பாவம் செய்த விசுவாசியை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றிய இயேசுவின் உபதேசம்

 


பாவம் செய்த விசுவாசியை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றிய இயேசுவின் உபதேசம்


நீயும் அவனும் தனித்திருக்கையில்


உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய் (மத் 18:15).


விசுவாசிகள் மற்றவர்களுக்கு இடறலாக இருக்கக்கூடாது. மற்றவர்களும் விசுவாசிகளுக்கு இடறலாக இருக்க கர்த்தர் அனுமதிக்கமாட்டார். ஆயினும் யாராவது விசுவாசிகளுக்கு விரோதமாக குற்றம் செய்யும்போது, விசுவாசிகள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென்று இயேசுகிறிஸ்து உபதேசம்பண்ணுகிறார். இந்த பகுதியில் விளக்கப்பட்டிருக்கும் சம்பவம் விசுவாசிகளுக்கு இடையே நடைபெறும் பிரச்சனையாகும். விசுவாசிகளுக்கு வெளியிலிருந்து பிரச்சனை வரவில்லையென்றாலும், சபையிலுள்ள சக விசுவாசிகளிடமிருந்து பிரச்சனை வருவதற்கு வாய்ப்புள்ளது. 


ஒரு விசுவாசிக்கு விரோதமாக மற்றொரு விசுவாசி குற்றம் செய்யும்போது அந்த விசுவாசியின் குற்றத்தை, அவர் தனித்திருக்கும்போது உணர்த்தவேண்டும். ஒருவன் நமக்கு விரோதமாக குற்றம் செய்யும்போது, அதை அவனுக்கு தெரியப்படுத்தாமல், நமது உள்ளத்திலேயே வைத்து புலம்பிக்கொண்டிருக்கக்கூடாது. உள்ளத்தில் ஏற்பட்டிருக்கும் காயத்தை முற்ற விட்டுவிடக்கூடாது. வெளிக்காயத்தைவிட உள்காயம் ஆபத்தானது. 


வெளிக்காயத்தையும் ஆற்றவேண்டும். உள்காயத்தையும் ஆற்றவேண்டும். காயத்திற்கு தகுந்த மருந்தைக்கொடுத்து அதை குணப்படுத்தவேண்டும். நமக்கு விரோதமாக குற்றம் செய்கிறவரிடம், அவர் செய்ததை பக்குவமாக உணர்த்தி கூறவேண்டும். மருந்துபோட்டால் காயம் குணமாவது போல, நம் மனதிலுள்ள வருத்தத்தை அதற்கு காரணமானவரிடம் உணர்த்திக் கூறும்போது, நமது வருத்தமும் மறைந்துபோகும்.


சாதாரண குற்றம் என்றால் அதை விரைவில் சரி செய்து விடலாம். மிகவும் கடினமான குற்றம் என்றால், குற்றம் புரிந்தவனுக்கு, அவன் குற்றத்தை உணர்த்தவேண்டும், தனிமையான இடத்தில் அவனை கடிந்துகொள்ளவேண்டும். இந்த சம்பாஷணை நமக்கும் அவனுக்கும் மத்தியில் மாத்திரமே நடைபெறவேண்டும். பொதுவாக குற்றத்தை உணர்த்தும் போது குற்றம் புரிந்தவன் மனம்மாறி நமது ஆலோசனைக்கு செவிகொடுப்பான். 


நமக்கு செவிகொடுத்தால்  அந்த விசுவாசியை நாம் ஆதாயப்படுத்திக் கொள்ளலாம். செவி கொடுப்பது அவனுக்கு நல்லது. இத்துடன் பிரச்சனை முடிந்துவிடும். வருத்தமும் வேதனையும் மறைந்து போகும். சந்தோஷம் உண்டாகும். அதன்பின்பு அந்த குற்றத்தைப்பற்றி  திரும்ப திரும்ப பேசிக்கொண்டிருக்கக்கூடாது. முறிந்துபோன நட்பை மறுபடியும் புதுப்பித்துக்கொள்ளவேண்டும். 


குற்றம் செய்தவர்கள் எல்லோருமே மனந்திருந்துவதில்லை. எவ்வளவுதான் அவர்களுடைய குற்றத்தை உணர்த்தினாலும் அவர்கள் உணரமாட்டார்கள். ஆலோசனைக்கு  செவியை அடைத்துக்கொள்வார்கள். குற்றம் புரிந்தவன் நமக்கு செவிகொடாமற்போனால் நாம் என்ன செய்யவேண்டுமென்று கர்த்தர் ஆலோசனை கூறுகிறார். 


