ஒருவனையும் அற்பமாக என்னக்கூடாது என்பது பற்றிய இயேசுவின் எச்சரிப்பு


ஒருவனையும் அற்பமாக என்னக்கூடாது என்பது பற்றிய இயேசுவின் எச்சரிப்பு


இடறல்கள் வருவது அவசியம்


இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ! (மத் 18:7).


உலகத்தில் ஏராளமான இடறல்கள் உள்ளன. இந்த இடறல்கள் வருவது அவசியம் என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார்.              எந்த மனுஷனும் இடறலடையவேண்டும் என்பது இயேசுகிறிஸ்துவின் விருப்பமல்ல. ஆயினும் எல்லா மனுஷருக்கும் இடறல் வருகிறது. இடறல் வருவது நிச்சயமாக இருக்கிறபடியினால் நாம் எல்லோருமே அதை எதிர்கொள்வதற்கு ஆயத்தத்தோடு இருக்கவேண்டும். 


இடறல்களுக்கான காரணங்களையும் இயேசுகிறிஸ்து விவரிக்கிறார். இடறல்  இல்லாமல் இருப்பது கூடாதகாரியம். ஆகையினால் நாம் மிகுந்த எச்சரிப்போடும், கவனத்தோடும், உறுதியோடும் இடறல்களை எதிர்கொள்ளவேண்டும். 


இடறல்களினிமித்தம் உலகத்திற்கு ஐயோ என்று கூறுகிறார். இடறல் வரும்போது இந்த உலகம் எச்சரிக்கையில்லாமலும், பாதுகாப்பு இல்லாமலும், கவனக்குறைவாகவும் இருக்குமென்றால் இந்த உலகத்திற்கு ஐயோ. நாம் வாழும் உலகம் தீமை நிறைந்தது. பாவங்களும், கண்ணிகளும், வருத்தங்களும், துன்பங்களும், இடறல்களும் இந்த உலகத்தில் நிறைந்துள்ளன. 


நாம் இந்த உலகத்தில் ஜீவிப்பது ஆபத்தான பாதையில் பிரயாணம் பண்ணுவதைப்போன்றது. மேடும் பள்ளமுமாக, குன்றும் குழியுமாக இந்த உலகத்தின் பாதை செம்மையில்லாமல் தாறுமாறாக உள்ளது. செல்லும் பாதையை குறிக்கும் கைகாட்டி பலகைகளிலும் தவறாக எழுதப்பட்டிருக்கிறது. எதையும் நம்பி இந்த உலகத்தில் ஒரு காரியத்தையும் செய்யமுடியவில்லை. 


இப்படிப்பட்ட பாவமான உலகத்தில் நாம் ஜீவித்தாலும், இயேசுகிறிஸ்துவின் அடிச்சுவடுகளை நாம் பின்பற்றும்போது நமக்கு ஒரு பாதுகாப்புள்ளது. தேவன் தம்முடைய வல்லமையினால் நம்மை பாதுகாத்துக்கொள்வார். வழியில் காணப்படும் எல்லா இடறல்களையும் மேற்கொள்வதற்கு தேவன் நமக்கு உதவிபுரிவார். 


இடறல் எந்த மனுஷனால் வருகிறதோ அந்த மனுஷனுக்கு ஐயோ. இடறல் தானாக வருவதில்லை. யாராவது ஒரு துன்மார்க்கன் மூலமாகத்தான் இடறல் வரும். இடறல் வருவது அவசியம் என்றபோதிலும், இந்த இடறல் யார் மூலமாக வருகிறதோ அவனை இயேசுகிறிஸ்து சபிக்கிறார். இடறல் உண்டுபண்ணுகிறவனுக்கு மன்னிப்பு இல்லை. அவன் அழிவுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறான். 


