சீஷர்களின் வாக்குவாதம்

 

சீஷர்களின் வாக்குவாதம்


எவன் பெரியவனாயிருப்பான்


அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்ஜியத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள் (மத் 18:1).


இயேசுகிறிஸ்து தாழ்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். இந்த பூமியில் கிறிஸ்துவைப்போல தாழ்மையுள்ளவர்கள் வேறு ஒருவரும் இல்லை. சீஷர்கள் மத்தியில் ஒரு விவாதம் உண்டாயிற்று. பரலோக ராஜ்ஜியத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்னும் கேள்வி அவர்களுடைய உள்ளத்தில் உண்டாயிற்று.  தங்கள் சந்தேகத்தை அவர்கள் இயேசுவிடம் கேட்கிறார்கள். ""எவன்'' என்பது எந்தப் பெயரை உடையவன் என்றே பொருள்படும். அவர்கள் ""எந்த குணமுடையவன்'' பரலோக ராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் என்று கேட்கவில்லை. 


சீஷர்கள் பரலோக ராஜ்யத்தின்  உபதேசத்தை அதிகமாக கேட்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்கும் பரலோக ராஜ்யத்தின் சத்தியத்தை உபதேசித்திருக்கிறார்கள்.  ஆயினும் பரலோக ராஜ்யத்தைக்குறித்த தெளிவான சிந்தனை அவர்களிடத்தில் காணப்படவில்லை. பரலோக ராஜ்யத்தின் வெளிப்படையான ஆடம்பர தோற்றத்தையும் அதன் அதிகாரத்தையுமே நோக்கிப் பார்க்கிறார்கள். 


தேவனுடைய ராஜ்யம் விரைவில் வரப்போகிறது என்று சீஷர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த ராஜ்யத்தில் தங்களுக்குரிய ஸ்தானம் எதுவாக இருக்கும் என்பதை தீர்மானம்பண்ணுவதில்  சீஷர்கள் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். நடைபெறப்போகும் சம்பவங்களைக்குறித்து காலதாமதம் பண்ணாமல் முன்னமே பேசிக்கொள்வது மிகவும் நல்லது. 


சீஷர்களோ மாம்ச சிந்தையோடிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவோடு  பாடுகளை அனுபவிப்பதற்கு அவருடைய வல்லமையையும், கிருபையையும் எவ்வாறு பெற்றுக்கொள்வது என்று இயேசுகிறிஸ்துவிடம் கேட்கவில்லை. அவரோடு ஆளுகை செய்யும்போது யாருக்கு உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும் என்பதையே தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். 


இந்த சீஷர்களைப்போலத்தான் தற்காலத்து விசுவாசிகளில் அநேகர் தங்களுடைய சிலாக்கியங்களையும், மேன்மைகளையும் பற்றி கேட்கவும் பேசவும் விரும்புகிறார்கள். அதே வேளையில் தேவனுடைய ராஜ்யத்தில் ஊழியம் செய்யவேண்டும் என்பதையும் பாடுகளை அனுபவிப்பதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும் என்பதையும் சிந்தித்துப் பார்ப்பதேயில்லை.


பரலோக ராஜ்யத்தில் யாரெல்லாம் இடம் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் எல்லோருமே  பாக்கியவான்கள் என்பது சீஷர்களுடைய கருத்து. மெய்யாகவே பாக்கியவான்கள் எல்லோருமே பெரியவர்கள்தான். 


பரலோக ராஜ்யத்தில் எல்லா பரிசுத்தவான்களுக்கும் சம அந்தஸ்து இராது என்பது சீஷர்களுடைய எண்ணம். எல்லா பரிசுத்தவான்களும் கனமுள்ளவர்கள். ஆயினும் அந்த கனத்தில் வித்தியாசமுண்டு. எல்லோரும் ஒன்றுபோல ஒரே அளவில் கனமுள்ளவர்களாக இருப்பதில்லை என்று சீஷர்கள் நினைக்கிறார்கள். ஒவ்வொருவருமே தாங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். சீஷர்கள் தங்களுடைய மாம்ச சிந்தையின் பிரகாரமாக பரலோக ராஜ்யத்தின் காரியங்களை சிந்தித்துப் பார்க்கிறார்கள்.


