இயேசு கிறிஸ்து 70 பேரை ஊழியத்திற்க்கு அனுப்புதல்
இரண்டிரண்டு பேராக
இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார் (லூக் 10:1).
இயேசுகிறிஸ்து வேறே எழுபது பேரை தமது ஊழியத்தை செய்வதற்காக நியமிக்கிறார். அவர்களை இரண்டிரண்டு பேராக அனுப்புகிறார். இந்த சம்பவம் மற்ற சுவிசேஷங்களில் எழுதப்படவில்லை. ஆயினும் இந்த எழுபது பேருக்கு இயேசுகிறிஸ்து கொடுக்கும் ஊழிய ஆலோசனைகள், அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கு கொடுத்த ஊழிய ஆலோசனைகளுக்கு ஒத்திருக்கிறது.
இயேசுகிறிஸ்து தமக்கு பன்னிரண்டு சீஷர்களை தெரிந்தெடுத்த போது இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களை நினைவுகூர்ந்தார். பன்னிரண்டு முற்பிதாக்களையும் பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் நினைவுகூர்ந்து அவர் பன்னிரண்டு சீஷர்களை தெரிந்தெடுத்தார். இப்போது வேறே எழுபது வேரை நியமிக்கும்போது அவர் இஸ்ரவேலின் எழுபது மூப்பர்களை நினைவுகூர்ந்திருக்க வேண்டும்.
இயேசுகிறிஸ்துவை திரளான ஜனங்கள் பின்பற்றுகிறார்கள். அவர்களில் அநேகர் ஊழியம் செய்யும் அளவிற்கு ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ந்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் ஊழியம் வீணாய் போய்விடவில்லை. அவருடைய ஊழியத்திற்கு பல எதிர்ப்புக்கள் வந்தபோதிலும், அவரைப் பின்பற்றுகிறவர்களில் அநேகர் அவருடைய ஊழியத்தை செய்வதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள்.
இயேசுகிறிஸ்துவின் பன்னிரண்டு சீஷர்களைப்போல இந்த எழுபது பேரும் அவரை நெருக்கமாக பின்பற்றவில்லை. இயேசுகிறிஸ்து எங்குபோனாலும் பன்னிரண்டு சீஷர்களும் அவரோடு கூடவே போனார்கள். அவர்களைப்போல இந்த எழுபது பேரும் அவரோடு எல்லா இடங்களிலும் கூடயிருக்கவில்லை. ஆயினும் இந்த எழுபது பேரும் இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை தொடர்ந்து கேட்கிறார்கள். அவருடைய அற்புதங்களை கண்ணாரக்கண்ட சாட்சிகளாக இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கிறார்கள்.
யோவான்ஸ்நானன் இயேசுகிறிஸ்துவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் சீஷர்களிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள் வரைக்கும், அவர் சீஷரிடத்தில் சஞ்சரித்த காலங்களிலெல்லாம் இந்த எழுபது பேரும் அவர்களுடனே கூடயிருந்திருக்கிறார்கள் என்று பேதுரு கூறுகிறார் (அப் 1:21,22). சீஷர்கள் ஏறக்குறைய நூற்றியிருபதுபேர் கூடியிருந்தபோது பேதுரு அவர்கள் நடுவிலே எழுந்துநின்று கர்த்தருடைய செய்தியை பிரசங்கம்பண்ணினார். அவர்களில் இந்த எழுபது பேரும் இருந்தார்கள் (அப் 1:15).
இயேசுகிறிஸ்து பரமேறிய பின்பு சீஷர்கள் உலகமெங்கும் சென்று சுவிசேஷ ஊழியம் செய்தார்கள். அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகத்திலும் நிருபங்களிலும் அப்போஸ்தலரின் உடன் ஊழியர்களாக குறிப்பிடப்பட்டிருக்கிறவர்களில், இவர்களும் உள்ளனர்.
தேவனுடைய ராஜ்யத்தில் ஏராளமான ஊழியக்காரர்கள் ஊழியம் செய்யலாம். செய்வதற்கு ஊழியம் அதிகமாகயிருக்கிறது. ஊழியத்திற்குப் பஞ்சமில்லை. ஏராளமான ஊழியக்காரர்கள் சுவிசேஷச் செய்தியை பிரசங்கம்பண்ணினாலும் அதைக் கேட்பதற்கும் திரளான ஜனங்கள் இருக்கிறார்கள். ஜனங்களுக்கும் குறைவில்லை. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காலத்தில் கடுகு விதையைப்போல இருந்த ஊழியம் இப்போது மரமாக வளர்ந்திருக்கிறது. கொஞ்சம் புளித்த மாவானது பிசைந்த மா முழுவதையும் புளிக்க வைத்திருக்கிறது.
இயேசுகிறிஸ்து இந்த எழுபது பேரையும் இரண்டிரண்டு பேராக ஊழியத்திற்கு அனுப்புகிறார். இரண்டுபேர் சேர்ந்திருக்கும்போது அவர்கள் ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்தி பலப்பட முடியும். இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களை உலகம் முழுவதும் சென்று சுவிசேஷ ஊழியம் செய்யுமாறு கூறினார். ஆனால் இந்த எழுபது பேரையோ அவர் உலகம் முழுவதும் அனுப்பவில்லை. அதற்குப் பதிலாக தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களை தமக்கு முன்னே அனுப்புகிறார். இந்த எழுபது பேரும் இயேசுகிறிஸ்துவின் வருகையை முன்னறிவிக்கிறவர்களாக அவருக்கு முன்பாக அனுப்பப்படுகிறார்கள்.
