பிசாசுகளை துரத்தாதபடி சீஷர்கள் தடுத்தல்

 

பிசாசுகளை துரத்தாதபடி சீஷர்கள் தடுத்தல்


இயேசுவை பின்பற்றாதவன்


அப்பொழுது யோவான் அவரை நோக்கி: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால், அவனைத் தடுத்தோம் என்றான்           (மாற்கு 9:38). 


தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று சீஷர்கள் தர்க்கம்பண்ணுகிறார்கள். அதே சமயத்தில் இயேசுகிறிஸ்துவை பின்பற்றாதவர்கள் யாரும் இயேசுவுக்காக எந்த ஊழியமும் செய்யக்கூடாது என்றும் அவர்கள் தடைபண்ணுகிறார்கள். யோவான் இயேசுகிறிஸ்துவிடம் வந்து ஒரு சம்பவத்தைக் கூறுகிறான். தங்களைப் பின்பற்றாதவன் ஒருவன் இயேசுவின் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவதைத் தாங்கள் கண்டதாக அறிவிக்கிறான். அவன் இயேசுகிறிஸ்துவை பின்பற்றாததினால் அவனை தடுத்து விட்டதாகவும் கூறுகிறான். 


இது மிகவும் விநோதமான சம்பவம். இயேசுகிறிஸ்துவை பின்பற்றாத ஒருவன் இயேசுவின் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவன் இயேசுவைப் பின்பற்றாத போதும், அவனிடத்தில் பிசாசுகளை துரத்தும் வல்லமை இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் சீஷராக அழைக்கப்பட்டவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் வல்லமை ஒரு காற்றைப்போல தமக்கு இஷ்டமான திசையில் வீசுகிறது. காற்றை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரமில்லை. அந்த காற்று தனக்கு இஷ்டமான திசையில் வீசுவதுபோல, கிறிஸ்துவின் வல்லமையும் அவருக்கு இஷ்டமானவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. 


கிறிஸ்துவின் கிருபை பிரத்தியட்சமான சபைக்கு மாத்திரம் என்று யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அவர் எல்லோருக்கும் கிருபை கொடுக்கிறவர். நல்லோர்மீதும் பொல்லார்மீதும் மழையை பெய்யப்பண்ணுகிறவர்.  பட்சபாதமில்லாமல் நன்மை செய்கிறவர். ஆயினும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே பிசாசுகளை துரத்தும் வல்லமை பெற்றிருக்கிறவன், கிறிஸ்துவின் சபையில் அங்கத்தினராக இல்லாமல் இருப்பதுதான் ஆச்சரியமான காரியம். 


இயேசுவின் நாமத்தினால் அற்புதம் செய்கிறவன் அவருடைய  அப்போஸ்தலர்களோடு சேர்ந்து ஐக்கியமாக இருக்கவேண்டும். அவர்களோடு சேர்ந்து இவனும் இயேசுகிறிஸ்துவை பின்பற்றவேண்டும்.  ஆனால் இவனோ மற்ற அப்போஸ்தலர்களோடு சேராமல் தனியாக ஊழியம் செய்து கொண்டிருக்கிறான். ஒருவேளை எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுகிறிஸ்துவை பின்பற்றுவதற்கு இவனுக்கு மனமில்லாமல் இருக்கலாம். 


இவனுடைய ஊழியத்தில் சீஷர்கள் பிரியப்படவில்லை. ஆகையினால் இவன் இயேசுவின் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துகிறதை சீஷர்கள் கண்டு  அவனை தடுக்கிறார்கள். தங்களைப்போல அவனும் கிறிஸ்துவை பின்பற்றினால்தான் இயேசுவின் நாமத்தை அவன் பயன்படுத்த வேண்டுமென்று, அவனுடைய ஊழியத்தையே தடுத்துவிடுகிறார்கள்.


ஒரு சிலர் இயேசுகிறிஸ்துவை பின்பற்றுவார்கள். ஆனால் அவர்கள் மற்ற விசுவாசிகளோடு சேர்ந்து ஐக்கியமாக இருக்கமாட்டார்கள். நம்மோடு ஒருவர் ஐக்கியமாக இல்லை என்பதற்காக அவரிடத்தில்  தேவனுடைய வல்லமை இல்லை என்றும் நினைக்கக்கூடாது, இருக்கக்கூடாது என்றும் நாம் தீர்மானம்பண்ணக்கூடாது. தம்முடைய அன்பை இயேசுகிறிஸ்து எல்லோருக்கும் வெளிப்படுத்துகிறார். நம் எல்லோருடைய இரட்சிப்புக்காக கிறிஸ்து இயேசு கல்வாரி சிலுவையில் தமது இரத்தத்தை சிந்தினார். இரட்சிக்கப்பட்டவர்கள் சபையில் சேர்ந்து மற்ற விசுவாசிகளோடு ஐக்கியமாக இருப்பது அவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பிரயோஜனமாக இருக்கும். இருப்பினும் நம்மோடு ஐக்கியமாகயிராத விசுவாசிகளை நாம் குறை கூறவும் கூடாது. 