இடறல் உண்டாக்குகிறவனின் வாசற்படியில் அவனுடைய பாவம் படுத்திருக்கும். எந்த இடறலுக்கு இவன் காரணமாக இருக்கிறானோ அந்த இடறலே இவனை அழித்துப்போடும். நமது தேவன் நீதியானவர். ஆத்துமாக்களின் மதிப்பை அறிந்திருக்கிறவர். ஆத்துமாக்களை அழிப்பதற்காக இடறல் உண்டாக்கும் துன்மார்க்கரை கர்த்தர் சகித்துக்கொள்ளமாட்டார். பரிசுத்தவான்களின் நன்மைகளை விசாரிக்கிற கர்த்தர், அவர்களுக்கு இடறல் உண்டாக்குகிறவர்களை அதம்பண்ணிப்போடுவார்.


இடறல் உண்டாக்குகிறவர்களின் துன்மார்க்க கிரியைகளுக்காக அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய துன்மார்க்கத்தினால் வெளிப்படும் துன்மார்க்கமான கனிகளினாலும் அவர்களுக்கு தண்டனை உண்டு.  


தறித்து எறிந்துபோடு


 உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.  உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும் (மத் 18:8,9).


சில சமயங்களில் நமக்கு பிறர் மூலமாக இடறல் வராது. நமக்கு நாமே இடறலாக இருப்போம். நமது கையோ அல்லது நமது காலோ நமக்கு இடறலாக இருக்கும். அவ்வாறு இடறல் உண்டுபண்ணும் அவயவங்களை தறித்து எறிந்துபோடுமாறு இயேசுகிறிஸ்து ஆலோசனை கூறுகிறார். இதே உபதேசத்தை இயேசுகிறிஸ்து ஏற்கெனவே கூறியிருக்கிறார் (மத் 5:29,30).


இது கடினமான உபதேசம் போல தெரிகிறது. இயேசுகிறிஸ்து இந்த உபதேசத்தை வலியுறுத்துவதற்காக இதை இங்கு மறுபடியுமாக கூறுகிறார். நம்முடைய அவயவங்களில் ஏதாவது ஒன்று நமக்கு இடறல் உண்டாகுமானால், அதை நமது சரீரத்திலிருந்து அகற்றிப்போடவேண்டும். நமக்கு அந்த அவயவம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், அதை அகற்றிப்போட வேண்டுமென்பது கிறிஸ்துவின் உபதேசம். 


நாம் செய்யும் பாவங்கள் பலவற்றிற்கு நாமே காரணமாக இருக்கிறோம். நமது பாவ இச்சைகளும், அந்த இச்சைகளுக்கு இணங்கும் நமது சரீரத்தின் அவயவங்களுமே,               நமது பாவத்திற்கு காரணமாக உள்ளன. பிசாசு பாவம் செய்யுமாறு நம்மை சோதிக்கவில்லையென்றாலும், நமது சுய இச்சைகளினாலே நாம் இழுக்கப்பட்டு பாவத்தில் விழுந்துவிடுகிறோம்.


நாம் எவ்வளவுதான் நீதிமான்களாக இருந்தாலும், நம்மை பாவம் செய்யுமாறு தூண்டும் எல்லா உறவுகளிலிருந்தும், சூழ்நிலைகளிலிருந்தும் விலகி வந்துவிடவேண்டும். அவற்றை ஒதுக்கிவைத்துவிடவேண்டும். பாவம் செய்யும் ஆசைகளையும், பாவம் செய்யத் தூண்டும் சூழ்நிலைகளையும் நமக்கு அருகாமையிலேயே வைத்திருப்போமென்றால், பாவத்தில் சிக்கிவிடாமல் நம்மை பாதுகாப்பது இயலாத காரியம். நமது இருதயத்தின் ஆசைகளையும், சரீரத்தின் இச்சைகளையும் சிலுவையில் அறையவேண்டும்.


நமது இருதயத்தை சுய பரிசோதனை செய்து, பாவம் செய்யத்தூண்டும் ஆர்வமும் ஆசையும் நம்மிடத்தில் உண்டோ என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும். அந்த இச்சைகளை அவ்வப்போது கண்டுபிடித்து சிலுவையில் அறைந்துவிட்டால், பாவத்திலிருந்து நாம் தப்பித்துக்கொள்ளலாம்.