இயேசுகிறிஸ்து எங்குபோனாலும் அவர் நன்மை செய்கிறார். வியாதியஸ்தரை குணப்படுத்துகிறார். தேவனுடைய ராஜ்யத்தைப் பிரசங்கம்பண்ணுகிறார். இதே ஊழியமே இந்த எழுபது பேருக்கும் கொடுக்கப்படுகிறது. இவர்கள் பிணியாளிகளை சொஸ்தமாக்க வேண்டும். இயேசுவின் நாமத்தினால் அவர்களைச் சொஸ்தப்படுத்தும்போது, சொஸ்தமானவர்களும், இதற்கு சாட்சியாக இருந்தவர்களும் இயேசுகிறிஸ்துவை காணவேண்டுமென்று ஆவலோடிருப்பார்கள். இயேசுகிறிஸ்துவின் நாமம் வல்லமையுள்ளது என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
பிணியாளிகளை சொஸ்தமாக்கி தேவனுடைய ராஜ்யம் அவர்களுக்கு சமீபமாய் வந்திருக்கிறது என்றும் சொல்லவேண்டும். நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாய்ப்புக்களையும் சிலாக்கியங்களையும் புரிந்து வைத்திருப்பது நமக்கு நல்லது. நமக்கு வாக்குப்பண்ணபட்டிருக்கும் நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் நாம் அறிந்து வைத்திருந்தால்தான் அவற்றைப் பற்றிக்கொள்ள முடியும். தேவனுடைய ராஜ்யம் நமக்கு சமீபமாக வந்திருக்கிறது என்று நமக்கு அறிவிக்கப்படும்போது அதை சந்திப்பதற்கு நாமும் ஆயத்தமாகலாம்.
ஏற்கெனவே பன்னிரெண்டு சீஷர்கள் இருக்கிறார்கள். இவர்களோடு எழுபதுபேர் சேர்ந்து, இப்போது மொத்தம் 82 பேர் பிரசங்கித்து நோய்களைக் குணமாக்குகிறார்கள்.
ஒருவரைத் தனியாக அனுப்புவதற்குப் பதிலாக இரண்டு பேராக அனுப்புவதினால் சில அனுகூலங்கள் உள்ளன. அவையாவன:
1. சோதனைகளிலும், தனிமையிலும், சோர்வுகளிலும் ஒருவருக்கொருவர் உதவி புரிவார்கள். (பிர 4:9#12; ரோமர் 15:14)
2. ஒருவர் விழுந்தாலும் மற்றவர் அவரைத் தூக்கி விடுவார். (பிர 4:9#10; பிர 12:9#10; கலா 6:1)
3. சோதனைகள் வரும்போது பலவீனத்தில் பலப்படுத்துவதற்கு (ரோமர் 15:1#5; கலா 6:2)
4. ஜெபத்தில் ஒற்றுமை உண்டாக்குவதற்கு (மத் 18:19)
5. சாத்தான் தாக்கும்பொழுது பாதுகாப்பதற்கு (பிர 4:12; உபா 32:30)
6. பிரசங்கத்தை உறுதிபண்ணுவதற்கு (உபா 17:6; உபா 19:15; மத் 18:16)
அறுப்பு மிகுதி
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்புமிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் (லூக் 10:2).
எழுபது பேரும் ஊழியத்திற்குப் போகும்போது ஜெப சிந்தனையோடு போகவேண்டும். தங்களை ஊழியத்திற்குஅனுப்பும் இயேசுகிறிஸ்துவிடம் ஜெபத்தில் வேண்டுதல் செய்யவேண்டும். மனுஷருடைய ஆத்துமாக்கள் இரட்சிப்பட வேண்டும் என்னும் வாஞ்சையோடு ஊழியத்திற்குப் புறப்பட்டுப் போகவேண்டும். அறுப்பு மிகுதி என்பதை தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்க்கவேண்டும். தானியக்கதிர்கள் அறுவடைக்கு ஆயத்தமாக விளைந்திருப்பதை ஊழியக்காரர்கள் காணவேண்டும். விளைந்த கதிர்களை ஏற்ற காலத்தில் அறுக்கவில்லையென்றால், தானியங்கள் கீழே விழுந்து வீணாய்ப்போகும். ஆகையினால் ஏற்றக்காலத்தில் அறுவடை செய்வதற்கும், தானியங்களை களஞ்சியத்தில் சேர்ப்பதற்கும் வேலையாட்கள் தேவை.
அறுப்பு மிகுதியாக இருப்பதையும் வேலையாட்கள் கொஞ்சம் என்பதையும் ஊழியக்காரர்கள் உணரவேண்டும். பொதுவாக வேலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் குறைந்த எண்ணிக்கையில் வேலையாட்களை அமர்த்துவது எஜமான்களின் வழக்கம். சிறிது ஆட்களைக்கொண்டு அதிக வேலைகளை செய்து முடிக்கவேண்டுமென்று முதலாளிகள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ அதிகமான வேலையாட்கள் அறுவடை செய்வதற்கு தேவை என்பதை உணர்ந்திருக்கிறார். இதே உணர்வு ஊழியத்திற்குச் செல்லும் ஊழியக்காரர்களிடமும் இருக்கவேண்டும்.
