சோதனை குறித்த இயேசுவின் எச்சரிப்பு

 

சோதனை குறித்த இயேசுவின் எச்சரிப்பு


இடறல் உண்டாக்குகிறவன்


 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக்கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்  (மாற்கு 9:42). 


விசுவாசத்தில் சிலர் குழந்தைகளாக இருக்கலாம். அவர்களுடைய ஆவிக்குரிய ஜீவியம் பலவீனமாக இருக்கலாம். அவர்களுடைய நடை தள்ளாடலாம். இதற்காக நாம் அவர்களுக்கு இடறல் உண்டாக்கிவிடக்கூடாது. இயேசுகிறிஸ்துவை மெய்யாக விசுவாசிக்கிறவர்கள் யாருக்கும் நாம்  இடறல் உண்டாக்காமல் எச்சரிப்போடு இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருக்கிற சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் இயந்திரக்கல்லை கட்டி, சமுத்திரத்தில் அவனை தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும் என்று இயேசுகிறிஸ்து எச்சரித்துக் கூறுகிறார். கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு இடறல் உண்டாக்குகிறவர்கள் மீது வரும் தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும். 


கழுத்தில்   ஏந்திரக்கல்லைக்கட்டி சமுத்திரத்தில் தள்ளிப்போடுகிறது யூதருடைய தண்டனை அல்ல. கிரேக்கரும், ரோமரும் குற்றவாளிகளுக்கு இப்படிப்பட்ட தண்டனைகளைக் கொடுத்தார்கள். (மத் 18:6; லூக்கா 17:2)


ஜீவனுக்குள் பிரவேசிப்பது


உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைத்தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப் பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய், தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்            (மாற்கு 9:43-48). 


இயேசுகிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் தங்களுடைய ஆத்துமாக்களை காத்துக்கொள்ளவேண்டும். அவற்றை அழித்துப்போடாமல் எச்சரிப்போடு ஜீவிக்கவேண்டும். நன்மை செய்வது முதலாவதாக நமது ஆத்துமாவில் ஆரம்பமாக வேண்டும். நமது ஆத்துமாவுக்கு நன்மை செய்து அதை ஆரோக்கியமாக வைத்திருக்கவேண்டும்.  மற்றவர்கள் நன்மை செய்வதை நாம் தடைபண்ணவும் கூடாது. அதே வேளையில் நாம் நன்மை செய்வதையும் ஏதாவது தடைபண்ணினால் அதை அனுமதிக்கவும் கூடாது. நமது கடமையை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்கும் காரியங்களை மேற்கொள்ளவேண்டும். நம்முடைய ஆத்துமாவை பாவம் செய்யத் தூண்டும் காரியங்களைக்குறித்து மிகவும் எச்சரிப்போடு இருந்து, பாவம் செய்யாமல் ஜீவிக்கவேண்டும். நம்முடைய ஆத்துமாவின் ஆரோக்கியத்திற்கு தடையாக இருப்பவர்கள், நமக்கு நெருங்கியவர்களாக இருந்தாலும், மிகவும் வேண்டியவர்களாக இருந்தாலும் அவர்களெல்லோரையும் விட்டு  நாம் விலகி வரவேண்டும். 


சில சமயங்களில் நம்முடைய கையோ அல்லது நம்முடைய கண்ணோ அல்லது நம்முடைய காலோ நமக்கு இடறல் உண்டாக்கலாம். அல்லது நமது சரீரத்திற்கு கண்ணும், கையும், காலும் எவ்வளவு முக்கியமானதோ அதுபோல நமக்கு மிகவும் முக்கியமானவர்கள் நமக்கு இடறல் உண்டாக்கலாம். நம்முடைய நெருங்கிய சிநேகிதர்கள் நம்மை பாவத்தின் பாதையில் வழிநடத்திச் செல்லலாம். ஒரு பாவி நமக்கு சிநேகிதராக இருப்பதில் தவறில்லை. ஆனால் பாவம் நமக்கு சிநேகமாகிவிடக்கூடாது. நம்முடைய சிநேகிதர் நம்மை பாவம் செய்வதற்கு  வழிநடத்தினால் அந்த சிநேகத்தை முறித்துவிட்டு அவரை விட்டு விலகிவிடவேண்டும். பாவத்தைவிட்டு விலகி வரவில்லையென்றால் இயேசுகிறிஸ்துவைவிட்டு விலகிப்போய்விடும் ஆபத்து நமக்கு ஏற்பட்டுவிடும். பாவம் செய்யத் தூண்டும் சிநேகிதரா அல்லது பாவத்திலிருந்து நம்மை இரட்சிக்கும் இயேசுகிறிஸ்துவா, இவர்களில் நமக்கு யார் வேண்டுமென்று நாம் தான் தீர்மானம் பண்ணவேண்டும். 