குற்றம் புரிந்தவன் குற்றத்தை ஒத்துக்கொள்வதில்லை. என்றால், அதற்காக நாம் வருத்தப்படக்கூடாது. இரண்டு மூன்று சாட்சிகளை நமக்கு ஆயத்தப்படுத்தவேண்டும்.   அவர்களுடைய வாக்கினால் சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும். குற்றம் புரிந்தவனோடு நாம் தனியாக பேசுவதற்குப் பதிலாக, இந்த சாட்சிகளையும் நம்மோடு கூட்டிப்போக வேண்டும்.  அவன் சொல்லுவதை நமக்கு மாத்திரம் தனியாக சொல்லுவதற்குப் பதிலாக, நம்மோடிருக்கும் சாட்சிகளுக்கு முன்பாக அவனை கூற வைக்கவேண்டும். சில சமயங்களில் நமக்கு செவிகொடாதவர்கள், நம்மோடு சிலர் சேர்ந்து வந்தால் செவிகொடுப்பார்கள்.


நம்மோடு கூடவரும் சாட்சிகளுக்கும் குற்றவாளி செவிகொடுக்கவில்லையென்றால் அந்த சம்பவத்தை சபைக்கு தெரியப்படுத்தவேண்டும். அவனை நீதிமன்றத்திற்கு இழுத்து சென்றுவிடக்கூடாது. இதுபோன்ற சம்பவத்தில் நாம் என்ன செய்யவேண்டுமென்று அப்போஸ்தலர் பவுல் விரிவாக உபதேசம்பண்ணியிருக்கிறார் (1கொரி 6). விசுவாசிகளுக்குள் வழக்கு உண்டானால், அவர்கள் வழக்காடும்படி பரிசுத்தவான்களிடத்தில் மாத்திரமே போகவேண்டும். அநீதக்காரரிடத்தில் போகக்கூடாது.


குற்றவாளி சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் நமக்கு அஞ்ஞானியைப்போலவும், ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக. குற்றவாளியோடு நமது நட்பை முறித்துக்கொள்ளலாம். அவரோடு நெருங்கி ஐக்கியமாக இருப்பதை தவிர்த்துக்கொள்ளலாம். ஆனால் எந்த சூழ்நிலையிலும் நமக்கு விரோதமாக குற்றம் செய்தவரை பழிவாங்கக்கூடாது. 


சில சமயங்களில் குற்றவாளிகளோடு நாம் நட்பாக பழகினாலும், அவர்கள் நமது நட்பை அங்கீகரிப்பதில்லை. நம்மைவிட்டு விலகிச் சென்றுவிடுவார்கள். போனால் போகட்டும் என்று விட்டுவிடவேண்டும். ஏனெனில் ஒருவன் ஒருமுறை நமக்கு குற்றம் செய்யும்போது அது அவனுடைய தவறாகும். அதே குற்றவாளி நமக்கு விரோதமாக மறுபடியும் குற்றம் செய்தால், அந்த குற்றத்தில் நமக்கும் பங்குள்ளது. நாம் அவனைவிட்டு விலகி வராமல், அவனுக்கு இடங்கொடுத்ததினால், அவன் நமக்கு விரோதமாக மறுபடியும் குற்றம் செய்வதற்கு நாமே வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துவிடுகிறோம். 


இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தமக்காகவே சபையை ஸ்தாபித்திருக்கிறார். அதை பாதுகாத்து பராமரிக்கிறார். சபையின் பரிசுத்தத்தையும், சமாதானத்தையும், ஒழுங்கையும் கர்த்தர் நேசிக்கிறார். சபையின் கட்டுப்பாடுகள் சபையிலுள்ள அங்கத்தினர்கள் அனைவருக்கும் உரியது. சபைக்கு வெளியே இருக்கும் புறஜாதி ஜனங்களை தேவன் நியாயம் விசாரிப்பார். சபையில் கிறிஸ்துவும் விசுவாசிகளும் இணைந்திருக்கிறார்கள். விசுவாசிகளுக்கு விரோதமாக செய்யப்படும் குற்றங்களை, இயேசுகிறிஸ்து தமக்கு விரோதமாக செய்யப்படும் குற்றமாகவே பாவிக்கிறார். 


நமக்கு விரோதமாக ஒரு விசுவாசி குற்றம் செய்யும்போது, நாம் அவனிடத்தில் போய், நாமும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை  அவனுக்கு உணர்த்தவேண்டும். அவன் நம்மிடத்தில் வரும் வரையிலும் காத்திருக்கக்கூடாது. நாமே அவனிடத்தில் போகவேண்டும். ஒரு வைத்தியர் நோயாளிகளை அவர்களுடைய படுக்கைகளில் சென்று விசாரித்து மருத்துவ சிகிச்சை கொடுப்பதுபோல, நாமும் குற்றவாளிகளிடத்திற்கு போகவேண்டும். 


நாம் தனித்திருக்கையில் அவனுடைய குற்றத்தை அவனுக்கு உணர்த்தவேண்டும். பொதுவாக நாம் செய்த குற்றங்கள் நமக்கு குற்றமாக தெரியாது. எல்லாமே சரியாகத்தான் தெரியும். ஆகையினால் நாம்தான் அவர்களிடத்தில்போய் அவர்களுடைய குற்றத்தை உணர்த்தவேண்டும். 