""பரலோகராஜ்ஜியத்தில் எவன் பெரியவனாயிருப்பான்'' என்னும் இந்தக் கேள்வி ஊழியர்கள் மத்தியில் இன்றும் பிரபலியமாக இருக்கிறது. ஊழிய ஸ்தாபனங்களின் வளர்ச்சி, பணபலம், அதிகாரம், கூட்டங்களுக்கு ஆள் சேர்வது, ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, எந்த ஊழியக்காரர் பெரியவர் என்று ஜனங்கள் ஒருவரையொருவர் எடைபோட்டுப் பார்க்கிறார்கள். நாம் மனந்திரும்பி, பிள்ளைகளைப்போல ஆகவேண்டும். அப்போது தான் பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும்.   இவ்வுலக ராஜ்ஜியத்தில் பெரியவனாக இருக்க வேண்டுமென்றால் அதற்குத் தேவைப்படும் தகுதிகள் வேறே. பரலோக ராஜ்ஜியத்தில் நுழைவதற்கு தேவைப்படும் தகுதிகள் வேறே. உலக ராஜ்ஜியத்தைப் பார்ப்பதுபோல நாம் பரலோக ராஜ்ஜியத்தைப் பார்க்கக்கூடாது. (மத் 4:17)


பிள்ளைகளைப்போல ஆகிறவன் 


இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி: நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 18:2,3).


பரலோக ராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்பது சீஷர்களின் கேள்வி. ஆனால் இயேசுகிறிஸ்துவோ அவர்களுக்கு தாழ்மையைக்குறித்து உபதேசம் பண்ணுகிறார். ஒரு சிறு பிள்ளையை தம்மிடத்தில் அழைத்து அதை அவர்கள் நடுவே நிறுத்துகிறார். தாழ்மை என்னும் பாடத்தை கற்றுக்கொள்வது மிகவும் கடினம். தாழ்மையைக் கற்றுக்கொள்வதற்கு நமது ஜீவியத்தில் பல வாய்ப்புக்கள் வருகின்றன. பல வழிகளும், பல உபாயங்களும் உண்டாகின்றன. வாய்ப்புக்கள் இருந்தாலும் தாழ்மையைக் கற்றுக்கொள்ள நாம் விரும்புவதில்லை.


நாம் சிறு பிள்ளைகளைப் பார்க்கும்போது அவர்களை அசட்டையாக பார்க்கக்கூடாது. இயேசுகிறிஸ்து சிறு பிள்ளைகளைப் பார்ப்பதுபோல நமது பார்வையும் அமைந்திருக்கவேண்டும். இயேசுகிறிஸ்து சிறு பிள்ளைகளை தாழ்மைக்கு எடுத்துக்காட்டாக காண்கிறார். அப்படிப்பட்ட ஒரு சிறு பிள்ளையை  இயேசுகிறிஸ்து தம்மிடத்தில் அழைத்து அதை சீஷர்கள் மத்தியில் நிறுத்துகிறார். சீஷர்கள் அந்த சிறு பிள்ளையோடு விளையாட வேண்டுமென்பது இயேசுவின் நோக்கமல்ல. அந்த சிறு பிள்ளையின் மூலமாக அவர்கள் தாழ்மை என்னும் சத்தியத்தை கற்றுக்கொள்ள வேண்டும். 


வளர்ந்த பெரியவர்களும், பராக்கிரமசாலிகளும், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களும் சிறு பிள்ளைகள் மத்தியில் இருப்பதை தவிர்க்க விரும்புகிறார்கள். அவ்வாறு தவிர்க்காமல் அவர்களோடு நேரம் செலவு செய்யவேண்டும். அவர்களோடு பேசவேண்டும். அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளைக் கொடுக்கவேண்டும். அவர்களை பராமரிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக சிறு பிள்ளைகளின் குணாதிசயங்களை பார்த்து அவர்கள் மூலமாக நல்ல பழக்க வழக்கங்களை பெரியவர்களும் கற்றுக்கொள்ளவேண்டும். 


