறார். இயேசுகிறிஸ்து ஒருவருக்கும் தீங்கு செய்யவில்லை. அதுபோலவே கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களும் யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது. அன்பின் கயிற்றினால் ஜனங்களை கட்டியிழுத்து சபைக்கு அழைத்து வரவேண்டும். சபையில் இருக்கும் ஜனங்களை நமது கோபத்தினால் துரத்திவிடுவதற்கு நாம் முயற்சி பண்ணக்கூடாது.
இந்த சம்பவத்திற்குப் பின்பு இயேசுகிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் வேறொரு கிராமத்திற்குப் போகிறார்கள். தம்மை ஏற்றுக்கொள்ளாததற்காக இயேசுகிறிஸ்து அந்தக் கிராமத்திலுள்ள சமாரியரை அழித்துப்போடவில்லை. அவர்களை சபிக்கவில்லை. மிகவும் அமைதியாக வேறொரு கிராமத்திற்குப் போகிறார். தம்மை யார் ஏற்றுக்கொள்வார்களோ அவர்கள் மத்தியில் இயேசுகிறிஸ்து வாசம்பண்ணுவார்.
நம்முடைய வாழ்க்கையில் சிலர் நம்மோடு பண்பாடில்லாமல் நடந்துகொள்ளலாம். அதற்காக அவர்களை கோபத்தோடு சபித்துவிடக்கூடாது. ஒரு சிலருடைய பழக்கவழக்கங்கள் நமக்கு பிடிக்கவில்லையென்றால், அவர்களை சபித்துப்போடாமல், அவர்களைவிட்டு அமைதியாக வேறு இடத்திற்குச் சென்றுவிடவேண்டும். பண்பாடோடு பழகும் மற்ற ஜனங்களை நமக்கு சிநேகிதர்களாக ஆக்கிக்கொள்ளவேண்டும். மனுஷரை சபிப்பது நமது ஊழியமல்ல. நம்மை சபிப்பவர்களையும் ஆசீர்வதிப்பதே நமது ஊழியம் இதுவே. இயேசுகிறிஸ்து நமக்கு கொடுத்திருக்கும் உபதேசம்.
எங்கே போனாலும்
அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார் (லூக் 9:57,58).
இயேசுகிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் வழியிலே போய்க்கொண்டிருக்கிறார்கள். அப்போது மூன்றுபேர் ஒவ்வொருவராக அவரைச் சந்தித்து, அவரைப் பின்பற்றுவது பற்றி பேசுகிறார்கள். அவர்களில் ஒருவன் இயேசுவை நோக்கி ""ஆண்டவரே நீர் எங்கே போனாலும் உம்மை பின்பற்றி வருவேன்'' என்று கூறுகிறான். மிகவும் அவசரப்பட்டு இயேசுவை பின்பற்றுவதற்கு தன்னை உடனடியாக ஒப்புக்கொடுக்கிறான். செல்லும் செலவை கணக்குப் பார்க்காமல் ஒரு காரியத்தை ஆரம்பித்துவிட்டு, அதை நிறைவேற்ற முடியாமல், பாதியிலேயே நிறுத்திவிடக்கூடாது. இயேசுகிறிஸ்துவை பின்பற்றுவதற்கு தான் செலுத்த வேண்டிய கிரயத்தைப்பற்றி சிறிதும் யோசிக்காமல், இயேசு எங்கே போனாலும் அவரைப் பின்பற்றி வருவதாக வாக்குப்பண்ணுகிறான்.
இயேசுகிறிஸ்துவை பின்பற்ற விரும்புகிறவர்கள் எல்லோருமே, இந்த மனுஷனைப்போலத்தான் தீர்மானம் பண்ணவேண்டும். இயேசுகிறிஸ்து எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுவதற்கு நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும். அதிலும் விசேஷமாக அவருடைய சீஷர்கள் அவரோடுகூட எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டும்.