சிலர் தொடர்ந்து பாவம் செய்வார்கள். ஆனாலும் அவர்களுடைய மனச்சாட்சி அவர்களை கண்டிக்காது. மழுங்கிய மனச்சாட்சி  அவர்களுடைய பாவங்களை மறைத்துவிடும். இப்படிப்பட்டவர்களுக்கு அவர்களுடைய குற்றங்களை உணர்த்துவது மிகவும் அவசியம் 


நாம் தனித்திருக்கையில் அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்தவேண்டும். கிரேக்க மொழியில் உணர்த்துதல் என்பதற்கு அவன் செய்த தவறுகளைக்குறித்து அவனோடு  விவாதம்பண்ணுதல் என்று பொருள். குற்றம் பெரியதாகவும் தெளிவாகவும் இருந்தாலும், நாம் அவனிடத்தில் விசுவாசத்தோடும் மனத்தாழ்மையோடும் சென்று அவனுடைய குற்றத்தை உணர்த்தவேண்டும். 


ஒருவர் செய்த குற்றத்தை உணர்த்துவது கிறிஸ்தவ உபதேசமாகும். இயேசுகிறிஸ்து இதை அங்கீகரிக்கிறார். இதன் மூலமாக பாவிகளை மனந்திரும்புவதற்கு நேராக வழிநடத்த முடியும்.   குற்றத்தை உணர்த்தும்போது நாமும் குற்றவாளியும் தனித்திருக்கவேண்டும். அவனை கடிந்து கொள்ளவேண்டுமென்பது நமது நோக்கமல்ல. அவன் மனந்திரும்ப வேண்டுமென்பதே நமது பிரதான நோக்கமாக இருக்கவேண்டும். 


நமக்கு விரோதமாக ஒருவர் குற்றம் செய்தால், அந்த தவற்றை முதலாவது அவரிடம்தான் பேசவேண்டும். அவரிடம் பேசுவதற்கு முன்பாக மற்றவர்களிடம் போய் அந்த தவற்றைப்பற்றி பேசுவது முறையான செயலல்ல. இவ்வாறு செய்வதினால் அந்த நபர் மனந்திரும்பமாட்டார். நமது உள்ளத்திலும் அவரை மனந்திரும்ப வைக்கவேண்டும் என்னும் ஆவல் இல்லாமல், அவரை கண்டிக்கவேண்டும் என்னும் ஆசையே இருக்கும்.


குற்றத்தை தனிமையில் உணர்த்தும்போது  அது அவருடைய உள்ளத்தில் பேசும். குற்றம் செய்தவரை இரட்சிப்புக்கு நேராக வழிநடத்தலாம். குற்றம்புரிந்தவர் தன்  குற்றத்தை உணர்ந்து மனந்திரும்பும்போது, சமுதாயத்தில் மறுபடியும் அவர் இழந்துபோன அந்தஸ்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். 


குற்றவாளி நமக்கு செவிகொடுத்தால் அவனை நாம் ஆதாயப்படுத்திக்கொள்ளலாம்.  நம்மில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, நாம் அவனை திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்திலிருந்து பாவியை திருப்புகிறவன், ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவான் (யாக் 5:19,20). ஆத்துமாவின் இழப்பு மிகப்பெரிய இழப்பாகும். ஆத்தும ஆதாயம் சாதாரண ஆதாயமல்ல, மிகப்பெரிய ஆதாயம். 


இரண்டு மூன்று சாட்சிகள்


அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டுபோ (மத் 18:16).


ஒரு விசுவாசி நமக்கு செவிகொடாமற்போனால் நாம் சோர்வடைந்து விடக்கூடாது. மேலும் இரண்டு அல்லது மூன்று விசுவாசிகளிடம் அவனுடைய காரியங்களை தெரியப்படுத்தி நம்மோடே கூட்டிக்கொண்டே போகவேண்டும். நற்காரியங்களை செய்யும்போது  நாம் சோர்ந்து போகக்கூடாது. ஆரம்பத்தில் நமக்கு வெற்றி கிடைக்கவில்லையென்றாலும் முடிவில் வெற்றி கிடைக்கும் என்னும் நிச்சயத்தோடு முயற்சிபண்ணவேண்டும். நமக்கு அவன் செவிகொடாமற்போனால், வேறொரு வழியில் முயற்சி பண்ணிப்பார்க்கவேண்டும். 


இரண்டு மூன்று சாட்சிகளினால் சங்கதிகளெல்லாம்  நிலைவரப்படும். அதற்காக இரண்டொருவரை நம்முடனேகூட கூட்டிக்கொண்டு போகலாம். நம்மால் பேசமுடியாத காரியங்களை அவர்கள் நமக்காக பேசுவார்கள். நம்மைவிட அவர்கள் நிதானமாகவும் ஞானமாகவும் பேசி அவனுடைய தவற்றை அவனுக்கு உணர்த்துவார்கள். 


