பேதுரு மீன் வாயில் கண்ட வெள்ளி பணம்
இயேசு வரிப்பணம் செலுத்துகிறார் மத் 17 : 24#27
செலுத்துகிறார்
அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான் (மத் 17:24).
இயேசு கப்பர்நகூமில் இருக்கிறார். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் வரிப்பணம் ரோமப்பேரரசுக்கு செலுத்தவேண்டிய வரிப்பணமல்ல. இது தேவாலயத்திற்கு செலுத்த வேண்டிய வரிப்பணம். தேவாலயத்தின் ஆராதனை ஒழுங்குகளை நிறைவேற்றுவதற்கு யூதர்கள் ஒவ்வொருவரும், அவர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் வரிப்பணத்தை செலுத்துகிறார்கள்.
வரிப்பணம் வாங்குகிறவர்கள் மிகவும் கண்ணியமாக வரிப்பணம் கேட்கிறார்கள். ""உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா'' என்று கேட்கிறார்கள். இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாக அவர்கள் குற்றம் கண்டுபிடிக்க முயற்சிப்பதாக ஒருசிலர் இந்த வாக்கியத்தை வியாக்கியானம் பண்ணுகிறார்கள். ஆனால் இதில் அப்படிப்பட்ட கருத்து இருப்பதாக தெரியவில்லை.
வரிப்பணம் வாங்குகிறவர்கள் மிகுந்த மரியாதையோடும் கண்ணியத்தோடும் வரிப்பணம் கேட்கிறார்கள். வரிப்பணம் செலுத்துவதிலிருந்து தமக்கு விலக்கு அளிக்கவேண்டுமென்று இயேசுகிறிஸ்து கேட்டால், அந்த வரிவிலக்கை கொடுப்பதற்கும் அவர்கள் ஆயத்தமாக இருப்பார்கள். கட்டாயம் வரி செலுத்தியே ஆகவேண்டுமென்று வலியுறுத்தமாட்டார்கள்.
இயேசுகிறிஸ்துவுக்காக பேதுரு இங்கு பதில் கூறுகிறார். ""செலுத்துகிறார்'', ""எங்கள் ஆண்டவர் நிச்சயமாகவே வரிப்பணம் செலுத்துகிறார்'' என்று பேதுரு பதில் கூறுகிறார். நியாயப்பிரமாணத்தின்படி இயேசுகிறிஸ்து உண்டாக்கப்பட்டிருக்கிறார். ஆகையினால் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி அவருக்கு நாற்பது நாள் நிறைவேறியபோது அவருக்காக பலி செலுத்தப்பட்டது (லூக் 2:22#24). அன்று யோசேப்பும் மரியாளும் அவருக்காக காணிக்கை செலுத்தினார்கள். இப்போது இயேசுகிறிஸ்து தமக்காக தாமே வரிசெலுத்துகிறார்.
தேவாலயத்திற்காக செலுத்தப்படும் இந்தக் காணிக்கைக்கு ""ஆத்துமாக்களுக்காக பாவநிவிர்த்தி பண்ணும் காணிக்கை'' என்று பெயர் (யாத் 30:15). இயேசுகிறிஸ்து பாவிகளில் ஒருவராகவே கருத்தப்பட்டார். ஆயினும் அவரிடத்தில் பாவம் எதுவும் இல்லை. பாவம் இல்லாத இயேசுகிறிஸ்து தம்முடைய பாவநிவாரண காணிக்கையாக இந்த வரியை செலுத்த முன்வருகிறார். நமக்கு ஒரு முன்மாதிரியை வைக்கவேண்டும் என்பதற்காகவே இயேசுகிறிஸ்து இங்கு வரி செலுத்துகிறார். நாம் பங்கு பெறும் ஆராதனை ஸ்தலங்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும். தேவாலயத்தின் பராமரிப்பிற்கு நமக்கு நியமிக்கப்பட்ட காணிக்கையை செலுத்த முன்வரவேண்டும்.