அறுப்பு மிகுதியாக இருப்பதினாலும், வேலையாட்கள் கொஞ்சமாக இருப்பதினாலும், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி ஊழியக்காரர்கள் இயேசுகிறிஸ்துவை வேண்டிக்கொள்ள வேண்டும். தேவனிடமிருந்து மிகுந்த வாஞ்சையோடு ஊழியத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போது அவர் தமது அறுப்புக்கு வேலையாட்களை தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருப்பார். இயேசுகிறிஸ்து தமது ஊழியத்திற்காக நம்மை அனுப்பும்போது, அவரும் நம்மோடுகூட வருகிறார் என்னும் உணர்வும் விசுவாசமும் நம்மிடத்தில் காணப்படவேண்டும். நமது ஊழியம் ஜெயமுள்ளதாக இருக்கும் என்றும் கனி நிறைந்ததாக இருக்குமென்றும் விசுவாசித்து, கர்த்தருக்கு நீடிய பொறுமையோடு, விசுவாசத்தோடு ஊழியம் செய்யவேண்டும்.
ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே
புறப்பட்டுபோங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன் (லூக் 10:3).
இயேசுகிறிஸ்து வேறே எழுபது பேரை நியமித்து அவர்களை ஊழியத்திற்கு புறப்பட்டுப் போகுமாறு அனுப்புகிறார். ஊழிய ஸ்தலத்தில் அவர்கள் பாடுகளையும் உபத்திரவங்களையும் எதிர்பார்க்க வேண்டும். ஏனெனில் ஓநாய்களுக்குள்ளே அனுப்பப்படும் ஆடுகளைப்போல இந்த எழுபது பேரும் அனுப்பப்படுகிறார்கள். இவர்கள் ஆடுகளைப்போல இருந்தாலும், சத்துருக்கள் ஓநாய்களைப்போல இருந்தாலும், இந்த எழுபது பேரும் புறப்பட்டுப் போகவேண்டும். ஆடுகள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்கும். சத்துருவுக்கு எளிதில் இரையாகும். அதுபோலவே இந்த எழுபது பேரும் தங்களுடைய ஊழியத்தில் அமைதியாகவும் மிகுந்த பொறுமையோடும் செயல்படவேண்டும். யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது.
ஓநாய்களுக்குள்ளே ஆடுகளை அனுப்புவது மிகவும் கடினம். ஓநாய்களிடம் சிக்கிக்கொண்ட ஆடுகள் உயிர்பிழைப்பது கடினம். ஆயினும் ஊழியக்காரர்களாகிய நாம் பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகத்தோடும் வல்லமையோடும், பெலத்தோடும், ஊழியத்திற்குப் போகும்போது ஊழியத்தில் ஜெயம் உண்டாகும். நாம் ஆடுகளாக இருந்தாலும் நம்முடைய பிரதான மேய்ப்பராகிய இயேசுகிறிஸ்து நம்மோடு கூடயிருக்கிறார். ஆகையினால் இயேசுகிறிஸ்து நம்மை அனுப்பும் இடங்களுக்கு பயப்படாமல் போகலாம்.
பணப்பையையும் சாமான்பையையும்
பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம் (லூக் 10:4).
ஊழியக்காரர்கள் ஊழியத்திற்கு புறப்பட்டுப்போகும்போது, ஏதோ ஒரு நீண்ட பிரயாணத்திற்கு போவதுபோல சகலவிதமான ஆயத்தங்களோடும், வசதிகளோடும் புறப்பட்டுப் போகக்கூடாது. நம்மை அனுப்பும் இயேசுகிறிஸ்துவை சார்ந்து ஊழிய ஸ்தலத்திற்குப் போகவேண்டும். நம்முடைய சிநேகிதர்கள் மூலமாக நமக்கு கிடைக்கும் விருந்து உபசரணைகளை அங்கீகரித்துக் கொள்ளவேண்டும். ஊழியத்திற்குப் போகும் போது பணப்பையையும் சாமான்பையையும் கொண்டு போகவேண்டாமென்று இயேசுகிறிஸ்து இந்த எழுபது பேருக்கும் கட்டளையிடுகிறார். தம்முடைய பன்னிரண்டு சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்பும்போது, அவர்கள் வழிக்கு தடியையாவது, பையையாவது, அப்பத்தையாவது, காசையாவது, இரண்டு அங்கிகளையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்று கூறினார் (லூக் 9:3). இந்த எழுபது பேரிடம் பாதரட்சைகளையும் கொண்டு போகவேண்டாமென்று கூறுகிறார்.
இந்த எழுபது பேரும் ஊழியத்திற்குப் போகும்போது வழியில் ஒருவரையும் வினவக்கூடாது. யாரிடமும் நலம் விசாரித்துக்கொண்டிருக்கக்கூடாது. ஊழியத்திற்குப்போகும்போது தேவையில்லாத ஊர் கதைகளை பேசிக்கொண்டிருக்கக்கூடாது. தேவையில்லாத சடங்காச்சாரங்களிலும், பாரம்பரிய பழக்க வழக்கங்களிலும் பங்கு பெறக்கூடாது. ஊழியக்காரர்கள் மிகவும் அவசரமான ஒரு காரியத்திற்காக அனுப்பப்பட்டிருக்கிறார்கள். ஆகையினால் இவர்கள் வழியில் ஒவ்வொருவரையும் வினவி, தங்களுடைய நேரத்தை வீணாக்கிவிடக் கூடாது.