தம்மைப் பின்பற்றுவதினால் இந்த உலகத்தில் அந்த மனுஷனுக்கு ஏராளமான ஆசீர்வாதங்கள் உண்டாகுமென்று இயேசு வாக்குப்பண்ணவில்லை. தம்மை பின்பற்றுவதிலுள்ள பிரச்சனைகள் சிலவற்றை எச்சரித்துக் கூறுகிறார். மனுஷகுமாரனுக்கு தலைசாய்க்க இடமில்லை. மனுஷகுமாரனை பின்பற்றினால், அவர் தங்களுக்கு வீடு வாசல் முதலியவற்றை அவர் ஆசீர்வாதமாக கொடுப்பாரென்று எதிர்பார்க்க கூடாது.
இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வந்தபோது மிகவும் ஏழ்மையான நிலமையில் இருக்கிறார். தாழ்மையிலிருக்கிறார். பூமியிலுள்ள பிரபுக்களுக்கு வசதியான அரண்மனைகளும், மாளிகைகளும் இருப்பதுபோல இயேசுகிறிஸ்துவுக்கு சொந்தமாக குடியிருக்கும் வீடு எதுவுமில்லை. சாதாரணமாக காட்டிலுள்ள நரிகளுக்குக்கூட குழிகள் இருக்கும். ஆகாயத்துப் பறவைகளுக்குக்கூட கூடுகள் உண்டு. இவையெல்லாம் அவற்றிற்குத் தேவை. ஆனால் மனுஷகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கோ தலைசாய்ப்பதற்குக்கூட இடமில்லை.
தேவனே இந்த வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவர். ஆனால் அவர் தமக்காக எதையும் சிருஷ்டிக்கவில்லை. அவர் ஐசுவரிய சம்பன்னர். ஆனால் அவரிடத்தில் எந்த ஐசுவரியமுமில்லை. இயேசுகிறிஸ்து தம்மை இந்த வசனத்தில் மனுஷகுமாரனாக குறிப்பிடுகிறார். ஆதாமின் ஒரு குமாரனாகவே இயேசு இங்கு தம்மை வெளிப்படுத்துகிறார். மாம்சத்திலும் இரத்தத்திலும் பங்குடையவராக இயேசு தம்மை இங்கு விவரிக்கிறார்.
இயேசுகிறிஸ்து நம்மை ஐசுவரியவான்களாக்குவதற்காக தரித்திரரானார். நம்முடைய சாபத்திலிருந்து நம்மை மீட்பதற்காக அவரே சாபமானார். பரலோகத்தின் மகிமையைவிட்டு இந்த பூமியில் ஒரு சாதாரண மனுஷனாக இயேசு அவதரித்திருக்கிறார். நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை இரட்சிப்பதற்காக சிலுவையில் தமது இரத்தத்தை சிந்தி, நமக்காக தமது ஜீவனையே ஒப்புக்கொடுத்தார். நாம் பாவிகளாக இருக்கையிலேயே அவர் நம்மீது அன்புகூர்ந்து தமது தெய்வீக அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் எல்லாம் உடையவராக இருந்தாலும் இந்த பூமியில் வாழ்ந்தபோது ஒன்றுமில்லாதவராக, சாதாரண வாழ்க்கை வாழ்ந்தார்.
நாமும் இந்த உலகத்தில் போதுமென்ற மனதுடன், திருப்தியோடு வாழவேண்டும். எல்லாவற்றிற்கும் பேராசைபட்டு மனதின் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் இழந்துபோகக்கூடாது. நாம் இந்த பூமியில் வாழ்ந்தாலும் இனிமேல் வரப்போகிற உலகத்தையே நோக்கிப் பார்க்கவேண்டும். நமக்கு நித்திய நகரம் இந்த பூமியிலில்லை. பரலோகமே நாம் போகவேண்டிய நித்திய நகரம்.
இயேசுகிறிஸ்து நமக்காக தரித்திரரானார். தம்முடைய ஜனத்தின் தரித்திரத்தைப் போக்குவதற்காக அவர் தரித்திரரானார். இயேசுகிறிஸ்துவைப்போல நாமும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து, திருப்தியோடிருக்க வேண்டும்.
இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் உலகப் பொருட்களுக்கு ஆசைப்படக்கூடாது. ஐசுவரியங்களை சேமிக்க வேண்டுமென்று விரும்பக்கூடாது. நமது உபதேசத்தில் தேவனுடைய ராஜ்யத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். உலகப்பொருளுக்கு ஆசைப்பட்டு, இயேசுகிறிஸ்து உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் தருவாரென்று மாயையான வாக்குத்தத்தங்களை கூறக்கூடாது. நாம் இயேசுகிறிஸ்துவை பின்பற்ற விரும்பினால் இந்த உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களுக்கு ஆசைப்படாமல், பரலோகத்தின் மேன்மையையே நோக்கிப் பார்த்து அவரைப் பின்பற்ற வேண்டும்.
இயேசுகிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் அதற்காக செல்லும் செலவை கணக்குப் பார்க்கவேண்டும். ஆடம்பர வாழ்க்கையை விரும்பாமல் எளிய வாழ்க்கை போதுமென்று நினைக்கவேண்டும். சோம்பேறியாகயிராமல் கடினமாக உழைக்க முன்வரவேண்டும். பேராசைப்படாமல் போதுமென்ற மனதுடனே வாழப் பழக்கவேண்டும். இப்படிப்பட்ட வாழ்க்கைக்கு ஒருவர் தன்னை ஒப்புக்கொடுக்கவில்லையென்றால், அவரால் இயேசுகிறிஸ்துவை மெய்யாகவே பின்பற்ற முடியாது. அவருடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் மாய்மாலமே நிறைந்திருக்கும். உலகப் பொருளுக்கு ஆசைப்படுகிறவர்கள், கிறிஸ்துவை நோக்கிப் பார்க்காமல், உலகத்தை நோக்கிப் பார்த்து அவரைவிட்டுப் பின்வாங்கிப்போவார்கள்.
ஆண்டவரே நீர் எங்கே போனாலும் உம்மை பின்பற்றி வருவேனென்று இந்த மனுஷன் இயேசுவிடம் முன்யோசனையில்லாமல் கூறுகிறான். மனுஷகுமாரனுக்கு தலைசாய்க்க இடமில்லை என்று கூறியவுடன் அவன் அவரைவிட்டுப் போய்விடுகிறான். தான் எதிர்பார்த்த காரியம் இயேசுகிறிஸ்துவிடம் கிடைக்காது என்பது தெரிந்தவுடன் அவரைப் பின்பற்றாமல் விலகிப்போய்விடுகிறான்.
இயேசுகிறிஸ்துவில் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள் இல்லையென்றாலும், அவர் நமக்கு போதுமானவராகயிருக்கிறார். அவர் நம்மை போஷித்து பாராமரிக்க வல்லவர். இயேசுகிறிஸ்துவிலும், அவர் வாக்குப்பண்ணியிருக்கும் பரலோக ராஜ்யத்திலும் நமக்காக நியமிக்கப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்களை நாம் நோக்கிப்பார்த்து, உற்சாகத்தோடே இயேசுவை பின்பற்ற வேண்டும். இயேசுவைப் பின்பற்றினால் தரித்திரராகிவிடுவோம் என்றோ அல்லது வீடுவாசல் எல்லாவற்றையும் இழந்து தலைசாய்ப்பதற்குக்கூட இடமில்லாமல் கஷ்டப்படுவோம் என்றோ கற்பனை செய்து பயந்துவிடக்கூடாது. நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவர். அவர் நமக்கு போதுமானவர். நமது நன்மைகளை விசாரிக்கிறவர்.
இயேசுகிறிஸ்துவிடம் பேசிய ""ஒருவன்'' என்பவன் ஒரு வேதபாரகன் (மத் 8:19). இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இவர்களுக்குச் சுவிசேஷச் செய்தியை அறிவிப்பதும் கடினம், அவர்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இஸ்ரவேல் தேசத்து ஆட்சியாளர்களுடன் இவர்கள் நெருங்கிய உறவில் இருந்தார்கள். சமுதாயத்திலும் இவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்து இருந்ததினால் சாதாரண ஜனங்களால் இவர்களைச் சந்திக்க முடியாது.
தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தவர். அவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்று திரித்துவத்தில் இருக்கிறார். மனுஷருடைய பாவங்களைப் போக்குவதற்காக இயேசு கிறிஸ்து மனுஷரூபம் எடுத்தார். உலகத்தைச் சிருஷ்டித்த இயேசு கிறிஸ்து தம்மை அதிகமாகத் தாழ்த்தியிருக்கிறார். நமக்காகத் தாழ்த்துகிறார். ஓய்வெடுக்க வேண்டிய சூழ்நிலையோ, களைப்போ தேவனுக்கு வராது. ஆனாலும், அவர் மனுஷ சாயலாக ஆனதினால் ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். இருந்தாலும் மனுஷகுமாரனுக்குத் தலைசாய்க்க இடமில்லை.
என்னைப் பின்பற்றிவா
வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான் (லூக் 9:59).
இயேசுகிறிஸ்துவின் அருகில் வேறொருவன் நிற்கிறான். இயேசு அவனை நோக்கி ""என்னைப் பின்பற்றிவா'' என்று அழைக்கிறார். அவனோ இயேசுவை உடனடியாக பின்பற்ற இயலாது என்றும், அவரைப் பின்பற்றுவதற்கு ஒரு நாள் அவகாசம் வேண்டுமென்று கேட்கிறான். இயேசுகிறிஸ்துவே இந்த மனுஷனை அழைக்கிறார். என்னை பின்பற்றி வா என்று அவனிடம் கூறுகிறார். இயேசுவே இவனை அழைத்த போதிலும், அவன் அவரைப் பின்பற்றுவதற்கு ஆரம்பத்தில் தயங்குகிறான். அதன்பின்பு இயேசுவைப் பின்பற்ற இவன் தன்னை ஒப்புக்கொடுக்கிறான். நம்மை அழைக்கும் தேவன் கிருபையும் இரக்கமும் நிறைந்தவர். நமது பலவீனங்களையெல்லாம் மன்னித்து, நம்மை தமது ஊழியத்தில் பயன்படுத்துகிறார்.
என்னைப் பின்பற்றி வா என்று இயேசு அந்த மனுஷனிடம் கூறியவுடன், அதற்கு அவன் ""ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும்'' என்று கூறுகிறான். தன்னுடைய வீட்டில் வயதான தகப்பன் இருப்பதாகவும், அவர் உயிரோடு இருக்கும் வரையிலும் தான்தான் அவரைப் பராமரிக்க வேண்டும் என்றும் தன்னுடைய நிலமையை எடுத்துக் கூறுகிறான். தன்னுடைய தகப்பன் மரித்தபின்பு அவரை அடக்கம் செய்துவிட்டு, இயேசுவைப் பின்பற்றுவதற்கு தான் ஆயத்தமாக இருப்பதாக அறிவிக்கிறான்.
இந்த மனுஷனைப்போலவே நாமும் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு பல சாக்கு போக்குகளைச் சொல்லுகிறோம். இயேசுவை நெருக்கமாக பின்பற்றுவதற்குப் பதிலாக தூரத்திலேயே நின்றுவிடுகிறோம். சிலர் வீட்டிலோ அல்லது வேலைபார்க்கும் ஸ்தலத்திலோ தரித்துவிடுகிறோம்.
ஒரு சிலர் இயேசுகிறிஸ்துவை பின்பற்றுவதில் சற்று ஓய்வும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தங்களுடைய சொந்த வேலையையும் பார்த்துக்கொண்டு இயேசுவையும் பின்பற்றலாம் என்பது இவர்களுடைய கருத்து. இயேசுவை பின்பற்றுவதற்கு தங்களுடைய சொந்த வேலை தடையாக இல்லையென்றால், அதைக் கவனிப்பதில் தவறில்லை. ஆனால் இயேசுகிறிஸ்துவை நெருக்கமாக பின்பற்றுவதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது. தடையை அனுமதிக்கக்கூடாது. தடையை அகற்றவேண்டும்.