நாம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வோமென்றால், அந்த ஆசீர்வாதங்களுக்காக நாம் உலகப்பிரகாரமான காரியங்களை காணிக்கையாக செலுத்த வேண்டிய கடமை நமக்கு உண்டு. இயேசுகிறிஸ்துவே வரி செலுத்தும்போது, நாம் யாரும் வரிசெலுத்தாமல் இருந்துவிடக்கூடாது.
இயேசுகிறிஸ்து யூதமார்க்க முறைமையின்படி செலுத்த வேண்டிய எல்லா வரிகளையும் செலுத்தினார். அரசாங்கத்தின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து ஜீவித்தார். இது நமக்கு ஒரு முன்மாதிரியான காரியம் (ரோமர் 13:1-8).
பிள்ளைகள் செலுத்தவேண்டுவதில்லை
அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார். அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றார். இயேசு அவனை நோக்கி. அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே (மத் 17:25,26).
இயேசுகிறிஸ்து வரிசெலுத்துவதைக் குறித்து வரிப்பணம் வாங்குகிறவர்களிடம் விவாதம்பண்ணாமல், பேதுருவிடம் விவாதம் பண்ணுகிறார். இயேசுகிறிஸ்து ஏன் வரிசெலுத்தவேண்டும் என்பதற்கான காரணத்தை பேதுருவும் புரிந்து கொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்துவே வரிப்பணம் வாங்குகிறவர்களை இந்த இடத்திற்கு வரவழைத்திருக்கிறார். இதன் மூலமாக பேதுருவை தமக்கு அருகில் வரவழைக்கிறார். இயேசுகிறிஸ்துவுக்குத் தெரியாமல் சீஷர்களுக்கு ஒருக்காரியமும் சம்பவிப்பதில்லை. பூமியின் ராஜாக்களைக் குறித்து இயேசுகிறிஸ்து தமது விளக்கத்தில் கூறுகிறார்.
பூமியின் ராஜாக்கள் தங்களுடைய தேசத்தில் உள்ளவர்களிடம் வரிப்பணம் வாங்கமாட்டார்கள். அந்நிய தேசத்தில் உள்ளவர்களிடமே வாங்குவார்கள். இந்த சம்பவத்தை இயேசு தமது உபதேசத்திற்கும் பயன்படுத்துகிறார். ""பிள்ளைகள் அதை செலுத்தவேண்டியதில்லை'' என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரன். தேவனுடைய எல்லாக்காரியங்களுக்கும் அவரே சுதந்தரவாளியாக இருக்கிறார். ஆகையினால் தேவாலயத்தின் ஆராதனைக்கு இயேசுகிறிஸ்து காணிக்கை செலுத்தவேண்டிய அவசியமில்லை. இவ்வாறாக இயேசுகிறிஸ்து தமது தேவத்துவத்தை உறுதிபண்ணுகிறார்.
தேவனுடைய பிள்ளைகள் அவருடைய கிருபையினால் இரட்சிக்கப்பட்டு அவருக்கு சுவீகார புத்திரராக இருக்கிறார்கள். சாபத்திலிருந்தும், பாவத்திலிருந்தும், சாத்தானுடைய பிடியிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுக்கு பூமிக்குரிய கடமைகளிலிருந்து விலக்கு கொடுக்கப்படவில்லை. இங்கு இயேசுகிறிஸ்து தமது பிரமாணத்தை வெளிப்படுத்துகிறார். ராயனுக்குரியதை ராயனுக்கும், கர்த்தருக்குரியதை கர்த்தருக்கும் செலுத்த வேண்டும் என்பதே கிறிஸ்துவின் பிரமாணமாகும்.