நன்மை செய்யும்போது விசுவாசிகள் மற்ற விசுவாசிகளுடைய உதவியையும் நாடவேண்டும்.  நன்மை செய்யும்போது மாத்திரமல்ல, மற்றவர்களை கடிந்து கூறும்போதும் மற்றவர்களுடைய உதவியை பெற்றுக்கொள்வது நல்லது. 


இரண்டு அல்லது மூன்று பேர் அவனுக்கு எதிராக சாட்சி கூறும்போது, அவன் தன் குற்றங்களை உணர்ந்து தன்னை தாழ்த்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த கடைசிக்காலத்தில் எல்லோராலும் நற்சாட்சி பெற்ற மனுஷனை காண்பது கடினம். அதேவேளையில் எல்லோரும் ஒரு மனுஷனைக் குறித்து தீய வார்த்தைகளை பேசமாட்டார்கள்.   தவறு செய்தவர்கள் உணர்த்தப்படும்போது அவர்கள் திருந்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது. 


இரண்டு மூன்றுபேர் நம்மோடு வந்து அவனோடு பேசியும் அவன் செவிகொடாமல் போனால், அவன் செய்த தவறை சபைக்கு தெரியப்படுத்தவேண்டும்.


சபையில் கட்டுப்பாடு பண்ணும் விதம்


    1. நமக்கு நாமே எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துக் கொள்ள வேண்டும். (மத் 18:15)  


    2. இரண்டு அல்லது மூன்று சாட்சிகளினால் நம்முடைய காரியம்  உறுதிபண்ணப் படவேண்டும். (மத் 18:16; 2கொரி 13:1)  


    3. சபையில் தீர்மானம் பண்ணும்போது, அது கண்டிப்புடனும், நீதியாகவும் இருக்க வேண்டும். மனந்திரும்புவதற்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும். மனந்திரும்பாத பட்சத்தில் சபையை விட்டுவிலக்கி வைக்கலாம். (மத் 18:17) மனுஷர் மன்னிக்கவில்லையென்றால் கர்த்தரும் மன்னிக்கமாட்டார்.          (மத் 6:14-15)          


புதிய ஏற்பாட்டுப் பிரமாணத்தின் பிரகாரம் ஒரு விசுவாசியைச் சபையை விட்டு தள்ளிவைக்கும் சூழ்நிலைகள்


    1. பாவம் (யோவான் 1:29, மத் 18:15-17)


    2. வேதவாக்கியத்திற்கு மாறான கள்ள உபதேசம் (ரோமர் 16:17) 


    3. கிறிஸ்துவை வெறுத்தல் (1கொரி 16:22) 


    4. கீழ்ப்படியாமையும், தாறுமாறான நடத்தையும் (2தெச 3:6,14-15) 


    5. தேவதூஷணம் (1தீமோ 1:19-20)              


    6. துர்உபதேசம் (தீத்து 3:10)                 


    7. ஆத்துமாவை அழிக்கும் பாவங்கள்  (1கொரி 5:1-13; 1கொரி 6:9-11)            


சபைக்கு தெரியப்படுத்து


அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும்  செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும், ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக (மத் 18:17). 


சில பேருடைய ஆவி கடினமாக இருக்கும்.  அவர்களுடைய இருதயமும் கடினமாக இருக்கும்.  யார் என்ன சொன்னாலும் அவர்கள் தங்கள் காதுகளில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களை குணப்படுத்தவே முடியாது என்று நாம் மனம் சோர்ந்து போகக்கூடாது.  சிலபேரிடம் தனியாக பேசினால் பலனிராது. அவர்களை சபைக்கு முன்பாக அழைத்துச் சென்று அவர்களுக்கு உணர்த்தினால்தான் அவர்களுக்கு புரியும். 


மென்மையாக பேசி, நிதானமாக நடந்துகொண்டால் சிலர் அதை ஏளனம் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கடின வார்த்தைகளும் கடிந்து கொள்ளுதலும்தான் உகந்தது. நாம் அவர்களை கடினமாக நடத்த வேண்டியதில்லை. அவர்களுடைய தவற்றை அவர்களுக்கு உணர்த்தினால் போதுமானது. 


ஒருவன் செய்த தப்பிதத்தை சபைக்கு முன்பாக தெரியப்படுத்தி, அவனுக்கும் அதை உணர்த்தி, அந்தக் காரியத்தை தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்துவிடவேண்டும். தேவன் தம்முடைய கிரியையை செய்ய            ஆரம்பித்துவிடுவார். தேவனுடைய சத்தம் மென்மையாக இருந்தாலும் அது வல்லமையாக கிரியை செய்யும்.


தவறு செய்தவனை தனித்திருக்கும்போது   உணர்த்தினால் சில சமயங்களில் அவன் அதற்கு செவிகொடுக்கமாட்டான். அப்படிப்பட்ட சமயங்களில்  அவன் செய்த தவற்றை சபைக்கு தெரியப்படுத்துவது நாம் அடுத்து செய்யவேண்டிய காரியமாகும். சபைக்கு எதைத் தெரியப்படுத்தவேண்டும் என்பதும் மிகவும் முக்கியமானது. 