இயேசுகிறிஸ்து இந்த எழுபது பேரிடமும் முக்கியமான ஊழியப் பொறுப்பை கொடுத்திருக்கிறார். தேவனுடைய ராஜ்யம் அவர்களுக்கு சமீபமாய் வந்திருக்கிறது என்று இவர்கள் ஜனங்களைப் பார்த்து சொல்லவேண்டும். வரப்போகிற உலகத்தைப்பற்றி இவர்கள் ஜனங்களிடம் விரைவாக அறிவிக்க வேண்டியவர்கள். ஆவிக்குரிய காரியங்களில் அக்கறையோடு செயல்படவேண்டியவர்கள். உலகப்பிரகாரமான காரியங்களில் ஈடுபட்டு தங்களுடைய நேரத்தை வீணாக்கிவிடக்கூடாது. எந்த நோக்கத்திற்காக இயேசுகிறிஸ்து இவர்களை அனுப்பினாரோ அந்த நோக்கமே இவர்களுக்கு பிரதானமாக இருக்க வேண்டும்.
""வழியிலே ஒருவரையும் வினவ வேண்டாம்'' என்னும் வாக்கியத்திற்கு வழியில் காணும் யாரையும் அன்பாக விசாரிக்கக்கூடாது என்பது பொருளல்ல. விசுவாசிகள் ஒருவரையொருவர் அன்புடன் விசாரித்துக் கொள்ள வேண்டும். (1பேதுரு 3:8) கனம்பண்ணுவதில் ஒருவரையொருவர் முந்திக் கொள்ள வேண்டும். ஆனால் கிழக்குத் தேசங்களில் வழியில் போவோர் வருவோர் எல்லோரிடமும் மணிக்கணக்காகப் பேசி தங்களுடைய பொன்னான நேரத்தை வீணாகச் செலவிடுவார்கள். நேரத்தை வீணடிக்கும் இப்படிப்பட்ட பழக்கம் தேவையில்லை என்பது இந்த வாக்கியத்தின் பொருளாகும். எலிசா தன்னுடைய ஊழியக்காரனை அனுப்பும்போது வழியில் வீணாக நேரத்தைச் செலவு பண்ண வேண்டாம் என்று எச்சரித்து அனுப்பினான்.
சமாதானம் உண்டாவதாக
ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள் (லூக் 10:5).
இந்த எழுபது பேரும் தாங்கள் சந்திக்கும் ஜனங்களிடம் தங்களுடைய நல்வார்த்தையையும் கூறவேண்டும், தேவனுடைய நல்ல சித்தத்தையும் அறிவிக்க வேண்டும். இவர்கள் ஒரு வீட்டில் பிரவேசிக்கிற போது அந்த வீட்டிற்கு சமாதானம் உண்டாவதாக என்று முதலாவதாக சொல்ல வேண்டும். வீடுகளுக்குள் பிரவேசிக்க வேண்டுமென்று இயேசுகிறிஸ்து இவர்களுக்கு ஆலோசனை கூறுகிறார். ஏனெனில் இவர்களில் அநேகருக்கு யூதருடைய ஜெபாலயங்களில் பிரவேசித்து ஊழியம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆகையினால் தங்களுக்கு எங்கெல்லாம் ஊழியம் செய்ய வாய்ப்பு கிடைக்கிறதோ அந்த வாய்ப்புக்களையெல்லாம் பயன்படுத்தி ஊழியம் செய்யவேண்டும். ஜெபாலயம் போன்ற பொது இடங்களில் ஊழியம் செய்ய முடியவில்லையென்றாலும், ஜனங்களுடைய வீடுகளுக்குச்சென்று அங்கு ஊழியம் செய்யவேண்டும். இயேசுகிறிஸ்துவின் திருச்சபை ஆரம்பத்தில் இதுபோல ஒரு வீட்டிலுள்ள மேலறையில் தான் ஆரம்பமாயிற்று.
ஊழியக்காரர்கள் ஒரு வீட்டில் பிரவேசிக்கிற போது அந்த வீட்டிற்கு சமாதானம் உண்டாவதாக என்று முதலாவதாக சொல்லவேண்டும். இவர்கள் வழியில் ஒருவரையும் வினவவேண்டாம். யாரையும் நலம் விசாரிக்க வேண்டாம். ஆனால் ஊழியத்தின் நிமித்தமாக ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கிற போது அந்த வீட்டாரை சமாதான வார்த்தைகளைக் கூறி ஆசீர்வதிக்க வேண்டும். ஊழியக்காரருடைய வார்த்தையில் உண்மையும் கிருபையும் நிறைந்திருக்க வேண்டும்.
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் உலகம் முழுவதும் சென்று, இயேசுவின் நாமத்தினால் உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக என்று அறிவிக்க வேண்டும். இயேசுவின் நாமத்தினால் சமாதானத்தை அறிவிப்பதே ஊழியக்காரர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படை ஊழியம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் இந்த பூமியில் சமாதானம் உண்டாகும். இந்த சமாதானத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஜனங்களை இயேசுகிறிஸ்துவிடம் அழைத்து வரவேண்டும். எல்லோருக்கும் சமாதானம் உண்டாகவேண்டுமென்று ஊழியக்காரர்கள் ஜெபிக்க வேண்டும். நமக்கு கிடைக்கும் சமாதானம் தேவனிடமிருந்து நமக்குக்கொடுக்கப்படும் ஆசீர்வாதமாகும்.
சமாதான பாத்திரன்
சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும் (லூக் 10:6).