சில சமயங்களில் பாவமான சூழ்நிலைகள் நம்மை நெருங்கும்போது நமது மனச்சாட்சிக்கும், சரீரத்தின் அவயவங்களுக்கும் பெரிய போராட்டமே உண்டாகும். நமது நல்மனச்சாட்சியோடு நமது சரீரத்தின் அவயவங்கள் போராடாதவாறு அவற்றை தறித்து எறிந்துபோடவேண்டுமென்று இயேசுகிறிஸ்து ஆலோசனை கூறுகிறார். அது கண்ணாக இருந்தாலும், காலாக இருந்தாலும் நமது சுத்த மனச்சாட்சிக்கு இடையூறாக இருப்பதற்கு அவற்றை அனுமதிக்கக்கூடாது. 


நாம் இரண்டு கை உடையவனாய், இரண்டு கால் உடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவது பரிதாபமானது. அதற்குப் பதிலாக சப்பாணியாய், அல்லது ஊனனாய் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது நமக்கு நல்லது. அதுபோலவே இரண்டு கண் உடையவனாய் எரி நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும் ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது நமக்கு நலமாயிருக்கும். 


""மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள். ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்'' (ரோம8:13) என்று இதே உபதேசத்தை அப்போஸ்தலர் பவுலும்  வலியுறுத்துகிறார்.


பாவம் செய்யத் தூண்டும் கையோ, காலோ, கண்ணோ நமக்கு இல்லையென்றாலும்  பரவாயில்லை. இவை நம்மை பரலோகத்திற்கு செல்லவிடாமல் தடைபண்ணி நரகத்தில் தள்ளிவிடுகிறது. ஆகையினால் பாவமான அவயவங்களை சிலுவையில் அறைந்துவிட வேண்டும். இந்த அவயவங்களை சிலுவையில் அறையும்போது நமது சரீரம் மரித்துப்போகாது. அந்த அவயவங்களினால் நமது சரீரம் ஆளுகை செய்யப்படாது. அந்த அவயவங்கள் இல்லாமலேயே நமது ஆத்துமா நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கும். 


தேவதூதர்


இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமூகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 18:10).


பெரியவர்கள் சிறியவர்களை அற்பமாய் எண்ணக்கூடாது. சபையில் ஐசுவரியத்திலும், அந்தஸ்திலும் பெரியவர்கள் இருப்பார்கள். இவர்கள் தங்களைவிட வசதி குறைந்தவர்களை அற்பமாய் எண்ணக்கூடாது. சிறு பிள்ளைகளை நம்மிடத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று  இயேசுகிறிஸ்து ஏற்கெனவே ஆலோசனை கூறியிருக்கிறார் (மத் 18:2,4). 


விசுவாசத்தில் பலவீனமுள்ளவர்கள் சிறு பிள்ளைகளைப்போல இருக்கிறார்கள். இவர்கள் மந்தையிலுள்ள சின்ன ஆட்டுக்குட்டிகளுக்கு சமமானவர்கள். இவர்களை நாம் அற்பமாய் எண்ணக்கூடாது. அசட்டைபண்ணிவிடவும் கூடாது. அவர்களுடைய பலவீனங்களை ஏளனம் செய்யக்கூடாது. அவர்களுக்கு முன்பாக நம்மை பெருமைப்படுத்திக்கொள்ளக்கூடாது. நம்முடைய கருத்துக்களை மற்றவர்களுடைய மனச்சாட்சியில் வலுக்கட்டாயமாக திணிக்கக்கூடாது. 