இயேசு கிறிஸ்து மாற்கு 9:37#இல் கூறிய காரியம் யோவானின் மனதைத் தொட்டது. இயேசுவைப் பின்பற்றாத ஒருவன் அவருடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினான். அதை யோவான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகையினால் அவனைத் தடுத்தான். ஆனால் இயேசு கிறிஸ்துவோ ""இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக் கொள்ளுகிறான்'' என்றார். (மத் 10:40)


அவனை தடுக்க வேண்டாம்


அதற்கு இயேசு: அவனைத் தடுக்க வேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ்செய்கிறவன் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்குசொல்லமாட்டான். நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்தி-ருக்கிறான்       (மாற்கு 9:39,40).


தம்மை பின்பற்றாமல் தம்முடைய நாமத்தினால் பிசாசுகளை துரத்துகிறவனை தடுக்கவேண்டாமென்று இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் கூறுகிறார். அவன் நன்மை செய்கிறான். நன்மை செய்கிறவனை  தடைபண்ணக்கூடாது. நன்மை செய்வதில் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் அதை தடைசெய்வது விவேகமல்ல. நன்மை செய்யும்போது ஒழுங்கும் கிரமமுமாக செய்யாமல், அதில் சில குறைபாடுகள் இருக்குமென்றால், அதற்காக நன்மை செய்வதையே நிறுத்திவிடக்கூடாது. குறையில்லாமல் நன்மை செய்வது மேன்மையானது. 


சுவிசேஷத்தை நாம் அன்பினால் அறிவிக்கவேண்டும். ஆனால் சிலரோ வஞ்சகத்தினால் அறிவிக்கிறார்கள். எப்படியாவது கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார் என்று பவுல் சந்தோஷப்படுகிறார் (பிலி 1:18).  தம்மை பின்பற்றாமல் ஊழியம் செய்கிறவனை தடைபண்ண வேண்டாம் என்பதற்கு இயேசுகிறிஸ்து இரண்டு காரணங்களைக் கூறுகிறார். அவையாவன : 


1. இயேசுவின் நாமத்தினால் அற்புதம் செய்கிறவன் எளிதாய் அவரைக்குறித்து தீங்கு சொல்லமாட்டான்.     பரிசேயரும் வேதபாரகரும் இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாக தீங்கு சொல்வதைப்போல, இயேசுவின் நாமத்தினால் ஊழியம் செய்கிறவன் தீங்கு சொல்லமாட்டான். 


2. இயேசுகிறிஸ்துவின் ஊழியம்  சாத்தானுக்கு விரோதமாக நடத்தப்படும் யுத்தமாகும். இயேசுவுக்காக ஊழியம் செய்கிறவர்கள் எல்லோருமே இயேசுவின் சேனையில் சாத்தானுக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிறார்கள். இயேசுவின் விசுவாசிகள் எல்லோரையும் நாம் காணும்போது, அவர்களை வேறுபிரித்து பார்க்காமல், அவர்களும் இயேசுவின் சேனையை சேர்ந்தவர்கள் என்றும், சாத்தானுக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிறவர்கள் என்றும்  நாம் காணவேண்டும். 


நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்று இயேசுகிறிஸ்து தமது சீஷர்களிடம் அறிவிக்கிறார். இந்த உலகத்தில் இயேசுகிறிஸ்துவுக்கும் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலுக்கும் ஆவிக்குரிய யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த யுத்தத்தில் இயேசுகிறிஸ்துவோடு இராதவன் அவருக்கு விரோதியாயிருக்கிறான்  (மத் 12:30). அதுபோலவே அவருக்கு விரோதமாயிராதவன் அவருடைய பட்சத்திலிருக்கிறான். 


இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவன் சாத்தானை ஏற்றுக்கொள்கிறான். ஆனால் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றுகிறவனோ, கிறிஸ்துவுக்கே உரியவன்.  அவன் ஒருவேளை நம்முடைய ஐக்கியத்தில் இணையாதவனாக இருந்தாலும், அவனும் கிறிஸ்துவை சேர்ந்தவன். அவனும் நம்முடைய பட்சத்திலிருக்கிறான் என்று அவனை அங்கீகரித்து சேர்த்துக்கொள்ளவேண்டும். 