இயேசுகிறிஸ்துவை பின்பற்றும்போது நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் கடமைகள் என்னவென்பது நமக்கு நன்றாக தெரியும். தெரிந்தும் அதை ஏற்றவேளையில் நிறைவேற்றாமல் காலதாமதம் செய்து, நமது இஷ்டப்படி செயல்படுகிறோம். நம்முடைய சொந்த வேலைகளில் பிரச்சனைகளும் போராட்டங்களும் வரும்போது கர்த்தருடைய காரியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அவரைப் பின்பற்ற வேண்டுமென்று விரும்புகிறோம். நம்முடைய முக்கியமான நேரத்தையெல்லாம் வீணடித்துவிட்டு, ஊழியம் செய்வதற்கு நேரமில்லையென்று கூறிவிடுகிறோம். கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கும் காலத்தை அவருடைய நாமத்திற்கு மகிமையாகவும், அவருடைய பிள்ளைகளுக்கு பிரயோஜனமாகவும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
இயேசுகிறிஸ்துவை பின்பற்றும்போது, நம்முடைய உற்றார் உறவினருக்கு செய்யவேண்டிய கடமைகளையும் நாம் நிறைவேற்றவேண்டும். அதே வேளையில் கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு ஒப்புக்கொடுத்த பின்பு, அவரைப் பின்பற்றாமல் உற்றார் உறவினரை கவனிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. தேவனுடைய ராஜ்யத்திற்கு எப்போதும் முதலிடம் கொடுக்கவேண்டும். தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் நாம் முதலாவது தேடும்போது, மற்றவையெல்லாம் நமக்கு கூடக்கொடுக்கப்படும்.
மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்
அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார் (லூக் 9:60).
தம்மைப் பின்பற்றி வருமாறு இயேசுகிறிஸ்து ஒருவனை அழைக்கிறார். ஆனால் அவனோ ""ஆண்டவரே முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும்'' என்று கூறுகிறான். இயேசுகிறிஸ்து அவனுக்கு பிரதியுத்தரமாக ""மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும். நீ போய் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து பிரசங்கி'' என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களும் அவருடைய ஊழியக்காரர்களும் மனுஷரை அண்டாத விநோதப் பிறவிகளாக இருக்கவேண்டியதில்லை. நம்முடைய உற்றார் உறவினரிடத்தில் நாம் மிகுந்த அன்போடு பழகவேண்டும். அதே வேளையில் தேவனுக்கு நாம் செய்யவேண்டிய ஊழியங்களுக்கு நமது உறவு முறைகள் தடையாக இருக்கக்கூடாது. சொந்தபந்தங்களை கவனிக்க வேண்டுமென்று சாக்குப்போக்கு சொல்லி தேவனுடைய ஊழியத்தை செய்யாமல் விட்டுவிடக்கூடாது.
இயேசுகிறிஸ்துவை நாம் பின்பற்றுவதற்கும், அவருக்கு ஊழியம் செய்வதற்கும் நம்முடைய நெருங்கிய உறவின் முறையார் நமக்கு இடையூறாக இருந்தால், அவர்களைவிட்டு விலகி இயேசுகிறிஸ்துவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவை கனம்பண்ணுவதைவிட ஒருவன் தன் தாயையும் தகப்பனையும் கனம்பண்ணினால் அவன் இயேசுவுக்கு மெய்யான சீஷனாக இருக்க முடியாது. இயேசுகிறிஸ்துவின் அழைப்புக்கு நாம் கீழ்ப்படியவேண்டும். இந்தக் கீழ்ப்படிதலுக்கு எந்தக் காரியம் தடையாக இருந்தாலும் அந்தக் காரியத்தையெல்லாம் விட்டு விலகி இயேசுவைப் பின்பற்றுவது நமக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.
உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும்
பின்பு வோறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டி-ருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டு வரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான் (லூக் 9:61).
மற்றொருவன் இயேசுகிறிஸ்துவை பின்பற்றி வரவிரும்புகிறான். ஆனால் ஊழியத்திற்கு வரும் முன்பாக தன்னுடைய வீட்டில் இருக்கிறவர்களிடத்தில் சற்று நேரம் செலவு செய்யவேண்டும் என்று விரும்புகிறான். இவன் இயேசுவிடம் ""ஆண்டவரே உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக் கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும்'' என்று கேட்கிறான்.
இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுவதை இவன் பாரமாகவும், சோகமான அனுபவமாகவும், துக்கமானதாகவும், ஆபத்து நிறைந்ததாகவும் கருதுகிறான். இயேசுவைப் பின்பற்றுவது என்பது ஏதோ மரிப்பதற்கு சமமான துக்க காரியம் என்று இவன் நினைக்கிறான். ஆகையினால் ஊழியத்திற்குப் போகும் முன்பாக தனக்குத் தெரிந்தவர்கள் எல்லோரிடமும் சொல்லி விடைபெற்றுக்கொண்டு, அதன்பின்பு இயேசுவை பின்பற்றலாம் என்று தீர்மானம் பண்ணுகிறான்.
இயேசுவைப் பின்பற்றுவது என்பது ஒரு ஆறுதலான அனுபவம். இது ஆசீர்வாதமான அனுபவம். இயேசுவை தொடர்ந்து பின்பற்றும்போது நம்முடைய ஆவியும் ஆத்துமாவும் பலப்படும். தன்னுடைய வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் தொடர்ந்து தங்கியிருப்பதைவிட, இயேசுவைப் பின்பற்றும்போது இவனுக்கு மிகுந்த ஆசீர்வாதம் உண்டாகும்.
இவனுடைய இருதயம் உலகப்பிரகாரமான காரியங்களில் நிறைந்திருக்கிறது. இயேசுகிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் என்னும் எண்ணம் இருந்தாலும், அவனுடைய உள்ளத்தில் இயேசுகிறிஸ்துவைவிட அவனுடைய வீட்டிலுள்ளவர்களே நிரம்பியிருக்கிறார்கள். குடும்பத்தைக் குறித்த சிந்தனை இவனை பாரப்படுத்துகிறது. இயேசுவைப் பின்பற்றாதவாறு இவனுடைய குடும்ப உறவுகள் இவனுக்குத் தடையாக இருக்கிறது.
இவன் ஏற்கெனவே வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் விடை பெற்று விட்டுத்தான் வந்திருக்கிறான். ஆனால் இயேசுவைப் பின்பற்றுவதற்கு முன்பாக மறுபடியும் அவர்களிடத்தில் விடைபெற்றுக்கொண்டு வரவேண்டுமென்று விரும்புகிறான். அவர்களெல்லோரும் அவனுடைய வீட்டிலிருக்கிறார்கள். வீட்டிலிருந்துகொண்டு இயேசுவைப் பின்பற்றுவது என்பது இயலாத காரியம். இயேசு எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுவதே மெய்யான சீஷத்துவம்.
இயேசுகிறிஸ்துவை பின்பற்றி தெய்வீக ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்வதற்குப் பதிலாக இவன் சோதனையில் சிக்கிக்கொள்கிறான். வீட்டிலுள்ளவர்களிடத்தில் போய் இயேசுவைப் பின்பற்ற வேண்டுமென்று கூறினால் அவர்கள் இவனிடம் பலவிதமான கருத்துக்களை கூறுவார்கள். இயேசுவைப் பின்பற்ற வேண்டாமென்று இவனைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வார்கள். தங்களைவிட்டுப் போகவேண்டாமென்று சில சமயங்களில் கண்ணீர் விட்டு அழுவார்கள். இவனும் அவர்களுடைய வேண்டுகோளை தவிர்க்க முடியாமல் வீட்டிலேயே தங்கிவிடுவான். இயேசுவைப் பின்பற்றமாட்டான். இயேசுவைப் பின்பற்றவேண்டுமென்று தீர்மானம்பண்ணுகிறவர்கள் இப்படிப்பட்ட சோதனைகளுக்கு இடங்கொடுக்கமாட்டோமென்று தங்கள் உள்ளத்தில் தீர்மானம்பண்ணிக்கொள்ள வேண்டும்.
பின்னிட்டுப் பார்க்கிற எவனும்
அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார் (லூக் 9:62).