ஒவ்வொருவருக்கும் ஒரு மனச்சாட்சி உள்ளது. பிறருடைய மனச்சாட்சிக்கு நாம் மதிப்பு கொடுத்து பழகவேண்டும். பிறரை அற்பமாக எண்ணாதபடி நாம் மிகுந்த எச்சரிப்போடு இருக்கவேண்டும். நமது பேச்சிலும்,      செயலிலும் நமக்கு மிகுந்த கவனம் தேவை. இவற்றில் கவனக்குறைவாக இருந்தால் இயேசுகிறிஸ்துவின் சிறியரை நாம் அற்பமாக எண்ணுவதற்கு வாய்ப்புள்ளது. அவர்களுக்கு நாம் இடறலாக இருப்போம். 


விசுவாசத்தில் குறைவுள்ளவர்களையும், ஐசுவரியத்திலும் அந்தஸ்திலும் குறைவுள்ள தமது பிள்ளைகளையும்கூட இயேசுகிறிஸ்து நேசிக்கிறார். அவர்களைப் பார்க்கும்போது அவர்கள் நமக்கு சமமானவர்கள் அல்ல என்று ஏளனம் பண்ணக்கூடாது. தேவன் அவர்களை கனப்படுத்தும்போது நாம் அவர்களை கனவீனப்படுத்தக்கூடாது. 


சிறியவர்களுக்குரிய மரியாதையை நாம் ஏன் கொடுக்கவேண்டும் என்பதற்கான காரணத்தையும் இயேசுகிறிஸ்து விவரிக்கிறார். அவர்களுக்குரிய தேவதூதர்கள் நமது பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிப்பதாக இயேசுகிறிஸ்து கூறுகிறார். 


தேவதூதர்கள் கர்த்தருடைய பிள்ளைகளுக்கும் தூதர்களாக இருக்கிறார்கள்.  பரலோகத்தின் பரமசேனையை நாம் விசுவாசத்தோடு நோக்கிப்பார்த்து, அவற்றை நம்முடைய சேனையென்று உரிமையோடு அழைக்கலாம். ஒவ்வொரு விசுவாசியை சுற்றிலும் கர்த்தருடைய சேனைத்திரள் பாதுகாப்பாக இருக்கிறது. தமது இரத்தக்கோட்டைக்குள் கர்த்தர் ஒவ்வொரு விசுவாசியையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார். கர்த்தரின் பலத்த கரத்திற்குள் பாதுகாப்பாக இருக்கும் விசுவாசிகளை எதிர்ப்பது சத்துருவுக்கு பரிதாபமான முடிவைத்தரும். தேவன் நம்மோடுகூட இருப்பதும், நமக்குரிய தேவதூதர்கள் நமக்காக பரலோகத்திலே பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிப்பதும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய சிலாக்கியமாகும். 


பரலோகத்தில் தேவதூதர்கள் தேவசமுகத்தில் நின்று தேவனை எப்போதும் துதித்துக்கொண்டிருக்கிறார்கள். தேவனை மகிமைப்படுத்துகிறார்கள். பரிசுத்த தூதர்கள் தேவனை துதிப்பது பரலோகத்தின் அலங்காரமாகும். தேவதரிசனத்தில் தேவனை துதிக்கும் தேவதூதர்களையும் தேவனோடு சேர்ந்தே காண்போம்.  


தேவதூதர்கள் பரிசுத்தவான்களுக்காக கர்த்தருடைய சமுகத்தில் எப்போதும் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பரிசுத்தவான்களுக்காக என்ன செய்யவேண்டுமென்று கர்த்தர் கட்டளை கொடுக்கிறாரோ அந்த கட்டளையை நிறைவேற்றுவதற்கு தேவதூதர்கள் எப்போதும் ஆயத்தமாக இருக்கிறார்கள். 


இரட்சிக்க வந்த மனுஷகுமாரன்


மனுஷகுமாரன் கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார் (மத் 18:11).