நமக்கு நம்முடைய கையோ, கண்ணோ அல்லது காலோ இடறல் உண்டாக்கினால் அவற்றை தரித்துப்போடவேண்டுமென்று இயேசுகிறிஸ்து நமக்கு ஆலோசனை கூறுகிறார்.  நமது பாவ இச்சைகளை சிலுவையில் அறையவேண்டும். நம்முடைய ஜீவியங்களில் கர்த்தருக்கு விரோதமாக எழும்பியிருக்கும் பாவமான விக்கிரகங்களை நம்மைவிட்டு அகற்றவேண்டும். நம்மை பாவம் செய்யத் தூண்டும் பிசாசின் அந்தகார கிரியைகளை நம்மைவிட்டு துரத்தவேண்டும். நம்முடைய ஆத்துமாவை முழுமையாக இரட்சிப்பதற்காக ஒரு சில இழப்புக்களை சந்திப்பதில் தவறு ஒன்றுமில்லை. நமது சுயத்தை நம்மால் அழிக்க முடியாமல் போனாலும், அதை  நாம் மறுதலிக்கவேண்டும். 


நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பதே நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தின் இலக்கு.  தேவனுடைய ராஜ்யத்தில் நாம் பிரவேசிக்க வேண்டும் என்பதற்காகவே இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் தமது ஜீவனையே நமக்காக ஒப்புக்கொடுத்தார். நம்முடைய சரீரம் அங்கவீனமாக இருந்தாலும், நம்மால் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும். ஆனால் நம்முடைய ஜீவியத்தில் பாவம் இருக்குமென்றால், நம்முடைய ஆத்துமா பாவத்தினால் நிறைந்திருக்குமென்றால், நாம் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளவில்லை யென்றால், நம்மால்  தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவே முடியாது. 


நாம் ஊனராக இருக்கலாம், சப்பாணியாக இருக்கலாம், ஒற்றைக்கண்ணனாக இருக்கலாம். சரீரத்தில் இப்படிப்பட்ட குறைகள் இருந்தாலும் நம்மால் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும். நாம் முடவனாக இருந்தாலும் நமக்குள் நித்திய ஜீவன் இருக்கிறது. தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கு நித்திய ஜீவனே பிரதானம். நமது சரீரத்தில் எல்லா அவயவங்களும் குறைவில்லாமல் இருந்தாலும், நமக்குள் நித்திய ஜீவன் இல்லையென்றால், நம்மால் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கவே முடியாது. ஆகையினால் நித்திய ஜீவனை சுதந்தரிப்பதற்காக நாம் எதையும் இழப்பதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும்.  நமது சரீரத்தின் அவயவத்தைப்போல, நமக்கு நெருக்கமான, பிரியமான காரியம் எதுவாக இருந்தாலும் அது நமது நித்திய ஜீவனுக்கு விரோதமாக இருக்குமானால், அவற்றை நம்மைவிட்டு அகற்றிவிடவேண்டும். 


நம்முடைய சரீரத்தில் ஒரு குறைவுமில்லாமல் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உடல் ஊனனாய்   தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது நமக்கு நலமாயிருக்கும். நம்மிடத்திலுள்ள பாவம் மரிக்கவேண்டும். இல்லையேல் நாம் மரித்துப்போவோம். நாம் பாவத்தினால் ஆளுகை செய்யப்பட்டால், அந்தப் பாவம் நம்மை அழித்துப்போடும். 


அவியாத அக்கினியுள்ள நரகத்தைப்பற்றி இயேசுகிறிஸ்து எச்சரித்துக் கூறுகிறார். அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்குமென்று நரகத்தைப்பற்றி விவரிக்கிறார். இந்த எச்சரிப்பின் வாக்கியம் மிகவும் முக்கியமானது. ஆகையினால் இயேசுகிறிஸ்து மூன்றுமுறை இந்த எச்சரிப்பின் வாக்கியத்தை திரும்ப திரும்ப கூறுகிறார். 