நாம் எல்லோருக்கும் ஊழியம் செய்தாலும் ஊழியத்தின் முடிவு ஒன்றுபோல் இருப்பதில்லை. தேவனுடைய ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று எல்லோருக்கும் பிரசங்கம்பண்ணினாலும், எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டு தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதில்லை. தேவனுடைய சுவிசேஷத்தை நாம் எல்லோருக்கும் அறிவித்தாலும் அது எல்லோர் மத்தியிலும் ஒன்றுபோல் கிரியை செய்வதில்லை. நாம் எல்லோருக்காக ஜெபம்பண்ணினாலும் எல்லோர்மீதும் தேவனுடைய கிருபை ஒன்றுபோல் வருவதில்லை. சுவிசேஷத்தைக் கேட்கிறவர்கள் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஜனங்களிடத்தில் வித்தியாசமுண்டு. அதுபோலவே ஜனங்களுக்குக் கிடைக்கு சமாதான ஆசீர்வாதத்திலும் வித்தியாசமிருக்கிறது.
ஊழியக்காரர்கள் ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கிறபோது அந்த வீட்டிற்கு சமாதானம் உண்டாவதாக என்று வாழ்த்தினாலும், சமாதான புத்திரர் அங்கே இருந்தால்தான் அவர்கள் கூறின சமாதானம் அவர்களிடத்தில் தங்கும். சமாதானத்திற்குப் பாத்திரரான சமாதான புத்திரர் அந்த வீட்டில் இல்லாதிருந்தால் ஊழியக்காரர்கள் கூறிய சமாதானம் அந்த வீட்டிலுள்ளவர்களிடத்தில் தங்காமல், அது ஊழியக்காரர்களிடத்திலேயே திரும்பி வந்துவிடும்.
நாம் ஊழியம் செய்யும்போது சுவிசேஷத்தைக் கேட்கிறவர்களில் ஒரு சிலர் சமாதானத்தின் புத்திரராக இருப்பார்கள். சுவிசேஷ வார்த்தைகளை தமது உள்ளத்தில் உடனே ஏற்றுக்கொள்வார்கள். சுவிசேஷத்தின் வெளிச்சத்தினாலும் அன்பினாலும் தங்களுக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வார்கள். இப்படிப்பட்டவர்கள்மீது சமாதானம் தங்கும். இவர்களுக்காக நாம் ஏறெடுக்கும் ஜெபம் தேவனுடைய சமுகத்தில் கேட்கப்படும். தேவன் ஜெபத்திற்கு பதில்கொடுத்து இவர்களை ஆசீர்வதிப்பார். சுவிசேஷத்தின் வாக்குத்தத்தங்கள் இவர்களுடைய ஜீவியங்களில் உறுதிபண்ணப்படும்.
சுவிசேஷத்தைக் கேட்கும் வேறு சிலரோ சுவிசேஷத்தை தங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சில சமயங்களில் ஒரு வீட்டிலுள்ள எல்லோருமே சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துவிடுவார்கள். இவர்கள் சமாதானத்தின் புத்திரர்களல்ல. இவர்களுக்கு ஊழியக்காரர்கள் சமாதானம் உண்டாவதாக என்று கூறி வாழ்த்தினாலும், அந்த சமாதானம் அவர்களிடத்தில் தங்காது. ஊழிக்காரர்கள் கூறும் சமாதானம் அவர்களிடத்திற்கே திரும்பி வந்துவிடும். தேவன் தங்களுக்குக் கொடுத்திருக்கும் சுவிசேஷச் செய்தியை இந்த ஜனங்களுக்கு அறிவித்துவிட்டோம் என்பதே ஊழியக்காரர்களுக்குக் கிடைக்கும் சமாதானமாகும். தேவனுக்கு முன்பாக இந்த ஊழியக்காரர்கள் உண்மையுள்ளவர்களாக, குற்றமற்றவர்களாக இருக்கிறார்கள்.
நாம் கூறும் சமாதானம் நம்மிடத்தில் திரும்பி வரும்போது, அந்த சமாதானத்தை நாம் மற்றவர்களுக்கும் கூறலாம். மற்ற இடங்களில் சமாதான பாத்திரர்கள் இருந்தால் அவர்களிடத்தில் அந்த சமாதானம் வந்து தங்கும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் சமாதானம் உண்டாவதாக என்று அறிவிப்பதே ஊழியக்காரர்களின் பிரதான ஊழியம். இதை சோர்ந்து போகாமல் தொடர்ந்து செய்யவேண்டும்.
ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள். இவ்வாறு சொல்வது அக்காலத்து வழக்கம். அந்த வீட்டின் உரிமையாளர் சமாதானமுள்ள மனுஷனாக இருந்தால் உங்கள் ஆசீர்வாதம் அந்த வீட்டில் தங்கும். அவன் சமாதானத்தை விரும்பவில்லை என்றால் நீங்கள் கூறிய ஆசீர்வாதம் உங்களிடத்திற்கே திரும்பி வரும். உங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் உங்கள் காலில் படிந்துள்ள தூசியை உதறித்தள்ளிவிட்டு, அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டுப் போங்கள். (மத் 10:14) ஒரு மனுஷனிடம் எந்தப் பழக்கம் காணப்படுகிறதோ அந்தப் பழக்கத்தின் குமாரன் என்று யூதர்கள் அவனை அழைப்பார்கள். எடுத்துக்காட்டாக ""சமாதானபாத்திரன்'". (யோவான் 17:12)
வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரன்
அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக்குடியுங்கள்; வேலையாள் தன் கூ-க்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள். ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக் கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து, அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் (லூக் 10:7-9).