""அவனைத் தடுக்க வேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ்செய்கிறவன் எளிதாய் என்னைக் குறித்துத் தீங்குசொல்லமாட்டான்''  என்று இயேசுகிறிஸ்து சொல்லுகிறார். மோசே இந்தப் பாடத்தைத் தனது அனுபவத்தில் ஏற்கெனவே கற்றிருக்கிறார். (எண் 11:26#29) இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகள் சக விசுவாசிகளை நேசிப்பார்கள். தங்களைப் போலவே அவர்களையும் இயேசுவின் விசுவாசிகள் என்று அங்கீகரிப்பார்கள். தாங்கள் செய்யும் ஊழியங்களைப் போலவே அவர்களுடைய ஊழியங்களும் முக்கியமானவை என்று நினைப்பார்கள்.   இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அற்புதங்களைச் செய்கிறவன் அவருடைய நாமத்திற்கு அவகீர்த்தி உண்டு பண்ணமாட்டான். ஒருவன் இயேசு கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுகிறானா என்பதை அவனுடைய ஆவிக்குரிய ஜீவியத்திலிருந்து வெளிப்படும் கனிகளினாலே அறியலாம். வேதாகமத்தின் அடிப்படை உபதேசங்களுக்கு முரணாக உபதேசிப்பவர்களோடு நாம் பங்காளிகளாக இருக்கவேண்டாம். மற்றபடி இயேசுவின் பிள்ளைகள் எல்லோருமே நமக்கு கிறிஸ்துவிற்குள் சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் இருக்க வேண்டும்.  

       

என் நாமத்தினிமித்தம்


 நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிற படியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மாற்கு 9:41). 


தம்முடைய சீஷர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் நன்மை செய்கிறவர்களை இயேசுகிறிஸ்து ஆசீர்வதிக்கிறார். தம்முடைய நாமத்தினிமித்தம் தம்முடைய பிள்ளைகளுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்க கொடுக்கிறவன்கூட தன்னுடைய பலனை அடையாமல் போவதில்லை. இது கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு கொடுக்கப்படும் சிலாக்கியமாகும். நாம் கிறிஸ்துவை சேர்ந்தவர்களாக இருந்தால் நமக்கு ஒரு மேன்மை  உண்டு. தேவன் நம்மை பராமரிக்கிறார். தம்முடைய குடும்பத்தில் நம்மையும் அங்கத்தினராக சேர்த்து நம்மை போஷிக்கிறார். அவருடைய சரீரத்தில் நாமும் அவயவமாக இருக்கிறோம்.


கிறிஸ்தவ விசுவாசிகளில் தரித்திராக இருக்கிறவர்களுக்கு இயேசுவின் நாமத்தினாலே நன்மை செய்யவேண்டும். நாம் செய்யும் நன்மையை இயேசுகிறிஸ்து அங்கீகரித்து அதற்குரிய பிரதிபலனை நமக்கு நிச்சயம் கொடுப்பார். கிறிஸ்தவ விசுவாசிகளில் சிறியவர்களாக இருக்கிறவர்களுக்கு செய்யப்படும் உதவிகளை தமக்கே செய்யப்பட்டதாக இயேசுகிறிஸ்து அங்கீகரிக்கிறார். ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவினுடையவர்கள். நம்முடைய நற்கிரியைகளை இயேசுகிறிஸ்து பரிசுத்தப்படுத்துகிறார். 


ஒரு சில விசுவாசிகள் நம்மைப்போல சிந்தியாமல் வித்தியாசமாக சிந்திக்கலாம். நம்மைப்போல கிரியைசெய்யாமல் வேறுவிதமாக கிரியை நடப்பிக்கலாம். அதற்காக அவர்களை  வெறுத்து ஒதுக்கிவிடக்கூடாது. இயேசுகிறிஸ்துவின் ராஜ்யத்தில் அவர்களும் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்து நமக்கு நன்மை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம்மிடத்தில் குறைகள் இருந்தாலும் அதை அவர் கிருபையாக மன்னித்து நமக்கு உதவி செய்யவேண்டுமென்று ஜெபிக்கிறோம். அதுபோலவே நாமும் மற்ற விசுவாசிகளுக்கு உதவி செய்யவேண்டும். அவர்களிடத்தில் குறைகள் இருந்தாலும் நமது உதவிகளை நிறுத்திவிடக்கூடாது. 




 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.