பாவிகளுடைய மனச்சாட்சி அவர்களைத் தொடர்ந்து குற்றப்படுத்தும். சாகாத புழுவைப்போல அது அவர்களை தொடர்ந்து வருத்தும். தேவனுடைய கோபாக்கினை அவர்கள்மீது நிரந்தரமாக தங்கியிருக்கும். அவியாத அக்கினியைப்போல தேவனுடைய கோபம் அவர்கள்மீது பற்றியெரியும். ஜீவனுள்ள தேவனுடைய கோபாக்கினை பாவிகள்மீது வெளிப்படுவதினால் அதன் விளைவு மிகவும் பயங்கரமாக இருக்கும். துன்மார்க்கருக்கு வரும்  ஆக்கினைத்தீர்ப்பினால் அவர்கள் நரகத்தில் நித்தியமாக மரிப்பதற்காக ஜீவிக்கப்போகிறார்கள். 


""நரகத்திலே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்''  என்று இயேசுகிறிஸ்து நரகத்தைப்பற்றிச் சொல்லுகிறார். நரகத்திற்குப் போகிறவர்கள் அனுபவிக்கும் வேதனையை இந்த வசனம் விளக்குகிறது. புழு என்னும் சொல் மனுஷனைக் குறிக்கும்.  நரகத்தில் அதிக ஆக்கினை இருக்கும். ஆகையினால் மனுஷர் ஒவ்வொருவரும் அங்கு போகாமல் தப்பித்துக் கொள்வது நல்லது. அங்கு போகும் ஜீவன்கள் அக்கினியால் சாகாமலும், அவியாமலும் தொடர்ந்து வேதனைகளை அனுபவித்துக் கொண்டேயிருப்பார்கள். அந்த வேதனைக்கு ஒரு முடிவேயிராது.  நியாயத்தீர்ப்பின்போது துன்மார்க்கனுடைய சரீரமும், ஆத்துமாவும் நரகத்திற்குத் தள்ளப்படும். 


உப்பு நல்லதுதான் 


எந்தப் ப-யும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.  உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்              (மாற்கு 9:49,50).


இந்த வசனத்திற்கு வேதபண்டிதர்கள் பலவிதமாக வியாக்கியானம் கூறுகிறார்கள்.  எல்லா பலியும் உப்பினால் உப்பிடப்படும். அதுபோலவே எல்லா மனுஷனும் அக்கினியினால்  உப்பிடப்படுவான். ஆகையினால் நமக்குள்ளே உப்புடையவர்களாக இருக்கவேண்டும். மோசேயின் பிரமாணத்தின்படி எல்லா பலியும் உப்பினால் உப்பிடப்படவேண்டும். பலியை பாதுகாப்பதற்காக இந்த உப்பு சேர்க்கப்படவில்லை. இந்த பலி தேவனுடைய பந்தியில் போஜனமாக இருப்பதினால் சாரமுள்ளதாக இருப்பதற்காக, இது உப்பிடப்படுகிறது. 


மனுஷனுடைய சுபாவம் இயல்பாகவே துன்மார்க்கமானது. இதை மாம்ச சுபாவம் என்று அழைக்கிறோம். இந்த மாம்ச சுபாவத்தில்  உப்பிடப்படவேண்டும். அப்போதுதான் நம்முடைய மாம்சத்தை தேவனுக்கு உகந்த சுகந்த பலியாக செலுத்த முடியும். நம்முடைய சரீரங்களை பரிசுத்தமும் தேவனுக்கு பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் (ரோம 12:1). இதுவே நாம் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. தேவனுடைய சமுகத்தில் நாம் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால் நாம்  உப்பினால் உப்பிடப்படவேண்டும். நமது ஆத்துமாக்களில் கிருபையின் சாரம் இருக்கவேண்டும். நம்முடைய இருதயங்களில் கிருபை நிறைந்திருக்கவேண்டும். நமது மாம்ச சுபாவத்திலுள்ள எல்லா அசுத்தங்களும், கபடுகளும், துன்மார்க்க சிந்தனைகளும் நம்மைவிட்டு நீக்கப்படவேண்டும். 