ஊழியக்காரியமாக நாம் ஒரு பட்டணத்தில் பிரவேசிக்கும்போது அங்குள்ள ஜனங்கள் நம்மை ஏற்றுக்கொள்ளலாம். நம்மை ஏற்றுக்கொள்கிறவர்கள் இயேசுகிறிஸ்துவையும் அவருடைய சுவிசேஷத்தையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கொடுக்கிறவைகளை நாம் புசித்துக் குடிக்கலாம். அவர்களுடைய விருந்து உபசரணையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். வெட்கப்படக்கூடாது. அவர்கள் கொடுப்பதை புசிக்கலாமா, கூடாதா என்று சந்தேகப்படக்கூடாது. அவர்கள் நமக்கு முன் வைக்கிறவைகளை நாம் புசிக்கலாம். அவற்றை புசித்துக் குடிப்பதற்கு ஊழியக்காரர்கள் பாத்திரர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்.
சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்கிறவர்கள் ஊழியக்காரர்களுக்கு விருந்து உபசரணை செய்வது ஒரு தான தர்மமல்ல. அது அவர்கள் நிறைவேற்ற வேண்டிய நீதி. நமக்கு ஆவிக்குரிய நன்மைகளை கொடுத்து உதவி செய்கிற ஊழியக்காரர்களுடைய சரீரப்பிரகாரமான நன்மைகளை நாம் கவனிக்க வேண்டும். நமக்கு சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களின் நன்மைகளை நாம் விசாரிக்கவேண்டும்.
ஊழியத்திற்குப் போகிறவர்கள் தங்களுடைய போஜன விஷயத்தில் மிகுந்த கவனத்தோடிருக்க வேண்டும். தங்களுக்கு முன் வைக்கிறவைகளை நாம் புசிக்க வேண்டும். விருந்து உபசரிக்கிறவர்கள் தங்களுடைய கடமைகளைச் செய்யும்போது, அதில் பங்கு பெறுகிற நாமும் மிகுந்த கண்ணியத்தோடு நடந்துகொள்ளவேண்டும். பெருந்தீனி உண்பது பாவம். நமக்குப் பிடித்த போஜனத்தை மாத்திரமே நமக்கு பரிமாற வேண்டுமென்று ஊழியக்காரர்கள் எதிர்பார்க்கக்கூடாது. வற்புறுத்தவும் கூடாது. நமக்கு முன் வைக்கப்படும் போஜனம் எதுவாக இருந்தாலும், அதை ஒதுக்கித் தள்ளிவிடாதவாறு புசிக்கவேண்டும்.
நமக்குக் கொடுக்கப்படும் உணவு சாதாரண எளிய உணவாக இருந்தாலும் அதையும் ஸ்தோத்திரத்தோட ஏற்றுக்கொள்ளவேண்டும். அதில் குற்றம் கண்டுபிடிக்கக்கூடாது. நாகரீகமான சுவையான உணவாக இல்லையென்றாலும், அது கர்த்தர் நமக்குக் கொடுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட போஜனம் என்று நினைவுகூர்ந்து அதை அங்கீகரிக்க வேண்டும். நாம் எதிர்பார்க்கும் சுவை நமக்கு கொடுக்கப்படும் போஜனத்தில் இல்லையென்றாலும் அதையும் ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்வது ஊழியக்காரர்களுக்கு ஆசீர்வாதம். கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் போஜனப்பிரியராக இருக்கக்கூடாது. ஜெபப்பிரியராகவும் கர்த்தரை ஸ்தோத்திரம் பண்ணும் பிரியராகவும் இருக்கவேண்டும்.
யூதர்களுடைய முன்னோர்கள் தங்களுடைய பாரம்பரியத்தின் பிரகாரமாகவே போஜனம்பண்ணுவார்கள். ஒரு சில போஜனங்களை மாத்திரம் அங்கீகரித்து மற்ற போஜனங்களை விலக்கி வைத்துவிடுவார்கள். தம்முடைய ஊழியக்காரர்கள் போஜன விஷயங்களில் முன்னோர்களுடைய பாரம்பரியத்தின்படி நடக்கவேண்டாம் என்றும், தங்களுக்கு முன் வைக்கிற எந்த போஜனத்தையும் அவர்கள் புசிக்கலாம் என்றும் இயேசுகிறிஸ்து உபதேசம்பண்ணுகிறார். தங்களுடைய மனச்சாட்சியின் நிமித்தமாக கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் எந்த போஜனத்தையும் தள்ளிவிடவேண்டும் என்னும் அவசியமில்லை. ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொண்டால் எல்லா போஜனமும் நல்லதுதான். ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.
கிழக்குத் தேசத்தில் தேவையில்லாமல் வீட்டுக்கு வீடு சென்று ஊர் வம்பு பேசுவார்கள். ஊழியக்காரர்கள் இதைத் தவிர்க்க வேண்டும். அவர்களுடைய நேரம் முக்கியமானது. ஊர்க்கதை பேசுவதற்கு அவர்கள் அனுப்பப்படவில்லை. இயேசுவின் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கே அவர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
தேவனுடைய ஊழியக்காரர்கள் எந்த ஊருக்கெல்லாம் போகிறார்களோ அந்த ஊரிலுள்ள பிணியாளிகள் எல்லோரையும் சொஸ்தமாக்க வேண்டும். தேவனுடைய ராஜ்யம் அவர்களுக்குச் சமீபமாக வந்திருக்கிறது என்பதற்கு இது அடையாளம். தேவனுடைய ஊழியக்காரர்கள் அவர்கள் நடுவில் இருக்கிறார்கள் என்பதை எல்லோரும் அறிந்து கொள்வார்கள். தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல. பலத்திலே இருக்கிறது.
உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால்
யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்: எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகெள்வீர்களாக என்று சொல்லுங்கள். அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் அந்த நாளிலே சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக் 10:10-12).
ஊழியக்காரர்கள் சில பட்டணங்களில் பிரவேசிக்கும்போது அங்குள்ள ஜனங்கள் அவர்களையும் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷச் செய்தியையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நம்மை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் நாம் அவர்களைவிட்டு புறப்பட்டுப் போய்விடவேண்டும். அவர்களுடைய வீடுகளில் நம்மை பிரவேசிக்க அனுமதிக்கவில்லையென்றால் அவர்களுடைய வீதிகளுக்குச் சென்று எச்சரிப்பின் செய்தியை அவர்களுக்குக் கூறவேண்டும். தம்முடைய பன்னிரண்டு அப்போஸ்தலர்களுக்கு கூறிய அதே வார்த்தையையே இயேசுகிறிஸ்து இங்கு இந்த எழுபது பேருக்கும் கூறுகிறார் (லூக் 9:5).
நம்மை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு விரோதமாக நம்முடைய கால்களில் ஒட்டின அவர்களுடைய பட்டணத்தின் தூசியை துடைத்துப் போடவேண்டும். நம்மை ஏற்றுக்கொள்ளாதவர்களோடு வழக்காடிக் கொண்டிருப்பதினால் ஒரு பிரயோஜனமுமில்லை. கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் தங்களுடைய எஜமானனாகிய இயேசுகிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தங்களுக்கு கொடுக்கப்படும் ஊழியத்தை நிறைவேற்ற வேண்டும்.
சமாதானம் கூறி ஜனங்களை ஆசீர்வதிக்கவும், தங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை சபிக்கவும் ஊழியக்காரர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தங்களை ஏற்றக்கொள்ளாத ஜனங்களை சபித்தாலும், தேவனுடைய ராஜ்யம் அவர்களுக்கு சமீபமாய் வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வீர்களாக என்றும் அறிக்கவேண்டும். நம்மை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர்களுக்கு சுவிசேஷச் செய்தியை அறிவிப்பது நமது கடமை. அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அது ஊழியக்காரர்களின் தவறல்ல.
தேவனுடைய ராஜ்யம் அவர்களுக்கும் சமீபமாக வந்திருக்கிறது. அவர்கள் தங்கள் பாவத்திற்காக மனந்திரும்பி இயேசுவிடம் வந்தால், அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படும். அவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கலாம். இயேசுகிறிஸ்துவின் கிருபையுள்ள வார்த்தைகளை நாம் விசுவாசத்தோடு அறிவிக்கவேண்டும். அதை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் ஜனங்கள் எடுக்க வேண்டிய முடிவு.
சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள வில்லையென்றால் அவர்கள்மீது சாபம் வரும். நியாயத்தீர்ப்பு நாளிலே அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட்டு நித்திய அக்கியில் தள்ளப்படுவார்கள். அந்நாளில் அவர்களுக்கு நேரிடும் சாபம் சோதோம் நாட்டிற்கு நேரிடுவதைவிட அதிகமாக இருக்கும். சோதோம் நாட்டிலுள்ளவர்கள் லோத்துவின் மூலமாக வந்த எச்சரிப்பின் செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. அவனையும் அவனுடைய எச்சரிப்பின் செய்தியையும் புறக்கணித்துவிட்டார்கள். லோத்துவின் செய்தியை புறக்கணிப்பதைவிட, இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷச் செய்தியை புறக்கணிப்பது மிகவும் ஆபத்தானது. அதிக தீங்கு ஏற்படுத்தக்கூடியது. ஆகையினால் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய பட்டணத்திற்கு நேரிடுவதைப் பார்க்கிலும், நியாயத்தீர்ப்பு நாளிலே, சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார்.
""ஒட்டினது'' என்பது ஒரு மருத்துவச் சொல். காயங்களைக் கட்டுதல் என்பது இதன் பொருள். ஊழியக்காரர்கள் ஜனங்களுடைய பொருளுக்காகவோ அவர்கள் தரும் வந்தனங்களுக்காகவோ ஊழியம் செய்ய வரவில்லை. அவர்களுடைய ஆத்துமாக்களைத் தேவனிடம் ஆதாயப்படுத்த வேண்டும் என்னும் ஒரே நோக்கத்திற்காகவே வருகிறார்கள். தேவனுடைய கிருபையை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய சரீர வியாதி குணமாக வேண்டும். அவர்களுடைய ஆத்துமா இரட்சிக்கப்படவேண்டும். இதுவே ஊழியக்காரர்களுடைய நோக்கம். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் அவர்களிடத்தில் வேறொன்றையும் நீங்கள் எதிர்பார்த்து வரவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக உங்கள் கால்களில் ஒட்டின அவர்களுடைய பட்டணத்தின் தூசியை துடைத்துப் போடவேண்டும். இந்தப் பழக்கம் தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவர்களுக்கு எதிராக வெளிப்படுவதையும் குறிக்கும். தங்களுக்குக் கேடுண்டாகவே அவர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்ளாமல் போகிறார்கள்.
சோதோமிற்குத் தேவனுடைய தண்டனை கிடைத்தது. அது மிகவும் கடுமையாக இருந்தது. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாத ஜனங்கள் வசிக்கும் ஊரின்மீதும், தேவனுடைய தண்டனை வரும். சோதோமின்மீது வந்த தண்டனையை விட இது அதிகமாக இருக்கும்.