சபை என்பது இங்கு கிறிஸ்தவ சபையையே குறிக்கிறது. இயேசுகிறிஸ்து இந்த சத்தியத்தை உபதேசம் பண்ணியபோது சபை முழுமையாக வளர்ச்சி பெறவில்லை. அப்போது அது கருவிலுள்ள ஒரு குழந்தையைப் போலிருந்தது. இங்கு சபை என்று கூறப்படுவது  தவறு செய்தவன் வசிக்கும் சமுதாயமாகும். அந்த சமுயதாயத்தின் தலைவர்களிடம் இவன் செய்த தவற்றை கூறவேண்டும். அவர்கள் நமது குற்றச்சாட்டை ஆராய்ந்து பார்த்து, அவனையும் சோதித்துப்பார்க்கவேண்டும். நமது குற்றச்சாட்டு ஆதாரமில்லாமல் தவறாக இருக்குமென்றால் அவர்கள் நம்மை கடிந்து கொள்ளட்டும். நமது குற்றச்சாட்டு ஆதாரத்தோடு வலுவாகவும் மெய்யாகவும் இருக்குமென்றால் அவர்கள் தவறு செய்தவனை கடிந்துகொள்ளட்டும். அவர்கள் அவனை மனந்திரும்புமாறு அழைக்கட்டும். 


அவன் சபைக்கும் செவிகொடாதிருப்பானானால் அவன் நமக்கு அஞ்ஞானியைப்போலவும், ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக. சபைக்கு செவிகொடாத அவனை சபையிலிருந்து வெளியேற்றிவிடவேண்டும். சமுதாயத்திலிருந்து விலக்கி வைத்துவிடவேண்டும். சமுதாயத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறவர்களை  அந்த சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைப்பது இயல்பு. 


தவறு செய்தவன் நமக்கு பிசாசைப்போன்று இருப்பானாக என்று இயேசு கூறவில்லை. அவன் அஞ்ஞானியைப்போலவும், ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக என்றே கூறுகிறார். இவர்கள் மறுபடியும் மனந்திரும்புவதற்கு வாய்ப்புள்ளவர்கள். மனந்திரும்பினால் இவர்களை சபையில் மறுபடியும் சேர்த்துக்கொள்ளலாம். பிசாசு ஒருபோதும் மனந்திரும்பமாட்டான். 


தவறு செய்தவன், சபையின் நெறிமுறைகளுக்கு கீழ்ப்படிந்து, தான் செய்த தவற்றிற்காக மனம் வருந்தி, தன்னை தாழ்த்தி மன்னிப்பு கேட்பானானால், சபை அவனை மறுபடியும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சபையின் ஐக்கியத்தை அவனுக்கு மறுபடியும்  கொடுக்கவேண்டும். அப்போது எல்லாமே நன்றாக இருக்கும். எல்லோருக்கும் சந்தோஷமாக இருக்கும். 


""அஞ்ஞானி''  என்னும் வார்த்தைக்கு புறஜாதியான் என்று பொருள். இந்த வசனத்திலும் மத் 6:7 ஆவது வசனத்திலும் மட்டுமே இந்த வாக்கியம் வருகிறது.  இவர்களிடத்தில் தேவஅன்பை வெளிப்படுத்த வேண்டும். இந்த நபரைக் கிறிஸ்துவிற்காக ஆதாயப்படுத்துவதற்கு அவரிடத்தில் ஆவிக்குரிய காரியங்களைக் கூறலாம். ஆயினும் அவர் மனந்திரும்பி வரவேண்டும். அப்போது நாம் அவரை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம்.  


கட்டுவதும் கட்டவீழ்ப்பதும்


 பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்          (மத் 18:18).


சபை ஒருபோதும் தன்னிச்சையாக செயல்படாது. சபையின் விதிமுறைகளுக்கு ஏற்பவே சபையானது செயல்படும். சபையின் அதிகாரம் இந்த வசனத்தில் விளக்கி கூறப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து பேதுருவுக்கு  கூறிய அதே காரியத்தையே இங்கு தமது சீஷர்கள் அனைவருக்கும் கூறுகிறார். 


ஊழியக்காரர்கள் கிறிஸ்துவின் வார்த்தையை விசுவாசத்தோடு பிரசங்கிக்கிறார்கள். தேவனுடைய பிரமாணத்தின்படியே சபையானது ஆளுகை செய்யப்படவேண்டும். சபை தேவனுக்கு உரியது என்பதையும், தேவன் சபையை நேசிக்கிறார் என்பதையும் ஊழியக்காரர்கள் தெளிவுபடுத்தவேண்டும். 


ஊழியக்காரர்கள் பூமியில் எவைகளை  கட்டுவார்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். சபையின் செயல்பாடுகள் கிறிஸ்துவின் உபதேசத்தை பின்பற்றவேண்டும். அப்போது கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு சபையின் மூலமாக வெளிப்படும். கிறிஸ்துவின் வார்த்தையும் சபையின் வார்த்தையும் ஒன்றுபோல் இருக்கும். சபையின் முடிவும் கிறிஸ்துவின் முடிவாக இருக்கும். 