இயேசுகிறிஸ்து நமது இரட்சகர். பாவிகளை இரட்சிப்பதற்காகவே இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார். கெட்டுப்போனதை இரட்சிக்க மனுஷகுமாரனாகிய இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வந்திருக்கிறார். எல்லோரையும் இரட்சிக்கவேண்டுமென்று இயேசுகிறிஸ்து விரும்புகிறார். கிறிஸ்துவினுடைய இரட்சிப்பின் திட்டத்தில் தேவதூதர்கள் நமக்காக விண்ணப்பம்பண்ணுவதும் ஒரு பகுதியாக உள்ளது. கிறிஸ்தவ விசுவாசிகள் எல்லோருக்கும், அவரவருக்குரிய தேவதூதர்கள் தேவ சமுகத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்கள். ஆகையினால் நாம் எந்த விசுவாசியையும் அற்பமாய் எண்ணக்கூடாது. 


காணாமற்போனவர்களை தேடிக்கண்டுபிடித்து, தமது ராஜ்யத்தில் சேர்த்துக்கொள்வதற்காக இயேசுகிறிஸ்து வந்திருக்கிறார். நம்முடைய ஆத்துமா இயற்கையாகவே கெட்டுப்போன ஆத்துமாவாக இருக்கிறது. வழிதவறி காணாமல் போய்விட்டது.  பாதை தெரியாத ஒரு காட்டில் ஒருவர் பிரயாணம் பண்ணும்போது, வழிதவறி தவிப்பதுபோல நமது ஆத்துமாவும் தவிக்கிறது. இதுபோல வழிதவறி தப்பித்திரியும் ஆத்துமாக்களை இரட்சிப்பதற்காகவே இயேசுகிறிஸ்து வந்திருக்கிறார். நமக்கு சரியான பாதையை காண்பிக்கிறார். நம்மை கரம்பிடித்து வழிநடத்துகிறார். நாம் சேரவேண்டிய நித்திய மகிமைக்கு நம்மை அழைத்துச்செல்கிறார். 


இயேசுகிறிஸ்துவின் இரட்சிக்கும்  கிருபை எல்லோருக்கும் வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. ஆகையினால் நாம் யாரையும் அசட்டைபண்ணாமல் எல்லா விசுவாசிகளையும் கனப்படுத்தவேண்டும். இயேசுகிறிஸ்து ஒரு ஆத்துமாவை கனப்படுத்தும்போது, நாமும் அந்த ஆத்துமாவை கனப்படுத்தவேண்டும். கர்த்தருடைய சித்தத்திற்கு முரண்பட்டு, கனத்திற்குரிய அந்த ஆத்துமாவை கனவீனப்படுத்திவிடக்கூடாது.  


சிதறிப்போன ஒரு ஆடு


 உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளி-ருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப்போய்ச் சிதறிப்போனதைத் தோடாம-ருப்பானோ? அவன் அதைக் கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூறொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்                   (மத் 18:12,13).


இயேசுகிறிஸ்து ஓர் உவமையின் மூலமாக  தமது ஊழியத்தை விளக்குகிறார். நூறு ஆடுகளை உடைய மனுஷன், காணாமல்போன  ஒரு ஆட்டை தேடிக்கண்டுபிடித்து மிகுந்த சந்தோஷப்படுவான். தன்னிடத்தில் மீதமுள்ள  99 ஆடுகள் இருந்தாலும், காணாமல்போன அந்த ஒரு ஆட்டை மிகுந்த கரிசனையோடு தேடுவான். 


பாவத்தில் விழுந்துகிடக்கும் ஆத்துமா காணாமல்போன ஆட்டைப்போல இருக்கிறது.   தன்னிடத்திலுள்ள 99 ஆடுகளையும் மலைகளில் பாதுகாப்பாக விட்டு காணாமல் போன ஆட்டைத்தேடுவான். அதுபோல இயேசுகிறிஸ்துவும் தம்மிடத்திலுள்ள 99 ஆடுகளையும் சபையில் பாதுகாப்பாக விட்டு வைத்திருக்கிறார். காணாமல்போன ஒரு ஆட்டை தேடிக்கண்டுபிடிப்பதற்காக எல்லா இடங்களிலும் அலைந்து திரிகிறார். அந்த ஆட்டை கண்டுபிடிக்கும்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும். அங்கு ஏராளமான தேவதூதர்கள் இருந்தாலும், காணாமல் போன ஆடு கண்டுபிடிக்கப்பட்டதற்காக மிகுந்த சந்தோஷம் உண்டாகும். 