இந்த வரி தேவாலயத்திற்காக வசூலிக்கப்பட்டது. ஜனங்கள்தான் இந்த வரியைச் செலுத்த வேண்டும். தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து இந்த வரியைச் செலுத்த வேண்டியதில்லை. தம்மைப்போலவே தம்முடைய சீஷர்களும் தேவாலயத்தின் ஆசாரியர்களைப்போல இருக்கிறார்கள். ஆகையினால் அவர்களும் வரி செலுத்தவேண்டியதில்லை. இவ்வாறு இயேசு கூறிவிட்டு, தாமும், தம்முடைய சீஷர்களும் அவர்களுக்கு இடறலாய் இருக்கக்கூடாது என்று கூறி வரிசெலுத்துவதற்குச் சம்மதம் தெரிவித்தார். (மத் 17:26-27)
மீன் வாயில் வெள்ளிப்பணம்
ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப்போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார் (மத் 17:27).
இயேசுகிறிஸ்து வரிப்பணம் வாங்குகிறவர்களுக்கு இடறலாக இருக்க விரும்பவில்லை. தம்முடைய சீஷர்களும் அவர்களுக்கு இடறலாக இருக்க இயேசு அனுமதிக்கவில்லை. தாம் வரிப்பணம் செலுத்தவில்லையென்றால் தமக்கு விரோதமான ஜனங்களின் கோபம் அதிகரிக்கும். ஜனங்கள் தம்முடைய உபதேசத்திற்கு விலகிப்போய்விடுவார்கள். தம்மீது வைத்திருக்கும் அன்பை அவர்கள் குறைத்துக் கொள்வார்கள் என்பது இயேசுவுக்குத் தெரியும். ஆகையினால் இயேசுகிறிஸ்து அவர்களுக்கு இடறலாகயிராதபடி, வரிப்பணம் செலுத்த சம்மதிக்கிறார்.
விசுவாசிகளாகிய நாமும் பல சந்தர்ப்பங்களில் மிகுந்த ஞானத்தோடு நடந்துகொள்ளவேண்டும். நமது கருத்தை மாத்திரமே வலியுறுத்துவதற்குப் பதிலாக, மற்றவர்களுடைய கருத்துக்களையும் செவி கொடுத்து கேட்கவேண்டும். நாம் பயந்து போய் நமது உரிமைகளை விட்டுக்கொடுக்கவேண்டிய அவசியமில்லை. ஆயினும் நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் கடமைகளை நிறைவேற்றுவதில் தவறுமில்லை. இதற்காக சில சமயங்களில் நமது சுய விருப்பங்களை சிலுவையில் அறையவேண்டிய சூழ்நிலைகள் உண்டாகலாம்.
வரிப்பணம் செலுத்துவதற்கு இயேசுகிறிஸ்துவிடம் பணமில்லை. இயேசுகிறிஸ்துவின் ஏழ்மை இங்கு வெளிப்படையாக தெரிகிறது. ஏராளமான வியாதிகளை குணப்படுத்தும் பரம வைத்தியரிடம் பணமே இல்லை. அவர் எல்லா வியாதிகளையும் இலவசமாகவே சொஸ்தமாக்குகிறார். பணம் இல்லாவிட்டாலும் அவரிடம் தெய்வீக வல்லமை சம்பூரணமாக உள்ளது.
வரிப்பணம் செலுத்துவதற்காக இயேசுகிறிஸ்து தமது வல்லமையை பயன்படுத்தி மீனின் வாயிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்கிறார். இந்த அற்புதம் அவருடைய தேவத்துவத்திற்கு அடையாளமாகும். அவர் கர்த்தாதி கர்த்தர். அவருடைய கட்டளைக்கு எல்லா ஜீவராசிகளும் கீழ்ப்படியும். கடலிலுள்ள மச்சங்கள்கூட கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்ப்படிய காத்துக்கொண்டிருக்கும் (சங் 8:6).