கிறிஸ்துவின் வார்த்தை ஒருவிதமாகவும், சபையின் ஆளுகை வேறு ஒரு விதமாகவும் இருந்தால் அந்த சபை ஆவிக்குரிய சபையல்ல. கிறிஸ்து அந்த சபைக்கு தலையாக இருக்கமாட்டார். கர்த்தரைவிட்டு பின்வாங்கிப்போய்விட்ட இவர்கள் தங்களை சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டார்கள். 


கிறிஸ்து தமது சபையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் எதிர்பார்க்கிறார். சபையில் உள்ளவர்கள் கிறிஸ்தவ உபதேசத்திற்கு கீழ்ப்படிந்து நடக்கவேண்டும்.  சில சமயங்களில் சபையானது கர்த்தருடைய சித்தத்திற்கு விலகி சுயமாக தீர்மானம்பண்ணும். அதில் அவர்களுடைய சுய இச்சைகளும், பொறாமை குணமும் வெளிப்படும். பொறாமையினாலும், அநீதியினாலும் யாராவது ஒருவரை சபையைவிட்டு தள்ளி வைத்துவிட்டால் கிறிஸ்து தள்ளி வைக்கப்பட்ட அந்த நபர்மீது கரிசனையோடிருப்பார் (யோவா  9:34,35). 


சபைக்கு மேலும் ஒரு முக்கியமான அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பூலோகத்தில் அவர்கள் எவைகளை கட்டவிழ்ப்பார்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும். எந்த சபையாலும் அவிழ்க்க முடியாதபடி கட்ட முடியாது. மனந்திரும்பி மன்னிப்பு கேட்பதன் மூலமாக பாவியின் கட்டுகள் மறுபடியும் அவிழ்க்கப்படும்.  


தவறு செய்தவருக்கு தண்டனை கொடுக்கும்போது, அவருடைய தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்பதற்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும். அவர் தன் தப்பிதத்தை உணர்ந்து மன்னிப்பு கோரினால் அவரை மன்னித்து, அவருக்கு கொடுக்கப்படும்  தண்டனையையும் நிறுத்திவிடவேண்டும். 


தாங்கள் செய்த தவறுகளை உணர்ந்து  திருந்துகிறவர்களை, சபையின் ஐக்கியத்தில் மறுபடியும் இணைத்துக்கொள்ள வேண்டும். அப்போது அவர்களுக்கு பரலோகத்தின் சமாதானம் கொடுக்கப்படும். இந்த சமாதானத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவர்களுடைய இருதயம் தேவனோடு ஒப்புரவாகி இருக்கவேண்டும். 


பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால்


 அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 18:19).


விசுவாசிகள் ஜெபிக்கும்போது அந்த ஜெபத்திற்கு இயேசுகிறிஸ்து பதில் கொடுக்க ஆயத்தமாகயிருக்கிறார். யாக்கோபின் சந்ததியில் வந்திருக்கும் ஜெபிக்கும் விசுவாசிகள் தேவனிடத்தில் பல விண்ணப்பங்களை ஏறெடுக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய சமுகத்தை வீணாக தரிசிப்பதில்லை. 


வேதாகமத்தில் ஏராளமான வாக்குத்தத்தங்கள் உள்ளன. இவையெல்லாம் விசுவாசமுள்ள ஜெபங்களுக்கு தேவன் கிருபையாக கொடுக்கும் பிரதியுத்தரங்களாகும்.  நாம் தனியாக ஜெபித்தாலும் குழுவாக ஜெபித்தாலும் ஒருமனப்பட்டு ஜெபிக்கவேண்டுமென்று கிறிஸ்து நமக்கு உபதேசம்பண்ணுகிறார். இத்தனை பேர்தான் விண்ணப்பம்பண்ணவேண்டுமென்று பரலோகத்தில் வரைமுறை எதுவுமில்லை. எத்தனைபேர் வேண்டுமானாலும் ஜெபிக்கலாம். எல்லோரும் ஜெபிக்கவேண்டும். 


ஒரு காரியத்திற்காக விசுவாசிகள் ஜெபிக்கும்போது தாங்கள் வேண்டிக்கொள்ளுகிற காரியத்தைக்குறித்து ஒருமனப்பட்டிருக்கவேண்டும். அவர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து ஜெபித்தாலும் ஒருமனப்பட்டு ஜெபிப்பது அவசியம். விசுவாசிகள் ஒருமனப்பட்டு ஜெபிக்கும்போது அவர்கள் வேண்டிக்கொள்ளுகிற காரியம் பரலோகப் பிதாவினால் அவர்களுக்கு உண்டாகும். 