இயேசுகிறிஸ்து தமது மந்தையின் மீது அக்கறையும் கரிசனையுமுள்ளவர். மந்தையிலுள்ள ஒவ்வொரு ஆட்டின்மீதும் இயேசு பிரியமாக இருக்கிறார். ஒவ்வொரு ஆடும் அவருக்கே உரியது. அவரிடத்தில் ஏராளமான ஆடுகள் இருந்தாலும் அந்த ஆடுகளில் ஒன்றையும் இழந்துபோக அவர் விரும்புவதில்லை. அவர் நமது பிரதான மேய்ப்பராக இருக்கிறார். அவர் நமது நல்ல மேய்ப்பர். நாம் யாரும் காணாமல் போய்விடாதவாறு நம்மை மிகுந்த கவனத்தோடு பாதுகாத்து பராமரிக்கிறார். 


ஒருவனாகிலும் கெட்டுப்போவது


இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்தி-ருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல (மத் 18:14).


இயேசுகிறிஸ்து உலக இரட்சகர். எல்லோரும் இரட்சிப்படவேண்டுமென்பது அவருடைய இரட்சிப்பின் திட்டம். ஒருவனாகிலும் கெட்டுப்போவது கிறிஸ்துவின் சித்தமல்ல. சிறியோராக இருந்தாலும், பெரியோராக இருந்தாலும் எல்லோரும் இரட்சிக்கப்படவேண்டும். இதுவே அவருடைய இரட்சிப்பின் திட்டம். எல்லோரும் இரட்சிக்கப்படும்போதும் கிறிஸ்துவுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும். எல்லோருடைய இரட்சிப்புக்காக இயேசுகிறிஸ்து தமது சுய இரத்தத்தையே மீட்பின் கிரயமாக செலுத்தியிருக்கிறார். ஆகையினால் மந்தையிலுள்ள எல்லா ஆடுகள்மீதும் அவர் கரிசனையோடிருக்கிறார். அது சாதுவான ஆடாக இருந்தாலும், சேட்டைபண்ணும் ஆடாக இருந்தாலும் இயேசுகிறிஸ்துவின் அன்பு ஒருபோதும் மாறுவதில்லை. குறைந்துபோவதில்லை. 


இயேசுகிறிஸ்து தம்மை ""உங்கள் பிதா'' என்று அழைக்கிறார். பிதாவாகிய தேவனைக் குறிப்பிடும்போது அவர் ""என் பிதா'' (மத் 18:19) என்று கூறுகிறார். தம்முடைய சீஷர்களை கிறிஸ்து சகோதரர்கள் என்று கூற வெட்கப்படவில்லை. விசுவாசிகளில்  சிறியோர் மீதும் அன்பு கூருகிற இயேசு, அவர்களையும் தமது சகோதரராகவே பாவிக்கிறார். எல்லா விசுவாசிகளுக்கும் தேவனே பிதாவாக இருக்கிறார். தகப்பன் தன் பிள்ளைகளை பாதுகாத்து பராமரிப்பதுபோல நமது பரலோகப்பிதா நம்மை பாதுகாத்து பராமரிக்கிறார். பெற்றோருக்கு தங்கள் சிறு பிள்ளைகள்மீது அதிக பிரியமிருக்கும், அதிக கவனம் செலுத்துவார்கள். நமது பரமபிதாவும்  விசுவாசத்தில் குறைவுள்ளவர்கள் மீது கரிசனையோடிருந்து, அவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சி பெறுவதற்கு உதவிபுரிகிறார். 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.