பேதுரு தூண்டில் போட்டு மீன் பிடிக்கவேண்டும். அற்புதம் வானத்திலிருந்து விழவில்லை. இந்த அற்புதத்தை பெறுவதற்கு பேதுருவுக்கும் ஒரு கடமை கொடுக்கப்பட்டிருக்கிறது. தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலையை பேதுரு செய்தால்தான் அங்கு ஆசீர்வாதம் உண்டாகும். நாமும்கூட நம்முடைய அழைப்புக்கு உண்மையுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும். நமக்கு கொடுக்கப்படும் ஊழியங்களை சோர்ந்துபோகாமல் உற்சாகமாக செய்யவேண்டும். கிறிஸ்துவின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அவருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து செயல்பட ஆயத்தமாக இருக்கவேண்டும்.
மீனின் வாயில் ஒரு வெள்ளிப்பணம் இருக்கிறது. நாம் கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்து கிரியை செய்யும்போது இதுபோல ஆசீர்வாதங்களைக் காண்போம். நமது கிரியைகளுக்கு தகுந்த பலனை இயேசுகிறிஸ்து நிச்சயமாகவே தருவார்.
மீனின் வாயிலிருந்த பணம் கிறிஸ்துவுக்கும் பேதுருவுக்கும் வரிப்பணம் செலுத்துவதற்கு மாத்திரமே போதுமானதாக இருக்கிறது. தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு நாம் பேராசைப்படக்கூடாது. தேவன் நமது தேவைகளை சந்திக்கும்போது திருப்தியடையவேண்டும். உண்ண உணவும் உடுக்க உடையும் இருந்தால் போதுமென்றிருக்கவேண்டும். தேவையில்லாத ஆசைகளையெல்லாம் வளர்த்துக்கொண்டு, அவை நிறைவேறாதபோது சோர்ந்துபோகக்கூடாது.
பேதுருவே இங்கு •தூண்டில் போட்டு மீன் பிடிக்கிறார். மீனின் வாயில் இருந்த வெளிப்பணத்தில் பேதுருவுக்கும் பங்குள்ளது. பேதுருவின் வேலைக்கு தகுந்த கூலியை கிறிஸ்து தருகிறார். அந்த பணத்தை வைத்து தான் செலுத்த வேண்டிய வரியை பேதுரு செலுத்திவிடுகிறார்.
இயேசுகிறிஸ்துவோடு உடன் ஊழியக்காரர்களாக இருந்து, ஆத்துமாக்களை ஆதாயம்பண்ணும் ஊழியத்தை செய்கிறவர்களுக்கு கிறிஸ்து தமது மகிமையில் பங்கு கொடுப்பார்.
இயேசுகிறிஸ்து தமக்காக செலுத்திய வரி அவர் நிறைவேற்றிய கடமை. ஆனால் அவர் பேதுருவுக்காக செலுத்தியது அவர் வெளிப்படுத்திய கிருபை. நாம் நீதிமான்களாக இருந்தால் மாத்திரம் போதாது. அன்புள்ளவர்களாகவும், பிறர்மீது கரிசனையுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். ஏழைகளுக்கு இரங்கினால் மாத்திரம் போதாது, நமது நண்பர்களுக்கு உதவிபுரியவும் வேண்டும்.
இது ஒரு அற்புதம். மீனின் வாயில் ஏற்கெனவே வெள்ளிப்பணம் இருந்தாலும் அந்தப் பணம் அந்த மீனின் வாயில் இருக்கிறது என்பதைக் கூறுவதும் ஒரு அற்புதம்தான். கர்த்தர் நமது தேவைகளைச் சந்திப்பார். நம்மைப் பராமரிப்பார். தம்மையே சார்ந்திருக்கும் தமது பிள்ளைகளை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். ஆவியின் வரங்கள் மூலமாக இயேசு கிறிஸ்து ஏற்கெனவே செய்த காரியங்களை விசுவாசிகள் செய்கிறார்கள். இயேசு கிறிஸ்துவும் அவற்றை ஆவியின் வரங்களினாலேயே நடப்பித்தார்.