கோராசீன் பட்டணமே
கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுத்தி, சாம்ப-ல் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள். நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும். வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய் என்று சொல்-, (லூக் 10:13-15)
இயேசுகிறிஸ்துவின் அற்புதமான செய்கைகள் சில பட்டணங்களில் விசேஷமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தைக் கேட்டும், அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் அவருடைய வார்த்தைகள் உறுதிபண்ணப்பட்டும் அந்த பட்டணத்திலுள்ள ஜனங்கள் மனந்திரும்பவில்லை. ஆகையினால் அந்தப் பட்டணத்தாருக்கு நியாயத்தீர்ப்பு நாளில் மிகப்பெரிய கேடு நேரிடும் (மத் 11:20).
இயேசுகிறிஸ்துவின் பலத்த செய்கைகள் இந்தப் பட்டணங்களில் செய்யப்பட்டிருக்கிறது. இவை வானபரியந்தம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் இந்தப் பட்டணங்கள் பரலோகத்திற்கு சமீபமாக அழைத்து வரப்பட்டிருக்கிறது. பரலோகமே இந்த பட்டணங்களில் வந்து இறங்கியதுபோன்ற பலத்த செய்கைகளை இயேசுகிறிஸ்து இங்கு செய்திருக்கிறார்.
தேவன் இந்தப் பட்டணத்தார்மீது விசேஷித்த கிருபையையும் சிலாக்கியத்தையும் காண்பித்திருக்கிறார். இந்தப் பட்டணத்தார் மனந்திரும்ப வேண்டுமென்பதே தேவனுடைய திட்டம். தாங்கள் செய்த பாவங்களுக்கு மனம்வருந்தி இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்ப வேண்டும்.
தேவனுடைய கிருபையை இவர்கள் விசேஷமாக பெற்றிருந்தும், அதைத் தங்களுடைய ஆசீர்வாதத்திற்கு பயன்படுத்திக் கொள்ளாமல், இவர்கள் தேவனுடைய கிருபையை போக்கடித்துவிட்டார்கள். இதனால் தேவனுடைய தெய்வீக திட்டம் இவர்கள் மத்தியில் நிறைவேறாமல் போயிற்று. இவர்கள் மனந்திரும்பவில்லை. தாங்கள் பெற்று அனுபவித்த நன்மைகளுக்கு ஏற்றவாறு இவர்கள் நற்கனிகளைக் கொடுக்கவில்லை.
இயேசுகிறிஸ்து இந்தப் பட்டணத்தார் மத்தியில் செய்த பலத்த செய்கைகளை தீருவிலும் சீதோனிலும் செய்திருந்தால், அவர்கள் அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள். தீருவும் சீதோனும் புறஜாதியாருடைய பட்டணங்களாக இருந்தபோதிலும் அவர்கள் எப்போதோ மனந்திரும்பியிருப்பார்கள். இரட்டுடுத்தி சாம்பலில் உட்கார்ந்து விரைவில் மனந்திரும்ப வேண்டுமென்று, மனந்திரும்புவதிலும் ஒரு வேகத்தைக் காண்பிப்பார்கள்.
தேவனுடைய கிருபையை விருதாவாக பெற்றிருக்கிறவர்கள்மீது பேரழிவு வரும். அந்த அழிவு மிகவும் பயங்கரமானதாக இருக்கும். வானபரியந்தம் உயர்த்தப்பட்டவர்கள் பாதாள பரியந்தம் தாழ்த்தப்படுவார்கள். நியாயத்தீர்ப்பு நாளில் கோரேசீன் பட்டணத்தாருக்கும், பெத்சாயிதா பட்டணத்தாருக்கும் நேரிடுவதைப் பார்க்கிலும், தீரு சீதோன் ஆகிய பட்டணத்தாருக்கு நேரிடுவது இலகுவாயிருக்கும். கோரேசீன் பட்டணத்தாருக்கும் பெத்சாயிதா பட்டணத்தாருக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் பேரழிவு உண்டாகும்.
உங்களுக்கு செவிகொடுக்கிறவன்
சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டை பண்ணுகிறவன் என்னை அசட்டை பண்ணுகிறான், என்னை அசட்டை பண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார் (லூக் 10:16).
தம்முடைய ஊழியக்காரர்களை ஊழியத்திற்கு அனுப்பும்போது இயேசுகிறிஸ்து சில பொதுவான நியதிகளை கடைபிடிக்கிறார். ஜனங்கள் தம்முடைய ஊழியக்காரர்களை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்களோ அவ்வாறு தம்மையும் ஏற்றுக்கொள்வதாக இயேசுகிறிஸ்து அங்கீகரிக்கிறார். கிறிஸ்துவின் ஊழியக்காரர்களுக்கு செவிகொடுக்கிறவர்கள் அவருக்கும் செவிகொடுக்கிறார்கள். கிறிஸ்துவின் ஊழியக்காரர்களை அசட்டைபண்ணுகிறவர்கள் அவரையும் அசட்டைபண்ணுகிறார்கள். அவரை அனுப்பின பிதாவாகிய தேவனையும் அசட்டைபண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழியக்காரர்களை அங்கீகரியாமல் புறக்கணிக்கிறவர்கள் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவையும் பிதாவாகிய தேவனையும் அங்கீகரியாமல் புறக்கணிக்கிறார்கள்.