இயேசுவைப் பின்பற்றுவதற்கு முன்பாக தன்னுடைய வீட்டிற்குப்போய் அவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டு வரும்படி தனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று கேட்பவனை இயேசுகிறிஸ்து கடிந்துகொள்கிறார். ""பலகையின்மேல் தன் கையை வைத்து பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்திற்கு தகுதியுள்ளவன் அல்ல'' என்று கூறுகிறார். பின்னிட்டுப் பார்க்கிறவன் பல காரியங்களுக்காகப் பின்னிட்டுப் பார்க்கலாம். ஒரு வேளை இந்த நிலம் உழுவதற்கு தகுதியான நிலமல்ல என்று நினைக்கலாம். அல்லது இந்த நிலம் விதை விதைப்பதற்கு ஏற்ற நிலமல்ல என்று நினைக்கலாம். இதுபோலவே இயேசுவைப் பின்பற்ற வேண்டுமென்று தீர்மானம்பண்ணிவிட்டு, உலகப்பிரகாரமான காரியங்களைக்குறித்து சிந்தனை செய்கிறவர்கள் இயேசுவை மெய்யாகவே பின்பற்றமாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்கு தகுதியானவர்களல்ல.
இவர்கள் தேவனுடைய ராஜ்யத்தின் விதையை எல்லா இடங்களிலும் தூவமாட்டார்கள். நன்றாக உழாதவர்கள் நன்றாக விதைக்கவும் மாட்டார்கள். உழுதால்தான் விதைக்க முடியும். உழ மனதில்லாதவன் விதைக்கவும் மாட்டான். கடினமான நிலத்தை உழுது பக்குவப்படுத்தத் தெரியாதவன் விதை விதைப்பதற்குத் தகுதியானவனல்ல. நிலத்தை உழுது பக்குவப்படுத்தத் தெரியாதவனுக்கு விதை விதைக்கவும் தெரியாது. ஒவ்வொரு முறையும் கலப்பையின்மீது கை வைத்துவிட்டு, பின்னிட்டுத் திரும்பிப் பார்க்கிறவன், உழுவதில் விருப்பமில்லாதவன். தன் உழவு வேலையை பாதியிலேயே நிறுத்திவிட்டு எப்போது ஓடிப்போகலாமென்று எதிர்பார்ப்பவன். இப்படிப்பட்டவன் ஒருபோதும் நிலத்தை உழுது முடிக்கமாட்டான். தனக்கு ஏற்படும் ஒவ்வொரு சூழ்நிலையையும் ஒரு சாக்குப் போக்காக பயன்படுத்தி, கலப்பையிலிருந் தன் கையை எடுத்துக்கொள்ள முயற்சி பண்ணுவான்.
பின்னிட்டுத் திரும்பிப் பார்ப்பது என்பது அவிசுவாசத்திற்கு அடையாளம். இயேசுகிறிஸ்துவைவிட்டு பின்வாங்கிப் போவதைக் குறிக்கும் வார்த்தை. சிறிது நேரம் கலப்பையின்மீது கை வைப்பதினால் அந்த நிலத்தை உழுது முடிக்க முடியாது. உழவு வேலை பூர்த்தியாக நிறைவு பெறாது. இவனைப்போலவே ஒரு சிலர் பரலோகத்திற்குப் போகவேண்டுமென்று விரும்புகிறார்கள். சிறிது நேரம் பரலோகத்தை நோக்கிப் பார்ப்பதினால் பரலோகத்திற்குப் போய்விடமுடியாது. முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். பரலோகத்திற்குப் போக விரும்புகிறவர்கள் எப்போதாவது பரலோகத்தை நோக்கிப் பார்க்காமல், எப்போதுமே பரலோகத்தின் தேவனை நோக்கிப் பார்க்கிறவர்களாக இருக்கவேண்டும்.
""கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல'' என்பது சற்றுக் கடினமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் இது முடியாத காரியமல்ல. இந்த மனுஷன் வீட்டிற்குப் போனால் அங்கு அவிசுவாசிகள்தான் நிறைந்திருப்பார்கள். அவர்கள் இவனுடைய தீர்மானத்தைக் கலைத்துவிடுவார்கள். இயேசுவைப் பின்பற்றுவதிலிருந்து வழிவிலகிச் சென்றுவிடுவான். இந்தக் கலப்பைக்கு ஒரு கை மட்டுமே இருக்கும். ஒருவர் மட்டுமே தன்னுடைய கையை வைக்க முடியும்.