நம்முடைய பேச்சு கிருபை நிறைந்ததாகவும், உப்பினால் சாரம் ஏற்றப்பட்டதாகவும் இருக்க வேண்டும். நம்முடைய வாயிலிருந்து துன்மார்க்கமான சம்பாஷணை எதுவும் வெளியே வரக்கூடாது.  நாம் புசிக்கும்போது சுத்தமான மாம்சத்தை புசிப்பதுபோல, நமது வாயிலிருந்து சுத்தமான வார்த்தைகளே வெளிவரவேண்டும். கிருபையுள்ள உப்பு நமது மனச்சாட்சியை சுத்தமாக வைத்திருக்கும். குற்றவுணர்விலிருந்து  நமது மனச்சாட்சி உப்பினால் சுத்திகரிக்கப்படும். நமது இருதயம் சுத்தமாக்கப்படும்போது, இயேசுகிறிஸ்துவினுடைய சிறியவர்களை, நமது வாயின் வார்த்தைகளினால் குற்றப்படுத்தமாட்டோம். நமது கிரியைகளினால் அவர்களுக்கு இடறல் உண்டாக்கமாட்டோம். நம்மிடத்தில் கிருபையின் உப்பு இருந்தால் மாத்திரம் போதாது. உப்பின் சாரமும் நேர்த்தியாக இருக்க வேண்டும். உப்பு சாரத்தை இழந்துவிட்டால் அதனால் பயன் ஒன்றுமில்லை.  வேறு எந்த உபாயத்தினாலும் அதற்கு சாரம் ஏற்றமுடியாது. 


தேவனுடைய கிருபையின் உப்பினால் நாம் உப்பிடப்படாவிட்டால், அக்கினியினால் உப்பிடப்படுவோம். மாம்சத்தின் இச்சைக்கு ஏற்ப ஜீவிக்கிறவர்களை அந்த இச்சையே அழித்துப்போடும். அக்கினி மாம்சத்தை பட்சித்துப் போடுவதுபோல, அவர்களுடைய மாம்ச இச்சை அவர்களுடைய மாம்சத்தை பட்சித்துப்போடும். மாம்சத்தின் கிரியைகளை சிலுவையில் அறையாதவர்களுக்கு அழிவு நிச்சயம் வரும். பாவிகள்மீது கர்த்தருடைய பயங்கரமான நியாயத்தீர்ப்பு வரும் என்பதை நினைவுகூர்ந்து, நமது பாவ வழிகளை விட்டு விலகி, பரிசுத்தமாக ஜீவிக்கவேண்டும். 


மாற்கு 9:43-48 ஆகிய வசனங்களில் மனுஷருடைய பாவங்கள் விளக்கப்பட்டிருக்கிறது. இந்த ஜீவனில் நமக்குத் தடையாக இருக்கும் காரியங்களிலிருந்து விடுதலை பெற்று நித்திய ஆக்கினையிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும். 


 ஒவ்வொரு பலியும் பலியிடப்படும்போது பாதுகாப்பின் அடையாளமாக அது உப்பிடப்படும். (லேவி 2:13) இந்த வசனத்தில் நித்திய அக்கினி என்பது ஓயாது எரிந்து கொண்டிருக்கும் அக்கினியைக் குறிக்கிறது. ஒவ்வொரு பாவியும் நரகத்தின் அக்கினியினால் உப்பிடப்படுவான். (ஏசா 66:24) சோதோமின்மீது உப்பு மழைபோலபொழியப்பட்டது. (உபா 29:23) இந்த வசனத்தில் உப்பைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் காரியம் நரகத்தின் பயங்கரத்தையே குறிக்கிறது.


 மாற்கு 9:34-50 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் பாவங்கள் சகோதரரிடையே ஒற்றுமையையும், சமாதானத்தையும் அகற்றிப்போடும். ஆகையினால் அந்தப் பாவங்களை விட்டு விலகி, சகோதரருக்குள்ளே சமாதானமாக ஜீவிக்க வேண்டும். இங்கு கூறப்பட்டிருக்கும் பாவங்கள்.


    1. சுயமேன்மை (மாற்கு 9:34)


    2. இருமனம் (மாற்கு 9:38-39)


    3. இடறல்கள் (மாற்கு 9:42)


    4. சரீரத்தின் இச்சைகள் (மாற்கு 9:43-48

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.