நாமும் மனந்திரும்பி பிள்ளைகளைப்போல ஆகவேண்டும். அவ்வாறு ஆகவில்லையென்றால் நாம் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டோம். நம்முடைய மனம் மாற்றமடையவேண்டும். நமது பெருமையான சுபாவம் மாறி நமக்குள் தாழ்மையான சுபாவம் வரவேண்டும். இரட்சிக்கப்படும்போது நமது மனது மாற்றமடைகிறது. இது ஆத்துமாவில் உண்டாகும் மாற்றம். இந்த மாற்றத்திற்கு பின்பும் நம்முடைய ஜீவியத்தில் மேலும் பல மனமாற்றங்கள் உண்டாகவேண்டும். 


கர்த்தரைவிட்டு பின்வாங்கிப் போகும் மனதை மாற்றவேண்டும்.  ஒவ்வொரு முறையும் நாம் பாவம் செய்வதற்காக முன்னேறிச் செல்லும்போது, நாம் மனந்திரும்பி பாவத்தின் பாதையில் செல்லாமல் கர்த்தரிடத்தில் திரும்பி வரவேண்டும். நமது ஆவிக்குரிய ஜீவியத்தில் மனமாற்றம் ஒருமுறை மாத்திரம் நடைபெற்றால் போதாது. பரிசுத்த ஆவியானவர் உணர்த்துகிற பிரகாரமாக நம்முடைய மனம் அவ்வப்போது மாற்றமடைந்து  ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சி பெறவேண்டும்.


நாம் மனந்திரும்பி பிள்ளைகளைப்போல ஆகவேண்டும். நாம் தேவனுடைய கிருபையினால் மனமாற்றமடையும்போது சிறு பிள்ளைகளைப்போல ஆவோம். மனமாற்றும் கிருபை நம்மை சிறுபிள்ளைகளாக்கும். சிறு பிள்ளைகள் எதற்கும் கவலைப்படாது. நாமும் ஒன்றுக்குங் கவலைப்படாமல் எல்லாவற்றையும் பரலோகப் பிதாவின் பாதத்தில் சமர்ப்பித்து விடவேண்டும் (மத் 6:31).  


சிறு பிள்ளைகள் மனத்தாழ்மையோடிருக்கும். ஐசுவரியவான் வீட்டுப்பிள்ளைகள்கூட ஏழை வீட்டு பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடும். ஒருவருக்கொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாக  இருக்கும். சிறு பிள்ளைகள் மேட்டிமையானவைகளை சிந்தியாமல் தாழ்மையானவர்களுக்கு இணங்கும் (ரோம 12:16). 


சிறு பிள்ளை பருவம் என்பது கற்றுக்கொள்ளும் பருவமாகும். நாமும் மனந்திரும்பி பிள்ளைகளைப்போல ஆகவேண்டியதன் அவசியத்தை இயேசுகிறிஸ்து வலியுறுத்துகிறார். ஏனெனில் நாம் மனந்திரும்பி பிள்ளைகளைப்போல ஆகாவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டோம். 


சீஷர்கள் இயேசுகிறிஸ்துவிடம் ""பரலோக ராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான்'' என்று கேள்வி கேட்கிறார்கள். பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசித்துவிடலாம் என்னும் நம்பிக்கை அவர்களிடத்தில் உள்ளது. ஆகையினால்தான் ""பரலோக ராஜ்யத்தில் யார் பிரவேசிப்பார்கள்'' என்று கேட்காமல் ""அங்கு எவன் பெரியவனாயிருப்பான்'' என்று கேட்கிறார்கள். 


இயேசுகிறிஸ்துவோ இவர்களுக்கு பதில் கூறும்போது பரலோக ராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்பதை விளக்காமல்,  மனந்திரும்பி பிள்ளைகளைப்போல ஆகாதவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று கூறிவிடுகிறார். பெருமையினாலும் பேராசையினாலும் வரக்கூடிய பேராபத்தை இயேசுகிறிஸ்து இங்கு உணர்த்துகிறார். பரலோகத்தில் தூதர்கள் பெருமையினால் பாவம் செய்தார்கள். அதற்காக அந்த தூதர்கள் பரலோகத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.  நாமும் தாழ்மையை தரித்துக்கொள்ளவில்லை யென்றால் பரலோகத்தில் நமக்கும் இடமில்லை. நாம் மனந்திரும்பி பிள்ளைகளைப்போல ஆனால் மாத்திரமே பரலோகத்திற்குள் நம்மால் பிரவேசிக்கமுடியும். 