தேவன் சபைக்கு கட்டவும், கட்டவிழ்க்கவும் அதிகாரங்கொடுத்திருக்கிறார்.  சபை தன்னுடைய ஊழியத்தை செய்யும்போது சபையின் கட்டுப்பாட்டையும் ஒருமனப்பாட்டையும் காத்துக்கொள்ளவேண்டும். சபையின் கட்டுப்பாடு  ஒரு தனிப்பட்ட தனிநபரின் கையில் இல்லை. இரண்டுபேர் சேர்ந்தால்தான் குழுவாக செயல்படமுடியும். அவர்களும் ஒருமனப்பட்டு செயல்படவேண்டும். அவர்களுக்கு மத்தியில்  கருத்து வேறுபாடுகளும் குழப்பங்களும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. தேவனிடத்தில் பதிலை பெறவேண்டுமென்றால் விசுவாசிகள் தங்களிடத்திலுள்ள கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு ஒருமனப்படவேண்டும். 


சபையானது கர்த்தரிடத்தில் ஜெபிக்கும்போது சபையின் கட்டுப்பாட்டோடு ஜெபிக்கவேண்டும். தேவனுடைய சித்தத்திற்கு ஏற்றபிரகாரம் ஜெபிக்கவேண்டும். ஜெபத்தில் யாரையும் சபிக்கவேண்டியதில்லை. நம்முடைய குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு  ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணவேண்டும் (யாக் 5:16). 


தேவனுடைய சபையிலுள்ள விசுவாசிகள் ஒருமனப்பட்டு ஜெபிக்கும்போது அந்த ஜெபம் பரலோகத்தில் கேட்கப்படும். தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளப்படும் இந்த விண்ணப்பங்களுக்கு தேவன் பிரதியுத்தரம் கொடுப்பார். நாம் நமக்காகவும், மற்றவர்களுக்காகவும், நமக்கு இடையூறு பண்ணுகிறவர்களுக்காகவும் ஜெபிக்கும்போது கர்த்தர் நம்மையும் நமது ஜெபத்தையும் அங்கீகரிக்கிறார். 


யோபு மிகுந்த உபத்திரவத்தில் இருந்தார்.  அவருக்கு வேண்டியவர்கள் எல்லோரும் யோபுவுக்கு விரோதமாக பரியாசம்பண்ணினார்கள். உபத்திரவம் பண்ணினார்கள். யோபு அவர்களுக்காக ஜெபித்தார். அப்போது கர்த்தர் யோபுவின் உபத்திரவத்தை மாற்றிப்போட்டார். யோபு தனக்காக ஜெபித்தபோதல்ல, பிறருக்காக ஜெபித்தபோதே தேவனுடைய ஆசீர்வாதம் அவருக்கு உண்டாயிற்று.


மத் 18:18 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கிற சத்தியம் திரும்பவும் வலியுறுத்தப்படுகிறது. ""பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்'' இந்த வசனத்தில் இந்தக் காரியம் ""உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக் கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும்'' என்று வேறு விதமாகக் கூறப்பட்டிருக்கிறது.


இரண்டு சாட்சிகள் அல்லது மூன்று சாட்சிகள் சேர்ந்து ஒருவனுடைய குற்றத்தை உறுதி பண்ணலாம். (மத் 18:16-17) அதேவேளையில் இருவர் அல்லது மூன்றுபேர் தேவனுடைய சமூகத்தில் ஒருமித்து ஜெபம்பண்ணி, தேவனுடைய பதிலைப் பெற்றுக் கொள்ளலாம். இரண்டுபேர்        அல்லது மூன்றுபோர் ஒருமனப்பட்டு இருக்கும்போது அதுவே சபையாகிறது. அங்கே தேவனுடைய பிரசன்னம் இருக்கிறது. 


அவர்கள் நடுவில் இருக்கிறேன்


ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார் (மத் 18:20).


விசுவாசிகள் ஒருமனப்பட்டு ஒன்றுகூடி இருக்கும் இடங்களில் இயேசுகிறிஸ்து அவர்கள் நடுவிலே இருக்கிறார். விசுவாசிகள் பரிசுத்தமான நோக்கத்திற்காக கூடிவரவேண்டும். சபை கூடிவருவதை இயேசுகிறிஸ்து அங்கீகரித்து உற்சாகப்படுத்துகிறார். இந்த உலகத்தில் கிறிஸ்துவின் சபையார் தேவனுடைய பிரசன்னத்தை பிரத்தியட்சமாக வெளிப்படுத்துகிறார்கள். சபை கூடிவருவது கிறிஸ்துவின் சித்தம். சபை தொடர்ந்து கூடிவரவேண்டுமென்று இயேசுகிறிஸ்து விரும்புகிறார். 


திரளான எண்ணிக்கையில் விசுவாசிகள் கூடிவருவதற்கு வாய்ப்பில்லையென்றாலும், இரண்டு அல்லது மூன்று விசுவாசிகள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் கூடிவரலாம்.  இதுவும் தேவனுடைய சித்தமாகவே இருக்கிறது. நாம் விரும்புகிறதை நம்மால் செய்ய முடியாவிட்டாலும், நம்மால் முடிகிறதை நாம் செய்யவேண்டும். தேவன் இதை அங்கீகரிக்கிறார். 


இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே விசுவாசிகள் கூடிவரவேண்டும். சபையின் கட்டுப்பாட்டை அங்கீகரிக்கும் விதத்தில் அவர்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் கூடிவரவேண்டும். அவரை ஆராதனை செய்வதற்காக கூடிவரவேண்டும். ƒகிறிஸ்துவை ஆராதனை செய்யும்போது நமது முழுக்கவனமும்  இயேசுகிறிஸ்துவின் மீதே பதிந்திருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கூடிவரும் சக விசுவாசிகளிடம் நாம் ஐக்கியமாக இருக்கவேண்டும். 


தேவனை ஆராதிப்பதற்காக நாம் கூடிவரும்போது பரிசுத்த ஆவியானவரையும், கிறிஸ்துவின் கிருபையையும் நாம் சார்ந்திருக்கவேண்டும். பிதாவினிடத்தில் பிரவேசிப்பதற்கு கிறிஸ்துவே வழி என்பதை அங்கீகரிக்கவேண்டும். பிதாவோடு இயேசுகிறிஸ்து நமக்காக பரிந்து பேசுகிறார் என்பதையும் நமது உள்ளத்தில் நினைத்து அவரை துதிக்கவேண்டும். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நாம் கூடிவரவேண்டும். 


சபை கூடிவரும்போது தேவனுடைய பிரசன்னம் அங்கு விசுவாசிகள் நடுவில் இருக்கிறது. பரிசுத்தவான்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கேயே கர்த்தருடைய ஆலயம் இருக்கிறது. கர்த்தர் தமது ஆலயத்தில் வாசம்பண்ணுகிறார். 


இயேசுகிறிஸ்து விசுவாசிகள் மத்தியில் இருக்கிறார். அவர்களுடைய இருதயங்களில் வாசம்பண்ணுகிறார். இயேசுகிறிஸ்துவின் பிரசன்னம் ஆவிக்குரிய பிரசன்னமாகும். கிறிஸ்துவின் ஆவியானவர் விசுவாசிகளின் ஆவிகளோடு பிரசன்னமாக இருக்கிறார்.  ""நான் இருப்பேன்'' என்று வாக்குப்பண்ணாமல் ""நான் இருக்கிறேன்'' என்று வாக்குப்பண்ணுகிறார். ""அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்'' என்று இயேசுகிறிஸ்து வாக்குப்பண்ணியிருக்கிறார். நமக்கு முன்பாகவே அந்த இடத்திற்கு அவர் வந்துவிட்டார். நமக்கு முன்பாகவே அவர் ஆயத்தமாக இருக்கிறார். நாம் அங்கே அவரை காணலாம். 


இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்று இயேசுகிறிஸ்து வாக்குப்பண்ணுகிறார். ஜெபத்திற்கு சில சமயங்களில் ஒரு சிலரே கூடி வருகிறோம். இயேசுகிறிஸ்து இந்த சிறிய கூட்டத்தையும் அங்கீகரிக்கிறார்.  சில சமயங்களில் நாம் இரண்டு அல்லது மூன்றுபேர் மாத்திரமே கூடிவந்து ஒரு காரியத்திற்காக ஜெபிக்கவேண்டுமென்று விரும்புவோம். எல்லோரையும் அழைக்காமல் ஒரு சிலரை மாத்திரமே அழைப்போம். ஜெபத்தில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கவேண்டும் என்பது நமது விருப்பம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிறிஸ்து இங்கு நம் நடுவில் இருக்கிறார்.


சில சமயங்களில் திரளான விசுவாசிகள் கூடிச்சேர்ந்து ஜெபிக்கவேண்டுமென்று எல்லா விசுவாசிகளுக்கும் அழைப்பு கொடுப்போம். ஆனால் ஒரு சிலர் மாத்திரமே ஜெபத்தில் பங்குபெற வருவார்கள். ஜெபிப்பதற்கு திரளான கூட்டம் இராது. கூட்டம் அதிகமாக இல்லையென்றாலும், ஜெபிக்க வந்திருக்கிறவர்களின் விசுவாசம் வலுவுள்ளதாக இருக்கும். ஜெபமும் ஆராதனையும்  உற்சாகமாக இருக்கும். இவர்கள் நடுவிலும் இயேசுகிறிஸ்து இருக்கிறார். இரண்டுபேர் அல்லது மூன்றுபேர் இருந்தாலும், இயேசுகிறிஸ்துவும் அவர்களில் ஒருவராக அங்கிருக்கிறார். இயேசுகிறிஸ்து நம் மத்தியில் இருக்கும்போது இரண்டு அல்லது மூன்றுபேர் கூடி ஜெபிப்பது, இரண்டாயிரம் அல்லது மூன்றாயிரம் பேர் கூடி ஜெபிப்பதற்கு சமமாகும்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.