முதலாவது உயிர்த்தெழுதலில் பங்குபெறுகிறவர்கள் மட்டுமே இயேசு கிறிஸ்து இந்த பூமியை ஆளுகை செய்யும்போது இராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும் இருப்பார்கள்.   ஆயிர வருஷ அரசாட்சியில் இரட்சிக்கப் படாதவர்கள் இருப்பார்கள். அவர்கள் ஆளுகை செய்வதில்லை. தேவனுடைய ராஜ்ஜியத்தை அவர்கள் சுதந்தரிக்கவும் மாட்டார்கள்.  


சிறுபிள்ளைகளுக்கு உலக ஆசையோ, பணஆசையோ, பதவி ஆசையோ இராது. விசுவாசிகளும், சிறுபிள்ளைகளைப்போல உலக ஆசைகளில் சிக்கிக்கொள்ளாதவாறு இருக்க வேண்டும்.   (மத் 23:5-12)


இந்த உலக ராஜ்ஜியத்தில்  துன்மார்க்கரும், நீதிமான்களும் கலந்திருக்கிறார்கள். வயலில் கோதுமையும், களையும் சேர்ந்திருப்பதுபோல இருக்கிறார்கள். ஆனால் பரலோக ராஜ்ஜியத்திலோ நீதிமான்கள் மட்டுமே இருப்பார்கள். பரலோக ராஜ்ஜியத்திற்குள் நுழைவதற்கு முதலாவது தகுதி இயேசு கிறிஸ்துவைத் தன்னுடைய சொந்த ஆண்டவராகவும், இரட்சகராகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தன் பாவங்களுக்காக மனந்திருந்தி, இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். (மத் 13:11, யோவான் 3:3)


தன்னை தாழ்த்துகிறவன்


ஆகையால் இந்தப் பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் (மத் 18:4).


இயேசுகிறிஸ்து தாழ்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். சிறு பிள்ளையைப்போல தன்னை தாழ்த்துகிறவன் பரலோக ராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான். தன்னை தாழ்த்துகிற விசுவாசியே நல்ல விசுவாசி. அவனே கிறிஸ்துவுக்கு பிரியமானவன். கிறிஸ்துவின் சிலாக்கியங்களை தாழ்மையுள்ள விசுவாசிகளே தாராளமாக பெற்றுக்கொள்வார்கள். தாழ்மையுள்ள ஊழியக்காரர்களே இந்த உலகத்தில் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ய தகுதியுள்ளவர்கள். இவர்களே கிறிஸ்துவின் ஆசீர்வாதங்களை பரிபூரணமாக அனுபவிப்பார்கள்.  


தன்னுடைய சுயாதீன சித்தத்தின் பிரகாரம் ஒரு நபரை அல்லது ஒரு காரியத்தை ஏற்றுக்கொள்ளவோ அல்லது புறக்கணிக்கவோ மனுஷனுக்கு அதிகாரம் உள்ளது. கீழே கொடுக்கப்பட்டிருக்கிற காரியங்களில் மனுஷன் தன் சுயாதீன சித்தத்தைப் பயன்படுத்தித் தீர்மானம் பண்ணுகிறான்.


    1. தேவன் (மத்  12:50; மாற்கு 3:35)


    2. கிறிஸ்து (மாற்கு 8:34; 1யோவான் 3:6,10)  


    3. பரிசுத்த ஆவியானவர் (மத் 12:31-32)


    4. வார்த்தை (மத் 5:19; 1யோவான் 2:5)


    5. சாத்தான் (ரோமர் 6:16-23)


    6. பாவம் (யோவான் 8:34)             


    7. சட்டங்கள் (ரோமர் 13:2)


    8. இரட்சிப்பிற்குத் தேவனுடைய நிபந்தனைகள் (யோவான் 3:15-20)  


சிறு பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.  இந்த உலகராஜ்ஜியத்தில் தன்னை உயர்த்துகிறவனே பெரியவனாயிருப்பான். ஆனால் சுவிசேஷம் உலகக்காரியங்களுக்கு நேர்எதிரானது. சுவிசேஷம் தாழ்மையை வலியுறுத்துகிறது. உலகம் பெருமையை மதிக்கிறது. பரலோக ராஜ்ஜியத்தில் தன்னைத் தாழ்த்துகிறவனே பெரியவனாயிருப்பான்.


ஏற்றுக்கொள்கிறவன்


இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான் (மத் 18:5).


இயேசுகிறிஸ்து தாழ்மையுள்ளவர்களை பராமரிக்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கு பல கேள்விகளும் பயங்களும் உண்டாகும். தங்களை ஒருவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்களே என்று தாழ்மையுள்ளவர்கள் பயப்படுவார்கள். தாழ்மையுள்ளவர்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்படி அவரை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் கிறிஸ்துவையே ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு செய்யப்படும் எல்லா நன்மைகளும் கிறிஸ்துவுக்கே செய்யப்பட்டதாக கணக்கிடப்படும்.


ஒரு விசுவாசிக்குச் செய்யப்படும் நல்ல உதவிகள் கர்த்தருக்கே செய்யப்படும் காரியமாக இருக்கும். கர்த்தர் அவர்களுக்குப் பலனளிப்பார். கர்த்தரிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ அவனைக் கர்த்தர் தண்டிப்பார்.


ஒரு விசுவாசிக்கு இடையூறு பண்ணுகிறவன், இரட்சிக்கப் பட்டிருக்கும் ஒரு விசுவாசி பின்வாங்கிப் போவதற்குக் காரணமாக இருக்கிறவன்.


சிறியர் என்பது எல்லா விசுவாசிகளையும் குறிக்கும். சிறுபிள்ளைகள் என்பது பக்குவப்பட்ட விசுவாசிகளைக் குறிக்கும்.


இடறல் உண்டாக்குகிறவன்


 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும் (மத் 18:6).


தாழ்மையுள்ளவர்களுக்கு பல சந்தேகங்களும் பயங்களும் உண்டாகும். எல்லோரும் தங்களுக்கு இடறல் உண்டாக்குவார்களோ என்று  தாழ்மையுள்ளவர்கள் பயப்படுவார்கள். கிறிஸ்துவிற்குள் தாழ்மையுள்ளவர்களுக்கு எந்த இடறலும் செய்யக்கூடாது என்று இயேசுகிறிஸ்து எச்சரிக்கிறார். தம்முடைய பிள்ளைகளைச் சுற்றிலும் இயேசுகிறிஸ்து அக்கினிச் சுவரை மதிலாக எழுப்பியிருக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகளைத் தொடுகிறவர்கள் கிறிஸ்துவின் கண்மணியையே தொடுகிறார்கள். 


விசுவாசிகளுக்கு இடறல் உண்டாக்குவது மிகப்பெரிய குற்றமாகும். விசுவாசிகள் கிறிஸ்துவின்மீது தாங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தினால் அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறார்கள். தாம் அனுபவிக்கும் பாடுகளின் மூலமாக கிறிஸ்து தமது பிள்ளைகளுக்கு பல ஆசீர்வாதங்களையும், சிலாக்கியங்களையும் கொடுக்கிறார். விசுவாசிகள் கிறிஸ்துவின் உடன் சுதந்தரராக இருக்கிறார்கள். விசுவாசத்தில் வளர்ச்சி பெற்றவர்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்களெல்லாம் கிடைக்குமோ, அந்த ஆசீர்வாதங்களெல்லாம் விசுவாசத்தில் சிறு குழந்தைகளாக இருக்கிறவர்களுக்கும் கிடைக்கும். தம்மிடத்தில் விசுவாசமாக இருக்கிற சிறியரைக்கூட கிறிஸ்து நேசிக்கிறார். இந்த உலகத்தில் பெரிய தலைவர்களுக்குத்தான் பெரிய சோதனைகளெல்லாம் வரும். 


கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு யாராவது ஒருவன் இடறல் உண்டாக்கினால்  அவனுடைய கழுத்தில் இயந்திரக்கல்லை கட்டி, சமுத்திரத்தின் ஆழத்தில் அவனை அமிழ்த்துகிறது. அவனுக்கு நலமாயிருக்கும். இது இயேசுகிறிஸ்துவின் எச்சரிப்பின் சத்தமாகும். உபத்திரவப்படுத்துகிறவர்களால் சரீரத்தை மாத்திரமே கொல்லமுடியும்.  கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு எதிராக செய்யப்படும் பாவம் மிகவும் பயங்கரமானது. இதற்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையும் மிகவும் கடுமையாக இருக்கும்.    



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.